TUT தள வாசகர்களே.!
இந்த ஆடி மாதம் அன்னையின் அருளை அனைவரும் பெற்றுக் கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றோம்.அவரின்றி ஓர் அணுவும் அசையாது.அவர், அவள் பால் வசம் அன்றோ? சக்தி இன்றி சிவம் ஏது ? இந்த ஆடி மாத கொண்டாட்டத்தில் மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக உழவாரப்பணி அறிவிப்பு இந்தப் பதிவின் இறுதியில் வெளியிடுகின்றோம்.அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு சிறப்புச் சேர்க்கும் வண்ணம் அவர் அருளாலே அவர் தாள் வணங்கி கேட்டுக் கொள்கின்றோம்.
சித்தர் மற்றும் மகான்களின் வழிபாடு ஏன்? ஏற்கனவே நமக்கு நன்றாகத் தெரியும்.குருவருள் இன்றி திருவருள் கிட்டாது.குரு தான் நமக்கு இறைவனை சரியாக தொட்டுக் காட்டுவார்.அந்த குரு நிலையில் நமக்கு பற்பல மகான்களும்,சித்தர்களும் நிலை பெறுகின்றார்கள். அதனால் தான் சித்தர்கள் வழிபாடு, சித்தர்களின் மூச்சுக் காற்று பற்ற மலை ஏற்றம் என்று நாம் பயணிக்கின்றோம்.
என்ன தான் நாம் ஜாதகம் போன்ற பல வழிகளில் நாம் முயற்சித்தாலும், நமக்குள்ளே உள்ள கர்ம வினைகளை பொசுக்கும் ஆற்றல் இந்த குருமார்களுக்கு உண்டு.இந்த வகையில் ஒவ்வொரு சித்தர்களும் பிரசித்தி பெற்றவர்கள். திருப்பதிக்கு சென்று வந்தால் திருப்பம் என்று சொல்கின்றோமே ? ஏன் தெரியுமா? அங்கு நிலை பெற்று செல்வ வளம் அள்ளி அள்ளிக் கொடுத்துக்கொண்டு இருப்பவர் கொங்கணவர். இதுபோல் போகர் பழனி மலையில் நோய் தீர்க்க அருள்பாலிக்கின்றார்.
இது தான் சித்தர்களின் அருள் நிலை. இது போன்ற ஒரு சித்தர் தான் குழந்தை வேலர். சென்னையை கோவில் நகரம் சொல்லலாம். மயிலை,குன்றத்தூர்,திருஒற்றியூர் என சென்னையின் கோவில் நகரங்களை பகுக்கலாம்.ஒவ்வொன்றும் பற்பல சிறப்புகளை உள்ளடக்கியது. கயிலையே மயிலை.மயிலையே கயிலை என்ற சிறப்பு பெற்ற மயிலையில், உள்ள ஒரு சித்தர் கோவில் தான் இது. அவர் வேறு யாருமல்லர்..குழந்தை வேலர் சுவாமிகளே ஆவார்.
இவர் ஜாதகத்தையே மாற்றும் வல்லமை கொண்டவர். மூன்று முறை சென்று வந்திருக்கின்றோம். மனம் அமைதி பெறுகின்றது.நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் இவர் சிறந்தவர். கடவுள் என்பது கற்றுக் கொள்ளவேண்டிய பொருள் அல்ல.தானாக உணர வேண்டிய உன்னதம் என்பது போன்ற அருட் கருத்துக்களை இங்கே உணர முடிகின்றது.
அடியேன் கேள்விப்பட்ட வரை ஜாதங்களில் மிகப்பெரிய அளவில் தோஷங்கள் இருந்த பலர். இவரை வழிபட்ட பின் அந்த தோஷங்கள் யாவும் நீங்கி இன்று மகிழ்ச்சியான வாழ்வு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். தினமும் நவசிவாய மந்திரத்தை ஒரு 5 முறையேனும் சொல்லும் அடியார்கள். சித்தர்களையும் வழிபடுவார்களே ஆயின். அந்த அடியார்களின் ஜாதகம் மாறி விடும். நல்ல விதமாக.
பக்தியோடு சிவனின் திருவடிகளை தொழும் அடியார்கள் யார் எல்லாம் இந்த குழந்தைவேல் சித்தரை தொழுகிறார்களோ. அத்தகைய சிவனடியார்களுக்கு கோள்களால் ஏற்படும் கோளாறுகள் அனைத்தையும் நீக்குவதில் இந்த சித்தர் வல்லவர்.
குழந்தைவேல் சுவாமிகள், சித்தரை மாதம் 13-ம் நாள் பூச நட்சத்திரத்தில் ஜீவ சமாதியடைந்தார். ஜீவசமாதியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அவரது சீடரான முத்தையா சுவாமிகள், எப்பொதும் தமது குருவைத் தொழுதுகொண்டே இருக்கவேண்டுமென்று விரும்பியதால் அவரது சமாதி குழந்தைவேல் சுவாமிகள் சமாதியின் முன் அமையப் பெற்றிருக்கிறது. அவரது விருப்பப்படி அவரது சமாதியின் மீது நந்தி பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.
சற்று சுருக்கமாக ஆலய வழிபாட்டைக் காணலாம். இந்த திருக்கோவில் மூர்த்தி சிறிது,கீர்த்தி பெரிது என்பதைத் தான் நினைவுறுத்தும். சிறிய கோவில்,ஆனால் அளப்பரிய ஆற்றல் தருகின்றது.கோவில் உள்ளே நுழைந்ததும்,நேரே நம்மை நந்தி வரவேற்கிறார்.நந்திக்கு இடப் பபுறமாக வினைகளை தீர்க்கும் விநாயகர் அருள்பாலிக்கின்றார்.அருகிலே குழந்தைவேலர் உருவில் இருக்கின்றார்.தங்களின் பார்வைக்காக !
நந்திக்கு நேராக குழந்தைவேலர் அருவுருவில் வீற்றிருக்கின்றார்.கண் குளிர தரிசித்தோம்.பக்கத்திலேயே குருக்கள் வீடு உள்ளது.அவரின் நேரம் பார்த்து பேசி விட்டு சென்றால்,கண்டிப்பாக தீபாராதனை நமக்கு கிடைக்கும்.கோவில் பார்ப்பதற்கு பூச்சுக்கள் உரிந்து காணப்படுகின்றது.எனவே தான் இங்கே நாம் உழவாரப்பணி செய்ய குருவிடம் வேண்டினோம்.
நந்தி தரிசனம்
குழந்தை வேலர் தரிசனம்
குழந்தை வேலர் தரிசனம் முடித்து சற்று அமர்ந்தோம். மனம் ஒடுங்கியதும். எண்ணங்களின் வேகம் குறைந்தது. கடலிலே ஆர்ப்பரிக்கும் அலைகள் கரையோரம் அமைதியாய் கரை ஒதுங்குவது போல்,மனதில் எழுந்த எண்ணங்கள் சற்று அமைதி அடைந்தது. இது ஆரம்ப நிலை தான். ஆரம்ப நிலையே இப்படி ஒரு அனுபவம் என்றால் அதீத உள்முக நிலைகளை என்று அனுபவிக்க போகிறோம் என்று தெரியவில்லை. பின் கண் திறந்து,குழந்தைவேலரிடம் நன்றி சொல்லிவிட்டு நகர்ந்தோம்.
இது போன்ற பதிவுகளை அனைவருக்கும் தர வேண்டும் என்று விரும்பியே நாம் சித்தர் அருள் பெற நினைக்கின்றோம். இங்கு உழவார பணி செய்ய முடிவானதும், குருக்களை சென்ற வாரம் சந்தித்து பேசி, ஏகப்பட்ட செய்திகளை,பல வண்ணப்படங்களோடு அள்ளிக் கொண்டு வந்தோம்.ஆனால் சில தொழில்நுட்ப பிரச்சினைகளால் ( அலைபேசி மாற்றல் காரணமாக ) அனைத்தும் வீணாக சென்று விட்டது. நாங்கள் இருவர் (நானும்,சந்திரசேகரன் அண்ணாவும் ) அனுபவித்த இன்பத்தை மேற்கொண்டு இங்கே பகிர முடியாதது சற்று மன வருத்தத்தை தருகின்றது. இப்போது தான் புரிகின்றது காரணமின்றி காரியமில்லை. இன்னும் குழந்தைவேலர் தன்னை முழுதும் வெளிக் கொணர விரும்பவில்லை போலும் என்று உணர்ந்தோம்.
ஆனால் கண்டிப்பாக அடுத்து வரும் பதிவுகளில்,இன்னும் பற்பல தகவல்களை மெருகூட்டி தருகின்றோம்.அதுவரை வாசகர்கள் அவரிடம் பிரார்த்திக்கவும்.
எப்படி செல்வது?
மயிலாப்பூர் டேங்க்( கபாலீஸ்வரர்) பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும். பின்பு அங்கிருந்து தெற்கு மாட வீதியில் நேரே நடக்கவும்.குளம் தாண்டியும் நடக்க வேண்டும். லட்சுமி பவன் தாண்டி,அங்கே வலது புறமாக ஒரு தெரு பிரியும்.அந்த தெரு சித்திரக் குளம் மேற்கு தெரு.ஆரம்பத்திலேயே சில பூக்கடைகள் காணப் படும்.
சித்திரக் குளம் மேற்கு தெரு வழியாக சற்று தூரம் நடந்தால்,அங்கே வலது புறமாக ஒரு தெரு பிரியும்.அந்த தெரு வழியாக சென்றால் உங்களுக்கு கோவில் தெரியும். கோவில் அறிவிப்பு பலகை தெரியம். தங்களின் வசதிக்காக கூகுளை வழிகாட்டி இணைப்பு படங்கள் இணைத்துள்ளோம்.
கோவில் அறிவிப்பு பலகை
ஏவிளம்பி வருட ஆடி மாத உத்திராடம் நட்சத்திர நாளில் (06/08/2017) ஞாயிற்றுக்கிழமை அன்று நம் குழுவின் சார்பாக உழவாரப் பணி மற்றும் கூட்டு வழிபாடு மயிலாப்பூரில் உள்ளகுழந்தைவேலர் சுவாமிகள் திருக்கோவிலில் நடைபெற உள்ளது.இறை அன்பர்கள் தங்கள் வருகையை 7904612352 / 96772 67266 எண்களில் உறுதி செய்யவும்.மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழை பார்க்கவும்.
வரும் அன்பர்கள் தங்களால் முடிந்த அளவு நல்லெண்ணெய் வாங்கி வரவும்.மதிய உணவு மற்றும் இன்ன பிற ஏற்பாடுகளுக்காக அன்பர்களின் எண்ணிக்கை தேவைப்படுகின்றது.எனவே மறவாது தங்கள் வருகையை அலைபேசி மூலம் உறுதிப்படுத்தவும்.
அனைவரும் வருக ! இறை அருள் பெறுக !!
முந்தைய பதிவிற்கு :-
No comments:
Post a Comment