Subscribe

BREAKING NEWS

09 July 2017

சென்னிமலை ஆண்டவனுக்கு கோயில் கட்டிய செங்கத்துறையான்!

சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன், கொங்கு நாட்டில் மக்கள் பஞ்சம் பிழைக்க ஊர் ஊராக அலைந்த காலம். பத்து வயதுப் குடியானப் பையன் ஒருவன் பசியினால் சோமனூர் அருகில் உள்ள செங்கத்துறை கிராமத்திலிருந்து சென்னிமலைக்கு வந்தான். சென்னிமலை அடிவாரத்தில் உள்ள அய்யம் பாளையம் என்ற கிராமத்துக்குச் சென்று அங்குள்ள பண்ணையார் ஒருவரிடம் வேலை கேட்டான்.







பண்ணையார், ‘‘நீ எந்த ஊர்? உங்கப்பன், ஆத்தா எங்கே இருக்கிறார்கள்?’’ என்று கேட்டார்.
‘‘நான் செங்கத்துறைங்க. யாருமே எனக்கு இல்லீங்க!’’ என்று பதிலளித்தான்.




‘‘ஓகோ... செங்கத்துறையானா!’’ என்று பண்ணையார் கேட்டார். பின்னாளில், செங் கத்துறையான் என்ற பெயர் அவனுக்கு நிலைத்து விட்டது. ‘‘ஊதியமாக மூணு வேளை சோறு மட்டும் போடுவோம்!’’ என்றார் பண்ணையார். அங்கு மாடு மேய்க்கும் வேலையில் சேர்ந்தான்.



காலம் கடந்தது. 25 வயதான செங்கத்துறையான், வெகுளியாக இருந்தான். ஒரு நாள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது சுழல் காற்று ஒன்று பனை மர உயரத்துக்கு வீசி அடித்தது. அது அவனை ஒரு சுழற்றுச் சுழற்றியது. ‘‘ஐயோ, பேய் காத்து வீசுதே... சென்னியாண்டவா, காப்பாத்து!’’ என்றலறினான். அடுத்த கணமே காற்று ஓய்ந்தது. சற்று நேரத்தில் ஓர் அசரீரி: ‘‘ஏய் செங்கத்துறையா! நீ பசியாறிட்டே... இப்போ எனக்குப் பசிக்குது!’’
உடனே, ‘‘யார் பேசுறது, பேயா?’’ என்றான்.
‘‘இல்லே. சென்னியாண்டவன்!’’ என்று பதில் வந்தது.
‘‘ஆமா, நீதானே என்னைக் காப்பாத்தினே. முந்தியே சோறு கேட்டிருக்கலாமில்லே... கொடுத் திருப்பேனே!’’ என்றான் செங்கத்துறையான்.
‘‘ஐயோ பசிக்குதே... பசிக்குதே!’’ என்று அசரீரி மீண்டும் மீண்டும் ஒலித்தது.




‘என்ன பண்றது?’ என்று யோசித்த செங்கத்துறையான் கண்ணில், அவன் மந்தையைச் சேர்ந்த காராம் பசு ஒன்று தென்பட்டது. காராம் பசுவை தெய்வீகப் பசு என்பார்கள். இதன் பாலையே தெய்வங்களுக்கு அபி ஷேகம் செய்வார்கள். செங்கத்துறையான் தனது கலயத்தை நன்றாகக் கழுவி, அந்த காராம்பசுவின் பாலைக் கலயம் நிறையக் கறந்தான். அதை எடுத்துச் சென்று, கிழக்கு திசை நோக்கி நீட்டி, ‘‘சென்னியாண் டவா, இந்தா பால். வாங்கிக் குடி. உம் பசியெல்லாம் பறந்து போயிடும்!’’ என்று கூறினான்.
‘‘அந்தப் பாறை ஓரமா வெச்சுட்டுப் போ. குடிச்சுக்கறேன்!’’ என அசரீரி ஒலித்தது.
பாறையின் ஓரம் கலயத்தை வைத்து விட்டு, சாமி எப்படி இருக்கும்னு பார்க்க ஒரு மரத்தின் பின்னால் ஒண்டி, நின்றான். சாமி வரவில்லை. செங்கத் துறையானுக்கு சலிப்பு ஏற்பட் டது. ‘இனி சாமி வராது!’ என்று தீர்மானித்து, கலயத்தை எடுக்கப் போனான். அப்போது கலயத்தில் பால் இல்லை. பதிலாக கமகமவென விபூதி மணத்தது. ‘‘ஹை, நா கொடுத்த பாலை சாமி குடிச்சுட்டுது!’’ என்று ஆடினான்; பாடினான்.
தினமும் சென்னியாண்டவனுக்கு செங்கத்துறையான் பால் கொடுப்பது தொடர்ந்தது. ஒரு நாள், ‘‘ஆமா சாமி... நாள் தவறாம உனக்கு பால் கொடுக்கறேன். ஆனா, நீ எங்கண்ணுக்குத் தெரிய மாட்டேங்கறியே!’’ என்று சலித்துக் கொண் டான். அப்போது, ஒரு மின்னல் மின்னியது. சுழற்காற்று அடித்தது. பாறை மேல் பனை மர உயரத்துக்கு ஓர் ஒளி தோன்றியது. அதில், கையில் வேலுடன் சென்னியாண்டவர் காட்சி தந்தார். செங்கத்துறையானின் உடம்பு சிலிர்த்தது. நெடுஞ்சாண் கிடையாகத் தரையில் விழுந்து வணங்கினான். ‘‘நிலத்தம்பிரானே!’’ என்ற குரல் கேட்டு எழுந்து, சுற்றுமுற்றும் பார்த்தான். ‘‘உன்னைத்தான் கூப்பிட்டேன்!’’ என்று சென்னியாண்டவர் திருவாய் மொழிந்தார்.
‘‘நான் நிலத்தம்பிரான் இல்லே... செங்கத் துறையான், செங்கத்துறையான்!’’ என்று மறுத்தான் அவன்.
சென்னியாண்டவர் தொடர்ந்தார்: ‘‘இன்று முதல் நீ நிலத்தம்பிரான் என்று அழைக்கப்படுவாய். தேவலோகத்தில் வீரபாகு போன்ற நவவீரர் எனக்குத் தொண்டு செய்து, என் தம்பியர் ஆனது போல, நீ பூலோகத்திலிருந்து எனக்குத் தொண்டு செய்ய வேண்டி உள்ளதால், உன்னையும் ஒரு தம்பியாக ஏற்றுக் கொண்டேன். அதனால்தான் உன்னை நிலத்தம்பிரான் என்றேன். இந்த சிரகிரி மலைமேலே எனக்கு நீ ஒரு கோயில் கட்டு!’’ என்றருளி மறைந்தார்.
செங்கத்துறையான் சிலையென நின்றான். ‘‘சாமி, நானே வயித்துச் சோத்துக்காகப் பாடு படுறேன். என்னால எப்படி உனக்குக் கோயில் கட்ட முடியும்?’’ என்று கேட்டான். அசரீரி சொன்னது. ‘‘செங்கத்துறையானே, நான் உன் பின்னாலே இருக்கிறேன்!’’ செங்கத்துறையானுக்கு எதுவும் புரியவில்லை. அன்றிரவு சாப்பிடாமல் படுத்தான். உறக்கம் வரவில்லை. கோயில் கட்டுவது பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான்.
காலையில் எழுந்ததும், ‘‘நான் மாடு மேய்க்கப் போக மாட்டேன். சென்னி யாண்டவனுக்குக் கோயில் கட்டப் போறேன்!’’ என்று பண்ணையாரிடம் சொன்னான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். அப்போது, பண்ணையில் வேலை செய்யும் ஒருவனை நான்கு பேர் தூக்கிக் கொண்டு வந்தனர். அவர்கள் பண்ணையாரிடம், ‘‘இவனை நாகப் பாம்பு கடிச்சுட்டுது. வைத்தியர் ஊட்டுக்குப் போக வண்டி கேட்க வந்தோமுங்க!’’ என்றனர். ‘‘வண்டியைப் பூட்டிக்கிட்டு சீக்கிரமா கொண்டு போங்க!’’ என்றார் பண்ணையார்.
செங்கத்துறையான் கடகடவெனச் சிரித்தான். ‘‘வைத்தியரைப் பக்கத்திலே வெச்சுக்கிட்டு, பக்கத்து ஊருக்கு வண்டி கட்டிட்டுப் போறீங்களே!’’ என்று சொல்லி விட்டு வெளியே ஓடினான். சற்று நேரத்தில் பச்சிலை மற்றும் ஒரு கொத்து வேப்பிலையுடன் திரும்பி வந்தவனை அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர். பாம்புக் கடிபட்டவனை நெருங்கிய செங்கத்துறையான், பச்சிலையைக் கசக்கி அவன் மூக்கருகில் சிறிது நேரம் வைத்திருந்து, வேறு சில தழைகளைக் கசக்கி, அவன் வாயில் சாறை விட்டான். பின்பு வேப்பிலையால் அவன் உடல் முழுவதையும் நீவி விட்டான். சற்று நேரத்தில் பாம்புக் கடிபட்டவன் எழுந்து உட்கார்ந்தான். இந்தக் காட்சியை அனைவரும் ஆச்சரிய மாகப் பார்த்தனர். ‘‘இந்தப் பாம்புப் பாடத்தை, எங்கேடா செங்கத்துறையா படிச்சே?’’ என்றார் பண்ணையார்.



‘‘நான் படிக்கலே... எல்லாமே சென்னியின் செயல்!’’ என்று சொன்னான் செங்கத்துறையான். ‘சென்னியாண்டவர், செங்கத்துறையான் மீது வந்து தீராத நோயை எல்லாம் தீர்த்து வைக்கிறார்!’ என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவியது. ‘‘நானு சென்னி ஆண்டவனுக்குக் கோயில் கட்டப் போறேன்!’’ என்று கூறி விடைபெறுவதற்காகப் பண்ணையாரிடம் சென்றான் செங்கத்துறையான். உடனே வீட்டுக்குள் சென்ற பண்ணையார் பணப்பை ஒன்றுடன் திரும்பி வந்து அதை அவனிடம், சென்னியாண்டவனுக்குக் காணிக்கையாகக் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்ட செங்கத்துறையான், ‘‘என்னை சென்னியாண்டவன் ‘நிலத்தம்பிரான்’ என அழைத்தார். அதனால் மற்றவர்களும் அவ்வாறே அழைக்க வேண்டும்!’’ என்று கட்டளையிட்டான். அதன் பிறகு செங்கத்துறையானின் முகத்தில் ஓர் ஒளியும் கருணை யும் தென்பட்டன. அனைவரிடமும் விடைபெற்ற நிலத் தம்பிரான் அங்கிருந்து கிளம்பினார்.
‘சென்னிமலை மீது முருகனுக்குக் கோயில் கட்ட நிதி வேண்டி வருகிறார் நிலத்தம்பிரான்!’ என்ற செய்தி கேட்ட மக்கள், வழிநெடுக நின்று வரவேற்று, தங்களால் இயன்ற பணத்தைக் கொடுத்தனர். பணத்தையெல்லாம் தனது மேல் துண்டால் மூட்டையாகக் கட்டி மலைமேல் சென்னியாண்டவர் முன்னால் வைத்துவிட்டு, பக்கத்தில் உள்ள பாறை மேல் படுத்தார். ‘பணம் கெடச்சுப் போச்சு, மண்டபம் கட்டத் தோதான பாறை இந்த மலையில் இல் லையே?’ என தம்பிரான் பெருமூச்சுவிட்டார். அப்போது மின்னல் மின்னி, இடி இடித்தது. மழை பொழிந்து, வானம் அமைதியானது.
சென்னிமலைக்கு இரண்டு கல் தொலைவில் உள்ள ஒரு பெரிய பாறை மேல் இடி விழுந்து, பாறைகள் பிளந்தன. இந்த விஷயம் மறு நாள் காலையில் நிலத் தம்பிரானுக்குத் தெரிய வந்தது. அந்த இடம் தற்போது ‘ஒட்டப்பாறை’ என்ற பெயரில் கிராமமாக விளங்குகிறது. அங்கிருந்து எருமைக் கடா பூட்டிய வண்டியில் பாறைகளை ஏற்றிக் கொண்டு வந்து, மலை அடிவாரத்தில் குவித்தார். பிறகு அவற்றை மலைமேல் கொண்டு போக நிலத்தம்பிரான் ஏற்பாடு செய்தார். ஒரு சுபயோக சுப தினத்தில் மண்டபம் கட்டும் திருப்பணியை நிலத்தம்பிரான் துவக்கி னார். திருப்பணிகள் நடக்கும்போது தம்பி ரான் ஊர் ஊராகச் சென்று, மக்களது குறைகளைத் தன் ஆன்மிக சக்தியால் தீர்த்து வைப்பார். அதன் மூலம் கிடைத்த தொகையுடன் கட்டடப் பணியாட்களுக் குக் கூலி கொடுக்கக் குறிப்பிட்ட நாளன்று சென்னிமலைக்கு வந்து விடுவார். அவர் கூலி கொடுக்கும் முறை அலாதியானது. பொரி மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டி, கடலையை கலக்குவது போல, பணத்தை பொரி யுடன் கலக்கி, தன் இரு கைகளால் அள்ளிப் போடுவார். அந்தப் பணத்தை எண்ணிப் பார்த் தால் அவரவர் செய்த வேலைக்கான கூலி துல்லியமாக இருக்கும்.
நிலத்தம்பிரான் ஒரு நாள் இப்படி பணத்துடன் வரும்போது திருடர்கள் நான்கு பேர் அவரை மிரட்டி அவர் கையிலுள்ள பணத் தைப் பிடுங்கிக் கொண்டனர். அப்போது, ‘‘இது சென்னி ஆண்டவரது பணம்! இதைப் பிடுங்கிய உங்களுக்குக் கண் தெரியாமல் போயிடும்!’’ என்று நிலத்தம்பிரான் சாபம் கொடுத்தார். அவ்வளவுதான்! திருடர்களுக்குக் கண் தெரியவில்லை. அவர்கள் அலறி அடித்து தம்பிரான் காலில் விழுந்து, ‘‘தெரியாமல் செய்து விட்டோம்!’’ என்று மன்றாடினர்.
‘‘நாற்பத்தெட்டு நாட்களுக்கு சென்னியாண் டவர் மலைப் படியை பெருக்கி வாருங்கள். கருணை காட்டுவார்!’’ என்றார். அவர்கள் அவ்வாறே செய்ய 48-ஆம் நாள் அவர்களுக்குப் பார்வை திரும்பக் கிடைத்தது.
மலை மேல் மண்டபம் கட்டும்போதே மலை யடிவாரத்தில் உள்ள கயிலாசநாதர் கோயிலுக்கு மதில் எழுப்பும் பணியையும் செய்தார். கதவுக்கு மரம் தேடி பொள்ளாச்சி சென்றார். அப்போது கோவையும், மலபாரும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. ஆனைமலையில் ஒரு பெரிய மரத்தைப் பார்த்த நிலத்தம்பிரானும் அவர் சீடர்களும் அந்த மரத்தை வெட்ட ஆரம்பித்தனர்.
அப்போது, அங்கே வந்த வெள்ளைக்காரத் துரை, ‘‘யாரைக் கேட்டு மரத்தை வெட்டு கிறாய்?’’ என்று ஆங்கிலத்தில் அதட்டினார். அவரிடம், ‘‘சென்னியாண்டவன் வெட்டச் சொன்னார், வெட்டுகிறேன்!’’ என்று ஆங்கிலத் திலேயே பதில் சொல்லி, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் நிலத்தம்பிரான்.
‘‘மரத்தை வெட்டறதுமில்லாம, திமிராவா பேசறே? இவனை மரத்திலே கட்டி வையுங்கடா!’’ என்று துரை உத்தரவு போட்டார்.
‘‘துரை... என்னைக் கட்டிப் போடறது இருக் கட்டும். உம் பொண்டாட்டிக்குப் பைத்தியம் புடுச்சி, கொள்ளிக் கட்டையை எடுத்துக்கிட்டு, ஊட்டைக் கொளுத்தப் போறேன்னு சுத்திச் சுத்தி வர்றா. அவளைப் போயி முதல்லே கட்டிப் போடு!’’ என்று தம்பிரான் சொன்னார்.
அப்போது துரையின் வேலையாள் வேகமாக ஓடிவந்து, நிலத்தம்பிரான் சொன்ன தகவலை ஊர்ஜிதம் செய்தார். துரை உடனே வீட்டுக்குக் கிளம்பினார். வேலைக்காரப் பெண்கள் துரையின் மனைவியை அமுக்கிப் பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவளுக்கு முன்னால் வந்து நின்ற தம்பிரான், தன்னிடமுள்ள விபூதியை எடுத்து அவள் தலையில் மூன்று முறை போட்டுவிட்டு, ‘‘சென்னியாண்டவா, இந்தக் குழந்தையைப் காப்பாத்து!’’ என வேண்டினார். என்னே ஆச்சரி யம்! அடுத்த கணமே துரையின் மனைவி, பழைய நிலைக்கு வந்தாள். இதைக் கண்டு வியந்து போன துரையும் அவர் மனைவியும், தம்பிரான் காலில் விழுந்து வணங்கினார். அடுத்த கட்டமாக, துரையே தன் ஆட்களைக் கொண்டு, அந்த மரத்தை வெட்டி சென்னிமலைக்கு அனுப்பி, தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். சென்னிமலை அடிவாரத்தில் கயிலாசநாதர் ஆலயத்தில் இப்போதும் இருக்கும் அந்த முன் கதவுதான் அது. ஒரே மரத்தால் செய்யப்பட்டது.
கோயில் வேலைகளை விரைந்து முடித்த தம்பிரான் கும்பாபிஷேகத்துக்கு நாள் குறித்தார்.
கும்பாபிஷேகத்துக்கு முதல் நாள் நிலத்தம்பிரான் கோயிலின் வேலைகளைப் பார்வையிட்டார். அப்போது மண்டபத் தூண் அருகில் நின்றிருந்த சிற்பி ஒருவர், தூணிலுள்ள சிற்பம் ஒன்றை நிலத்தம்பிரானிடம் சுட்டிக் காட்டினார். அதைப் பார்த்த தம்பிரான் கலகலவெனச் சிரித்தார். நிலத்தம்பிரானது சிலையை சிற்பி தத்ரூபமாகச் செதுக்கியிருந்தான்.
தம்பிரான், சென்னியாண்டவன் பக்கம் திரும்பி, ‘‘சென்னியாண்டவா... உன் திருவடியை அடையும் நேரம் நெருங்கி விட்டதைச் சிற்பியின் மூலம் உணர்த்துகிறாயா?’’ என்று கேட்டார். பிறகு, ‘கற்பூசாரி வந்து விட்டான். இனி இந்த தோல் பூசாரிக்கு இங்கு வேலை இல்லை!’ என்று தீர்மானித்து, சென்னிமலை அடிவாரத்தில் தனக் காக அமைத்த சமாதியில் போய் அமர்ந்தார். அந்த நிலையிலேயே 15-ஆம் நாள் சமாதியானார்.
மலைப்படி அருகே செங்கத்துறை பூசாரியார் மடம் ஒன்று இருக்கிறது. அங்கு அவர் சமாதிக்கு மேலே முருக விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து, சிறு கோயில் கட்டி பக்தர்கள் வழிபடுகின்றனர். மகா மண்டபத் தூணில் நிலத் தம்பிரானது சிலை இன்றும் உள்ளது. நிலத்தம்பிரான், சென்னியாண்டவனுக்குக் கோயில் கட்டுவதற்கு முன்னால், நான்கு கால் மண்டபத்தில் நின்ற கோலத்துடன் ஆண்டவர் காட்சி தந்தார். அருகில் உள்ள ஊரிலிருந்து சிவாச்சார்யார் ஒருவர் வந்து பூஜை செய்து, வில்வ மரப் பாலால் ஆண்டவன் நெற்றியில் பொட்டு வைப்பார். ஒரு நாள் சிவாச்சார்யார் வராததால் நிலத் தம்பிரானே பூஜை செய்தார். அப்போது குள்ளமான தம்பிரானுக்கு ஆண்டவர் நெற்றி எட்டாததால், ஆண்டவர் தலையைக் கொஞ்சம் தாழ்த்தினாராம். அதனால் இன்றும் சென்னியாண்டவரின் தலை தாழ்ந்தபடியே இருக்கிறதாம்!
ஈரோட்டில் இருந்து பெருந்துறை வழியாகச் சென்றால் 33 கி.மீ. பெருந்துறையில் இருந்து 14 கி.மீ. தொலைவில் சென்னிமலை அமைந்துள்ளது. மலைக்கு மேல் செல்ல வாகன வசதிகள் உண்டு.
செங்கத்துறை அய்யன், வேட்டுவம்பாளையத்து அய்யன் என முருகனருள் பெற்ற பல குடியானவர்கள் சென்னியாண்டவர் கோயிலுக்கு ஏராளமான திருப்பணிகளும் அருட்பணிகளும் செய்துள்ளனர்.

நன்றி.http://www.nermai-endrum.com( சித்ரமேழி தர்ம. சபை)

No comments:

Post a Comment