Subscribe

BREAKING NEWS

07 July 2017

சிவபக்தையைத் தேடிவந்த வல்லப சித்தர்..



அந்த தேவதாசிக்கு பொன்னனையாள் என்று பெயர். அந்தப் பெயர் அவளுக்குப் பொருந்துவது போல் வேறு எந்தப் பெண்ணுக்கும் அந்த அளவு பொருந்தாது. காரணம் அவள் மேனிநிறம்! பளபளவென்று பொன்னைப்போல் மினுமினுத்துக் கொண்டிருந்தது அவள் உடல்!
அவளைப் பார்த்தவர்கள் யாரும் அவளது நிறத்தைப் பற்றி வியந்து பேசாமல் இருந்ததில்லை. கோவிலில் அவள் நடனமாடுவதைப் பார்த்தால் தங்கச்சிலை ஒன்று உயிர்பெற்று, கைகால் வீசி ஆடுவதுபோல்தான் தோன்றும்.
ஆனால் எல்லாராலும் வியந்து பேசப்படும் தங்க நிறத்தைக் கொண்ட பொன்னனையாளுக்குத் தன் மேனிநிறம் பற்றிப் பெரிய பெருமை எதுவுமில்லை. இன்னும் சொல்லப்போனால் தன் தங்கநிறம் குறித்து அவளுக்கு மனதில் சலிப்புதான் இருந்தது.
அந்த சலிப்புக்கு ஒரு முக்கியமான காரணமுண்டு. அவள் பெரிய சிவ பக்தை.
மதுரை அருகே திருப்புவனத்தில் வாழ்ந்துவந்தாள். அந்த ஊர்ச் சிவாலயத்தில் நாட்டியமாடி பொருளீட்டிவந்தாள். அந்த சிவாலய தெய்வமான திருப்புவனநாதர்மேல் அவள் கொண்டிருந்த பக்திக்கு அளவேயில்லை.
ஆனால், அவளுக்கு மனக்குறை ஒன்றிருந்தது. “இந்தக் கோவிலில் சிவலிங்கம் மட்டும்தானே இருக்கிறது? உற்சவ மூர்த்தியாக தங்கத்தில் ஒரு நடராஜர் சிலை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
நான் நடனமணி. சிவலிங்கத்தின்முன் நாட்டியமாடுகிறேன். ஆனால் நடனக் கோலத்தில் நடராஜரின் தங்க விக்ரகமிருந்து அதன்முன் ஆடினால்தானே அது பொருத்தம்? ஆடல்வல்லான் என் ஆடலைப் பார்க்கிறானென்று அப்போதுதானே என் மனதில் ஆனந்தம் தோன்றும்?



என்றேனும் ஒருநாள் கட்டாயம் அழியப்போகும் என் உடலின் தங்கநிறத்தால் என்ன லாபம்? என்றும் அழியாமல் நிலைத்திருப்பவனான பொன்னார் மேனியனுக்கல்லவோ பொற்சிலை அமைக்கவேண்டும்?’
அவள் மனதில் கசந்த நகைப்பு ஒன்று பிறந்தது. நடனக்கலை மூலம் பெரிய அளவில் ஒன்றும் அவளால் பொருளீட்ட முடியவில்லை. அவள் இல்லத்தில் சில பித்தளைப் பாத்திரங்களே இருந்தன. அதைத் தவிர அவளுக்குச் சொல்லிக்கொள்ளும் வகையில் சொத்தென்று பிரமாதமாக எதுவுமில்லை. இந்த லட்சணத்தில் கோவிலில் தங்க நடராஜர் சிலை வைக்கவேண்டுமென்று கனவு!
நடக்கக்கூடியதா இது?
இந்நினைவு வந்தபோதெல்லாம் அவள் பெருமூச்சு விடுவாள். யாரேனும் வள்ளல் வந்து பணம் கொடுத்தால் அவள் கனவு நிறைவேறலாம். ஆனால் தங்கச்சிலை செய்ய பொருளுதவி தரும் வகையிலான அவ்வளவு பெரிய வள்ளல் இங்கே யார்? சிறுகச்சிறுக குருவிசேர்ப்பதுபோல், தானே
தன் சம்பாத்தியத்தில் சேமித்துத் தங்கச்சிலை செய்துவைக்கலாமென்றால், என்றைக்குப் பணம்சேர்ந்து என்றைக்கு சிலைசெய்வது?
தனக்கும் நாளாக நாளாக வயதாகிக் கொண்டிருக்கிறது. பல்லெல்லாம் ஆட்டம் கண்டபிறகு நடனமாடினால், அந்த மூதாட்டியின் ஆட்டத்தைப் பார்க்க யார் வருவார்கள்? நடனக் கலைஞர்களின் சம்பாத்தியமென்பதே அவர்கள் இளமையாக இருக்கும்போது மட்டும்தானே?
பெரும் சிவபக்தையான அவள் அந்த ஆலயத்திலுள்ள சிவபெருமானை வழிபட வரும் அன்பர்களுக்கெல்லாம் உணவிட்டு விருந்தளித்து வந்தாள்.
அடியவர்களுக்கு அன்னதானம் செய்ததில் அவளது சம்பாத்தியத்தின் பெரும்பகுதி கரைந்துகொண்டிருந்தது. அன்னதானத்தை நிறுத்தவும் அவளுக்கு மனமில்லை.
நாள்தோறும் திருப்புவன சிவலிங்கத்தைப் பார்த்துக் கண்ணீர் விடுவாள் அவள். “நான் எனக்கென்று எதையாவது உன்னிடம் கேட்டேனா? உனக்குத்தான் ஒரு தங்க நடராஜர் சிலை கேட்கிறேன். நீ சித்தர்களுக்கெல்லாம் பெரிய சித்தனாயிற்றே? ஏதாவது ரசவாதம் செய்து எனக்குக் கொஞ்சம் தங்கம் கொடுத்தால் என்ன? அதில் நான் உனக்கு சிலை செய்துவைத்து மகிழ்வேனே? உலகம் முழுவதையும் ரட்சிக்கும் உனக்கு என்னை மகிழ்ச்சியடையச் செய்வதில் அப்படியென்ன கஷ்டம்?’
இந்த நினைப்பில் அவள் விழிகளில் கண்ணீர் வழியும். தங்க நடராஜர் சிலை தொடர்பான தன் எண்ணம் ஈடேறவில்லையே என்ற கவலையில் அவள் முகத்தில் எப்போதும் ஓர் ஏக்கம் குடிகொண்டிருக்கும்….
அன்று திருப்புவனம் என்ற அந்த சிற்றூருக்கு, தலயாத்திரை செல்லும் ஒரு சிவனடியார் குழு வந்துசேர்ந்தது. பொன்னனையாள் அனைவரையும் அன்போடும் மட்டற்ற மகிழ்ச்சியோடும் வரவேற்றாள். எல்லாருக்கும் உணவளிக்க ஏற்பாடு செய்தாள்.
அவளது சிவ பக்தி அந்தப் பிரதேசத்தில் மிகவும் பிரசித்தம். மக்கள் அதன்பொருட்டு அவளைப் புகழாத நாளில்லை. எனவே அந்த சிவபக்தை தரும் உணவை ஏற்க சிவனடியார்கள் அனைவரும் அவள் இல்லத்துக்கு விஜயம் செய்தார்கள். கைகால் கழுவிக்கொண்டு பந்தியில் அமர்ந்தார்கள். தலைவாழை இலையிட்டு உணவு பரிமாறும் பணி தொடங்கியது.
வந்த சிவனடியார்களில் ஒரே ஒருவர் மட்டும் மிக வசீகரமான தோற்றத்தோடிருந்தார். இளைஞர்தான். உடலெங்கும் பூசிய திருநீறு. பளபளக்கும் கருவிழிகள். அகன்ற நெற்றி. அடர்ந்த தலைமுடி. கழுத்தில் ஏராளமான ருத்திராட்ச மாலைகள் பாம்பைப்போல் வளைந்து வளைந்து கிடந்தன. அப்போதுதான் குளித்துவிட்டு வந்தவர்போல் தலையில் ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது.

அவர் பொன்னனையாளை நிமிர்ந்து பார்த்தார். அவர் பார்வையின் கூர்மை அவள் முகத்தை ஆராய்ந்தது. பொன்னனையாளும் அவரைப் பார்த்தாள். சிவனடியாரின் முகத்தைச் சுற்றி ஒரு புனித ஒளி பரவியிருந்ததுபோல் தோன்றியது. பக்தியோடு அவர் இலையில் உணவு பரிமாறினாள் அவள்.
எல்லா அடியவர்களும் சாப்பிட்டு முடித்து எழுந்துசென்றுவிட்டார்கள். ஆனால் அந்த இளைஞரோ உணவிட்ட இலைமுன் அமைதியாக உட்கார்ந்திருந்தாரேயல்லாது உணவில் கைவைக்கவே இல்லை. அது ஏனென்று பொன்னனையாளுக்கு விளங்கவில்லை. அவர் என்ன எதிர்பார்க்கிறார்? நாம் ஏதும் தவறு செய்துவிட்டோமா?
அவள் அவரருகே அமர்ந்து விசிறியால் விசிறிக் கொண்டே, “”சுவாமி! நான் ஏதேனும் தவறு செய்துவிட்டேனா? ஏன் உணவுண்ணாமல் அமர்ந்திருக்கிறீர்கள்?” என்று கனிவுடன் விசாரித்தாள்.
அந்த இளைய அடியவர் மீண்டும் பொன்னனையாள் முகத்தைக் கூர்மையாகப் பார்த்தார். அவரின் மிகவும் தீட்சண்யமான பார்வை அவளது ஆன்மாவையே ஊடுருவுவதுபோல் இருந்தது. பின் பதில் சொன்னார் அவர்:
“”பெண்ணே! உன் முகத்தில் ஏதோ தீராத ஏக்கம் இருக்கிறது. அந்த ஏக்கத்தை உன்னால் மறைத்துக்கொள்ள முடியவில்லை. அடியவர்களுக்கு உணவிடும்போது மகிழ்ச்சியோடும் மலர்ச்சியோடும் உணவிடவேண்டும். வருத்தத்தோடு உணவிடலாகாது. அப்படி உணவிட்டால் அத்தகைய உணவை ஏற்கும் வழக்கம் எமக்கில்லை. உன் ஏக்கம் என்னவென்று சொல். அதைத் தீர்த்துவிட்டு உணவருந்துவேன்.”
பொன்னனையாள் விசிறியால் அவருக்கு விசிறியவாறே கலகலவென்று நகைத்தாள்.
“”சுவாமி! எனக்கு ஓர் ஏக்கமுண்டு என்பது உண்மைதான். ஆனால் என் ஏக்கம் உங்களால் தீர்க்கக்கூடியதல்ல. அது என் வாழ்நாளில் தீராத ஏக்கம். அது கிடக்கட்டும். நீங்கள் உணவுண்ணுங்கள்!”
இப்போது அந்த இளம் அடியவர் நகைத்தார்.
“”பெண்ணே! உன் மனதில் ஓர் ஏக்கம் குடிகொண்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்த எனக்கு, அந்த ஏக்கம் என்னவென்றும் கண்டுபிடிக்க முடியாதா என்ன? சிவன்கோவிலில் தங்கத்தினாலான நடராஜரின் உற்சவ விக்ரகம் இல்லையே என்பதுதானே உன் ஏக்கம்?”
சிவனடியாரின் பேச்சைக்கேட்ட பொன்னனையாள் வியப்பின் விளிம்பிற்கே சென்றுவிட்டாள். தன் ஆழ்மனதில் குடிகொண்டிருக்கும் ஏக்கத்தை எப்படி இவ்வளவு துல்லியமாகக் கண்டுபிடித்துவிட்டார் இவர்? இவர் சாதாரண ஆளல்ல. மிகப்பெரிய ஆற்றல்களுடைய சித்தராகத்தான் இருக்கவேண்டும்.
அவள் ஒரு விம்மலோடு பேசலானாள்:
“”சரியாகச் சொல்லிவிட்டீர்கள் சுவாமி!
ஆனால் அப்படி வெறுமே சொல்வதால் என்ன பயன்? என் ஏக்கம் தீரவும் தாங்கள் ஏதாவது வழி சொல்லலாகாதா?”
“”உனக்கு தங்கச்சிலை செய்ய கொஞ்சம் பொன் தேவை. அவ்வளவு தானே? நீ என் அன்புக்குப் பாத்திரமாகிவிட்டாய். உடனே உன் வீட்டிலிருக்கும் பாத்திரங்களைக் கொண்டுவா.”
பொன்னனையாள் வெட்கத்தோடு பதில் சொன்னாள்:
“”சுவாமி! நான் அதிக செல்வ வளம் உடையவளல்ல. நான்கைந்து பித்தளைப் பாத்திரங்களைத்தவிர என் வீட்டில் தங்கப் பாத்திரம் எதுவுமில்லையே? என்ன செய்வேன்?”
“”நான் தங்கப் பாத்திரங்களைக் கேட்கவில்லையே பெண்ணே? உன் உடல் நிறமும் உன் மனமும் தங்கமாக இருக்கின்றன. நீ உன் வீட்டிலுள்ள பித்தளைப் பாத்திரங்களையே என்முன் கொண்டு வை. அதுபோதும்.”
சமையலறைக்குச் சென்ற பொன்னனையாள், பித்தளையாலான சில சமையல் பாத்திரங்களை எடுத்துக் கொண்டுவந்து அவர்முன் கூச்சத்தோடு வைத்தாள்.
இளைய அடியவர் தன் கமண்டலத்திலிருந்து தண்ணீரெடுத்து மந்திரித்து அந்தப் பாத்திரங்கள்மேல் தெளித்தார். பின் தன் திருநீற்றுப் பையிலிருந்து கொஞ்சம் திருநீறை எடுத்து அவற்றின்மேல் தூவினார்.
“”பெண்ணே! இந்தப் பாத்திரங்களை உன் இல்லச் சமையலறையில் எரிகிற அடுப்பில் போட்டு அடுப்பை மூடிவிட்டு வா! மூடிய அடுப்பு எரிந்துகொண்டே இருக்கட்டும்!” என்றார்.
பொன்னனையாள் அப்படியே செய்தாள். பின் அவரருகே அமர்ந்து மறுபடியும் விசிறத் தொடங்கினாள். இளைய அடியவர் வயிறாரச் சாப்பிட்டுக் கைகழுவினார்.
பொன்னனையாள் அவர் கை துடைத்துக்கொள்ள ஒரு துண்டைக் கொணர்ந்து கொடுத்தவாறே அவரிடம் பிரியமாக விசாரிக்கலானாள்:
“”சுவாமி! தாங்கள் யார்? தாங்கள் எனக்கு மிகவும் தெரிந்தவர்போல் தோன்றுகிறீர்கள். தங்கள் முகம் மிகமிகப் பரிச்சயமான முகம் போல் தென்படுகிறது. ஆனால் தாங்கள் யாரென்று என்னால் நினைவுபடுத்திப் பார்த்து அறியக்கூடவில்லை. எங்கே உங்களைப் பார்த்தேன் என்று எனக்கு நினைவு வரவில்லை. தாங்கள் எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறீர்கள் சுவாமி? தங்கள் திருநாமம் என்னவோ?”
இளைய அடியவர் கடகடவென்று நகைத் தார். என்ன தெய்வீகச் சிரிப்பு இது என வியந்தாள் பொன்னனையாள். அவர் தேனைப்போன்ற இனிய குரலில் பதில் சொல்லலானார்:
“”பெண்ணே! நான் தென்மாடக்கூடல் என்றழைக்கப்படும் மதுரை நகரைச் சேர்ந்தவன். வல்லப சித்தன் என்பது என் பெயர். நீ மதுரை வந்த காலங்களில் அங்கே என்னைப் பார்த்திருக்கக்கூடும். திருப்புவனத்திலும் நான் இருக்கிறேன். நல்லது. நான் சென்றபிறகு எரியும் அடுப்பில் போட்ட பாத்திரங்களை ஜாக்கிரதையாக எடுத்து வைத்துக்கொள். அந்தப் பாத்திரங்கள் உன் ஏக்கத்தைத் தீர்க்கும்! மேலும் ஏதேனும் தேவையானால் தயங்காதே. மதுரைக்கு வந்து என்னை சந்தித்து வேண்டியவற்றை கேட்டுப் பெற்றுக்கொள்!”
சொன்ன இளைய அடியவர் விடைபெற்று கம்பீரமாக நடந்துசென்றார். அந்த நடை உலகையெல்லாம் கட்டியாளும் ஒரு மாபெரும் சக்கரவர்த்தியின் நடைபோல் இருந்தது. அவர் நடந்துசென்ற அழகையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த பொன்னனையாள் திடீரென நினைவுவந்தவளாய்ப் பரபரப்போடு சமையலறை நோக்கி நடந்தாள். அங்கே சுடச்சுட ஓர் அற்புதம் அவளுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை அப்போது அவள் அறிய வில்லை!
சித்தர் சொன்னபடி, தன் இல்லத்திலிலிருந்த சில பித்தளைப் பாத்திரங்களை அவள் எரியும் அடுப்பினுள்ளே போட்டு அடுப்பை மூடி வைத்திருந்தாள் அல்லவா? அடுப்பின் மூடியை நீக்கிவிட்டு உள்ளே உற்றுப்பார்த்தாள்.
அதுவரை கணகணவென எரிந்துகொண்டி ருந்த நெருப்பு அப்போது முழுவதுமாக எரிந்து முடிந்து அணைந்திருந்தது. அவள் நெருப்பில் போட்ட பாத்திரங்களின்மேல் வெள்ளை நிறத்தில் சாம்பல் படர்ந்திருந்தது.
சூடான பாத்திரங்களை இடுக்கியால் பிடித்தெடுத்து நீர்விட்டுக் கழுவினாள். அடுத்த கணம் ஆச்சரியத்தில் திகைத்துநின்றாள். பாத்திரம் ஒவ்வொன்றும் சொக்கத் தங்கமாக மாறி பளபளவென ஒளிவீசிக் கொண்டிருந்தது!
“ஆகா! என் இல்லத்திற்கு வந்த அடியவர் சாமான்யமானவர் அல்லர். அவர் மாபெரும் சித்தராகத்தான் இருக்கவேண்டும். மந்திரிக்கப்பட்ட நீரை இந்தப் பாத்திரங்களின்மேல் தெளித்து கொஞ்சம் திருநீறை இவற்றின் மேல் தூவினாரே? இதோ, தன் அபார ஆற்றல்மூலம் என்வீட்டுப் பித்தளைப் பாத்திரங்களையெல்லாம் தங்கமாக்கிவிட் டாரே? இனியென்ன? என் நெடுநாள் கனவு பலிலிக்கப்போகிறது. இந்தப் பாத்திரங்களை உருக்கிக் கிடைக்கும் தங்கத்தில் நான், ஆடும் நடராஜரின் பொற்சிலையை வடிக்கச் செய்வேன்.’
அவள் ஆனந்தத்தில் தங்கப் பாத்திரங்களைத் தலையில் வைத்துக் கொண்டாடினாள்.
அவற்றைத் தன் இதழ்களால் முத்தமிட்டாள். பாத்திரங்களைத் தூக்கிக்கொண்டு யாருமில்லாத தன் இல்லத்தில் தன்னைத் தானே ஒரு சுற்றுச் சுற்றி ஆடினாள். தனக்குத்தானே கலகலவென நகைத்துக் கொண்டாள். திடீரென அந்தப் பாத்திரங்களையெல்லாம் தன் இல்லப் பூஜையறையில் கொண்டு வைத்து, அவற்றைக் கீழே விழுந்து வணங்கினாள். மகிழ்ச்சியில் அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவளின் இதயத்தில் குடிகொண்ட நடராஜர் அவளது செயல்களைப் பார்த்து நகைத்துக்கொண்டார்.
தங்கத்தில் சிலைசெய்யும் சிற்பியை சந்தித்த அவள் தன் பாத்திரங்களைக் கொடுத்து, அவற்றை உருக்கிக் கிடைக்கும் பொன்னால் நடராஜரின் ஆடும் திருக்கோலச் சிலையை வார்த்துத் தருமாறு வேண்டினாள்.
அந்தத் தங்கத்தைப் பரிசோதித்த சிற்பி வியப்பிலாழ்ந்தான். இத்தகைய உயர்ந்த தங்கம் எங்கே கிடைத்ததென்று வினவினான். பொன்னனையாள் சொன்ன செய்திகளைக் கேட்டு அவன் உள்ளம் பிரம்மித்தது. அவள் சொன்ன அனைத்தையும் அவன் நம்பினான். காரணம், அத்தகைய அபூர்வமான பத்தரை மாற்றுத் தங்கத்தை அவன் வாழ்நாளில் அது வரை பார்த்ததில்லை.
பாத்திரங்களை உருக்கிக் கிடைத்த தங்கத்தில் பக்திப் பரவசத்தோடு அவன் நடராஜர் சிலையை வடித்துத் தந்தான். சொக்கத் தங்கத்தால் செய்த அந்த சொக்கநாதர் சிலை அபூர்வமான எழிலோடு ஒளிவீசியது. சிலையைக் கண்ணில் ஒற்றிக்கொண்ட அவன், கூல வாங்க மறுத்துவிட்டான். சிலையைத் தான் வடிக்கவில்லையென்றும், நடராஜரே தன்மூலம் வடித்துக்கொண்டாரென்றும், எனவே தான் கூலி பெறுவது நியாயமில்லை என்றும் அவன் பக்திப் பெருக்குடன் கூறினான். சிலைக்காக தங்கத்தை உருக்கிய சிற்பியின் உள்ளத்தையே அந்தச் சிலை உருக்கிவிட்டது என்பதைப் பொன்னனையாள் புரிந்துகொண்டாள்.
இனி அந்தப் பொற்சிலையை கோவிலிலில் நிறுவவேண்டியது மட்டும்தான் பாக்கி. ஆனால் இந்தச் சிலை தோன்றக் காரணமாக இருந்த சித்தரிடம் சிலையைக் காண்பித்து தான் ஆசிபெறவேண்டாமா? பொன்னனையாள் தான் பெற்ற குழந்தைபோல் சிலையை ஒரு துணியால் சுற்றி மார்போடு அணைத்துக்கொண்டு, மதுரையம்பதி நோக்கிப் புறப்பட்டாள்.
அவள் உள்ளம் சித்தரைப் பற்றிய புனித நினைவுகளில் தோய்ந்திருந்தது….
கூடல் மாநகரில் அவரைப் பற்றிய அடையாளங்களைச் சொல்லிலி எதிர்ப்பட்டவரிடமெல்லாம் விசாரித்தாள் அவள். எல்லாருக்கும் அவரைத் தெரிந்திருந்தது. ஆனால் அவர் இப்போது இருக்குமிடம்தான் யாருக்கும் தெரியவில்லை.
“சிறிதுகாலம் முன்னால் எங்கள் தெருவில்
தான் ஓர் ஆணைப் பெண்ணாக்கினார் அவர்’

என்றார்கள் சிலர். “அந்தச் சித்த புருஷர் நடுவீதியில் ஓர் ஊசிமுனையில் நின்று நடனமாடியதை நாங்கள் பார்த்தோம்’ என்றார்கள் வேறுசிலர். “நான் உண்மையில் முதியவன் அம்மா! அவர்தான் என்னை இளைஞனாக்கினார்!’ என்று அவரை எண்ணிக் கைகூப்பித் தொழுதான் ஓர் இளைஞன். “இறந்தார் என்று மருத்துவர்கள் சொன்ன என் கணவரை உயிர்ப்பித்து எனக்கு மாங்கல்யப் பிச்சை தந்தவர் அவர்தான் அம்மா!’ என்று தன் மாங்கல்யத்தைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு உள்ளம்நெகிழ்ந்தாள் ஒருத்தி.
அப்போது மதுரையை ஆண்டுகொண்டி ருந்த மன்னன் அபிஷேக பாண்டியன், அந்தச் சித்தரைப் பற்றிக் கேள்விப்பட்டானாம்.
அவரைத் தன்னை வந்து சந்திக்குமாறு சொல்லியனுப்பினானாம். “தேவையிருந்தால் மன்னன் வந்து தன்னைச் சந்திக்கட்டும், எனக்கு அவரால் ஆகவேண்டியது ஒன்றுமில்லை’ என்று பதில்சொல்லிலி அனுப்பினாராம் சித்தர்.
அவர் கோவில் பிராகாரத்தில் இருப்பதாக அறிந்து மன்னன் தானே சென்று அவரை வணங்கி “அவர் யார்’ என்று வினவினானாம். தான் தாய்- தந்தை இல்லாத அநாதை என்ற அவர், தன்னை ஒருவன் கல்லால் அடித்ததாகவும், இன்னொருவன் வில்லால் அடித்ததாகவும், அவர்களிடம் தப்பித்து, தான் இந்தக் கோவிலுக்கு வந்து குடியிருப்பதாகவும் சொல்லிலி மர்மமாக நகைத்தாராம். “தங்களுக்கு நான் ஏதேனும் செய்ய விரும்புகிறேன், என்ன செய்யட்டும்’ என்று மன்னன் பிரியமாகக் கேட்டானாம்.
“எனக்கு ஒன்றும் நீ செய்ய வேண்டாம். இதோ. கோவில் வாசலிலில் சிலையாக நிற்கும் இந்தக் கல் யானைக்கு பசிக்கிறது. ஒரு கரும்பு வாங்கிக் கொடு!’ என்றாராம் சித்தர்.
மன்னன் திகைத்துப் போய் ஒரு கரும்பைக் கொண்டுவரச் சொல்லிலி சித்தரிடம் கொடுக்க, சித்தர் கரும்பை யானைக்குக் கொடுத்தாராம். என்ன ஆச்சரியம். அந்தக் கல் யானை சித்தர் கொடுத்த கரும்பை கரகரவென்று கடித்துச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் அசைவே இல்லாமல் நின்றதாம்! மன்னன் சித்தரின் காலிலில் விழுந்து வணங்கி, கோவிலை வலம்வந்து மீண்டும் சித்தரைத் தேடியபோது அவரை எங்கும் காணவில்லையாம். எங்கு வேண்டுமானாலும் இருப்பவரை- ஏன் எங்கும் இருப்பவரை எங்கேயென்று தேடுவது!
இப்படி அந்த விந்தையான சித்தரைப் பற்றி ஏராளமான தகவல்களை மக்கள் பலர் பொன்னனையாளிடம் சொல்லிலிச் சொல்லிலி வியந்தார்கள். ஆனால் கல் யானைக்குக் கரும்புகொடுத்தபின் மறைந்த அவர் பின்னர் எங்கும் தென்படவே இல்லை என்றார்கள்.
பொன்னனையாள் அவர் கடைசியாகத் தென்பட்டது மதுரை மீனாட்சியம்மன் கோவில் பிராகாரத்தில்தான் என்பதை அறிந்து சொக்கநாதர் கோவிலுக்குச் சென்றாள். ஒரு கூடை நிறைய பூக்களை வாங்கிக் கொண்டாள். எண்ணற்ற மலர்களால் சித்தரை அர்ச்சித்து வழிபட வேண்டுமென்று எண்ணமிட்டாள். தங்கச் சிலையோடும் புஷ்பக் கூடையோடும் கோவிலுக்குள் நுழைந் தாள்.
இறைவன் சுந்தரேஸ்வரரை பக்தியோடு வழிபட்டாள்.
மீனாட்சி அம்மையை இருகரம் கூப்பிக் கும்பிட்டாள். பின் எல்லா பிராகாரங்க ளிலும் ஒரு மூலை விடாமல் சித்தரைத் தேடித்தேடி அலைந்தாள். ஆனால் அவரைக் காணவில்லை. சிலையை அவரிடம் காண்பித்து ஆசிபெற விரும்பிய தன் எண்ணம் ஈடேறாதோ என்ற சிந்தனையில் அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
நடந்து நடந்து களைத்த அவள் துர்க்கை சந்நிதி அருகே காலார சற்று நின்றாள். நின்றவள் திகைத்தாள். இதென்ன, இங்கே அமர்ந்திருப்பவர் யார்? கண்களைத் தேய்த்துவிட்டுக்கொண்டு பார்த்தாள். தான் காண்பது கனவா இல்லை நனவா? இத்தனை நேரம் இங்கெல்லாம்தானே தேடினோம்? அப்போது இங்கில்லாத சித்தர் இப்போது மட்டும் எப்படி திடீரென்று தோன்றினார்?
அவள் யாரைத் தேடிவந்தாளோ அந்த சித்த புருஷர் துர்க்கை சந்நிதி அருகில் சம்மணமிட்டு அமர்ந்து நிஷ்டையில் தோய்ந்திருந்தார். அவர் பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரித்த அவள், நிஷ்டை கலைந்து அவர் எழும்வரை காத்திருக்கத் தீர்மானித்து அவர் எதிரே பவ்யமாக அமர்ந்தாள்.
சிறிதுநேரம் கழித்து அவர் கண்மலர்ந்தார். என்ன அழகிய கண்கள்! உலகம் முழுவதையும் தன் அருள்கடாட்சத்தால் காத்து ரட்சிக்கும் கண்களல்லவா அவை! அந்தக் கண்பார்வையிலிருந்த குளுமையை தரிசித்து மிகுந்த பாதுகாப்புணர்வைப் பெற்றாள் பொன்னனையாள். “”சுவாமி! என்னைத் தெரிகிறதா?” என்று பணிவோடு கேட்டாள்.
அவர் கடகடவென்று சிரித்தார். அந்த தெய்வீகச் சிரிப்பு மதுரைக் கோவில் பிராகாரங்களில் எதிரொலிலித்தது. “”உன்னையும் அறிவேன். உன் கையிலுள்ள தங்கச் சிலைபற்றியும் அறிவேன்!” என்று நகைத்தார் அவர். சிலையை மூடியிருந்த துணியை அகற்றி சிலையை அவர்முன் வைத்து அவர் பாதங்களில் மீண்டும் பணிந்தாள் அவள். சிலையைக் கையிலெடுத்து உற்றுப்பார்த்தார் அவர். அவள் கரத்தில் சிலையைக் கொடுத்தார்.
அவர் தந்த சிலையைத் தானும் உற்றுப் பார்த்து மீண்டும் அவரைப் பார்த்தாள் பொன்னனையாள். அவள் உள்ளம் வியந்தது. சிலையின் முகஜாடை அவர் ஜாடைபோலவே தோன்றியது. யார் இவர்? தேவலோகத்திலிலிருந்து மண்ணுலகம் வந்தவரா?

”சுவாமி! தாங்கள் நிகழ்த்திய அற்புதங்களைப் பற்றி மக்கள் கதைகதையாய்ச் சொல்கிறார்கள். பித்தளைப் பாத்திரங்களைத் தாங்கள் தங்கமாக்கிய அற்புதத்தை நானே கண்டிருக்கி றேன். தங்கள் வரலாறு என்ன சுவாமி?” அவர் மறுபடியும் அந்த தெய்வீகச் சிரிப்பை உதிர்த்தார்.
“”பெண்ணே! என்னைச் சுந்தரானந்தர் என்பார்கள். சிவசித்தர் என்பவர்களும் உண்டு. இந்தக் கோவிலிலில் உள்ளவர்கள் என்னை சுந்தரேஸ்வரர் என்று அழைக்கிறார்கள். எனக்கு ஏராளமான நாமங்கள். மதுரையில் சித்தராக மானிடப் பிறவி எடுத்த நான் என்னை வல்லப சித்தன் என அழைத்துக் கொள்கிறேன். இந்த தங்க நடராஜர் சிலையை உன் ஊர்க் கோவிலிலில் நிறுவி வழிபட்டு வா. ஆடல் வல்ல நீ, உன் ஆடல் மூலமே அந்த ஆடல்வல்லானின் திருவடிகளை அடைவாய். இந்தத் தங்க நடராஜர் உன் ஊரில் நிரந்தரமாய்த் தங்கி அருள்பாலிலிப்பார்!”
பொன்னனையாள் மனம் மகிழ்ச்சியில் மிதந்தது. பித்தளையைக்கூட பொன்னாக்க வல்லவரை, வல்லப சித்தர் என்பது பொருத்தம்தானே?
“”சுவாமி! உங்களைப் பார்த்தால் கடவுளைப் பார்த்ததுபோல் இருக்கிறது எனக்கு. இந்த ஏழைக்கு அருள்செய்த தங்களை மலர்களால் ஆராதிக்க விரும்புகிறேன்!”
அவள் இப்படிச் சொன்னதைக் கேட்டு நகைத்தவாறே அவர் மறுபடியும் தியானத்தில் ஆழ்ந்தார். அவள் கிடுகிடுவென்று மலர்களைத் தொடுத்தாள். அவரைச் சுற்றி ஒரு பூப்பந்தல் அமைத்தாள். பூப்பந்தலுக்குள் காட்சிதந்த அவரை மறுபடி வணங்கினாள். நிமிர்ந்து அவரைப் பார்த்த அவள் திடுக்கிட்டாள். கண்ணீர் விட்டுக் கதறலானாள். அவளோடு இப்போதுதான் பேசிய அவர் அப்படியே உறைந்து கற்சிலையாக மாறியிருந்தார்.
அவளது கதறலுக்கு அசரீரி பதில்தந்தது.
“”பெண்ணே! மானிடர்களுக்கு இறைசக்தியின் பெருமையை உணர்த்த நாமே வல்லப சித்தராகத் தோன்றினோம். எம்மை எத்தனையோ சித்தர்கள் வழிபட்டார்கள். எமக்கே சித்தராகும் ஆவல் தோன்றியதால் இப்படி நானும் சித்தர் வடிவம் பூண்டேன். உன் தூய மனமென்னும் தங்கப் பாத்திரத்தில் என்மேல் பக்தியென்னும் பாலன்னத்தை வைத்து நீ எனக்கு நிவேதனம் செய்திருக்கிறாய். உன் புகழ் எங்கும் பரவும். நீ விரும்பியவாறே உன் ஊர்க் கோவிலிலில் என் தங்கச் சிலைமுன் பல்லாண்டுகள் ஆடி மக்களை மகிழ்விப்பாயாக. பின் என் திருவடிகளை வந்துசேர்வாய்! உன்னைப்போல் இந்த வல்லப சித்தர் சிலைக்கு பூப்பந்தல் அமைத்து வழிபடுவோர்க்கெல்லாம் நாம் அருள்புரிவோம்! நடக்காது என்று அவர்கள் கவலைகொண்ட செயல்களையெல்லாம் நாம் அவர்களுக்கு நடத்திவைப்போம்! பித்தளை தங்கமானதுபோல் அவர்களின் சராசரி வாழ்க்கை என்னருள் பெற்றபின் பொன்னொளி பெற்றுப் பிரகாசிக்கும்!”
அசரீரி வாசகத்தைக் கேட்ட பொன்னனையாள் இறைவனே தன் இல்லம் வந்த சித்தர் என்றுணர்ந்து பெருமிதம் கொண்டாள். சிலையோடு திருப்புவனம் சென்ற அவள் அவ்வூர்க் கோவிலிலில் தங்க நடராஜர் சிலையை நிறுவி வழிபடலானாள்.
மதுரை ஆலயம் செல்லும் பக்தர்கள் இப்போதும் துர்க்கை சந்நிதி அருகே வல்லப சித்தர் சிலையை தரிசனம் செய்யலாம். இப்போதும் அன்பர்கள் வல்லப சித்தருக்கு பூப்பந்தல் அமைத்து வழிபாடு நிகழ்த்துகிறார் கள். அந்தத் தருணங்களில் வல்லப சித்தரின் புகழ் அங்கே மணம்பரப்புகிறது.

நன்றி:-nakkheeran.in .உதவி(,திருமதி ரமாசங்கர். )     

No comments:

Post a Comment