Subscribe

BREAKING NEWS

25 April 2019

குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா

அன்பர்களே வணக்கம்.

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம். அதென்ன குமரனுக்கு மட்டும் குன்று என்று நினைக்க தோன்றுகின்றது. நாம் தற்போது தரிசித்த வள்ளிமலை ஆகட்டும், குன்றத்தூர் முருகன் கோவில் ஆகட்டும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தன் சிறப்பை பறைசாற்றி வருகின்றது. அந்த வகையில் இன்றைய தரிசனமாக  குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு  செல்ல இருக்கின்றோம். அது தான் அனுவாவி மலை முருகன் கோயில்.

இந்த தலம் திருமண தடை நீக்கும் தலம் ஆகும். சரி.கோயிலின் தல வரலாறு காண்போமா?

 கந்தப் பெருமான் வழிபாடு ராமாயண காலத்திலேயே இருந்துள்ளது என்பதற்கு வால்மீகி ராமாயணம் எடுத்துக்காட்டு. இலங்கை ராஜ்ஜியத்தின் மீது ராமன் போர் தொடுத்திருக்கிறான். வானரப் படைகளுடன் லக்ஷ்மணனும்கூட ராவணனின் சேனையுடன் போரிட்டுப் பலமிழந்து மூர்ச்சையாகியிருக்கிற நேரம். சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வந்தால் அவர்களை மீண்டும் எழுந்து போரிடச் செய்யலாம் என்று யோசனை கூறி, ஆஞ்சநேயனை அனுப்புகிறார் ஜாம்பவான்.

‘வெட்டிக்கொண்டு வா!’ என்று சொன்னால் கட்டிக் கொண்டு வருகிற ரகமல்லவா ஆஞ்சநேயன்! மூலிகையைத் தேடிப் பறித்து நேரத்தைக் கடத்தாமல் மலையையே பெயர்த்துக் கொண்டு வருகிறான்!

வாயுபுத்ரனான போதிலும் மலையைப் பெயர்த்துக் கொண்டு காற்றிலேறி விண்ணைச் சாடி, கடல் கடந்து பறப்பது சுலபமல்லவே! களைப்பும் தாகமும் வாட்டலாயின. தன் கை வேலால் இத்தலத்தில் ஒரு சுனையை உண்டாக்கி ஆஞ்சநேயனின் தாகம் தீர்த்தானாம் முருகன். ‘அனுமக்குமரர் தீர்த்தம்’, ‘அனுமார்வாவி’ என்று இவ்விடத்துக்குப் பெயர்கள் வழங்கலாயின. இவைதான் பின்னர் மருவி ‘அனுவாவி’ ஆகியிருக்க வேண்டும்.

அனுமனுக்கு குமரன் அருள்பாலித்ததால் "அனுமக்குமரன் மலை' என்ற பெயரும் உண்டு. அனுவாவி பத்துப்பாட்டு என்ற நூலில் இந்த ஸ்தல வரலாறு அழகான கவிதையாக்கப்பட்டிருக்கிறது.

அனுவாவி வந்துற்ற அஞ்சனாதேவி மகன்
அனுமாரின் அருந்தாகம் தீர்க்க நீர் தந்த மலை
கனமான மலை சுமந்த களைப்பாற்றிக் கரங்குவித்து
குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலை.

ராமன் விட்ட அம்புகள் கந்தனின் வேல் போல் பிரகாசித்ததாக 2 இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.

அனுமனின் வேண்டுதலுக்கு மனமிரங்கிய முருகன், தன் வேலால் ஒரு இடத்தில் குத்த, அந்த இடத்திலிருந்து தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. அனுமான் தாகம் தீர்ந்தார். இங்குள்ள ஊற்று நீரின் ஆரம்பம் எங்குள்ளது என்பதை இதுவரை கண்டறிய முடியவில்லை.

அந்தக் காலத்தில் இம்மலையடிவாரத்தில் தாமரைத் தடாகம் என்ற ஊரிலிருந்த ஜமீந்தார் ஒருவர் மலைப்பாதை அமைத்து இக்கோயிலுக்கு உத்ஸவ மூர்த்திகள் செய்து கொடுத்தார். இங்கே ‘காணாச் சுனையும், கருநொச்சி வளமும், ஐந்திதழ் வில்வமும்’ இருந்ததாகச் சொல்வார்கள்.

சுந்தரமூர்த்தி நாயனார் இங்கே கண்ட அதிசயமொன்றைப் போற்றிப் புகழ்ந்தார் என்பார்கள்: இத்தலத்துக்குக் கிழக்கேயுள்ள வடமதுரை என்னும் ஊரின் விருத்தேஸ்வரர் குளத்தை அடுத்து ஒரு மரத்தின் வேர் இரு கிளைகளாகப் பிரிந்து காணப்பட்டதாம். ஒரு பிரிவிலிருந்து வெண்ணிறப் பாலும் மற்றதிலிருந்து சென்னிறப் பாலும் வடிவதைக் கண்டார் சுந்தரர்.

அவ்வேர், அனுவாவியிலிருக்கும் தல விருட்சமான மாமரத்தின் மீது கொடியாகப் படர்ந்திருந்த தாவரத்தின் வேர்தான் என்று கண்டறிந்தார்! இவ்வியற்கை வினோதம் அனுவாவியின் தலச் சிறப்பால் விளைந்ததே என்று அவர் உணர்ந்து, வாழ்த்தி வழிபட்டதாகச் சொல்கின்றனர்.

விண்ணாவரங் கொடி, விண்ணாடும் கொடி என்று பெயர்கள் பெற்ற அக்கொடி, அனுவாவி ஸ்தல விருக்ஷமான மாமரத்தில் இன்றும் படர்ந்திருப்பதைக் காணலாம். மலைச்சாரலில் சில குகைகள் இருக்கின்றன. அவற்றில் அக்காலத்தில் முனிவர்களும் பாம்பாட்டிச் சித்தரும் தவமியற்றியிருக்கிறார்கள்.

சுயம்புமூர்த்தியாக அருள்பாலித்த சுவாமியும், தல விருட்சமாக இருந்த 5 மாமரங்களும் கடந்த 1957ம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் அடித்து செல்லப்பட்டது. வெள்ளத்தின் உக்கிரத்தைவென்று நின்றது மாமரம் மட்டுமே!

 பின்னர் இறைவன் திருவருளால் தெய்வ உருவங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன் பின் புதிய கோயில் அமைக்கப்பட்டு 1969ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

திருவண்ணாலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் அருள் வாக்குப்படி வினாயகர், அருணாசலேசுவரர் ஆகிய இருவர் உருவங்கள் மட்டும் மாமரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் தொடர்ந்தன. மலை அடிவாரத்தில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.



நம்மை வரவேற்கும் நுழைவுவாயிலோடு சென்றோம்.இங்கிருந்து பார்த்தாலே மலைக்கோயில் தோற்றம் நமக்கு தெரியும்.


அடுத்து ஒரு சிறிய மண்டபம் கண்டோம். அங்கே சில கடைகள் இருந்தது.



மூத்தோனை வணங்கி அனுவாவி குமாரனை காண மலை ஏறினோம்,


மலை முழுதும் அழகாக படிகள் கட்டி இருந்தார்கள்.



செல்லும் வழியில் ஸ்ரீ வனக்கருப்பராயன் கோவில் செல்லும் பாதை கண்டோம். மனதில் ஒரு வித பயம் இருந்தது. செல்லலாமா வேண்டாமா என்று மனதுள் ஒரு பட்டிமன்றமே நடந்தது. மீண்டும் இறங்கி வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று நடையைக் கட்டினோம்.




இடையில் கண்ட மண்டபம்







சுமார் 500 படிக்கட்டுகள் ஏறினால் கோயிலை அடையலாம். நாங்கள் நடந்து கொண்டுதான் இருந்தோம்.





ஏறக்குறைய கோயிலை அடைந்துவிட்டோம்.



'இதோ மலைக்கோயிலில் அழகுத்தோற்றம்.








மலைக்கோயிலுக்கு முன்பாக இடும்பன் சன்னதி அமைந்துள்ளது. கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

முன் மண்டபத்தில் விநாயகரும், முருகனின் படைத்தளபதி வீரபாகுவும் வீற்றிருக்கின்றனர்.  மேலே நீங்கள் ஏற்கனவே தரிசனம் பெற்று இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். மேலே கோயில் சென்று முருகனை,குமரனை தரிசித்தோம்.









உள்ளம் உருகிய தருணம் அது..



ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். நவக்கிரக சன்னதி உள்ளது. சிவபெருமான் அருணாசலேஸ்வரராக அருள்பாலிக்கிறார்.















 தலத்தின் நீர்வளமும் மலைவளமும் நிலவளமும் அது முருகனுக்கு மிக மிகப் பொருத்தமான, அவன் அழகுக்கு அழகு செய்கின்ற தலம் என்பதைப் பறைசாற்றுகின்றன. வடக்கே குருவிருக்ஷமலை, தெற்கே அனுவாவிமலை, மேற்கே கடலரசி மலை என்று திக்கெல்லாம் சூழ்ந்து நிற்க, ஏறத்தாழ ஒரு பசுமைப் பள்ளத்தாக்கில் குடியேறியிருக்கிறான் முருகன்.

















அங்கிருந்து மேலே மீண்டும் சென்று அங்கே நம் தலைவரை தரிசனம் செய்தோம். அன்றைய தினம் பிரதோஷம் வேறு. தலைவர் தரிசனம்  பெற்று, தாள் அடி சேர்ந்தோம். 




மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று மூவகையில் சிறப்புடையது அனுவாவி. அனுவாவி என்றாலே, ‘சிறிய குளம்’ என்றுதான் பொருள். சிறிய ஊற்று அல்லது கிணறு என்றும்குறிப்பிடலாம்.



நம் தீயை அழிக்கும் நந்தியெம்பெருமானை தொழுதோம்.














 குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் 5 செவ்வாய்களில் வழிபாடு செய்கிறார்கள். இதில் சூரிய உதயத்திற்கு முன் தொடர்ந்து சில நாட்கள் குளித்தால் மன நோய், தோல் நோய் அகலும் என்பது நம்பிக்கை. திருமணத் தடை உள்ளவர்கள் சுவாமிக்கு தாலி, வஸ்திரம் காணிக்கை செலுத்தி கல்யாண உற்சவம் நடத்துகின்றனர்
 


கோயில் அமைந்துள்ள பகுதிக்கு நேர் தென்புறத்தில் மருதமலை உள்ளது. மலைப்பகுதி வழியாக ஏறி இறங்கினால் மருதமலையை அடையலாம்.

மீண்டும் மலை மேலிருந்து கீழே இறங்க தொடங்கினோம். கீழே சென்று அனுவாவி அகத்தியர் ஆசிரமத்தில் அகத்தியர் ஆசி பெற்றோம். நீங்களும் பெற்றுக் கொள்ளுங்கள்.














கீழே இறங்கி வந்த பிறகு வனக்கருப்பராயன்கோயிலுக்கு சென்றோம். நாம் நாட்டின் காவல் தெய்வங்கள், குல தெய்வங்கள் அனைத்தும் நம்மை இன்னும் வியப்பில் ஆழ்த்துகின்றன.











ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி 


போக்குவரத்து வசதி

கோவை உக்கடம் டு அனுவாவி கோவில் 11A பேருந்து செல்கிறது. ஆனைகட்டி செல்லும் வழியும் இதன் அருகில் தான் இருக்கிறது. இங்கே இருந்து மருதமலை கோவில் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.

- மீண்டும்  சிந்திப்போம்

மீள் பதிவாக :-

பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் தரிசனம் பெறுங்கள் - https://tut-temple.blogspot.com/2019/03/blog-post_20.html

முருகன் அருள் முன்னிற்க! பங்குனி உத்திரம் 2018 - http://tut-temple.blogspot.in/2018/03/2018.html

நால்வரின் பாதையில்... திருப்புகழ் தலங்கள் - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_30.html

ஓம் சுவாமியே ......சரணம் ஐயப்பா - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_37.html

 முருகன் அருள் முன்னிற்க! பங்குனி உத்திரம் 2018 - https://tut-temple.blogspot.com/2018/03/2018.html

No comments:

Post a Comment