Subscribe

BREAKING NEWS

24 October 2019

இல்லற வாழ்க்கைச் சிறப்பாக அமைய வேண்டுமா?...




வேதாத்திரி மஹரிஷி பேசுகிறார். மனவளக்கலைப் பேராசிரியர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இல்லற வாழ்க்கைச் சிறப்பாக அமைய வேண்டும் என்றால்,
அதற்கு என்ன வழி?.

மூன்று பண்புகள்:

1.  விட்டுக் கொடுப்பது,
2.  அனுசரித்துப் போவது,
3.  பொறுத்துப் போவது.

இவை மூன்றும் இல்லை என்றால் இல்லறம் இன்பமாக இருக்காது.
இந்த இடத்தில் ஒரு சந்தேகம். ஒரு பேராசிரியை எழுந்து அதைக் கேட்டார்.

“விட்டுக்கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள்...
யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா?
பிரச்சினையே அங்குதானே ஆரம்பம்!” எல்லோரும் ஆவலோடு
மகரிஷியின் முகத்தைப் பார்கிறார்கள்.

இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

கணவனுக்குச் சாதகமாகப் பேசுவாரா?அல்லது
மனைவிக்குச் சாதகமாகப் பேசுவாரா?

மகரிஷி சிரிக்கிறார். அப்புறம் சொல்கிறார்.

“யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, அறிவாளியோ
அவர்கள் தான் விட்டுக் கொடுப்பார்கள். அவர்கள்தான்
அனுசரித்துப் போவார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவாகள்.”
அரங்கம் கைதட்டலால் அதிர்கிறது.

ஆரவாரம் அடங்கியவுடன் அருட்தந்தை தொடந்து பேசுகிறார்:

“அன்புள்ளவர்களிடம்தான் பிடிவாதம் இருக்காது. பெருந்தன்மை இருக்கும். குடும்பத்தில் ஆற்றலை உற்பத்தி பண்ணுகிறவர்கள் அவர்கள்தாம்,

அவர்கள்தாம் Power Producers, Charged Batteries, நம்பிக்கை நட்சத்திரங்கள், இறை ஆற்றலோடு நெருக்கம் உள்ளவர்கள். அவர்களுக்குத்தான் தவம் எளிதாகக் கைகூடும். அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.

அத்தனைச் சிக்கல்களுக்கும் தீர்வாக அவர்கள் திகழ்வார்கள்.
அருட்பேராற்றலால் ஆசிர்வதிக்கப் பெற்றவர்கள்!”

அருட்தந்தையின் விளக்கம் நமக்குள் ஓர் உந்துதலை
ஏற்படுத்துவதை உணர முடிகிறது.

விட்டுக்கொடுப்பதில் முந்திக் கொள்ள வேண்டும் என்கிற வெளிச்சத்தை நமக்குள்ளே உண்டு பண்ணுகிறது.

அமைதியான குடும்பமே நல்ல குடும்பம். குடும்ப அமைதியே
உலக அமைதிக்கு வித்தாகும் என்கிறார் மகரிஷி..

அமைதியான குடும்ப வாழ்விற்கு மேலும் அவர் சொல்கின்ற
கீழ்க்கண்ட பத்து அறிவுரைகளை கவனத்தில் கொள்வோம்.

பத்து வழிகள்:

1.  நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.

2.  கணவன்-மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.

3.  குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

4.  வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியைக் குலைக்கும்.

5.  ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது பெரும்பாலோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும்.
சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம்; சிலர் குறைவாகச் சம்பாதிக்கலாம்.
அப்படி இருந்தாலும் அதைக் காப்பது, நுகர்வது, பிறருக்கு இடுவது
ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.

6.  கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிணக்கிற்க்கு இடம்  தரும்.

மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் தெய்வீக உறவு இருக்காது.  பொறுப்பற்று வீண் செலவு செய்பவராக இருந்தால் இது பொருந்தாது.

7.  குடும்ப அமைதி நிலவ, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல்,
தியாகம் என்ற மூன்றையும் கடைபிடித்து வரவேண்டும்

8.  பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழி வகுக்கும்.

9.  தனக்குக் கிடைத்த வாழ்க்கைத்துணையைப் பற்றி
யாரும் குறை கொள்ளத் தேவை இல்லை. அவரவர் அடிமனமே
இதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

10.  நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி இன்றியமையாததாகும்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

தத்துவஞானி வேதாத்திரி மகரிசி

நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!!

No comments:

Post a Comment