Subscribe

BREAKING NEWS

21 June 2018

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

 தேவாரம் - மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

பொதுவாக நாம் தற்போது அதிகமாக வாழ்த்துச் செய்தி கூறும் போது வாழ்க வளமுடன்! என்று கூறி வாழ்த்தி வருகின்றோம். அதனையும் தாண்டி சைவத்தில் கற்றுக் கொண்டு வரும் போது "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் "என்ற பதிகம் கண்டோம். இப்படியொரு உயர்ந்த வாழ்த்துச் செய்தி நம் தமிழ் மொழியின் மேன்மையையும், சைவத்தின் மகத்துவத்தையும் உணர்த்தி வருகின்றது. ஒரு முறை நாம் இப்படி வாழ்த்திய போது,  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் " என்றால் என்ன? என்று நம்மிடம் சிலர் வினா எழுப்பினர். முடிந்த வரை குருவருளால் இந்தப் பதிவில் விடை காண முயற்சி செய்கின்றோம்.

"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் "



பொதுவாக இந்த உலகத்தை மண்ணுலகம் என்று கூறுகின்றோம். நிலமகள் மண்ணால் ஆனவள். மண்ணால் ஆன இந்த உலகத்தை மண்ணுலகம் என்கின்றோம், பூமி என்று கூறுவதால் பூவுலகம் என்றும் கூறலாம். நாம் வாழ இந்த மண் அவசியம். நாம் நமக்கென்று ஒரு வீடு கட்டி இந்த மண்ணில் வாழுகின்றோம். அது மட்டுமா? மண்ணில் இருந்து தான் விவசாயத்தின் மூலம் உணவு பெறுகின்றோம். நாம் உண்ணும் உணவில் மண் அடக்கம். இந்த மண்ணின் மகத்துவம் தான் என்னே? மண்ணிற்கு ஆக்க சக்தியும் உண்டு, அழிக்கும் சக்தியும் உண்டு. அனைத்தையும் அழித்து மக்கச் செய்யும் மண் விதையை மட்டும் அழிப்பதில்லை; மாறாக அவற்றை வளர்க்கின்றது. ஆறறிவு கொண்ட மனிதன் மட்டுமல்ல; ஓரறிவு முதல் ஆறறிவு வரை அனைத்து உயிர்களும் மண்ணில் தான் வாழ்கின்றன. இந்த பூமியை விட்டால் நாம் வேறெங்கும் சென்று வாழ முடியாது..இது தான் மண் தத்துவம். மண்ணில் ..இந்த பூமியில்..இந்த பூவுலகில்..உயிர் உலகில்...மெய் உலகில்...இயற்கை உலகில் ...அனைத்தும் சங்கமம்.

அடுத்து வாழலாம் என்ற சொல்லிற்கான விளக்கம்.

நாம் அனைவரும் இந்த மண்ணில் என்ன செய்கின்றோம்? வாழ்ந்து வருகின்றோம். எது வரை நாம் வாழலாம்? நம் மூச்சு நிற்கும் வரை, அதாவது இறக்கும் வரை, பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடைப்பட்ட கால நம் இருப்பே வாழ்தல் என்று கொள்ள முடியும்.ஆனால் நாம் எப்படி நம் இருப்பை இங்கே விட்டு செல்ல இருக்கின்றோம். பாரதியின் வரியில் "தேடிச் சோறு நிதந் தின்று" வாழ்வதல்ல. வேடிக்கை மனிதர் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று வாழ்வது தான் வாழ்க்கை. வெந்ததை தின்று விதி வந்து சாவது அல்ல வாழ்கை. இது ஒரு பிழைப்பு. நாம் அனைவரும் வாழ்வதாக நினைத்தால் அது ஆகப் பெருந்தவறு. நாம் பிழைத்துக் கொண்டு தான் இருக்கின்றோம். நம் தாத்தன், பாட்டன், முப்பாட்டன் போன்றோர்களே இங்கு வாழ்ந்துள்ளார்கள் என்பது கண்கூடு. புரியும்படி சொல்வதானால் நம் வாழ்வின் நோக்கம்  மருத்துவமனை செல்லாது செத்துப் போகாமல் இருப்பது. முடியுமா நம்மால் ? வார்த்தையை நன்கு கவனியுங்கள்..செத்து போதல் வேறு; மரணித்தல்,இயற்கை எய்துதல், உயிர் நீத்தல், இறைவனடி சேர்தல் இவை ஒவ்வொன்றும் வேறு ; வேறு ;அப்படியானால் நாம் பிழைத்தலில் இருந்து வாழ்தல் நோக்கி நகர வேண்டும். வாழ்தல் எப்படி இருக்க வேண்டும்? அஞ்சாது இருக்க வேண்டும். ஆரோக்கியமாக இருக்க வேண்டும்; உற்றார் உறவினர், நட்போடு இணைந்து இருக்க வேண்டும்  இறையோடு இணைய வேண்டும். இது தான்..வாழலாம் என்ற சொல் கூறும் விளக்கம். இன்னும் ஆழ்ந்து பார்த்தோமானால்,




அதிவீரராம பாண்டியர் என்ற புலவர் எழுதிய நூல்களுள் ஒன்று காசி காண்டம் என்பதாகும். இதனுள் மக்களின் கடமைகளை, நெறிகளை அவர் தொகுத்து தந்துள்ளார்.  மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் ஒன்பது சக மனிதர்களைப் பாதுகாக்க வேண்டும்; ஒன்பது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் காசி காண்டத்தில் குறிப்பிடுகின்றார்.

ஆசிரியர், தாய். தந்தை, மனைவி, குழந்தைகள், விருந்தினர்கள், காலையும் மாலையும் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்பவர்கள், புதியவர்கள், ஆகியோர்களையும் ஒளியையும் பாதுகாப்பவனே மனிதர்களில் பயன் மிக்கவன். இவ்வொன்பதையும் பாதுகாக்காதவன் மக்களுள் பயன் இல்லாதவன் என்று காசிக்காண்டம் குறிப்பிடுகின்றது.

குரவனைத் தாயைத் தந்தையை மனைவியை
குற்றமில் புதல்வனை விருந்தை
இரவு நண்பகலும் வழிபடுவோனை
அதிதியை எரியினை ஈங்குக்
கருதும்ஒன் பதின்மர் தம்மையும் நாளும்
கருணைகூர்ந்து இனிது அளித்திடாது
மருவும்இல் வாழ்க்கை பூண்டுளோன் தன்னை
மக்களுள் பதடிஎன்று உரைப்பர்

என்பது காசி காண்டத்தில் இடம்பெறும் பாடலாகும். இல்வாழ்க்கை மேற்கொள்பவர்களின் கடமை என்பது காசி காண்டம் காட்டும் ஒன்பதையும் பாதுகாத்து வாழும் வாழ்க்கை ஆகும். இந்தப் பாடலில் குரவர் என்ற நிலையில் ஆசிரியர்  ஒன்பது பேருள் முதல்வராக வைத்துப் போற்றப்படுகிறார். சமுதாயத்தில் ஆசிரியர் என்பவருக்குத் தரப்பட்டுள்ள இடம் எத்தகைய பெருமை வாய்ந்தது என்பது புலனாகும். பெற்றோர்களை மகிழ்ச்சியுடன் பாதுகாப்பது என்பது அடுத்து இடம்பெறுகிறது. இதனைத் தொடர்ந்து மனைவி, மக்கள், விருந்து என்று தொடரும் இந்தப் பட்டியலில் உள்ளவர்களை நாளும் கருணை கூர்ந்துப் பொருள்கள் அளித்து மகிழ்வுடன் பாதுகாத்து வந்தால், அதுவே மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்ததற்கான அடையாளம் ஆகும். இந்த அடிப்படை கடமைகளை நிறைவேற்றுவதே வாழலாம் என்பதன் கருத்தும் ஆகும்.

இதுபோன்று இல்வாழ்க்கை வாழுகின்ற மனிதனுக்குத் தேவையான ஒன்பது குணங்களையும் காசிகாண்டம் எடுத்துரைக்கிறது.

மெய்ம்மை, நற்பொறை, வெங்கொலை செய்யாது ஒழுகல்
மேவும் எக்கரணமும் அடக்கல்
செம்மைசேர் தூய்மை வரைவுறாது அளித்தல்
சீற்றம் நீங்குதல் களவின்மை
அம்மவென்று எவரும் அரற்றுதல் பரியா
அருள் செயல் ஆய ஒன்பானும்
வம்மென அமரர் எதிர் புகுந்து அழைப்ப
வானிடை விடுத்த தூது ஆமால்

என்பது இல்லறத்தாருக்கு வேண்டிய ஒன்பது குணங்களையும் எடுத்துரைக்கும் பாடலாகும்.


மனிதனாக வாழ்கின்றவனுக்குத் தேவையான குணங்கள் ஒன்பது என்பது அதிவீரராம பாண்டியரின் தெளிந்த கருத்தாகும். உண்மையைப் பேசுதல், பொறுமை, கொல்லாமை, புலன்அடக்கம், தூய்மை, மற்றவர்களுக்கு மனம் கோணாமல் பொருள்களை அளித்தல், கோபத்தை அடக்குதல், மனத்தால் கூட பிறர் பொருளை அடைய எண்ணாமை, மற்றவர்களின் துயரைக் கண்டு அதனைத் துடைத்தல் என்ற ஒன்பது குணங்களை உடையவனே மனிதன் எனப்படுவான். மனம் இருப்பவன் அனைவரும் மனிதன் அல்ல; மனத்தோடு வாழ்பவனே மனிதன் ஆவான். அடேங்கப்பா..வாழ்தலில் இவ்வளவு இருக்கா?என்று மூக்கின் மேல் விரல் வைப்பது நமக்குத் தெரிகின்றது, இந்த ஒன்பதும் வேண்டாம்.இன்னும் சுருக்கமாக கூறுங்கள் என்பது நீங்கள் கேட்பது நம் காதில் விழுகின்றது.

ஒருவன் தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, உயிர் உணர்ச்சிக்கோ துன்பம் தராத செயல்களும்,துன்பத்தைப் போக்கும் செயல்களும் கொண்டு இருந்தால் அவன் வாழ்வான் என்று பொருள் கொள்க.

மாறாக துன்பம் தரும் செயல்களை செய்து வந்தால் அவன் இங்கு பிழைத்துக் கொண்டிருக்கின்றான் என்று பொருள் கொள்க!

அடுத்து நாம் பார்க்க இருப்பது "நல்ல வண்ணம்"

இது வாழ்தலை இன்னும் சிறப்பாக வாழ வேண்டும் என்று உயர்வாக வாழ வேண்டும் என்ற நோக்கில் இங்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த பூமியில் நாம் நல்லபடியாக சிறப்பாக வாழலாம் என்று "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் " எடுத்துரைக்கின்றது. சரி...இந்த பதிகம் எப்போது, எங்கே, யாரால் பாடப்பட்டது போன்ற தகவல்களை அடுத்து வரும் பதிவுகளில் காணலாம்.

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே



- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

No comments:

Post a Comment