Subscribe

BREAKING NEWS

15 October 2018

பாடல் பெற்ற தலங்கள் (6) - கும்பாபிஷேகத்திற்கு காத்துக் கொண்டிருக்கின்றார் அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர்

அனைவருக்கும் வணக்கம்.

நாம் சுமார் இரண்டு மாதங்களாக அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் தரிசனம் பெற வேண்டும் என்று முயற்சி செய்தோம். ஒவ்வொரு வார விடுமுறையின் போதும் ஏதேனும் வழிபாட்டின் காரணமாக இந்த தரிசனம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. சுமார் 1 மணி நேர பயணம் செய்தால் அச்சிறுபாக்கம் சென்று தரிசனம் செய்யலாம்.ஆனால் நம்மால் தான் முடியவில்லை. நேற்றும் காலை மருதேரி சென்று ரவி யஃனம் பூசை கண்டு வீட்டிற்கு சுமார் 1மணி அளவில் சேர்ந்தோம்.மதிய உணவு முடித்து மாலை சுமார் 5 மணி அளவில் அச்சிறுபாக்கம் செல்லலாம் என்று மனதில் தோன்றியது.

உடனே விளக்கேற்ற தீபம், நெய், திரி,தீப்பெட்டி என எடுத்துக்கொண்டு கூடுவாஞ்சேரி வந்தோம். பின்னர் அம்மை அப்பனுக்கு வஸ்திரம், பழங்கள் என வாங்கிக் கொண்டு பேருந்தில் கிளம்பினோம்.மேல்மருவத்தூர் வரை தான் பேருந்தில் செல்ல முடிகின்றது. அச்சிறுபாக்கம் ஊரில் அனைத்து பேருந்துகளும் நிற்பதில்லை. நேற்று மாலை  சுமார் 6 மணி அளவில் மேல்மருவத்தூர் அடைந்தோம். அங்கேயே அச்சிறுபாக்கம் பேருந்து காத்துக் கொண்டிருக்க, உடனே அந்த பேருந்தில் ஏறினோம். நடத்துனரிடம் அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் நிறுத்தம் பற்றி கேட்டால், தெரியவில்லை என்று பதில் கூறினார்.

நமக்கு அப்படியே தூக்கி வாரிப்போட்டது. ஒரு ஊருக்கு பெயரே அந்த இறைவனின் பெயரில் உள்ளது. பொதுவாக நடத்துனர்களுக்கு இது போன்ற திருத்தலங்கள் பற்றி தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.அப்போது தான் நம்மை போன்ற பயணிகளுக்கு உதவியாக இருக்கும். ஒரு காலத்தில் உங்கள் ஊரின்  பெயர் என்ன ? என்று கேட்டாலே. அந்த ஊரில் உள்ள திருக்கோயிலின் நாமம் சொல்லி அந்த ஊரின் பெயர் சொல்லுவது வழக்கம்.இன்று நிலைமையோ தலைகீழ்? நொந்து கொள்வது தவிர நாம் என்ன செய்வது? ஆட்சீஸ்வரர் கடைத்தெரு நிறுத்தத்தில் இறங்கி, கோயில் பற்றி விசாரித்தோம்.

இடது,வலது என தெருக்கள் வழியே நடந்து கோயிலை அடைந்தோ,. கோயிலின் ராஜ கோபுரம் துணியால் மூடப்பட்டிருந்தது. அங்கிருந்த பூக்கடையில் அர்ச்சனை செய்ய பூசை பொருள் வாங்கிவிட்டு, கோயில் பற்றி விசாரிக்க, அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கும்பாபிஷேகத்திற்கு காத்துக் கொண்டிருக்கின்றார் என்று கூறினார்.

இது நமக்கு முதல் அனுபவம். இப்படி நாம் எங்கும் தரிசனம் செய்ததில்லை. உள்ளே சென்று குருக்களிடம் பேசி, விளக்கேற்ற அனுமதி கேட்டோம். உடனே விளக்கேற்ற ஆரம்பித்தோம். அதற்கு முன் தல வரலாறு அறிந்து கொள்வோம்.

தல வரலாறு:

வித்யுந்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் அசுரர்கள் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர். மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார். ஆனால் அவ்வாறு புறப்படுவதற்கு முன்பு முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்க தேவர்கள் மறந்தனர். அதனால் தேரின் அச்சை விநாயகர் முறித்து விட்டார். தேர் அச்சு முறிந்ததற்குக் காரணம் விநாயகர் தான் என்பதை உணர்ந்த சிவன் அவரை வேண்டினார். தந்தை சொல் கேட்ட விநாயகர் தேரின் அச்சை சரியாக்கினார். அதன் பின் சிவபெருமான் திரிபுர அசுரர்களை அழித்தார். தேர் அச்சு இற்று (முறிந்து) நின்ற இடமாதலால் இத்தலம் அச்சு இறு பாக்கம் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் மருவி தற்போது அச்சிறுபாக்கம் என்று அழைக்கப்படுகிறது.


இதோ தீபம் ஏற்றி வழிபாடு தொடங்கினோம். பின்னர் குருக்களிடம் அர்ச்சனை செய்ய வேண்டினோம். பின்னர் அப்படியே கோயிலை வலம் வந்தோம். பணிகள் நடந்து கொண்டிருந்தன.



உற்சவ மூர்த்திகள் தரிசித்தோம். பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் ஒரே தூசி மயம் தான்.நமக்கு ஏன் இப்படி ஒரு தரிசனம். காரணம் இருக்கும்.


அட..நம் பெருமாளும் இங்கு இருக்கின்றார்.








வெல்டிங் பணிகள் மளமள வென்று நடைபெற்றுக்கொண்டு இருந்தது. நாம் சென்ற இரவு 7 மணி அளவிலும் பணிகள் தொய்வின்றி நடந்துகொண்டு இருந்தன.



கோயிலின் சுவரில் கல்வெட்டு எழுத்துக்களை பார்த்தோம். இங்கு இடம்பெற்ற பல்வேறு தரப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டின் தொண்டை மண்டலப் பிரதேசத்தில் 6 ஆம் 7 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இப்பாத்திரங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது. இத்தொண்டை மண்டலப் பிரதேசம் சங்க காலத்தில் பல்லவர்களின் அரசியல் செல்வாக்கு தழைத்தோங்கிய பிரதேசமாகக் காணப்படுகின்றது.




                                                                         ஆலய மணி 


சரி..கோவில் அமைப்பு எப்படி என்று ஒரு சுற்று பார்க்கலாமா?

கோவில் அமைப்பு:

இவ்வாலயம் 5 நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய இராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் நேரே உள் வாயில் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்தவுடன் நேராக இல்லாமல் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை சற்று இடதுபுறம் வடக்கே அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பம்சம் இங்குள்ள இரண்டு மூலவர்கள் சந்நிதியாகும். கோபுர வாயிலுக்கு நேரே உள்ள உள் வாயில் வழியாகச் சென்றால் நேர் எதிரே உமையாட்சீஸ்வரர் சந்நிதி உள்ளது. உள் வாயில் நுழைந்தவடன் சற்று வலதுபுறத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றிற்கு எதிரே உள்ளபடி அமைந்திருக்கும் ஆட்சீஸ்வரர் சந்நிதி உள்ளது. இந்த ஆட்சீஸ்வரர் தான் இவ்வாலயத்தின் பிரதான மூலவர். சுயம்பு மூர்த்தியான இவர் லிங்க வடிவில் குட்டையான பாணத்துடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவர் குடியிருக்கும் கருவறை வாயிலில் இருபுறமும் துவாரபாலகர்களாக சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் காணப்படுகின்றனர். தாரகனுக்கு அருகில் விநாயகரும், வித்யுன்மாலிக்கு அருகில் வள்ளி தெய்வானையுன் முருகரும் உள்ளனர். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சினாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். ஆட்சீஸ்வரர் சந்நிதியை சுற்றி வலம் வர வசதி உள்ளது.

உள் வாயிலைக் கடந்தவுடன் வலதுபறம் உள்ள ஆட்சீஸ்வரரை தரிசித்துவிட்டு சற்று நேரே மேலும் சென்றால் நாம் உமையாட்சீஸ்வரர் சந்நிதியை அடையலாம். உமையாட்சீஸ்வரர் கருவறை வாயிலில் இருபுறமும் அலமேலுமங்கை, ஸ்ரீனிவாச பெருமாள், பழனிஆண்டவர், உற்சவ மூர்த்திகள், லட்சுமி துர்க்கை சரஸ்வதி, ஆறுமுகசாமி ஆகியோரின் சந்நிதிகள் அழகுற அமைந்துள்ளன. கருவறைக்குள் உமையாட்சீஸ்வரர் கிழக்கு நோக்கி லிங்க உருவில் காட்சி தருகிறார். லிங்க உருவின் பின்புறம் பார்வதியுடன் சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். அகத்தியருக்கு தனது கயிலாய திருமணக் காட்சியை காட்டியருளிய தலங்களில் இத்தலமும் ஒன்று. அருகில் தெற்கு நோக்கிய உமையாம்பிகை திருஉருவச் சிலையும் உள்ளது.

ஆலயத்தின் வடக்கு வெளிப் பிரகாரத்தில் தலவிருட்சமான சரக்கொன்றை மரம் உள்ளது. சரக்கொன்றை மரத்தின் அடியில் கொன்றையடி ஈஸ்வரர் சந்நிதி உள்ளது. அருகில் நந்திகேஸ்வரரும், சிவனை வணங்கியபடி திரிநேத்ரதாரி முனிவரும் உள்ளனர். பாண்டிய மன்னன் ஒருவனுக்கு இத்தலத்தில் சரக்கோன்றை மரத்தடியில் காட்சியளித்த சிவபெருமான், தனக்கு இவ்விடத்தில் ஒரு ஆலயம் எழுப்பச் சொல்ல, மன்னன் அப்போது அங்கு வந்த திரிநேத்ரதாரி முனிவரிடம் ஆலயம் கட்டும் பொறுப்பை ஒப்படைத்தான். திரிநேத்ரதாரி முனிவரும், தன்னையும், மன்னனையும் ஆட்கொண்ட இறைவனுக்கு, இரு கருவறைகள் கொண்ட இக்கோயிலைக் கட்டினார். கோயிலைக் கண்ட மன்னன் இரு சந்நிதிகள் அமைந்திருப்பது கண்டு முனிவரை விபரம் கேட்டான். முனிவரும் "அரசரை ஆட்கொண்ட இறைவனுக்காக உமையாட்சீஸ்வரர் சந்நிதியும், தன்னை ஆட்கொண்ட இறைவனுக்கு ஆட்சீஸ்வரர் சந்நிதியும் அமைத்தேன்" என்று மறுமொழி தந்ததாக வரலாறு கூறுகின்றது.

வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் இத்தலத்தின் பிரதான அம்பாள் இளங்கிளி அம்மை தனி சந்நிதியில் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள்.




தூண் ஒவ்வொன்றையும் தொட்டுப் பார்த்தோம். நம்மிடம் அவை ஏதோ பேசுவது போல் இருந்தன. திருஞானசம்பந்தர் இங்கு பொன்றிரண் டன்ன புரிசடை என்று பதிகம் பாடி உள்ளார். 


அச்சுமுறி விநாயகர்:

சிவபெருமானின் தேர் அச்சை முறித்த விநாயகர் "அச்சுமுறி விநாயகர்" என்ற பெயருடன் கோவிலுக்கு வெளியே தனி சந்நிதியில் மேற்கு நோக்கி அமர்ந்து காட்சி தருகிறார். புதிய செயல்கள் தொடங்குவதற்கு முன் இவ்விநாயகரிடம் வேண்டிக் கொண்டால் அச்செயல் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை. அருணகிரிநாதர் இவ்விநாயகரை தரிசித்து விட்டு விநாயகர் துதி பாடி பிறகு தான் திருப்புகழ் பாடத் தொடங்கினார் எனபதிலிருந்தே இவ்விநாயகரின் பெருமையை உணரலாம். விநாயகர் துதியில் "முப்புரம் எரி செய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடி செய்த" என்று தலவரலாற்றைக் குறிப்பிடுகிறார்.

மீண்டும் வெளிப்பிரகாரம் வந்தோம்.







இங்குள்ள சன்னதிகள் விபரம் பின்வருமாறு..


மீண்டும் ஒருமுறை காலையில் சென்று வர மனம் ஏங்குகின்றது. 






 கும்பாபிஷேகத்திற்கு தயாராகிக் கொண்டிருப்பதால் ஸ்ரீ ஆட்சீஸ்வரர்  தவிர அனைத்து மூர்த்தங்களும் துணியால் மூடப்பட்டு இருந்தார்கள். அன்னையின் தரிசனம் மட்டும் பெறவில்லை.மற்றபடி நமக்கு நல்ல தரிசனம் கிடைத்தது. நம் தல அன்பர்கள் அனைவருமாக பிரார்த்தனை செய்யப்பட்டது.  கும்பாபிஷேகத்திற்கு என நம்மால் இயன்ற தொகை கொடுத்தோம். இந்த பதிவை படிக்கும் அன்பர்கள் ஏதேனும் இத்தலத்திற்கு செய்ய விரும்பினால் நேரிடையாக கோயிலுக்கு சென்று உதவவும். இல்லையேல் நம் தளத்தை தொடர்பு கொள்ளவும்.

பொன்றிரண் டன்ன புரிசடை புரளப்
பொருகடற் பவளமொ டழல்நிறம் புரையக
குன்றிரண் டன்ன தோளுடை யகலங்
குலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர்
மின்திரண் டன்ன நுண்ணிடை அரிவை 
மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி
அன்றிரண் டுருவம் ஆயஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  1 


தேனினும் இனியர் பாலன நீற்றர்
தீங்கரும் பனையர்தந் திருவடி தொழுவார்
ஊன்நயந் துருக உவகைகள் தருவார்
உச்சிமே லுறைபவர் ஒன்றலா தூரார்
வானக மிறந்து வையகம் வணங்க
வயங்கொள நிற்பதோர் வடிவினை யுடையார்
ஆனையின் உரிவை போர்த்தஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  2 


காரிரு ளுருவம் மால்வரை புரையக்
களிற்றின துரிவைகொண் டரிவைமே லோடி
நீருரு மகளை நிமிர்சடைத் தாங்கி
நீறணிந் தேறுகந் தேறிய நிமலர்
பேரரு ளாளர் பிறவியிற் சேரார் 
பிணியிலர் கேடிலர் பேய்க்கணஞ் சூழ
ஆரிருண் மாலை யாடும்எம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  3 


மைம்மலர்க் கோதை மார்பின ரெனவும் 
மலைமகள வளொடு மருவின ரெனவும்
செம்மலர்ப் பிறையுஞ் சிறையணி புனலுஞ் 
சென்னிமே லுடையரெஞ் சென்னிமே லுறைவார்
தம்மல ரடியொன் றடியவர் பரவத் 
தமிழ்ச்சொலும் வடசொலுந் தாள்நிழற் சேர
அம்மலர்க் கொன்றை யணிந்தஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  4 


விண்ணுலா மதியஞ் சூடின ரெனவும்
விரிசடை யுள்ளது வெள்ளநீ ரெனவும்
பண்ணுலாம் மறைகள் பாடின ரெனவும்
பலபுக ழல்லது பழியில ரெனவும்
எண்ணலா காத இமையவர் நாளும் 
ஏத்தர வங்களோ டெழில்பெற நின்ற
அண்ணலான் ஊர்தி ஏறும்எம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  5 


நீடிருஞ் சடைமேல் இளம்பிறை துளங்க
நிழல்திகழ் மழுவொடு நீறுமெய் பூசித்
தோடொரு காதினிற் பெய்துவெய் தாய
சுடலையி லாடுவர் தோலுடை யாகக்
காடரங் காகக் கங்குலும் பகலுங்
கழுதொடு பாரிடங் கைதொழு தேத்த
ஆடர வாட ஆடும்எம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  6 


ஏறுமொன் றேறி நீறுமெய் பூசி
இளங்கிளை அரிவையொ டொருங்குட னாகிக்
கூறுமொன் றருளிக் கொன்றையந் தாருங்
குளிரிள மதியமுங் கூவிள மலரும்
நாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும் 
மகிழிள வன்னியும் இவைநலம் பகர
ஆறுமோர் சடைமேல் அணிந்தஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  7 


கச்சும்ஒள் வாளுங் கட்டிய வுடையர்
கதிர்முடி சுடர்விடக் கவரியுங் குடையும்
பிச்சமும் பிறவும் பெண்அணங் காய
பிறைநுத லவர்தமைப் பெரியவர் பேணப்
பச்சமும் வலியுங் கருதிய அரக்கன்
பருவரை யெடுத்ததிண் தோள்களை யடர்வித்
தச்சமும் அருளுங் கொடுத்தஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  8 


நோற்றலா ரேனும் வேட்டலா ரேனும்
நுகர்புகர் சாந்தமொ டேந்திய மாலைக்
கூற்றலா ரேனும் இன்னவா றென்றும் 
எய்தலா காததொ ரியல்பினை யுடையார்
தோற்றலார் மாலும் நான்முக முடைய 
தோன்றலும் அடியொடு முடியுறத் தங்கள்
ஆற்றலாற் காணா ராயஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  9 


வாதுசெய் சமணுஞ் சாக்கியப் பேய்கள்
நல்வினை நீக்கிய வல்வினை யாளர்
ஓதியுங் கேட்டும் உணர்வினை யிலாதார் 
உள்கலா காததோ ரியல்பினை யுடையார்
வேதமும் வேத நெறிகளு மாகி
விமலவே டத்தொடு கமலமா மதிபோல்
ஆதியும் ஈறும் ஆயஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  10 


மைச்செறி குவளை தவளைவாய் நிறைய
மதுமலர்ப் பொய்கையிற் புதுமலர் கிழியப்
பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப்
பதியவர் அதிபதி கவுணியர் பெருமான்
கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக்
கருத்துடை ஞானசம் பந்தன தமிழ்கொண்
டச்சிறு பாக்கத் தடிகளை யேத்தும்
அன்புடை யடியவர் அருவினை யிலரே.  11 





வண்ணப்பூச்சுகளின் அலங்காரத்தில் ராஜ கோபுரம்.


எப்படி செல்வது:

அச்சிறுபாக்கம் ரயில் நிலையம் சென்னை எழும்பூர் - விழுப்புரம் ரயில் மார்க்கத்தில் இருக்கிறது. அச்சிறுபாக்கம் சிறிய ரயில் நிலையம் ஆனதால் அநேக ரயில்கள் இங்கு நிற்பதில்லை. ஆகையால் அச்சிறுபாக்கத்திறகு முந்தைய ரயில் நிலையமான மேல்மருவத்தூரில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில சுமார் 4 கி.மி. பயணம் செய்தால் அச்சிறுபாக்கம் கோவிலை அடையலாம். சென்னையில் இருந்து செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர் வழியாக திண்டிவனம் செல்லும் சாலையில் மேல்மருவத்தூரை அடுத்து வரும் நிறுத்தம் அச்சிறுபாக்கம். அங்கு இறங்கி இடப்பக்கம் பிரியும் ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் அரை கி.மி. சென்றால் கோவிலை அடையலாம். சென்னையில் இருந்து சுமார் 96 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது.


மீள்பதிவாக :-

பாடல் பெற்ற தலங்கள் (5) - திருஆனைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/09/5.html

பாடல் பெற்ற தலங்கள் (4) - திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/08/4.html

பாடல் பெற்ற தலங்கள் (3) - திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/07/3.html

பாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/06/2.html

பாடல் பெற்ற தலங்கள் (1) - திருநெடுங்களம் - http://tut-temple.blogspot.com/2018/05/1.html

No comments:

Post a Comment