Subscribe

BREAKING NEWS

14 December 2020

ஸ்ரீ குகை நமச்சிவாயர் திருவண்ணாமலை



கர்நாடகாவில் மல்லிகார்ச்சுனம் என்ற ஊரில் குகை நமசிவாயர் பிறந்தார். ஒருநாள் இவர் கனவில் தோன்றிய அண்ணாமலையார், ‘‘திருவண்ணாமலைக்கு வா’’ என்று அழைத்தார். அதை ஏற்று நமசிவாயர் புறப்பட்டு வந்தார்.


                          தன் சீடர்கள் 300 பேருடன் அவர் புறப்பட்டார். விரூபாட்சித்தேவர் என்பவர் தலைமைச் சீடராக இருந்தார். வரும் வழியில் நமசிவாயர் ஒரு வீட்டில் திருமணம் நடப்பதைக் கண்டார். அவ்வீட்டினர் நமசிவாயரை ஆசி வழங்கும்படி வேண்டினர். அவ்வீட்டாருக்கு திருநீறு கொடுத்தார். அவர்கள் திருநீறைப் பூசிய போது, அவ்வீட்டில் தீப்பிடித்தது. தீப்பிடிப்பதற்கு நமசிவாயரின் வருகையே காரணம் என அவர்கள் நினைத்தனர்.


                            ஆனால், நமசிவாயர், தன் அருட் சக்தியால் எரிந்த பொருட்களை மீண்டும் வரவழைத்தார். பின், அவர்கள் பூந்தமல்லியை வந்தடைந்தனர். அங்குள்ள கோவில் நந்தவனத்தில் மலர்ந்திருந்த பூக்களைப் பறித்து வரும்படி குகை நமசிவாயர் தமது சீடர்களை அனுப்பினார். அந்த பூக்களை மாலையாக்கி சிவனுக்கு அணிவித்தார். உரியவரைக் கேட்காமல், பூப்பறித்தது குற்றம் என கோவில் நிர்வாகிகள் ஆட்சேபம் தெரிவித்தனர்.




                             பறித்த பூக்கள் எல்லாம் சிவனுக்காகவே அணிவிக்கப்பட்டன. ஒரு பூ கூட வீணாகவில்லை, என்று நமசிவாயர் விளக்கம் தந்தார். அதற்கு கோவில் நிர்வாகிகள் உம் வார்த்தை உண்மையானால், சிவனுக்கு அணிவித்த மலர்மாலை உங்கள் கழுத்தில் வந்து விழுமா, என சவால் விட்டனர். நமசிவாயரும் பக்தியுடன், நற்றுணையாவது நமச்சிவாயவே என்று பக்தியுடன் வணங்கினார். அனைவரும் அதிசயிக்கும்படி மலர் மாலை நமசிவாயரின் கழுத்தில் வந்து விழுந்தது.



                            அப்பகுதியை ஆட்சி செய்து வந்த வேற்று சமய மன்னனுக்கு இச்செய்தி எட்டியது, நமசிவாயரை அழைத்து, எல்லா சமயத்தையும் விட சைவமே உயர்ந்தது என்பது உண்மையானால், நான் சொல்வதைச் செய்ய வேண்டும்! என்று கட்டளையிட்டான். சைவமே சிறந்த சமயம், சிவபெருமானே உயர்ந்த தெய்வம்! என்று சொல்லிக் கொண்டு நன்கு காய்ச்சிய இரும்பை பிடித்து காட்டுங்கள்! என்றான்.

                            



                            அதற்கு நமசிவாயர், இதற்கு நான் எதற்கு, என் சீடனே இதைச் செய்வானே என்று விரூபாட்சித் தேவரை நோக்கி கண்களால் கட்டளையிட்டார். செந்தழல் மேனிச் சிவனே போற்றி என்று சிவபிரானை வணங்கிய விரூப்பாட்சிய தேவர் பழுக்கக் இரும்பினைக் கையில் எடுத்து, இதுவும் ஈசன் அருளால் பழுத்த கனியே என்று சொல்லி விழுங்கிவிட்டார். இதனைக் கண்ட மன்னன் மனம் திருந்தி, சிவபக்தன் ஆனான்.

சிலகாலம் கழித்து, நமசிவாயர் சீடர்களுடன் திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். திருவண்ணாமலையில் இருந்த ஒரு குகையில் வசிக்கத் தொடங்கினார்.

                          அதன்பின், அவருக்கு குகை நமசிவாயர் என்ற பெயர் ஏற்பட்டது. சீடர்களும் தானும் நீராடுவதற்காக நான்கு குளங்களை அவர் வெட்டினார். அவை திருமுல்லைப்பால் தீர்த்தம், அருட்பால் தீர்த்தம், சங்கு தீர்த்தம், பாதத்தீர்த்தம் என்று பெயர் பெற்றன.




                          குகை நமசிவாயர் தினமும் குகையை விட்டு அதிகாலையில் வெளியே வருவார். மலையைச் சுற்றி கண்ணோட்டம் விடுவார். ‘‘அருணாசலா நீ சுகம் தானே’’ என உரக்கக் கேட்பார். “சுகம், சுகம்’’ என மலை எதிரொலிக்கும். ஆனால் ஈசன் தரிசனம் அவருக்கு ஒருநாளும் கிடைக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த குகை நமசிவாயர் ஒரு நாள் இரக்கமற்ற அருணாசலா நீ மட்டும் சுகமாயிரு என்று குமுறலுடன் கூறினார்.



                          அண்ணாமலையார் மீது குகை நமசிவாயர் பல பாடல்களைப் பாடினார். நல்ல கவிகளை இயற்றும் புலமையும், வெண்பா பாடுவதில் வல்லமையையும் அவருக்கு அண்ணாமலையார் வழங்கினார். அருணகிரி அந்தாதி, சாரப் பிரபந்தம், திருவருணை தனி வெண்பா, அண்ணாமலை வெண்பா போன்றவைக் குறிப்பிடத்தக்கவை.

                        



                       அண்ணாமலையாரை மனதார தரிசிப்பதும், பூஜைக்குப் பூமாலைகள் கட்டித் தருவதும் நமசிவாயரின் அன்றாடப் பணிகளாக இருந்தன. இவருடைய சீடர்களுள் விரூபாட்சி தேவரும், குரு நமசிவாயரும் முக்கியமானவர்கள் ஆவர்.

ஒருநாள், அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு, குகைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் அழுதபடியே அவரை நோக்கி ஓடி வந்தாள். சுவாமி! அபலையான என்னைக் காப்பாற்றுங்கள். என் கணவர் திடீரென்று இறந்துவிட்டார். வாழும் வழி தெரியாமல் நிர்கதியாய் இருக்கும் எனக்கு, உங்களை விட்டால் வேறு துணையில்லை, என்று பாதங்களில் விழுந்தாள்.



                      இரக்கப்பட்ட குகை நமசிவாயர், கலங்காதே! அண்ணாமலையார் துணையிருப்பார். உன் கணவர் சிவனருளால் உயிர் பெறுவார். வீட்டுக்கு நிம்மதியாகச் செல். எல்லாம் நல்லபடியாய் நடக்கும் என்று ஆறுதல் கூறி வழி அனுப்பினார். அதன்படியே, அவளது கணவரும் உயிர் பெற்று எழுந்தார். குகை நமசிவாயர் வாழ்ந்த காலத்தில், நகித் என்ற கொடியவன் திருவண்ணாமலையில் வசித்து வந்தான். கோவிலுக்கு வரும் பெண்களிடம் அட்டகாசம் செய்தான்.

இதைக்கண்டு கோபமுற்ற குகை நமசிவாயர், ஈசனே! உம் நெற்றிக் கண்ணை மூடிக் கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்து விட்டீரோ?, என்னும் பொருளில் பாடினார். இதன்பின் நகித்தின் முதுகில் ராஜபிளவை என்னும் நோய் உண்டானது. நோயின் வேதனையைத் தாங்க முடியாமல் உயிர் விட்டான். இவ்வாறு பலவித அற்புதங்களைச் குகை நமசிவாயர் செய்தார்.

                            


                         ஏராளமானவர்களின் நோய்களை தீர்த்துள்ள குகை நமசிவாயர் நடத்திய சித்தாடல்கள் ஏராளம். ஒருதடவை இறந்து போன ஆட்டுக்கு உயிர் கொடுத்து எல்லாரையும் ஆச்சரியப்படுத்தினார். உடனே சிலர் ஒருவனை செத்தவன் போல நடிக்க செய்து, பாடையில் கட்டி குகை நமசிவாயரிடம் தூக்கிச் சென்றனர். ‘‘சாமீ இவன் செத்துப் போயிட்டான். ஆட்டுக்கு உயிர் கொடுத்தது போல இவனுக்கும் உயிர் கொடுங்கள்’’ என்று கிண்டலாகக் கேட்டனர்.

                          உடனே குகை நமசிவாயர், ‘‘ஆமா... .... இவன் செத்து போயிட்டான். கொண்டு போய் புதைத்து விடுங்கள்’’ என்றார். இதைக் கேட்டதும் அவர்கள் சிரித்தனர்.

‘‘டேய் எழுந்திருடா... சாமீ பொய் சொல்றாருடா...’’ என்றனர். ஆனால் பாடையில் படுத்து வந்தவன் எழுந்திருக்கவில்லை. உண்மையிலேயே செத்து போய் விட்டான். இந்த சம்பவத்துக்குப் பிறகு திருவண்ணாமலையில் குகை நமசிவாயரை, அனைவரும் பயபக்தியுடன் நடத்தினார்கள்.



                             குகை நமசிவாயர் மூலம் அண்ணாமலையாரின் புகழ் நாட்டின் நாலாபுறமும் பரவியது. இதனால் அவருக்கு சிறப்பு செய்யும் வகையில் இன்றும் உற்சவ காலங்களில் அண்ணாமலையார் வீதி வலம் வரும்போது அவரது தேருக்கு பின்னே குகை நமசிவாயரும், விரூபாட்சித் தேவரும் தனி தனி பல்லக்குகளில் வலம் வருகிறார்கள். ஒருதடவை அண்ணாமலையார், ‘‘குகை நமசிவாயர் வருகிறாரா என்று திரும்பி திரும்பிப் பார்த்து கழுத்து வலிக்கிறது.




                         எனவே குகை நமசிவாயர் முதலில் செல்லட்டும்’’ என்றாராம். அன்று முதல் உற்சவ வீதி உலாக்களில் குகை நமசிவாயர் தேர் முதலில் செல்வது குறிப்பிடத்தக்கது. குகை நமசிவாயர் மீது அண்ணாமலையார் காட்டிய அன்புக்கு இவையெல்லாம் உதாரணமாக உள்ளன. ஒருதடவை குகை நமசிவாயர் ஜீவசமாதி ஆக நினைத்த போது மேலும் 100 ஆண்டுகள் வா-ழ அண்ணாமலையார் அவருக்கு ஆயுளை நீட்டித்தாராம்.

ஒரு கட்டத்தில், தான் இதுவரை வாழ்ந்தது போதும் என்று குகை நமசிவாயர் தீர்மானித்தார். எனவே, அண்ணாமலையாரிடம் சென்று தான் ஜீவசமாதி ஆக விரும்புவதாகவும், தன்னை ஏற்றுக் கொள்ளுமாறும் வேண்டினார்.



                           அதற்கு அண்ணாமலையார், நமசிவாயா... எல்லாம் சரிதான். உன் காலத்துக்குப் பிறகு பூஜை செய்வதற்கு ஒரு வாரிசு வேண்டாமா? திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே இருந்து காலம் தள்ளிவிட்டாய் என்று சொன்னவர், நமசிவாயர் திருமணம் செய்து கொள்வதற்குத் தானே ஒரு ஏற்பாடு செய்தார். ஸ்ரீசைலத்திலிருந்து குகை நமசிவாயரின் மாமன் மகளை வரவழைத்து இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தார். சில காலத்திற்கு குகை நமசிவாயருக்கு முதல் வாரிசு பிறந்தது.



                             ஈசனின் விருப்பப்படி வாரிசு பிறந்தாயிற்றே! எனவே அண்ணாமலையாரின் ஒப்புதலின் பேரில் தான் வாழ்ந்த குகையிலேயே ஜீவசமாதி அடைந்தார். இவருக்கு அவரது பரம்பரையில் வந்தவர்கள் தொடர்ந்து வழிபாடு நடத்தி வருகிறார்கள். அவர் எழுதிய பாடல்களில் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் வழியில் அண்ணாமலையார் ஆலயத்துக்கு நேர் பின்புறம் பேகோபுரத் தெரு (பேய் கோபுரத் தெரு என்று மருவி உள்ளது) அருகே உள்ள சிறு தெரு வழியாக சுமார் ஐந்து நிமிடம் நடந்து சென்றால், மலை தெரியும். அந்த மலையின் மையத்தில் ஒரு சிறு ராஜகோபுரம் தெரியும். இதுவே குகை நமச்சிவாய சுவாமிகளின் ஜீவ சமாதி ஆலயம் ஆகும்.




                               மலை அடிவாரத்தில் இருந்து சுமார் பத்து நிமிடம் மேலே நடந்தால், குகை நமச்சிவாயரின் ஜீவ சமாதியை அடைந்து விடலாம். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி பூராட நட்சத்திரம் கூடிய தினத்தில் கும்ப லக்கனத்தில் குருபூஜை நடந்து வருகிறது. 500 ஆண்டுகளை கடந்து குகை நமசிவாயருக்கு குருபூஜை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினத்தில் குகை நமச்சிவாயர் தன் கைப்பட எழுதிய சில ஓலைச்சுவடிகளை குருபூஜையின் போது வைத்து வணங்குகிறார்கள். குகை நமசிவாயரின் 18-வது வாரிசுதாரர் தற்போது இந்த ஜீவசமாதியை பராமரித்து வருகிறார்.

ஸ்ரீ வெள்ளையானந்த சுவாமி சித்தர்

ஸ்ரீ வெள்ளையானந்த சுவாமி சித்தர்


பஞ்ச பூதஸ்தலங்களில் நடுநாயாகமாக நின்று அக்னி சொரூபமாக காட்சியளித்து நினைத்தாலே முக்தியளிக்கும் உண்ணாமலை உடனாகிய திருவண்ணாமலையின் ஈசான்ய திக்கில் 20 கி.மீ வடகிழக்கே மங்கலத்துக்கு அருகில் (3கி.மீ) ஏழை விவசாயிக்கள் பலர் வசிக்கும் ஒரு சிறு கிராமம் கருமாரப்பட்டி. இங்கு திருவாளர். சின்னத்தம்பி திருமதி. குள்ளம்மையார் என்னும் எளிய விவசாய குடும்ப தம்பதிகளுக்கு 17.8.1927 அன்று 3-வது குழந்தையாகப் பிறந்தவர் வெள்ளையன் என்கின்ற இன்றைய வெள்ளையானந்த சுவாமிகள் ஆவார்.


                      பெற்றோர்களின் தவப்பயனாய் அவதரித்த தவக்கொழுந்து கருமாரப்பட்டிசாமி என பக்தர்கள் அன்புடன் அழைக்கப்படும் ஸ்ரீலஸ்ரீ வெள்ளையானந்த சுவாமிகள் 15 ஆண்டுகளாக உணவு உண்ணாமலும் தண்ணீர் பருகாமலும் ஒரே இடத்தில் அமர்ந்த 47 ஆண்டுகளாக கடும் தவம் செய்து சித்திகள் பெற்று தன்னை நாடி வருகின்றவர்கள் குறைகளை அறிந்து அருள் நோக்கும் அருள் வாக்கும் புரிந்து விபூதியளித்து அருள் செய்து வந்தார்.






                       இவருக்கு நினைவு தெரிந்த நாள் முதல் உள்ளத்தில் கிருஷ்ண பகவானும் சிவபெருமானும் நிரம்பி அருள் பொழிந்து கொண்டு இருந்தனர். இதன் விளைவாக 7,8 வயது சிறுபையனாக இருக்கும் போதே தம் ஊரில் உள்ள கிருஷ்ணன் பஜனை கோயிலுக்கு காலை தோறும் பூஜை செய்துவிட்டு அங்கிருந்து தென்மேற்கில் தெரியும் அருள்மிகு அருணாசலத்தை நோக்கி மனமுருக கும்பிடுவது தான் தமது அன்றாடக்கடமையாக செய்து வந்தார்.

ஸ்ரீ வெள்ளையானந்த சுவாமி சித்தர் ஜீவ சமாதி 


                    சக வயது குழந்தைகளுடன் சடுகுடு, கில்லிதாண்டி, தொடை தட்டி முதலிய கிராம விளையாட்டுகளை மிக அற்புதமாக விளையாடி நல்ல இளைஞர்கள் கூட்டம் சேர்ந்து மாலையில் நடுத்தெரு விநாயகர் கோயிலுக்கு கூட்டி வந்து திருப்புகழ் பஜனைப்பாடல்கள் பாடுவதும், தமக்கு தெரிந்த இறைவன் திருவிளையாடல் சம்பந்தமான அற்புதக் கதைகளைச் சுவைபடச் சொல்லுவதுமாக வளர்ந்து வந்தார்.


                      குப்பகவுண்டன் என்பவர் இவருக்கு 15 வயது மூத்தவர். பூண்டி மகானிடம் பெரும் ஈடுபாடு உடையவர். வெள்ளையானந்தரை இந்த மகானிடம் கூட்டிப்போக எவ்வளவோ முயற்சிகள் செய்தார். தம் உள்ளம் முழுவதும் சிவா-விஷ்ணு நினைவாக இருந்த வெள்ளையானந்தருக்கு திருவண்ணாமலை – திருப்பதி வெங்கடாசலபதியைத் தவிர்த்து வேறு எந்த சாமிகள் மீதும் நாட்டம் ஏற்படவில்லை. தவறாது திருவண்ணாமலை கிரிவலம் சுற்றி வருவார். தினசரி கிருஷ்ணன் கோவிலில் பூஜை செய்த கையோடு அருணாச்சல தரிசனம், மாலையில் பஜனை என்று வழக்கமாக கொண்டார். இது தவிர வேறு யாரைப் பார்க்கவும் சிந்திக்கவும் விருப்பமேற்படவில்லை.


                          வயது ஏறிக்கொண்டு வந்தது. முப்பது வயதாகியும் இறை நாட்டமிகுந்து இல்லற நாட்டம் சிறிதும் இல்லாமல் தம் விவசாய வேலைகள் உண்டு, தம் பூஜை, பஜனை உண்டு என்று வாழ்ந்துவந்தார். திண்ணைப் பள்ளியில் 2,3 ஆண்டுகள் பயின்றது தான் இவர் கல்வி.


                          வெள்ளையானந்தரின் தாய் மாமாவிற்கு 15 வயதில் அமிர்தம்மாள் என்று ஒரு பெண் இருந்தார். உறவு விட்டுப் போய்விடக் கூடாது என்று 30 வயதான இவருக்கு 1956-ம் ஆண்டு திருமணம் முடித்து வைத்தனர். இரு ஆண்டுகள் கழித்து ரகுநந்தன் பிறந்தார்.


ஸ்ரீ வெள்ளையானந்த சுவாமி சித்தர் ஜீவ சமாதி 

 ஒருநாள் காலையில் வயல் வெளியில் ஒரு மகான் வெள்ளையாந்தருக்கு காட்சி கொடுத்தார். ‘நீதான் அந்த குப்பனுடைய குரு பூண்டி மகானா’ என்று சாமி கேட்டார். ‘ஆமாம், நீ என்னிடம் இன்றே வா’ என்று சொல்லிவிட்டு பூண்டி மகான் மறைந்துவிட்டார். ஒரு நொடி கூட தாமதிக்காமல் வீட்டுக்கு வந்து தம் மனைவி அமிர்தாம்மாளையும் கூட்டிக் கொண்டு திருவண்ணாமலை கிரிவலம் சென்று அண்ணாமலையார் உத்தரவு பெற்றுக் கொண்டு பூண்டி மகானை சந்திக்கச் சென்றார். பெரும் கூட்டம்! அந்தக் கூட்டத்திலும் பூண்டி மகான் வெள்ளையானந்தரைக் கூப்பிட்டு வெற்றிலை, பழம், தேங்காய், பூ, வெல்லம், ஆகியவற்றை அமிர்தம்மாள் மடியில் வைத்து இருவருக்கும் திருநீறு பூசி நீ என்னை விட ஒருபடி மேலாக வந்து நல்ல தீர்க்காயுசுடன் இருப்பாயடா! என்று கூறி அனுப்பினார்.


                              மனதிலுள்ள இறைதாகம் நாளொரு மேனியும் பொழுதுதொரு வண்ணமாக வளர்ந்து வந்தது. உள்ளம் முழுவதும் நிரம்பி வழிந்தது. பூண்டி மகானின் ஆசிர்வாதங்கள் எண்ணெய் நிரம்பிய விளக்கில் திரிபோட்டு தீபம் ஏற்றியது போல ஆகிவிட்டது. தனிமையில் இருந்து தியானம் செய்ய வேண்டுமென்று மனது பெரிதும் விரும்பியது. 1962-ல் தம் வீடு ஒரு சிறு குடிசை அதனால் நடுத்தெரு பிள்ளையார் கோவில் கொஞ்சநாள் உட்கார்ந்து தியானம் செய்து பார்த்தார், சூழ்நிலை சரியாக இல்லை.


                            அருகில் 3கிமீ தூரத்திலுள்ள மங்கலத்தில் டீக்கடை அப்புகவுண்டர் மிகுந்த இறை பக்தி கொண்டவர். இவரிடம் அதிக அன்பு உடையவர். தம் கடைக்கு பின்னால் ஒரு அறை இருந்ததால் அங்கு சென்று தியானம் செய்யும்படி கேட்டுக்கொண்டார். தினசரி காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தியானத்தில் உட்கார்ந்துவிடுவார். திரும்பும்போது ஒரு டீ குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து விடுவார். இவ்வாறு அப்புகவுண்டர் இடத்தில் சிலவருடங்கள் கழிந்தன. பிறகு அங்கும் சூழ்நிலை சரிபட்டு வரவில்லை.


                             இரண்டாவது மகன் தவராஜி 1969-ல் பிறந்தார். அணையாத தமது ஆன்மிக தாகத்துடன் தம் மனைவி அமிர்தம்மாவை அழைத்தார். நான் நிலையாக ஒரே இடத்தில் சம்மணமிட்டு அமர்ந்தபடி தியானத்தில் இருக்க விரும்கின்றேன் அநேகமாக என் ஆயுள் பரியந்தம் கூட இவ்வாறு இருந்துவிடலாம் என்று கருதுகின்றேன். என் உள்ளத்திலிருக்கும் சிவா விஷ்ணு தெய்வங்கள் உன்னைக் காப்பாற்றும் நீ பயப்படாதே என்று சொன்னார்.


                             ஒரு சிறிய சிமெண்டு மேடை போட்டு அதில் சாமியை உட்கார வைத்துவிட்டார் அம்மையார். பெரிய பையன் 10வயதில் 5-வது படித்துவந்தான். படிப்பை நிறுத்தி தம் விவசாயத்திற்கு துணையாக சுவாமிகளை பராமரித்து வந்தார். 1970 முதல் ஆரம்பித்த இந்த தீவிர தியானம் 25 ஆண்டுகள் தொடர்ந்தது.


                           கொஞ்சம் கொஞ்சமாக ஆகாரத்தை குறைத்துக் கொண்டு 1972 வாக்கில் சுத்தமாக தண்ணீர் பருகுவதைக் கூட நிறுத்திவிட்டார். எப்போதும் நிர்விகல்ப சமாதியிலிருந்துதபடியே, சித்தர்கள் பலருடன் உரையாடுவது எல்லாம் மற்றவர்களுக்கு ஒரு பித்தன் உளறுவதுபோலத் தென்பட்டது.

                           1979-ல் ஒரு வெள்ளிக்கிழமை பூண்டி மகான் சுவாமிகள் சமாதியடைந்தார். நம் வெள்ளையானந்த சுவாமிகள் மனைவி அமிர்தம்மாளை அழைத்து மறுநாள் சனிக்கிழமை முதல் தம் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளப் போவதாகவும் ஆகவே கம்பு சோற்று நீராகாரத்தில் உப்பு போட்டு கொண்டு வரும்படியும் கூறினார்.


                            அது முதல் ஏதோ சிறிது ஆகாரம் சாப்பிட ஆரம்பித்தார். இருந்தாலும் பக்தர்களுக்கு தரிசனம் தந்து விபூதி கொடுத்து ஆசிர்வதிப்பதுமாக இருந்தார். ஏழைகள், பணக்காரர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், அதிகாரிகள், தொழில் நிபுணர்கள் என்று பலரும் இவரது அருளாசிகளைப் பெற்று தமது கஷ்டங்களுக்கும், துன்பங்களுக்கும் ஆறுதல்களை பெற நாடிவந்தார்கள். சித்தத்தை சிவன்பால் வைத்து நிர்விகல்ப சமாதியில் இருந்து வந்த சுவாமிகளை உபாதைகள் எதுவும் பாதிக்கவில்லை.


                            இவர் தலையின் ஜடா முடி இரு பிரிவுகளாக 12 அடி நீளம், தாடி 5 அடி நீளம் இருந்தது. மூன்றையும் மும்மூர்த்திகளாக வடம் போல இணைத்துக் கட்டி சுருட்டி ஒரு மர ஸ்டூல் மீது வைத்திருந்தார்கள். பக்தர்கள் இதைத் தொட்டு வணங்கி ஆசிர்வாதம் பெற்று திருநீறு வாங்கிச் சொன்றனர். கொண்டு வரும் எலுமிச்சை பழங்களை அவரவர்களுக்கு கொடுத்து சாறு பிழிந்து சாப்பிட்டு வரவும், வீட்டு முகப்பில் கட்டி விடச்சொல்லி அவரவர் கர்மவினைகளை போக்கவும் உதவினார். பக்தர்கள் கொண்டு வரும் தேங்காய், பழம், கற்புரம், ஊதுவத்தி, புஷ்பங்களை வெளியில் தாம் பிரதிஷ்டை செய்துள்ள வேலுக்கு வைத்து கும்பிட்டுவிட்டு வரச் சொல்லி ஒவ்வொரு பக்தரிடமும் சலிக்காமல் குறைகளை கேட்டு தம் அருட்பார்வையை அவர்கள் மீது படரவிட்டு அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.


                           ஒரு ஏழை விவசாயி ஒருவன் தன்னிடம் நிலம் இருந்தும் மிகவும் கஷ்ட ஜீவனம் நடத்தி வந்தார். சுவாமியைப் பார்க்க வேண்டுமென்று நீண்டநாள் ஆவல் அவருக்கிருந்தது. ஒருநாள் சுவாமியிடம் சென்று சுவாமி நான் வறுமையில் இருக்கிறேன். ஒரு கிணறு வெட்டி விவசாயம் செய்யலாமா என்று முறையிட்டார். சுவாமிகள், ‘டேய் உன் நிலத்திலேயே உள்ள கிணற்றை தூர் வாரி, சரிபடுத்து. அதிலேயே நிறைய தண்ணீர் வரும்’ என்று அருள்பாலித்தார். தற்போது அந்த விவசாயி நன்றாக விவசாயம் செய்து வறுமையிலிருந்து மீண்டு மகிழ்வுடன் குடும்பம் நடத்துகிறார்.


                           மற்றொரு சமயம் ஒரு பக்தர் தன்னிடமுள்ள பசுவின் பாலில் சுவாமிக்கு பாயாசம் செய்து எடுத்து வந்தார். சுவாமியின் மனைவியார். சுவாமியிடம் ‘ஐயா, சாப்பிட வாருங்கள்’ என்று அழைத்தார். அதற்கு சுவாமிகள் ‘ எனக்காக ஒரு பக்தன் பாயாசம் செய்து வந்து கொண்டிருக்கிறான். அவன் வந்தவுடன் அவன் பாயாசத்தை நான் சாப்பிட்டுக் கொள்கிறேன்’ என்று அவன் வருவதற்கு முன்னே குறிப்பிட்டுச் சொன்னார். பிறகு இச்செயல் நடந்ததைக் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். இதுபோல் பல அதிசய நிகழ்வுகளை சுவாமிகள் தினந்தோறும் நடத்திக் கொண்டு வந்தார்.


                         இவ்வாறாக சுவாமிகள் ஐப்பசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் (5.11.2012) அன்று ஜீவசமாதி அடைந்து லிங்க வடிவமாக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.


விழா:

                     குருபூஜை விழா -ஐப்பசி  புனர்பூசம்

                     ஜெயந்தி விழா -மார்கழி உத்திரம்  


முகவரி:


ஸ்ரீலஸ்ரீ வெள்ளையானந்த சுவாமி,

கருமாரப்பட்டி,

திருவண்ணாமலை மாவட்டம்  

தொடர்புக்கு:7502284170,7502284173

31 July 2020

புண்ணியக் கணக்கில் சேர்வது தானமா?...தர்மமா?...

தானத்திலும் தர்மத்திலும் சிறந்து விளங்குபவன் கர்ணன் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். கர்ணன் தன்னிடம் யாசகம் கேட்டு வருபவர்களுக்கு அவர்கள் விரும்பியது எதுவாயினும் மகிழ்ச்சியோடு அளிப்பான்.
புண்ணியக் கணக்கில் சேர்வது தானமல்ல...தர்மம் மட்டுமே...இந்துமதம் பெரும்பாலும் வலியுறுத்துவது தானமும் தர்மமும் செய்ய வேண்டும் என்பது தான். இறைப்பணியில் மூழ்கி இறைவனையே நினைத்துக் கொண்டிருக்கும் பக்தர்கள் சாஸ்திரப்படி பிறந்தநாளில், திருமணநாளில், முன்னோர்கள் இறந்த திதியில் என்று இயன்ற  அளவு அன்னதானங்களை செய்கிறார்கள். தானங்களில் எத்தனையோ வகைகள் உண்டு. தர்மம் என்று எடுத்துகொண்டால் ஒன்றுதான். தானத்துக்கும் தர்மத்துக்கும் வேறுபாடு உண்டு.
நான் தான தர்மம் செய்ய விரும்புகிறேன் என்று சொல்வதில் சிலர் பெருமிதம் கொள்வார்கள். உதவி என்று யார் கேட்டு வந்தாலும் நான் தர்மம் செய்கிறேன் என்றும் சொல்வார்கள்.
இயலாதவர்களுக்கு உணவிடுவதும், ஏழை குழந்தைகளைப் படிக்க வைப்பதும், முதியோர்களுக்கு ஆடைகள் தருவதையும் தானத்திலும் தர்மத்திலும் சேர்த்துக்கொள்பவர்கள் முதலில் தானம் வேறு தர்மம் வேறு என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். 
தானம்:
தானத்திலும் தர்மத்திலும் சிறந்து விளங்குபவன் கர்ணன் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். கர்ணன் தன்னிடம் யாசகம் கேட்டு வருபவர்களுக்கு அவர்கள் விரும்பியது எதுவாயினும் மகிழ்ச்சியோடு அளிப்பான்.
கேட்டதைக் கொடுக்கும் அளவுக்கு தன்னை இறைவன் வைத்திருப்பதை எண்ணி மனம் மகிழ்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்தவும் தவற மாட்டான். இப்படி கேட்பவர்களுக்கு  செய்யும் உதவியானது  தானத்தில் தான் சேரும்..   புண்ணியத்தைக் கொண்டு வராது.
தருமம்:
ஆனால் அதே கர்ணன் கொடை வள்ளல் என்றும் அழைக்கப்பட்டான்.  உதவி என்று சொல்லும் முன்பே குறிப்பறிந்து அவர்கள் கேளாத நிலையில் அவர்களுக்கு வேண்டியதை மனமுவந்தும் செய்து வந்தான். இப்படி செய்யும்  உதவிகளே தர்ம கணக்கில் வந்து சேரும். ஆனால் இந்த தர்மம் புண்ணியத்தைத்  தரவல்லது.
இத்தகைய புண்ணியத்தை அதிகம் சம்பாதித்தான் கர்ணன். ஆனால் கிருஷ்ண பரமாத்மா வயோதிக பிராமணனாய் வேடமிட்டு கர்ணனிடம் வந்து புண்ணியத்தைக் கேட்டு பெற்றுகொண்டார்.  கேட்டு பெற்றதால்  கர்ணன்  தர்மத்தால் பெற்ற புண்ணியம் அனைத்தும் தானக்கணக்கில் சேர்ந்துவிட்டது.  கர்ணனை மரணமும் எளிதில் சூழ்ந்துகொண்டது.
இப்படி தர்மம் இருக்கும் இடங்களுக்கேற்ப மாறுபடும். ஒரு போர்வீரரின் தர்மம் என்பது  அவர் இருக்கும் நாட்டைக் காப்பது. மனிதன் இல்லறத்தில் ஈடுபடும் போது மனைவி,  பிள்ளைகள், பெற்றோர்களை கவனிக்காமல் கடவுளுக்கு தொண்டு செய்வது  தர்மக்கணக்கில் சேராது. தர்மம் என்பது கடமையைச் சரியாக செய்வது ஆகும்.
எனவே  இந்நாளில் இறைவனை நினைத்து 1000 பேருக்கு அன்னதானம் செய்து தானம் தர்மம் செய்தேன் என்று சொல்வதை விட வறுமையால் வாடி பசி என்னும் கொடுமையைச் சொல்வதற்கு முன்பும்,  கல்வியைத் தொடரமுடியவில்லை என்று சொல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு கல்வியும் என கேட்கும் முன்பே நீங்கள் செய்வதே தர்மம் என்று சாஸ்திரம் சொல்கிறது.
 தர்மம் என்னும் புண்ணியக்கணக்கைப் பெற  கேளாமலேயே உரியவருக்கு உரிய நேரத்தில் செய்துவிடுங்கள். இதுதான் தர்மம்... இதுதான் புண்ணியம்.. 

நமது குழு நண்பர்கள் அந்தவகையில் செய்துவரும் தர்மம் ஆனது ஏதோ ஒரு வகையில் அவர்களது கர்ம கணக்கை தீர்க்கும் என்பது நிச்சயமாகும்.இதை படித்துகொண்டிருக்கும் நண்பர்களும் தங்களால் இயன்ற ஒரு தர்ம காரியத்தினை செய்து வரவேண்டும் என்பதே எனது விருப்பமாகும் .
தர்மம் செய்ய வேண்டும் என்றால் ஏதோ ஐயாயிரம் பத்தாயிரம் என செலவாகுமே என என்ன வேண்டாம்,சாலை ஓரத்தில் இருக்கும் ஒரு ஆதரவற்றவர்களுக்கு ஒரு வாழைப்பழம் போதும்,ஒரு டீ,ஒரு ரொட்டிதுண்டு,சாலைகளில் சுற்றித்திரியும் ஒரு பைரவ வாகனத்திற்கு ஒரு பிஸ்கட் துண்டு போதும், பறவைகளுக்கு சிறு தானியம் போதும்,இதுபோன்ற தர்மங்களை செய்துவந்தாலே போதும் ,தங்களது வாழ்க்கையின் கர்மவினைகள் அகன்று ,சுப நிகழ்வுகள் ,வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடுவதை கண்கூடாக பார்க்க முடியும் .
நமது குழுவில் உள்ள  சோழிங் நல்லூரில் வசிக்கும் நண்பர்  திரு,செந்தில்நாதன்,அவர்களின் வீட்டருகே வசிக்கும் ஒருவர் மிகவும் குடும்ப வறுமையில் உள்ளார் என கேள்விப்பட்டோம்,இந்த கொரோனா காலகட்டத்தில் வேலை ,வருமானம் ஏதும் இல்லை என திரு செந்தில்நாதன் அவர்கள் நம்மிடம் தெரிவித்ததின் பேரில் அவர்களுக்கும் நாம் ஏதாவது செய்யவேண்டும் என எத்தனித்த வேலையில் ,நமது குழுவின் முக்கிய உறுப்பினராக இருக்கும் திருமதி,பரிமளம் அவர்களில் மூத்தமகன் திருமணநாளையொட்டி  தர்மம் செய்ய வேண்டும் என நம்மிடம் தெரிவிக்க இதுவே தக்க சமயம் என அவர்களுக்கு இரண்டாயிரம் மதிப்புள்ள அந்த உதவித்தொகை மலிகைப்பொருளாக அவர்களுக்கு திரு,செந்திநாதன் அவர்களின் மூலமாகவே 10/07/2020 அன்று  வழங்கப்பட்டது.






இதேபோல் நமது குழுவின் சகோதரி ஒருவர் திருமதி,சசிகலா அவர்களளின் குடும்ப செலவிற்காக ரூ,4000. 31/07/2020 அன்று உதவிசெய்த திருமதி,தாமரை வெங்கட்,மற்றும் திருமதி,ரமா சங்கர்,அவர்களுக்கும்,நமது குழுவின் சார்பாக நன்றிகளை தெரிவித்துகொள்கின்றோம். 
!!!இயன்ற அளவிற்கு தான தர்மங்களை செய்வோம் வாழும்போதும் வாழ்க்கைக்கு பின்பும் நிறைவுடன் வாழ்வோம்.!!!
நன்றி.