Subscribe

BREAKING NEWS

02 November 2018

பாடல் பெற்ற தலங்கள் (7) - திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்


இறை அன்பர்களே...

பாடல் பெற்ற தலங்கள் என்ற பதிவு நம் தலத்தில் கண்டு வருகின்றோம். அந்த வகையில் திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில், திருநெடுங்களம்,திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில்,திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில்,திருஆனைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில், அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோயில் என பார்த்தோம். இதில் அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கும்பாபிஷேகத்திற்கு காத்துக் கொண்டிருக்கின்றார். இந்த தொடர்பதிவில் இன்று நாம் காண இருப்பது திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்  ஆகும்.



திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயில் என்பது சம்பந்தர், சுந்தரர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல்பெற்ற சிவத்தலமாகும். மூலவர் ஞீலிவனேஸ்வரர் என்றும், தாயார் விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி என்றும் அழைக்கப்பெறுகிறார். இத்தலத்தில் 7 தீர்த்தங்கள் மற்றும், கல்வாழை தலவிருட்சமாக உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 61வது சிவத்தலமாகும். 

இந்த கோயிலின் பெயர் வித்தியாசமாக உள்ளது அல்லவா? இதோ பெயர்க்காரணம்.


    ஞீலி என்பது மனிதர்கள் உண்ண இயலாத இறைவனுக்கு மட்டுமே படைப்பாகிற ஒரு வகைக் கல்வாழை. இதுவே இத்தல மரமாக அமைந்ததால், இது ஞீலிவனம் எனப் பெயர் பெற்றது.


    நீலகண்டனார் சிதம்பரத்தில் தாம் கொண்டிருந்த ஆடலரசன் கோலத்தை வசிட்ட மாமுனிக்கு இத்தலத்திலேயே காட்டியமையால், இது மேலச் சிதம்பரம் எனலானது.



இது தான் இந்த கோயிலின் வெளிக்கோபுரம் ஆகும். நமக்கு சற்றே ஆச்சர்யமாக இருந்தது.இது நாள் வரை இப்படி ஒரு அமைப்பை நாம் காணவில்லை.உள்ளே சென்றால் நன்கு பரந்த இடம். 





உள்ளே உள்ள கோபுரம் நன்கு கண்கவரும் பொருட்டு இருந்தது. 



இங்கு எமதரம் ராஜாவிற்கு என்று தனி சன்னதி உண்டு,.அது உள்ளே உள்ளே உள்கோபுரம் செல்லும் முன்பு, இடது பக்கம் சென்றால் காணலாம். இது இத்தலத்தின் சிறப்பும் ஆகும்.
திருக்கடையூரில் தாம் காலால் உதைத்தமையால் மாண்ட தர்மராசனுக்கு இறைவன் மீண்டும் குழந்தையாக உயிர் கொடுத்த தலம் இது . எனவே குடைவரைக் கோயிலாக அமைந்துள்ள ஒரு சந்நிதி இங்கு எமனுக்காக உள்ளது.






வெளிக் கோபுரத்தில் இருந்து நன்கு பரந்த இடம் உள்ளே உள்ள கோபுரம் வரை இருந்தது.சரி கோயிலை பார்க்கும் முன்பு தல வரலாறு அறிவோமா?

ஏழு கன்னிமார்களான பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் திருமண வரம் வேண்டி இவ்விடத்தில் தவம் இயற்றுகையில், பார்வதி அன்னை அவ்ர்கள் முன் தோன்றி, அவர்களுக்கு வரம் அளித்ததுடன், வாழை மர வடிவில் அத்தலத்திலேயே குடி கொண்டு என்றேன்றும் தனது காட்சியினைக் கண்டு களித்தேயிருக்கலாம் எனப் பெரும் பேறளித்தாள். பின்னர், அவ்வாழை வனத்தின் மத்தியில் சிவனாரும் லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளினார்.




தரிசனம் செய்தீர்களா? நாமும் முதலில் கவனிக்கவில்லை. இரண்டாம் முறை பிரகாரம் சுற்றும் பொது தான் கவனித்தோம். மீண்டும் ஒருமுறை உள்ளே செல்வோமா?










இந்த கோயில் தென்கயிலாயம் என்றும் வழங்கப்பெறுகின்றது.

முன்னொருகாலத்தில் வாயுவுக்கும், ஆதிசேசனுக்கும், யார் பெரியவர் என்ற அகந்தைக் கூடியது. அதிசேசன் கைலாய மலையை சுற்றி வளைத்துக் கொண்டார். கைலாய தளர்த்த சண்ட மாருதத்தை (கடுமையான சூராவளிக் காற்று) உண்டு பண்ணினார். சண்ட மாருதம் கடுமையாக வீசியதால் கைலாயத்திலிருந்து எட்டு கொடுமுடிகள் (சிகரங்கள்) பெயர்ந்து விழுந்தன.அவை
  1. . திருகோணமலை
  2. . திருகாளத்தி
  3. . திருசிராமலை
  4. . திருஈங்கோய்மலை
  5. . ரஜிதகிரி
  6. . நீர்த்தகிரி
  7. . ரத்தினகிரி
  8. . சுவேதகிரி
என்பனவாகும். இவற்றுள் சுவேதகிரி என்பதே இத்தலமான திருப்பைஞ்ஞீலி. ஆகவே இது தென்கைலாயம் என வழங்கப்படுகிறது. அட! தென்கைலாயத்தில் நம் பாதம் பட! இறைவா? எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்றே தோன்றியது.




 மீண்டும் மீண்டும் கோயிலை வலம் வந்தோம். ஏனென்று தெரியவில்லை. நம்மை சுண்டி இழுத்தது கோயில். கோயிலினுள் மீண்டும் செல்கின்றோம்.



 திருத்தலயாத்திரை சென்ற திருநாவுக்கரசர் ஞீலிவனநாதரை தரிசிக்க வந்து கொண்டிருந்தார். வழியில் அவர் பசியால் களைப்படைந்து ஓரிடத்தில் நின்றார். அப்போது, அர்ச்சகர் ஒருவர் அவர் முன் சென்று, சோறு (அன்னம்) கொடுத்து அவரது பசியை போக்கினார். பின் நாவுக்கரசர் அவரிடம் திருப்பைஞ்ஞீலி தலம் எங்கிருக்கிறது? எனக் கேட்டார். தான் வழிகாட்டுவதாகச் கூறிய அர்ச்சகர் அவரை இங்கு அழைத்து வந்தார். வழியில் அவர் திடீரென மறைந்துவிடவே கலங்கிய நாவுக்கரசர் சிவனை வேண்டினார். சிவன் அவருக்கு காட்சி தந்து தானே அர்ச்சகராக வந்ததை உணர்த்தினார். அவரது வேண்டுதலுக்காக லிங்கமாக எழுந்தருளினார். இவர் "சோற்றுடைய ஈஸ்வரர்' என்ற பெயரில் கோயிலின் முன்புறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். சித்திரை மாதம், அவிட்டம் நட்சத்திரத்தில் இச்சன்னதியில் சோறு படைத்த விழா நடக்கிறது.



அதாவது திருநாவுக்கரசருக்கு இறைவன் பொதிசோறு கொடுத்தருளிய தலம் திருப்பைஞ்சீலி ஆகும். திருச்சிராப்பள்ளி, திருக்கற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய சிவஸ்தலங்களை தரிசித்துவிட்டு திருநாவுக்கரசர் திருப்பைஞ்சீலி நோக்கி சென்று கொண்டிருந்தார். வழியில் நீர்வேட்கையும், பசியும் அவரை வாட்டின. எனினும் மனம் தளராமல் திருப்பைஞ்சீலி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் களைப்பைப் போக்க இறைவன் எண்ணினார். அவர் வரும் வழியில் ஒரு குளமும் தங்கி இளைப்பாறும் மண்டபமும் உருவாக்கி கூட்டுச்சோறு வைத்துக் கொண்டு முதிய அந்தணர் உருவத்தில் இறைவன் காத்துக் கொண்டிருந்தார். களைத்து வந்த அப்பருக்கு தன்னிடம் உள்ள பொதிச்சோற்றை உண்டு குளத்து நீரைப் பருகியும் மேலே செல்லும்படி வற்புறத்தினார். அப்பரும் ஒன்றும் கூறாமல் உண்டு களைப்பாறினார். அந்தணரை நீர் எங்கு செல்கிறீர் என்ரு அப்பர் கேட்டதற்கு தானும் திருப்பைஞ்சீலி செல்வதாக இறைவன் கூற இருவரும் பேசிக்கொண்டே சென்றனர். திருப்பைஞ்சீலி ஆலயம் அருகே வந்தவுடன் அந்தணர் மாயமாய் மறைந்துவிட்டார். அப்போது தான் இறைவனே அந்தணராக வந்து தனக்கு உணவு அளித்ததை அப்பர் புரிந்து கொண்டார்.


இதோ..நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அம்மையப்பன் தரிசனம்.





                                             தனித்தனியாகவும் அருள் பெறுங்கள்.






இக்கோயிலின் சிறப்புகள் பின்வருமாறு.

  •     திருக்கடையூரில் தாம் காலால் உதைத்தமையால் மாண்ட தர்மராசனுக்கு இறைவன் மீண்டும் குழந்தையாக உயிர் கொடுத்த தலம். குடைவரைக் கோயிலாக அமைந்துள்ள ஒரு சந்நிதி இங்கு எமனுக்காக உள்ளது.
  •     எமனுக்கான சிறப்புச் சந்நிதி உள்ளமையால், இங்கு நவக்கிரகங்கள் கிடையா.
  •     நித்தமும் இரவில் நடராசப் பெருமான்|நடராசப் பெருமானை வணங்கும் வசிட்ட மாமுனி, ஒரு முறை இங்கு வந்து இரவில் இங்கு தங்க நேர்ந்தமையால், இறைவனார் அவருக்கு தமது ஆடலரசன் தோற்றத்தினை இவ்விடத்திலேயே காட்டியருளினார்.
  •     அப்பர் பெருமான் இத்தலமேக விரும்பி நடக்கையில் வழி தவறி நிற்கையில், எம்பெருமானே அந்தணர் வடிவில் அவரது பசியாற்றி இத்தலத்திற்கு வழிகாட்டுவித்தார். "சோற்றுடைய ஈஸ்வரன்" என்னும் பெயர் கொண்டு அவருக்கு இத்தலத்தில் ஒரு தனிச்சந்நிதியும் அமைந்துள்ளது.
  •     திரு ஆனைக்காவினைப் போன்று ஐந்து பிரகாரங்கள் கொண்ட இத்தலத்தில், ஏழு தீர்த்தங்கள் உள்ளன. அவை விசாலாட்சி, எமன், கல்யாணி, அக்னி, தேவ, அப்பர் மற்றும் மணியங்கருணை என்பனவாகும்.
  •     இத்தலம், சம்பந்தர், சுந்தரர் மற்றும் அப்பர் ஆகிய நாயன்மார்களின் பாடல் பெற்ற தலமாகும்.
  •     இது காவேரி நதியின் வடகரையில் பாடல் பெற்ற தலங்களில் 61ஆம் தலமாக விளங்குகிறது.
  •     ஒவ்வொரு வருடமும், புரட்டாசி மற்றும் பங்குனி ஆகிய மாதங்களில், சுயம்பு லிங்கத்தின் மீது சூரியக் கதிர்கள் படர்வதைக் காண்பது மெய்யனுபவமாக விளங்கும்.
அடுத்து பிரகாரம் சுற்றி வெளியே வந்தோம். 









ஏழு கன்னிமார்களான பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி என தரிசனம் பெற்று வந்த போது வினை தீர்க்கும் விநாயகர் நம்மை அழைத்தார். முதலில் நாமும் சன்னதி மேலே பார்க்கவில்லை.உற்று பார்க்கும் போது தான் தெரிந்தது..எத்தனை விநாயகர்.நீங்களே பாருங்கள்.





இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் பத்ர விமானம் எனப்படும். இத்தல விநாயகர் வசந்த விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். ஐந்து பிரகாரங்களுடன் உள்ள இக்கோயிலில் விசாலாட்சி, எமன், கல்யாண, அக்னி, தேவ, அப்பர், மணியங்கருணை என மொத்தம் ஏழு தீர்த்தங்கள் இருக்கிறது.  பிரகாரத்தில் உள்ள விநாயகர் சிவன் மற்றும் செந்தாமரைக் கண்ணன் எனும் பெருமாளுடன் சேர்ந்தபடி இருப்பதும், தெட்சிணாமூர்த்தியின் கீழ் நந்தி இருப்பதும் வித்தியாசமானதாகும். கொடிமரத்திற்கு அருகில் சுயம்பு நந்தி இருக்கிறது.






அடுத்து முருகனருள் பெற்று அப்படியே சுற்றினோம்.



கோயிலின் தல விருட்சம் கண்டோம். கல் வாழை இங்கு தல விருட்சமாக உள்ளது.








பங்குனி, புரட்டாசி மாதங்களில் மூன்று நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளிக்கதிர் விழுகிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.  இரட்டை அம்பாள் தலம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 61  வது தேவாரத்தலம் ஆகும்.








அனைத்தும் சிவார்ப்பணம் என்று சிவ சிந்தனையில் மூழ்க வைத்துவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். பார்க்கும் இடமெல்லாம் சிவ சிவ, கேட்கும் மொழிகளெல்லாம் நம சிவாயமே.


இராவணன் வாயில் எனப்படும் இரண்டாவது கோபுரத்தின் வழியாக உள்ளே சென்று திருக்கார்த்திகை வாயிலில் நுழைந்து மூலவர் ஞீலிவனேஸ்வரர் சந்நிதியை அடையலாம். இங்குள்ள லிங்கமூர்த்தி ஒரு சுயம்பு லிங்கமாகும். எமனுக்கு உயிர் கொடுத்து மீண்டும் தனது தொழிலைச் செய்துவர அதிகாரம் கொடுத்து அருளியதால் இத்தலத்து இறைவன் அதிகாரவல்லபர் என்றும் அழைக்கப்படுகிறார். மகாவிஷ்ணு, இந்திரன், காமதேனு, ஆதிசேஷன், வாயு பகவான், அக்கினி பகவான், இராமர், அர்ச்சுணன், வஷிஷ்ட முனிவர் ஆகிய பலர் இத்தலத்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். மூலவர் சந்நிதியில் இரத்தின சபை இருக்கிறது. வசிஷ்ட முனிவருக்கு அவரின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சிவபெருமான் நடன தரிசனம் தந்து அருளிய இரத்தின சபை தலம் இதுவாகும். இத்தலத்திற்கு மேலச் சிதம்பரம் என்ற பெயருமுண்டு.







இக்கோவிலில் இரண்டு அம்மன் சந்நிதிகள் இருக்கின்றன. இரண்டு அம்மன்கள் பெயரும் விசாலாட்சி தான். பார்வதி தேவி ஒருமுறை சிவயோகத்திலிருக்க விரும்பி இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டாள். நிழல் தரும் மரங்கள் இல்லாததைக் கண்டு தனக்கு பணிவிடை செய்ய வந்த சப்த கன்னிகளை வாழை மரங்களாக அருகில் இருக்கக் கூறி அருள் செய்தாள். அத்தகைய பெருமை பெற்ற வாழைக்கு பரிகாரம் செய்ய விரைவில் திருமணம் கைகூடும். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைக்குப் பரிகாரம் செய்வது மிகவும் சிறப்பாகும். வாழைப் பரிகார பூஜை நேரம் காலை 8-30 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலையில் 4-30 மணிமுதல் 5-30 மணி வரையிலும் நடத்தப்படும்.


சம்பந்தர்,சுந்தரர்.அப்பர் என மூவரால் பாடப்பெற்ற தலமாகும்.

இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:

    தூயவன் தூயவெண் நீறு மேனிமேல் பாயவன்
    பாயபைஞ் ஞீலி கோயிலா மேயவன் வேய்புரை
    தோளி பாகமா ஏயவன் எனைச் செயுந் தன்மை என்கொலோ.

    காரு லாவிய நஞ்சை யுண்டிருள்
    கண்டர் வெண்டலை யோடுகொண்
    டூரெ லாந்திரிந் தென்செய் வீர்பலி
    ஓரி டத்திலே கொள்ளும் நீர்
    பாரெ லாம்பணிந் தும்மை யேபர
    விப்ப ணியும்பைஞ் ஞீலியீர்
    ஆர மாவது நாக மோசொலும்
    ஆர ணீய விடங்கரே.

    கண்டவர் கண்கள் காதல் நீர் வெள்ளம் பொழிதரக் கை குவித்து இறைஞ்சி
    வண்டறை குழலார் மனம் கவர் பலிக்கு திரு வடிவு கண்டவர்கள்
    கொண்டது ஓர் மயலால் வினவு கூற்று ஆகக் குலவு சொல் கார் உலாவிய என்று
    அண்டர் நாயகரைப் பரவி ஆரணிய விடங்கராம் அருந் தமிழ் புனைந்தார்









இதோ மீண்டும் வெளிக் கோபுரத்தை அடைந்து விட்டோம்.,மீண்டும் மற்றொரு பாடல் பெற்ற தலத்தில் அனைவரையும் சந்திப்போம்.

எப்படி செல்வது?

திருச்சியில் இருந்து 23 கி.மீ., தூரத்தில் இவ்வூர் இருக்கிறது. சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் உண்டு.

மீள்பதிவாக :-

பாடல் பெற்ற தலங்கள் (6) - கும்பாபிஷேகத்திற்கு காத்துக் கொண்டிருக்கின்றார் அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் - http://tut-temple.blogspot.com/2018/10/6.html

பாடல் பெற்ற தலங்கள் (5) - திருஆனைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/09/5.html

பாடல் பெற்ற தலங்கள் (4) - திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/08/4.html

பாடல் பெற்ற தலங்கள் (3) - திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/07/3.html

பாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/06/2.html

பாடல் பெற்ற தலங்கள் (1) - திருநெடுங்களம் - http://tut-temple.blogspot.com/2018/05/1.html

No comments:

Post a Comment