Subscribe

BREAKING NEWS

09 April 2019

வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன்

அனைவருக்கும் வணக்கம். 

இன்று பங்குனி ரோகினி நட்சத்திரம். இந்த ஆண்டு கூடுமானவரையில் அடியார்களின் பூசை தொகுத்து தந்து வருகின்றோம். அந்த வரிசையில் இன்று  நேச நாயனார் பற்றி சிறிது உணர்வோம்.

நல் ஒழுக்கம் உடைய பெரியோர்கள் நிலைபெற வாழும் காம்பீலி என்னும் பழம்பதி (தொன்மையான இடம்) ஒன்றுண்டு. அதில் அறுவையார் குலத்தில் செல்வம் மிக்க குடியில் வந்தவர் நேசர் என்பவர். அவர் இடையறாது சிவனடியார்களைப் போற்றி வந்தார். ஒரு போதும் சிவனடிச் சிந்தை மறவார். வாக்கினால் திருவைந்தெழுத்து ஓதுவதையும் மறவார். தமது மரபின் கைத்தொழிலைச் சிவனடியர்களைக்காகவே செய்துவந்தார். உடையும், கீழ்கோவணமும் நெய்து அடியார்களுக்கு இடைவிடாது நாளும் அவர் வேண்டியமுறையால் ஈந்து வந்து சிவனடி நிழல் சேர்ந்தார்.

பலவிதங்களில் சிவத் தொண்டு நாம் செய்யலாம். அதில் சிவனடியார்களுக்கு உடை கொடுத்து உதவுதல் சிறந்த சிவத்தொண்டு  என்று நாம் உணர வைப்பவர் நேச நாயனார் ஆவார்.




யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது


சாலியர்கோக் காம்பீலித் தலைவர் மேன்மை
    தாவாத புகழ்நேசர் தஞ்சொ லென்றுங்
கோலியவைந் தெழுத்தோதிச் சிந்தை யுன்னிக்
    கொண்டபொரு ளன்பர்கொளக் கொடுத்து வாழ்வார்
சீலமிகுந் திருத்தொண்டர்க் குடையுங் கீளுந்
    திருந்தியவொண் கோவணமுஞ் சேர வீந்து
பாலனைய வொளிநீற்றான் பாத மேத்திப்
    பரலோக முழுதாண்ட பான்மை யாரே.

காம்பீலிநகரத்திலே, சாலியர் குலத்துக்குத் தலைவராகிய நேசநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் தம்முடைய மனத்தின் செய்கையைப் பரமசிவனுடைய திருவடிக்கு ஆக்கி, வாக்கின் செய்கையை ஸ்ரீ பஞ்சாக்ஷரத்துக்கு ஆக்கி, கையின் செய்கையைச் சிவனடியார்களுக்கு ஆக்குவாராகி, வஸ்திரமுங் கீளுங் கோவணமும் நெய்து, தம்மிடத்தில் வருஞ் சிவனடியார்களுக்கு இடையறாது கொடுத்து நாடோறும் அவர்களை வணங்கித் துதித்துக் கொண்டிருந்து சிவபதத்தை அடைந்தார்.





நேச நாயனார் புராண சூசனம் - பண்டிதர் மு. கந்தையா எழுதியது
சிவனடியார்க்கு உடைகள் கோவணம் உதவுதல் சிறந்த சிவ தொண்டாதல்

சிவனடி யார்களாவார் சிவனடிமைத்திறமொன்றே கண்ணாயிருப்பதன்றித் தமது உடலுயிர் வாழ்வியல் பற்றிய ஏதொன்றையுங் கருதிப் பேணா நிலையினராவர். அது, "ஆரங் கண்டிகையாடையுங் கந்தையே பார மீசன் பணியல தொன்றிலார்" எனத் திருத்தொண்டர் புராணத்தும், "மாடுண்டு கன்றுண்டு மக்களுண் டென்று மகிழ்வதெலாங் கேடுண் டெனும்படி கேட்டுவிட்டோமினிக் கேள்மனமே ஓடுண்டு கந்தையுண் டுள்ளே எழுந்தைந்து மோதவுண்டு தோடுண்ட கண்டனடியார் நமக்குத் துணையுமுண்டே" எனப் பட்டினத்தார் பாடலினும் வருவனவற்றாற் பெறப்படும். திருவருள் விட்ட வழி, தமது இன்றியமையாத் தேவைகளாகிய உண்டி உடையாதியன எவரேனும் தாமாக வழங்கினாற் கண்டுகொள்வதே அவர்கள் நிலையாதலின் அவர்களின் அத்தேவைகளை எவருந் தாமாக நினைந்து முன்வந்துதவி அவர்களைப் பேணுதல் சிறந்த சிவ புண்ணியமாகும். இச்சிவ புண்ணியத்தாற் சிவப் பேறுற்ற அமர்நீதி நாயனார் செய்தி ஏலவே அறியப்பட்டதொன்றே.


நேசநாயனார் சாலியர் எனப்படும் நெசவுத் தொழிலாளரா யிருந்தமையின் சிவனடியார்க் குதவும் உடை கீள் கோவணம் என்பவற்றைத் தாமே நெய்து அவர்கள் மகிழக் கொடுக்கும் வாய்ப்புடையராயினார். சிவனால் அருளப்பட்டனவாகிய திரிகரணங்களுஞ் சிவன்பணிக்கே அர்ப்பணிக்கப்பட்டாக வேண்டுவன என்னும் ஞான விவேகத்தினால் அவர் தம் மனத்தொழிற் பாடெல்லாம் சிவன் திருவடிகளையே நினைதற்கும் வாக்கின் தொழிற் பாடெல்லாம் அவர் திருநாமமாகிய அஞ்செழுத்தையே ஓதுதற்கும் அர்ப்பணித்துக் கொண்டவராய்க் கையின் தொழிற்பா டெல்லாம் சிவனடியார்க்கு உடை கீள் கோவணம் நெய்வதாகக் கொண்டிருந்த அவரது பத்திமை யொழுக்க மாண்பினை அவர் புராணங் காட்டும். அது, "ஆங்கவர் மனத்தின் செய்கை யரனடிப் போதுக் காக்கி ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்செழுத்துக் காக்கித் தாங்கு கைத் தொழிலின் செய்கை தம்பிரானடியார்க்காகப் பாங்குடை உடையுங் கீளும் பழுதில் கோவணமுஞ் செய்வார்" என வரும்.

    “மன்னியசீர் மறைநாவன் நின்றவூர் பூசல்

    வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன்”


மீண்டும் சந்திப்போம்.

மீள்பதிவாக:-


நாட்டமிகு தண்டிக்கும் அடியேன் - https://tut-temple.blogspot.com/2019/04/blog-post.html

அறைகொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன் - https://tut-temple.blogspot.com/2019/03/blog-post_16.html
கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்  - https://tut-temple.blogspot.com/2019/03/blog-post_1.html
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன் - https://tut-temple.blogspot.com/2019/02/blog-post_22.html
மார்ச் மாத அடியார்கள் பூசை - https://tut-temple.blogspot.com/2018/02/blog-post_28.html
மே மாத அடியார்கள் பூசை - https://tut-temple.blogspot.com/2018/05/blog-post_11.html

No comments:

Post a Comment