Subscribe

BREAKING NEWS

01 March 2019

கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று மாசி - பூராடம். கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன் என்று வழங்கப் பெறும் காரி நாயனார் அவதரித்த நாள் இன்று. அடியார் புகழ் சொல்வதும் இனிதே, படிப்பதும் இனிதே. கேட்பதும் இனிதே. சைவம் தழைக்க தொண்டாற்ற வேண்டி தான் 63 நாயன்மார்களும் நம் தமிழ் நாட்டில் திருஅவதாரம் செய்து உள்ளார்கள். நம் தாய் திருநாட்டை தாண்டி அதிகம் மகான்களும் இல்லை. இது ஒரு புண்ணிய பூமி. நமக்குத் தான் புரியாமல் உள்ளது. அடியார்கள் வேறு..சிவம் வேறு அல்ல.இரண்டும் ஒன்றே..அன்பே சிவம் என்று நம்மை அடியார்கள் உணர்த்த செய்கின்றார்கள். நம் தளம் சார்பில் ஒரு புதிய முயற்சி செய்ய இருக்கின்றோம்.  அது குருவருளால் சிறக்க பிரார்த்திக்கின்றோம்.

சரி. இனி காரி நாயனார் பற்றி சிந்திப்போம்.

முதலில் சுருக்கமாக காண்போம். மறையார் வாழும் திருக்கடவூரில் தோன்றியவர் காரி நாயனார். அவர் வண் தமிழில் துறைகளின் பயன் தெரிந்து சொல்விளங்கிப் பொருள் மறையத் தமது பெயராற் காரிகோவை என்ற நூலினை இயற்றித் தமிழ் மூவேந்தர்களிடமும் (சேர, சோழ, பாண்டியர்) சென்று நட்பினைப் பெற்றனர். அவர்கல் மகிழும்படி அதற்குப் பொருள் விரித்துரைத்தார்.
அவர்கள் தந்த பெருநிதிக் குவைகளைக் கொண்டு சிவனுக்குப் பல கோயில்கள் கட்டினார். எல்லாருக்கும் மன மகிழும் இன்ப மொழிப்பயனை இயம்பினார். சிவனடியார்களுக்குப் பெருஞ் செல்வங்களை மிகுதியாக வழங்கினார். இறைவரது திருக்கயிலை மலையினை என்றும் மறவாதிருந்தார். தமது புகழ் விளங்கி இடையறாத அன்பினாலே சிவனருள் பெற்று உடம்புடன் வடகயிலை மலையினைச் சேர்ந்தார். 



யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது


திருக்கடவூர் வருமுரவோர் காரி யாராந்
    திகழ்தொண்டர் வண்டமிழ்நூ றிருந்த வோதி
விருப்பொடுதம் பெயராற்பா விளம்பி மும்மை
    வேந்தரையு முறைமுறையே மேவி யங்க
ணுரைத்தவுரை நயமாக்கி யவர்பா லேய்ந்த
    வொண்பொருளா லாலயங்க ளோங்கச் செய்து
தரைக்குளருந் தவர்க்கேவ றகமுன் போற்றுந்
    தன்மையா லருள்சேர்ந்த நன்மை யாரே.

திருக்கடவூரிலே, தமிழ்மொழியிலே மிகவல்ல காரி நாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் சொல்விளங்கப் பொருண் மறைந்து கிடக்கும்படி தம்பெயரினாலே தமிழ்க் கோவை பாடி, தமிழ்நாட்டு மூவேந்தரிடத்துஞ்சென்று, அவர்கள் மகிழும்படி அதற்குப் பொருள் விளங்கச் சொல்லி அவர்களிடத்திற்பெற்ற திரவியங்களைக்கொண்டு, சிவாலயங்கள் பலவற்றைக் கட்டுவித்தும், சிவனடியார்களுக்கு வேண்டுந்திரவியங்களைக் கொடுத்து, அவர்களிடத்திற்பெற்ற திரவியங்களைக் கொடுத்தும், திருக்கைலாசமலையை மறவாத கருத்தினராகி, உலகமெங்குந் தம்முடைய சிவகீர்த்தியை நிறுத்தி, பரமசிவனது திருவருளைப் பெற்று, மனம்போல உடம்புந் திருக்கைலாசமலையை அடையப்பெற்றார்.


காரி நாயனார் புராண சூசனம்- பண்டிதர் மு. கந்தையா எழுதியது
வண்டமிழின் துறையான பயன் இதுவெனல்

வாழ்வியல், இன்பப்பேறே இலட்சியமாகக் கொண்டுள்ள தென்பதும் அவ்வின்பமும் உயிர் மலமாயா கன்மப் பற்றை விடாதிருக்கும் அதன் பெத்த நிலையில் பொறிபுலன் கரணச் சார்பால் விளையும் நிலையற்ற சிற்றின்ப மென்றும் அப்பற்றை விட்டு நீங்கியிருக்கும் அதன் சுத்தநிலையிற் பொறிபுலன் கரணங்களுக்கு அப்பாலாய்த் திருவருட் சகாயத்தால் விளையும் நிலையான பேரின்பமென்றும் இருவகைத்தாமென்பதும் தத்துவ உண்மைகளாம். வாழ்வியல் முழுமையை ஒரே கூட்டாக நோக்கி அதற் கிலக்கணமமைக்கும் ஆதிப் பழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியம், குறித்த பெத்தநிலை யின்பத்தை ஒருவன் ஒருத்தி இடையில் நிகழும் உள்ளன் பொருப்பாட்டுநிலை ஒழுக்கமான அகத்திணை என நிறுத்தி அவ்வின்பமும் பிரிவினால் இடையீடுபடுதலும், பருவம் முதிர உவர்த்தலும் மரணத்தோடறுதியாதலும் ஆகிய நிலையாமைப் பண்பினதாக லுணரவருமாறும் உயிர் அதை உணர்ந்தவழி, நிலையான பேரின்பத்தை நாடி முயன்று பெறுமென்பது உணர்த்துதல் மூலம் குறித்த இன்பப் பேற்றியல்பைத் துறைப்படுத்து விளக்கிற்றாம். அது, அந்நூல் உரையாசிரியராகிய நச்சினார்க்கினியர், "இங்ஙனம் இந்நிலையாமை யானும் பிறவற்றானும் வீட்டிற்கே காரணங் கூறினார். இங்ஙனங் கூறவே இவ்வாசிரியர் பெரிதும் பயன் தருவதோரிலக்கணமே கூறினாராயிற்று, இதனாற் செய்த புலனெறி வழக்கினை யுணர்ந்தோர் இம்மை மறுமை வழுவாமல் செம்மை நெறியால் துறைபோவ ராதலின்" எனக் கூறி யுள்ளமையான் வலுவுறும். எனவே, குறித்த அகத்திணையும் அதன் நிலையாமை விளைவுமாகத் தொல்காப்பியத்தால் உணர்த்தப் பெற்றதுவே செந்தமிழின் துறையாவதெனவும் அதன்வழிப் பேறாகிய அந்தமி லின்பத் தழிவில் வீடே அதன் பயனாவதும் இனிது பெறப்படும். 

ஊழ்வசத்தால் பருவமங்கையான தலைவி யொருத்தியைப் பருவ இளைஞனான தலைவன் ஒருவன் கண்டுற்ற காதலால் தளர் வுற்றிருக்கையில் அவன் நலம் வினவும் பாங்கில் அவனது பாங்கன், "நின் தளர்ச்சிக்குக் காரணம் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தமையோ?" எனக் கிண்டல் பண்ணியதாகக் காட்டுந் திருக்கோவையார்ச் செய்யுட் கூற்றும் தமிழ்த்துறை என்பது அகத்திணையே ஆதற் கத்தாட்சியாம். அத்துடன் அத்துறைப்பயன் வீடென்பதற்கு, மேற்கண்ட நச்சினார்க்கினியர் உரைப்பகுதியில் வரும் இவ்வாசிரியர் வீட்டுக்கே காரணங் கூறினார்" என்பதும் அத்தாட்சியாம். இவ்வகையில் அகத்திணையின் முன்விளைவாகிய சிற்றின்பமும் அதன் பின்விளைவாகிய பேரின்பமும் தரத்தினுந் தன்மையினும் பாரிய வேறுபாடுடைய வேனும் இரண்டும் தனித்தனி பிறரறியவாரா அந்தரங்க அநுபவங்களாதலும் இரண்டும் அதுவது நிகழும் நிலையில் இல்லது, இனியது, நல்லது என்ற நயப்பிற்குரியவாதலும் சொல்லொணாத் தன்மைய வாதலும் ஒருகா லுணர்ந்தவர் தாமே மறித்துணர வாராத் தன்மைய வாதலும் ஆகிய ஒப்புமைப் பண்புகள் கொண்டனவா யிருக்குந் தன்மையும் மனித வாழ்விலட்சியம் இவ்விரண்டையும் உள்ளடங்கக் கொண்டிருத்தலின் இரண்டுக்கும் ஒன்றே யிடமாயமையக் கூடிய பிரபந்த மொன்றின் இன்றியமையாமையும் நோக்கி, நுண்மாண் நுழைபுலமும் மெய்யுணர்வு விளக்கமும் வாய்ந்த தெய்விக ஞானத் தமிழ்ப்புலவோர் கோவைப் பிரபந்தம் இயற்றுவாராயினர். அது, மெய்ஞ்ஞானச் செல்வராகிய மாணிக்கவாசக சுவாமிகள் செய்தருளிய திருச்சிற்றம்பலக் கோவை யாருக்கு உரை விளக்கஞ் செய்யும் பேராசிரியர் என்பவர், "இதனை ஆசிரியர் இறைவனூற்பொருளும் உலகநூல் வழக்குமென இருபொருளும் நுதலி எடுத்துக்கொண்டார் எனக்கூறியுள்ளமை யானும் அக்கோவை நூலில் வருஞ் செய்யுள்களில், சிற்றின்பக் காதல் விளக்கம் புறநிலையாகிய தூலப்பொருளாகவும் பேரின்பக் காதல்விளக்கம் அகநிலையாகிய முக்கியப் பொருளாகவும் அமைந்திருக்கக் காணப்படலானும் அறியப்படும். அக்கோவைச் செய்யுளொன்றில், ஒத்த அன்பினராய ஒருவனும் ஒருத்தியும் தம்வச மழிந்து அமுதுஞ்சுவையும் போல் ஒன்றிக்கலக்கும் புணர்ச்சியூடேயும், தான் அநுபவிப்பவன் அவள் அநுபவத்துணை என்ற தோருணர் விருந்து கொண்டிருப்பதை எண்ணி வியத்தலாகிய சிற்றின்பக் காதற்பொருள் அதன் புறநிலையாகிய தூலப் பொருளாயிருக்க, பக்குவான்மாவும் பேரின்பக் கிழத்தியும் அமுதுஞ் சுவையும்போல் ஒன்றுபட் டியைவதாகிய அபேத அத்துவித முத்தியின்பத்தூடேயும் ஆன்மாவாகிய தான் அநுபவிப்பவன் பேரின்பக் கிழத்தியாகிய அவள் அநுபவத்துணை என்ற தோருணர்விருந்து கொண்டிருத்தலை எண்ணி வியத்தலாகிய பேரின்பக் காதற்பொருள் அதன் அகநிலையாகிய சூக்குமப் பொருளா யிருத்தல் அதற்கு எடுத்துக்காட்டாதற் பாலதாம். அச் செய்யுள், "சொற்பா லமுதிவள் யான் சுவை யென்னத் துணிந்திங்ஙனே நற்பால் வினைத் தெய்வந் தந்தின்று நானிவளாம் பகுதிப் பொற்பா ரறிவார் புலியூர்ப் புனிதன் பொதியில் வெற்பிற் கற்பாவிய வரைவாயக் கடிதோட்ட களவகத்தே" என வரும். 

இவ்வகையில் உலகியல் நூற்பொருளாகிய லௌகிகக் காதலும் அறிவனூற் பொருளாகிய முத்திகூட்டும் ஆன்மிகக் காதலும் ஒருங்கமையக் காட்டுங் கோவை நூல் தமிழில் மற்றுஞ் சில இருந்திருக்கலாம் என்பது, காரி நாயனார் வரலாற்றில் அவர் பேரிலான கோவைப் பிரபந்தமொன் றிருந்ததெனப் படுதலாற் பெறப்படும். அது மேற்குறித்த திருச்சிற்றம்பலக் கோவைப் பண்பே தன்பண்பாகக் கொண்டிருந்திருக்குமெனல் சேக்கிழார் வாக்கில், "மறையாளர், திருக்கடவூர் வந்துதித்து வண்டமிழின் துறையான பயன் தெரிந்து சொல்விளக்கிப் பொருள்மறையக் குறையாத தமிழ்க்கோவை தம்பெயராற் குலவும்வகை முறையாலே தொகுத்தமைத்து மூவேந்தர் பாற்பயில்வார்" என வருவதனாற் புலனாம். இதன்கண் வண்டமிழின் துறையான பயன் தெரிந்து எனவுஞ் சொல்விளங்கிப் பொருள் மறைய எனவும் வருபவை மேற்குறித்தவாறான கோவையிலக்கணத்தையே வகுத்துரைக்குஞ் சீர்மை குறிப்பிடத்தகும். இவற்றுள் முன்னையது பற்றிய விளக்கம் ஏலவே கண்டுகொள்ளப் பெற்றதாதலின் பின்னையதன் விளக்கமே இங்கு வேண்டப்படும். சொல்விளங்கி என்பது செய்யுட் சொற்பொருளாக நேரே அறியப்படுவதன் மூலம் விளங்கக்கிடக்கும் சாமானியப் பொருளாகிய லௌகிகக் காதல் விளங்குமாற்றையும் பொருள் மறைய என்பது அங்ஙனம் வெளிப்படத் தோன்றாது உய்த்துணர்ந்து கொள்ளக்கிடக்கும் அதன் முக்கியப் பொருளாகிய ஆத்மிகக் காதல் உள்ளடங்கிக் கிடக்குமாற்றையுங் குறித்தனவாம். முன் எடுத்துக்காட்டிய சொற்பால முதிவள்... என்னுந் திருக்கோவையார்ச் செய்யுளில் அவதானிக்கக் கிடந்தவாறு இரண்டற்கும் ஒன்றேயிடமாந் தன்மையை இது குறிக்கும் என்க. அது அங்ஙனமாதல், இந்த நாயனார் தமது கோவைப் பிரபந்தத்தை மூவேந்தர்பாற் கொண்டு சென்று அரங்கேற்றுகையில் செய்யுள் தோறும் அவர்கள் தாமாகப் புரிந்து கொள்ளற்பால தல்லாத அவற்றின் முக்கியார்த்தமான் சூக்குமப் பொருளைத் தம் உரைநயத்தினால் விளங்க வைத்ததாக அவர் புராணத்தில் மேல்வருங் குறிப்பொன்றினாலும் இனிதுணரப்படுவதாம்.

இங்ஙனம் தமிழ்த்துறைப் பயன் தெரிந்து அகத்திணை தழுவிய கோவைப் பிரபந்தமியற்றி அதன் முக்கியப் பொருளான வீட்டின்ப விளக்கம் இனிது புலப்பட மூவேந்தர் முன்னிலையில் அரங்கேற்றி அவர்களால் மகிழ்ந்துதவப் பெற்ற பெரும் பரிசுத்தொகை முழுவதும் சிவதலங்கள் நிருமாணித்தலினும் சிவனடியார்க்கு வெகுமதி செய்தலினும் விரயமாக்குஞ் சிவ தொண்டு நெறிநின்ற காரி நாயனார், தானே அகத்திணைக் கோவையின் முக்கியப் பொருளாகிய வீட்டின்ப மளிப்பவனாகிய சிவன் பெருங்கருணைக்காளாதலும் தமது பிராரப்த முடிவில் கூட்டோடே சிவன் மகிழ்ந்துறையும் திவ்விய உலகாகிய திருக்கயிலையை யடைந்தின்புற்றிருத்தலும் சொல்லாமே அமையுமாயினுஞ் சேக்கிழார் நாயனார் சொல்லி யின்புறுதல் கொண்டு அவர் பேற்றின் மகிமை நன் குணரப்படும். அது, "ஏய்ந்தகடல் சூழுலகி லெங்குந்தம் இசைநிறுத்தி ஆய்ந்தவுணர் விடையறா அன்பினராய் அணிகங்கை தோய்ந்த நெடுஞ் சடையார்தம் அருள்பெற்ற தொடர்பினால் வாய்ந்தமனம் போலுடம்பும் வடகயிலை மலைசேர்ந்தார்" என வரும்.

திருச்சிற்றம்பலம்.

கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்

 மீண்டும் சந்திப்போம்.
மீள்பதிவாக:-
 இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன் - https://tut-temple.blogspot.com/2019/02/blog-post_22.html

 மார்ச் மாத அடியார்கள் பூசை - https://tut-temple.blogspot.com/2018/02/blog-post_28.html
 மே மாத அடியார்கள் பூசை - https://tut-temple.blogspot.com/2018/05/blog-post_11.html

No comments:

Post a Comment