Subscribe

BREAKING NEWS

30 September 2018

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 8

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில்.

மூலவர்  -  வைஷ்ணவ நம்பி
தாயார்  -  குறுங்குடிவல்லி நாச்சியார்
தீர்த்தம்  -  திருப்பாற்கடல், பஞ்சதுறை


நூற்றிஎட்டு  திவ்யதேசங்களில் ஒன்றாகும். திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். இத்தலத்தினைப் பற்றி திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் அழகிய நம்பிராயர் என்றும் தாயார் குறுங்குடிவல்லி நாச்சியார் என்றும் அழைக்கப்படுகிறார்.






மூலவர் நம்பிராயரின் வலது புறத்தில் அருகில் நின்றான் என்ற பெயரில் சிவபெருமான் சன்னதி அமைந்திருப்பது இத்தலத்தின் மிகச்சிறப்பம்சமாகும். நின்ற, அமர்ந்த, நடந்த, கிடந்த, இருந்த என ஐந்து நிலைகளிலும் பெருமாள் இக்கோயிலில் காட்சி தருகிறார்.

வராஹ அவதாரம் கொண்டு திருமால் தனது நாயகியுடன் இத்தலத்தில் தங்கி, தனது பயங்கர வராஹ ரூபத்தை குறுங்கச் செய்தமையால் இத்தலம் குறுங்குடி ஆனது.

கோவில் வரலாறு :

ஒரு சமயம் இரண்யாட்சகன் என்ற அசுரன் பூமியை கொண்டு செல்ல முயல்கிறான். அப்போது விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்கிறார். அப்போது பூமித்தாய் இந்த பூமியிலுள்ள ஜீவராசிகள் பகவானை அடைய வழி கூறுங்கள் என வராகமூர்த்தியிடம் கேட்க, இசையால் இறைவனை அடையலாம் என்கிறார். ஒரு முறை பின்தங்கிய வகுப்பை சேர்ந்த மனிதனுக்கும், பூதம் ஒன்றிற்கும் பிரச்சனை ஏற்படுகிறது. 

பிரச்சனை முற்றி மனிதனைச் சாப்பிட பூதம் விரும்புகிறது. அதற்கு அந்த மனிதன் பூதத்திடம், இன்று ஏகாதசி. எனவே கைசிகம் என்ற விருத்தத்தில் பகவானை பாடிவிட்டு வருகிறேன். அதன்பின் நீ என்னை உண்ணலாம் என்று கூறுகிறான். ஏகாதசி தினத்தில் இத்தலத்தில் பாடியதால் அந்த மனிதனுக்கும், பாடலை கேட்டதால் பூதத்திற்கும் மோட்சம் கிடைத்தது.

திருக்குறுங்குடியின் அருகே உள்ள மகேந்திரகிரி மலையடிவாரத்தில் வசித்து வந்த தாழ்ந்த வகுப்பை சேர்ந்தவர் நம்பாடுவான். கோயில் மூலவரான அழகிய நம்பியைப் பார்க்க முடியாததற்காக மிகவும் வருத்தப்பட்டார். அப்போது பெருமாள் கொடிமரத்தை விலகி இருக்க சொல்லி நம்பாடுவானுக்குத் தாமே தரிசனம் தந்தார். இங்கு மற்ற கோயில்களைப் போலல்லாமல் கொடிமரம் விலகி இருப்பதை நாம் இப்போதும் காணலாம்.

சைவ கோயில்களில் பெருமாள் எழுந்தருளி இருப்பதும், வைணவ கோயில்களில் சிவன் எழுந்தருளி இருப்பதும் சைவ-வைணவ ஒற்றுமையை எடுத்துக்காட்டும். அதே போல் வைணவக் கோயிலான இங்கு கோயிலின் உள்ளேயே சிவன் கோயிலும், பைரவர் சன்னதியும் அமைந்துள்ளது.

கோயில் மூலவரான அழகிய நம்பிக்குப் பூஜை நடக்கும் போது, இங்குள்ள சிவனுக்கும் பூஜை நடந்து விட்டதா என்பதை அறிய,”சுவாமியின் பக்கத்தில் நிற்கும் அன்பர்க்கு குறையேதும் உண்டா” என்று பட்டர் கேட்பார். அதற்கு “குறை ஒன்றும் இல்லை” என பட்டர்கள் பதில் அளிப்பார்கள். இது இன்றும் நடைமுறையில் உள்ளது. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார், பெரியாழ்வார் என நான்கு நாயன்மார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. 



நம்மாழ்வாராக அவதரித்ததும் இந்த அழகிய நம்பி தான். திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்கப் பெருமாளிடம் மோட்சம் கேட்டபோது,”திருக்குறுங்குடி போ. அங்கு மோட்சம் கிடைக்கும்” என்றார். திருமங்கையாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்தது இத்தலம் தான்.  குரங்கம் என்றால் பூமாதேவி. பூமாதேவி இத்தல இறைவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு குரங்கச் க்ஷேத்திரம் என்ற பெயர் உண்டு.

நம்பியாற்றின் கரையில் அமைந்திருக்கும் இத்தலத்தின் தீர்த்தம் திருப்பாற்கடல். வராக அவதாரம் கொண்டு திருமால் தனது நாயகியுடன் இத்தலத்தில் தங்கி, தனது பயங்கர வராக ரூபத்தைக் குறுங்கச் செய்தமையால் இத்தலம் “குறுங்குடி” ஆனது. அதேபோல் திருமால் வாமன அவதாரம் எடுத்து ஆகாயத்தை அளந்த போது தனது திருவடி சதங்கையில் இருந்து உருவாக்கிய சிலம்பாறு இங்கு உண்டானதாக புராணம் கூறுகிறது.


இங்கு மூலவர் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் பஞ்சகேத விமானம்.

திருவிழா :

சித்திரை வசந்தோற்சவம், வைகாசி ஜேஷ்டாபிஷேகம், ஆவணி பவித்ர உற்சவம், புரட்டாசி நவராத்திரி விழா, ஐப்பசி ஊஞ்சல் உற்சவம், தை தெப்ப உற்சவம். பங்குனி பிரம்மோத்சவம்.

பிரார்த்தனை :

மோட்சம் வேண்டி இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன் :

தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்படுகிறது.

போக்குவரத்து வசதி :

திருநெல்வேலியிலிருந்து மேற்கு திசையில் 42 கி.மீ தூரத்தில் உள்ளது திருக்குறுங்குடி. திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் பஸ்சில் வள்ளியூர் சென்று, அங்கிருந்து திருக்குறுங்குடி செல்லலாம்.

அருகிலுள்ள ரெயில் நிலையம் : வள்ளியூர்

விசேஷங்கள் - இது திருமங்கையாழ்வார் பரமபதித்த ஸ்தலம். தனிக் கோயில் நாச்சியார்களின் உத்ஸவர்கள் பெருமாளுடன் ஏகாஸனத்தில் இருப்பதால் தாயார் ஸந்நிதிகளில் அர்ச்சனை கிடையாது. நின்ற நம்பி, கிடந்த நம்பி இவர்களுடைய ஸந்நிதிகளக்கு நடுவில் சிவன் ஸந்நிதியும் பைரவர் ஸந்நிதியும் உள்ளன. பெருமாள் மடைப்பள்ளி பிரஸாதங்களே சிவனுக்கும் நிவேதனம் செய்யப்படுகின்றன. "இருந்த நம்பி" ஸந்நிதியிலுள்ள பெருமாளை வைகுந்த நாதன் என்கிறார்கள். ஸ்ரீ மணவாளமாமுனிக்கு ஸந்நிதி இருக்கிறது. இக்கோவிலிலிருந்து சுமார் 3 ஃபர்லாங் தூரத்தில் திருப்பாற்கடல் என்ற ஓடையின் கரையில், திருப்பாற்கடல் நம்பி ஸந்நிதி உள்ளது. இவ்வூரிலிருந்து சுமார் 6 1/2 மைல் தூரத்தில் உள்ள குன்றின்மேல் மலைமேல் நம்பி ஸந்நிதி உள்ளது. ஊருக்குக் கிழக்கே, ஆற்றின் அருகில் வயல்வெளிகளில் "திருமங்கையாழ்வார் திருவரசு" என்ற சிறிய கோவில் இருக்கிறது. ஊரிலிருந்து சுமார் முக்கால் மைல் தூரத்தில் திருப்பாற்கடல் ஆற்றின் நடுவில் திருப்பரிவட்டப்பாறை என்ற பாறை மேல் உடையவர் ஸந்நிதியிருக்கிறது. விரோதிகள் உடையவரைக் கொன்றுவிட ஏற்பாடு செய்தபோது வடுக நம்பி என்ற பெயருடன் பெருமாள், இவரை இந்தப்பாறை மீது கிடத்திக் காப்பாற்றினாராம். பெருமாள் உடையவருக்கு ஸிம்ஹாஸனமிட்டு, தான் அருகில் சீடனாக நின்று திருமந்திரார்த்த உபதேசம் பெற்றதால் 'வைஷ்ணவ நம்பி' என்றழைக்கப்படுகிறார். கைசிக த்வாதசியன்று நம்பாடுவான் என்ற பக்தர் இத்தலத்தில் தன் புண்ணியத்தில் ஒரு பாகத்தை தன்னை பக்ஷிக்க வந்த ப்ரம்மராக்ஷஸனுக்குக் கொடுத்து இத்தலத்தை ரக்ஷித்தான் என்று வராஹபுராண வரலாறு. இன்றும், இந்த ஐதீஹம் நாளைக்கும் நாடக ரூபமாக இங்கே கைசிக ஏகாதசியன்று ராத்திரி நடக்கிறது. யமபட்டணம் இந்த தலத்திலிருந்து கூப்பிட்டதூரத்தில் இருப்பதாக ஐதீஹம்.
இந்த ஸந்நிதி திருக்குறுங்குடி ஜீயர் ஆதிக்கத்தில் உள்ளது.
பகவான் வாமன த்ருவிக்ரம அவதாரம் எடுத்து ஆகாயத்தை அளந்த போது திருவடி சதங்கையிலிருந்து சிலம்பாறு உண்டானதாக ஸ்தல வரலாறு.
ஒரு ராஸஷன் ப்ராம்மணனைக் கொல்லவர, கொல்வது பாவம் என்று ப்ராம்மணன் சொல்ல, அது என் தொழில் என்று ராக்ஷஸன், விவாதம் முற்றியதால், பகவான் வேடம் போல் வேஷம் பூண்டு வந்து, அவர்களுக்கு உபதேசித்த படி திருப்பாற்கடல் தீர்த்தத்தில் ஸ்நாநம் செய்து ரிஷிகள் உபதேசம் பெற்று அகஸ்தியரை வணங்கி, இருவரும் துவேஷத்தை விட்டு, முக்தியடைந்ததாக ஸ்தலபுராணம்.
இக்கோவிலை அடுத்து நாம் செல்ல இருப்பது "நம்பி மலை" ஆம்  இதுவரை எட்டு பதிவுகளைத்தொடர்ந்து எழுத காரனமாக இருந்த எம்பெருமான் நம்பி என்கிற நம்பி பெருமாளை தரிசிக்க இருக்கின்றோம்.

நம்பிமலை தரிசனம்  பகுதி 9இல் நாம் காணலாம் .

நன்றி .




29 September 2018

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 7.

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில்

நூற்றி எட்டு  வைணவ திவ்ய தேசங்களில் இது 48-வது திவ்ய தேசம் ஆகும். இத்தலத்து இறைவனின் பெயர் ‘வானமாமலை’ என்கிற ‘தோத்தாத்திரி நாதர்’. உற்சவர் தெய்வநாயகப் பெருமாள்.

இத்தலத்திற்கு திருச்சிரீவரமங்கை, திருவரமங்கை, திருச்சிரீவரமங்கள நகர், தோத்தாத்திரி சேத்திரம், வானமாமலை என பல பெயர்கள் உள்ளன. 108 திவ்ய தேசங்களில், எட்டு ஆலயங்கள் சுயம்பு தலமாகும். அந்த எட்டு தலங்களில் இந்த ஆலயமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


காரி மன்னன் என்பவன் ஆழ்வார்திருநகரி என்னும் ஊரை ஆண்டு வந்தார். மக்கள் அவர் ஆட்சியில் மகிழ்ச்சியுற்றிருந்தாலும் அவருக்கு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் மட்டும் தீர்ந்தபாடில்லை. பரிகாரமாக நிறைய தான தர்மங்கள் பண்ணியும் பலன் ஏதுமில்லாமல் தம்பதிகள் தவித்து வந்தனர். அப்போது அந்தணர் ஒருவர் மன்னனைக் காண வந்தார். மன்னரிடம் அந்தணர், மன்னா… நான் தங்களுக்கு ஒரு உபாயம் சொல்லி விட்டுப் போகலாம் என்று வந்துள்ளேன் என்றார். மன்னர், சுவாமி தயை கூர்ந்து கூறுங்கள். நிச்சயம் செவி மடுப்போம் என்று சொல்ல, அந்தணர் அச்செய்தியை எடுத்துரைத்தார். அது, மன்னா… தாங்கள் திருக்குறுங்குடியில்  உள்ள திருமாலை வணங்கி வாருங்கள். உங்களின் குழந்தைப் பாக்கியம் கிடைக்க நல்லதோர் வழி பிறக்கும் என்றார்.
அந்தணர் கூற்றுப் படி மன்னரும் மகாராணியும் திருக்குறுங்குடியில் உள்ள அழகிய நம்பிராயரை வழிபட்டு வந்தனர். அன்று இரவே மன்னரின் கனவில் அழகிய நம்பிராயர் தோற்றமளித்தார். காரி மன்னா… இங்கிருந்து கிழக்கு திசையில் செல்லுங்கள். அங்கு நான்கு ஏரிகள் சூழ்ந்த பகுதியில் எறும்புகள் சாரை சாரையாகச் செல்லும். அதன் நேர் மேலே கருடன் வட்டமிட்டுக் கொண்டிருப்பான். அந்த இடத்தில் தோண்டினால் எனது தம்பி வானமாமலை தோற்றமளிப்பான். அவன் உனக்கு வேண்டியதை அருளுவான்.

அதன் படி அவ்விடத்தை மன்னர் வந்தடைந்தார். அந்த இடத்தை தோண்டியபோது குருதி பொத்துக் கொண்டு வந்தது. 18 மூலிகைகளைக் கொண்டு தடவிய பிறகே குருதி நின்றது. ஆகையால் தான் இக்கோவிலில் எண்ணைக்காப்பு  என்ற வழிபாட்டு முறை தினந்தோறும் பின்பற்றப்பட்டு வருகிறது. கோவிலை மேற்கொண்டு கட்டும் பணியை மன்னர் மேற்கொண்டார் என்பது சொல்லப்படுகிற வரலாறு.







தோதாத்ரி நாதர், தனது இடது காலை மடித்துக்கொண்டும், வலதுகாலை தொங்கவிட்டு தரையில்படும்படியும் ஆதிசேஷன் குடைபிடித்த வண்ணத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கூடிய திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார். அவ்வாறு வீற்றிருக்கின்ற காரணத்தினாலேயே,  இக்கோவில் பூகோள வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. 



 ஊர்வசி, திலோத்தமா ஆகிய இருவரும் சாமரம் வீசுவது போலவும், மேலும் சூரியன், சந்திரன், ப்ருகரிஷி, மார்க்கண்டேய ரிஷி முதலானோரும் மூலவர் தோதாத்ரி நாதரின்  இருபுறமும் வீற்று இருக்கிறார்கள்.மூலவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வது இக்கோவிலின் சிறப்புகளுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.இக்கோவில் கிமு 1000 -ல் தோன்றி இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது.
 வைணவ ஸ்வயம் ஷேத்ரங்கள் என்ற பெருமையை இந்தியாவின் எட்டு தளங்கள் பெற்றுள்ளதை அறிந்து கொள்வோம்.
அவை ஸ்ரீரங்கம், திருப்பதி,புஷ்கரம், தோதாத்ரி (நான்குநேரி கோவில்), பத்ரிநாராயணா, நைமிசரண்யம், சாலிகிராமம் மற்றும் ஸ்ரீமுஷ்ணம்.

உற்சவர்:


இக்கோவிலின் உற்சவராக தெய்வநாயகன் காட்சி அளிக்கிறார். ஸ்ரீவரமங்கை தாயார் வட வேங்கடத்தில் வீற்றிருந்தார். வெங்கடேசப் பெருமாளுக்கு திருமண உற்சவம் செய்ய வேண்டும் என்று எண்ணிய போது, ஸ்ரீ ராமானுஜ ஜீயரின் கனவில் ஸ்ரீவரமங்கைக் காட்சி அளித்து, தான்  இறைவனைக் கைபிடித்து விட்டதாகத் தெரிவித்தார். ஆகையால் தான் இங்கு வானமாமலைப் பெருமாள் தெய்வ நாயகனாக  காட்சி அளித்தார். அதன் படியே இங்கு தெய்வநாயகனுக்கும் ஸ்ரீவரமங்கைக்கும் திருமண உத்சவம் நடக்கின்றது.
நான்கு ஏரிகள் சூழ்ந்த பகுதியில் அமைந்ததால் இவ்வூருக்கு நான்குநேரி என்ற பெயர் வந்தது.
கோவிலின் முகப்பில் ஏழு அடுக்குகளைக் கொண்ட கோபுரம் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோவில் உள் பிரகாரம், வெளி பிரகாரம்
என இரு பிரகாரங்களை உள்ளடிக்கி உள்ளது. கோவிலில் நுழைந்தவுடன் வலது பக்கம்  மணவாள மாமுனிகள் சன்னதி அமைந்துள்ளது. சற்று உள்ளே சென்றவுடன் கொடிமரம் உள்ளது. உள் பிரகாரத்தில் ஸ்ரீவரமங்கை தாயார், ஆண்டாள் சன்னதி, ஸ்ரீ ராமர் சன்னதி, ஆழ்வார்கள், கருடன், உடையவர், பிள்ளை யோகாச்சாரியார், வேணு கோபாலன், லக்ஷ்மி நரசிம்மர், சக்கரத்தாழ்வார், லக்ஷ்மி வராகர்,விஷ்வக் சேனர், மற்றும் சில தனி தெய்வங்கள் சன்னதி அமைந்துள்ளது.
வெளிபிரகாரத்தில் தான் எண்ணெய்க்கிணறு உள்ளது. தினந்தோறும் எண்ணெய்காப்பு (அபிஷேகம்) செய்கிற எண்ணெய்யை இக்கினற்றில்தான் சேமித்து வைப்பார்கள். இந்த எண்ணெய், சர்வரோக நிவாரணியாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் செல்வது வழக்கம். எண்ணெய்க் கிணறு அருகில் அகத்தியர் சிலை உள்ளது.

இக்கோவிலை தரிசித்தபின்னர் நாம் செல்லவிருப்பது திருக்குறுங்குடியில் உள்ள 
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில்
நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 8 இல் நாம் காணலாம் .

நன்றி.




28 September 2018

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 6.



கல்யானத்தடை அகலும் ஸ்ரீ சௌந்தர்யநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ அவி முக்தீஸ்வரரை தொடர்ந்து நாம் சென்றது ,

திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் ஆலயம் 

Image result for நெல்லையப்பர் கோயில்
 முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் அவர் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம். அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். இன்றும் மூல லிங்கத் திருமேனியின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம். சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.
கோவிலின் முகப்பு வாயிலை நோக்கிச்செல்லும்போது 


கோவிலின் முகப்பு வாயில்


 முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராக திகழ்ந்தார். தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் தினமும் வீடுவீடாக சென்று நெல் சேகரித்து இறைவனின் நைவேத்தியத்திற்காக பெற்ற நெல்லை சந்நிதி முன் உலரப் போட்டு குளிக்கச் செல்வது அவரது வழக்கம். அவ்வாறு செய்து வந்த நாளில் ஒரு நாள் திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழை தண்ணீரில் நெல் நனைந்து விடப்போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் நெல்லை கொண்டு செல்லாத படி இருப்பதையும் நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு வியப்புற்றார். மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சரியப்பட்ட வேதபட்டர் இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தை காண விரைந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் வியப்புற்றார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலிநாதர் என்றும், அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி என்றும் அழைக்கலானார்கள்.
கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தியைக் காணலாம். அடுத்துள்ள கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவரைக் காணலாம். மூலவரைக் காண்பதற்கு முன் சுமார் 9 அடி உயரம் உள்ள மிகப்பெரிய விநாயகரைத் தரிசிக்கலாம்.
ஸ்தல விருட்சம் மூங்கிலை நம் நண்பர்கள் ஆவலுன் பார்க்கும் காட்சிகள் 

பிரகாரங்களை சுற்றி வரும்போது 

மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல கோஷ்ட மூர்த்திகளாக தக்ஷிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோரையும், மற்றும் சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் ஆகியோரை நாம் காணலாம். கோவிந்தப் பெருமாள் சந்நிதியும் சிவனுக்கு அருகிலேயே அமைந்துள்ளது.
இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே "ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்" உள்ளன. 
ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்" 

ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்" 

இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும்.நாம் இதனை விரல் நகங்களால் தட்டிப்பார்தோம் ஒவ்வொரு தூணிற்கும் ஒவ்வொரு ஒலி தோன்றுகிறது உண்மைதான்  இந்தப் பிரகாரத்தில் தான் "தாமிர சபை" உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்டலக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.

63 நாயன்மார்களின் சிலைகள்


மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியதாகவும் அகலமாகவும் அமைந்துள்ளது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்ல வழி உள்ளது. மீண்டும் அம்மா மண்டபம் வழியாகத் திரும்பி வந்தால், மூன்றாவது பிரகாரத்தை அடையலாம். இல்லையெனில் அம்மன் சந்நிதியில் இருந்து அப்படியே வெளியேறவும வழி உண்டு.
கோயிலின் உள்ளே பொற்றாமரைக் குளம்

கோயிலின் உள்ளே பொற்றாமரைக் குளம்
மூன்றாவது பிரகாரத்தில் முருகப்பெருமானுக்கு தனியாக பெரிய சந்நிதி உள்ளது. ஒரே கல்லில் ஆறுமுகமும் பன்னிரு கரங்களும் கொண்டு மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருபுறமும் வள்ளி தெய்வானையுடன் ஆறுமுக நாயினார் என்னும் திருநாமத்துடன் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். 
ஆறு முகமுடைய முருகன் சன்னதி 



திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம் திருப்புகழ் வைப்புத் தலங்களில் ஒன்றாகும்.
கோயிலின் உள்ளே பொற்றாமரைக் குளம் உள்ளது. நாற்புறமும் நல்ல படிகளுடனும், நடுவில் நீராழி மண்டபத்துடனும் இந்த தெப்பக்குளம் உள்ளது. இக்கோயிலில் ஊஞ்சல் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், வசந்த மண்டபம், சங்கிலி மண்டபம், சோமவார மண்டபம், நவக்கிரக மண்டபம், மகா மண்டபம் போன்ற மண்டபங்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்குகின்றன.

 நெல்லையப்பரை தரிசனம் செய்தாகிவிட்டது அடுத்து என்ன ?சரியா கணிச்சிங்க ஹல்வா வாங்கவேண்டியதுதான் பாக்கி ஓட்டுனர் அண்ணாவிடம் கேட்டோம் நக்கு தெரிஞ்சி இருட்டுக்கடை ஹல்வா நல்லாஇருக்குமின்னு கேள்வி..ஆனா அந்த நேரம் காலை பத்துமணி இந்த கடை இறவு சுமார் ஆறுமணிக்கு திறப்பாங்களாம் அதனாலதான் அதுக்கு பேரு இருட்டுகடையாம் ,என்னபன்னறது இருக்கறதுலேயே ஒரு நல்ல கடையா சொல்லுங்கண்ணே என கேட்டோம் ,ஏன்னா அவரு உள்ளூர்வாசி அவருக்கு நல்லாவே தெருஞ்சிருக்கும்அவரும் ஒருநல்ல கடையைத்தேடி நமக்கு காண்பித்தார் நாம் அனைவரும் சென்று அவரவருக்குத்தேவையான ஹல்வாக்களை வாங்கி வைத்தோம் ,பின்பு அருகில் உள்ள ஹோட்டலுக்கு சென்று காலை உணவருந்தியபின்னர் வாகனத்லேறி புறப்பட்டோம்.. 
அடுத்து நாம் செல்ல இருப்பது நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் இக்கோவிலைப்பற்றி நாம் 
நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 7இல் காணலாம் .
நன்றி.

27 September 2018

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 5




நவகைலாயங்களில் மூன்றாவது கைலாயமான கோடகநல்லூர் ஸ்ரீகைலாயநாதர் திருக்கோயிலை தரிசனம் செய்தபின்னர் அடுத்து நாம் சென்றது, 

ஸ்ரீ சௌந்தர்யநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ அவி முக்தீஸ்வரர். 




கல்யானத்தடை அகலும் ஸ்ரீ சௌந்தர்யநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ அவி முக்தீஸ்வரர் கோடகநல்லூர். 


இக்கோவில் ஸ்ரீ பெரியபிறான் என்னும் பிரஹன்மாதவர் பெருமாள் கோவிலுக்கு நேர் எதிரே ஒரு அறை கிலோமீட்டர் தூரத்தில் ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது இதுவும் தாமிரபரணி ஆற்றின் அருகிலேயே ஒட்டி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.முக்கியமாக திருமனத்தடைகளை போக்கும் ஒருத்திருத்தலமாக அமைந்துள்ளது.இது மேற்கு பார்த்த சிவ ஆலயமாகும் .

  



ஜோதிடத்தில் திருமண தோஷத்தை இரண்டு வகையாகப் பார்க்க வேண்டும். அதாவது ஒரு சில ஜாதகங்களுக்கு திருமணமே தேவையில்லை என்ற அமைப்பு இருக்கும். அதற்கு காரணம் சூரியன், செவ்வாய், புதன், சனி ஆகிய கிரகங்கள், 10ஆம் வீட்டில் சேர்க்கை பெற்றிருந்தால் அவர் சன்னியாசம் செல்வார் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

அதுபோன்ற அமைப்பு உடையவர்கள் சிறுவயது முதலே காதல், கல்யாணம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இருப்பார்கள். எனவே, அவர்களுக்கு திருமணம் தேவையில்லை. 

ஆனால், ஒரு சிலருக்கு திருமண தோஷம் இருந்தாலும், மனதில் திருமண ஆசை இருக்கும். ஆனால் பெண் அமையாமல்/கிடைக்காமல் அவதிப்பட நேரிடும். திருமண வயதிற்குப் பின்னரும் திருமணம் 
நடைபெறாமல் இருப்பதும் ஒரு வகையில் தோஷம்தான். 
இதுபோன்ற நிலையில் இருப்பவர்கள், ஏற்கனவே மணம் முடித்துப் பிரிந்தவர்கள், விதவைகளைத் திருமணம் செய்து கொள்ளலாம். அப்படிச் செய்யும் போது தோஷம் நிவர்த்தியாகி வாழ்க்கையும் சிறப்பானதாக அமையும் என சில ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அப்படிப்பட்ட ஜாதக அமைப்பு உடையவர்கள் எதுபோன்ற பரிகாரங்களை இங்கு செய்யவேண்டும் என அர்ச்சகரிடம் கேட்டறிந்து அதன்படி  இக்கோவிலில் பரிகாரம்  செய்துகொண்டால் மிக விரைவில் திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது .

தாமிரபரணி ஆற்றின் அருகிலேயே அமைந்துள்ளது வெற்றி கணபதி என்னும் விநாயகப்பெருமான்,அவரின் அனுமதிபெற்று கோவிலின் உள்ளே  நுழைந்து சிவபெருமானை வழிபட்டோம் மிகவும் அமைதியான சூழல் மனதிற்கு நிம்மதியாகவும் உடலிற்கு தாமிரபரணி ஆற்றின் குளுமையும் நன்றாகவே அனுபவிக்க முடிந்தது.

கல்யானத்தடை அகலும் ஸ்ரீ சௌந்தர்யநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ அவி முக்தீஸ்வரர் திருக்கோவில் 

கல்யானத்தடை அகலும் ஸ்ரீ சௌந்தர்யநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ அவி முக்தீஸ்வரர் திருக்கோவில் 




தாமிரபரணி ஆற்றின் அருகில் அமைந்துள்ள வெற்றிகனபதி 

கல்யானத்தடை அகலும் ஸ்ரீ சௌந்தர்யநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ அவி முக்தீஸ்வரர் திருக்கோவில் 


கோவிலின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது ஸ்ரீ வள்ளி தெய்வானையுடன் எம்பெருமான் முருகன்.அந்த இடத்தில் ஒரு விழாக்கோலம் பூண்டிருந்தது என்ன நடக்கிறது என்று போய் பார்க்கலாம் என்று நினைத்து அங்கே சென்றோம் . நமது மகளிர் குழுவினர் அனைவரும் சேர்ந்து ஒரு திருமணத்தை நடத்திக்கொண்டிருந்தார்கள். 






என்ன நடக்குது இங்க ?வாங்க வாங்க !!! மனமக்கள வாழ்த்திட்டு போங்க என்று சொல்லி நம் கையில் அட்சதையை தந்தார்கள் 
.நம் மகளிர் குழுவினர் .ரொம்ப சந்தோசமான காரியத்தைதான் பண்ணியிருக்காங்க,திருமண  தோஷம் நீக்கும் இந்த சன்னதியில் 
திருமணம் தோஷம் நீங்கி இந்த இளம் தம்பதியினர் திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறார்கள்  நீண்டகாலம் அருளும் பொருளும் ஆரோகியமும்  பெற்று நீண்டகாலம் வாழ நாமும் நம் தளத்தின் சார்பாக வாழ்த்துவோம் .
"வாழ்க வளமுடன் " 
தெற்க்கே தட்சணாமூர்த்தி சன்னதியும் .
வடக்கே ஸ்ரீ பைரவர் சன்னதியும் அமைந்துள்ளது. அவற்றை நீங்கள் புகைப்படத்திலும் காணலாம் .
 சரி திருமண தோஷம் போக என்ன செய்வது :-
ஆண் பெண் இருவரது ஜாதகத்திலும் திருமணத்தைப் பற்றி அறிய லக்னத்துக்கு ஏழாம் இடத்தை ஆராய்வார்கள் ஏழாம் இடத்தில் எந்த கிரகம் இருக்கிறதோ அந்த கிரகம் தான் திருமணத்தை கைகூட்டும் அதன்படி தசா புக்தி அந்தரம் ஆகியவற்றில் ஏழாம் வீட்டிற்குரிய கிரகம் நடத்தும் காலத்தை அறிந்து அந்தக் காலகட்டத்தில் திருமண பேச்சை நடத்தினால் ஆண் பெண் இருவருக்கும் தடையில்லாமல் திருமணம் நடக்கும்
7ஆம் வீட்டிற்குரிய கிரகம் திருமணம் நடக்க காரணமான கிரகமாக இருந்தாலும் சுக்கிரனுக்கும் முக்கிய பங்கு உண்டு சுக்கிரன் கடகம் சிம்மம் ஆகிய வீடுகளில் பகையாகவும் கன்னி வீட்டில் நீசமாகவும் வருகிறார் இந்த வகையில் ஜாதகம் அமைய பெற்றவர்களுக்கு சுக்கிரனாலும் திருமண தோஷம் ஏற்படும் எனவே திருமண தோஷம் உள்ள ஆண் பெண் இருவரும் கீழ்கண்ட பரிகாரத்தை செய்ய 90 நாட்களில் திருமண தோஷம் நீங்கும் திருமணம் தடையில்லாமல் நடக்கும்
பரிகாரம்-1
உங்கள் பகுதியில் அமைந்துள்ள துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக்கிழமை விரதமிருந்து 27 வாரம் ராகு காலத்தில் நெய்விளக்கு போட்டுவர திருமண தோஷம் நீங்கும் 90 நாட்களில் திருமணம் நடக்கும்
பரிகாரம்-2
தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருமணஞ்சேரி சென்று அங்குள்ள சுந்தரேஸ்வர்ர் மற்றும் அம்பாளை வழிபட்டு வந்தால் 90 நாட்களில் திருமணதோஷம் நீங்கும்
பரிகாரம்-3 [பெண்களுக்கு மட்டும்]
திருமண தோஷம் உள்ள பெண்கள் தங்கள் உறவுகளில் ருதுவாகாமல் கன்னியாக உள்ள [வயது11முதல்13க்குள்] மங்கையை ஒரு வியாழக்கிழமை தங்கள் வீட்டிற்கு வரவழைத்து சைவ உணவு விருந்து கொடுக்க வேண்டும் விருந்து முடிந்த்தும் சந்தனம் மற்றும் மஞ்சள் வண்ண ஜாக்கெட் துணி இரண்டும் அதனோடு ஐந்து மஞ்சள் கிழங்கு குங்கும்ம் கண்ணாடி வளையல்கள் மூன்று முழம் மல்லிகைப்பூ ஆகியவற்றோடு காணிக்கையும் ஒருதட்டில் வைத்து விருந்து சாப்பிட்ட பெண்ணை கிழக்கு முகமாக நிற்கச் சொல்லிக் கொடுக்கவேண்டும் கொடுத்த தட்டை திரும்ப வாங்க கூடாது இவ்வாறு செய்த 90 நாட்களுக்குள் திருமணம் முடியும்
களத்திர தோஷம் நீங்க…..
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு 7ஆம் வீட்டிற்குரிய கிரகம் 3ஆம் வீட்டில் வருமேயானால் களஸ்திர தோஷமாகும்
அதேபோல லக்னத்துக்கு 7 க்குடைய கிரகம் 5ஆம் வீட்டிற்கு வந்தாலும் களத்திர தோஷம் ஆகும்
மேலும் லக்னத்துக்கு 10 க்குடைய கிரகம் 7வந்தாலும் களஸ்திர தோஷமாகும் மேற்கண்ட தோஷம் ஆண் பெண் இருவருக்கும் வரும் இப்படிப்பட்ட ஜாதகம் அமைந்தவர்களுக்கு இருதாரம் என்றும் அறியலாம் இந்த களஸ்திர தோஷம் காரணமாக திருமணம் தடைப்படும் இந்த தோஷத்தை கீழ்க்கண்ட எளிய பரிகாரம் ஆலயப் பரிகாரம் வாயிலாக நீக்கி மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை அடையலாம்.
பரிகாரம் [பெண்களுக்குமட்டும்]
ஒன்பது செம்பருத்திப்பூக்கள் ஒரு சிவப்புநிற ஜாக்கெட் துணி 27 கொண்டைக் கடலைகள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும் ஒரு வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை காலையில் வீட்டை கோமியம் தெளித்து சுத்தம் செய்த பின் சிவப்பு ஜாக்கெட் துணியில் செம்பருத்திப்பூ மற்றும் 27கொண்டைக்கடலைகளை வைத்துகட்டி பூஜை அறையில் வைக்க வேண்டும் [ மஞ்சள் துணியில் தங்களது குலதெய்வத்திற்குத் தனியே காணிக்கை எடுத்து வைக்க வேண்டும்] பகல் முழுவதும் விரதமிருந்து மாலையில் யாருக்கும் தெரியாமல் அந்த முடிச்சை எடுத்துச்சென்று தெப்பகுளம் கண்மாய் ஆற்றுபடுக்கை போன்ற நீர்நிலைகளில் போட்டுவிட்டுவர வேண்டும் இவ்வாறு செய்தால் களஸ்திர தோஷம் நீங்கும் திருமணம் நடக்கும்
பரிகாரம் [ஆண்- பெண் இருவருக்கும்]
வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதிக்கு செவ்வாய்கிழமையில் சென்று கோவில் அர்ச்சகரிடம் களஸ்திர தோஷம் நீங்க வழிபாடு செய்ய சொல்லி வழிபட்டுவர வேண்டும் சந்நிதியில் கொடுக்கும் பிரசாத்த்தை[ தீருநீறு குங்குமத்தை] பூஜைஅறையில் வைத்து வணங்கிவர வேண்டும் இவ்வாறு செய்த 90வது நாளில் களஸ்திர தோஷம் முற்றிலுமாக நீங்கிவிடும் திருமணம் நடக்கும் நீண்ட ஆயுளுடன் வாழ்வர்.திருமணத்திற்கு பிறகு தம்பதி சகிதம் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதிக்குச் சென்று வழிபட்டுவர வேண்டும் [ களத்திர தோஷம் முற்றிலுமாக நீங்கி மேன்மையுறலாம்]
கணவன்- மனைவி பிரிந்துவாழும் தோஷம் நீங்க…….
சில குடும்பங்களில் திருமணம் நடந்த சில காலத்துக்குள் கணவன் மனைவிக்கிடையே பல்வேறு காரணங்களால் சண்டை ஏறபட்டுவிடுகிறது அதனை தொடர்ந்து பிரிந்து வாழ்கின்றனர் பிரிந்தவர்கள் கூடிட கணவன் மனைவி இருவருமே தனித்தனியாகப் போலி மந்திரவாதி மாந்திரீகத்தின்மீது நம்பிக்கை வைத்து அவர்களை நாடுகின்றனர் அதற்காக பல ஆயிரம் ரூபாய்களை அவர்களிடம் கொடுத்தும் பயனில்லாமல் போகின்றது இவர்கள் ஒன்று சேர ஒரு எளிய பரிகாரத்தை இங்கு காண்போம்
கணவனை பிரிந்து வாழும் மனைவி தன் கணவன் பயன்படுத்திய ஆடை அல்லது கைக்குட்டை போன்ற ஒரு துணியை எடுத்துக் கொண்டு அதில் 27 கொண்டைக் கடலையை வைத்து முடிய வேண்டும் [ கணவரின் துணி கிடைக்காதவர்கள் ஒரு மஞ்சள் துணியில் முடியலாம் ]அதனை தான் பயன்படுத்தும் தலையணைக்கு கீழ் வைத்து உறங்க வேண்டும் தொடர்ந்து 27 நாட்களுக்கு அந்த முடிச்சை வைத்து உறங்கி 27 நாட்கள் முடிந்த மறுநாள் காலையில் அதனை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு பிரிந்து சென்ற என் கணவரை கொண்டு வந்து சேர் குருபகவானே என்று108 முறை சொல்ல வேண்டும் பின்பு அதனைத் தண்ணீரில் போட்டுவிட வேண்டும் இவ்வாறு செய்த 90 நாட்களுக்குள் பிரிந்து சென்ற கணவர் வந்துவிடுவார்.
மனைவியைப் பிரிந்து வாழும் கணவன் தங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் இரண்டு பாம்புகள் இணைந்த நிலையில் உள்ள சிலையை வணங்கிவர வேண்டும் தொடர்ந்து 90 நாட்களுக்கு வணங்கி வர பிரிந்து சென்ற மனைவி எந்த மறுப்பும் இல்லாமல் வெறுப்பு விலகி நீங்கள் அழைக்காமலேயே வந்து உங்களுடன் சேர்ந்து வாழ்வார்







என்ன நண்பர்களே இந்த பதிவினை படிக்கும் நீங்களும் இதுபோன்ற திருமண தோஷம் இருப்பதாக நினைத்தால் இத்திருத்தலத்திற்கு ஒருமுறை சென்று வாருங்கள் ...அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துவோம் ..


அடுத்து நாம் தரிசிக்க இருப்பது திருநெல்வேலி சென்று நெல்லையப்பரை பார்க்கலாம்  . 

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 6 இல் நாம் காணலாம் .

நன்றி.