Subscribe

BREAKING NEWS

21 October 2019

எமதீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள்....


எம தீப த்ரயோதசி


'ஞ்ஞான இருள் அகற்றி, நம்முள் ஞான தீபம் ஏற்றும் தீபாவளித் திருநாள்... நமக்கு மட்டுமல்ல, எமதர்மனுக்கும் பிடித்த பண்டிகை!' எனப் போற்று கின்றன ஞான நூல்கள். காரணம் என்ன... விரிவாகத் தெரிந்து கொள்வோமா?!

ஐப்பசி மாதம் தீபாவளிக்கு முன்பு வரும் திரயோதசி நாளுக்கு எம தீப த்ரயோதசி எனப் பெயர். 26.10.2019 எம தீப திரயோதசி தினமாகும். அன்று (சனிக்கிழமை) மாலை எமதர்ம ராஜாவைக் குறித்து, வீட்டுக்கு வெளியில், மண் அகலில் நெய் / நல்லெண்ணைவிட்டு விளக்குகள் ஏற்றிவைத்தால், அறியாமல் செய்த பாபங்களை - எம பயத்தை போக்கடிக்கும்.  தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது நம் மரபு. மரணபயம் நம்மைவிட்டு அகலவும் துர்மரணமின்றி அமைதியான மரணம் ஏற்படவும் யமதர்மராஜனை தவறாமல் வழிபட வேண்டும்.

மஹாளய பட்ச நாட்களில் குறிப்பாக மகாளய பட்ச அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு. இந்த நாட்களில், பித்ரு லோகத்தில் இருக்கும் முன்னோர்கள் பூமிக்கு வருவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அப்படி வருபவர்கள், தீபாவளி நாட்களில்தான் பித்ருலோகத்துக்கு திரும்புகின்றனர். அவர்களை வழியனுப்பும் பொருட்டு தீபமேற்றுதல் வேண்டுமாம். சாஸ்திரங்களும், 'தீபாவளிக்கு முதல் நாளான திரயோதசி திதி அன்று மாலை நேரத்தில் எம தீபம் ஏற்ற வேண்டும்!' என்கின்றன.

பித்ருலோகத்துக்கு மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது "யம தீபம்" மட்டுமே.
 இந்த வெளிச்சத்தில் அவர்கள் சுகமான பயணம் மேற்கொள்ளும்போது, அவர்களுக்கு வெளிச்சம் காட்டிய நம்மை ஆசீர்வதித்துச் செல்கின்றனர். அந்த ஆசீர்வாதம் நமக்கு பல நன்மைகளை வாரி வழங்கக்கூடியது. அப்படிப்பட்ட ஆசீர்வாதத்தை நாம் பெற ‘இந்த யமதீபத்தை’ ஏற்றி வழிபட வேண்டும்.

யம தீபமானது முக்கியமாக துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களைச் செய்வார்கள். என்றாலும் எவரேனும் இறந்தால் மட்டுமே யம தீபம் ஏற்ற வேண்டும் என்று எண்ணக் கூடாது.

யம தீப வழிபாடாக, ஒரு பெரிய அகல்விளக்கில் நெய் / நல்லெண்ணெய் கொண்டு ஆலயத்தில் / இல்லத்தில், திரிகளை வைத்து ஏற்றி, ஒவ்வொரு திக்காகப் பார்த்து, எட்டுத் திக்குகளில் நின்று, அந்தந்த திக்குகளை தேவமூர்த்தி, தேவதைகளை வணங்கிப் பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு எட்டுத் திக்குகளிலும் நின்று பூஜித்து, யம தீப தேவ மூர்த்திகளை உலக ஜீவன்களுக்கு உள்ள எமபயம், மரண பயம், மிருத்யு தோஷங்கள் அகலத் துணைபுரிவீர்களாக என்று வேண்டிட வேண்டும்.

யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும். சொத்துகள் சேரும். அனைத்து விதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே அமையும்.  அத் தீபத்தை நீங்கள் தீபாவளி காலத்தில் வருகிற திரயோதசி திதியில் ஏற்ற வேண்டும். இது எப்போதும் தீபாவளிக்கு முதல் நாள் அன்று வரும். யம தீபம் ஏற்றி முன்னோர்களுக்கு வழிகாட்டி உதவுவது அந்த வருடம் முழுவதும் நல்ல பலன்களைத் தரும்.

ஜோதிடத்தில் யமனுக்கு உள்ள தொடர்பு:
சூரிய பகவான் த்விஷ்டா என்பவரின் மகள் சுவர்ச்சலாதேவியை திருமணம் செய்தார். அவர்களுக்கு வைவஸ்தமனு, எமன் என்ற 2 மகன்களும் யமுனை என்ற மகளும் பிறந்தனர். சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாத சுவர்ச்சலாதேவி தன் நிழலை ஒரு பெண்ணாக மாற்றினாள். அந்த பெண்ணுக்கு சாயாதேவி என்ற பெயரிட்டாள். பிறகு அவள் இனி நீ சூரியனுடன் குடும்பம் நடத்து என்று கூறி விட்டுத் தன் தந்தை வீட்டுக்கு சென்று விட்டாள்.

இதையடுத்து சாயாதேவிக்கு சூரியன் மூலம் தபதீ என்ற மகளும் ச்ருதச்ரவசி, ச்ருதசர்மா என்ற 2 மகன்களும் பிறந்தனர். இவர்களில் ச்ருதசர்மா உன்னத பலன்கள் பெற்று சனிபகவான் என்ற அந்தஸ்தை பெற்றார். சிவனை வழிபட்டு ஈஸ்வர பட்டமும் பெற்றார்.

ஓரு ஆத்மாவை உருவாக்குவதில் ஆத்மகாரகனான சூரியனும் அந்த ஆத்மாவீன் ஆயுளை தீர்மானிப்பதில் சூரியனின் புத்திரர்கள் மற்றும்ஆயுள் காரகனான சனைஸ்வர பகவானும், அவருடைய அதிதேவதையான யமன்தான் என பாரம்பரிய ஜோதிடம் கூறுகிறது.

யம தீபம் எங்கு ஏற்றலாம்?
1. மயிலாடுதுறை அருகில் ஸ்ரீ வாஞ்சியத்தில் தனி சன்னதிபெற்ற யமதர்மராஜன் சன்னதி
2. தனது பக்தனான மார்கண்டேயனுக்கு அருள யமனை அழித்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சன்னதி
3. திருச்சி மண்ணச்சநல்லூர் அருகில் திருபைஞ்சிலி எனும் ஞீலிவனநாதர் ஆலயத்தில் உலகில் அழிக்கும் தொழில் தடையின்றி நடைபெற சாம்பலில் இருந்து யமனை மீண்டும் குழந்தையாக உருவாக்கிய யமன் சன்னதியில்.
4. அனைத்து சனி பரிகார ஸ்தலங்களில்.
5. அனைத்து சிவாலய சனைஸ்வரர் சன்னதிகளில்
6. யமனின் சகோதரியான யமுனை நதிக்கரையில்
7. அனைத்து காலபைரவர் சன்னதிகளில்.
8. அவரவர் வீட்டின் உயரமான பகுதியிலும் தெற்கு திசை நோக்கி யம தீபம் ஏற்றலாம்

யம தீபம் ஏற்றும் நாள் மற்றும் நேரம்
26.10.2019 – சனிக்கிழமை மாலை 5.45 மணிக்கு மேல் 6.58 மணிக்குள் எம தீபம் ஏற்ற வேண்டும்.

யம தீபம் ஏற்றும் வழி முறைகள்
·         பெரிய அகல்விளக்கு ஒன்றில் மஞ்சள் திலகமிட்டு, முழுதுமாக நெய் / நல்லெண்ணெய் ஊற்றி , பெரிய திரியிட்டு சிறிதளவு கோதுமை தானியத்தை அகலில் போட்டு யம தீபம் தயார் செய்து கொள்ள வேண்டும்
·         வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு, வீட்டின் வெளிப்புறம் உயரமான பகுதியில் வாழை இலையின் மேல் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். அப்படி விளக்கேற்ற வீட்டில் வசதி இல்லா விட்டால்  வீட்டிற்குள்ளும் யம தீபம் ஏற்றலாம்.
·         யம தீபம் தெற்கு திசை நோக்கி எரிய வேண்டும். விளக்கேற்றிய பின் யம தீப ஸ்லோகம் சொல்லி பிரார்த்தனை செயய் வேண்டும்.
·         விளக்கேற்றிய பின்னர், முன்னோர்களை மனதில் நினத்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.
·         நெய் / நல்லெண்ணெய் முழுவதுமாக எரிந்து தானாக அணைந்த பிறகு, அகல்விளக்கை நீர் நிலைகளில் விட்டு விடலாம் அல்லது மண்ணுக்குள் புதைத்து விடலாம். வீட்டிலேயே வைத்துக் கொண்டால் வேறு பூஜைகளுக்கு பயன் படுத்த கூடாது. மறு வருடம் எம தீபம் ஏற்ற பயன்படுத்தலாம்.

யமதீபம் ஏற்றும்போது கூறவேண்டிய ஸ்லோகம்:
ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய
ம்ருத்யவே சாந்த காயச|
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச||
ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே|
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:||

அனைத்தையும் அடக்கி ஆள்பவராகவும், தர்ம மூர்த்தியாகவும் தீவினையை அழிப்பவராகவும், விவஸ்வானுடைய புத்திரனாகவும் காலத்தின் வடிவாகவும், அனைத்து ஜீவன்கட்கும் நல்லதோர் முடிவை அளிப்பவராகவும், பலவித பிறப்பு, இறப்பு ரகசியங்களைத் தன்னுள் கொண்டவருமான அனைவராலும் பூஜிக்கப்படுபவருமான ஸ்ரீயமதர்மராஜமூர்த்தியை வணங்குகிறேன். பெரும் வயிறு படைத்தவனும் சித்திரத்திலிருந்து தோன்றியவனுமான சித்ரகுப்தனுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரங்கள்’ என்று பொருள்.
மற்றும் 
ஓம் த்ரியம்பகம் யஜாமஹே ஸூகந்திம் புஷ்டிவர்த்தனம்
உருவாருஹமிவ பந்தனாத் ம்ருத்யோர் முச்சீய மாம்ருதாத்
எனும் ம்ருத்யுஞ்சய மந்திரத்தையும் உச்சரித்தபடி விளக்கேற்றி 
அகால ம்ருத்யூ ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம் சர்வ பாப க்ஷயகரம் தம் நமாமி மகேஸ்வரம் 
எனக் கூறி பிரார்த்தனை செய்ய வேண்டும்!

எளிய தமிழ் பிரார்த்தனை
பாசம் தண்டம் இவைகளைக் கைகளில் ஏந்திக் கொண்டு, யாமாதேவி மற்றும் காலதேவனுடன் பிரகாசிக்கும் சூரியனின் புத்ரரான மய தர்மராஜாவானவர், நான் செய்யும் இந்த த்ரயோதசி தீப தானத்தால் சந்தோஷமடையட்டும் என்று சொல்லி வழிபட வேண்டும். இந்த வழிபாடு அபம்ருத்யு என்னும் தோஷத்தைப் போக்கும். இதன் காரணமாக வியாதியற்ற நீண்ட ஆயுளைத் தரும் என்கிறது ஸ்காந்த புராணம்.

எனவே மறக்காமல் 26.10.2019 மாலை எம தீபம் ஏற்றுங்கள்.  முன்னோர் ஆசிகள் பெற அனைவருடைய இல்லங்களில் யம தீபம் ஏற்றுவோம்.


No comments:

Post a Comment