Subscribe

BREAKING NEWS

02 February 2021

பழைய சீவரம் மலைக்கோயில்...

 

பழைய சீவரம் மலைக்கோயில்

பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு இம்மூன்றும் சங்கமிக்கும் இடத்தின் வடகரையில் மலைக்கோயில் அமைந்துள்ள கிராமம் பழையசீவரம்.  செங்கல்பட்டிலிருந்து காஞ்சீபுரம் செல்லும் சாலையில் பழைய சீவரம்  பேருந்து நிறுத்தத்திற்கு  அருகில் உள்ள சிறிய மலைமேல் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. 


தைத்திங்கள் இரண்டாம் நாள் இவ்வுற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது.  பொங்கலன்று இரவு காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 70 கி.மீ தூரம் பயணம் செய்து பழைய சீவரத்தை அடைகின்றார் காஞ்சி வரதர்.








சீவரம்.  ஊர் பெயரிலேயே பழைய என்ற சொல் உள்ளது. பல்லவர் காலம் தொட்டு பழைமை மிக்க ஊராக பழைய சீவரம் திகழ்ந்துள்ளது. முதலாம் பராந்தக சோழன் காலம் (கி.பி.907-957) இவ்வூர் முற்கால சோழரது ஆட்சியில் இருந்துள்ளது. கோப்பரகேசரி முதலாம் பராந்தகனின் 15வது ஆட்சி கல்வெட்டு (கி.பி.922) இவ்வூரில் கிடைத்துள்ளது. 

இவ்வூர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி. 1080-1) சீயபுரம் என வழங்கப்பட்டது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் சீயபுரம் என்ற ஊர் திரிபுவன வீர சதுர்வேதி மங்கலம்  என்று மாற்றப்பட்டுள்ளது. திரிபுவன வீரன் என்பது மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய விருது பெயராகும். இடைச்சோழர் காலத்தில் ராஜேந்திர சோழன் பெயரில் ராஜேந்திர சோழ விண்ணகர் என்று அழைக்கப்பட்டுள்ளது. இவ்வூர் இறைவன் ராஜேந்திர சோழ விண்ணகர ஆழ்வார், திருமாலிருஞ்சோலை ஆழ்வார் என்று சோழர் காலத்தில் அழைக்கப்பட்டுள்ளார். கி.பி.1729-ல் ஜீயபுர லக்ஷ்மி நரசிம்மர் என இறைவன் வழங்கப்பட்டுள்ளார். சோழர்கள் முதல் தனி நபர்கள் வரை பலர் இக்கோயிலுக்கு தானம் தந்துள்ளனர்.

சுமார் 300 வருடங்களுக்கு முன்னர் வட இந்தியர்கள் யாத்திரை வந்தனர். அதில் ஒருவருக்கு தீராத வயிற்றுவலி இருந்திருக்கிறது. இங்கு வரும்போது இறைவன் கனவில் தோன்றி, இவ்விடத்தில் ஒரு மண்டலம் தங்கினால் நோய் குணமாகும் என்று கூறியுள்ளார். அதன்படியே இங்குள்ள பிப்பிலி மரத்தினடியில் தங்கி, ஆற்றில் நீராடி ஒரு மண்டலம் வழிபட்டிருக்கிறார். நோயும் நீங்கி இருக்கிறது. அதன் பிறகு கோயிலின் ஒரு முக்கிய பிரமுகராக அவர் இருந்திருக்கிறார்.

பழைய சீவரம் இது ஒரு மலைக்கோவிலாகும் . கோவில் வரை அனைத்துவிதமான வாகனங்களும் சென்றுவர பாதை உள்ளது. மூலஸ்தானத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் மேற்கு திருமுகமாக வீற்றருள்கிறார். இக்கோயில் மூலஸ்தானம், விமானம், அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், கொடிமரம், பலிபீடம், திருச்சுற்று பிராகாரம், கருடாழ்வார் சந்நதி, யாகசாலை, கண்ணாடி அறை, மடப்பள்ளி, ராஜகோபுரம், நான்குகால் மண்டபம், வாகன மண்டபம், ஆகிய பகுதிகளைக் கொண்டு விளங்குகிறது. இக்கோயில் மூலஸ்தானம் செவ்வக வடிவுடையது. மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் லட்சுமி நரசிம்மர் இடக்காலை மடித்து வலக்காலை தொங்கவிட்டு பத்மபீடத்தில் ஊன்றிய நிலையில் சதுர்புஜங்களுடன் ஸ்ரீலட்சுமி தேவியை இடது தொடையின் மீது அமர்த்தி ஆலிங்கனம் செய்த வண்ணம் மேற்கு திசையை நோக்கி அருட்பாலிக்கிறார். நரசிம்மரின் மேல் வலக்கரம் கத்தரி முத்திரையில் சக்கராயுதத்தைப் பற்றியுள்ளது. அவ்வாறு மேல் இடக்கரம் கத்தரி முத்திரையில் சங்கினை ஏந்தியுள்ளது.
கீழ் வலக்கரம் அபயஹஸ்தம் காட்டுகிறது. கீழ் இடக்கரம் இடது தொடையில் வீற்றிருக்கும் திருமகளை ஆலிங்கனம் செய்த வண்ணம் அமைந்துள்ளது. அத்ரி மகரிஷிக்கு காட்சி தந்த நரஹரி இவர். நரசிம்மரின் திருமுக மண்டலம் சிம்ம முகமாக அமைந்துள்ளது. சிங்கபிரானின் தலையை கிரீடமகுடம் அலங்கரிக்கிறது. திருமார்பில் மகரகண்டிகையும், கௌஸ்துபமும் அலங்கரிக்கிறது. புஜங்களில் கேயூரமும், பாஜிபந்தமும், முன்கரங்களில் வளைகளும், நாபியின் மேல் உதரபந்தமும், இடையிலிருந்து முழங்கால் வரை வஸ்திர அலங்காரமும் பாதங்களில் பாதசரமும் அணிந்து வனப்போடு காட்சியளிக்கிறார்.

இங்கு தனிக்கோயில் நாச்சியார்  அகோபிலவல்லித் தாயார் என்ற பெயரில் பத்மா சனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்கள். உற்சவராகிய இவரது மேற்கரங்கள் இரண்டும் தாமரை மலரை தாங்கிய வண்ணம் காட்சியளிக்கிறது. கீழ்கரங்கள் இரண்டும் அபய ஹஸ்தத்திலும், வரத ஹஸ்தத்திலும் அமைந்துள்ளது. பெருமாளுக்கு இடப்புறம் உள்ள ஆண்டாள் திரிபங்கியாக நின்ற கோலத்தில் தரிசனம் அளிக்கிறார். இவளது வலக்கரம் நீலோற்பலமலரைப் பற்றியுள்ளது. இடக்கரம் லம்ப கரமாக நீண்டுள்ளது. தலையில் வசீகரிக்கும் ஆண்டாள் கொண்டையும், காதுகளில் குண்டலங்களும், கழுத்திலும், மார்பிலும் ஆபரணங்களும், இடையில் கச்சையும் அணிந்து திரிபங்கியாக ஆண்டாள் அற்புத வடிவில் அருட்கோலம் கொண்டுகாட்சியளிக்கிறாள்.



அங்கிருந்து மேலும் மலை உச்சிக்கு  சென்றால் ஒரு சிவாலயம் அமைக்கப்பட்டுள்ளது அருள்மிகு தையல் நாயகி உடனுறை அருள்மிகு வைத்யநாத ஈஸ்வரர். ஒரு பைய ஸ்வாமி மண்டபமும் உள்ளது.அங்கிருந்து கீழே பார்க்கும்போது இயற்கையின் அழகை மிக ரம்மியமாக ரசிக்க முடியும் . முடிந்தால் ஒருமுறை நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள்.