Subscribe

BREAKING NEWS

24 January 2021

சிவாலய புனரமைப்பு திருப்பணிகள்...



சிவனடியார்களுக்கு வணக்கம்,



நாம் கடந்த சில வருடங்களாக கோயில்களில் உழவாரப்பணி, அன்னதான திருப்பணி, ஆலய தரிசனம் ,ஆன்மீக சுற்றுலா, போன்ற நற்காரியங்களில் நாம் ஈடுபட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம், நமது குழுவில் இதுபோன்ற தகவல்களும் பகிர்ந்து கொண்டு இருந்தோம். நமது குழு மிகச் சிறியதாக   இருந்தாலும் மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. மிகப்பெரிய அளவில் எந்த ஒரு செயல்பாடும் இல்லாமல் இருந்தாலும் மனநிறைவாக அனைத்து பணிகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருகிறது ,அந்த சிவன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை நம்மை அடுத்த கட்ட நகர்வுக்கு நம்மை அழைத்துச் செல்ல முடிவு செய்துவிட்டார் .

 நமது அடுத்தகட்ட பயணமாக ஒரு சிவாலயத்தை புதுப்பிக்கும் பாக்கியம் நமது குழுவிற்கு கிடைத்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வட்டம் அதனைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட சிவாலயங்கள் பராமரிப்பின்றி இருப்பதாக நமது குழுவில் உள்ள திரு சீனிவாசன் அவர்கள் மூலம் நமக்கு தெரிய வந்தது, திரு, சீனிவாசன்  அவர்கள் இத்திருப்பணியில் ஏற்கனவே ஈடுபட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொண்டோம்.அவருடைய லட்சியம் இந்த 50க்கும் மேற்பட்ட திருத்தலங்களை புனரமைத்து வழிபாடு செய்வதற்கு வழிவகுப்பதாகும். அவர் நமது வாட்ஸப் குழுவில் இணைந்து  சத்தமில்லாமல் இருந்திருக்கிறார். என்பது  பின்பு தான் தெரியவந்தது.  இனம் இனத்தோடு சேரும் என்பதுபோல அவருடன்  நாமும் சேர்ந்து பயணிக்க அந்த கைலாசநாதர்  முடிவு செய்துவிட்டார் போலும் .இதுபோன்ற சிவனடியார்கள் நமது குழுவில் அநேகம் உண்டு ஆனால் ஏனோ அவர்கள் முன்னின்று பேசுவதில்லை.


நமது குழு அட்மின் திருமதி பரிமளம் அவர்கள்  திரு சீனிவாசன் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது நீங்கள் ஒருமுறை திருத்தலங்களை வந்து பார்த்து செல்லுங்கள் என்று அன்பு கட்டளையிட்டார்கள் அப்போது அவர் அழைப்பு விடுத்திருந்தார். சரி என்று ஒரு நாள் நேரம் ஒதுக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை செங்கல்பட்டை நோக்கி பயணம் செய்தோம். பின்பு குறித்த நேரத்தில் எங்களுடன் கலந்துகொண்ட திரு, சீனிவாசன் அவர்கள் ஒரு ஆட்டோ ஏற்பாடு செய்து அங்கிருந்து எங்களை ஒரு சில கோவில்களுக்கு அழைத்துச் சென்றார் அதில்  கரும்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு மல்லிகாதீஸ்வரர் ,மற்றொன்று அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை குணம் தந்த நாதர் திருக்கோவில் ஓரக்காட்டுப்பேட்டை,மற்றொன்று அருள்மிகு காமாட்சி உடனுறை கைலாசநாதர் ஆலயம் தண்டரை கிராமம் .


முதலில் பார்த்த கரும்பாக்கம் மல்லிகாதீஸ்வரர் கோவில் தற்போது திரு சீனிவாசன் அவர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் மூலமாக புனரமைக்கப்பட்டு தற்போது தான் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் ,கோவில் வளாகத்தில் நந்தவனம் அமைக்கப்பட்டு பூக்கள் பூத்து குலுங்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது .








இரண்டாவதாக பார்த்த அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை குணம் தந்த நாதர்ஆலயம் சிறப்பாகவே பராமரிக்கப்பட்டு வருகின்றது ஆதலால் அக்கோவிலுக்கு பெரியதாக உதவிகள் என்று எதுவும் தேவைப்படுபதுவதாக  தெரியவில்லை,









மூன்றாவதாக நாம்  பார்த்த தண்டரை காமாட்சி உடனுறை ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் மிகவும்  பராமரிப்பின்றி புதர் செடிகள் கோவில் வளாகத்திற்கு உள்ளேயே மண்டிக்கிடந்தது. சிவனின் கருவறை மற்றும் அம்பாளின் கருவறை ஒட்டடை படிந்த நிலையில் சுண்ணாம்பு சுவர்கள் பெயர்ந்த நிலையிலும் கதவுகள் விரிசல் விட்ட நிலையிலும் கோவிலுக்குள்ளே ஒருவிதமான வவ்வால்களின் வாடையுடன் காணப்பட்டது. பார்ப்பதற்கு மனம் பதைபதைக்கும் நிலையில் இருந்தது.

















இந்த கோவிலை தற்போது பராமரித்து வரும் குருக்கள் திரு செந்தில் அவர்களிடம் பேச்சு கொடுத்தோம்.


ஒரு காலத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த இந்த கோவில் தற்போது அறநிலையத் துறையால் கைவிடப்பட்டுள்ளது. காரணம் இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் வருவதில்லை, அறநிலையத்துறை இந்த கோவிலை பூட்டிவிட்டு செல்லலாம் என்று முடிவு செய்த நிலையில் திரு, செந்தில் குருக்கள் அவர்கள் இக்கோவிலை நானே பராமரிப்பு செய்கின்றேன். இக்கோவிலுக்கு எனக்கு எந்த ஒரு சம்பளமும் தேவையில்லை என்று முடிவு  செய்து கோவிலின் சாவிகொத்தை பெற்று அவர்தற்போது தினமும் விளக்கு  மட்டும் ஏற்றி பராமரித்து  வருகிறார். (நமது குழுவின் சார்பில் முதற்கட்டமாக ஒவ்வொரு மாதத்திற்கும் தேவையான தீப என்னை மற்றும் பூஜை சாமான்கள் வழங்க ஏற்ப்பாடு செய்யப்பட்டது ). மேற்கண்ட மூன்று கோவில்களுக்கும் ஒரே குருக்கள் மட்டுமே இருக்கிறார் அது திரு செந்தில் அவர்கள் மட்டும்தான். அவருக்கு மாத வருமானம் மிகச் சொற்பமே.சிவன்பால் அவர் கொண்ட ஈடுபாட்டால் அவர் இதனைச் செய்து வருகிறார்.அவருடைய பேச்சில் சுயநலமில்லாமல் செயல்படுகிறார் என்பது மிக நன்றாகவே புரிந்தது .


எங்களுக்குள் என்ன தோன்றியதோ தெரியவில்லை இந்த கோவிலை எப்படியாவது முழுவதும் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்து விடவேண்டும் என்று எங்கள் மனதிற்குள் தோன்றியது. அது எப்படி சாத்தியமாகும்? நம் குழுவில் மொத்தம்  ஐம்பது பேர் கூட தேறவில்லை அப்படி இருக்க சுமார்  6 முதல் 7 லட்சம் வரை செலவாகும் இந்த காரியத்தை நம் குழுவால் எப்படி செய்ய முடியும்? கைலாசநாதா  நீங்கள் தான் எங்களுக்கு ஒரு நல்ல வழியை காட்ட வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம். 


கைலாசநாதர் ஆலயத்தை புதுப்பிக்க வழி கிடைத்ததா? அடுத்த பதிவில் பார்க்கலாம்….





No comments:

Post a Comment