Subscribe

BREAKING NEWS

30 July 2017

நாலு பேரு சொல்றத கேளுங்க


நான்கு என்ற சொல்லுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. பல விடயங்கள் இந்த நான்கில் அமைவதைக் காணலாம். திசைகள் நான்கு. வேதங்கள் நான்கு. பிரமனுக்கு முகங்கள் நான்கு. மாதா, பிதா, குரு, தெய்வம் நான்கு. சமயக் குரவர்கள் நால்வர். சந்தான குரவர்கள் நால்வர். தனு, கரண, புவன, போகங்கள் நான்கு. கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என யுகங்கள் நான்கு. தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் என மார்க்கங்கள் நான்கு. சரியை, கிரியை, யோகம், ஞானம் என சைவ நெறிகள் நான்கு. சாலோகம், சாரூபம், சாமீபம், சாயுச்சியம் என முத்தி நிலைகள் நான்கு. சனகர், சனந்தர், சனாதனர், சனற்குமாரர் என இறைவனிடம் உபதேசம் கேட்டவர்கள் நால்வர். இப்படி பல விடயங்கள் இந்த நாலில் அடக்கம். நாலு பேர் போன வழியிலே போ என்பார்கள்.

நாலு பேரு சொல்றத கேளுங்க

இது வழக்கமா எப்பவுமே கேட்குற மாதிரி இருக்கும். அந்த காலத்துல இதைத்தான் சொல்லுவாங்க.யாருப்பா அந்த நாலு பேருன்னு நமக்கு நினைக்க தோணும்.பக்கத்து வீட்டுக்காரன்,எதிர்த்த வீட்டுக்காரன் அப்படி,இப்படி னு நாலு பேரா இருக்குமோனு நினைக்கிறோம்.ஏற்கனவே பக்கத்து வீட்டுக்காரங்களை பார்த்து தான் நாம் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்.எங்க ? நாம நம்ம வாழ்க்கையை வாழுறோம்? அது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

இங்க நாம சொல்ல வர்ற நாலு பேரு யாருன்னு கேட்டா? இவங்க இல்லன்னா சிவம் இல்லை ன்னு சொல்ற அளவுக்கு பக்தி நெறி மட்டும் காட்டாம முக்தி நெறி காட்டுனவங்க தான் இவங்க.புரிஞ்சு இருக்கும் னு நினைக்கிறோம். இவங்கள கெட்டியா பிடிச்சுக்குவோம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா சிவ புண்ணியம் செய்தவங்க. இவர்களோட அடியொற்றி நாமும் இனிமே நமது கடமைகளை செய்ய முயற்சி செய்யணும்.

நால்வர் துதியோடு பதிவிற்குள் செல்வோமா?

 பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
- உமாபதி சிவாச்சாரியார்




 இப்பாடலில், ஒவ்வொரு அடியும், சைவக்குரவர்களில், ஒவ்வொருவரைக் குறிக்கும்.
சைவத் திருமுறைகளைப் பாடத்துவங்குமுன், சைவக்குரவர், நால்வரையும், வாழ்த்துவது மரபாகும்.

1.பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
இந்த அடி, சம்பந்த பெருமானைக் குறிப்பதாகும்.
பூமியை ஆளுகிற அரசன், (கூன் பாண்டியனின்), வெப்பு நோய் தீர்த்த, சம்பந்தரின் ( சரண் புகுபவர்களின் காவலனின்), கழலடிகளைப் போற்றுவோம்.

2.ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி :
இந்த அடி அப்பர் பெருமானைக்குறிப்பதாகும்."கற்றுணைப் பூட்டி ஓர், கடலில், பாய்ச்சினும், நற்றுணையாவது நமச்சிவாயவே.." என்று உலகுக்கு விளங்க வைத்த திருநாவுக்கரசர் அடிகளைப் போற்றுவோம்.

3.வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி :
திரு நாவலூரில் பிறந்த சுந்தரரின், (வன் தொண்டரின்), பாதங்களைப் போற்றுவோம்.
இறைவனைப் பாடும் போது, வசை மொழிகளால், (பித்தா !) எனப் பாடியதால், வன் தொண்டர், என்ற பெயரும், சுந்தரருக்கு உண்டு.

4. ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி :
உலகம், உய்ய, தம், அன்பால், இறைவனைச் சிக்கெனப்பிடித்த, திருவாதவூரில் பிறந்த மாணிக்க வாசகரின், திருவடிகளைப் போற்றுவோம்.



இப்போது புரியும்னு நெனைக்கின்றோம். அந்த நாலு பேரு வேறு யாரும் அல்ல. சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்.இவற்றை எல்லாம் நாம் பருகித் திளைக்க வேண்டும். நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.நமக்கே தெரியாத போது ? ஹி ..ஹி ..எப்படி சொல்வது என கேட்கிறீர்கள் தானே? அதனால் தான் சொல்கின்றோம் நம் மரபு,சமூகம்,பண்பாடு,கலாச்சாரம் நோக்கி கொஞ்சமாவது திரும்பி பார்க்க வேணும். அப்படி பார்த்தல் தான் இது போன்ற செய்திகளை நாம் அறிந்து,உணர முடியும்.



சரி. ஒவ்வொருவரைப் பற்றியும் சில குறிப்புகளால் உணர்வோம்.திருநாவுக்கரசு சுவாமிகளின் சில பாடல்கள் (ஒலி வடிவில்) – வரலாற்றுமுறையில். திருவதிகையில் தொடங்கி திருப்புகலூர் வரை அவர் பாடிய தீஞ்சுவைப் பாடல்களைக் கேட்டு இறைவனே மெய் மறந்து இருக்கிறான் என்றால் நம்முடைய நிலை என்ன? அவர் பாடுவதைக் கேட்டுக்கொண்டே அவர் பின் புகுவோம் வாரீர் !!






திருநாவுக்கரசர் (வாகீசர்)


தந்தையார் : புகழனார்

தாயார் : மாதினியார்

தமக்கையார் : திலகவதியார்

அவதாரம் செய்த நாடு : திருமுனைப்பாடி (கடலூர் மாவட்டம்,தமிழ்நாடு)

அவதாரம் செய்த தலம் : திருவாமூர் (கடலூர் மாவட்டம், பண்ருட்டியிலிருந்து மேற்கே 8 கி.மீ.)

பெற்றோர் இட்ட பெயர் : மருள்நீக்கியார்

சமணசமயத்தில் வைத்த பெயர் : தருமசேனர்

இறைவன் சூட்டிய திருநாமம் : திருநாவுக்கரசர்

திருஞானசம்பந்தர் அழைத்தது : அப்பர்

சேக்கிழார் பெருமான் இட்ட பெயர் : வாகீசர்

ஏனைய பெயர்கள் : உழவாரப்படையாளி, தாண்டகவேந்தர், ஆளுடை அரசு

காலம் : கி.பி. 6 ஆம் நூற்றாண்டு

பின்பற்றிய நெறி : அடிமை நெறி (தாசமார்க்கம்)

உலகில் நிலவிய காலம் : 81 ஆண்டுகள்

ஆக்கிய திருமுறைகள் : நான்கு, ஐந்து, ஆறு

அருளிய நூல் : தேவாரம்

பாடிய பதிகங்கள் : 4900

பாடல்களின் எண்ணிக்கை : 49000

கிடைத்த பதிகங்கள் : 312

கிடைத்த பாடல்கள் : 3066

நான்காம் திருமுறை (விருத்தம்) : 113 பதிகங்கள் (1070 பாடல்கள்)

ஐந்தாம் திருமுறை (குறுந்தொகை) : 100 பதிகங்கள் (1015 பாடல்கள்)

ஆறாம் திருமுறை (தாண்டகம்) : 099 பதிகங்கள் (0981 பாடல்கள்)

முதல் பாடல் : கூற்றாயினவாறு எனத்தொடங்கும் பாடல்

இறுதிப் பாடல் : ஒருவனையும் அல்லாது எனத்தொடங்கும்பாடல்

முக்தி அடைந்த தலம் : திருப்புகலூர் (நாகை மாவட்டம், நன்னிலம்
                                    – நாகை சாலையில் உள்ள தலம்

சமகால நாயன்மார்கள் : திருஞானசம்பந்தர், அப்பூதியடிகள்,
  திருநீலகண்டயாழ்ப்பாணர், குலச்சிறையார், மங்கையர்க்கரசியார், முருக நாயனார்,
                                    திருநீலநக்கர்

இறைவன் திருவடியில்
இணைந்த நட்சத்திரம் : சித்திரை மாதம் சதய நட்சத்திரம்



திருநாவுக்கரசர் வாழ்வில் நிகழ்ந்த திருவருள் நிகழ்ச்சிகள்

பண்ருட்டிக்கு அருகே திருவதிகையில் தமக்கையார் திருநீறிட,
"கூற்றாயினவாறு" எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடி இறையருளால் சூலை நோய் நீங்கபெற்றார் – 4 ஆம் திருமுறை, முதல் பதிகம், முதல் பாடல்

நீற்றறையில் சிதைவேதுமுறாது ஐந்தெழுத்து ஓதி அமர்ந்திருந்தார்
"ஐயர் திருவடி நீழல் அருளாகிக் குளிர்ந்ததே" – பெ.பு. 1368

சமணர்களால் இவருக்கு ஊட்டப்பட்ட நஞ்சு அமுதமானது
"நஞ்சு அமுது ஆக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே" – நான்காம் திருமுறை, 70 ஆவது பதிகம், 5 ஆவது பாடல்

சமணர்கள் ஏவிய யானை இவரைக் கொல்லாமல் வணங்கிச் சென்றது
"கொலை செய் யானைதான் கொன்றிடுகிற்குமே" – 5-91-5

சமணர்கள் இவரைக் கல்லோடு கட்டி கடலில் எறிந்தபோது கல் தெப்பமாக மாறி கரை அடைந்தார்
"கல்லினோடு என்னைப் பூட்டி அமண் கையர்" – 5-72-7

திருக்கயிலைப் பொய்கையில் மூழ்கி திருவையாறு குளத்தில் எழுந்தருளினார்.
மாதர்பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி– 4-3-1

திருவாய்மூரில் இறைவனது ஆடல் காட்சியினைக் கண்டார்
எங்கே என்னை இருந்திடம் தேடிக்கொண்டு – 5-50-1

திருபைஞ்ஞீலியில் இறைவனால் பொதி சோறு அளிக்கப்பட்டார்
விரும்பும் பொதிசோறும் கொண்டு நாவின் தனிமன்னர்க்கெதிரே– பெ. பு. 1575

திருப்புகலூரில் உழவாரப் பணி செய்த இடங்களிலெல்லாம் இறைவன் பொன்னும் நவமணியும் விளங்கித் தோன்றச் செய்தான்
உழவாரம் நுழைந்த இடம்தான் எங்கும் பொன்னினொடு நவமணிகள் பொதிந்திலங்க அருள் செய்தார் – பெ. பு. 1686



திருநாவுக்கரசர் தம் வாழ்வில் நிகழ்த்தியருளிய திருவருள் நிகழ்ச்சிகள்

பெண்ணாகடத்தில் (பெண்ணாடம், விருத்தாசலம் அருகில்) தம் தோள் மீது சூலக்குறியும், இடபக்குறியும் இடுமாறு இறைவனை வேண்ட, அவ்வாறே இறைவனும் தம் பூத கணங்களை அனுப்பி அவர் தோள் மீது இடுமாறு செய்தான்.
"பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம்" – 4-109-1

நல்லூரில் தம் முடி மீது இறைவன் திருவடி சூட்டப்பெற்றார்.
கோவாய் முடுகி அடுதிறற் கூற்றம் குமைப்பதன் முன் பூவார் அடிச்சுவடு என் மேற் பொறித்துவை – 4-96-1

திங்களூரில் (திருவையாற்றிற்கு அருகில்) அரவம் தீண்டி இறந்த அப்பூதியடிகள் மகனைத் திருப்பதிகம் பாடி உயிர்ப்பித்தார்
ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர்வரை – 4-18-1

திருவீழிமிழலையில் இறைவனிடம் வேண்டி படிக்காசு பெற்று மக்கள் பசி தீர்த்தார்
அல்லார் கண்டத்து அண்டர்பிரான் அருளால் பெற்ற படிக்காசு – பெ. பு. 1529

திருமறைக்காட்டில் அடைக்கப்பட்டிருந்த திருக்கதவினைத் திருப்பதிகம் பாடித் திறக்கச் செய்தார்.
பண்ணினேர் மொழியாள் உமை பங்கரோ – 5-10-1







தேவாரம்,திருவாசகம், பன்னிரு திருமுறைகள் என ஒவ்வொன்றிலும் திளைத்து,பக்தி அமுதை,தமிழ்த் தேனில் பருக வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். அதற்கு திருவருள் கூட்டுவிக்க வேண்டும் என்றும் நம்புகின்றோம்.

மீண்டும் அடுத்த பதிவில் மற்ற மூவர் பற்றி அறிவோம்.

முந்தைய பதிவுகளுக்கு :-

அகத்தியர் தேவாரத் திரட்டுhttps://tut-temple.blogspot.in/2017/06/blog-post_65.html


No comments:

Post a Comment