நமது விதிப்படிதான் அனைத்தும் நடக்கிறது, அதை மாற்ற முடியாது என்கிற கருத்து பலரை ஆட்டிப்படைக்கிறது. ஆனால் அதை மாற்ற முடியும். இந்த மண்ணில் யாவரும் நல்ல வண்ணம் வாழலாம், எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவில்லை என்று உணர்த்துவதே இந்த பதிவின் நோக்கமாகும். ஆனால் இது மந்திரத்தில் மாங்காய் வரவழைக்கும் முயற்சியல்ல. உங்கள் எண்ணங்களையும் சிந்தனை ஓட்டத்தையும முற்றிலும் மாற்ற நடக்கும் வேள்வி. அதனை நினைவில் வைத்திருங்கள்!
இந்தக் கதையை நீங்கள் ஏற்கனவே படித்திருக்கலாம், கேட்டிருக்கலாம்.
அவர் ஒரு பிரபல ஜோதிடர். அவர் ஒருவருடைய ஜாதகத்தை கணித்து ஒரு விஷயத்தைச் சொன்னால், அது அந்த பிரம்மாவே சொன்னது போல் அந்தளவு ஜோதிடத்தில் பாண்டியத்துவமும், நிபுணத்துவமும் பெற்றவர்,எனவே அவரை சந்தித்து தங்கள் ஏதிர்கால பலன்களை தெரிந்துகொள்ள பலரும் பல ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வருவார்கள்.
தனது ஏதிர்காலம் குறித்து மிகவும் கவலை கொண்ட ஒரு ஏழைக் கூலித்தொழிலாளி அந்த ஜோதிடரை சந்தித்தார் .
“நான் மிகவும் வறுமையில் இருக்கிறேன். கடன் பிரச்சினை வேறு என்னை வாட்டுகிறது, எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறு. அவர்களை எப்படி கரையேற்றப்போகினறேன் என்று தெரியவில்லை. நான் நன்றாக வாழ ஏதாவது வழி இருக்கிறதா என்று என் ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள்”என்று தன் ஜாதகத்தை கொடுத்தார் அந்த ஏழை தொழிலாளி.
ஜோதிடரும் அந்த ஏழை தொழிலாளியின் ஜாதகத்தைக் கணிக்கத் தொடங்கினார். சோழிகளை உருட்டிப்போட்டார். கட்டங்களை ஆராய்ந்தார். ஒருகட்டத்தில் ஜோதிடரின் முகம் மிகவும் சுருங்கிப்போனது.
பிறகு தொழிலாளியிடம்,”ஐயா எனக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான பணி ஒன்று இருக்கிறது. உங்கள் ஜாதகத்தை சற்று விரிவாக ஆராய வேண்டி இருக்கிறது.எனவே இந்த ஜாதகம் என்னிடமே இருக்கட்டும்.நீங்கள் இன்று போய் நாளை இந்நேரத்திற்கு வாருங்கள் .நான் உங்களுக்கு அனைத்தையும் சொல்லிவிடுகிறேன்”என்றார்.
சரிங்க ஐயா நான் நாளைக்கு வருகின்றேன். இப்போ ஏதாச்சும் தரணுமா ஐயா?”என்று ஜோதிடரிடம் கேட்டார்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்...நாளைக்கு வரும்போது கொடுங்க போதும்...”
“ரொம்ப நன்றிங்க ஐயா... நான் நாளைக்கு வர்ரேன்...”
தொழிலாளி அங்கிருந்து புறப்பட்டார்.
அப்போது அங்கு வந்த ஜோதிடரின் மூத்த மகள்,அப்பா...ஏன் அவர்கிட்ட அவசர வேலை இருக்குன்னு சொல்லி அனுப்பினீங்க? இன்னைக்கு எனக்கு வேலை இல்லை. முழுக்க முழுக்க வர்றவங்களுக்கு ஜாதகம் பார்த்து பலன் சொல்லப்போரேன்னு காலையில சொன்னீங்க?”என்று கேட்டாள்.
அதற்கு ஜோதிடர்,”அம்மா..அவரது ஆயுட்காலம் இன்றிரவு முடியப்போகிறது. அவரது ஜாதகம் உணர்த்துவது அதைத்தான். மேலும் சோழி உருட்டிக்கூட பார்த்துவிட்டேன். பரிகாரம் செய்வற்கு அவருக்கு அவகாசம் இல்லை. இதை அவரிடம் தெரிவிக்க மனமில்லை. அதனால் தான் பொய் சொல்லி அவரை இங்கிருந்து அனுப்பினேன்...பாவம்.”ஏன்றார் ஜோதிடர்.
இதற்கிடையில் அந்த தொழிலாளி தனது ஊரை நோக்கி வயல்வெளிகளுக்கு இடையே நடந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வானம் மேகமூட்டமாகி இருள் சூழ்ந்து.சிறிது நேரத்தில் மழை தூற ஆரம்பித்தது பின்பு வலுப்பெற்று இடியுடன் பலத்த மழை கொட்டியது. வயல்வெளிகளுக்கு இடையே ஒதுங்க இடமின்றி ஓட்டமும் நடையுமாக விரைந்து நடக்க ஆரம்பித்தார் . சற்று தூரத்தில் ஆள் அரவமற்ற ஒரு பாழடைந்த ஒரு கட்டிடம் இருந்தது. அங்கே ஓடி ஒதுங்கினார். அந்த தொழிலாளி.பார்த்தால் அது ஒரு பாழடைந்த சிவன் கோவில் “ஈசன் குடியிருக்கும் கோவில் இப்படி கவனிப்பாறற்று சிதிலமடைந்து இருக்கிறதே! நான் மட்டும் பணவசதியுடன் இருந்தால் இந்தக் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிடுவேன். என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டார்.
அத்துடன் அவர் நிற்காமல் கோவிலை புதுப்பிப்பதுபோலவும், கும்பாபிஷேகம் செய்வது போலவும்,சிவன் முன் நின்று வணங்குவது போலவும் தன் எண்ணத்தினை ஓடவிட்டார் கற்பனையாக.
அந்தச் சிந்தையோடு தன் தலைக்கு மேலே பார்த்தபோது அங்கே ஒரு நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து அவரைக் கொத்த தயாராக இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். ,ஒரு வினாடிகூட தாமதிக்காமல் அம்மண்டபத்தை விட்டு வெளியே ஓடினார் .
இவர் வெளியே வந்ததும்தான் தாமதம், பேரிடி அம்மண்டபத்தின் மீது விழுந்து அம்மண்டபம் தரைமட்டமானது.
அதில் உருண்டோடிவந்த ஒரு சிறிய கல் இவரது காலை லேசாக காயப்படுத்தியது. அந்த அதிர்ச்சியில் மீளாத அவர் தன் வீட்டை நோக்கி பயணித்தார். பொழுதும் இருண்டுபோனது.
வீட்டுக்கு வந்த அவர் தன் மனைவி மக்களிடம் தனக்கு நடந்ததை திகிலுடன் கூறினார்.
மறுநாள் மாலை வழக்கம்போல் ஜோதிடரைச் சந்திக்கச் சென்றார். தொழிலாளியைப் பார்த்த ஜோதிடருக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. அவரை வரவேற்று அமரவைத்துவிட்டு ,ஒருவேளை நாம் சரியாக பலன் கணிக்கவிலையோ என்று சந்தேகத்துடன் மீண்டும் அவரின் ஜாதகத்தினை ஆராய்ந்தார். அவர் கணக்கு சரியாகவே இருந்தது பின் எப்படி பிழைத்தார்?.இதுபோன்ற கண்டத்திலிருந்து தப்பிக்கவேண்டுமென்றல்,அந்த நபர் சிவன் கோவில் ஒன்றைகக் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் செய்திருக்க வேண்டும்.அதற்கான புண்ணியத்தினை பெற்றிருக்க வேண்டுமே?என்று ஜோதிட நூல்களில் சொல்லப்பட்டிருகிறது, அனால் இவரோ பரம ஏழை. இவரால் எப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்திருக்கமுடியும்?அதுவும் ஒரு இரவுக்குள்?என்று பலவாறு சிந்தித்துக்கொண்டு ,”நேற்றிரவு என்ன நடந்தது?”என்று அவரிடம் கேட்டார்.
அவர் தான் சென்றபோது மழை பொழிய தொடங்கியதையும் , அப்போது ஒரு பாழடைந்த சிவாலயத்தின் பக்கம் தான் ஒதுங்கியதையும் கூறினார்.
மேற்கொண்டு என்ன நடந்தது என்று ஜோதிடர் ஆர்வமுடன் கேட்க , இவர் அந்த சிதிலமைடைந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்வதுபோல் கனவுகண்ட விஷயத்தையும் கூறினார்.
ஜோதிடருக்கு அடுத்தநொடி அனைத்தும் விளங்கிவிட்டது. இவர் மனதளவில் செய்ய நினைத்த கோவில் புனரமைப்பும், கும்பாபிஷேகமுமே இவருக்கு முழுமையான பலன்களை தந்து ஈசனருளால் அவரது விதி மாற்றி அமைக்கப்பட்டதை உணர்ந்துகொண்டார்.
“இது உங்களுக்கு மறு ஜென்மம் அதுவும் ஈசன் கொடுத்தது. இனி உங்களுக்கு எந்த குறையுமிருக்காது போய் வாருங்கள் என்று வழியனுப்பி வைத்தார் ஜோதிடர்.
நம்மிடம் தோன்றும் நல்ல சிந்தனைகள் நம் தலைவிதியையே மாற்றும் என்பதற்கு இந்த கதை ஒரு எடுத்துக்காட்டு.
இது ஏன் உங்களது வாழ்விலும் நடக்காது?
நிச்சயம் நடக்கும்.அதற்கு நீங்கள் சிவபுண்ணியச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்.அனுபவித்தே தீர வேண்டும். என்று விதி இருந்தால் கூட சிவ சிந்தனை உங்களது விதியை மாற்றவல்லது.
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே
—திருமூலரின் திருமந்திரம்
பொருள்:-
பாவிகள், சிவன் (கடவுள்) நாமத்தை உச்சரிக்க மாட்டார்கள்; பாவம் செய்தவர்களும் சிவ, சிவ என்ற நாமத்தை உள்ளன்போடு உச்சரித்தால் பாவங்கள் போகும். சிவன் நாமத்தை உச்சரித்தால் மனிதனும் தேவர் ஆகிவிடுவான். தொடர்ந்து சிவன் நாமத்தை உச்சரிப்பவர்கள் சிவனுடன் ஒன்றிவிடுவார்கள்.
தண்டரை ஸ்ரீ காமாட்சி உடனுறை ஸ்ரீ கைலாசநாதர்
ஆலயத்தை புதுபிக்க வழி கிடைத்ததா?
அன்று மாலை வீடு திரும்பிய நாங்கள் உண்மையில் சிவ சிந்தனை உள்ள அடியார்களை நாம் ஒன்று திரட்டியாக வேண்டும்? என தீர்மானித்து நமது வாட்சாப் குழு நண்பர்களிடம் பேசியபோது சுமார் பத்து பேர்மட்டும் முழு ஈடுபாட்டுடன் இருப்பவர்களை தேர்ந்தெடுத்தோம் ,தனியாக தண்டரை கோவில் பெயரில் ஒரு தனிக்குழுவை ஏற்படுத்தி உண்மையில் சிவ சிந்தனை உள்ள நண்பர்களை மட்டும் இதில் இணைக்க திட்டமிட்டோம். நாம் நினைத்ததை விட மிக நல்ல அடியார்கள் மேலும் மேலும் நமது நண்பர்கள் மூலம் இந்த குழுவில் இணைந்தார்கள் இணைத்தது யார்?அந்த சிவமல்லவா..
நமது முதற்கட்ட பணியானது கோவிலின் உள்ளே புதர் மண்டிக்கிடக்கும் இடத்தினை
சுத்தம் செய்து முழுவதும் கான்க்ரீட் தரை அமைத்து சுமார் ஒருஅடி உயரம் உயர்த்த வேண்டும்.
இதற்க்கு ஜல்லி , எம் சாண்ட், சிமன்ட், ஆள் கூலி என சுமார் 50,000 ருபாய் தேவைப்படுகிறது ,அடுத்து கோவில் உட்பிரஹார, மற்றும் கோபுர புனரமைப்பு, நுழைவு
வாயில் கதவு சரி செய்தல் ,எலெக்ட்ரிகல், வண்ணம்
பூசுதல் பின்பு கும்பாபிஷேகம் என அப்பப்பா நீதான்பா வழி காட்டனும்...
இதோ முதல் அடி எடுத்து வைத்துவிட்டோம் !..
நமது குழுவின் அடியார்களின் பெருங்கருணையால்
முதற்கட்ட பணிக்குத்தேவையான உதவி கிடைத்துவிட்டது .தங்களால் முடிந்த தொகை மற்றும் தங்கள் நண்பர்களிடத்தில் கேட்டு பெற்றது அப்படி இப்படி என முதற்கட்ட பணிகளுக்குத்தேவையான பண உதவி கிடைத்துவிட்டது இதோ தைமாதம் 4 தேதி /ஆங்கிலம் 17/01/2021 அன்று பூஜை போடப்பட்டு திருப்பணிகள் தொடங்கின,திருப்பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட
பணிகளுக்கு பொருளுதவி, பண உதவி, இன்னும் அநேக உதவிகள் செய்த, செய்துகொண்டிருக்கின்ற அன்பு சிவனடியார்களும் அவர்களது அன்பு குடும்பமும் நீடூழி நிம்மதியுடன் வாழ நமது குழுவின் சார்பாக எல்லாம் வல்ல அந்த ஈசனிடம் வேண்டுகிறோம்.
மேலும் இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம்,என
அடுத்தடுத்த பணிகளுக்குத்தேவையான உதவிகள் கிடைத்திட ஈசன் அருள்புரிவார் என அவன் பெயரில் பொறுப்பினை விடுத்து நமது கடமையினை செய்வோம் வாருங்கள்.
நன்றி.