Subscribe

BREAKING NEWS

05 November 2018

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி!

அனைவருக்கும் வணக்கம்.

அனைவரும் தீபாவளி கொண்டாட்டத்தில் இருப்பீர்கள் என்று நினைக்கின்றோம். முதலில் நம் தள வாசகர்களுக்கும், நம் சேவையில் பங்கு கொண்டு உதவி வரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்களை இந்தப்  பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கின்றோம். இன்றைய பதிவில் அத்திரி மலையேற்றம் பற்றிய செய்திகளை தர உள்ளோம்.சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் நம் தல யாத்திரையாக சென்று வந்த பதிவு இது. நம் பல முறை கூறியபடி, இப்போது தான் நமக்கு இந்த பதிவை அளிக்கும் படி குருவின் உத்தரவு கிடைத்துள்ளது. ஏனெனில் இங்கு தரப்படும் பதிவுகள் தீர்மானிப்பது நாம் அன்று, நாம் ஒரு கருவியே. அனைத்தும் பிரபஞ்ச பேரறிவின் படியே நடந்து வருகின்றது.


சித்தன் அருள் வழங்கிய அந்த நாள் இந்த வருடம் 2017 ஆம் ஆண்டினை நாம் பாபநாசம் நீராடல் கொண்டு துவக்கினோம். அங்கு நீராடல் முடித்து விட்டு அப்படியே அகத்தியர் அருவி சென்று குளித்து விட்டு, மேலே கல்யாண தீர்த்தம் சென்றோம். அங்கு அருள்பாலிக்கும் அம்மையப்பனுக்கு நம் கையார அபிஷேகம் செய்தோம். இடையிடையே மழை பெய்து நமக்கு ஆசி வழங்கியது. இதோ அந்த நிகழ்வின் துளிகள் இங்கே.




                                              பாபநாசம் தீர்த்தம் நீராடல் இங்கே 







அடுத்து கல்யாண தீர்த்தம் பூசை, அபிஷேக காட்சிகள் மேலே தந்துள்ளோம். அடுத்த நாள் நேரே நாம் அத்திரி மலை சென்றோம்.

உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில் ஒருவர் ‘அத்ரி மகரிஷி’. சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானசபுத்திரரான இவரது மனைவியின் பெயர் அனுசுயா. வேத, புராண, இதிகாசங்கள் அனைத்திலும் இந்தத் தம்பதியர் உயர்வாக பேசப்பட்டுள்ளனர்.

தவசக்தியில் இருவருமே சளைத்தவர்கள் அல்லர். இந்தத் தம்பதியர் ஆசிரமம் அமைத்து தவம் மேற்கொண்டது, பொதிகை மலை தொடரில் உள்ள திரிகூடமலைப் பகுதியாகும். எனவே இந்தப் பகுதிக்கு ‘அத்ரிமலை’ என்றும் பெயருண்டு.


திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அத்ரிமலை அடிவாரம். மலையடிவாரத்தில் கடனாநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மட்டத்தில் இருந்து 6 கிலோமீட்டர் உயரத்தில் அத்ரி தபோவனத்தில் அமைந்துள்ளது கோரக்கநாதர் ஆலயம்.

இதோ நீங்கள் மேலே பார்ப்பது கடனா நதி அணைக்கட்டு. மேலே இந்த அணையின் ஓரத்தில் உள்ள பாதையின் வழியே தான் நம் மலையேற்றம் ஆரம்பிக்க உள்ளோம். மலைஏற்றம் ஆரம்பிக்கும் முன்னர் நாம் வனத்துறையினரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும்.




அனுமதி பெற்றுவிட்டு மலையேற தொடங்கிவிட்டோம்.











இடையில் கடனா நதியில் நீராடி விட்டு கிளம்பினோம்.

சரி..இது ஒரு புறம் இருக்கட்டும்.

 அத்ரியின் முதன்மை சீடராக விளங்கிய கோரக்கர், பதிணென் சித்தர்களில் ஒருவராவார். இங்குள்ள மலையில் இன்றும் கோரக்கர் உலாவருவதாக நம்பப்படுகிறது. அதனால் ‘கோரக்கர் மலை’ என்றும் இந்த மலை அழைக்கப்படுகிறது. (கோ+இரக்கன் = கோரக்கன். பசுவை போன்ற கருணை உள்ளவன் என்று பொருள்).

அத்ரி-அனுசுயா இருவரும் தவம் இயற்றியபடி வாழ்ந்த இடம், மும்மூர்த்திகளையும் குழந்தையாக தவழச் செய்து, தத்தாத்ரேயரை பெற்ற இடம். பிருகு முனிவர், சிவனையும், சக்தியையும் வழிபட்ட இடம். பதிணென் சித்தர்கள் உள்பட பல சித்தர்களும் பல்வேறு காலங்களில் அத்ரி மகரிஷியிடம் ஆசிபெற்று தங்கிச் சென்ற இடம் என பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது அத்ரி மலை. இந்த மலை ராமாயணம், மகாபாரதத்துடன் தொடர்பு கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

தவத்தில் ஈடு இணையற்றவர் அத்ரி மகரிஷி என்றால், அவரின் துணைவியார் அனுசுயா தவத்திலும், பதிவிரதையிலும் ஒப்பில்லாதவர். இவர்களின் சிறப்புத் தன்மையை உலகுக்கு உணர்த்த இறைவன் சித்தம் கொண்டார்.

அத்ரி கடுமையான தவம் செய்து கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் அனுசுயாவிடம் பிச்சை கேட்டு மும்மூர்த்திகளும், மூன்று துறவி களாக உருமாறி வந்தனர். வந்தவர்களை வரவேற்ற அனுசுயா, மூவரையும் உணவு ஏற்றிட வேண்டினாள். அதற்கு சம்மதித்த துறவிகள், நாங்கள் நிர்வாணமாக இருந்துதான் உணவு ஏற்போம் என்று நிபந்தனை விதித்தனர்.



 சரியென்று சம்மதித்த அனுசுயா, தனது பதிவிரத சக்தியால் மும்மூர்த்திகள் மீது தண்ணீரைத் தெளித்து, அவர்களை குழந்தையாக மாற்றினாள். பின்னர் அவர்களுக்கு உணவூட்டி மகிழ்ந்தாள்.

அப்போது இருப்பிடம் திரும்பி வந்த அத்ரி மகரிஷி நடந்ததை அறிந்தார். மும்மூர்த்திகளும், குழந்தையாக உருமாறி இருப்பதை பார்த்தார்.

இந்த நிலையில் கணவர்களை தேடி வந்த முப்பெரும் தேவியர்களின் வேண்டுகோளை ஏற்று, குழந்தை களாக இருந்த மூன்று தெய்வங் களையும் மீண்டும் உருமாற்றினாள் அனுசுயா. பின்னர் அனுசுயாவின் வேண்டுதலை ஏற்று, முப்பெருந் தேவர்களும், முப்பெரும் தேவியரும் அங்கு அமர்ந்து உணவருந்தினர். பின் அவர்களிடம் வேண்டி, முப் பெரும் தேவர்களையும் தன் மகனாகும் வரம்கேட்டுப் பெற்றாள் அனுசுயா. அதன்படி மூவரும் ஓருருவாக தத்தாத்ரேயர் வடிவில் பிறந்தனர் என்பது புராண வரலாறு.

சதுரகிரியில் தங்கியிருந்த கோரக்கரின் மனம், அத்ரி மகரிஷியின் தரிசனம் காண விரும்பியது. இதனையடுத்து அங்கிருந்து அத்ரி மலைக்கு வந்தார். மலையில் கடனா நதிக்கு கீழ் புறம் தங்கியிருந்து தவம் செய்தார். அந்த நேரத்தில் சிவசைலநாதர் அங்கு வந்தார். அவரை அத்ரி மக ரிஷி என்று நினைத்து வணங்கினார் கோரக்கர். ஆனால் சிவசைலநாதர், கோரக்கருக்கு அத்ரி மகரிஷியை காட்டி அருளினார்.






இதோ மலை ஏறி, அத்ரி ஆலயத்தை அடைந்தோம். வழக்கம் போல் மகளிர் அணியினர் கோயிலை சுத்தம் செய்ய தொடங்கினார்கள். அன்றைய தினம் அமாவாசை என்பதால் கூட்டம் களை கட்டியது. அங்கிருந்த மூர்த்தங்களுக்கு அபிஷேகம் செய்தார்கள். அனைத்தும் கண்டு களித்தோம். நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. நாம் மீண்டும் மலை இறங்கி அடிவாரம் சென்று தென்காசி செல்ல வேண்டி இருந்தது.






 குருபக்தியில் சிறந்து விளங்கிய கோரக்கர், அத்ரியின் பிரதான சீடரானார். ஒரு சமயம் பூஜைக்கான மலர்களை பறிப்பதற்காக வனத்திற்குள் சென்றார் கோரக்கர். அப்போது அத்ரி தபோவனத்தில் இருந்து கிழக்கே சிவசைலத்தில் எழில் கொஞ்சும் ரம்மியமான சூழலில் சிவனை தரிசித்தார். தான் கண்ட காட்சியை குருநாதர் அத்ரியிடம் கூறினார். அத்ரி மகரிஷியும், பரமேஸ்வரனை அங்கேயே வேண்டி எழுந்தருள செய்து வழிபட்டார். அத்ரியால் வந்ததால் இறைவன் ‘அத்ரி பரமேஸ்வரர்’ என்றும், இறைவி ‘அத்ரி பரமேஸ்வரி’ என்றும் அழைக்கப்பட்டனர். கோரக்கர் விருப்பத்தில் வந்ததால் இந்த ஆலயம் ‘கோரக்கநாதர் ஆலயம்’ என்று பெயர் பெற்றது.

பிருகு முனிவர் ஒருமுறை இத்தலத்தில் சிவனை நோக்கி தவம் செய்தார். அத்தருணம் சிவன் தோன்றி, தம்முடன் சக்தியையும் சேர்த்து பிரார்த்தித்து தவம் செய்யுமாறு கூறினார். அதன்படியே பிருகு முனிவர் தவம் செய்தார். 8 பட்டை வடிவ லிங்க திருமேனியுடன் சக்தி காட்சி அளித்தாள். சிவனும், சக்தியும் ஒரே சன்னிதியில் லிங்க வடிவில் காட்சி தருவது அத்ரி மலையில் மட்டுமே. சக்தி லிங்கத்தில் எட்டு பட்டை வடிவுடன் சூலம் காணப்படும். 8 பட்டைகள், அஷ்டமா சித்திகளை குறிப்பதாகும்.

 இந்தக் கோவிலின் முன்புறம் வனதுர்க்கை, வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், விநாயகர், மகிஷாசுரமர்த்தினி, சுற்றுப்பாதையில் அகத்தியர், அத்ரி, நாக தேவதைகள், சாஸ்தா பீடம் அமைந்துள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் அத்ரி பரமேஸ்வரன், அத்ரி பரமேஸ்வரியும், எதிரில் நந்திதேவரும் வீற்றிருக்கின்றனர். கோவிலின் மேல்புறம் அத்ரி கங்கை தீர்த்த கட்டத்தில் கங்காதேவி எதிரில் நந்தி சிலை உள்ளது.






அத்ரி தபோவனத்தில் செய்யும் சிவ வழிபாடு கிரக தோஷங்களுக்கு சிறந்த பரிகாரமாகும். செவ்வாய் தோஷம் உடையவர்கள் சஷ்டியன்று விரதமிருந்து இங்கு முருகனை வழிபடுகின்றனர். இங்குள்ள நாக தெய்வங்களை வணங்கினால் நாகதோஷம் நீங்கும். ராகு-கேது தோஷத்திற்கு இந்த ஆலயம் சிறந்த பரிகார தலமாகும்.

நேரம் மணி 1 ஐ தொட்டதும் அப்படியே ஒவ்வொருவராக கீழே இறங்க ஆரம்பித்தோம்.



கீழே வந்து தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயிலுக்கு சென்று தரிசனம் பெற்று யாத்திரையை முழுமை செய்தோம்.



2018 ஆண்டு மிக அசத்தலாக ஆரம்பித்தோம், TUT  இரண்டாம் ஆண்டு விழா, வெள்ளியங்கிரி, பர்வத மலை ஏற்றம், அகத்தியர் ஆயில்ய பூசை - ஓராண்டு முழுமை, மோட்ச தீப வழிபாடு என அட்டகாசமாக இருந்து வருகின்றது. வருகின்ற புத்தாண்டையும் இது போல் தொடரவே விரும்புகின்றோம். குருவருள் எப்படி நமக்கு வாய்க்கும் என்று இன்னும் இரண்டு மாத காலம் நமக்கு  உணர்த்தட்டும்.

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி!

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:

நம்பிமலை யாத்திரையின் முழு தொகுப்பும் கீழே தந்துள்ளோம்.

நம்பிமலை தரிசனம் காண வாருங்கள் "திருமலை நம்பி கோவில்" - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_21.html

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 8 - http://tut-temple.blogspot.com/2018/09/8.html

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 7.- http://tut-temple.blogspot.com/2018/09/7.html

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 6.- http://tut-temple.blogspot.com/2018/09/6.html

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 5 - http://tut-temple.blogspot.com/2018/09/5_27.html

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 4 - http://tut-temple.blogspot.com/2018/09/4.html

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 3 - http://tut-temple.blogspot.com/2018/09/3.html

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 2 - http://tut-temple.blogspot.com/2018/09/2.html

நம்பிமலை யாத்திரையின்போது நாம் தரிசித்த ஆலயங்கள் பகுதி 1. - http://tut-temple.blogspot.com/2018/09/1_22.html

No comments:

Post a Comment