Subscribe

BREAKING NEWS

22 February 2019

இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்


அனைவருக்கும் வணக்கம். 

இன்றைய பதிவில்  எறிபத்த நாயனார் பற்றி அறிய உள்ளோம். சென்ற ஆண்டு ஒவ்வொரு மாத அடியார்களின் பூசை என்று தொகுத்து அளித்தோம். சில பல காரணங்களால் தொடர முடியாமல் பொய் விட்டது. நம் மீது தவறு தான். இது போல் மீண்டும் நேரா வண்ணம் பார்த்துக் கொள்கின்றோம். அடியார்கள் என்றால் என்ன அவ்வளவு எளிதா? சிவ பெருமான் இந்த அடியார்களின் அன்பை பெற என்னென்ன செய்துள்ளார்? படிக்க படிக்க பேரானந்தம். அடியார்களின் அன்பு,அடியார்கள் பற்றி படிப்பது பெரிது என்பதால் தான் இந்த புராணத்திற்கு "பெரிய புராணம்" என்று பெயர் வழங்கலாயிற்று.

பெரியது என்ற உடன் தான் கீழ்க்கண்ட செய்தி நினைவிற்கு வருகின்றது.


அநபாய சோழரின் அமைச்சராக இருந்த வெள்ளியங்கிரி அங்குமிங்கும் உலவுவதைக் கண்ட அவரது மகன் அருண்மொழித் தேவர் ஆச்சரியப்பட்டார். (இராஜராஜ சோழன் நினைவாக அவரது இயற் பெயரை தன் மகனுக்கு வைத்தார்).

நாடாளும் ராஜாவின் ஆலோசகரான அவரது முகத்தில் இத்தகைய குழப்பத்தை அவர் இதுவரை பார்த்ததில்லை. தந்தையே! தங்கள் முகத்தில் ஏன் இந்தக் கலவரம்! வழக்கமாக, அதிகாலையே நீராடி, இறைவழிபாடு முடித்து அரண்மனைக்கு கிளம்பி விடுவீர்களே! இன்று ஏன் இன்னும் செல்லவில்லை! ஒருவேளை, பகைவர்கள் யாராவது சோழநாட்டிற்குள்.... என்று தொடர்ந்து பேச முயன்ற மகனை சைகையால் நிறுத்தினார் தந்தை. அருண்மொழி! மாமன்னர் அநபாயச் சோழனை எதிர்க்க இப்பூவுலகில் திராணி யாருக்குண்டு! என் பிரச்னையை உன்னிடம் சொல்வதால் பயனில்லை. ஏனெனில், அதை உன்னால் தீர்த்து வைக்க முடியாது,. தந்தையே! அப்படி முடிவு கட்டிவிட வேண்டாம். சிறுதுரும்பும் பல் குத்த உதவும் தானே!. தந்தை அந்த இக்கட்டான நிலையிலும் சிரித்தார். அருண்மொழி! அந்த மூன்று கேள்விகள் தான் என் குழப்பத்திற்கு காரணம்! அதற்கு இரவு முழுவதும் பல நூல்களில் இருந்து பதில்களைத் தேடினேன்! கிடைக்கவில்லை! என்ன மூன்று கேள்விகள்? யார் உங்களிடம் கேட்டது? மாமன்னர் தான் கேட்டார்.

மலையை விட பெரியது எது?
கடலை விட பெரியது எது?
உலகை விட பெரியது எது? 

என்று! இவற்றுக்குப் பதில் தேடும்முயற்சியில் தோற்றுப் போனேன்! அரசரிடம் என்ன பதில் சொல்வதென தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன்!

அருண்மொழி கலகலவென சிரித்தார். சரியாப்போச்சு! இந்த எளிய விடைகள் தெரியாமல் தானா இந்தக் குழப்பம்! கொஞ்சம் பொறுங்கள், என்றவர் ஒரு ஓலையை எடுத்தார். 3 பதில்களையும் எழுதிக் கொடுத்தார். தந்தை அதைப் படித்தார். கண்கள் வியப்பில் விரிந்தன. ஆம்... ஆம்... இவை தான் விடைகள்! உணர்ச்சிவசப்பட்டு கூவினார். அரசரிடம் சென்று ஓலையை நீட்டினார். அரசர் ஆனந்த வெள்ளத்தில் நீந்தினார். ஆலோசகரே! விடைகள் மிகப் பொருத்தமானவை. ஆனால், இதை எழுதியது நீர் அல்ல என்பது கையெழுத்திலிருந்து புரிகிறது! இந்த பதிலைச் எழுதியவர் யார்? என் மகன் அருண்மொழித்தேவர். அரசர், உடனடியாக அருண்மொழித்தேவரை தகுந்த மரியாதையுடன் பல்லக்கில் ஏற்றி வர ஏவலர்களுக்கு ஆணையிட்டார். அருண்மொழியும் வந்து சேர்ந்தார்.

தாங்களே! இந்த பதில்களைப் படியுங்கள் என்றார் அரசர்.
அவை வேறொன்றும் இல்லை நம் திருவள்ளுவர் எழுதிய குறள்கள் தான்.

மலையை விட பெரிது?


“நிலையிற் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது”

-எந்தச் செயலை எடுத்தாலும் அதை நிலையான தைரியமான மனதுடன் யார் செய்கிறானோ, அவனது மனம் மலையை விட உறுதியானது.

கடலை விட பெரிது எது?
“பயன் தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது”

-தனக்கு என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு, கடலை விடப் பெரிது.

உலகை விட பெரிது எது?
“காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”

-ஒருவனுக்கு தேவைப்படும் போது, சரியான சமயத்தில் கிடைக்கிற சிறிய உதவி உலகத்தை விட பெரிது.

அருண்மொழித்தேவர் இதை வாசித்துவிட்டு அரசரை ஏறிட்டுப் பார்த்தார். அறிவிற் சிறந்தவரே! தாங்களே இனி இந்நாட்டின் அமைச்சர், என ஆணையிட்டார் மன்னர். இவரே அநபாயனிடம் உத்தமச்சோழ பல்லவர் என்ற பட்டம் பெற்றவர். பிற்காலத்தில் ஆன்மிகத்தின் தலைமகனாக, சேக்கிழார் என்னும் பெயர்தாங்கி, பெரியபுராணம் என்று அழைக்கப்படும் சைவத் தமிழ் நூலான திருத்தொண்டர் புராணம் என்னும் பெருங்காவியத்தைப் படைத்தார்.

இந் நூலை இயற்றும் நோக்குடன் சிதம்பரம் கோயிலுக்குச் சென்ற இவருக்கு சிவபெருமானே உலகெலாம் என அடியெடுத்துக் கொடுத்துப் பாடச் செய்தார் என்பது சைவர்களின் நம்பிக்கை. ஓராண்டில் 4286 பாடல்களுடன் திருத்தொண்டர் வரலாற்றினை புராணமாக தந்தார்.
அதுநாள் வரை சைவசமய இலக்கியங்களில் பதினொரு திருமுறைகள் இருந்தன. அதனுடன் பன்னிரண்டாம் திருமுறையாக பெரியபுராணம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் உத்தம சோழப் பல்லவன், தொன்டைமான், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார் போன்ற பட்டங்களைப் பெற்றவர். உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் சேக்கிழார் புராணம் எனும் நூலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் எனும் நூலும் சேக்கிழாரை முன்வைத்து இயற்றப்பட்டுள்ளன.


மாசி - அஸ்தம் - எறிபத்த நாயனார் - மார்ச் 4

எறிபத்த நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். கையில் எப்போதும் மழுவுடன் இருப்பவர், ஒரு முறை அடியார் எடுத்துவந்த சிவ பூசைக்குறிய பூக்களை புகழ் சோழரின் பட்டத்து யானை தட்டிவிட, அந்த யானையும், அதன் பாதுகாவலறையும் எறிபக்த நாயனார் மழுவால் வெட்டி தண்டித்தார். அதன் பின்பு செய்தியறிந்த புகழ் சோழர், தன்னையும் தண்டித்துக் கொள்ள முனைய, சோழரின் வாளைப் பெற்று தன்னையை வெட்டிக் கொள்ள முற்பட்டார். அடியாரின் பெருமையை அறிந்து சிவபெருமான் உமையம்மையுடன் ரிசப வாகனத்தில் தோன்றி, இறந்தோர்களை உயிர்பித்து அருள் வழங்கினார்.



கொங்கு நாட்டிலே உள்ள கருவூரிலே அவதரித்தார். அவ்வூரிலுள்ள ஆனிலை என்னும் திருக்கோயில் எழுந்தருளிய பெருமானை வழிபட்டுச் சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்து வந்தார். இவர் சிவனடியார்களுக்கு ஒரு இடர் வந்து உற்றவிடத்து உதவும் இயல்பினை உடையவர்; அடியார்களுக்கு இடையூறு வந்த காலத்து அங்கு விரைந்து சென்று அடியார்களுக்குத் தீங்கு புரிந்தோரைப் பரசு என்னும் மழுப்படையால் எறிந்து தண்டிப்பார். அதன் பொருட்டு அவர் கையிலே எப்பொழுதும் மழுப்படை இருக்கும்.

அந்நகரிலே திருவானிலைத் திருக்கோயிலில் வீற்றிருக்கும் இறைவர்க்குப் பள்ளித்தாமப் பணி செய்துவந்த சிவமாமியாண்டர் என்னும் ஒரு முதிய அடியவர் ஒருவரும் இருந்தார். அவர் ஒருநாள் வைகறையில் துயிலெழுந்து நீராடித் தூய்மை உடையவராய் வாயைத் துணியாற் கட்டித் திருநந்தவனஞ் சென்றார். அங்கு மலர் கொய்து பூக்கூடையில் நிறைத்து பூக்கூடையைத் தண்டில் மேல் வைத்து உயரத் தாங்கிக் கொண்டு திருக்கோயிலை நோக்கி விரைந்து வந்தார். அன்று மகாநவமியின் முதல் நாள். அந்நகரில் அரசு வீற்றிருக்கும் புகழ்சோழரது பட்டத்து யானை, ஆற்றில் நீராடி, அலங்கரிக்கப் பெற்று மதச் செருக்குடன் பாகர்க்கு அடங்காது விரைந்து வந்தது. அது சிவகாமியாண்டரைப் பின்தொடர்ந்து ஓடி அவர் தம் கையிலுள்ள பூக்கூடையைப் பறித்துச் சிதறியது. யானை மேல் உள்ள பாகர்கள் யானையை விரைந்து செலுத்திச் சென்றனர். சிவகாமியாண்டவராகிய அடியவர், இறைவர்க்கு சாத்தும் திருப்பள்ளித் தாமத்தைச் சிதறிய யானையின் செயல் கண்டு வெகுண்டு அதனைத் தண்டு கொண்டு அடிப்பதற்கு விரைந்து ஓடினார். ஆனால் முதுமை காரணமாக இடறிவிழுந்து நிலத்திலே கைகளை மோதி அழுதார்.

சடாமுடியில் ஏறும் மலரை யானை சிந்துவதோ எனப் புலம்பினார். ‘சிவதா, சிவதா’ எனும் அடியாரது ஓலத்தைக் கேட்டு விரைந்து அங்கு வந்த எறிபத்தர் யானையின் செய்கை அறிந்து வெகுண்டார். சிவகாமியாண்டாரைக் கண்டு வணங்கி “உமக்கிந்த நிலைமையைச் செய்த யானை எங்கே போய்விட்டது” என்று கேட்டார். சாமிக்குச் சாத்தக் கொண்டு வந்த பூவைச் சிதறிவிட்டு இந்தத் தெருவழியேதான் போகிறதெனக் கூறினார். ‘இந்த யானை பிழைப்பதெப்படி’ என யானையைப் பின்தொடர்ந்து சென்று யானையின் துதிக்கையை மழுவினால் துணித்தார்; அதற்கு முன்னும் இருமருங்கும் சென்ற குத்துக்கோற்காரர் மூவரையும் யானை மேலிருந்த பாகர் இருவரையும் மழுவினால் வெட்டி வீழ்த்தி நின்றார்.

தமது பட்டத்து யானையும், பாகர் ஐவரும் பட்டு வீழ்ந்த செய்தியைக் கேட்ட புகழ்ச்சோழர் வெகுண்டார். ‘இது பகைவர் செயலாகும்’ என எண்ணி, நால்வகைச் சேனைகளுடன் அவ்விடத்தை அடைந்தார்; யானையும், பாகரும் வெட்டப்பட்டிருந்த அவ்விடத்தில் பகைவர் எவரையும் காணாதவராய் இருகை யானைபோல் தனித்து நிற்கும் எறிபத்தராகிய சிவனடியாரைக் கண்டார். தம் யானையையும் பாகர்களையும் கொன்றவர் அங்கு நிற்கும் அடியவரே என அருகிலுள்ளார்கள் கூறக் கேட்டறிந்த வேந்தர், சிவபெருமானுக்கு அன்பராம் பண்புடைய இச்சிவனடியார் பிழைகண்டாலல்லது இவ்வாறு கொலைத்தண்டம் செய்யமாட்டார். எனவே என்னுடைய யானையும், பாகர்களும் பிழை செய்திருக்கவேண்டும் எனத் தம்முள்ளே எண்ணியவராய், தம்முடன் வந்த சேனைகளைப் பின்னே நிறுத்தி விட்டுத் குதிரையின்று இறங்கி, ‘மலைபோலும் யானையை இவ்வடியார் நெருங்கிய நிலையில், அந்த யானையால் இவர்க்கு எத்தகைய தீங்கும் நேராது விட்ட தவப்பேறுடையேன், அம்பலவானரடியார் இவ்வளவு வெகுளியை (கோபத்தை) அடைவதற்கு நேர்ந்த குற்றம் யாதோ? என்று அஞ்சி எறிபத்தரை வணங்கினார். எறிபத்தர், யானையின் சிவபாதகச் செயலையும், பாகர் விலகாதிருந்ததனையும் எடுத்துரைத்தார். அதனை உணர்ந்த புகழ்ச்சோழர், ‘சிவனடியார்க்குச் செய்த இப்பெருங் குற்றத்திற்கு இத்தண்டனை போதாது; இக் குற்றத்திற்குக் காரணமாகிய என்னையும் கொல்லுதல் வேண்டும் ஆனால் மங்கலம் பொருந்திய மழுப்படையால் கொல்வது மரபன்று. வாட்படையாகிய இதுவே என்னைக் கொல்லுவதற்கு ஏற்ற கருவியாம் என்று தமது உடைவாளை ஏற்றுக் கொள்ளும்படி எறிபத்தரிடம் நீட்டினார்.

அதுகண்ட எறிபத்தர் ‘கெட்டேன், எல்லையற்ற புகழனாராகிய வேந்தர் பெருமான் சிவனடியார்பால் வைத்த அன்பிற்கு அளவில்லாமையை உணர்ந்தேன்’ என்று எண்ணி, மன்னார் தந்த வாட்படையை வாங்கமாட்டதவராய்த் தாம் வாங்காது விட்டால் மன்னர் அதனைக் கொண்டு தம்முயிரைத் துறந்துவிடுவார் என்று அஞ்சித் தீங்கு நேராதபடி அதனை வாங்கிக் கொண்டார். உடைவாள் கொடுத்த புகழ்ச்சோழர், அடியாரை வணங்கி ‘இவ்வடியார் வாளினால் என் குற்றத்தைத் தீர்க்கும் பேறு பெற்றேன்’ என உவந்து நின்றார். அதுகண்ட எறிபத்தர் தமது பட்டத்து யானையும், பாகரும் என் மழுப்படையால் மடிந்தொழியவும், உடைவாளும் தந்து, ‘எனது குற்றத்தைப் போக்க என்னைக் கொல்லும், என்று வேண்டும் பேரன்புடைய இவர்க்கு யான் தீங்கு இழைத்தேனே என மனம் வருந்தி, இவ்வாளினால் எனது உயிரை முடிப்பதே இனிச் செய்யத்தக்கது’ என்று எண்ணி வாட்படையினை தம் கழுத்திற்பூட்டி அரிதற்கு முற்பட்டார். அந்நிலையில் புகழ்ச்சோழர், ‘பெரியோர் செய்கை இருந்தவாறு இது கெட்டேன்’ என்று எதிரே விரைந்து சென்று வாளையும் கையையும் பிடித்துக் கொண்டார்.

அப்பொழுது சிவபெருமான் திருவருளால் ‘யாவராலும் தொழத்தகும் பேரன்புடையவர்களே! உங்கள் திருத்தொண்டின் பெருமையினை உலகத்தார்க்குப் புலப்படுத்தும் பொருட்டு இன்று வெகுளிமிக்க யானை பூக்கூடையினை சிதறும்படி இறைவனருளால் நிகழ்ந்தது” என்று ஒரு அருள்வாக்கு எழுந்தது. அதனுடனே பாகர்களோடு யானையும் உயிர்பெற்றெழுந்தது. எறிபத்தர் வாட்படையை நெகிழவிட்டுப் புகழ்சோழர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். வேந்தரும் வாட்படையைக் கீழே எறிந்து விட்டு எறிபத்தர் திருவடிகளைப் போற்றி நிலமிசை வீழ்ந்து இறைஞ்சினார். இருவரும் இறைவன் அருள்மொழியினை வியந்துபோற்றினர். இறைவர் திருவருளால் சிவகாமியாண்டாரது பூக்கூடையில் முன்புபோல தூய நறுமலர்கள் வந்து நிரம்பின. பாகர்கள் யானை நடத்திக் கொண்டு மன்னரை அணுகினர். எறிபத்தர் புகழ்ச்சோழரை வணங்கி, அடியேன் உளங்களிப்ப இப்பட்டத்து யானைமேல் எழுந்தருளுதல் வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டார். புகழ்ச்சோழர் எறிபத்தரை வணங்கி யானைமேலமர்ந்து சேனைகள் சூழ அரண்மனையை அடைந்தார். சிவகாமியாண்டார் திருப்பூங்கூடையைக் கொண்டு இறைவர்க்குத் திருமாலை தொடுத்தணித்தல் வேண்டித் திருக்கோயிலை அடைந்தார். எறிபத்த நாயனார் இவ்வாறு அடியார்களுக்கு இடர் நேரிடும்போதெல்லாம் முற்பட்டுச் சென்று தமது அன்பின் மிக்க ஆண்மைத் திறத்தால் இடையூறகற்றித் திருக்கயிலையை அடைந்து சிவகணத்தார்க்கு தலைவராக அமர்ந்தார்.





 இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன் 

மீண்டும் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

 மார்ச் மாத அடியார்கள் பூசை - https://tut-temple.blogspot.com/2018/02/blog-post_28.html

 மே மாத அடியார்கள் பூசை - https://tut-temple.blogspot.com/2018/05/blog-post_11.html

No comments:

Post a Comment