Subscribe

BREAKING NEWS

12 October 2019

விதியின்படிதான் எல்லாம் நடக்குமா???



விதியின்படிதான் எல்லாம் நடக்கும் என்று கூறப்படுகிறது. விதியை மாற்ற முடியாது என்றும் சொல்கிறார்கள். இப்படி மாற்ற முடியாத விதியின்படிதான் எதுவும் நிகழும் என்றால், மனித முயற்சியே தேவை இல்லையே? தேவை இல்லை என்பது மட்டுமல்ல – முயற்சியினால் எந்தப் பயனும் கிட்டாது – என்றுதானே ஆகிறது? அதாவது, சோம்பேறியாக இருந்து கொண்டு வாழ்க்கை நடத்தினாலும், விதி நன்றாக இருந்தால், எல்லாம் நல்லதாகவே நடக்கும் அல்லவா? ஆக, இந்த ‘விதி’ என்பது சோம்பேறித்தனத்தைத்தான் ஊக்குவிக்கும். இல்லையா?...

பதில் ..

பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா, எல்லா மனிதர்களும் முழுமையாக இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார். தானே கூட, எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் சொல்கிறார். அப்படியிருக்க, ‘நீ ஒன்றும் செய்யாமல் சோம்பேறியாக இரு; விதி நன்றாக இருந்தால், உனக்கு நல்லதெல்லாம் நடக்கும்’ என்று சாத்திரங்கள் சொல்லுமா?

விதி, நல்ல நேரம் எல்லாமே, முயற்சி உள்ளவர்களுக்குத்தான் உதவும். நல்ல முயற்சி இருந்தும், ஒருவன் தோற்பது விதியால்தான்.

மஹாபாரதத்தில் ஒரு நிகழ்ச்சி வருகிறது. யாதவர்கள் ஒருவரை ஒருவர் தாக்க, பேரழிவு ஏற்படுகிறது. முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர்தான் மிஞ்சியிருக்கிறார்கள். கிருஷ்ணர், அர்ஜுனனை அழைத்து, ‘நீ இவர்களை எல்லாம் பாதுகாப்பாக அழைத்து சென்று விடு’ என்று கூறுகிறார். அர்ஜுனனும் அதை ஏற்று, அவர்களை எல்லாம் அழைத்துச் செல்கிறான்.
போகிற வழியில், ஒரு கொள்ளைக் கூட்டம் இவர்களை வழிமறித்துத் தாக்குகிறது. முதியவர்களும், பெண்களும், குழந்தைகளும் கதறுகிறார்கள். அர்ஜுனன் மிகப் பெரிய வீரன் அல்லவா? அவன் அந்தக் கொள்ளைக் கூட்டத்தை விரட்டி அடிக்க முற்படுகிறான். அவர்களோ கடுமையாகத் தாக்குகிறார்கள். கடைசியில் அர்ஜுனன் தனது சிறந்த ஆயுதமான காண்டீவத்தையே பயன்படுத்துகிறான். அதுவும் பலனளிக்காமல், அந்தக் கொள்ளைக் கூட்டத்தினர் பெரும் சேதம் விளைவித்துச் செல்கிறார்கள்.அர்ஜுனனுக்கு ஒன்றும் புரியவில்லை. மீதி இருந்தவர்களோடு அவன் போய்க் கொண்டிருந்தபோது வியாஸரைச் சந்திக்கிறான். அவரிடம் நடந்ததைச் சொல்லி – ‘ஏன் இவ்வாறு நடந்தது? பாரதப் போரில் துரோணர், பீஷ்மர், கர்ணன், துரியோதனன், அச்வத்தாமன்… போன்ற பெரும் வீரர்களை எதிர்த்து வென்றேன். ஆனால், இப்போது சாதாரண தீவட்டிக் கொள்ளைக்காரர்களை ஒடுக்க என்னால் முடியாமல் போய்விட்டதே! என் காண்டீவம் கூட பயன் தரவில்லையே? ஏன்?’ என்று கேட்கிறான்.

வியாஸர் சொல்கிறார்: ‘உன்னுடைய வீரத்திற்குக் கிட்டிய நேரம் முடிந்து விட்டது. அதுதான் காலத்தின் வன்மை. காலம் ஒத்துழைக்கவில்லை என்றால், மனித முயற்சி பயன் அளிக்காது’.

அர்ஜுனனுக்கே அப்படி என்றால், சாதாரண மனிதர்களைப் பற்றிக் கேட்பானேன்! விதியும், முயற்சியும் சேர்ந்து நன்றாக அமைந்தால்தான், காரியம் கைகூடும். அதற்காக முயற்சியே இல்லாமல் சோம்பேறியாக இருந்தால், விதியின் கருணை கூட வீண் ஆகிப் போகும்.
அதாவது, மனித முயற்சி நிச்சயமாக வேண்டும்; அது அவசியம். ஆனால் அது மட்டும் போதாது. விதியும் நமக்கு நன்றாக இருக்க வேண்டும். ஆக, சோம்பேறித்தனத்தை வளர்ப்பது அல்ல – விதி என்ற தத்துவம். முயற்சி செய்தும், பலன் இல்லாமல் போகும்போது – அதற்காகச் சோர்ந்து போய் விடாமல், நாம் தெளிவு பெறுவதற்கு, விதியைப் பற்றிய விளக்கம் உதவும்.

நன்றி...


No comments:

Post a Comment