Subscribe

BREAKING NEWS

26 July 2017

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1)

நாம் ஏற்கனவே பதிவிட்ட வாழ்வாங்கு வாழ என்ற ஒரு தொடர்பதிவு பற்றி அனைவரும் அறிவீர்கள்.அதன் தொடர்ச்சியாய் இந்த பதிவு.

எங்கிருந்து ஆரம்பிக்கலாம்? என்ன கேள்வியில் ஆரம்பிக்கலாம் என்று தேடிய பொழுது.கிடைத்தது ஒரு அருமையான கேள்வி.பக்தி,யோகம்,தியானம்,பூஜை என இருந்த போதும்,இந்த கேள்வி அனைவருக்கும் பொதுவானது. சரி அன்பர்களே. கேள்வியை தொடர்வோம்.

நண்பர் - ஆசைகளுக்கோர் அளவில்லை. ஆசைகளை அனுபவித்துக் கடந்து விட ஆயுளும் போதவில்லை. நான் என் செய்வது ? 


 இராம் மனோகர் - முனைப்பாக கவிதை எழுதலாம். மனம் அனுபவிக்க வேண்டும் என்று நினைக்காமல், அதை ஆராய முற்படும் பொழுது, சொல் வசப்பட்டு, ஒரு நிலைப்பட்டு, ஆசைகளைக் கடந்து விடும். பொதுவாக எவரிடத்தில் குறைபாடு உள்ளதோ அவரிடத்தில் ஆசைகளும் இருக்கும். குறைபாட்டை நிறைநிலையாக மாற்றியமைக்க வேண்டும் என்கிற எண்ணமே ஆசையே தவிர வேறு ஒன்றுமில்லை. ஆசை இல்லாதவர் யார்தான் இருக்கிறார்கள் ? கடவுளுக்குக் கூட ஆசை இருப்பது போல இங்குள்ள ஆன்மிக வியாபாரிகள் காட்டிக் கொள்கிறார்கள். கடவுள் விரும்புகிறார், நீங்கள் இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என்கிறார்கள். நாம் செய்யும் செயல்களைக் குறித்து கடவுள் கோபப்படுகிறார் என்றோ, சந்தோசமடைகிறார் என்றோ சொல்கிறார்கள். பரிபூரண நிலைக்கு ஏது ஆசை ? ஏது கோபம் ? கடவுளுக்கு ஆசை இருந்தால் அவர் கடவுளே அல்லர். ஆசை இருந்தால் அவர் குறைபாடு உள்ளவராகி விடுவார். பிறகு எப்படி அவரை பரிபூரணனே என்று அழைப்பது ? எனவே கடவுளுக்கு ஆசை இல்லை. இதெல்லாம் ஆசை வயப்பட்டவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி மற்றவர்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே அன்றி வேறொன்றுமில்லை.


பரிபூரண நிலையில் உள்ள ஒருவர் எதற்கும் ஆசைப்படமாட்டார். ஆசையிலிருந்து விடுபட்ட அவரையே ஜீவன் முக்தன் என்கிறார்கள். எனவேதான் நம் முன்னோர்கள் ''ஈசனோடாயினும் ஆசை ஒழிமின். நிராசை என்னும் தெய்வப் பெற்றியில் நிலை பெற்றிருமின்'' என்றார்கள். நீங்கள் எதை வேண்டுமானாலும் வணங்கலாம் குற்றமில்லை. ஏனென்றால் கடவுள் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார். ஆனால், உங்களுக்கும், அந்தப் பொருளுக்கும், கடவுளுக்கும் இடையிலான தொடர்பை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நீங்கள் புரிதலோடு இருந்தால், அந்த முக்கோணத்திற்குள் வேறொருவர் நுழைவது சாத்தியமில்லை. எனவே தன்னிடத்தில் இல்லாத ஒன்றை அடைய வேண்டும் என்கிற எண்ணமே ஆசை என்று சொல்லப்படுகிறது. நிறைநிலை ஞானிக்கோ ஒரு குறைவுமில்லை. எனவே ஆசையுமில்லை.





ஆனால், இவர்களுக்கிடையே எந்த வித உணர்ச்சியுமில்லாத மண்ணாங்கட்டி போன்ற சிலர் இருப்பார்கள். அவர்களுக்கும் ஒரு ஆசையுமிருக்காது. எனவே அவர்களையும் ஞானிகள் என்று எண்ணி சிலர் ஏமாந்து போகிறார்கள். என் நண்பர் ஒருவர் சடை விழுந்த பிச்சைக்காரர்கள், பைத்தியக்காரர்களைப் பார்த்தால் போதும், அவர்களுக்கு அன்று வேட்டைதான். அவர் கையிலுள்ள பணம் முழுவதையும் செலவு செய்திடுவார். நாம் கடிந்து கொண்டால் அவர் ''இப்படி ஆயிரம் பேருக்குச் செய்து வரும் போது அதில் ஒரு சித்தர் வந்து விட மாட்டாரா ?'' என்பார. அவர் மனைவி குழந்தைகளைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். கிழிந்த உடையும், பசியால் வாடிய முகமாகக் காட்சியளிப்பார்கள். இது கூட ஒருவகையான தேவையற்ற ஆசைதான். சித்தர்களைப் பார்க்க வேண்டும், அவர்களுக்கு ஏதாவது வாங்கித் தர வேண்டும் என்று எண்ணுவதை விட, அவர்கள் காட்டிய வழியில் செல்வதுதான் சிறந்தது. அதைத்தான் சித்தர்களும் விரும்புவார்கள்.



இந்த ஆசை பற்றி பதஞ்சலி மகான் சொல்கிறார், நமது சம்ஸ்காரங்கள் இரு வகைப்படும். ஒன்று கர்ம பீஜம் மற்றொன்று வாசனை. இந்த கர்ம பீஜமே ஆசைகளைத் தூண்டுகிறது. வாசனையோ நினைவுகளை எழுப்புகிறது என்கிறார். ஒவ்வொரு செயலும் மனதில் ஒவ்வொரு சம்ஸ்காரத்தை உண்டாக்கி விடுகிறது. இதுவே கர்ம பீஜம். இந்த சம்ஸ்காரம் மீண்டும் மீண்டும் எழும் போதும் அதே செயலைச் செய்யும் படிக்கு நாம் தூண்டப்படுகிறோம். இந்தத் தூண்டுதலே ஆசை, உந்து வேகம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. நாம் பிறந்தது முதல் இறுதி வரை கோடிக் கணக்கான செயல்களைச் செய்கிறோம். எனவே நம் மனம் அத்தனை கர்ம பீஜங்களையும் கொண்டுள்ள ஒரு சேமிப்புக் கிடங்காக இருக்கிறது. இந்த கர்மபீஜங்களின் மொத்த தொகுதியே கர்மாசயம் எனப்படுகிறது. இந்த கர்மாசயமே மறு பிறவி மற்றும் அதற்கேற்ற உடல், ஆயுள் அனுபவங்களைத் தீர்மானிக்கிறது என்கிறார்.

அதுபோல ஒவ்வொரு செயலும் நமக்கு ஒவ்வொரு அனுபவத்தை தருகின்றது. அந்த அனுபவமும் ஒரு சம்ஸ்காரத்தை விட்டுச் செல்கிறது. இந்த அனுபவத்தின் விளைவால் ஏற்படும் சம்ஸ்காரமே வாசனை எனப்படும். மலரை கூந்தலில் சூடிக் கொள்கிறார்கள். மலர் வாடிப் போன பிறகு அதை எடுத்து களைந்தும் விடுகிறார்கள். எனினும் அதன் நறுமணம் மட்டும் கூந்தலில் இருந்து கொண்டே இருக்கிறதல்லவா ? அது போல இன்ப துன்ப அனுபவங்கள் மனதில் வாசனையை விட்டுச் செல்கின்றன. இந்த வாசனை வரும் போதெல்லாம் அந்த அனுபவத்தைப் பற்றிய நினைவும் எழுகிறது. செயலும் அனுபவமும் பிரிக்க முடியாதவை. எனவே கர்மாசயமும் வாசனையும் இணைந்தேதான் செயல்படும். ஒன்று தூண்டப்பட்டால் மற்றதும் தூண்டப்படும். வாசனை தூண்டப்பட்டால் அது நினைவை எழுப்புகிறது. நினைவு கர்மாசயத்தைத் தூண்டுகிறது. கர்மாசயம் ஆசைகளைத் தூண்டுகிறது.



நாம் செயல்படுகிறோம், அனுபவங்களை அடைகிறோம், அனுபவங்கள் வாசனையை உண்டாக்குகின்றன. இப்படி செயலும், அனுபவமும், கர்மாசயமும், வாசனையும் முடிவின்றி சுழலும் ஒரு சுழற்சி இயக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த சுழற்சி வட்டத்தை, ஆசை வியூகத்தை உடைத்தெறிவதே ஆன்மிக வாழ்வில் தலையாய கடமையாக இருக்கிறது. ஆசைக்கு உட்பட்டவன் குறைபாடு உள்ளவன் நிறை நிலையை அடைய முடியாது. அவனையே ஜீவன் என்றும், பசு என்றும் குறிப்பிடுகிறார்கள். ஆசையில் உழலும் ஆத்மா பந்தப்பட்டது. பற்று எனும் பாசத்தால்(கயிறு) கட்டப்பட்டது. பற்று எனும் கயிறை அறுத்தெறிந்து விட்டு, ஆசைகளைக் கடந்து அப்பால் சென்று விட்ட ஆத்மா மட்டுமே நிராசையில் நிலை பெற்றிருக்கிறது. ஆசையைக் கடந்த அந்த நிலையே முக்தி. அது அடைந்துள்ள குறைபாடுகளற்ற பரிபூரணத்தின் இடமே கடவுளின் சன்னிதி.

என்ன அன்பர்களே.தற்போது ஆசை பற்றி அறிந்திருப்போம் என்று நினைக்கின்றோம். வார்த்தைகள் சற்று கடினமாக இருக்கும். இரண்டு,மூன்று முறை படியுங்கள்.தங்களுக்கே விளக்கம் புரியும்.இந்த ஒரு கேள்வியில் பற்பல பதில்கள்,முடிவில் கடவுளின் குணங்கள் பற்றியும் தெரிந்து கொண்டோம்.

-  மற்றொரு கேள்வியில் சிந்திப்போம்.

முந்தைய பதிவிற்கு:-

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர்http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html


No comments:

Post a Comment