Subscribe

BREAKING NEWS

02 June 2017

அகத்தியர் தேவாரத் திரட்டு

அனைத்து இறை அடியார்களுக்கும் TUT குழுமத்தின் சார்பாக வணக்கங்கள்.இன்றைய பதிவில் அகத்தியர் தேவார திரட்டு பற்றி அறிய உள்ளோம். இந்த பதிவின் நோக்கம்  அனைத்து அடியார் பெருமக்களும் தினசரி பூஜையில் தேவாரம் பாட வேண்டும் என்பதே.முதலில் நாம் தேவாரம் பற்றி விளக்கமாக காண்போம்


தேவாரம்:

தேவாரம் எனப்படுபவை சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் மீது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூன்று இறையடியார்களால் தமிழிற் பாடப்பட்ட பாடல்கள் ஆகும். முதல் இருவரும் கி.பி. 7 ஆம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கி.பி. 8 ஆம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.

10 ஆம்  நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்துப், பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரண்டு சைவத் திருமுறைகளாகத் தொகுத்தார். இதில் முதலேழு திருமுறைகளும் தேவாரங்களாகும். இவற்றின் விபரங்கள் பின்வருமாறு.


இல.திருமுறைபாடியவர்பாடல் எண்ணிக்கை
1முதலாம் திருமுறைதிருஞானசம்பந்தர்1469
2இரண்டாம் திருமுறை1331
3மூன்றாம் திருமுறை1346
4நான்காம் திருமுறைதிருநாவுக்கரசர்1060
5ஐந்தாம் திருமுறை1015
6ஆறாம் திருமுறை0980
7ஏழாம் திருமுறைசுந்தரர்1026
மொத்தம்8227

இவ்வேழு திருமுறைகளே அடங்கன் முறை என்று சொல்லப்படும்.







 மூவர் முதலிகள்:

தேவார மூவர் என்பது தேவாரத்தினைப் பாடிய மூன்று நபர்களைக் குறிப்பிடும் சைவசமய சொல்லாக்கமாகும்.  இவர்களை மூவர், மூவர் முதலிகள் என்றும் அழைக்கின்றனர். இவர்கள் பாடிய தேவாரத் தொகுப்பினை மூவர் தேவாரம் என்று அழைக்கின்றனர்.
சைவ சமயத்தின் இலக்கியமான பன்னிரு திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகளை தேவாரம் என்று அழைக்கின்றனர். இந்த தேவாரத்தினைப் பாடிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோரை தேவார மூவர் என்று அழைக்கின்றனர். திருமுறைகளில் முதல் மூன்றை திருஞானசம்பந்தரும், அடுத்த மூன்று திருமுறைகளை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியுள்ளனர்.


சிவாலய முனிவர்:



 சிவாலய முனிவர் என்பவர் இவ்வடங்கன் முறையின் பெருமையையும், இதனை முறையோடு நாள்தோறும் ஓதுபவர் வீடு பேறு அடைவர் என்பதையும் அறிந்து நாள்தோறும் அவ்வாறே ஓத விரும்பினார். எனினும், அது முற்றுப் பெறாமையினாலேயே அவர் தில்லையை அடைந்து பொற்சபையில் சிவபெருமானை வணங்கி, தம் கருத்து முழுமைய அடைய பலகாலம் சுமார் 3 ஆண்டுகள் தவம் செய்தார். அவருடைய தவம் அகத்தியரின் மனதை உருக்கியது.

 அச்சமயம், ‘சிவாலய முனிவரே! நீர் பொதிய மலையிலே உறையும் அகத்திய முனிவரை அடையின் உம் கருத்து முற்றுப் பெறும்’ என்றொரு வான் மொழி எழுந்தது. அதன்படியே அவர் பொதிய மலையினை அடைந்து மூன்றாண்டுகள் தவம் செய்தார்.அகத்தியர் அத்தவத்திற்கு இரங்கி வெளிப்பட்டு, அடங்கன் முழுமையையும் அவருக்கு எடுத்து இயம்பி பொருள் அருளினார்.


 அவ்வடங்கன் முறையினின்று இருபத்தைந்து திருப்பதிகங்களைத் திரட்டி, ‘இவைகளை முறையே ஓதின் அடங்கன் முறை முழுமையையும் ஓதியதன் பலன் கிடைக்கும்’ என்றுகூறி மறைந்தருளினார். சிவாலய முனிவர் அவ்வாறே அவ் இருபத்தைந்து பதிகங்களையும் நாடோறும் நெடுங்காலம் ஓதிக் கொண்டிருந்து வீடு பேற்றை அடைந்தார். தாமிரபரணி கரையில் அகத்தியர் மூலம் தேவார திரட்டு உருவாகியது.இது தோன்றியது பொதிகை மலை என்பது நாமெல்லாம் பெருமைபடக்கூடியது.
அகத்திய முனிவர் தேவாரத்திலிருந்து திரட்டி எடுத்து வழங்கியதால், அதற்கு அகத்தியர் தேவாரத் திரட்டு என்று பெயர் வந்தது.






வரிசை எண் கருத்து பதிகம் அருளியவர்
1. குருவருள் தோடுடைய செவியன் திருஞானசம்பந்தர்
2. குருவருள் கூற்றாயினவாறு திருநாவுக்கரசர்
3. குருவருள் பித்தா பிறைசூடி சுந்தரர்
4. பரையின் வரலாறு மந்திரமாவது நீறு திருஞானசம்பந்தர்
5. அஞ்செழுத்துண்மை துஞ்சலும் துஞ்சல் திருஞானசம்பந்தர்
6. அஞ்செழுத்துண்மை காதலாகிக் கசிந்து திருஞானசம்பந்தர்
7. அஞ்செழுத்துண்மை சொற்றுணை வேதியன் திருநாவுக்கரசர்
8. அஞ்செழுத்துண்மை மற்றுப்பற்று எனக்கின்றி சுந்தரர்
9. கோயிற்றிறம் ஆரூர் தில்லையம்பல திருஞானசம்பந்தர்
10. கோயிற்றிறம் தில்லைச் சிற்றம்பலமு திருநாவுக்கரசர்
11. கோயிற்றிறம் காட்டூர்க் கடலே சுந்தரர்
12. சிவனுருவம் ஓருருவாயினை திருஞானசம்பந்தர்
13. சிவனுருவம் வரிய மறையா திருஞானசம்பந்தர்
14. சிவனுருவம் பாளையுடைக் கமு திருநாவுக்கரசர்
15. சிவனுருவம் வடிவேறு திரிசூலம் திருநாவுக்கரசர்
16. சிவனுருவம் மருவார் கொன்றை சுந்தரர்
17. திருவடிகள் பொடியுடை மார்பினர் திருஞானசம்பந்தர்
18. திருவடிகள் அரவணையான் சிந்தித் திருநாவுக்கரசர்
19. திருவடிகள் அந்தணாளன் உன் சுந்தரர்
20. அருச்சனை பந்துசேர் விரலாள் திருஞானசம்பந்தர்
21. அருச்சனை வேற்றாகி விண்ணாகி திருநாவுக்கரசர்
23. அருச்சனை கொன்று செய்த சுந்தரர்
23. அடிமை வேயுறு தோளி திருஞானசம்பந்தர்
24. அடிமை குலம்பலம்பாவரு திருநாவுக்கரசர்
25. அடிமை தில்லைவாழந்தணர் சுந்தரர்

                

 



            

திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் பதிகங்கள் 

01 திருப்பிரமபுரம் - [தோடுடையசெவி] - திருமுறை 1/1
02 திருவாலவாய்த் திருநீற்றுப் பதிகம்  [மந்திரம்] - திருமுறை 2/66
03 பஞ்சாக்கரத் திருப்பதிகம் - [துஞ்சலும்] - சீர்காழி- திருமுறை 3/22
04 நமச்சிவாயத் திருப்பதிகம் - [காதலாகி]- திருநல்லூர்ப்பெருமணம்
                                                                  - திருமுறை 3/49
05 திருப்பதிக்கோவை - [ஆரூர்தில்லை] - சீர்காழி- திருமுறை 2/39
06 திருவெழு கூற்றிருக்கை - [ஓரூரு] - திருப்பிரமபுரம் - திருமுறை 1/128
07 திருக்கடவூர் மயானம் -[வரிய] - திருமுறை- 2/80
08 திருவாழ்கொளிபுத்தூர் - [பொடியுடை] -திருமுறை 1/40
09 திருப்பூந்தராய் - [ப்ந்துசேர்விரலாள்] -திருமுறை- 3/2
10 கோளறு திருப்பதிகம் - [வேயுறு] - திருமறைக்காடு -திருமுறை 2/85

திருநாவுக்கரச நாயனார் பதிகங்கள்

01. திருவதிகை வீரட்டானம் - [கூற்றா] - திருமுறை - 4/1
02. நமச்ச்சிவாயத் திருப்பதிகம் - [சொற்றுணை] - திருமுறை - 4/11
03. திருப்பதிக் கோவை - [தில்லை] - திருப்புகலூர்-திருமுறை 6/70
04. கோயில் திருவிருத்தம் - [பாளை] - திருத்தில்லை - திருமுறை 4/80
05. திருப்பூவணம்- [ வடியேறு] - திருமுறை 6/18
06. திருவதிகை வீரட்டானம்- [அரவணையான்] - திருமுறை - 6/6
07. திருக்கயிலாயம் - [வேற்றாகி] - திருவையாறு - திருமுறை - 6/55
08. திருவாரூர்த் திருவிருத்தம் - [குலம்பல] - திருவாரூர் - திருமுறை 4/101

சுந்தரமூர்த்தி நாயனார் பதிகங்கள்

01. திருவெண்ணெய்நல்லூர் - [பித்தா] -திருமுறை -7/
02. திருப்பாண்டிக்கொடுமுடி- [மற்றுப்பற்றெனக்] -திருமுறை 7/
03. ஊர்த்தொகை - [காட்டூர்க்] - கோயிற்றிறம் -திருமுறை 7/
04. திருக்கடவூர்மயானம் -[மருவார்] - திருமுறை 7/
05. திருப்புன்கூர் - [அந்தணாளன்] - திருமுறை - 7/
06. திருக்கழுக்குன்றம் - [ கொன்று செய்த] -திருமுறை - 7/
07. திருத்தொண்டர்த்தொகை - [ தில்லைவாழ்] - திருமுறை 7/
  


ஸ்ரீஅகஸ்திய மாமுனி அருளிய பன்னிரு திருமுறைகளை ஓதும் விதிமுறைகளும் பலாபலன்களும்

1. காலை, மதியம், மாலை என எந்த நேரத்திலும் இந்தப் பன்னிரு திருமுறைப் பாடல்களைப் பாடி இறைவனை வழிபடலாம்.


2. தனி மனித ஆராதனையை விட கூட்டுப் பிரார்த்தனைக்கு வலிமை அதிகம். இறையடியார்கள் தங்கள் குடும்பத்திலுள்ள அனைவருடனும் சேர்ந்து இந்தப் பதிகங்களை ஓதுதல் சிறப்பு. உற்றார், உறவினர், நண்பர்கள், அறிந்தோர், அறியாதோர் என அனைவரையும் ஒன்று திரட்டி இத்திருப்பதிகங்களை ஓதி வந்தால் சமுதாய ஒற்றுமையும், அமைதியும் நிலவ வழி ஏற்படும்.




3. காலை, மதியம், மாலை என்ற மூன்று வேளைகளிலும் தினமும் சந்தியா வந்தன வழிபாடுகளை அனைவரும் நிறைவேற்றியாக வேண்டும். இதற்கு எந்தவித விலக்கும் கிடையாது. காணாமல், கோணாமல், கண்டு சந்தியா வந்தன வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பது சித்தர்கள் வாக்கு. அதாவது காலையில் சூரிய உதயத்திற்கு முன்னும் (சூரியனைக் காணாத போது), மதியம் உச்சி வேளையிலும் (சூரியன் கோணாமல் சரியாக தலை உச்சிக்கு நேராக இருக்கும்போது), மாலையில் சூரியன் மறைவதைக் கண்டும் (சூரிய அஸ்தமனத்தின்போது) சந்தியா வந்தன வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். சந்தியா வந்தன வழிபாட்டைத் தக்க சற்குரு மூலம் அறிந்து நிறைவேற்றுவதே சிறப்பு. அவ்வாறு சற்குரு அமையப் பெறாதோர் இந்த 32 பதிகங்களைக் கொண்ட ஸ்ரீஅகஸ்தியர் தேவாரத் திரட்டுப் பாடல்களைப் பாடி வந்தால் சந்தியா வந்தன வழிபாட்டுப் பலன்களைப் பெறலாம்.

பிரம்மாவை நிந்தித்தால் விஷ்ணுவிடம் சென்று பிராயச்சித்தம் பெறலாம். விஷ்ணுவை வசைபாடினால் சிவபெருமானிடம் சென்று மன்னிப்புக் கோரலாம். அந்தச் சிவனையே திட்டி விட்டால் கூட உத்தம சற்குரு அதற்கும் பிராயச் சித்தம் தருவார். ஆனால், சற்குரு ஒருவரை நிந்தனை செய்தால் ஈரேழு உலகிலும் பிராயச் சித்தம் பெறவே முடியாது. அந்த உத்தம குருவே மனம் வைத்தால்தான் பிராயச் சித்தம் தர முடியும். அறியாமை காரணமாக குரு வார்த்தையை மீறியதற்கு (குருவை நிந்தித்தவர்கள் அல்ல) பிராய சித்தம் தருவதே திருச்சி உய்யக் கொண்டான் மலை ஸ்ரீஉஜ்ஜீவ நாதர் ஆலய தீர்த்தமாகும்.

4. இந்தப் பன்னிரு திருமுறைத் திரட்டுப் பாடல்களைக் காரிய சித்திக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, நோயால் வாடும்போது மந்திரமாவது நீறு ... என்னும் திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருநீற்றுப் பதிகத்தை ஓதி திருநீறு அணிந்து வந்தால் நோய் அகலும். காய்ச்சல், தலைவலி போன்ற நோய்களின் கடுமை தணியும். திருமணம், வீடு, நிலம் போன்ற நியாயமான தேவைகளுக்காகவும், வருமானத்தை மிஞ்சிய செலவு, கடன் தொல்லை போன்றவை நிவர்த்தியாகவும் வாசி தீரவே காசி நல்குவீர் .. என்ற திருஞான சம்பந்த சுவாமிகள் அருளிய தேவாரப் பதிகத்தைத் தொடர்ந்து ஓதி பலன் பெறலாம்.


5. ஒவ்வொரு திருப்பதிகத்தின் இறுதியிலும் திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம் என்று மூன்று முறை ஓதுதல் சிறப்பு.


6. பாடல் பெற்ற சிவத் தலங்கள், மங்கள சாசனம் அமைந்த பெருமாள் தலங்கள் (திவ்ய க்ஷேத்திரங்கள்), சுயம்பு மூர்த்தி அருளும் தலங்கள், கங்கை, காவிரி போன்ற புனித நதிக் கரைகள், துளசி மாடம், பசுமடம், திருஅண்ணாமலை, ஐயர்மலை, பழனி மலை கிரிவலப் பாதைகள், மலைத் தலங்களில் இந்தப் பதிகங்களை ஓதுவதால் வழிபாட்டின் பலன்கள் பன்மடங்காகப் பெருகும். ஆனால், அபரிமிதமான இந்தப் பலன்களை சுயநலத்திற்காகப் பயன்படுத்தாமல் வெள்ளம், புயல், வறட்சி, பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து மக்களைக் காக்கவும், சமுதாய அமைதிக்காகவும், இன ஒற்றுமைக்காகவும் அர்ப்பணித்தல் சிறப்பாகும்.


7. தமிழ் மொழியும், சமஸ்கிருதம் என்னும் வடமொழியும் இறைவனின் இரு கண்கள் என்பது சித்தர்கள் கூற்று. ஹோமம், வேள்வி, யாக வழிபாடுகளில் தேவமொழியில் அமைந்த மந்திரங்களை ஓதியே ஆஹூதி அளித்து வருகிறோம். ஆனால், தேவமொழி அறியாதோரும் இந்த 32 பதிகங்களில் உள்ள பாடல்களை ஓதி ஹோம, யக்ஞ வழிபாடுகளை மேற்கொள்ளலாம். பொதுவாக, திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியுள்ள திருத்தாண்டகப் பதிகங்களை ஹோம வழிபாட்டிற்காக ஓதுதல் சிறப்பாகும்.


8. மனிதப் பிறவிக்கு வித்தாக அமைவது நாம் செய்த கர்மமே. நிறைவேறாத ஆசையும் கர்மா என்னும் முறையில் பிறவிக்கு வழி வகுக்கும். முறையான எல்லா ஆசைகளையும் நிறைவேற்றி வந்தால்தான் பிறவி இல்லாத நிலையை என்றாவது ஒரு நாள் மனிதன் அடைய குருவருள் துணை புரியும். நியாயமான எல்லா இன்பங்களையும் இந்தப் பிறவியிலோ அடுத்த பிறவிகளிலோ நாம் பெற துணை புரிவதே இந்த 32 திருப்பதிகங்கள். உணவு, உடை, இருப்பிடம், வாகனம், செல்வம், போகம் என மனித அனுபவிக்கக் கூடிய இன்பங்கள் 32 வகைப்படும். இந்த 32 வகையான இன்பங்களை ஒரு மனிதன் பெற வேண்டுமானால் அவன் 32 விதமான அறங்களை நிறைவேற்றியாக வேண்டும். அன்னதானம், ஆடை தானம், கல்வி தானம், விலங்குகளுக்கு உணவு, அநாதை குழந்தைகள் பராமரிப்பு, இலவசத் திருமணங்கள், முதியோர் சேவை என 32 விதமான அறங்களையும் நிறைவேற்றியவர்களுக்கே 32 விதமான இன்பங்களை, போகங்களை அனுபவிக்க ஏதுவான பிறவிகள் அமையும். இந்த 32 விதமான இன்பங்களை ஒரு மனிதன் அனுபவித்த பின்னரே அவன் ஆசைகள் இல்லாத, பிறவி அற்ற நிலையை அடைய முடியும். ஆசை இல்லாத நிலையை அடைந்த மனித மனமே முழு மூச்சுடன் இறை வழிபாட்டில் ஈடுபட முடியும். அணு அளவு ஆசை இருந்தால் ஒரு மனிதனிடம் இருந்தால் கூட அது ஒரு பிறவிக்கு வித்தாக அமைந்து அப்பிறவியில் பல கர்ம வினைகளை உருவாக்கிப் பிறவிகளைப் பெருக்கிக் கொள்ளும் நிலை ஏற்படலாம். இங்கு அளித்துள்ள 32 பதிகங்களை தொடர்ந்து ஓதி வந்தால் 32 அறங்களை நிறைவேற்றும் நிலையை அடைய குருவருள் துணை புரியும்.


9. தர்பைப் பாய், துண்டு, கம்பளி இவைகளின் மேல் அமர்ந்து திருமுறைப் பதிகங்களை ஓதுதல் சிறப்பு.


10. திருமுறைகளை ஓதும்போது அனைவரும் கைகளைக் கோர்த்துக் கொண்டு வட்ட வடிவில் அமர்ந்து வழிபாட்டை மேற்கொள்வதால் மனம் அலைபாயாமல் ஒருமுகப்பட்ட தியானம் எளிதில் கை கூடுவதைக் கண் கூடாகக் காணலாம். வழிபாட்டுப் பலன்களும் பன்மடங்காகப் பெருகும்.


11. தேவ மொழியில் அமைந்த ரிக், யஜூர், சாம, அதர்வணம் என்னும் நான்கு வேதங்கள் ஓதிய பலன்களை ஒட்டு மொத்தமாக அளிக்கவல்லதே இந்த 32 திருமுறைப் பாடல்கள். தேவமொழி அறியாதோரும் வேதம் ஓதிய பலன்களை எளிதில் பெற வழி வகுப்பதே திருமுறைப் பாடல்கள். உதாரணமாக, மந்திரமாவது நீறு என்று தொடங்கும் ஒரு (திருநீற்றுப்) பதிகத்தின் பாடல்களே நான்கு வேதங்களின் பீஜாட்சர சக்திகளை உள்ளடக்கி, நான்கு வேதங்களின் திரட்சியாக அமைகின்றது என்றால் அனைத்துப் பதிகங்களின் பலாபலன்களை எழுத்தில் வடிக்க இயலுமா என்பதை சற்றே எண்ணிப் பாருங்கள்.


12. கடுக்கன், தீட்சை, ருத்ராட்சம், யக்ஞோபவீதம், ஸ்திர கங்கண், வைபவ கங்கண் போன்ற காப்புச் சாதனங்களை அணிந்து திருமுறைகளை ஓதுவதால் வழிபாட்டுப் பலன்கள் பன்மடங்காகப் பெருகும்.


                                திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்



இனி வரும் பதிவுகளில் ஒவ்வொரு பதிகங்கள் பற்றியும் காணலாம்.

-மேலும் தொடரும்.



No comments:

Post a Comment