Subscribe

BREAKING NEWS

30 June 2017

யுகங்களைக் கடந்த ஏக புஷ்பம் திருத்தியமலை


அங்கிங்கெனாதபடி எங்கும் வீற்றிருந்து, தம்மை நாடிவரும் அடியார்கள் குறைகளைத் தீர்ப்பவன் பொன் னார் மேனியனான சிவபெருமான். அவனுக்கு   ஆயிரம் நாமங்கள் உண்டு. அவற்றில் ஒரு நாமம் ‘ஏகபுஷ்பப் பிரியநாதன்’. இந்தத் திருப்பெயரோடே ஈசன் அமர்ந்து அருளும் தலமே திருத்தியமலை. இதன் பழைய பெயர் திருத்தேசமலை.  தரை மட்டத்திலிருந்து சுமார் 200 மீட்டர் உயரத்தில் உள்ளதுதான் திருத்தியமலை. இது சிறு குன்று. தலைக்காவிரியில் இருந்து இந்த திருத்தியம லைக்கு வந்து ஏகபுஷ்பப் பிரியநாதரையும் தாயினும் நல்லாளையும் தரிசித்து வழிபட்டனராம் அகத்திய முனிவரும் அவர் மனைவி லோபாமுத்திரையும்.திருமணத்தடை, கல்வித்தடை, மணமக்களிடையே ஏற்படும் பிரச்னைகள் முதலான எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து அருள்கிறாள், தாயினும் நல் லாள். ஆறு வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் போதும். சூரியனைக் கண்ட பனிபோல தடைகள் தானே விலகும்.




படியேறிச் சென்றால் தெய்வானையுடன் அழகன் சுப்பிரமணியர் காட்சி தருகிறார். இவர் சத்ருகளை அழித்துக் காப்பாற்றுபவர். நீதிமன்ற வழக்குகளில்   வெற்றிபெற இவரை சரணாகதி அடையலாம். செவ்வாய், சஷ்டிகளில் இவரை தரிசித்தால் சத்ருகளால் வரும் தொந்தரவுகள் நீங்கும்.அதிகார நந்தி, அம்பாளுக்கும் இறைவனுக்கும் இடையில் அமர்ந்தவாறு சுவரில் உள்ள துவாரம் மூலம் இறைவனை தரிசிக்கிறது. இத்திருக்கோயில்   ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது. ஏகபுஷ்பப் பிரியநாதர் என்ற பெயர் இந்த இறைவனுக்கு ஏன் வந்தது? அதற்குச் சுவையான வரலாறு ஒன்று காலங் காலமாய் கூறப்பட்டு வருகிறது.














இறைவனால் படைக்கப்பட்ட மலர்கள் எத்தனையோ உள்ளன. அவற்றுள் சில இறைவனுக்குச் சாத்தப்படுகின்றன. ஆனால், ஒரு மலரை இறைவனே   காத்திருந்து ஏற்றுக் கொள்வதாக கூறப்படுகிறது. அந்த மலர் தான் ‘தேவ அர்க்கய வள்ளிப்பூ’. இது எங்கே பூக்கிறது? மரத்திலா? செடியிலா? கொடியிலா? இல்லை. ஒரு சுனையில் பல யுகங்களுக்கு ஒரே முறை பூக்கும்! இந்தச் சிறப்பு மிக்க சுனை அமைந்திருக்கும் இடம்தான் திருத்தேசமலை. சுனையில் வற்றாத நீர் உள்ளது. இப்பூவை அணிந்து மகிழ்வதற்காக யுக யுகாந்திரமாய் காத்திருப்பதால், இந்த சிவபெருமானின் திருப்பெயர், ஏகபுஷ்பப் பிரியநாதர்.இந்தப்பூ மலர்ந்து இறைவனிடம் சேர்வதைப் பார்க்க விரும்பினார், பிருங்கி முனிவர். அந்த அருமையான நேரத்தை நோக்கி தவமிருந்தார். இந்த  மலையில் பல கிளிகள் இருந்தன. அவற்றுக்கு இப்பூ பூக்கும் நேரமும் காலமும் தெரியும். அந்த விவரத்தை அவை தமக்கிடையே பேசிக்கொள்வதை  பிருங்கி முனிவர் கவனித்தார். விவரமும் புரிந்துகொண்டார். அப்போதிலிருந்து அந்தக் கிளிகளையும் கவனித்து வந்தார். அந்தப் புனிதமான நேரமும்  வந்தது. சுனையில் தோன்றிய சங்கு போன்ற தேவ அர்க்கய வள்ளிப்பூ மெல்ல நகர்ந்து போய் ஏகபுஷ்பப் பிரியநாதரின் சிரசில் அமர்ந்தது. இவ்வரிய காட்சியைக் கண்ட பிருங்கி முனிவர் ஆனந்தக் கூத்தாடினார்.







அவரையும் கிளிகளையும் தன்னடி சேர்த்தருள் செய்தார் இறைவன்.இந்தக் கோயிலில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவலிங்கத்திற்கு வில்வத்தாலும் ஆவுடையாருக்கு துளசியாலும் அர்ச்சனை செய்யப்படுகிறது. கிளிகளோடு பிருங்கி முனிவர், அகத்தியர்-லோபாமுத்ரா போற்றி வணங்கிய ஏகபுஷ்பப் பிரியநாதரையும் தாயின் நல்லாளையும் நாமும் தரிசித்து நற்ப லன் பெறுவோம். இத்தலம் திருச்சி-துறையூர் பேருந்துப் பாதையில் திருப்பைஞ்சீலியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது



இத்திருக்கோயிலின் சிறப்பு அம்சங்கள்;


 

   சிவநேயச் செல்வர்களே எம்பெருமான் திருவருள் கொண்ட இடம் திருத்தியமலை.
    தேவ அர்க்க வல்லி புஷ்பத்தை சூடிக் கொண்ட ஸ்தலம்.
    பிருங்கி, அகத்தியர் மற்றும் எண்ணிலடங்கா மகாமுனிவர்கள் வழிபட்ட ஸ்தலம்.
    சூரியன் தனித்து வழிபட்ட ஸ்தலம்.
    எம்பெருமான் திருசெம்பொன்மேனி.
    கிரி சுயம்பு மூர்த்தி.
    முருகப்பெருமான் சூரனை வதம் செய்து விட்டு தேவசேனாவை மணந்த ஸ்தலம்.
    அம்பிகை தாயினும் நல்லாள்.
    22 படிகள் தாண்டி திருமலை மேல் அமர்ந்த ஸ்தலம்.
    ஸ்தலவிருட்சம் வில்வ மரம்.
    தனித்த சுனைநீர் தீர்த்தம்.
    தட்சிணாமூர்த்தி பாத தரிசன ஸ்தலம்.
    பிரிந்த தம்பதிகளை மனம் ஒத்து இணைத்து வைக்கும் ஸ்தலம்.
    நக்ஷத்திர தோஷம் நிவர்த்தி ஸ்தலம்.

ஸ்தல வரலாறு





ஒரு மகாசிவராத்திரி நாளில் நாரதர் தேவலோகத்தில் உள்ள ரிஷிகளிடம் பூலோகத்தில் ஒரே ஒருமுறை பூக்கும் “தேவ அர்க்கவல்லி” என்ற மலரினால் சிவபெருமானை பூஜித்தால் உலகில் உள்ள எல்லா மலர்களையும் கொண்டு பூஜித்த பலன் கிடைக்கும் என்று சொன்னார். எல்லா முனிவர்களும் சிவ பூஜையில் சிறந்தவரான பிருகு மகரிஷியை தேர்வு செய்து அம்மலரைக் காணவேண்டி கேட்டுக்கொண்டனர்.


அவ்வாறே பிருகு மகரிஷியும் அம்மலரைக்காண பூவுலகில் பல இடங்களில் தவம் செய்து சிங்கம்புணரியை அடுத்த திருக்களம்பூரில் தவம் செய்த போது அங்கு ஒரு வாழை மட்டையானது பிரான்மலை, குளக்குடி, நெடுங்குடி வழியாக அந்த மகா முனிவருக்கு வழிகாட்டி இறுதியாக திருத்தியமலை வந்தவுடன் அந்த வாழை மட்டையானது மறைந்தது.


அச்சமயத்தில் திருத்தியமலையில் மாமுனிவர் அகத்தியரும் அவரது துணைவியார் லோபமாதாவும் மலையைச் சுற்றி கிரிவலம் வந்து கொண்டிருந்திருந்தனர். பிருகு மகரிஷி , அகத்திய முனிவரிடம் “தேவ அர்க்கவல்லி” மலரின் இரகசியத்தைக் கேட்டு அறிந்தார். மீண்டும் பிருகு மகரிஷி சிவலோகத்திற்கு சென்று தாம் அம்மலரைக் காணவேண்டி தவமிருக்க ஆரம்பித்தார்.


சிறிது காலத்திற்கு பிறகு, பிருகு முனிவர் மீண்டும் திருத்தியமலை வந்தடைந்தார். அச்சமயத்தில் அங்கு இருந்த அகத்திய முனிவரிடம் மேலும் சில இரகசியங்களை கேட்டறிந்தார்.


அச்சமயத்தில் மலையின் மீது மிகப்பெரிய மரமும், அதில் ஆயிரக்கணக்கான பறவைகளும் காணப்பட்டன. அகத்தியர் தான் கிரிவலம் செய்த போது இதுபோன்ற மரமும், பறவைகளும் இல்லையென்றும் எனவே ஒரு மகா அதிசயம் நடக்க இருப்பதாக, லோபமாதாவிடமும், பிருகு முனிவரிடமும் கூறினார்.


அவ்வாறே, மகா சிவராத்திரியான அந்த நாளில் அந்த மரத்தில் இருந்த பறவைகள் எல்லாம் “ஓம் நமச்சிவாய” என்று கூறியவாறு பறந்து சென்றதை அவர்கள் கண்டனர்.


அகத்திய முனிவர் பறவைகளின் பாஷையை அறிந்தவர் ஆதலால் “தேவ அர்க்கவல்லி” பூவை அப்பறவைகள் கண்டு கொண்டதால் அவை சிவலோகம் செல்வதாகவும் கூறினார். பறவைகள் மட்டும் அம்மலரைக் கண்டு கொண்டதால் பிருகு முனிவர் சிறிது வருத்தப்பட்டார்.


அகத்திய முனிவர் முதன் முறையாக பிருகு முனிவரையும், லோப மாதாவையும் திருத்தியமலை குன்றின் மீது அழைத்து சென்றார். அங்கு உள்ள சுனைநீரில் தேவ அர்க்க வல்லி பூவின் பிம்பத்தை அவர்கள் மூவரும் கண்டனர். பூவின் பிம்பத்தை மட்டும் கண்ட அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுற்ற போது சிவபெருமான் அந்த தேவ அர்க்க வல்லி பூவை சூடிக்கொண்டு சுயம்புவாக அகத்தியருக்கும், லோபமாதாவுக்கும், பிருகு முனிவருக்கும் காட்சியளித்தார்.


இத்திருக்கோயிலானது 5000 ஆண்டுகளுக்குமேல் பழமை வாய்ந்தது. ஆதித்திய சோழர். விக்ரம சோழர் மற்றும் இரண்டாம் இராஜேந்திர சோழர்கள் காலத்தில் பராமரிக்கப்பட்டு , இறுதியாக கி.பி.1883 ஆம் கால கட்டத்தில் சென்னையை ஆண்டு வந்த சென்னப்ப நாயக்கர் மற்றும் நக்கன நாயக்கரால் புதுப்பிக்கப்பட்டது.



இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்கள், சோழர்கள் காலத்தின் அளவை முறைகள் மற்றும் கோவிலின் சிறப்பு முதலியவற்றை பற்றி எடுத்துரைக்கின்றன.

இத்திருக்கோயில் திருச்சியில் இருந்து 35கி.மீ. தூரத்தில் உள்ளது. திருச்சியில் இருந்து மணச்சநல்லூர், திருப்பஞ்சலி, மூவானூர் வழியாகவும், முசிறியில் இருந்து தண்டலைப்புத்தூர் வழியாகவும் சென்றடையலாம். சமயபுரத்திலிருந்து மணச்சநல்லூர், திருப்பஞ்சலி வழியாகவும் சென்றடையலாம்.

நன்றி:-தினகரன்.காம்.(உதவி,திருமதி,ரமா சங்கர்.)

No comments:

Post a Comment