Subscribe

BREAKING NEWS

11 May 2018

மே மாத அடியார்கள் பூசை


அன்பிற்கினிய அடியார்களே.

அனைவருக்கும் வணக்கம். இந்த பதிவில் வரும் மே  மாதத்தில் நடைபெற உள்ள சிவ அடியார்களின் பூசை பற்றியும், அடியார்க்கு அடியாரைத் திகழ்கின்றவர்களைப் பற்றியும் காண உள்ளோம். ஏப்ரல் மாதத்தில் அடியார்களின் பூசை பற்றிய தொகுப்பை பதிவேற்றம் செய்யாமல் விட்டுவிட்டோம். நம் மீது தவறு தான். இது போல் மீண்டும் நேரா வண்ணம் பார்த்துக் கொள்கின்றோம். அடியார்கள் என்றால் என்ன அவ்வளவு எளிதா? சிவ பெருமான் இந்த அடியார்களின் அன்பை பெற என்னென்ன செய்துள்ளார்? படிக்க படிக்க பேரானந்தம். அடியார்களின் அன்பு,அடியார்கள் பற்றி படிப்பது பெரிது என்பதால் தான் இந்த புராணத்திற்கு "பெரிய புராணம்" என்று பெயர் வழங்கலாயிற்று.

பெரியது என்ற உடன் தான் கீழ்க்கண்ட செய்தி நினைவிற்கு வருகின்றது. பெரியது எது? என்று சிந்தித்து விட்டு, இம்மாத அடியார்கள் பூசைக்கு செல்வோம்.

அநபாய சோழரின் அமைச்சராக இருந்த வெள்ளியங்கிரி அங்குமிங்கும் உலவுவதைக் கண்ட அவரது மகன் அருண்மொழித் தேவர் ஆச்சரியப்பட்டார். (இராஜராஜ சோழன் நினைவாக அவரது இயற் பெயரை தன் மகனுக்கு வைத்தார்).

நாடாளும் ராஜாவின் ஆலோசகரான அவரது முகத்தில் இத்தகைய குழப்பத்தை அவர் இதுவரை பார்த்ததில்லை. தந்தையே! தங்கள் முகத்தில் ஏன் இந்தக் கலவரம்! வழக்கமாக, அதிகாலையே நீராடி, இறைவழிபாடு முடித்து அரண்மனைக்கு கிளம்பி விடுவீர்களே! இன்று ஏன் இன்னும் செல்லவில்லை! ஒருவேளை, பகைவர்கள் யாராவது சோழநாட்டிற்குள்.... என்று தொடர்ந்து பேச முயன்ற மகனை சைகையால் நிறுத்தினார் தந்தை. அருண்மொழி! மாமன்னர் அநபாயச் சோழனை எதிர்க்க இப்பூவுலகில் திராணி யாருக்குண்டு! என் பிரச்னையை உன்னிடம் சொல்வதால் பயனில்லை. ஏனெனில், அதை உன்னால் தீர்த்து வைக்க முடியாது,. தந்தையே! அப்படி முடிவு கட்டிவிட வேண்டாம். சிறுதுரும்பும் பல் குத்த உதவும் தானே!. தந்தை அந்த இக்கட்டான நிலையிலும் சிரித்தார். அருண்மொழி! அந்த மூன்று கேள்விகள் தான் என் குழப்பத்திற்கு காரணம்! அதற்கு இரவு முழுவதும் பல நூல்களில் இருந்து பதில்களைத் தேடினேன்! கிடைக்கவில்லை! என்ன மூன்று கேள்விகள்? யார் உங்களிடம் கேட்டது? மாமன்னர் தான் கேட்டார்.

மலையை விட பெரியது எது?
கடலை விட பெரியது எது?
உலகை விட பெரியது எது? 
என்று! இவற்றுக்குப் பதில் தேடும்முயற்சியில் தோற்றுப் போனேன்! அரசரிடம் என்ன பதில் சொல்வதென தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன்!

அருண்மொழி கலகலவென சிரித்தார். சரியாப்போச்சு! இந்த எளிய விடைகள் தெரியாமல் தானா இந்தக் குழப்பம்! கொஞ்சம் பொறுங்கள், என்றவர் ஒரு ஓலையை எடுத்தார். 3 பதில்களையும் எழுதிக் கொடுத்தார். தந்தை அதைப் படித்தார். கண்கள் வியப்பில் விரிந்தன. ஆம்... ஆம்... இவை தான் விடைகள்! உணர்ச்சிவசப்பட்டு கூவினார். அரசரிடம் சென்று ஓலையை நீட்டினார். அரசர் ஆனந்த வெள்ளத்தில் நீந்தினார். ஆலோசகரே! விடைகள் மிகப் பொருத்தமானவை. ஆனால், இதை எழுதியது நீர் அல்ல என்பது கையெழுத்திலிருந்து புரிகிறது! இந்த பதிலைச் எழுதியவர் யார்? என் மகன் அருண்மொழித்தேவர். அரசர், உடனடியாக அருண்மொழித்தேவரை தகுந்த மரியாதையுடன் பல்லக்கில் ஏற்றி வர ஏவலர்களுக்கு ஆணையிட்டார். அருண்மொழியும் வந்து சேர்ந்தார்.

தாங்களே! இந்த பதில்களைப் படியுங்கள் என்றார் அரசர்.
அவை வேறொன்றும் இல்லை நம் திருவள்ளுவர் எழுதிய குறள்கள் தான்.

மலையை விட பெரிது?

“நிலையிற் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது”

-எந்தச் செயலை எடுத்தாலும் அதை நிலையான தைரியமான மனதுடன் யார் செய்கிறானோ, அவனது மனம் மலையை விட உறுதியானது.

கடலை விட பெரிது எது?
“பயன் தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது”

-தனக்கு என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு, கடலை விடப் பெரிது.

உலகை விட பெரிது எது?
“காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”

-ஒருவனுக்கு தேவைப்படும் போது, சரியான சமயத்தில் கிடைக்கிற சிறிய உதவி உலகத்தை விட பெரிது.

அருண்மொழித்தேவர் இதை வாசித்துவிட்டு அரசரை ஏறிட்டுப் பார்த்தார். அறிவிற் சிறந்தவரே! தாங்களே இனி இந்நாட்டின் அமைச்சர், என ஆணையிட்டார் மன்னர். இவரே அநபாயனிடம் உத்தமச்சோழ பல்லவர் என்ற பட்டம் பெற்றவர். பிற்காலத்தில் ஆன்மிகத்தின் தலைமகனாக, சேக்கிழார் என்னும் பெயர்தாங்கி, பெரியபுராணம் என்று அழைக்கப்படும் சைவத் தமிழ் நூலான திருத்தொண்டர் புராணம் என்னும் பெருங்காவியத்தைப் படைத்தார்.

இந் நூலை இயற்றும் நோக்குடன் சிதம்பரம் கோயிலுக்குச் சென்ற இவருக்கு சிவபெருமானே உலகெலாம் என அடியெடுத்துக் கொடுத்துப் பாடச் செய்தார் என்பது சைவர்களின் நம்பிக்கை. ஓராண்டில் 4286 பாடல்களுடன் திருத்தொண்டர் வரலாற்றினை புராணமாக தந்தார்.
அதுநாள் வரை சைவசமய இலக்கியங்களில் பதினொரு திருமுறைகள் இருந்தன. அதனுடன் பன்னிரண்டாம் திருமுறையாக பெரியபுராணம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் உத்தம சோழப் பல்லவன், தொன்டைமான், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார் போன்ற பட்டங்களைப் பெற்றவர். உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் சேக்கிழார் புராணம் எனும் நூலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் எனும் நூலும் சேக்கிழாரை முன்வைத்து இயற்றப்பட்டுள்ளன.


இம்மாதம் ஏழு அடியார் பெருமக்களின் பூசை வருகின்றது.

சித்திரை  - சதயம்  - திருநாவுக்கரசு நாயனார் 
வைகாசி - பூசம் - நமிநந்தி அடிகள் 
வைகாசி  -ஆயில்யம் - சோமாசிமாற நாயனார் 
வைகாசி - மூலம் - திருஞானசம்பந்தர் 
வைகாசி  -மூலம் - திருநீலகண்டயாழ்ப்பாணர் 
வைகாசி - மூலம் - திருநீலநக்க நாயனார் 
வைகாசி - மூலம் - முருக நாயனார் 

இதில் சித்திரை  - சதயம்  - திருநாவுக்கரசு நாயனார் பூசை முடிந்து விட்டது, மற்ற அடியார்களைப் பற்றி சிறிது அறிவோம். திருநாவுக்கரசு நாயனார் பற்றி தனிப் பதிவாக தர குருவருள் புரியட்டும்.

வைகாசி - பூசம் - நமிநந்தி அடிகள் - மே 20


“அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்” திருத்தொண்டத் தொகை

சோழ நாட்டு ஏமப் பேறூரிலே அந்தணர் குலத்தில் தோன்றியவர் நமிநந்தியடிகள். அவர் இரவும் பகலும் பிரியாது சிவபெருமானைப் பூசித்து மகிழும் ஒழுக்கமுடையவர். நாள்தோறும் திருவாரூர்க்குப் சென்று புற்றிடங்கொண்ட பெருமானை போற்றி வருவார். ஒரு நாள் திருவாரூர்த் திருக்கோயிலை வழிபடச் சென்றார். வழிபட்ட மகிழ்ச்சியில் எழுந்த அன்பினாலே கோயில் தொண்டுகள் பலவும் செய்து கொண்டிருந்தார். அங்கு விளக்கேற்றி வழிபட வேண்டும் என்ற விருப்பம் அவருள்ளத்தெழுந்தது. அப்பொழுது மாலைக்காலம் ஆனமையால் தம்மூருகுச் சென்று எண்ணை கொணர எண்ணாது, திருவாரூரிலேயே ஒரு வீட்டிற்குச் சென்று விளக்கிற்கு எண்ணெய் வேண்டினார். அவர் சென்ற வீடு சமணர் வீடு. அங்குள்ள சமணர்கள் நமிநந்தியடிகளை நோக்கி, ‘கையிலே ஒளி விட்டு விளங்கும் தீயினை ஏந்திய உங்கள் இறைவனுக்கு விளக்கு தேவையற்றது. நெய் இங்கு இல்லை. விளக்கெரிப்பீராயின் நீரை அள்ளி எரிப்பீராக’ என்றனர். அதுகேட்டுப் பொறாத நமிநந்தியடிகள் அரனேயன்றிப் பெருமான் திருமுன் சென்று வீழ்ந்து வணங்கினார். அப்பொழுது ‘நமிநந்தியே! உனது கவலை ஒழிக. இதன் அயலேயுள்ள குளத்தில் நீரை முகந்து வந்து வார்த்து விளக்கேற்றுக’ என்றதொரு அருள்மொழி ஆகாயத்தில் தோன்றியது. அதுகேட்டு மகிழ்ந்த நமிநந்தியடிகள், இறைவனருளே இதுவாம் என்றெண்ணிக் குளத்தின் நடுவே சென்று நாதர் நாமமாகிய திருவைந்தெழுத்தோதி நீரை அள்ளிக்கொண்டு கரையேறிக் கோயிலையடைந்தார். உலகத்தார் அதிசயிக்கும் வண்ணம் அகலில் திரியிட்டு நீர் வார்த்து விளக்கேற்றினார். அந்த விளக்கு சுடர்விட்டொளிர்வது கண்டு கோயில் முழுவதும் திருவிளக்கேற்றினார். திருவிளக்குகள் பல விடியுமளவும் எரிதற்கு நீரால் நிறைத்தார்.


இவ்வாறு ஆரூர் அரனெறியப்பார்ர்கு நாளும் இரவில் நீரால் திருவிளக்கிட்டுத் தம்முடைய ஊராகிய ஏமப் பேறூருக்குச் சென்று சிவபூசை முடித்து திருவமுது செய்து துயில் கொள்ளும் வழக்கமுடையவராய் இருந்தார். அப்பொழுது நமிநந்தியடிகள் நாயனார் சமணர்கள் கலக்கம் விளைவித்து அவ்வூரைவிட்டு அகன்றார். திருவாரூர் திருநீற்றின் பெருமை பெற்று விளங்கியது. சோழ மன்னன் ஆரூப்பெருமானிக்கு அறக்கொடைகள் பல அளித்து அவற்றை சைவ ஆகம விதிப்படி நடத்த நமிநந்தி அடிகளையே தலைவராக நியமித்தான். நமிநந்தியடிகள் நாள் பூசைகளுடன் பங்குனியுத்தரப் பெருவிழாவை சிறபுறச் செய்வதற்கு உறுதுணையாக விளங்கினார். திருவாரூர்ப்பெருமான் பங்குனி உத்தரப் பெருவிழா நாட்களில் ஒரு நாள் மணலி என்ற ஊருக்குத் திருவுலா எழுந்தருளினார். எல்லாக் குலத்து மக்களும் இறைவன் உடன் தரிசித்துச் சென்றனர். நமிநந்தியடிகளும் அவர்கள் எல்லாருடனும் உடன் சென்று திருவோலக்கம் கண்டு மகிழ்ந்தார். இறைவர் திரும்பித் திருக்கோயிலுக்குச் செல்ல மாலைப்பொழுதாயிற்று. நமிநந்தியடிகள் நள்ளிருளில் தமது ஊரையடைந்து வீட்டினுள்ளே புகாமல் புறத் திண்ணையிலே படுத்துத் துயின்றார். அப்பொழுது அவர் மனைவியார் வந்து அவரைத் ‘துயிலுணர்த்தி வீட்டினுள்ளே எழுந்தருளிச் சிவார்சனையையும் தீவளர்த்தலையும் முடித்துக்கொண்டு பள்ளிகொள்ளலாம்’ என்றார். அதுகேட்ட நமிநந்தியடிகள், ‘இன்றைய தினம் ஆரூர்ப்பெருமான் திருமணலிக்கு எழுந்தருளியபோது யானும் உடன் சேவித்து சென்றேன். அக்கூட்டத்தில் எல்லாச் சாதியரும் கலந்திருதமையால் தீட்டுண்டாயிற்று. ஆதலால் நீராடிய பின்னரே மனைக்குள் வருதல் வேண்டும். குளித்தற்கு தண்ணீர் கொண்டுவா’ என்று சொல்ல மனைவியாரும் விரைந்து சென்றார். அதற்கிடையில் நமிநந்தியடிகளுக்கு சிறிது உறக்கம் வந்தது. அப்பொழுது வீதிவிடங்கற் பெருமான் கனவில் தோன்றி, ‘அன்பனே! திருவாரூரிலே பிறந்தார் எல்லோரும் நம்முடைய கணங்கள். அதை நீ காண்பாய்’ என்று சொல்லி மறைந்தருளினார். உறக்கம் நீங்கி விழிந்தெழுந்த நமிநந்தியடிகள், தாம் அடியார்களிடையே சாதிவேறுபாடு நினைந்தது தவறென்றுணர்ந்து எழுந்தபடியே வீட்டினுள்ளே சென்று சிவபூசையைன் முடித்து மனைவியாருக்கு நிகழ்ந்ததைச் சொன்னார். பொழுது விடிந்தபின் திருவாரூருக்குச் சென்றார். அப்பொழுது திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லாரும் சிவசாரூபம் பெற்றவர்களாகத் தோன்றக் கண்டார். ‘அடியேன் செய்த பிழை பொறுத்தருள வேண்டும்’ என்று ஆரூர்ப்பெருமானை இறைஞ்சிப் போற்றினார். நமிநந்தியடிகள் பின்பு திருவாரூரிலியே குடிபுகுந்து தம்முடைய திருத்தொண்டுகளைச் செய்துகொண்டுருந்தார். இவ்வாறு சிவனடியார்களுக்கு வேண்டுவன எல்லாம் நியதியாக நெடுங்காலம் செய்திருந்தது திருநாவுக்கரசரால் ‘தொண்டர்களுக்கு ஆணி’ எனச் சிறப்பிக்கப் பெறு பேற்றுத் திருவாரூர்ப் பெருமான் திருவடி நிழலையடைந்தார்.


வைகாசி  -ஆயில்யம் - சோமாசிமாற நாயனார் - மே 21



“அன்பராம் சோமாசி மாறனுக்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை.
சோமாசிமாற நாயனார் சோழநாட்டில் திருவம்பர் என்னும் ஊரிலே அந்தணர் குலத்திலே தோன்றினார். சிவபக்தி உடையவராய்ச் சிவனடியார்களுக்குத் திருவமுதளிக்கும் இயல்புடையவராயிருந்தார். உமையொரு பாகனாகிய சிவபெருமானையே முதல்வன் எனக்கொண்டு போற்றும் வேள்விகள் பலவற்றையும் உலகங்கள் ஏழும் உவப்ப விதிப்படி செய்தார்.
ஈசனுக்கு அன்பர் என்போர் எக்குலத்தவராயினும் அவர்கள் தன்னை ஆளாகவுடையார்கள் என்று உறுதியாகத் தெளிந்திருந்தார்கள்.
சிவன் அஞ்செழுத்தும் சித்தந் தெளிய ஓதும் நித்த நியமம் உடைய இந்நாயனார் சீரும், திருவும் பொலியும் திருவாரூரினை அடைந்து தம்பிரான் தோழராகிய வன்றொண்டர்க்கு அன்பினால் நெருங்கிய நண்பரானார்; திருவாரூரில் ஐம்புலச் சேட்டைகளையும், காமம் முதலிய அறுவகைக் குற்றங்களையும் நீக்கிய இவர் அத்திருவாரூரில் தங்கி ஆரூரர் தம் திருவடிகளைப் பணிந்து போற்றிய சிறப்பினால் என்றும் நின்று நிலவும் சிவலோகத்தில் இன்பம் உற்றார்


வைகாசி - மூலம் - திருஞானசம்பந்தர் - மே 31



இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில், அந்தணர் மரபிலே, கவுணியர் குடும்பத்திற் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர், தாயார் பகவதி அம்மையார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. குளித்துவிட்டு வெளியே வந்த தந்தையார், பிள்ளையின் வாயிலிருந்து பால் வடிவதைக் கவனித்து, அது குறித்துக் கேட்கவே கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டித் "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தைத் திருஞானசம்பந்தர் பாடினார் என்பது தொன்நம்பிக்கை.

சம்பந்தமூர்த்தி சுவாமிகள் பாடிய தலங்களுள் முக்கியமான தலம் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆகும். இக் கோயிலை அவர் கரக்கோயில் எனப் பாடியுள்ளார். தமிழ்நாட்டில் கரக்கோயில் எனப்படும் ஒரே கோயில் மேலக்கடம்பூர் மட்டுமே.

ஆச்சாள்புரக் கல்வெட்டுத் தகவல்படி, திருஞானசம்பந்தரின் மனைவி பெயர் சொக்கியார்.

அற்புதங்கள்


  •     மூன்றாம் வயதினிலே உமையம்மையாரிடம் திருமுலைப்பால் உண்டமை.
  •     சிவபெருமானிடத்தே பொற்றாளமும், முத்துப்பல்லக்கும், முத்துச்சின்னமும், முத்துக்குடையும், முத்துப்பந்தரும், உலவாக் கிளியும் பெற்றது. வேதாரணியத்திலே திருக்கதவு அடைக்கப்பாடியது.
  •     சமணர்களை வெற்றி கொள்ள வேண்டி மதுரை சென்ற போது, மதுரைக்குக் கிழக்கு வாயில் வழியாகச் செல்ல வேண்டும் என்று கருதி, மதுரையின் கிழக்கு எல்லையாக விளங்கும் திருப்பூவணத்தின் (தற்போது திருப்புவனம் என்று அழைக்கப்படுகிறது)வைகை ஆற்றின் வடகரையை வந்து அடைந்தார், ஆற்றில் கால் வைக்க முயன்ற போது ஆற்று மணல்கள் எல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சி அளித்தன, எனவே அங்கு நின்றபடியே தென்திருப்பூவணமே என முடியும் பதிகம் பாடினார், சிவபெருமான் நந்தியை சாய்ந்திருக்கச் சொல்லி காட்சி அருளினார், இதனால் திருப்பூவணத்திலே நந்தி இன்றும் முதுகு சாய்ந்தே உள்ளது. வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள சிவலிங்கத்தை வடகரையில் உள்ள ஆடித்தபசு மண்டபத்தில் நின்றே இன்றும் தரிசிக்கலாம். வைகை ஆற்றின் குறுக்கே ஆயிரக்கணக்கான சிவலிங்கங்கள் புதையுண்டு கிடக்கின்றன, அவற்றை இன்றும் மக்கள் கண்டெடுக்கின்றனர்.
  •     அபாலை நிலத்தை நெய்தல் நிலமாகும்படி பாடியது.
  •     பாண்டியனுக்குக் கூனையும் சுரத்தையும் போக்கியது. தேவாரத் திருவேட்டை அக்கினியில் இட்டுப் பச்சையாய் எடுத்தது. வைகையிலே திருவேட்டை விட்டு எதிரேறும்படி செய்தது. சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றது.
  •     விடத்தினால் இறந்த வணிகனை உயிர்ப்பித்தது.


திருஞானசம்பந்தர் நாயனாரின் அற்புதங்கள் (பெரியபுரணம் வழி)

ஞானப்பால் உண்டமை

ஞானசம்பந்தப் பிள்ளையார் மூன்றாண்டு நிறையப் பெற்ற பின்னர் ஒரு நாள் காலை தந்தையாருடன் சீர்காழி திருகோயிலின் திருக்குளத்திற்குச் சென்றார். சிவபாத இருதயர் மைந்தனைக் கரையில் அமரச்செய்து நீருள் முழ்கி அகமருடஜெபம் செய்தார்.

தந்தையைக் காணாமையாலும், முன்னைத்தவம் தலைக்கூடியதாலும் திருத்தோணிச்சிகரம் பார்த்து “அம்மே! அப்பா!” என்று அழைத்தருளி அழுதருளினார். அப்பொழுது, திருத்தோணிபுரபெருமான் உமா தேவியாரோடும் விடைமிதமர்ந்து காட்சி கொடுத்தார். உவமையிலாக் கலை ஞானமும் உணர்வரிய மெய்ஞானமும் கலந்த திருமுலைப்பால் ஊட்டுவாயாக எனப்பெருமான் பணித்தார். அப்படியே பெருமாட்டியும் எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்தருளி உண் அடிசில் என ஊட்டினார். ஞானம் உண்ட பிள்ளையார் சிவஞானச்செல்வராய்த் திகழ்ந்தார்.

எண்ணரிய சிவஞானத்

தின்ன முதங்குழைத் தருளி

உண்ணடிசில் எனஊட்ட

உமையம்மை எதிர்நோக்கும்

கண்மலர்நீர் துடைத்தருளிக்

கையிற்பொற் கிண்ணமளித்

தண்ணலைஅங் கழுகைதீர்த்

தங்கண்ணார் அருள்புரிந்தார்.

(பெரிய புராணம் பாடல் 1970)


சிவனடியே சிந்திக்குந்

திருப்பெருகு சிவஞானம்

பவமதனை அறமாற்றும்

பாங்கினி லோங்கியஞானம்
உவமையிலாக் கலைஞானம்
உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர்
தாமுணர்ந்தார் அந்நிலையில்
(பெரிய புராணம் பாடல் 1973)

பிரம தீர்த்தில் நீராடிய சிவபாத இருதயர், பால்வழிய நின்ற பிள்ளையைப் பார்த்து “யார் கொடுத்த எச்சிற்பாலை உண்டாய்?” எனக் கோல் கொண்டோங்கினார். உடனே ஞானசம்பந்தர் தமக்குப் பால் கொடுத்த பரம்பொருளை அடையாளங்களுடன் சுட்டித் “தோடுடைய செவியன்” என்ற திருப்பதிகம் பாடினார்.
பொற்றாளம் பெறல்

சில நாள் கழித்துத் திருக்கோலக்காவிற்கு எழுந்தருளினார். கையினால் தாளம் இட்டு “மடையில் வாளை” என்ற திருப்பதிகம் பாடினார். பாட்டிற்கு உருகும் பரமன் கை நோவுமென்று ஐந்தெழுத்து வரையப்பெற்ற பொற்றாளம் அளித்தருளினார். இவர் பெருமை கேட்ட மக்கள் தங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டினர். முதலில் தமது தாய் பிறந்த ஊராகிய திருநனிபள்ளி சார்ந்தார். பிள்ளையார் பெருமையைக் கேள்வியுற்ற திருநீலகண்ட யாழ்ப்பாணர், தம்முடைய மனைவியோடு சீர்காழிக்கு வந்து தரிசித்தார். அவரது பாடல்களுக்குத் தாம் யாழ் வாசித்தார். அது முதல் பிள்ளையாருடனிருந்து பிள்ளையார் பாடல்களையெல்லாம் யாழில் அமைத்து வாசித்து வரலானார்.
முத்துச்சிவிகை முதலியன பெறல்

திருஞானசம்பந்தர் தில்லை முதலிய பல தலங்களையும் தரிசித்து நடுநாட்டில் உள்ள திருநெல்வாயிலரத்துறை சார்ந்தார். களைப்பினால் மாறன்பாடியில் அமர்ந்து அன்றிரவு நித்திரை செய்தார். அரத்துறைப்பெருமான் முத்துச்சிவிகை, முத்துக்குடை, சின்னம் முதலியவற்றை அருளினார்.

சோதிமுத்தின் சிவிகை சூழ்வந்துபார்
மீதுதாழ்ந்து வெண்ணீற்றொளி போற்றிநின்று
ஆதியா ரருளாதலில் அஞ்செழுத்து
ஓதி ஏறினார் உய்ய உலகெலாம்
- பெரியபுராணம் பாடல் – 2119
அவற்றை இறையருளெனப் பெற்ற ஞானசம்பந்தர் “எந்தை ஈசன் எம்பெருமான்” என்ற திருப்பதிகம் பாடிப்பரவினார்.

உபநயனம்

உபநயனப் பருவத்தில் உலகியலுக்கேற்ப ஞானசம்பந்தருக்கு உபநயனம் நடைபெற்றது. ஓதாதே வேதம் உணர்ந்த உயர் ஞானசம்பந்தர், அங்கு வந்திருந்த மறையோர்கட்கு உள்ள ஐயங்களை அகற்றி, வேத முடிபாகிய ஐந்தெழுத்தின் பெருமையைத் துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும் என்ற திருப்பதிகமாகப் பாடி விளக்கியருளினார்.
முத்துப் பந்தல் பெறல்

ஞானசம்பந்தரது பெருமையைக் கேள்வியுற்ற திருநாவுக்கரசரும் ஞானசம்பந்தரைக் காண்பதற்குச் சீர்காழிக்கு எழுந்தருளினார். பிள்ளையாரும் அவரை எதிர்கொண்டழைத்தார். இருவரும் அருட்கடலும் அன்புக்கடலும் ஆம் எனத் திகழ்ந்தனர். பின்னர், ஞானசம்பந்தர் திருப்பாச்சிலாச்சிராமம் பணிந்து கொல்லிமழவன் மகளைப் பிடித்து நின்ற முயலகன் என்னும் நோயைப் போக்கினார். திருச்செங்கோடு என வழங்கும் திருகொடிமாடச் செங்குன்றூர் சென்ற போது அடியவர்களை விஷஜுரம் பற்றியது. திருநீலகண்டத்திருப்பதிகம் பாடி அவ்விஷ நோயைப் போக்கினார். பிள்ளையார் பட்டீச்சுரத்தை அடைந்தபோது வெயில் மிகுதியாயிருந்ததால் திருவருளால் சிவபூதம் ஒன்று முத்துப்பந்தல் கொடுத்தது.
பிற அற்புதங்கள்

பிறகு திருவாடுதுறை சார்ந்தார். தந்தையார் வேள்வி செய்தற்குப் பொருள் வேண்டினார். “ஆவடுதுறை அரனை இடரினும் தளரினும்” என்ற பதிகத்தால் போற்றினார். பொற்கிழி பெற்றுச் சிவபாத இருதயரிடம் “தீது நீங்க நல்வேள்விசெய்க” எனக்கொடுத்தார். திருநீலகண்ட யாழ்பாண்ரின் தாய் பிறந்த ஊராகிய தருமபுரம் சென்று தரிசித்தார். “மாதர்மடப்பிடியும்” என்ற பதிகத்தால் பதிக இசை யாழிலடங்காமையை விளக்கியருளினார். திருமருகல் சேர்ந்தார். கணவனாக வர இருந்த வணிகன் விஷந்தீண்டி இறந்ததால் கதறி அழுதாள் ஒரு நங்கை. அந்நங்கையின் துயரைத் துடைக்க எண்ணிச் “சடையாய் எனுமால்” என்ற திருப்பதிகத்தைப் பாடி வணிகனை உயிர்பெற்று எழச்செய்தார்.

படிக்காசு பெறல்

பிறகு திருச்செங்காட்டங்குடி, திருப்புகலுர் தரிசித்தார். திருநாவுக்கரசரைக் கண்டு அவர் வாயிலாக ஆரூரில் நிகழ்ந்த ஆதிரைச் சிறப்பைக் கேட்டு ஆரூரானைத் தொழுதார். பிறகு அப்பரும், சம்பந்தரும் திருவீழிமிழலை சேர்ந்தனர். அவ்வூர்ப்பெருமான், தோணியப்பரைப் போல் காட்சி தந்தார். அது கண்ட இருவரும் அவ்வூரிலேயே சிலநாள் தங்கினர். அப்பொழுது நாட்டில் பஞ்சம் உண்டாயிற்று. பரமன் அளித்த படிக்காசு கொண்டு இருவரும் ஆயிரக்கணக்கான அடியார்களுக்குப் பறைசாற்றிச் சோறளித்தனர்.

திருமறைக்காட்டில் அற்புதம்

பிறகு (வேதாரணியம்) திருமரைக்காடு சென்றனர். நேரே கும்பிட எண்ணியவர்களாய் மறைகளால் பூசித்து அடைக்கப்பட்டிருந்த கதவினைத் திருநாவுக்கரசர் பாடலால் திறக்கச்செய்து, தாம் அடைக்கப்பாடினார். அது முதல் திறக்கவும் அடைக்கவுமாக இருந்து வருகிறது அக்கதவு.
பாண்டி நாட்டில் சைவம்

பாண்டி நாட்டில் நெடுமாற பாண்டியன் சமண சமயம் சார்ந்து இருந்தமையை மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் என்ற இருவர் வாயிலாகத் தெரிந்து மதுரைக்குப் புறப்பட்டார். நாளும் கோளும் நலமில்லாதிருந்தும் உமையொருபாகன் உள்ளத்து விருப்பத்தால் “அவை நல்ல நல்ல” என “கோளருபதிகம்” பாடி, ஏகினார். பாண்டியன் வெப்புநோயை “திருநீற்றுப் பதிகம்” பாடி அகற்றினார். அனல் வாதத்தை பச்சை பதிகம் பாடியும், புனல் வாதத்தாலும் சமணர்களை வென்றார்.

பாண்டிய மன்னனையும், பாண்டி நாட்டு மக்களையும் சைவம் தழுவச்செய்தார். பாண்டி நாட்டில் உள்ள தலங்களைத் தரிசித்தார். சோழநாடு மீண்டார். பிறகு, பல தலங்களைத் தரிசித்து திருப்பூந்துருத்தி அடைந்தார்.. அப்பர் சுவாமிகள் இவரது சிவிகையைத் தாங்கியமையறிந்து உடனே கீழிறங்கி இருவரும் அளவளாவி இருந்தனர். திருஒத்தூரில் ஆண் பனைகளைப் பெண் பனைகளாக்கிக் காய்க்கச் செய்தார்.
எலும்பைப் பெண்ணுருவாக்கல்

மயிலாப்பூர் சிவநேசச் செட்டியாரின் மகள் பூம்பாவை பாம்பு தீண்டி இறக்க, அவளது எலும்பைக் குடத்தில் சேமித்து வைத்தார் சிவநேசர். அதனை அறிந்த ஞானசம்பந்தர் திருக்கோயில் முன் அக்குடத்தை கொணர்வித்து “மட்டிட்ட புன்னை” என்ற பதிகம் பாடி உயிர்ப்பித்தார்.
சோதியிற் கலத்தல்

பெற்றோர் விருப்பத்திற்கிணஙக, வேத நெறியில் நின்று, நம்பியாண்டார் நம்பிகள் திருமகளை மணமகளாக ஏற்று இந்த இல்லொழுக்கம் வந்து சூழ்ந்ததே இவள் தன்னோடும் "அந்தமில் சிவன் தாள் சேர்வன்" என்ற கருத்தமையக் கல்லூர்ப்பெருமணம் என்ற பதிகம் பாடினார். பெருமானது அசரீரியின்படி மனைவியோடும் உடன் வந்தாரோடும் வைகாசி முல நன்னாளில் அங்குத் தோன்றிய சோதியில் கலந்தார்.

கோயில்

திருஞான சம்பந்த மூர்த்தி கோயில் ஒன்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் பேய்க்கரும்பன்கோட்டை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது இக்கோயில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்கு சிறப்பாக கட்டப்பட்டது இக்கோயிலில் சம்பந்தரே மூலவராகவும் உற்சவ மூர்த்தியாகவும் உள்ளார் வருடாவருடம் வைகாசி மாதத்தில் இக்கோயிலில் இவ்வூர் மக்களால் சிறப்பாக திருவிழா நடத்தப்பட்டு உற்சவ மூர்த்தி பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு வீதிகளில் உலாவருவார், மேலும் மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலையில் இவ்வூர் தேவார அடியார் குழுவால் தேவார பாடல்களும் பதிகங்களும் பாடப்பெற்று சம்பந்தருக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன.

இத்தலம் தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் புலவன்காடு என்ற ஊரிலிருந்து கிழக்கே ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. தஞ்சையிலிருந்து 35 கிலோமீட்டர் தெற்கில் உள்ளது இவ்வூர் முற்றிலும் விவசாயத்தை தொழிலாக கொண்ட உரந்தை வளநாட்டின் ஒரு பகுதியாகும்.

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் திருமேற்றளித் தெருவில் திருஞானசம்பந்தர் திருக்கோவில் ஒன்று உள்ளது.


வைகாசி  -மூலம் -திருநீலநக்க நாயனார் - மே 31




 திருநீலக்கர் காவிரி நாடாகிய சோழநாட்டில் சாத்தமங்கை என்னும் ஊரில் அந்தணர் குலத்திலே பிறந்தார். இவர் வேதத்தின் உள்ளுறையாவது சிவபெருமானையும், சிவனடியார்களையும் அன்பினால் அருச்சித்து வணங்குதலே எனத் தெளிந்து கொண்டார். அதனால் நாள்தோறும் சிவாகம விதிப்படி சிவபூசை செய்வித்தல் முதலாக எவ்வகைப்பட்ட திருப்பணிகளையும் செய்து வந்தார்.


இவ்வாறு ஒழுகும் திருநீலநக்கர் திருவாதிரை நட்சத்திரம் கூடிய ஒரு நாளிலே சிவபூசை முடித்துக்கொண்டு சாத்தமங்கையில் அயவந்தி என்னும் கோயிலிலே எழுந்தருளியுள்ள பெருமானை அருச்சிக்க விரும்பினார். பூசைக்கு வேண்டும் பொருட்களைத் தம் மனைவியார் எடுத்துக்கொண்டு உடன்வரத் கோயிலை அடைந்து அயவந்தி ஈசரை முறைப்படி பூசித்து இறைவர் திருமுன் இருந்து திருவைந்தெழுத்தினைச் ஓதினார். அப்பொழுது சிலந்தி ஒன்று அயவந்தி ஈசர் திருமேனியில் விழுந்தது. அதுகண்ட நீலநக்கரின் மனைவியார் விரைந்து சென்று அதனைப்போக்க வாயினால் ஊதித் தள்ளினார்.


நாயனார் அச்செயலைக்கண்டு தன் கண்ணை மறைத்து அறிவிலாதாய்! நீ இவ்வாறு செய்தது ஏன்? என்று சினந்தார். சிலந்தி விழுந்தமையால் ஊதித்துமிந்தேன் என்றார் மனைவியார். நீ சிவலிங்கத்தின் மேல் விழுந்த சிலந்தியை வேறொரு வகையால் விலக்காமல் எச்சில்பட ஊதித்துமிந்தாய். இத்தகைய அருவருக்குஞ் செய்கை செய்த யான் இனித் துறந்தேன். நீங்கி விடு என்றார். மனைவியரும் அதுகேட்டு அஞ்சி ஒரு பக்கம் ஒதுங்கினார்.

நீலநக்கர் பூசையை முடித்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினார். மனைவியார் அவருடன் வீடு செல்ல அஞ்சி ஆலயத்தில் தங்கியிருந்தார். அன்று இரவு நீலநக்கர் துயிலும் பொழுது அயவந்திப் பெருமான் கனவில் தோன்றித் தம் திருமேனியைக் காட்டி உன் மனைவி ஊதித்துமிந்த இடம் தவிர மற்றைய எல்லா இடங்களிலும் சிலந்தியின் கொப்புளம் என்று அருளினார். நீலநக்கர் வணங்கி விழித்தெழுந்து ஆடிப்பாடி இறைவனது திருவருளை வியந்து உள்ளமுருகினார். விடிந்தபின் ஆலயத்திற்குச் சென்று இறைவனை இறைஞ்சி மனைவியாரையும் உடனழைத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினார்.



நீலநக்கரும் முன்னரிலும் மகிழ்ந்து அரன்பூசை நேசமும், அடியாருறவும் கொண்டவராய் வாழ்ந்து வந்தார்.

சம்பந்தரைத் தரிசித்தல்
அந்நாளில் சீர்காழிப் பிள்ளையாரின் சீரை உலகெலாம் போற்றுவதை அறிந்தார். தாமும் திருஞானசம்பந்தரின் திருப்பாதத்தைப் தம் தலைமிசைச் சூடிக்கொள்ள வேண்டுமெனும் விருப்புடையவரானார். இவ்வாறு விரும்பியிருந்த வேளையில் சண்பையார் மன்னர் திருத்தலங்கள் பலவற்றையும் வழிபட்டுவரும் வழியில் சாத்தமங்கையை அடைந்தார். சம்பந்தப் பிள்ளையார் வரும் செய்தியறிந்த திருநீலநக்கர் அப்பொழுதே மகிழ்ந்தெழுந்து கொடிகள் தூக்கி, தோரணம் நாட்டி, நடைபந்தலிட்டு வீதியெல்லாம் அலங்கரித்தார். தாமும் சுற்றமுமாய்ச் சென்று சம்பந்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அழைத்து வருவோமென ஆசை கொண்டார். பிள்ளையார் எழுந்தருளிய பெருமைக்குத் தக திருவமுது செய்வித்து மகிழ்ந்திருந்தார். அன்றிரவில் சம்பந்தர் தம்மனையில் தங்குவதற்கு வேண்டுவதெல்லாம் அமைத்தார். சம்பந்தரும், திருநீலகண்டத் திருப்பாணர் தங்குவதற்கோர் இடம் கொடுத்தருளுமாறு பணித்தார். அப்பணிப்பிற்கு இன்புற்றுத் தாம் வேள்வி செய்யும் வேதிகையின் அருகிலேயே பாணருக்கும், பாடினியாருக்கும் இடம் கொடுத்தார் அவ்வந்தணனார். அப்பொழுது வேதிகையிலுள்ள நித்தியாக்கினி முன்னரிலும் மேலாக வலஞ்சுழித்து எரிந்தது. பாணர் மனைவியாருடன் வேதிகையருகில் பள்ளிகொண்டார்.

சம்பந்தப் பிள்ளையார் மறுநாள் எழுந்து அயவந்திப் பெருமானை வழிபட்டுத் திருப்பதிகம் பாடினார். அத்திருப்பதிகத்திலே நீலநக்கரையும் சிறப்பித்துப் பாடியருளினார்.

சம்பந்தப்பெருமான் சாத்தமங்கையின்றும் புறப்பட்டபோது அவரோடு தொடர்ந்து செல்லவே நீலநக்கர் விரும்பினார். ஆனால் பிள்ளையார் அவரை அங்கேயே இருந்து அயவந்திப் பெருமானைப் பூசிக்குமாறு அருளிய வாக்கினை மீறவியலாது தம் உள்ளத்தைப் பிள்ளையாருடன் செல்லவிட்டுத் தான் அயவந்தியில் தங்கினார். சம்பந்தர் திருப்பாதம் நினைந்த சிந்தையராய் பூசனையை முன்னரிலும் சிறக்கச் செய்தார். முருகனார் ஆளுடைய அரசு, சிறுத்தொண்டர் ஆகிய நாயன்மாருடனெல்லாம் அளவளாவி உடனுறையும் இன்பம் பெற்றார்.

இவ்வண்ணம் ஞானசம்பந்தரால் பேரன்பு அருளப்பெற்ற திருநீலநக்கனார் அவர் தம் திருமணத்திற்குப் புரோகிதம் பார்க்கும் பேறு பெற்றார். அந்த நல்லூரிப் பெருமணத்திலேயே சோதியுட் புகுந்தார்.

"ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன்” – திருத்தொண்டத் தொகை

 வைகாசி - மூலம் - முருக நாயனார் - மே 31


முருக நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர். முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன்” என திருத்தொண்டத் தொகை இவரைப் பற்றிக் கூறுகிறது.

சோழநாட்டிலே திருப்புகலூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் முருக நாயனார். ஞானவரம்பின் தலை நின்ற இப்பெருந்தகையார், இறைவன் திருவடிக்கீழ் ஊனமின்றி நிறைஅன்பால் உருகும் மனத்தார். நாள்தோறும் விடியற்காலையில் எழுந்து நீரில் மூழ்கிக் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ எனப்படும் நால்வகைப் பூக்களில் உரிய பூக்களைக் கொய்து திருப்பூங்கூடைகளிற் கொணர்ந்து தனியிடத்திலிருந்து கோவை, இண்டை, தாமம், மாலை, கண்ணி, பிணையல், தொடையல் எனப் பலவகைப்பட்ட திருமாலைகளாகத் தொடுப்பார். ஆறுகாலப் பூசைக்கும் அவ்வக் காலப்பூசைக்கேற்பத் தொடுத்த அவற்றை திருப்புகலூரில் உள்ள வர்த்தமானீச்சரத் திருக்கோயிலில் உள்ள சிவபெருமானுக்குச் சாத்தி அர்ச்சனை செய்தும், திருவைந்தெழுத்து ஓதியும் வழிபடத் திருஞானசம்பந்தப் பிள்ளையார் எழுந்தருளிய போது பிள்ளையாரை எதிர்கொண்டழைத்து வந்தார். சிலநாட்கள் பிள்ளையாருடன் கூடிச் சென்று வர்த்தமானீசுவரப் பெருமானை நாளும் வழிபடும் பாக்கியம் பெற்றார். திருநாவுக்கரசு சுவாமிகள் புகலூருக்கு வந்த போழுது பிள்ளையாருடன் சென்று அவரை வரவெதிர்கொள்ளும் புண்ணியம் பெற்றார். அவர்தம் திருமடத்திலே ஆளுடைய அரசும் ஆளுடைய பிள்ளையாரும் சில நாள் உறைந்தனர். அந்நாளில் நீலநக்கர், சிறுத்தொண்டர் ஆகிய பெருமக்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களோடெல்லாம் அளவளாவி மகிழ்ந்திருந்தார்.

திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்கு நண்பராம் பெருமைபெற்ற முருகநாயனார், திருநல்லூரிப் பெருமணத்தில் நிகழ்ந்த திருமணவிழாவிற் கலந்துகொண்டு தங்கள் பெருமானடி நீழலில் தலையாம் நிலைமை சார்வுற்றார்.

மீண்டும் ஒருமுறை குறிப்பால் தருகின்றோம்.

சித்திரை  - சதயம்  - திருநாவுக்கரசு நாயனார் 
வைகாசி - பூசம் - நமிநந்தி அடிகள் 
வைகாசி  -ஆயில்யம் - சோமாசிமாற நாயனார் 
வைகாசி - மூலம் - திருஞானசம்பந்தர் 
வைகாசி  -மூலம் - திருநீலகண்டயாழ்ப்பாணர் 
வைகாசி - மூலம் - திருநீலநக்க நாயனார் 
வைகாசி - மூலம் - முருக நாயனார் 


தேதியைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அருகில் உள்ள சிவாலயம் சென்று அடியார் பெருமக்கள் அருள் பெறுங்கள்.

- மீண்டும் அடுத்த பதிவில் இணைவோம்.

மீள்பதிவாக :-

மார்ச் மாத அடியார்கள் பூசை - http://tut-temple.blogspot.in/2018/02/blog-post_28.html 


No comments:

Post a Comment