Subscribe

BREAKING NEWS

18 July 2017

வளங்களை அள்ளித் தருகின்றாள் வனபத்ர காளி


வனபத்ர காளியம்மன் கோவில்

ஆடி மாதம் களை கட்டத் தொடங்கிவிட்டது.இந்த மாதம் முழுதும் நமக்கு கொண்டாட்டம் தான்.பின்னே ..தினமும் நாம் சக்தியின் அழகில்,அருளில் நனையலாம் அன்றோ ? எத்தனை எத்தனை ரூபங்கள். காமாட்சி,மீனாட்சி,விசாலாட்சி,ஈஸ்வரி,கருமாரி,காளி,சூலினி ,பத்ர காளி,
சாமுண்டீஸ்வரி,மூகாம்பிகை,சங்கரி,பர்வதவர்த்தினி,அகிலாண்டேஸ்வரி,பகவதி,மகாகாளி,
அபிராமி,மஹாலட்சுமி,பைரவி,பராசக்தி,திரிபுரசுந்தரி என்று.

ஆடி மாதம் தொடங்கும் முன்பே நாம் நேற்று சக்தியின்  தரிசனம் கண்டோம்.இது  சிவத்தின் அருளாலே கிடைத்தது. நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பார்கள்.இது நூற்றுக்கு நூறு உண்மை. நாம் அவருடைய கையில் வெறும் பொம்மை தானே.ஆட்டுவிப்பர் அவரன்றோ.? நாம் தரிசித்த ஆலய தரிசனத்தை இங்கே யாம் பெற்ற இன்பம்,பெறுக இவ்வையகம் என்பது போல்,இந்த பதிவில் பகிர இருக்கின்றோம். முன்னரே அறிவித்தபடி, நம் அன்பர்கள் தங்களது இருப்பிடத்தில் உள்ள கோவில்களின் விழா நிகழ்வுகளை ஓரிரு வார்த்தைகளில் நமக்கு அறிவித்தால், அதனை இங்கே எதிர்வரும் பதிவுகளில் வெளியிட தயாராக உள்ளோம்.

கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள சக்தியின் தரிசனத்தை இனி வரும் நாட்களில் காணலாம்.சரி !
இன்றைய பதிவிற்கு செல்வோமோ?






கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் உள்ள இத்திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.மேட்டுபாளையத்தில் இருந்து அடிக்கடி பேருந்து போக்குவரத்து உள்ளதால்,கோவிலுக்கு எளிதில் செல்லலாம். தோரண வாயில் நம்மை வரவேற்றது,உள்ளே சென்றவுடன் மிகவும் பெரிய சிலைகள் தென்பட்டன. நமக்கு பார்த்ததும் தூக்கி வாரிப்போட்டது.


விசாரித்துப் பார்த்தோம்.சரியான தகவல் கிடைக்கவில்லை.ஆனால் மக்கள் இவர்களை சுற்றி வந்து வணங்கிக் கொண்டே இருந்தார்கள்.நாமும் வணங்கி விட்டு, அந்த சூலம் உள்ள பகுதியைக் கண்டோம்.இங்கே அம்மனுக்கு நேர்த்திக் கடனாக அசைவம் படையல் செய்கின்றார்கள்.அந்த இடம் தான் நீங்கள் பார்க்கின்ற சூலம் உள்ள பகுதி.அதன் அருகில் ஆட்டுக்கிடா வை சாமி வர வைத்து, படையல் செய்கின்றார்கள்.




சைவம்,அசைவம் என்பது அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள்.அதை பற்றி இங்கே யாம் பேச/விவாதிக்க விரும்பவில்லை. நம்முடைய நோக்கம் சக்தியின் தரிசனம் மட்டுமே. அதனைக் கடந்து சென்றால் உப்பு,கற்பூரம் வாங்கி ஒரு மேடு போல் பிரார்த்தனையை செலுத்துகிறார்கள்.






இவற்றுக்கும் ஏதேனும் ஒரு காரணம் இருக்க வேண்டும். ஆனால் இது பற்றியும் தெரியவில்லை.இந்த பதிவை படிக்கும் அன்பர்கள்,தங்களுக்குத் தெரிந்தால் சொல்லவும்.அனைவருக்கும் பயன்படும்.அப்படியே நேராக சென்றால், சக்தியின் பீடம் தான்.நாங்கள் அசைவ படையல் செய்ய வேண்டி இருந்ததால் அப்படியே சமைக்கும் இடத்திற்கு சென்றோம்.அங்கே தான் பவனி வருகின்றாள் இயற்கை அன்னை பவானி. ஆனால் நாம் கண்டா சூழ்நிலையில் மனம் கொதித்தது. ஆற்றின் ஓரங்களில் நெகிழிக் குப்பைகள். பாவம் ! அவள் என்ன செய்வாள் ?

இங்கே குளிக்கலாம் என்று சொன்னார்கள். ஆனால் பல இடங்களில் சூழல் அதிகம் என்பதால் பார்த்து,கவனமாக குளிக்க வேண்டும்.இது போன்ற தரிசனம் செய்யும் போது,நீர்நிலைகளில் கவனம் தேவை.







சரியாக சுமார் 11 மணி அளவில் அம்மனை தரிசிக்க சென்றோம். கூட்டம் கட்டுக்குள் இருந்தது. மாலை,அர்ச்சனை செட் வாங்கி விட்டு,வரிசையில் நின்றோம்.ஒரு மூன்றடுக்கு வரிசை இருந்தது.மனதுள் அம்மனை வேண்டிக் கொண்டே இருந்தோம். தெரிந்த சக்தியின் பெயர்களை மனம் உச்சரித்துக் கொண்டே இருந்தது.அன்னையை ! எப்படி அழைத்தால் என்ன ! அழைக்க வேண்டும் ! அவளது அன்பில் திளைக்க வேண்டும் ! இதுவே முக்கியம்.

அம்மன் சன்னதி செல்லும் முன்பாக இருந்த தீப மேடை மற்றும் சிங்க தரிசனம் தங்களின் பார்வைக்கு.





சிவத்திற்கு நந்தி வாகனம் என்றால்,சக்திக்கு சிங்கமே.அவள் கொடிய அரக்கர்களை அழித்து இருப்பாள்.அதற்கு சிங்கம் தான் தேவை.வரிசையில் முன்னேறிக் கொண்டே இருந்தோம்.அம்மன் சன்னதியை நெருங்கும் முன், மனதில், இங்கே தாயானவள் மிக உயரமாக இருப்பாள் என்று மனதுள் தோன்றியது. அன்னையின் சன்னதியை சரியாக அடையும் இடத்தில், வலப்புறமாக நம் முருகப் பெருமான்.அளவற்ற,மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். வேலும்,மயிலும்,சேவலும் துணை என்று மனதுள் சொல்லிவிட்டு உள்ளே சென்றோம் 


(கந்தர் அலங்காரம் தங்களின் கண்களுக்கு )

அம்மனை நெருங்கியதும்,தாயே.கருமாரி,பத்ரகாளி என்று அடுக்கடுக்காய் கூறி வணங்கினோம்.இந்த ஜகத்தை ஆட்டுவிக்கும் ஜனனி நீயன்றோ. இச்சா சக்தியும் நீயே ! கிரியா சத்தியம் நீயே !! மன்னிக்கவும். தாயை கண்களில் மட்டுமே பிடித்தோம்.மலர்கள் கொண்ட பூஞ்சோலையில், மணமணக்கும் வாசத்தில் வளங்களை அள்ளித் தந்து கொண்டிருக்கின்றாள் நம் அன்னை வன பத்ரகாளி.


(சிவ சக்தி சொரூபமாய் )

சன்னதியின் வெளியே வந்ததும், சிவத்தைக் காணாமல் போய்விட்டோமே என்று உள்ளம் ஏங்க இருந்த போது, மனம் ஆனந்தக் கூத்தாடியது. பின்னே இருக்காதா? சிவ சக்தி தரிசனம் ஒருங்கே கண்டோம்.கண்ணில் ஒற்றிக் கொண்டோம்.இங்கே தல விருட்சமாய் தொரத்தி மரம் உள்ளது.



கோவிலை விட்டு வெளியே வந்ததும்,அப்படியே ஒரு நோட்டம் விட்டோம். ஆம் ! அன்னை இங்கே ! வனத்தில் ! பத்ரகாளி இங்கே ! வனபத்ர காளியாக !!



தரிசனம் முடித்து நாகர் சன்னதி சென்றோம். சக்தி என்றாலே, நாகர் இல்லாமலா? மேலும் மஞ்சளின் மகத்துவமும் இருக்க வேண்டும் அன்றோ ?






பின்பு அப்படியே மத்திய உணவிற்கு சென்றோம். சைவ சாப்பாடு தான். ரசமும்,மோரும் ஊற்றி ஒரு பிடி பிடித்தோம்.சற்று ஓய்வெடுக்க மீண்டும் ஆற்றோரம் சென்றோம். அப்போது தான் ஆலமர விநாயகர் சன்னதி அங்கே இருப்பது தெரிந்தது. அலைபேசியில் கண்ணை மூடிக்கொண்டது.இது போன்ற தல தரிசனம் செல்லும் போது, அலைபேசியின் பேட்டரி முக்கியம் என்று தெரிந்தது.

ஆலமரத்தடியில்,பவானி ஆற்றின் கரையில்  அழகிய தொந்தி கணபதி, அருமையான தரிசனம்,அங்கே இளைப்பாற இடமும் இருந்தது.காற்றின் சலசலப்பில், மனதில் இருந்த துயரங்கள் மாயமாகிக் கொண்டே இருந்தது.மாலை 3 மணி அளவில் மீண்டும் கோவை நோக்கி புறப்பட்டோம்.அம்மனை மனதுள் மீண்டும் ஒருமுறை வணங்கி விட்டு கிளம்பினோம்.


மூலவர் - வனபத்ர காளியம்மன்
தல விருட்சம் - தொரத்திமரம்
தீர்த்தம் - பவானி தீர்த்தம்
பழமை - 500-1000 வருடங்களுக்கு முன்பு
மாவட்டம் - கோயம்புத்தூர்

தல  வரலாறு:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள தேக்கம்பட்டியில் வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வாய்ந்த திருத்தலம் இதுவாகும்.


அம்பாள் சிவனை நினைத்து இந்த வனத்தில் தியானம் செய்ததால், இங்குள்ள அம்மன் வனபத்ரகாளியம்மன் என்று பெயர் பெற்றது. கோவிலையொட்டி மேல்புறத்தில் பவானி ஆறு ஓடுகிறது. இந்த கோவிலில் ஆடி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் சிறப்பானதாகும்.
தாங்கள் எண்ணிய காரியம் நிறைவேற அம்மனை வேண்டி விரதம் இருந்து பக்தர்கள் பூக்குண்டம் இறங்குவார்கள். ஆடிப்பெருக்கன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலின் அருகேயுள்ள பவானி ஆற்றில் நீராடி தங்கள் முன்னோர் நினைவாக தர்ப்பனம் செய்வார்கள்.

7 கல் எடுத்து அவற்றுக்கு விபூதி பூசுவார்கள். பின்னர் சந்தனம், குங்கும் வைத்து படையலிட்டு வழிபடுவார்கள். புதிதாகத் தொழில் துவங்கும் நபர்கள், திருமணம் பற்றிக் கேட்கும் நபர்கள், சுவாமி முன்பு பூ போட்டு கேட்பது வழக்கம்.

சிவப்பு, வெள்ளைப் பூக்களை தனித்தனி பொட்டலங்களில் போட்டு, அவற்றை அம்பாளின் காலடியில் வைத்து,ஏதாவது  ஒன்றை எடுத்துப் பார்க்கும்போது, மனதில் எந்த பூவை நினைக்கிறோமோ அந்தப் பூ வந்து விட்டால் அம்பாள் உத்தரவு தந்து விட்டதாக ஐதீகம். இது இக்கோயிலில் மிகவும் சிறப்பு. அம்மன் சுயம்புவாக முளைத்துள்ளது, குண்டமிறங்கல் எனும் தீமிதிக்கும் நேர்த்திக்கடன் இத்தலத்தில் சிறப்பு.

ஆடி அமாவாசை அன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். அன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜை நடைபெறும். அன்னையை அமாவாசை தோறும் வழிபடுவோர் பில்லி, சூனியம் போன்ற இடர்பாடுகளில் இருந்து விலகி இன்சுகம் பெறுவதாக ஐதீகம். எனவே ஆடி அமாவாசை இந்த கோவிலின் விசேசமான நாளாகும். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவிலுக்கு டவுன் பஸ் வசதி உள்ளது.

நடைதிறந்திருக்கும் நேரம்...
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4 மணி முதல் 8 இரவு மணி வரை திறந்திருக்கும்.

என்ன அன்பர்களே. அருமையான ஆடி மாதத் தொடக்கம் இந்த பதிவின் மூலம் கிடைத்திருக்கும் என்று நம்புகின்றோம்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

- அம்மன் புகழ் ஓங்குக!

முந்தைய பதிவிற்கு :-

கணிப்பாக கீழ்கண்ட பதிவை படியுங்கள். ஆடி மாதத்தின் முக்கியத்துவம்,முக்கிய நிகழ்வுகள் என பட்டியலிட்டுள்ளோம்.குறிப்பாக ஆடி அமாவாசை. குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

 பிறந்தது ஆடி...பணிவோம் தாயை நாடி..- http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_16.html

No comments:

Post a Comment