Subscribe

BREAKING NEWS
Showing posts with label அறுபத்து மூவர். Show all posts
Showing posts with label அறுபத்து மூவர். Show all posts

29 April 2019

அப்பர் சாமி திருவடி போற்றி! போற்றி !!

அனைவருக்கும் வணக்கம். 

இன்று சித்திரை சதயம் நட்சத்திரம். இந்த ஆண்டு கூடுமானவரையில் அடியார்களின் பூசை தொகுத்து தந்து வருகின்றோம். அந்த வரிசையில் இன்று அப்பர் பெருமான் பாதம் சரணடைவோம். அடியார் தம் பெருமை சொல்லவும் பெரிதே..கேட்க கேட்க திகட்டாது. படிக்க படிக்க இன்பம் தரும். 

இவங்க இல்லன்னா சிவம் இல்லை ன்னு சொல்ற அளவுக்கு பக்தி நெறி மட்டும் காட்டாம முக்தி நெறி காட்டுனவங்க தான் இவங்க.புரிஞ்சு இருக்கும் னு நினைக்கிறோம். இவங்கள கெட்டியா பிடிச்சுக்குவோம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா சிவ புண்ணியம் செய்தவங்க. இவர்களோட அடியொற்றி நாமும் இனிமே நமது கடமைகளை செய்ய முயற்சி செய்யணும்.

நால்வர் துதியோடு பதிவிற்குள் செல்வோமா?

 பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

- உமாபதி சிவாச்சாரியார்







 இப்பாடலில், ஒவ்வொரு அடியும், சைவக்குரவர்களில், ஒவ்வொருவரைக் குறிக்கும்.
சைவத் திருமுறைகளைப் பாடத்துவங்குமுன், சைவக்குரவர், நால்வரையும், வாழ்த்துவது மரபாகும்.

1.பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
இந்த அடி, சம்பந்த பெருமானைக் குறிப்பதாகும்.
பூமியை ஆளுகிற அரசன், (கூன் பாண்டியனின்), வெப்பு நோய் தீர்த்த, சம்பந்தரின் ( சரண் புகுபவர்களின் காவலனின்), கழலடிகளைப் போற்றுவோம்.

2.ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி :
இந்த அடி அப்பர் பெருமானைக்குறிப்பதாகும்."கற்றுணைப் பூட்டி ஓர், கடலில், பாய்ச்சினும், நற்றுணையாவது நமச்சிவாயவே.." என்று உலகுக்கு விளங்க வைத்த திருநாவுக்கரசர் அடிகளைப் போற்றுவோம்.

3.வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி :
திரு நாவலூரில் பிறந்த சுந்தரரின், (வன் தொண்டரின்), பாதங்களைப் போற்றுவோம்.
இறைவனைப் பாடும் போது, வசை மொழிகளால், (பித்தா !) எனப் பாடியதால், வன் தொண்டர், என்ற பெயரும், சுந்தரருக்கு உண்டு.

4. ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி :
உலகம், உய்ய, தம், அன்பால், இறைவனைச் சிக்கெனப்பிடித்த, திருவாதவூரில் பிறந்த மாணிக்க வாசகரின், திருவடிகளைப் போற்றுவோம்.


சரி. இனி அப்பர் பதம் படிப்போம்.

அப்பர் திருநாவுக்கரசு நாயனார் கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், 63 நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரை தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பத்தி செலுத்துதலில் தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர்.

இவரை திருஞானசம்பந்தர் அப்பர் (தந்தை) என்று அழைத்தமையால்,. அப்பர் என்றும், நாவுக்கரசர் என்றும் அறியப்படுகிறார். இவர் தாண்டகம் எனும் விருத்த வகையை பாடியமையால் இவரை தாண்டகவேந்தர் என்றும் அழைக்கின்றனர்.


நாயன்மார்களில் பல்வேறு பெயர்களைக் கொண்டவர் இவர். இயற்பெயர், மதம் மாறியமையால் பெற்றமை, செயல்களாலும், கவியாலும் பெற்றவை என பல பெயர்கள் இவருக்கு உள்ளது.

  1.     மருணீக்கியார் - இயற்பெயர்
  2.     தருமசேனர் - சமண சமயத்தை தழுவிய போது கொண்டு பெயர்
  3.     நாவுக்கரசர், திருநாவுக்கரசர் - தேவாரப் பாடல்களை பாடியமையால் பெற்ற பெயர்
  4.     அப்பர் - திருஞானசம்பந்தர் அழைத்தமையால் வந்த பெயர்
  5.     உழவாரத் தொண்டர் - சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியை செய்தமையால் பெற்ற பட்டப்பெயர்
  6.     தாண்டகவேந்தர் - தாண்டகம் எனும் விருத்த வகையை பாடியமையால் பெற்ற பட்டப்பெயர்
திருநாவுக்கரசர் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவாமூர் எனும் ஊரில் சைவ வெள்ளாளர் குலத்தில் புகழனார் மற்றும் மாதினி இணையாருக்குப் பிறந்தவர்.இவருடைய இயற்பெயர் மருணீக்கியார் ஆகும். இளமையில் சைவசமயத்தினை விட்டு சமண சமயத்தவரானார். சமண நூல்களைக் கற்று அம்மத தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். அப்போது தருமசேனர் என்று அழைக்கப்பட்டார்.

தருமசேனரின் தமக்கையார் திலகவதியார். இவர் சிவபக்தராக இருந்தார். அதனால் சமண சமயத்தில் தன்னுடைய தம்பி இணைந்ததை எண்ணி வருந்தி இறைவனிடம் முறையிட்டார். அதனால் தருமசேனருக்கு கடுமையான சூலை நோய் (வயிற்று வலி) ஏற்பட்டது. சமண மடத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல் போகவும், திலகவதியாரின் ஆலோசனைப்படி தருமசேனர் "கூற்றாயினவாறு விலக்ககலீர்" எனத் தொடங்கும் பாடலைப் பாடினார்.இப்பாடலால் நோய் தீர்ந்தது. அதன் பிறகு சைவ சமயத்தவராகி நாவுக்கரசர் என்று அழைக்கப்பட்டார்.

பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடினார். அத்துடன் சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியையும் செய்தார். இதனை உழவாரப் பணியென்று சைவர்கள் அழைக்கின்றனர். பல்வேறு சிவாலயங்களில் உழவாரப் பணிச் செய்து முன்னோடியாக இருந்தமையால், "உழவாரத் தொண்டர்" என அழைக்கப்பட்டார். இன்றும் சைவர்கள் உழவாரப் பணியின் தலைவராக நாவுக்கரசரையே கொள்கின்றனர். இவர் இறைவனை தொண்டு வழியில் வழிபட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.

சமண சமயத்தை சேர்ந்த மன்னன் மகேந்திர பல்லவன் திருநாவுக்கரசரைப் பலவிதங்களில் துன்புறுத்தினான். அத்துன்பங்களை திருநாவுக்கர் இறைவன் அருளால் வென்றார். இத்தகைய துன்பங்கள் இழைக்கப்பட்டும், இறைவன் அருளால் மீண்டதை, "கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவே" எனும் நமச்சிவாயப் பதிகத்தில் பதிவு செய்துள்ளார். இறுதியில் மகேந்திர பல்லவனும் சைவ சமயத்தை தழுவினான்.

தனது முதிர்ந்த வயதில் சிறுவராயிருந்த திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருடன் சேர்ந்து தல யாத்திரைகள் செய்தார். மேலும் திருஞானசம்பந்தரால் அப்பர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன. சமயத் தொண்டு புரிந்த திருநாவுக்கரசர் 81ஆவது வயதில் திருப்புகலூரில் சித்திரைச் சதயத்தில் உயிர் நீத்தார். 

இவர் பாடிய தலங்களில் முக்கியமான தலம் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆகும். இங்கு அவர் என் கடன் பணி செய்துகிடப்பதே என்னும் வரிகளைப் பாடி அருளினார். மேலும் அவர் கரக்கோயில் என இத்தலத்தினை பாடியுள்ளார். ஒன்பது வகைக் கோயில்களில் கரக்கோயில் என போற்றப்படும் ஒரே தலம் மேலக்கடம்பூர் ஆகும். 


அற்புதங்கள்
  1.     சமணர்களாலே 7 நாட்கள் சுண்ணாம்பு அறையில் அடைத்து வைத்திருந்தும் வேகாது உயிர் பிழைத்தார்
  2.     சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டும் சாகாது உயிர் பிழைத்தார்
  3.     சமணர்கள் விடுத்த கொலை யானை வலம் வந்து வணங்கிச் சென்றது
  4.     சமணர்கள் கல்லிற் சேர்த்துக்கட்டிக் கடலில் விடவும் அக்கல்லே தோணியாகக் கரையேறியது.
  5.     சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றது
  6.     வேதாரணியத்திலே திருக்கதவு திறக்கப் பாடியது.
  7.     விடத்தினால் இறந்த மூத்ததிருநாவுக்கரசை உயிர்ப்பித்தது[3]
  8.     காசிக்கு அப்பால் உள்ள ஒரு தடாகத்தினுள்ளே மூழ்கி திருவையாற்றிலே ஒரு வாவியின் மேலே தோன்றிக் கரையேறியது.

இசை ஞானம்

திருநாவுக்கரசர் இசைத்தமிழில் சிறந்த ஞானம் கொண்டவர். நான்காவது திருமுறையில் உள்ள பாடல்களில் திருநாவுக்கரசின் இசைத்திறன் வெளிப்படுகிறது. இவருடைய பாடல்களில் கீழ்காணும் பத்து பண்கள் காணப்படுகின்றன.

  •     கொல்லி
  •     காந்தாரம்
  •     பியந்தைக்காந்தாரம்
  •     சாதாரி
  •     காந்தார பஞ்சமம்
  •     பழந்தக்கராகம்
  •     பழம் பஞ்சுரம்
  •     இந்தளம்
  •     சீகாமரம்
  •     குறிஞ்சி
மேலும் ஒருமுறை தேர்விற்கு தயாராவது போன்று குறிப்பால் காண்போம்.

திருநாவுக்கரசர் (வாகீசர்)


தந்தையார் : புகழனார்

தாயார் : மாதினியார்

தமக்கையார் : திலகவதியார்

அவதாரம் செய்த நாடு : திருமுனைப்பாடி (கடலூர் மாவட்டம்,தமிழ்நாடு)

அவதாரம் செய்த தலம் : திருவாமூர் (கடலூர் மாவட்டம், பண்ருட்டியிலிருந்து மேற்கே 8 கி.மீ.)

பெற்றோர் இட்ட பெயர் : மருள்நீக்கியார்

சமணசமயத்தில் வைத்த பெயர் : தருமசேனர்

இறைவன் சூட்டிய திருநாமம் : திருநாவுக்கரசர்

திருஞானசம்பந்தர் அழைத்தது : அப்பர்

சேக்கிழார் பெருமான் இட்ட பெயர் : வாகீசர்

ஏனைய பெயர்கள் : உழவாரப்படையாளி, தாண்டகவேந்தர், ஆளுடை அரசு

காலம் : கி.பி. 6 ஆம் நூற்றாண்டு

பின்பற்றிய நெறி : அடிமை நெறி (தாசமார்க்கம்)

உலகில் நிலவிய காலம் : 81 ஆண்டுகள்

ஆக்கிய திருமுறைகள் : நான்கு, ஐந்து, ஆறு

அருளிய நூல் : தேவாரம்

பாடிய பதிகங்கள் : 4900

பாடல்களின் எண்ணிக்கை : 49000

கிடைத்த பதிகங்கள் : 312

கிடைத்த பாடல்கள் : 3066

நான்காம் திருமுறை (விருத்தம்) : 113 பதிகங்கள் (1070 பாடல்கள்)

ஐந்தாம் திருமுறை (குறுந்தொகை) : 100 பதிகங்கள் (1015 பாடல்கள்)

ஆறாம் திருமுறை (தாண்டகம்) : 099 பதிகங்கள் (0981 பாடல்கள்)

முதல் பாடல் : கூற்றாயினவாறு எனத்தொடங்கும் பாடல்

இறுதிப் பாடல் : ஒருவனையும் அல்லாது எனத்தொடங்கும்பாடல்

முக்தி அடைந்த தலம் : திருப்புகலூர் (நாகை மாவட்டம், நன்னிலம்
                                    – நாகை சாலையில் உள்ள தலம்

சமகால நாயன்மார்கள் : திருஞானசம்பந்தர், அப்பூதியடிகள்,
  திருநீலகண்டயாழ்ப்பாணர், குலச்சிறையார், மங்கையர்க்கரசியார், முருக நாயனார்,
                                    திருநீலநக்கர்

இறைவன் திருவடியில்
இணைந்த நட்சத்திரம் : சித்திரை மாதம் சதய நட்சத்திரம்



திருநாவுக்கரசர் வாழ்வில் நிகழ்ந்த திருவருள் நிகழ்ச்சிகள்

பண்ருட்டிக்கு அருகே திருவதிகையில் தமக்கையார் திருநீறிட,
"கூற்றாயினவாறு" எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடி இறையருளால் சூலை நோய் நீங்கபெற்றார் – 4 ஆம் திருமுறை, முதல் பதிகம், முதல் பாடல்

நீற்றறையில் சிதைவேதுமுறாது ஐந்தெழுத்து ஓதி அமர்ந்திருந்தார்
"ஐயர் திருவடி நீழல் அருளாகிக் குளிர்ந்ததே" – பெ.பு. 1368

சமணர்களால் இவருக்கு ஊட்டப்பட்ட நஞ்சு அமுதமானது
"நஞ்சு அமுது ஆக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே" – நான்காம் திருமுறை, 70 ஆவது பதிகம், 5 ஆவது பாடல்

சமணர்கள் ஏவிய யானை இவரைக் கொல்லாமல் வணங்கிச் சென்றது
"கொலை செய் யானைதான் கொன்றிடுகிற்குமே" – 5-91-5

சமணர்கள் இவரைக் கல்லோடு கட்டி கடலில் எறிந்தபோது கல் தெப்பமாக மாறி கரை அடைந்தார்
"கல்லினோடு என்னைப் பூட்டி அமண் கையர்" – 5-72-7

திருக்கயிலைப் பொய்கையில் மூழ்கி திருவையாறு குளத்தில் எழுந்தருளினார்.
மாதர்பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி– 4-3-1

திருவாய்மூரில் இறைவனது ஆடல் காட்சியினைக் கண்டார்
எங்கே என்னை இருந்திடம் தேடிக்கொண்டு – 5-50-1

திருபைஞ்ஞீலியில் இறைவனால் பொதி சோறு அளிக்கப்பட்டார்
விரும்பும் பொதிசோறும் கொண்டு நாவின் தனிமன்னர்க்கெதிரே– பெ. பு. 1575

திருப்புகலூரில் உழவாரப் பணி செய்த இடங்களிலெல்லாம் இறைவன் பொன்னும் நவமணியும் விளங்கித் தோன்றச் செய்தான்
உழவாரம் நுழைந்த இடம்தான் எங்கும் பொன்னினொடு நவமணிகள் பொதிந்திலங்க அருள் செய்தார் – பெ. பு. 1686



திருநாவுக்கரசர் தம் வாழ்வில் நிகழ்த்தியருளிய திருவருள் நிகழ்ச்சிகள்

பெண்ணாகடத்தில் (பெண்ணாடம், விருத்தாசலம் அருகில்) தம் தோள் மீது சூலக்குறியும், இடபக்குறியும் இடுமாறு இறைவனை வேண்ட, அவ்வாறே இறைவனும் தம் பூத கணங்களை அனுப்பி அவர் தோள் மீது இடுமாறு செய்தான்.
"பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம்" – 4-109-1

நல்லூரில் தம் முடி மீது இறைவன் திருவடி சூட்டப்பெற்றார்.
கோவாய் முடுகி அடுதிறற் கூற்றம் குமைப்பதன் முன் பூவார் அடிச்சுவடு என் மேற் பொறித்துவை – 4-96-1

திங்களூரில் (திருவையாற்றிற்கு அருகில்) அரவம் தீண்டி இறந்த அப்பூதியடிகள் மகனைத் திருப்பதிகம் பாடி உயிர்ப்பித்தார்
ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர்வரை – 4-18-1

திருவீழிமிழலையில் இறைவனிடம் வேண்டி படிக்காசு பெற்று மக்கள் பசி தீர்த்தார்
அல்லார் கண்டத்து அண்டர்பிரான் அருளால் பெற்ற படிக்காசு – பெ. பு. 1529

திருமறைக்காட்டில் அடைக்கப்பட்டிருந்த திருக்கதவினைத் திருப்பதிகம் பாடித் திறக்கச் செய்தார்.
பண்ணினேர் மொழியாள் உமை பங்கரோ – 5-10-1

நால்வரின் பாதையில் குழு மூலம் இன்று நடைபெற்ற திருநாவுக்கரசர் குருபூசை காட்சிப்பதிவுகளை இங்கே தொகுக்கின்றோம். அனைவரும் கண்டு அப்பரின் அருள் பெறவும்.















நன்றி: திரு.சுரேஷ் பிரியன், நால்வரின் பாதையில் குழு 

சைவம் தழைக்க இது போன்ற தொண்டுகளில் ஈடுபடும் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றோம்.

மீண்டும் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

திருக்குறிப்புத் தொண்டர் தம் அடியார்க்கும் மடியேன் - https://tut-temple.blogspot.com/2019/04/blog-post_20.html

கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temple.blogspot.com/2019/04/blog-post_11.html

வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன் - https://tut-temple.blogspot.com/2019/04/blog-post_9.html

நாட்டமிகு தண்டிக்கும் அடியேன் - https://tut-temple.blogspot.com/2019/04/blog-post.html


அறைகொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன் - https://tut-temple.blogspot.com/2019/03/blog-post_16.html

கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்  - https://tut-temple.blogspot.com/2019/03/blog-post_1.html

இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன் - https://tut-temple.blogspot.com/2019/02/blog-post_22.html

மார்ச் மாத அடியார்கள் பூசை - https://tut-temple.blogspot.com/2018/02/blog-post_28.html

மே மாத அடியார்கள் பூசை - https://tut-temple.blogspot.com/2018/05/blog-post_11.html


20 April 2019

திருக்குறிப்புத் தொண்டர் தம் அடியார்க்கும் மடியேன்

அனைவருக்கும் வணக்கம். 

இன்று சித்திரை சுவாதி  நட்சத்திரம். இந்த ஆண்டு கூடுமானவரையில் அடியார்களின் பூசை தொகுத்து தந்து வருகின்றோம். அந்த வரிசையில் இன்று திருக்குறிப்புத் தொண்டர் பற்றி சிறிது உணர்வோம்.

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் தொண்டை நன்னாட்டில் காஞ்சி மாநகரத்தில் வண்ணார் மரபில் தோன்றியவர். இவர் அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவர். இவரைப்பற்றிய தகவல் சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்தில் 25-வது புராணமாக 'மும்மையால் உலகாண்ட சருக்கம்' என்ற பகுதியில் உள்ளது. 




சிவனடியார்களின் உள்ளத்தின் திருக்குறிப்பை யுணர்ந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யும் தன்மையில் நிலைத்த மேன்மையால் இவருக்கு 'திருக்குறிப்புத் தொண்டர்' என்று வழங்கப்படும் சிறப்புப்பெயரை உடையவரானார்.

இவர் செவ்விய அன்புடையவர்; நல் ஒழுக்க நெறி நிற்பவர்; சிவனடித்தொண்டு புரிபவர்; மன, மொழி, மெய்யடியாகிய முக்கரணங்களும் அண்ணலார் சேவடியின் சார்பாக அணைவிப்பவர்; இத்திருக்குறிப்புத் தொண்டர் சிவனடியார்களது ஆடையினைத் துவைத்து வெளுத்துக் கொடுத்தலை தமது முதற் பணியாகக் கொண்டிருந்தார். இப்பணியால் துணி அழுக்குப் போவது போல் மும்மலப் பிறப்பழுக்கும் போக்குவார் ஆயினர்.


இவ்வடியவரது அன்பின் பெருமையை உலகத்தார்க்கு அறிவிக்கத் திருவுளங்கொண்டார் திருவேகம்பப் பெருமான். குளிர் மிகுந்த ஒருநாள் திருமாலும் காணமுடியாத திருவடிகளை மண்மீது பதித்து ஓர் ஏழை போன்று மெலிந்த மேனியும், வெண்ணீற்று மேனியில் அழுக்கடைந்த கரிய கந்தைத் துணியுமாய்க் குறுகிய நடையுடன் வந்தார். தளர்ந்த திருமேனியுடைய சிவனடியாராகிய அவரைக் கண்ட திருக்குறிப்புத் தொண்டர், அன்பினால் எதிர்கொண்டு உரோமம் சிலிர்ப்ப நிலமுற விழுந்து வணங்கினார். எழுந்து நின்று இன்மொழிகள் பல கூறினார். “திருமேனி இழைத்திருக்கின்றதே, ஏன்?” என இரக்கத்துடன் கேட்டார். பின்னர் கூப்பிய கையுடன் ‘தாங்கள் உடுத்துள்ள இக்கந்தையைத் துவைத்துதற்குத் தாருங்கள்’ என்று கேட்டார். வந்த சிவனடியார் ‘நான் உடுத்துள்ள இக்கந்தை அழுக்கேறி எடுப்பதற்குத் தகுதியில்லாத நிலையிலிருப்பினும் உடம்பினை வருத்தும் குளிருக்குப் பயந்து கைவிடாது உடுத்துள்ளேன். மாலைப் பொழுதாவதற்குள் தருவீராயின் விரைந்து கொண்டுபோய் துவைத்துத் தருவீராக’ என்று கூறினார். அதுகேட்ட திருக்குறிப்புத் தொண்டர் அடியேன் காலந்தாழ்த்தாமல் மாலைப்பொழுதிற்குள் விரைவில் வெளுத்துத் தருகின்றேன், தந்தருள்வீராக’ என்று வேண்டினார். வந்த அடியவர், “கந்தையாகிய இதனை விரைவிற் துவைத்து உலர்த்தித் தாராதொழிவீராயின், இந்த உடம்பிற்கு இடர் செய்தீராவீர்” என்று சொல்லி தாம் உடுத்திருந்த கந்தையை அவர் கையிற் கொடுத்தார்.




அதனைப் பெற்றுக்கொண்ட திருக்குறிப்புத் தொண்டர், குளத்திற் சென்று முன் சிறிது அழுக்கைப் போக்கி வெள்ளாவியில் வைத்து புளுக்கி துவைக்கத் தொடங்கினார். அப்பொழுது பெருமழை விடாது பெய்வதாயிற்று. அதுகண்ட திருக்குறிப்புத் தொண்டர் சிவனடியார்க்கு தாம் சொன்ன உறுதிமொழியை எண்ணி ‘இனி நான் யாது செய்வேன்’ என்று கவலையுற்று மழைவிடுவதை எதிர்பார்த்து அங்கேயே நின்றார். மழையோ நிற்கவில்லை. இரவுப் பொழுதும் நெருங்குவதாயிற்று. திருக்குறிப்புத் தொண்டர் “ஐயோ குளிரால் திருமேனி நடுங்குகின்ற சிவனடியார்க்கு நான் செய்ய விரும்பிய அடிமைப்பணி தவறிப்போயிற்றே’ என்று சோர்ந்து வீழ்ந்தார்; மழையோ விடவில்லை; அடியார் சொல்லிய கால எல்லையும் முடிந்து விட்டது. முன்னமே அவரது உடையினை வீட்டிலேயே துவைத்துக் காற்றில் உலர்த்திக் கொடுப்பதற்கு அறியாது போயினேனே; அடியார் திருமேனி குளிரால் வருந்தத் தீங்கு புரிந்த கொடியேனுக்கு இனி இதுவே செயல்’ என்று எழுந்து ‘துணி துவைக்கும் கற்பாறையாலே எனது தலை சிந்தும்படி மோதுவேன்’ என்று தமது தலையை மோதினார்.


அப்போது அப்பாறையின் அருகே திரு ஏகம்பரது திருக்கை தோன்றி அவரைப் பிடித்துக் கொண்டது. வானத்தில் விடாது பெய்த நீர்மழை நீங்க மலர்மழை பொழிந்தது. உமையொருபாகராகய் இறைவன் விடைமேல் எழுந்தருளி, காட்சி கொடுத்தருளினார். அத்தெய்வக் காட்சியினைக் கண்ட திருக்குறிப்புத் தொண்டர் அன்புருகக் கைதொழுது தனிநின்றார். சிவபெருமான் அவரை நோக்கி, ‘உனது அன்பின் திறத்தை மூவுலகத்தாருக்கும் அறியச் செய்தோம்”, இனி நீ நம்முடைய உலகத்தை அடைந்து நம்மைப் பிரியாது உறைவாயாக’ என்று திருவருள் புரிந்து மறைந்தருளினார்.




அந்தத் தலமே காஞ்சிபுரம், காந்திசாலையில் அமைந்துள்ள முத்தீஸ்வரர் திருக்கோயில். இங்கே சித்திரைத் திங்கள், சுவாதி நாளன்று திருக்குறிப்புத் தொண்டர் திருவீதி உலா நடக்கிறது. இதுதவிர மாதம்தோறும் சுவாதி நாட்களில் திருக்குறிப்புத் தொண்டர் சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஈசனுக்கு அடியாரான திருக்குறிப்புத் தொண்டரின் அடியைப் பின்பற்றி நாமும் எல்லையில்லா ஆனந்தம் அடைவோம்.

நேரில் ஒருமுறை முத்தீஸ்வரர் தரிசனம் பெற திருகுறிப்புத் தொண்டரிடம் இந்நன்னாளில் விண்ணப்பம் வைக்கின்றோம்.

திருக்குறிப்புத் தொண்டர் தம் அடியார்க்கும் மடியேன்

மீண்டும் சந்திப்போம்.
மீள்பதிவாக:-


கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temple.blogspot.com/2019/04/blog-post_11.html

வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன் - https://tut-temple.blogspot.com/2019/04/blog-post_9.html
நாட்டமிகு தண்டிக்கும் அடியேன் - https://tut-temple.blogspot.com/2019/04/blog-post.html

அறைகொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன் - https://tut-temple.blogspot.com/2019/03/blog-post_16.html
கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்  - https://tut-temple.blogspot.com/2019/03/blog-post_1.html
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன் - https://tut-temple.blogspot.com/2019/02/blog-post_22.html
மார்ச் மாத அடியார்கள் பூசை - https://tut-temple.blogspot.com/2018/02/blog-post_28.html
மே மாத அடியார்கள் பூசை - https://tut-temple.blogspot.com/2018/05/blog-post_11.html

19 April 2019

இசைஞானியார் திருப்பாதம் சரணம் !

அனைவருக்கும் வணக்கம். 

இன்று சித்திரை மாத சித்திரை  நட்சத்திரம். இந்த ஆண்டு கூடுமானவரையில் அடியார்களின் பூசை தொகுத்து தந்து வருகின்றோம். அந்த வரிசையில் இன்று  இசைஞானியார் பற்றி சிறிது உணர்வோம்.


"இசைஞானி காதலன் திருநாவலூர்கோன் அன்னவனாம் 
ஆரூரன் அடிமை கேட்டுவப்பார் ஆரூரில் அம்மானுக்கன்பராவரே"    

குருபூசை திருநட்சத்திரம் -சித்திரைமாதம்-சித்திரை 

அவதார தலம் -ஆரூர் கமலாபுரம் 
முக்தி தலம்     -திருநாவலூர் 
25-04-2013-வியாழன்


திருநாவலூரிலே ஆதிசைவர் மரபில் உதித்த சடையனாருக்கு வாழ்க்கைத் துணைவியாக  இருந்தவர் இசைஞானி அம்மையார் அரும்பெரும் தவம் புரிந்து சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் புதல்வராகப் பெற்றார்.சிவபக்தியும் பதிபக்தியும் பூண்டு வாழ்ந்து முடிவில் முழுமுதற் கடவுளாம் பரமேஸ்வரனுடைய பதமலர் சேர்ந்து பரம சுகமுற்றார்.




"ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசைஞானியார்" என்று சேக்கிழார் பெருமான் கூறுகின்றார்  குற்றமில்லாத கற்புடைய இவருடைய புண்ணியத்தின் திரட்சியே ஓர் உருவாக திரண்டு வந்தவர் சுந்தரமூர்த்தி நாயனார் ஆவார் 
 உலகக் கேடுகளில் முதன்மையானது தீய மைந்தனை பெறுதல், நன்மைகளுள் முதன்மையானது தூய மைந்தனைப் பெறுதல் . ஆகவே திருத்தொண்டத்தொகை பாடி உலகம் உய்வித்த உத்தமப்புதல்வரை ஈன்ற அந்த  உத்தமியார் பெருமையை உரைக்கமுடியுமோ?அது எண்ணுக்குள்ளும் எழுத்துக்குள்ளும் அடங்காதது அதனை சேக்கிழார் பெருமான் இவ்வாறுகூறுகிறார் 


இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டியாரை என்சிறுபுன் 

மொழியால் புகழ முடியுமோ முடியாதெவர்க்கும் முடியாதால் 


யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது

நாவற் றிருப்பதிக்கோர் செல்வச் சைவ
    நாயகமாஞ் சடையனார் நயந்த வின்பப்
பூவைக் குலமடந்தை பொற்பார் கொம்பு
    புனிதமிகு நீறணிந்து போற்றி செய்தே
யாவிற் றிகழ்தலைவன் வலிய வாண்ட
    வாரூர ரவதரிக்க வருந்தவங்கள் புரிந்தார்
யவர்க்கு மெட்டாத விசைந்த வின்ப
    விசைஞானி யெனஞான மெளிதா மன்றே.

சடையநாயனாருடைய மனைவியார் இசைஞானியாரென்பவர் எம்பிரான் தோழராகிய 
சுந்தரமூர்த்திநாயனாரைப் பெற்றருளிய அவருடைய பெரும்புகழைச் சிறியேனுடைய 
புன்மொழியினாலே புகலமுடியுமோ? முடியாது.
திருச்சிற்றம்பலம்.

இசைஞானி அம்மையார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது - அம்மையார் மகிமை புகழ்ச்சி வரம்புள் அமையாதெனல்


"கமலாபுரத்தில் (திருவாரூர்) சிவ கௌதம கோத்திரத்தில் ஞான சிவாசாரியார் மரபில் அவதரித்தவர்" எனக் கூறுஞ் சிலாசாசனத்தாலும் ஆரூர்ப் புனித அரன் திருத்தாள் தன் உள்ளத்து நயந்தாள் என்னுந் திருத்தொண்டர் திருவந்தாதி உண்மையாலும் திருவாரூர்ப் பிறந்து திருவாரூர்ச் சிவபெருமானிடத்து வெகு ஈடுபாடு கொண்டிருந்தவராக அறியப்படும் இசைஞானியார் சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை என்பதிலிருந்து, "ஆரூர்த் திருமூலத்தானத்தே அடிப்பேரன் ஆரூரன்" என அவரே பாடியதற்கிணங்கவுள்ள, அவர் இயற்பெயராகிய நம்பியாரூரர்ப் பெயர் வழக்குக்கும் திருத்தொண்டர்புராணங் கூறுதற்கிணங்க, அவரின் அதிசயான்விதமான வாழ்விய லற்புதச் சிறப்புகளுக்குத் திருவாரூரே கேந்திர நிலையமா யிருந்துள்ளமைக்கும் ஒருகால், கொடுங்கோளூரில் சேரமானோடு நண்புறவு கலந்து களித்திருக்கையில் அவர் அன்பநுசரணைத் தடையையும் மீறி, "ஆரூரானை மறக்கலுமாமே" என அவரை ஆவலித் தெழுவிக்கு மளவினதும் மற்றொரு கால் திருவொற்றியூரில் திருவாரூர்த் தொடர்புக்குப் பாதகமாம்படி, சிவன் சந்நிதியில் தாம் செய்து வைத்த சபதத்தையும் மீறி, "எத்தனை நாட் பிரிந்திருக்கேன் என்னாரூ ரிறைவனையே" என அவரை உத்வேகங்கொளவைக்கு மளவினது மான அவரது திருவாரூர்த் தலப்பற்று முதிர்வுக்கும் நேரடிக் காரணம் இவர் அந்த அம்மையாரின் கர்ப்பவாசம் பெற்றுப் பிறந்தமையே எனல் நன்கு துணியப்படு மாகலின் அத்தகைய அவர் பெருமகிமை புகழ்ச்சி வரம்புள் அடங்க வாரா தென்பதே அதற்காஞ் சரியான மதிப்பீடாதல் அமையும். அது அவர் புராணத்தில், ஒழியாப் பெருமைச் சடையனார் உரிமைச் செல்வத் திருமனையார் அழியாப் புரங்களெய் தழித்தா ராண்ட நம்பிதனைப் பயந்தார் இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டியாரை என்சிறுபுன் மொழியாற் புகழ முடியுமோ முடியா தெவர்க்கும் முடியாதால் என வரும்.

அறுபது நாயன்மார்களுடன் இசை ஞானியாரின் குடும்பமும் சேர்ந்து அறுபத்து மூன்று  நாயன்மார் ஆயினர். தாம், தம் கணவர், தம் புதல்வர் என்று குடும்பமே நாயன்மார்களாக உள்ள பெருமையைப் பெற்றனர். சடையனார் வாழ்க்கைத் துணைவியான இவ்வம்மையார் சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் பெற்றெடுத்துப் பெரும் பேறு பெற்று உய்ந்தார்கள். இச்சைவத் திருவாட்டியாரின் புண்ணிய பயனையும், பெருமையையும், புகழையும் உரைக்கத்தான் ஒண்ணுமோ ? சித்தத்தைச் சிவன்பாற் வைத்து நித்தம் நித்தம் புற்றிடங்கொண்ட பெருமானின் ஞானக் கதிர்களாகிய திருத்தாள்களை போற்றிப் பணிந்து வந்தவாறு பரவை நாச்சியாருடன் இன்புற்று வாழ்ந்து வந்தார் சுந்தரர். இவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் இவருக்கு சேரமான் பெருமாள் நாயனாரைக் கண்டுவர வேண்டும் என்ற காதல் உள்ளத்திலே ஊற்றெடுத்து பெருகியது. ஒரு நன்னாள் பரவையாரிடம் விடை பெற்றுப் பூங்கோவில் அமர்ந்து பெருமானின் பொற்கழல்களை பணிந்து அடியார் புடைசூழ திருவஞ்சைக்களம் புறப்பட்டார். சோழநாட்டுத் தலங்களை கண்குளிரக் கண்டு வணங்கியவாறு கொங்கு நாட்டிலுள்ள திருப்புக கொளியூரை அடைந்தார். வேதியர் வாழ்கின்ற தேரோடும் திருவீதி வழியாக வந்து கொண்டிருந்த சுந்தரர் அவ்வீதியில் எதிர் எதிராக அமைந்துள்ள இரு வீட்டில் நடந்த நிகழ்ச்சியை கண்ணுற்றார். ஒரு வீட்டில் அலங்காரமும் ஆனந்தமும் பொங்கிப் பெருகி, மங்கல வாத்தியங்கள் முழங்கியவாறு இருக்க மற்றொரு வீட்டில் அமங்கலமான தோற்றமும், அழுகையும் நெஞ்சை உருக்கும் சோகக் காட்சியும் இருக்கக் கண்டார்.

சுந்தரர், அங்குள்ளோரிடம், இவ்விரு வீட்டார்க்கும் உள்ள இன்ப துன்பங்களுக்கு காரணம் யாது? என்று வினவினார். அதற்கு அந்தணர்கள், சுவாமி! இவ்விரு வீட்டிலும் இருந்த இரு சிறுவர்கள், அருகிலுள்ள மடுவிற்கு நீராடச் சென்றார்கள். அதில் ஒருவனை முதலை விழுங்கி விட்டது. தப்பிப் பிழைத்த மற்றொருவனுக்கு இப்பொழுது உரிய பருவம் வந்ததும் பெற்றோர்கள் முப்புரி நூல் அணியும் சடங்கினைச் செய்து மகிழ்கிறார்கள் என்றனர். இதற்குள் அச்சிறுவனை இழந்து அழுது கொண்டிருந்த பெற்றோர்கள், சுந்தரர் எழுந்தருளியுள்ளார் என்று கேள்வியுற்று வேதனையை மறந்த நிலையில் விரைந்தோடி வந்து அவரது திருவடித் தாமரைகளைப் பணிந்தனர். அருகிலுள்ளோர் மூலம் சிறுவனை இழந்த பெற்றோர்கள் இவர்கள்தான் என்பதைத் தெரிந்து கொண்ட சுந்தரர், சோகம் நீங்கி; முகமலர்ச்சியுடன் தம்மை வந்து வணங்கிய பெற்றோர்களைக் கண்டு, நீங்களா மகனை இழந்தவர்கள்? என்று வியப்பு மேலிடக் கேட்டார். ஆமாம் சுவாமி ! அந்நிகழ்ச்சி நடந்து ஆண்டுகள் பல தாண்டிவிட்டன. ஆனால் இப்பொழுது ஐயன் எழுந்தருளியது கண்டு, நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். இம்மையில் நாங்கள் பெற்ற பேறு எவர் பெறுவர் என்று கூறி மீண்டும் அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். அப்பெற்றோர்களின் அன்பிற்கும், பக்திக்கும் கட்டுப்பட்ட சுந்தரர் அவர்களது துயரை எப்படியும் தீர்ப்பது என்ற உறுதியில் அவர்களிடம் குழந்தையை விழுங்கிய மடு எங்குள்ளது? என்று கேட்டார். பெற்றோர்கள் சுவாமிகளை அழைத்துக்கொண்டு மடுவிற்குப் புறப்பட்டனர்.

சுந்தரரைத் தொடர்ந்து சிவ அன்பர்களும் சென்றனர். மடுவின் கரையை அடைந்தனர். பெற்றோர்கள் சுந்தரரை வணங்கி, சுவாமி ! எங்கள் குலக் கொழுந்தை விழுங்கிய மடு இதுதான் என்று கூறினார். சுந்தரர் பெருமாளைத் தியானித்தார். ஆக்கவும், அழிக்கவும் வல்ல அவினாசியப்பரை துதித்து ஏற்றான் மறக்கேன் எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். தேமதூரத் தமிழில் நான்காவது பாட்டைப் பாடி முடிப்பதற்குள் பெரு முதலை ஒன்று நீரிலிருந்து வெளிப்பட்டு பிள்ளையைக் கரையில் கொண்டுவந்து உமிழ்ந்தது. அன்பு பெற்றோர்கள் ஓடிச்சென்று தங்களது பச்சிளம் பாலகனை வாரித் தழுவி உச்சிமோந்து அகமும், முகமும் மலர சிறுவனுடன் சுந்தரர் திருவடியைத் தொழுதனர். சுந்தரரின் தெய்வீகச் சக்தியைக் கண்டு பக்தர்கள் அதிசயித்து வியந்து போற்றினர். சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்க என்ற கோஷம் வானைப் பிளந்தது. சுந்தரர் அவர்களை வாழ்த்தி அருளினார். அவிநாசியப்பர் ஆலயம் சென்று, பாடிப் பேரின்பம் பூண்டு, மீண்டும் தமது பயணத்தைத் தொடர்ந்தார் சுந்தரர். சுந்தரரின் வியக்கத்தக்க அருட்செயலையும், தமது நகருக்கு எழுந்தருளுவதையும் கேள்வியுற்ற சேரர் கொடுங்கோளூரைக் கவின்பெற அலங்கரிக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்தார். சுந்தரர் வருகையை நாடு முழுவதும் பறையறைந்து அறிவித்தார். சேரப் பெருந்தகையார் யானை மீது புறப்பட்டார். அணி, தேர், புரவி, ஆட்பெரும் படையுடனும் மற்ற பரிவாரங்களுடனும், சிவ அன்பர்களுடனும், புறப்பட்ட சேர வேந்தன், சுந்தரரை எதிர்கொண்டு அழைக்க எல்லையிலேயே காத்திருந்தார். சுந்தரர் அன்பர்களுடன், தமது சிவயாத்திரையை முடித்தவாறு எல்லையை வந்தடைந்ததும் சேரப் பெருந்தகையார் யானையினின்றும் இறங்கினார். விரைந்தோடிச் சென்று சுந்தரரை ஆரத்தழுவினார். சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரை ஆரத்தழுவி அகமகிழ்ந்தார். கடல் வெள்ளம்போல் திரண்டு வந்த மக்கள் விண்ணெட்ட வாழ்த்தொலி எழுப்பினர்.

முரசு ஒலிக்க - சங்கு முழக்க - பறை அலற - மேள தாளங்கள் சிவநாமத்தோடு பொங்கி எழ, சேரமான் பெருமாள் சுந்தரரைத் தாம் அமர்ந்து வந்த யானை மீது அமரச் செய்தார். தாமும் பின்னால் அமர்ந்து, வெண் கொற்றக் குடையினைப் பிடித்தார். அனைவரும் அரண்மனையை அடைந்தனர். மன்னனின் எல்லையில்லாப் பக்திக்குத் தலைவணங்கி எல்லையில் கூடியிருந்த பக்தர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இரு ஞானமூர்த்திகளும் அரண்மனைக்குள் எழுந்தருளினர். சேரமான் பெருமாள் சுந்தரரைத் தமது அரியணையில் அமரச் செய்து வழிபாடு புரிந்து இன்புற்றார். இரு சிவச் செல்வர்களும் மாகோதை மாநகரில் இருந்தவாறே அடுத்துள்ள சிவத்தலங்கள் பலவற்றிற்குச் சென்று பதிகம் பாடிப் பரமனைக் கண்டுகளித்து வந்தனர். மாகோதை நகரில் குடிகொண்டிருக்கும் எம்பெருமானை வழிபட்டு வரும் சேரரும், சுந்தரரும், ஆலயத்துள் செல்லும் முன் அடுத்துள்ள அழகிய பொய்கையில் நீராடிச் செல்வது வழக்கம். ஒருநாள் இருவரும் பொய்கையில் நீராடிக் கொண்டிருக்கும்பொழுது சுந்தரர் மட்டும், சற்று முன்னதாகவே நீராடலை முடித்துக்கொண்டு இறைவன் திருமுன்னே வழிபடச் சென்றார். சுந்தரரின் உடல் புளகம் போர்த்தது; உள்ளத்திலே அருள் உயர்வு பொங்கி எழுந்தது. சைவப் பழமான சுந்தரர் பேரொளிப் பிழம்புபோல் ஆனார். அவர் கண்களில் கண்ணீர் பெருகியது. எம்பெருமான் திருமுன் பன்முறை வீழ்ந்து வீழ்ந்து வணங்கி எழுந்தார். அவரை அறியாத உள்ளக்கிளர்ச்சியும், உடல் நெகிழ்ச்சியும் அவருக்கு உலக மாயையிலிருந்து விடுபடும் பேரின்ப சக்தியைக் கொடுத்தது.

அருளே வடிவான சுந்தரர் தலைக்குத் தலைமாலை என்னும் பதிகத்தைக் கயிலையரசன் செவிகுளிரப் பாடிப் பரவினார். சுந்தரரின் செந்தமிழ்த் தேன் அமுதத்தை அள்ளிப் பருகி மெய்யுருகிய நீலகண்டர் தமது அன்பு ஆலால சுந்தரரைத் திரும்பவும் தம்மோடு அழைத்துக் கொள்ளத் திருவுள்ளங் கொண்டார். அதற்கேற்ப எம்பெருமான் அமரர்களை அழைத்து ஆலாலசுந்தரரை வெள்ளை யானையில் அழைத்து வருவீர்களாக! என்று ஆணையிட்டார். அமரர்கள் வெள்ளை யானையுடன் புறப்பட்டு திருவஞ்சைக்களம் அடைந்தனர். ஆரூரைக் கண்டு வணங்கினர். ஆண்டவனின் ஆணையைக் கூறி வெள்ளை யானையில் அமர்ந்து கயிலைக்கு எழுந்தருளுமாறு கேட்டுக் கொண்டனர். அரனார் அருள் வாக்கிலே, செய்வதறியாது நின்ற சுந்தரர் எம்பெருமானை நினைத்து துதித்தார். தேவர்கள், அவரை  வலம் வந்து வெள்ளை யானையின் மீது எழுந்தருளச் செய்தனர். சுந்தரர் தமது தோழராம் சேரர் நினைவாக வெள்ளை யானை மீதமர்ந்து விண்ணை நோக்கிப் புறப்பட்டார். அமரர்கள் மலர்மாரி பொழிந்தனர். பொய்கையினின்றும் வந்த சேரவேந்தன் சுந்தரரைக் காணாது திகைத்தார். சுந்தரர் திருக்கயிலை மலைக்கு வெள்ளை யானையில் எழுந்தருளுவதைத் தமது தபோ வலிமையால் அறிந்து கொண்டார் சேர மன்னர்; அக்கணமே தாமும் ஆரூரரைத் தொடர்ந்து செல்லத் திருவுள்ளங் கொண்டார். சோழன் வெண்புரவியில் அமர்ந்தார். குதிரையின் செவியில் நமச்சிவாய மந்திரத்தை இடையறாது ஓதினார். குதிரை காற்றினும் கடுகப் புறப்பட்டது. வெள்ளை யானையை அணுகி, வலம் வந்தது. மன்னர் சுந்தரரை வணங்கி வழிபட்டார். மன்னர் புரவியில், யானைக்கு முன்னதாகவே கயிலைமலையை நோக்கிப் புறப்பட்டார். சுந்தரர் தம்மை வணங்கி முன்னால் செல்லும் மன்னனைக் கண்டார். தமக்குள் புன்முறுவல் பூத்தார்.

வெள்ளை யானையில் வந்து கொண்டிருந்த சுந்தரர் தானெனை முன் படைத்தான் எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடியவாறு கயிலைமலைக் கோவிலின் தென்திசை வாயிலை அடைந்தார். வேகமாக வந்த சேரமான் வாயில் அடைத்திருப்பது கண்டு திகைத்தார். அங்கேயே சுந்தரர் வருகையை எதிர்பார்த்து நின்றார். சுந்தரர் வந்தார். அங்கே நின்று கொண்டிருந்த சேரமான் பெருமாள் சுந்தரரை நமஸ்கரித்தார். இரு சிவச் செம்மல்களும் தமது வாகனங்களை விட்டிறங்கி, திருவாயில்கள் பலவற்றைக் கடந்து, திருவணுக்கன் திருவாயிலை அடைந்தார்கள். சேரர் அவ்வாயிலில் தடைபட்டு நின்றார். சுந்தரர் மட்டும் இறைவன் திருவருளாள் எம்பெருமான் திருமுன் சென்றார். பொன்மயமான கயிலை மாமலையில் வேத முழக்கங்களும், துந்துபி நாதங்களும் ஒலித்த வண்ணமாகவே இருந்தன. முனிவர்கள் சிரமீது கரம் உயர்த்தி சுந்தரரை வரவேற்றனர். தேவகணங்கள், கந்தர்வர்கள் கற்பக மலர் தூவித் துதித்துக் கொண்டிருக்க, எம்பெருமான் கற்பக வல்லியோடு எழுந்தருளியிருந்தார். இத்திருக்கோலக் காட்சியைக் கண்டு கண்களில் நீர் மல்க தாய்ப் பசுவைக் கண்டு விரைந்து வரும் இளங்கன்றைப் போல் ஆராக் காதலோடு ஐயன் திருமுன் சென்று அவரது கமலமலர்ப் பாதங்களை பணிந்து துதித்து நின்றார் சுந்தரர்! ஆலால சுந்தரரைக் கண்ட திருசடை அண்ணல், ஆனந்தப் பெருக்கோடு, ஆரூரனே நீ வந்தனையோ? என்று திருவாய் மலர்ந்து அருளினார். ஐயனின் அமுதமொழிக் கேட்டு அகமும் முகமும் மலர்ந்த சுந்தரர், ஐயனே ! இந்த ஏழையின் பிழை பொறுத்து, எம்மைத் தடுத்தாட் கொண்ட தெய்வமே! முடிவிலாத் தூய முத்தி நெறியினை அருளிய பெருங்கருணையை எடுத்தருளும் திறத்தினை எமக்கருள வில்லையே? என்று சொல்லி பலமுறை பணிந்து எழுந்து சிவானந்தப் பாற்கடலில் அழுந்தி நின்றார். பேரின்பப் பெருக்கில் மெய்யுருகி நின்ற தம்பிரான் தோழர், எம்பெருமானிடம், நிலவணிந்த நீரணி வேணிய!  நின் மலர்க்கழல் சாரும் பொருட்டுச் சாரும் தவத்தையுடைய சேரமான் பெருமாள் திருவணுக்கன் திருவாயிற் புறத்தே தடைபட்டு நிற்கின்றார் என பணிவோடு பகர்ந்தார்.

சங்கரர் நந்திதேவரை அழைத்துச் சேரரை அழைத்துவர ஆணையிட்டருளினார். நந்திதேவர் இறைவன் ஆணைப்படி சேரரை அழைத்து வந்தார். எம்பெருமான் திருமுன் வந்த சேரமான் பெருமாள் நாயனார் உள்ளமும் உடலும் பொங்கப் பூரிக்க மெய்ம்மறந்து எம்பெருமானின் திருத்தாள்களில் பன்முறை வீழ்ந்து வணங்கி எழுந்தார். எம்பெருமானின் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பு தவழ சேரரை நோக்கி, எமது அழைப்பின்றி நீ ஏன் இவ்வளவு தொலைவு வந்தாய்? என திருவாய் மலர்ந்து அருளினார். சிரமீது கரங்குவித்து நின்ற சேரமன்னன் எம்பெருமான் திருமுன் தமது பிரார்த்தனையைச் சமர்ப்பித்தார். இவ்வெளியோன் ஆரூரர் கழல் போற்றி ஐயன் திருமுன் அணையப் பெற்றேன். ஐயனின் கருணை வெள்ளத்தால், அடியேன் திருமுன்னே வந்து நின்று சேவித்து நிற்கும் பொன்னான பேறு பெற்றேன். இப்பொழுது இந்த எளியோனுக்குத் தேவரீர்! திருவருள் புரிய வேண்டும். ஆரூரரின் அரிய நட்பை இவ்வடியேனுக்கு தந்தருளிய வேத முதல்வனே ! எம்பெருமான் மீது பூண்டுள்ள ஆராக்காதலால் இவ்வடியேன் திருவுலா என்னும் பிரபந்தம் ஒன்று பாடினேன். அதனை ஐயன் திருச்செவி சாத்தி அருளப் பணிவோடு கேட்கின்றேன் என்று பிரார்த்தித்தார். எம்பெருமான் சொல்லுக ! எனச் சேரர்க்கு ஆணையிட்டருளினார். புலமைமிக்கச் சேரப் பெருந்தகையார் அருள்மிக்க ஞானவுலா என்னும் திருக்கயிலாய உலாவை மெய்யுருகப் பாடினார். எம்பெருமான் ஞான உலாவினைக் கேட்டு மகிழ்ந்தார். சேரரையும், சுந்தரரையும் சிவகணத் தலைவர்களாக, தமது திருவடி நிழலில் இருக்குமாறு வாழ்த்தி அருளினார். சேரமான் பெருமாள் நாயனார் சிவபிரானின் செஞ்சேவடிகளைத் துதித்து திருத்தொண்டு புரியலானார். சுந்தரமூர்த்தி நாயனார், முன்போல் ஆலால சுந்தரராய், இறைவனின் அணுக்கத் தொண்டராய்த் திருத்தொண்டு புரிந்து வரலானார். பூவுலகில் இருந்த பரவையாரும், சங்கிலியாரும் உலகப் பற்றை விட்டகன்று முன்போல் கமலினி, அனிநிந்தையாருமாகி உமாதேவியாரின் சேவடி போற்றும் சேடிகள் ஆயினர்.

ஒழியாப் பெருமைச் சடையனார் உரிமைச் செல்வத் திருமனையார்;
அழியாப் புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி தனைப் பயந்தார்;
இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டி யாரை என் சிறுபுன்
மொழியால் புகழ முடியுமோ ? முடியாது; எவர்க்கும் முடியாது ஆல்.

                                          இசைஞானியார் திருப்பாதம் சரணம் !


 மீண்டும் சந்திப்போம்.
மீள்பதிவாக:-


கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temple.blogspot.com/2019/04/blog-post_11.html

வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன் - https://tut-temple.blogspot.com/2019/04/blog-post_9.html
நாட்டமிகு தண்டிக்கும் அடியேன் - https://tut-temple.blogspot.com/2019/04/blog-post.html

அறைகொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன் - https://tut-temple.blogspot.com/2019/03/blog-post_16.html
கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்  - https://tut-temple.blogspot.com/2019/03/blog-post_1.html
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன் - https://tut-temple.blogspot.com/2019/02/blog-post_22.html
மார்ச் மாத அடியார்கள் பூசை - https://tut-temple.blogspot.com/2018/02/blog-post_28.html
மே மாத அடியார்கள் பூசை - https://tut-temple.blogspot.com/2018/05/blog-post_11.html



11 April 2019

கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்

அனைவருக்கும் வணக்கம். 

இன்று பங்குனி திருவாதிரை நட்சத்திரம். இந்த ஆண்டு கூடுமானவரையில் அடியார்களின் பூசை தொகுத்து தந்து வருகின்றோம். அந்த வரிசையில் இன்று  கணநாத நாயனார் பற்றி சிறிது உணர்வோம். இன்று கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் சிறிய அளவில் வழிபாடு செய்ய குருவிடம் வேண்டுகின்றோம்.

ஆளுடைய பிள்ளையார் அவதரித்த சீர்காழிப்பதியில் அந்தணர் குலத்தில் அவதரித்தார் கணநாத நாயனார்.

அவர் திருத்தோணியப்பருக்கு நாளும் அன்போடு தொழும்பு செய்தார். தொழும்பு செய்தலில் தேர்ச்சி பெற்றிருந்த இத்தொண்டரை நாடிப்பலரும் தொண்டு பயிலவந்தனர். தம்மிடம் வந்த நந்தவனப்பணி செய்வோர், மலர்பறிப்போர், மாலை புனைவோர், திருமஞ்சனம் கொணர்வோர், திருவுலகு திருமெழுக்கமைப்போர், திருமுறை எழுதுவோர், வாசிப்போர் என்றிவர்களையெல்லாம் அவரவர் குறையெல்லாம் முடித்தார். வேண்டும் வசதிகளைச் செய்து கொடுத்தார். இவற்றால் கைத்திருத்த தொண்டில் தேர்ந்த சரியையார்களையும் உருவாக்கினார்.

இல்லறத்தில் வாழ்ந்த இவர் அடியார்களை வழிபட்டார். ஆளுடைய பிள்ளையார் திருவடியில் மூண்ட அன்போடு நாளும் முப்பொழுதும் செய்தார். ஞானசம்பந்தப் பெருமாளை நாளும் வழிபட்ட நலத்தால் இறைவரது திருக்கயிலை மாமலையில் சேர்ந்து கணங்களுக்கு நாதராகி வழித்தொண்டில் நிலைபெற்றார். 



யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது

கந்தமலி வயற்காழி மறையோ ரேத்துங்
    கணநாதர் திருத்தோணிக் கடவு ளார்க்கு
நந்தவனம் பலவமைத்து மலருங் கொய்து
    நற்றாமஞ் சொற்றாம நயந்து சாத்தி
வந்தவரைத் தொண்டாக்கிப் பணிகள் பூட்டி
    வாதுசெய்த வாரணத்தை மகிழ்ந்து வாழ்த்திப்
புந்திமகிழ்ந் தரனருளாற்கயிலை மேவிப்
    பொருவில்கணத் தவர்காவல் பொருந்தி னாரே.

சோழமண்டலத்திலே, சீர்காழியிலே, பிராமணகுலத்திலே, கணநாதநாயனாரென்பவர் 
ஒருவர் இருந்தார். அவர் திருத்தோணியப்பருக்கு மிகுந்த அன்பினோடு 
தினந்தோறுந் திருப்பணிகள் செய்பவர். தம்மை விரும்பி வந்து, அடைபவர்களை, 
திருநந்தனவனம் வைத்தல், பூக்கொய்தல், திருமாலைக்கட்டல், 
திருமஞ்சனமெடுத்தல், திருவலகிடுதல், திருமெழுக்கிடுதல், திருவிளக்கேற்றல், 
திருமுறையெழுதல், திருமுறைவாசித்தல் முதலாகிய திருத்தொண்டுகளுள் அவரவர்க்கு
 ஏற்ற திருத்தொண்டுகளிலே பயில்வித்து, அவர்களைச் சிவனடியார்களாக்குவார். 
கிருகதாச்சிரமத்தில் இருந்து சிவனடியார்களை வழிபடுவார். சமய குரவராகிய 
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரைத் தினந்தோறும் முப்பொழுதினும் பேராசையோடு 
விதிப்படி பூசை செய்துகொண்டு வந்தார். அந்தப் பூசாபலத்தினாலே 
திருக்கைலாசமலையை அடைந்து சிவகணங்களுக்கு நாதராயினார்.

கணநாத நாயனார் புராண சூசனம் - பண்டிதர் மு. கந்தையா எழுதியது

சரியைத் தொண்டின் மகிமை பேணல்

எவரொருவர்க்கும் யதார்த்தமான சைவத்தன்மை என்பது பெற்றோர்ப்பேணல் பெரியோர்க்குக் கீழ்ப்படிதல் அறநூல்களைக் கற்றல் அறிவாசார நெறிதழுவுதல், பஞ்சமாபாதகங்களை வெறுத்தல், இயற்கையோடொத்த வாழ்வை விரும்பல், சாத்விக உணவுகொள்ளல், சைவாநுட்டானங்களைக் கடைப்பிடித்தல், தெய்வ வழிபாட்டில் விரும்பி ஈடுபடுதல் ஆகியவற்றிற் பெறும் பயிற்சியினாலேயே வந்து நிறைவுறக் கூடியதாயிருத்தல் போலச் சிவமாந்தன்மையும் உண்மையுணர்வோடு கூடிய சரியை கிரியைத் தொண்டுகளிற் பெறும் பயிற்சினாலேயே வந்து நிறைவுறுவதாகும். அது திருநாவுக்கரசு சுவாமிகள் பிரமன் மால் என்றிருவரைச் சுட்டி அருளியுள்ள "ஆப்பி நீரோ டலகு கைக்கொண்டிமலர் பூப்பெய் கூடை புனைந்து சுமந்திலர் காப்புக் கொள்ளி கபாலிதன் வேடத்தை ஒப்பிக் காணலுற்றாரங்கிருவரே" - "மரங்களேறி மலர்பறித்திட்டிலர் நிரம்பநீர் சுமந்தாட்டி நினைந்திலர் உரம்பொருந்தி ஒளிநிற வண்ணனை நிரம்பக் காணலுற் றாரங்கிருவரே" - "நெய்யும் பாலுங்கொண் டாட்டி நினைந்திலர் பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர் ஐயன் வெய்ய அழல்நிற வண்ணனை மெய்யைக் காணலுற் றாரங் கிருவரே" என்ற தேவாரங்கள் கொண்டறியப்படும். புறக்கரணங்களான உடலுறுப்புகளைத் திருவருட் பணிகளிற் பயிற்றுதல் மூலம் அவற்றைத் திருவருள் நெறி நிற்கச் செய்து கொண்டு அவற்றின் அநுசரணையோடு உட்கரணங்களாகிய மனம் புத்தி ஆதியவற்றைச் சிவபூசையிற் பயிற்றி அவற்றையுந் திருவருள் நெறியில் நிற்கச் செய்து கொண்டு அவ்விரு பகுதியினதும் ஒருங்கொத்த அநுசரணையுடன் யோகஞான நெறிகளிற் பயிலுதலே பரிணாம ரீதியிற் சிவமாந்தன்மை கைவரப்பெறுதற் குகந்த மார்க்கமென்பது சிவாகம சைவ சாத்திர தோத்திர நூல்கள் அனைத்துக்கும் பொருத்தமான நெறியாகும். சரியை சிவமாந்தன்மை அரும்பவைப்பதாகவும் கிரியை முதலாக அடுத்து வரும் மூன்றும் முறையே மலர், காய், கனி என்ற முறையில் விருத்திபெறு வனவாகவுங் கொள்ளப்படும். அது, "விரும்புஞ் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும் அரும்பு மலர் காய் கனி போலன்றோ பராபரமே" எனவருந் தாயுமான சுவாமிகள் பாடலாற் புலனாம். (புறக்கரணங்களைத் திருவருள் நெறியில் நிறுத்தல், "தலையே நீவணங்காய்" "செவிகாள் கேண்மின்களோ" "வாயே வாழ்த்து கண்டாய்" என்பன வாதியாகவும் உட்கரணங்களைத் திருவருள் நெறியில் நிறுத்தல், "நெஞ்சே நீநினையாய்" - "இடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா" என்பதாதியாகவும் வரும் தேவாரங்களானும் "வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே" என்பதாதியாக வருந் திருவாசகத்தானும் விளங்கும்.)

இவற்றுள் முதல்நிலையாகிய சரியையானது சிவமாந்தன்மையாகிய உன்னத மாளிகைக் கிட்டு வைக்கும் உறுதியான அத்திவாரம் எனத்தகும். சரியை நெறி இவ்வுலகில் விளக்கமுறத் தோன்றியருளிய திருநாவுக்கரசு சுவாமிகள் "நிலைபெறுமாறெண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலு மெம்பிரானுடைய கோயில்புக்குப் புலர்வதன்முன் னலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்துபாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடிச் சங்கராசயபோற்றி போற்றி என்றும் அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீ என்றும் ஆரூரா என்றென்றே அலறாநில்லே" எனவும் ஞானநெறி விளக்கமுற நின்ற மாணிக்க வாசக சுவாமிகள் தாமும், "ஆமாறுன் திருவடிக்கே யகங்குழையே னன்புருகேன் பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர் கோமான் நின்திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்தாடேன் சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே" எனவும் கூறுமவற்றால் அது அங்ஙனமாதல் காணலாம். கோயிற் சூழலில் தெய்விகத் தூய்மையும் தியான ஒருக்கத்திற் குகந்த சூழ்நிலையும் அமைதற்கேற்ற திருத்தொண்டுகளும் பூசைக்குரிய சாதனங்கள் தயாரித்தல் சார்பானவையும், கோயிலில் நிகழ்தற்கான இசை, பண், புராணபடனம், ஞான நூல் விசாரணை சார்பானவையும் கோயிலையணுகும் அதிதி அநாதை சிவனடியார்கள் சேவை சார்பானவையுமான திருத்தொண்டுகளும் சரியையின் பாற்படும். அது திருமந்திரத்தில், "எளியனல் தீபமிடல் மலர் கொய்தல் அளிதின் மெழுகல் அது தூர்த்தல் வாழ்த்தல் பளிமணி பற்றல் பன்மஞ் சனமாதி தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே" எனவும்

திருவாதவூரடிகள் புராணத்தில், "ஆவலாலெமக் காமலர் மரங்களாக்க லம்மலர் பறித்த லம்மலரால் தாவிலா வகை தார்பல சமைத்தல் தணப்பிலெம்புகழ் சாற்றலன்புடனாம் மேவுமாலய மலகிடல் மெழுகல் விளங்க நல்விளக்கிடுதல் நம்மடியார்க் கேவலானவை செய்தவிச் சரியை இயற்றவல்லவர்க்கெம்முல களிப்போம். "எனவும் வருவனவற்றாலறியப் படும். இவற்றுள் எதுவொன்றுங் கோயிலிற் செய்யப்படுதல் மாத்திரத்தால் மட்டுஞ் சிவப்பிரீதிக் குரியனவாய் விடுமாறில்லை, செய்பவர் தகுதியுஞ் செய்யப்படுஞ் செயற் செம்பாக முறையும் ஆகியவற்றைப் பொறுத்தே அது சிவப்பிரீதியாவதாம். அதனால், செய்பவர் சார்பில் தன்முனைப்பற்றுப் பாவனை மாத்திரத்தானாவது தான் சிவனாய் நின்று செயற்படுந் தகுதியுஞ், செயற்பாட்டின் சார்பில் சற்றேனுந் தீமை சார்ந்து விடாத்தன்மையும் மங்கல நிறைவும் மனோ ரம்மியம் விளைக்கும் மாட்சியும் இருத்தற்பாலனவாம். அது காரணமாக, அத்தொண்டி லீடுபடுவோர் சார்பில் குறைந்தபட்சம் சைவாநுஷ்டான சந்தியாவந்தனங்களையும் பயபக்தி விருப்பப் பரிமளிப்பும் செயற்பாட்டின் சார்பிற் கால நேரந் தெரிந்து செய்தல், விதி நணுக்க மறிந்து செய்தல் போன்ற நற்பண்புகளும் இன்றியமையாது வேண்டப்படும். எனவே, மற்றெல்லாத் தொழின் முறைகளுக்கும் போல இத்திருத்தொண்டு முறைக்கும் போதிய பயிற்சியிருந்தாக வேண்டும் என்பதும் அதுவும் அநுபவம் வாய்ந்த குரு ஒருவரின் கீழ் நிகழும் பயிற்சியாதல் வேண்டுமென்பதுந் தானே பெறப்படும்.
கணநாத நாயனார் இவ்வகையிற் குருவாயிருந்து சரியைத் திருத்தொண்டு பயிற்றுதலே தம் திருத்தொண்டாகக் கொண்டருளிய அருந்தொண்டராவர். "தொண்டின் நெறி தரவருவார்" எனச் சேக்கிழார் சுவாமிகளால் விதந்தோதப்பெற்ற திருஞான சம்பந்த சுவாமிகளின் ஜன்மபதியாகிய சீகாழியிலே தோன்றி அத்தொண்டு போற்றி உய்வடைந்த இவர் மகிமை போற்றத்தகும். சுவாமிகள் திருவடிகளே சிவப் பேறு பெறுதற்கு மிக இலகுசாதனமாம்.

அது, "முத்தன்ன வெண்ணகையார் மயன் மாற்றி முறைவழுவா தெத்தனை காலநின் றேத்து மவரினு மென்பணிந்த பித்தனை யெங்கள் பிரானை அணைவதெளிதுகண்டீர் அத்தனை ஞானசம் பந்தனைப் பாதமடைந்தவர்க்கே" எனத் திருத்தொண்டர் திருவந்தாதியில் வரும். கணநாத நாயனார் இவ்வழிபாட்டு நியமத்தோடே குறித்த திருத்தொண்டுமாற்றி முத்திப் பேரின்ப மெய்தினா ராவர். அது, அவர் புராணத்தில், "இப்பெருஞ் சிறப்பெய்திய தொண்டர்தா மேறுசீர் வளர்காழி மெய்ப்பெருந்திருஞான போனகர்கழல் மேவிய விருப்பாலே முப்பெரும் பொழுதருச்சனை வழிபாடு மூளுமன்பொடு நாளும் ஒப்பில் காதல்கூ ருளங்களி சிறந்திட ஒழுகினார் வழுவாமல்" என வருமதனா லறியப்படும்.

இந்த நாயனார் பயிற்றிவந்த திருத்தொண்டுகள் நந்தனவனப்பணி, மலர் கொய்தற்பணி, மாலை சமைக்கும் பணி, திருமஞ்சனத் தீர்த்தம் கொணர்ந்து கொடுக்கும் பணி, திருவலகிடும் பணி, திருமெழுக்கிடும் பணி, திருவிளக்கிடும் பணி, திருமுறை எழுதல் வாசித்தற்பணி எனச் சேக்கிழாரால் நிரல் செய்து காட்டப்பட்டுள்ளன. திருவலகிடுதல், திருமெழுக்கிடுதல்களுக்கும் பயிற்சி வேண்டுமாறென்னை யெனின் அது வருமாறு:


இவ்விரண்டும் நிலத்தைத் தீண்டி நிகழ்த்தும் பணிகளாதலின் சாமானியமாக நிலத்தில் ஊர்வன, நிலத்தோ டொட்டியிருப்பனவாகிய பிராணிகளுக்குத் தீங்கு நேரா வண்ணம் மிகமுன்னெச்சரிக்கையாகவும் மெத்தெனவாகவும் அவை நடைபெற வேண்டுதலானும் ஊர்வன புறப்பட்டுலாவாது தத்தம் அளைகளில் தங்கியிருக்கும் நேரமாகிய வைகறை நேரக் கூற்றைத் தெரிந்து செய்ய வேண்டுதலானும் திருமெழுக்கிடுதலிற் புள்ளிகள் விரவாமலும் மெழுக்கு ரேகைகள் ஒன்றிலொன்று தீண்டாமலும் இருந்தால் மட்டுமே மெழுக்கில் மங்கலம்பொலியு மாதலானும் இவையனைத்தும் ஏனைய தொண்டுகள் போலவே முழுத்த பக்தி விநயமான அர்ப்பண உணர்வுபூர்வமாக நிகழ்ந்தால் மட்டுமே சிவப்பிரீதியளிப்பன வாயிருக்குமாதலானும் இவற்றுக்கும் உரிய முறையிலான பயிற்சி வேண்டப்படுவதாகும்.

திருச்சிற்றம்பலம்

கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்

மீண்டும் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன் - https://tut-temple.blogspot.com/2019/04/blog-post_9.html

நாட்டமிகு தண்டிக்கும் அடியேன் - https://tut-temple.blogspot.com/2019/04/blog-post.html


அறைகொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன் - https://tut-temple.blogspot.com/2019/03/blog-post_16.html

கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்  - https://tut-temple.blogspot.com/2019/03/blog-post_1.html

இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன் - https://tut-temple.blogspot.com/2019/02/blog-post_22.html

மார்ச் மாத அடியார்கள் பூசை - https://tut-temple.blogspot.com/2018/02/blog-post_28.html

மே மாத அடியார்கள் பூசை - https://tut-temple.blogspot.com/2018/05/blog-post_11.html

09 April 2019

வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன்

அனைவருக்கும் வணக்கம். 

இன்று பங்குனி ரோகினி நட்சத்திரம். இந்த ஆண்டு கூடுமானவரையில் அடியார்களின் பூசை தொகுத்து தந்து வருகின்றோம். அந்த வரிசையில் இன்று  நேச நாயனார் பற்றி சிறிது உணர்வோம்.

நல் ஒழுக்கம் உடைய பெரியோர்கள் நிலைபெற வாழும் காம்பீலி என்னும் பழம்பதி (தொன்மையான இடம்) ஒன்றுண்டு. அதில் அறுவையார் குலத்தில் செல்வம் மிக்க குடியில் வந்தவர் நேசர் என்பவர். அவர் இடையறாது சிவனடியார்களைப் போற்றி வந்தார். ஒரு போதும் சிவனடிச் சிந்தை மறவார். வாக்கினால் திருவைந்தெழுத்து ஓதுவதையும் மறவார். தமது மரபின் கைத்தொழிலைச் சிவனடியர்களைக்காகவே செய்துவந்தார். உடையும், கீழ்கோவணமும் நெய்து அடியார்களுக்கு இடைவிடாது நாளும் அவர் வேண்டியமுறையால் ஈந்து வந்து சிவனடி நிழல் சேர்ந்தார்.

பலவிதங்களில் சிவத் தொண்டு நாம் செய்யலாம். அதில் சிவனடியார்களுக்கு உடை கொடுத்து உதவுதல் சிறந்த சிவத்தொண்டு  என்று நாம் உணர வைப்பவர் நேச நாயனார் ஆவார்.




யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது


சாலியர்கோக் காம்பீலித் தலைவர் மேன்மை
    தாவாத புகழ்நேசர் தஞ்சொ லென்றுங்
கோலியவைந் தெழுத்தோதிச் சிந்தை யுன்னிக்
    கொண்டபொரு ளன்பர்கொளக் கொடுத்து வாழ்வார்
சீலமிகுந் திருத்தொண்டர்க் குடையுங் கீளுந்
    திருந்தியவொண் கோவணமுஞ் சேர வீந்து
பாலனைய வொளிநீற்றான் பாத மேத்திப்
    பரலோக முழுதாண்ட பான்மை யாரே.

காம்பீலிநகரத்திலே, சாலியர் குலத்துக்குத் தலைவராகிய நேசநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் தம்முடைய மனத்தின் செய்கையைப் பரமசிவனுடைய திருவடிக்கு ஆக்கி, வாக்கின் செய்கையை ஸ்ரீ பஞ்சாக்ஷரத்துக்கு ஆக்கி, கையின் செய்கையைச் சிவனடியார்களுக்கு ஆக்குவாராகி, வஸ்திரமுங் கீளுங் கோவணமும் நெய்து, தம்மிடத்தில் வருஞ் சிவனடியார்களுக்கு இடையறாது கொடுத்து நாடோறும் அவர்களை வணங்கித் துதித்துக் கொண்டிருந்து சிவபதத்தை அடைந்தார்.





நேச நாயனார் புராண சூசனம் - பண்டிதர் மு. கந்தையா எழுதியது
சிவனடியார்க்கு உடைகள் கோவணம் உதவுதல் சிறந்த சிவ தொண்டாதல்

சிவனடி யார்களாவார் சிவனடிமைத்திறமொன்றே கண்ணாயிருப்பதன்றித் தமது உடலுயிர் வாழ்வியல் பற்றிய ஏதொன்றையுங் கருதிப் பேணா நிலையினராவர். அது, "ஆரங் கண்டிகையாடையுங் கந்தையே பார மீசன் பணியல தொன்றிலார்" எனத் திருத்தொண்டர் புராணத்தும், "மாடுண்டு கன்றுண்டு மக்களுண் டென்று மகிழ்வதெலாங் கேடுண் டெனும்படி கேட்டுவிட்டோமினிக் கேள்மனமே ஓடுண்டு கந்தையுண் டுள்ளே எழுந்தைந்து மோதவுண்டு தோடுண்ட கண்டனடியார் நமக்குத் துணையுமுண்டே" எனப் பட்டினத்தார் பாடலினும் வருவனவற்றாற் பெறப்படும். திருவருள் விட்ட வழி, தமது இன்றியமையாத் தேவைகளாகிய உண்டி உடையாதியன எவரேனும் தாமாக வழங்கினாற் கண்டுகொள்வதே அவர்கள் நிலையாதலின் அவர்களின் அத்தேவைகளை எவருந் தாமாக நினைந்து முன்வந்துதவி அவர்களைப் பேணுதல் சிறந்த சிவ புண்ணியமாகும். இச்சிவ புண்ணியத்தாற் சிவப் பேறுற்ற அமர்நீதி நாயனார் செய்தி ஏலவே அறியப்பட்டதொன்றே.


நேசநாயனார் சாலியர் எனப்படும் நெசவுத் தொழிலாளரா யிருந்தமையின் சிவனடியார்க் குதவும் உடை கீள் கோவணம் என்பவற்றைத் தாமே நெய்து அவர்கள் மகிழக் கொடுக்கும் வாய்ப்புடையராயினார். சிவனால் அருளப்பட்டனவாகிய திரிகரணங்களுஞ் சிவன்பணிக்கே அர்ப்பணிக்கப்பட்டாக வேண்டுவன என்னும் ஞான விவேகத்தினால் அவர் தம் மனத்தொழிற் பாடெல்லாம் சிவன் திருவடிகளையே நினைதற்கும் வாக்கின் தொழிற் பாடெல்லாம் அவர் திருநாமமாகிய அஞ்செழுத்தையே ஓதுதற்கும் அர்ப்பணித்துக் கொண்டவராய்க் கையின் தொழிற்பா டெல்லாம் சிவனடியார்க்கு உடை கீள் கோவணம் நெய்வதாகக் கொண்டிருந்த அவரது பத்திமை யொழுக்க மாண்பினை அவர் புராணங் காட்டும். அது, "ஆங்கவர் மனத்தின் செய்கை யரனடிப் போதுக் காக்கி ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்செழுத்துக் காக்கித் தாங்கு கைத் தொழிலின் செய்கை தம்பிரானடியார்க்காகப் பாங்குடை உடையுங் கீளும் பழுதில் கோவணமுஞ் செய்வார்" என வரும்.

    “மன்னியசீர் மறைநாவன் நின்றவூர் பூசல்

    வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன்”


மீண்டும் சந்திப்போம்.

மீள்பதிவாக:-


நாட்டமிகு தண்டிக்கும் அடியேன் - https://tut-temple.blogspot.com/2019/04/blog-post.html

அறைகொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன் - https://tut-temple.blogspot.com/2019/03/blog-post_16.html
கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்  - https://tut-temple.blogspot.com/2019/03/blog-post_1.html
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன் - https://tut-temple.blogspot.com/2019/02/blog-post_22.html
மார்ச் மாத அடியார்கள் பூசை - https://tut-temple.blogspot.com/2018/02/blog-post_28.html
மே மாத அடியார்கள் பூசை - https://tut-temple.blogspot.com/2018/05/blog-post_11.html