Subscribe

BREAKING NEWS

14 September 2017

ஸ்ரீ மஹா பைரவ ருத்ர ஆலயம்.. திருவடிசூலம் .









ஒரு காலத்தில், கோவில்களில் சன்னிதி பூட்டியதும், பைரவர் சன்னிதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவர்.
அதைத் தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவராக பைரவர் கருதப்பட்டார்.இவரை வழிபடுவதற்கு உகந்த திதி தேய்பிறை அஷ்டமி.அதில், கார்த்திகை அஷ்டமி மிகவும் உயர்ந்தது.அபிதான சிந்தாமணி என்ற நூலில், பைரவர் வரலாறு கூறப்பட்டுள்ளது.தாருகாசுரன் என்பவன், இறவா வரம் வேண்டும் என, சிவனிடம் கேட்டான்.உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் கூறினார். அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர, தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை, ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம்.பல அட்டூழியங்கள் செய்த அவனுக்கு அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவ, பார்வதியிடம் முறையிட்டனர். பார்வதி தேவி, சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தில் இருந்து, கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர், ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. "காளம்’ (விஷம்) படிந்த அந்த பெண்ணுக்கு, "காளி’ என பெயர் சூட்டினாள்.

காளிதேவி கடும் கோபத்துடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம், கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின், அந்த கனலை ஒரு குழந்தையாக மாற்றிய காளி, அதற்கு பாலூட்டினாள். அதன்பின், சிவபெருமான், காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார்.அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன், அந்த குழந்தைக்கு, "பைரவர்’ என்று பெயர் வைத்தார். காளி, சிவன் ஐக்கியத்துடன், எட்டு மடங்கு சக்தியுடன், காளத்தை தன் உடலில் அடக்கிய அந்தக் குழந்தை, "காளபைரவர்’ எனப்பட்டு தற்போது, "காலபைரவர்’ ஆகியுள்ளது. இவரை தம் காவலுக்கு சிவபார்வதி நியமித்தனர்.தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. சிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்து, பிஸ்கட் கொடுத்து, குழந்தை போல வளர்ப்பர். சிலர், கண்டாலே கல்லெறிவர்.இதுபோல், வாழ்க்கையில் இன்ப துன்பம் எது வந்தாலும், அதை இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என, வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாக, நாய் வாகனம் கருதப்படுகிறது. நாய்க்கு, "வேதஞாளி’ என்ற பெயர் இருக்கிறது.பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
அதனால்தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்துள்ளனர்.சித்திரை: ஸ்நாதனாஷ்டமி, வைகாசி: சதாசிவாஷ்டமி, ஆனி: பகவதாஷ்டமி, ஆடி: நீலகண்டாஷ்டமி, ஆவணி: ஸ்தாணு அஷ்டமி, புரட்டாசி: சம்புகாஷ்டமி, ஐப்பசி: ஈசான சிவாஷ்டமி. கார்த்திகை: கால பைரவாஷ்டமி, மார்கழி: சங்கராஷ்டமி, தை: தேவதாஷ்டமி, மாசி: மகேஸ்வராஷ்டமி, பங்குனி: திரியம்பகாஷ்டமி. இப்படி ஒவ்வொரு அஷ்டமி வழிபாடுகளுக்கும் தனிச் சிறப்புக்கள் உள்ளன.
நவக்கிரக பைரவர்பைரவ பெருமான், ராகு-கேது எனப்படும் பாம்புகளை பூனூலாகத் தரித்தும், சந்திரனை சிரசில் வைத்தும், சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருபவராகிறார். காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரெண்டு ராசிகளும் அடக்கம்.மேஷ ராசி தலையிலும், ரிஷப ராசி வாயிலும், மிதுன ராசி கைகளிலும், மார்பில் கடகமும், சிம்ம ராசி வயிற்றிலும், இடையில் கன்னியும், துலா ராசி புட்டத்திலும், லிங்கத்தில் விருச்சிகமும், தனுசு ராசி தொடையிலும், முழந்தாளில் மகரமும், காலின்கீழே கும்பமும், அடித்தளங்கில் மீன ராசியும் உள்ளதாக சாஸ்திர, ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.அஷ்டமி செவ்வாய்தேய்பிறை அஷ்டமி நாள் செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும்.
அன்றைய தினம் பைரவரை வணங்கி பிரார்த்திக்க கடன் தொல்லை தீரும். மனஅமைதி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கையில் காசு, பணம் புரளும். செல்வ வளம் உண்டாகும். தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கூடிவரும்.செவ்வாடை சாற்றி, சிகப்பு அரளிப்பூ மாலை போட்டு, வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து வடை, பால், தேன், பழம் வைத்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட சகல யோக பாக்யங்கள் கூடிவரும்.தேங்காய் மூடி விளக்குஒரு முழு தேங்காயை உடைத்து அதில் குடுமி இருக்கும் பக்கம் பிய்த்தால் அதில் மூன்று கண் போன்ற அமைப்பு இருக்கும்.அந்த கண் பக்கம் இருக்கும் மூடியில் ஐந்துவிதமான எண்ணெய். அதாவது, இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் சேர்த்து திரி போட்டு
விளக்கேற்ற சனி தோஷங்கள், 7அரை சனி, அஷ்டம சனி தாக்கங்கள் நீங்கும்.போட்டி, பொறாமை, வயிற்றெரிச்சல் மூலம் வரக்கூடிய தோஷம் கழியும். காத்து, கருப்பு, கெட்ட சேஷ்டைகள், துர் ஆவிகள் அண்டாது என்பது ஐதீகம்தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு மிகவும் உகந்த நாள்.அன்றைய தினம் பைரவரை வணங்குவதால் லட்சுமி கடாட்சம் பெருகும்.
மேலும் திருவாதிரை நட்சத்திரத்துடன் வருவது
கூடுதல் சிறப்பாகும்.

பைரவ காயத்ரி மந்திரம்

ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.

இந்த காயத்ரியை அஷ்டமி
வழிபாடு தினத்தில் 108 முறை சொல்லலாம்.
பைரவரை மூலவராகக் கொண்ட கோவில், நாகப்பட்டினம் மாவட்டம் தகட்டூரில் உள்ளது. இங்குள்ள பைரவர் முன், ஒரு யந்திரம் உள்ளது. இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இங்கு பைரவாஷ்டமி விழா சிறப்பாக நடக்கும். தஞ்சாவூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யம் செல்லும் வழியில், வாயுமேடு கிராமம் இருக்கிறது. இங்கிருந்து பிரியும் ரோட்டில், 2 கி.மீ., சென்றால், தகட்டூரை அடையலாம்.
கேரளாவிலுள்ள வைக்கம் மகாதேவர் கோவிலில், கார்த்திகை தேய்பிறை அஷ்டமியை மகாதேவ வாஷ்டமி என்ற பெயரில் விமரிசையாக நிகழ்த்துவர்.அந்த நாளில், இங்கு அன்னதானம் செய்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும். இப்போதே பதிவு செய்தால், சில ஆண்டுகளுக்குப் பின் தானம் செய்ய அனுமதி வழங்கப்படும்.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மொட்டைக்கோபுரம் அருகில் உள்ள பைரவர் சக்தி வாய்ந்தவர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகியநாதர் கோவிலில் உள்ள பைரவர், இரட்டை நாய்களுடன் காவல் செய்கிறார்.பைரவருக்கு வடை மாலை, எலுமிச்சை மாலை அணிவிப்பது வழக்கம். கஷ்டங்கள் தீவிரமாகும் போது, காவல் தெய்வமான பைரவரை வணங்குங்கள். அவை காற்றில் பறக்கும் பஞ்சாகி விடும்.

நாம் சமீபத்தில் காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வட்டம் ஈச்சங்கருணை அடுத்த திருவடிசூலம்  என்றகிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பைரவர் திருத்தலத்தை தரிசித்தோம்,இங்குபைரவருக்கு என தனியாகவே மிக அழகாக கோவில் அமைத்துள்ளார்கள்,இயற்கைஎழிலுடன் மிக ரம்மியமாக காட்சியளிக்கின்றது,






இக்கோவிலின்சிறப்பேஅஷ்டபைவர்களையும்இங்குஒரே இடத்தில்தரிசிக்கலாம்.மூலவரின்  எதிரில்பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதியை மிக பிரம்மாண்ட சிலையாக அமைத்துள்ளார்கள்,             மேலும் இக்கோவிலை சுற்றி துணை விக்ரகங்களாக விநாயகர் ,முருகர் ,ஐயப்பன்,போன்ற சிலைகளையும் அமைத்துள்ளார்கள். இக்கோவிலைபற்றி மேலும் விவரம் வேண்டுவோர்நம்மை தொடர்புகொள்ளலாம்.


கோவிலின் முகவரி:-

Sri Maha Bhairavar Rudhra Temple
AddressPatravakkam - Thiruvadisoolam Rd, Kunnavakkam, Anjur, Tamil Nadu 603002
Phone099403 92913



தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் அல்லது சன்னதிகள் இருக்குமிடங்கள் வருமாறு:

1.சென்னை அருகே படப்பையில் உள்ள ஸ்ரீஜெய துர்கா பீடம்

2.சென்னை அருகே இருக்கும் வானகரம்

3.சென்னை பள்ளிக்கரணையில் பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அலுவலகம் அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் என்னும் திருமண மண்டபத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இருக்கிறது.

4.சென்னையில் இருக்கும் ஐ.சி.எஃப் பேருந்து நிலையத்துக்கு அருகில் கமலவிநாயகர் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் உள்ளே ஒரு சன்னதி இருக்கிறது.

5.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் அழிபடைதாங்கி(காஞ்சிபுரத்திலிருந்து ஆட்டோவில் 25 கி.மீ.தூரம் பயணிக்க வேண்டும்.
அடிக்கடி பேருந்து வசதி இல்லை;குண்டும் குழியுமான சாலை வசதி இருக்கிறது.ஆனால்,பழமையான ஸ்ரீசொர்ண பைரவர் ஆவார்)

6.சிதம்பரம் கோவில்
7.திரு அண்ணாமலையில் மூலவர் சன்னதியை ஒட்டி இருக்கும் உட்பிரகாரம்

8.திரு அண்ணாமலையில் இருந்து காஞ்சி(காஞ்சிபுரம் அல்ல)
செல்லும் சாலையில் 12 கி.மீ.தொலைவில் இருக்கும் காகா ஆஸ்ரமம்(சித்தர் வழிபாட்டு முறைப்படி நிறுவப்பட்ட ஒரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இதுதான்!!!)

9.திருச்சி அருகில் புதுக்கோட்டை செல்லும் வழியில் இருக்கும் தபசு மலை

10.திருச்சி மலைக்கோட்டையை ஒட்டி இருக்கும் தெருவில் ஒரு கோவில்

11.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவ சமாதி இங்கே இருக்கிறது)

12.பிள்ளையார்பட்டி அருகிலிருக்கும் வயிரவன்பட்டி

13.திண்டுக்கலில் இருந்து கரூர் செல்லும் வழியில் 10 கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீசொர்ண பைரவர் இருந்து அருளாட்சி செய்து வருகிறார்.
ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் இங்கே சிறப்பான பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றுவருகின்றன.

14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதி,
ரத்தின வேல் முருகன் உடையார் திருக்கோவில்,
ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,
நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6.

15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் திருக்கோவில்,
ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்
வழித்தடம்:கரூரிலிருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்.அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்.நடந்து செல்வது கடினம். (பூசாரி செல் எண்:92451 69455)

16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில், பாண்டிச்சேரி.
நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்
வழித்தடம்:பாண்டிச்சேரியிலிருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இந்த நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
இங்கே ஸ்ரீசொர்ண பைரவரின் இடுப்பில் ஸ்ரீசொர்ணதா தேவி கைவைத்தபடி இருக்கிறார்.எனவே,இங்கே வழிபடுவோர்களுக்கு விரைவான பலன்கள் கிடைத்துவருகிறது.

17.அறந்தாங்கியிலிருந்து 30 கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தியில் அருள்மிகு பவானீஸ்வரர் கோவிலில் பைரவ சித்தர் நிறுவிய ஸ்ரீசொர்ண பைரவர் சொர்ணதாதேவியுடன் அருள்பாலித்துவருகிறார்.

18.நாகப்பட்டிணம் நகருக்குள்ளே இருக்கும் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில், பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்-1.

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்( பஸ் ரூட்: பாகாயம் டூ காட்பாடி பேருந்துகள் எண்கள்:1,2 எனில் கல்யாண மண்டபம் பஸ் நிறுத்தம்; 1G, 2G எனில் காங்கேயநல்லூர் ஸ்டாப்=ஆர்ச் அருகே இறங்கி நடந்து வரவேண்டும்)

21.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி,மத்ய கைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய் நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையார்,சென்னை-20(பேருந்து நிறுத்தம்:மத்திய கைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோவில்,வாலாஜாபேட்டை.

23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில்,செட்டியார் அகரம் என்னும் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத் தெருவில் இருக்கும் முருகன் கோவிலில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் இருக்கிறார்.பூசாரி விஜய் குருக்கள் செல் எண்:8754559182(கோயம்பேடு பகுதி மக்களுக்கு இந்த கோவில் மிக அருகில் இருக்கிறது)

தமிழ்நாட்டின் தெற்கே திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவராக இவர் அருள் பாலித்து வருகிறார்.
ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதிக்கு வந்து மனதார நமக்குத் தேவையான நியாயமான கோரிக்கைகளை பிரார்த்தனையாக வைக்க வேண்டும்.

நன்றி,

//ஓம் ஸ்ரீ பைரவாய நம.//

No comments:

Post a Comment