Subscribe

BREAKING NEWS

11 July 2018

ஜூலை மாத அடியார்கள் பூசை

அன்பிற்கினிய அடியார்களே.

அனைவருக்கும் வணக்கம். இந்த பதிவில் வரும் ஜூலை   மாதத்தில் நடைபெற உள்ள சிவ அடியார்களின் பூசை பற்றியும், அடியார்க்கு அடியாரைத் திகழ்கின்றவர்களைப் பற்றியும் காண உள்ளோம். ஜூன் மாதத்தில் அடியார்களின் பூசை பற்றிய தொகுப்பை பதிவேற்றம் செய்யாமல் விட்டுவிட்டோம். நம் மீது தவறு தான். இது போல் மீண்டும் நேரா வண்ணம் பார்த்துக் கொள்கின்றோம். அடியார்கள் என்றால் என்ன அவ்வளவு எளிதா? சிவ பெருமான் இந்த அடியார்களின் அன்பை பெற என்னென்ன செய்துள்ளார்? படிக்க படிக்க பேரானந்தம். அடியார்களின் அன்பு,அடியார்கள் பற்றி படிப்பது பெரிது என்பதால் தான் இந்த புராணத்திற்கு "பெரிய புராணம்" என்று பெயர் வழங்கலாயிற்று.சரி..இம்மாத அடியார் தரிசனம் காண்போமா?

ஆடி - சித்திரை - பெருமிழலைக் குறும்ப நாயனார்
ஆடி - கேட்டை - கோட்புலி நாயனார்
ஆடி - கேட்டை - கழற்றிவார் நாயனார் 
 ஆடி - கேட்டை - கலிய நாயனார்
ஆடி - சுவாதி    -  சுந்தர மூர்த்தி சுவாமிகள் 

ஏற்கனவே சென்ற வாரம், ஒரு அடியாரின் பூசை முடிந்து விட்டது. மற்ற அடியார்களைப் பற்றி சிறிது அறிவோம்.

ஆடி - சித்திரை - பெருமிழலைக் குறும்ப நாயனார் -ஜூலை 19

"பெருமிழலைக் குறும்பர்க்கும் அடியேன்" - திருத்தொண்டத் தொகை



சோழநாட்டின் உள்நாடாகிய மிழலைநாட்டிற் பெருமிழலை என்னும் ஊரின் தலைவராய் விளங்கியவர் மிழலைக்குறும்பனார் ஆவர். இவர் சிவனடியார்கான திருப்பணிகளை விருப்புடன் செய்பவர்; சிவபெருமான் திருவடிகளை நெஞ்சத்தாமைரையில் இருத்தி வழிபாடு செய்பவர். இறைவனது திருவைந்தெழுத்தினை இடைவிடாது நினைந்து போற்றுபவர். இவ்வாறு சிவபத்தியிலும், சிவனடியார் பத்தியிலும் சிறந்து வாழும் மெய்யடியார்கள் சித்தம் நிலவும் திருத்தொண்டத்தொகை பாடிய நம்பியாரூரர் பெருமையைக் கேள்வியுற்றார். அவரைப் பணிந்து அவருடைய திருவடிகளை நினைந்து போற்றுதலை நியமமாகக் கொண்டார். நம்பியாரூரர் திருவடிகளைக் கையால் தொழுது வாயால் வாழ்த்தி மனதால் நினைக்குங் கடப்பாட்டினால் இதுவே சிவபெருமான் திருவடிகளை அடைவதற்குரிய நெறியாகும் என்று அன்பினால் மேற்கொண்டார். நம்யாரூரர் திருபெயரினை நாளும் நவின்ற நலத்தால் அணிமா முதலிய அட்டமா (எட்டுவிதமான்) சித்திகளும் கைவரப்பெற்றார்.

இத்தகைய நியமங்களையுடையாராய்ப் பெருமிழலைக்குறும்பர் வாழ்ந்துவரும் நாளில், சுந்தரமூர்த்தி நாயனார் திருவஞ்சைக் களத்திற் சென்று திருப்பதிகம் பாட அவருக்குச் சிவபெருமான் அருளால் வடகயிலை அடையும் பேறு மறுநாள் கிடைக்க இருப்பதனைத் தம்முடைய ஊரில் இருந்து கொண்டே யோகக் காட்சியால் அறிந்து கொண்டார். "திருநாவலூரில் திருக்கயிலை எய்த நான் அவரைப் பிரிந்து கண்ணிற் கரியமணி கழிய வாழ்வார் போல வாழேன்" என்று எண்ணி 'இன்றே யோகத்தால் சிவன் தாள் சென்றடைவேன்' என்று சொல்லி. நாற்கரணங்களாலும் ஒரு நெறிப்பட்டு நல்லறிவு மேற்கொண்டு, பிரமநாடிகளின் வழியே கருத்தைச் செலுத்த, யோக முயற்சிகளினாலே பிரமரந்திரம் திறப்ப, உடலின்றும் பிரிந்து திருக்கயிலை வீற்றிருந்து அருளும் சிவபெருமானது திருவடி நீழலை அடைந்தார்.

ஆடி - கேட்டை - கோட்புலி நாயனார் - ஜூலை 24

“அடல் சூழந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை



கோட்புலிநாயனார் சோழநாட்டிலே திருநாட்டியத்தான்குடியில் வேளாளர் மரபில் தோன்றினார். இந்நாயனார் நம்பியாரூரைத் தம் ஊருக்கு எழுந்தருளுமாறு வேண்டு, அவர் இசைந்துவர எதிர்கொண்டு அழைத்துத் தம் மாளிகையிற் சிறப்போடு பூசனையாற்றித் தம் மகளிர் இருவரையும் அடிமைகொள்ளுமாறு அர்பணித்தார். அவர் தம் அர்பணம் நம்பியாரூரரை அம்மகளரின் ‘அப்பானா’க முறைமை கொண்டு சிங்கடியப்பன், வனப்பகைஅப்பன் எனத் தம்மைக் கூறிக்கொள்ளுமளவிற்கு நம்பியாரூரரை இரங்கச்செய்தது.

சோழ சேனாதிபதியாக அதிகாரம் புரிந்த இவர் பகை நாடுகளைப் போரில் வென்று புகழுடன் விளங்கினார். அரசனிடம் பெற்ற சிறப்பின் வளங்களை எல்லாம் சிவன் கோயிலில் திருவமுதுபடி பெருகச் செய்யும் திருப்பணிக்காக்கி அதனையே பன்னெடுநாள் செய்தனர். அந்நாளில் அவர் அரசனது போரினை மேற்கொண்டு பகைவர் மேற் செல்ல நேர்ந்தது. அப்பொழுது தாம் திரும்பி வரும் வரையில் சிவனுக்கமுது படிக்காகும் நெல்லினைக் கூடுகட்டி வைத்துத், தம் சுற்றத்தாரை நோக்கி ‘இறைவர்க்கு அமுது படிவைத்துள்ள இந்நெல்லை எடுத்தல் கூடாது. திருவிரையாக்கலி என்னும் ஆணை’ எனத் தனித்தனியே ஒவ்வொருவரிடமும் சொல்லிச் சென்றார். சில நாளிலே நாட்டிற் கடும் பஞ்சம் வந்தது. பசியால் வருந்திய சுற்றத்தார்கள் ‘நாம் உணவின்றி இறப்பதைவிட இறைவர்க்கு வைத்த நெல்லைக் கொண்டாகிலும் பிழைத்து உயிர் தாங்கியிருந்து பின்னர் குற்றந்தீரக் கொடுத்துவிடும் என்று நெற்கூட்டைத் திறந்து நெல்கூட்டைத் திறந்து நெல்லைச் செலவழித்தனர். அரசருடைய பகைவரைப் போர் முனையில் வென்று அரசனிடம் நிதிக்குவை பெற்று மீண்ட கோட்புலியார், தம் சுற்றத்தார் செய்த தீமையை உணர்ந்து அவர்கள் அறியாத வகையில் அவர்களைத் தண்டிக்க நினைத்தார். தம் மாளிகையை அடைந்து. ‘தம் சுற்றத்தார்க்கெல்லாம் ஆடையணிகலன்கள் கொடுக்க அவர்களை அழைத்து வாருங்கள்’ என்று அவர்களை அழைத்து அவர்கள் எவரும் ஓடிவிடாதபடி வாயிலிற் காவலனை நிறுத்தி வைத்தார். ‘சிவ ஆணையை மறுத்து அமுது படியை அழித்த மறக்கிளையை கொல்லாது விடுவேனோ? என்று கனன்று, வாளினை எடுத்துக் கொள்வாராயினர். தந்தையார், தாயார், உடன் பிறந்தவர், சுற்றத்தவர், பதியடியார்’ மற்றும் அமுது படியுண்ண இசைந்தார், இவர்களையெல்லாம் அவர்களது தீயவினைப் பாவத்தினைத் துணிப்பாராய்த் துண்டம் செய்தார். அங்கு ஒரு பசுங்குழந்தை தப்பியது. காவலாளன் ‘இக்குழவி (இக்குழந்தை) அமுதுபடி அன்னமுண்டிலது, ஒரு குடிக்கு ஒருமகன்; அருள் செய்யவேண்டும்’ என்று இறைஞ்சினார். அவ்வண்ணம் உண்டாளது முலைப்பாலினை உண்டது” என்று கூறி அதனை எடுத்து எடுத்து எறிந்து வாளினை வீசி இரு துணியாக விழ எற்றினார்.

அப்போது இறைவர் வெளிப்பட்டார். உன் கைவாளினால் உறுபாசம் அறுத்த சுற்றத்தவர் தேவருலகம் முதலிய போக பூமிகளிற் புகுந்து பின்னர் நம்முலகமடைய, நீ இந்நிலையிலேயே நம்முடன் அணைக என்று அருளி மறைந்தார். 

 ஆடி - கேட்டை - கலிய நாயனார் - ஜூலை 24


தொண்டை நாட்டில் திருவொற்றியூரிலே செக்குத் தொழிலை உடைய வணிகர் மரபிலே தோன்றியவர் கலியநாயனார். செல்வமுடைய இவர் சிவபெருமானுக்கு உரிமைத் தொண்டில் ஈடுபட்டுத் திருவெற்றியூர்த் திருக்கோயிலில் உள்ளும் புறமும் திருவிளக்கிடும் திருத்தொண்டினைச் செய்து வந்தார். இவரது உண்மைத் தொண்டின் பெருமையை புலப்படுத்தத் திருவுளங்கொண்ட சிவபெருமான் திருவருளால் இவரது செல்வம் அனைத்தும் இவரைப் பிணித்த இருவினைப் போற் குறைய வறுமை நிலை உண்டாயிற்று. அந்நிலையில் தமது மரபிலுள்ளார் தரும் எண்ணெயை வாங்கி விற்று அதனால் கிடைத்த பொருளால் தாம் செய்யும் திருவிளக்குப் பணியை இடைவிடாது செய்தார். பின்னர் எண்ணெய் தருவார் கொடாமையால் கூலிக்குச் செக்காடி அக்கூலி கொண்டு விளக்கெரித்தார். வேலையாட்கள் பெருகித் தம்மைக் கூலிக்கு அமர்த்திக் கொள்வார் இல்லாமையால் வீடு முதலிய பொருட்களை விற்று விளக்கெரித்தார். முடிவில் தம் மனைவியாரை விற்பதற்கு நகரெங்கும் விலைகூறி வாங்குவாரில்லாமையால் மனம் தளர்ந்தார். திருவிளக்கேற்றும் வேளையில் ஒற்றியூர்த் திருக்கோயிலை அடைந்து “திருவிளக்குப் பணி தடைப்படின் இறந்துவிடுவேன்” எனத்துணிந்து எண்ணெய்க்கு ஈடாக தமது உதிரத்தையே நிறைத்தற்க்குக் கருவி கொண்டு தமது கழுத்தை அரிந்தார். அப்பொழுது ஒற்றியூர்ப்பெருமானது அருட்கரம், நாயனாரது அரியும் கையைத் தடுத்து நிறுத்தியது. அருட்கடலாகிய சிவபெருமான் விடைமீது தோன்றியருள, உடன்பின் ஊறு (காயம்) நீங்கித் தலைமேற் கைகுவித்து வணங்கி நின்றார். சிவபெருமான் அவரைப் பொற்புடைய சிவபுரியிற் பொலித்திருக்க அருள் புரிந்தார்.

ஆடி - சுவாதி    -  சுந்தர மூர்த்தி சுவாமிகள் -ஜூலை 20


சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரும் ஆவார். இவர் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது சிவபெருமான் கிழவனாக சென்று தடுத்தார்.பின்பு சுந்தரரின் பிறவி நோக்கம் சிவபெருமானை புகழ்ந்து பாடுவது என புரியவைத்தார். இதனை தடுத்தாட்கொள்ளுதல் என சைவர்கள் கூறுகிறார்கள். இவர் இறைவன் மீது பல தலங்களுக்குச் சென்று பாடியுள்ளார். இப்பாடல்களை திருப்பாட்டு என்று அழைக்கின்றனர். திருப்பாட்டினை சுந்தரர் தேவாரம் என்றும் அழைப்பர். [திருமணத்தினை தடுத்து சுந்தரரை அழைத்துவந்த சிவபெருமானே பரவையார், சங்கிலியார் என்ற பெண்களை திருமணம் செய்துவைத்தார்.

இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும்.இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.  இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலில் 60 சிவனடியார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்நூலின் துணை கொண்டே சேக்கிழார் பெரியபுராணம் எனும் நூலை இயற்றினார். அதில் சுந்தர மூர்த்தி நாயனாரையும், அவரது பெற்றார்களான சடையனார், இசை ஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து சிவதொண்டர்களின் எண்ணிக்கையை 63 என கையாண்டார்.

சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களை சுந்தரர் தேவாரம் என்று அழைக்கின்றனர். இப்பாடல்களை திருப்பாட்டு என்றும் அழைப்பது வழக்கம். இப்பாடல்களை பன்னிரு திருமுறைகளிலும், தேவாரத்திலும் இணைத்துள்ளார்கள்.

இவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் 38000 என்று கூறுகின்றனர். இவை பண்களோடு அமைந்துள்ளன. அதனால் பண் சுமந்த பாடல்கள் என்றும் கூறுகின்றனர். இவற்றில் 100 பதிகங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 17 பண்கள் இடம்பெற்றுள்ளன.தேவாரங்களில் செந்துருத்திப் பண் கொண்டு பாடல்பாடியவர் இவரே. தேவாரங்களைப் பாடிய மற்ற ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் இந்தப் பண்ணில் பாடல்களை பாடவில்லை. 

சுந்தரர் அருளிய திருப்பதிகங்களை ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம் அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101.

சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினை சேர்ந்தவர்.  இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும்.நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர். இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார். 

சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையார் கண்டார். சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார்.

மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்கு புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி" என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பாடல்களின் மூலமாக இறைவனை தன்னுடைய நண்பனாக்கிக் கொண்டார். சிவத் தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார். "நீள நினைந்தடியேன்" என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான் பெற்ற நெல்லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.

அரசரான சேரமான் பெருமாள் இவருக்கு நண்பராயிருந்தார்.

இறைவனும் இவர் மற்றொருவரிடம் பொருள் பெற அனுமதித்ததில்லை.சேரமான் பெருமானை இவர் சந்தித்து திரும்பும் போது, அம்மன்னர் பொன்,பொருள்,மணியிழைகள்,ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார். திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார். சுந்தரர் ’கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்....’ எனத்துவங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான் சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை இறைவன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.


சுந்தரர் தனது 18 ஆவது வயதில் சிவனடி சேர அடைந்திட பதிகம் பாடினார். சிவபெருமான் வெள்ளை யானை சுந்தருக்கு அனுப்ப, அதில் ஏறி கைலாயம் சென்றார். அங்கிருந்த சிவனும் பார்வதியும் வரவேற்று முக்தியளித்தனர்.

மீண்டும் ஒருமுறை குறிப்பால் தருகின்றோம்.

ஆடி - சித்திரை - பெருமிழலைக் குறும்ப நாயனார் - ஜூலை 19
ஆடி - கேட்டை - கோட்புலி நாயனார் - ஜூலை 24
ஆடி - கேட்டை - கழற்றிவார் நாயனார் - ஜூலை 24
ஆடி - கேட்டை - கலிய நாயனார் - ஜூலை 24
ஆடி - சுவாதி    -  சுந்தர மூர்த்தி சுவாமிகள் - ஜூலை 20

தேதியைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அருகில் உள்ள சிவாலயம் சென்று அடியார் பெருமக்கள் அருள் பெறுங்கள்.

- மீண்டும் அடுத்த பதிவில் இணைவோம்.

மீள்பதிவாக :-

மே மாத அடியார்கள் பூசை - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_11.html

மார்ச் மாத அடியார்கள் பூசை - http://tut-temple.blogspot.in/2018/02/blog-post_28.html


No comments:

Post a Comment