Subscribe

BREAKING NEWS

13 April 2019

ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம்


அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று ஸ்ரீ ராம நவமி. ஒரு இல்,ஒரு சொல், ஒரு வில் என்பதற்கு உதாரணம் ஸ்ரீ ராமர். தமிழகத்தில் இருக்கும் பல கோயில்களின் தல புராணங்களில் ராமர் வழிபட்ட இடம், லிங்கத்தை பிரதிஷ்டை செய்த இடம் என்றெல்லாம் குறிப்புகள் இருக்கின்றன. ஏகபத்தினி விரதன் என்பதற்கு பல தாரங்களை மணக்கும் ராஜ வம்சத்தில் பிறந்தவராக இருந்தாலும், ஒரே தாரத்தை போற்றும் அவதாரமாக இருப்பதால், ராமர் ஓர் இல்லுக்குச் சொந்தக்காரர் ஆனார். அதனால் ராமரின் கால் படாத இடமே தமிழ்நாட்டில் இல்லை என்னும் அளவுக்குத் தல புராணங்கள் பலவற்றில் அவரின் பெருமை வெளிப்படுகின்றது. துஷ்டர்களுக்கு ஒரே பாணம் ஒரு வில்!
சரணம் என்று வந்தோர்க்கு அபயம் என்ற வாக்கு ஒரு சொல்! ஜென்மம் முழுவதும் இணைந்து வாழ ஒரு மனைவி ஒரு இல்! இதுதான் ராமனின் அறநெறி ஆகும்.





ஸ்ரீராம நாமத்திற்கு இணையான ஒரு வேதம் கிடையாது... மகாவிஷ்ணு மனிதனாக அவதரித்து மானிடர்கள் அனுபவிக்கும் அத்தனை துன்பங்களையும் அனுபவித்தவர். அறமே வாழ்வின் ஆன்மிக ஜோதி. அறத்தை வளர்ப்பதற்கும், மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக அவதாரம் செய்தார். ராமாவதாரம் பரிபூரண அவதாரம் ஆகும்.




‘நாளும், கோளும் நலிந்தோருக்கு இல்லை‘ என்பது பழமொழி. இருப்பினும் பொதுவாக அஷ்டமி, நவமி ஆகிய திதிகளுடன் கூடிய நாட்களில் பக்தர்கள் நல்ல காரியங்களை தொடங்கமாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் திருமாலிடம் சென்று மக்கள் எங்களை புறக்கணிக்கின்றனரே என்று கூறி கண்ணீர் விட்டு முறையிட்டனர்.

இதனால் உங்கள் இரு திதிகளையும் கொண்டாட ஏற்பாடு செய்கிறேன் என்று பகவான் வாக்களித்தாராம். இதனால் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி கோகுலாஷ்டமி ஸ்ரீராமர் அவதரித்த நவமி ஸ்ரீராமநவமி என்றும், என்றும் கொண்டாடப்படுகிறது. 



இன்று ஸ்ரீராமபிரானின் அவதாரத் திருநாளாகும். ஸ்ரீராம நவமி விழா விஷ்ணு ஆலயங்களில் பத்து நாட்களுக்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் ராமர் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்களை முன்-பத்து எனவும், பிறந்த தினத்திலிருந்து வரும் பத்து நாட்களைப் பின்-பத்து எனவும் இருபது நாட்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

இன்றைய சிறப்பு வாய்ந்த நன்னாளில் நாம் ராமரை அறிவதோடு, ராம நாமம் எப்போதும் ஜெபிக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் தலத்திற்கு செல்ல இருக்கின்றோம்.



வழக்கம் போல் நாம் மருதேரி பிருகு மகரிஷி அருள் நிலையம் செல்லும் போதெல்லாம் இந்த ஆஞ்சநேயர் கோயில் எப்போது செல்வது என்று மனம் ஏங்கும். அந்த நாளும் வந்தது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, மருதேரி சென்று திரும்பி வரும் போது அந்த ஆஞ்சநேயர் தளத்திற்கு சென்றோம். 






அனுமன் என்றாலே நாமக்கல், நங்கைநல்லூர் என்று பிரசித்தம் என்றாலும் நமக்கு அனுமன் என்றாலே சுந்தர காண்டம் தான். எப்பொழுதெல்லாம் சோர்வாக இருக்கின்றீர்களா அப்பொழுதெல்லாம் சுந்தர காண்டம் படியுங்கள். படித்த பின்பு, உங்களுள் ஒரு ஆற்றல் பிறக்கும், புது மூச்சு பிறக்கும். அப்படி தான் நமக்கு அன்று இருந்தது. போகின்ற இடம் நீங்கள் பார்த்தாலே தெரியும். ஒரே வெயில் வேறு.







பார்க்கும் இடமெல்லாம் பரந்து விரிந்து இருந்தது. இங்கே அனுமார் கோயிலா என்று வியப்போடு சென்றோம்.






கண்ணுக்கெட்டிய தூரம் வரை கோயிலைக் காண வில்லை.














ஓரளவிற்கு கோயில் இருக்கும் இடத்தை அடைந்து விட்டோம். அதோ தூரத்தில் தெரிகின்றதா? அதுதாங்க ஆஞ்சநேயர் கோயில்.

மனதுள் இப்போது குதூகலம் தோன்றியது.




சிறிய அளவில் மலை ஏறுவது போல்  இருந்தது. மனதுள் மத்தாப்பூ ஜொலித்தது. சிறிய மலை தான்.
நம்மை சிந்தனையை ஒன்றை செய்ததை நாம் உணர்ந்தோம்.


 அஞ்சனை மைந்தன், வாயுபுத்திரன் அனுமன் சிரஞ்சீவியாக இந்த மண்ணில் இருக்கிறார். ராம நாமம் கேட்கும் இடங்களில் அஞ்சநேயர் அமர்ந்திருப்பார் என்று நம்பப்படுகிறது. ராமாயண காவியத்தில் ஈடு இணையற்ற இடத்தைப் பிடித்தவர் அனுமன். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் ராமபிரானின் சேவகன் அனுமனை அவதரித்த நாளில் வணங்கினால் தொல்லைகள் தீரும். ராம பிரான் அவதரித்த நாளில் அனுமனை வணங்குவது இன்னும் சிறப்பு.

இதோ..நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அனுமன் தரிசனம்.




இவர் இங்கே சுயம்புவாக தோன்றியவர் ஆவார். கூட்ட நெரிசல் மிக்க கோயில்களுக்கு சென்று வழிபடுவதை விட, இது போன்ற மக்கள் கூட்டமில்லாத கோயில்களுக்கு சென்று வழிபடுங்கள். புற வழிபாட்டோடு அக வழிபாட்டின் ஆழமும் உணர்வீர்கள்.சுமார் 10 நிமிடம் தரிசனம் செய்தோம்.பின்னர் அங்கிருந்து புறப்பட்டோம்.











இன்றைய ஸ்ரீ ராம நவமி   நன்னாளில் ராமபிரானின் சேவகன் ஸ்ரீ அனுமார் தரிசனம் நாம் பெற்றிருக்கின்றோம். அனைத்தும் அவன் அருளாலே. நம் தளம் சார்பில் ஒரு நாள் இந்த கோயிலுக்கு சென்று அவசரகதி இன்றி, வழிபாடு செய்ய விழைகின்றோம்.எப்படியோ நம் விருப்பத்தை சொல்லிவிட்டோம். இனி நடத்துவது அந்த பரம்பொருளின் வேலை.

 ராம் ராம் ராம் 
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் 
மீள்பதிவாக:-

ராம் ராம் ராம் - அனுமன் ஜெயந்தி (05/01/2019) - https://tut-temple.blogspot.com/2019/01/05012019_4.html

No comments:

Post a Comment