Subscribe

BREAKING NEWS

15 May 2018

முன்னோர்களின் ஆசி பெற மோட்ச தீப வழிபாடு

மெய்யன்பர்களே.

இதற்கு முன்பாக இரண்டு பதிவுகளில் மோட்ச தீபம் பற்றி பேசி உள்ளோம். இன்றைய பதிவில் மோட்ச தீபத்தின் நிறைவை காண உள்ளோம். மோட்ச தீப பிரார்த்தனை எப்படி செய்ய வேண்டும்? எங்கே மோட்ச தீப பிரார்த்தனை நடைபெறுகின்றது இது போன்ற செய்திகளை இந்த பதிவில் தர நம் குருவிடம் வேண்டுகின்றோம்.

அதற்கு முன்பாக தீபமேற்றுவது தொடர்பாக சில செய்திகள் உங்களோடு.

தீபமேற்றிய உடன் நமக்கு என்ன தோன்றுகின்றது. மகிழ்ச்சி தானே..
தீபமேற்றுவதன் தாத்பரியமே நாம் மகிழ்வோடு வாழ்தல் என்பதற்காகத் தான். தீபமேற்றியவுடன் அந்த இடத்தில் உள்ள இருள் விலகி, ஒளி பெறுகின்றது. இது புறத்தில் நடைபெறும் நிகழ்வு. நீங்கள் இது போன்று தீபமேற்றி பிரார்த்தனை செய்ய செய்ய, அந்த புற நிகழ்வு, உங்கள் அகத்தில் நிகழ்வும். மாசற்ற ஜோதி மனதில் ஒளிர்ந்து, மலர்ந்த மலரை நாம் நம்முள் உணரலாம். நாம் ஒவ்வொருவரும் எத்துணையோ விதமான துன்பங்களை அனுபவித்து வருகின்றோம். சொல்லொணா துயரில் இருப்பவர்கள் தினமும் அகல் விளக்கில் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி சிறிய அளவில் பிரார்த்தனை செய்து வாருங்கள். சுமார் மூன்று மாதங்களுக்கு உள்ளாக நீங்கள் மாற்றம் பெறுவது உறுதி.

இந்த உலகம் எதனால் இயங்குகின்றது? சூரியனால் தான். சூரியன் இல்லையென்றால் நம் கதி அதோகதி தான். ஆதியில் நம் வழிபாடாக இருந்ததும் சூரிய வழிபாடு தான். ஞாயிற்றுக் கிழமை வாரத்தின் முதல் நாள், சூரியனை வழிபட்டு நம் நாட்களை தொடங்க வேண்டிய நாள். ஆனால் மாறாக அன்று தான் நாம் கேளிக்கை, கூத்து என்று திண்டாடி வருகின்றோம். ஆதி வழிபாட்டை மறந்து விட்டோம். தற்போது ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமாக நம் கையில் சீரழிந்து வருகின்றது. இதற்கு மாற்றாக நாம் என்ன செய்ய முடியும்? ஞாயிற்றுக் கிழமை அன்றாவது விடியல் கண்டு சூரியன் தரிசனம் பெறுங்கள், சூரியக் குளியல் போடுங்கள். சரி வாருங்கள்..விளக்கின் மூலம்  விளக்கம் பெறுவோம்.

விளக்கு என்றால் என்ன? தெளிவு பெறு ..தெளிவு எப்போது பெற முடியும்? அகமோ, புறமோ இருள் அகற்றினால் தெளிவு பெறலாம். விளக்கு இருள் அகற்றும் வேலையைத் தான் செய்கின்றது. ஆரம்ப காலத்தில் களிமண்ணால் விளக்குகள் பயன்பாட்டில் இருந்தது.இன்று பல உலோகங்களில் பல விதங்களில் , வடிவங்களில் கிடைக்கின்றது. கோயிலில் விளக்கேற்ற செல்லும் போது கண்டிப்பாக களிமண்ணால் செய்யப்பட்ட விளக்குகளை பயன்படுத்துங்கள். பொதுவாக திருவிளக்கின் தத்துவத்தின்படி,

நெய் - நாதம் என்ற ஒலி தத்துவம்
திரி - பிந்து என்ற ஒளி தத்துவம்
சுடர்  -திருமகள்
பிழம்பு - கலைமகள்
தீ- சக்தி

என ஐந்து இறைமகாசக்திகள் உள்ளடங்கி உள்ளது. அகல் விளக்கேற்றி வழிபடுவது பஞ்ச பூத வழிபாடாகும். நாம் மோட்ச தீபத்தில் களிமண்ணால் ஆன பெரிய அகல் விளக்கில்  விளக்கேற்றி வழிபாடு செய்கின்றோம். பஞ்ச பூத வழிபாடும், முன்னோர்களின் வழிபாடும் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைப்பதைப் போன்றதாகி விடும். அதே போல் விளக்கேற்ற உகந்த நேரம் நாம் ஏற்கனவே சொல்லியது போன்று பிரம்ம முஹூர்த்தம் என சொல்லப்படும் அதிகாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை தான். அதற்குப் பின்னரும் விளக்கேற்றலாம். தவறில்லை. பலன்கள் சற்று குறைவாக இருக்கும். அவ்வளவே. பயன்படுத்தப்படும் உலோக விளக்குகளுக்கென தனித்தனி பலன்கள் உண்டு.

வெண்கல விளக்கு - பட்சி தோஷங்கள் நீக்கும்
பித்தளை விளக்கு - சண்டை சச்சரவு நீங்கும்
செப்பு விளக்கு - அமைதி தரும்
வெள்ளி விளக்கு - பூரணத்துவம் தரும்
தங்க விளக்கு - ஆயுள் விருத்தி
நவரத்தின ஆபரண விளக்கு - நவரத்தின தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

உலோக விளக்குகளுக்கு என்று சளைக்காது இருப்பது மண் அகல் விளக்குகள். வலம்புரி சங்கு விளக்கு, பச்சை மண் அகல் விளக்கு, சுட்ட அகல் விளக்கு, பனம்பழ குறுக்கு வெட்டு அகல்விளக்கு, விசிறித்தட்டு அகல் விளக்கு, பாதாளக்குழி அகல்,தூங்கா(தூண்ட) விளக்கு, பலரூப அகல் விளக்கு என பலவகையான அகல் விளக்குகள் உண்டு. இதே போல் விளக்கேற்றும் எண்ணெயிலும் பல செய்திகள் உண்டு. விளக்கேற்றும் கடைபிடிக்க வேண்டிய செய்திகள் என தனிப் பதிவாக அறியலாம். வாருங்கள் மோட்ச தீப வழிபாட்டிற்கு செல்வோம்.

சென்ற பதிவில் மோட்ச தீபமேற்ற மண் விளக்குகள் தயார் செய்துவிட்டு, தீபத்திற்குண்டான திரியை இட்டு, நெய் ஊற்றி காத்திருந்தோம். இதோ. நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மோட்ச தீபம் ஏற்ற இருக்கின்றோம்.






இதோ மீண்டும் உங்கள் பார்வைக்கு. மோட்ச தீபம் ஏற்ற வேண்டிய நேரம் மாலை 6 மணிக்கு தான். இதோ சூரியன் தன் ஒளியை மறைத்து விட்டான். சந்திரன் தரிசனம் கிடைக்காது. ஏனெனில் மோட்ச தீபம் ஒவ்வொரும் அமாவாசை அன்று தான் ஏற்றப்படும். கோயிலில் விளக்குகள் ஒளிர்விட ஆரம்பித்து விட்டன. 






முன்னோர்களை மட்டுமல்ல.. இப்புவியில் தோன்றி மறைந்த அனைத்து உயிர்களையும் வேண்டி ,இதோ 21 மோட்ச தீபம் ஏற்றப்பட்டு கொண்டிருக்கின்றது. இந்த பதிவைப் படிக்கும் ஒவ்வொருவரும்  நன்றாக அவரவர் முன்னோர்களை பிரார்த்திக்க வேண்டுகின்றோம். ஏனென்றால் இணையத்தில் தாராளமாக ஏராளாமான செய்திகள் கிடைக்கும். இது போன்ற வாழ்வினை வளப்படுத்தும் வழிபாடு பற்றிய செய்திகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக கிடைக்கும். கிடைக்கும் செய்திகளை உடனே படிப்பவர்களும் குறைவே. இதோ. உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி ,இந்த மோட்ச தீபம் ஏற்றுவதை படிக்கும் ஒவ்வொருவரின் வாழ்வில் முன்னோர்களின் ஆசியும்,  அனைத்து வளங்களும் பெற சித்தர் பெருமக்களிடம் பிரார்த்திக்கின்றோம்.






விளக்கேற்றியாகி விட்டது அல்லவா? அவ்வளவு தானா? என்று கிளம்பிவிடாதீர்கள். இனிமேல் தான் முக்கியமாக நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதுவும் கூட்டுப் பிரார்த்தனை. இது இரண்டு கட்டமாக 108 முறை மந்திரம் உச்சரிக்க வேண்டும். முதலில் மோக்ஷ தீப மந்திரம் ஜெபம் 108 முறை அனைவரும் கூறினோம். மந்திரங்களை இங்கு பொதுப்படையாக சொல்லக் கூடாது. நேரில் பங்குகொண்டு பலன் பெறுங்கள்.

அடுத்து பீஜ மந்திரம் ..இதுவும் 108 முறை. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த மந்திரம் உச்சாடனம் நடைபெற்றது.




பூஜை செல்ல செல்லஅடியார் பெருமக்களும் வந்து கொண்டே இருந்தார்கள். நமக்கு அடியார் கூட்டம் காண மகிழ்வாய் இருந்தது. வருபவர்கள் வெறுங்கையோடு வராமல், தங்களால் இயன்ற பொருட்களை (பூக்கள், நெய் ) கொண்டு வந்து கொடுத்தார்கள். தீபமேற்றி, கூட்டுப் பிரார்த்தனையில் 108 முறை மந்திரம் உச்சரித்து ..அந்த இன்பத்தை சொல்லில் அடக்க முடியவில்லை. இரவின் மடியில் அனைவரும் இருந்தோம்.






இதோ பூசையின் இறுதிப்பகுதி எட்ட உள்ளோம். அனைவர்க்கும் கைகளில் மலர்கள் கொடுத்தார்கள். ஒவ்வொருவராக அந்த தீப மேடைக்கு சென்று, நன்கு பிரார்த்தித்து அந்த மலர்களை அங்கே உள்ள வாழையிலையில் இட வேண்டும். ஆஹா. இப்படி ஒரு தீப வழிபாடு நாம் இதுவரை கண்டதில்லை. 





ஒவ்வொருவராக வந்து செவ்வனே மோட்ச தீப வழிபாட்டில் மெய் உருகி வேண்டியதை நாம் கண்டோம். வேண்டத்தக்கதை அறிந்த இறைவன் அனைவருக்கும் அனைத்தும் கொடுப்பார் என்பது இந்த பூசையில் தெளிவாக உணர்ந்தோம். ஏனெனில் நம் முன்னோர் இட்ட பிச்சையில் தான் இந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அவர்களை நினைத்து,துதித்து,வேண்டும் போது ..கனவுகள் மெய்ப்படும் தானே!

அடுத்து அனைவரும் கைகால்களை நன்றாக கழுவ வேண்டும். ஏனெனில் இந்த பூசை, தர்ப்பணம், திதி கொடுப்பது போன்றவற்றுக்கு  சமம்.எனவே கண்டிப்பாக நாம் கைகால்களை சுத்தம் செய்ய வேண்டும். அடுத்து அங்கே வழங்கப்படும் அன்னதானத்தை உண்ட பின்னரே நாம் விடைபெற வேண்டும். அன்னதானம் உண்டால் தான் மோட்ச தீபம் 100 சதவீதம் பூர்த்தியாகும். இல்லையேல் நாம் பிரார்த்தனை விழலுக்கு இரைத்த நீரே. இங்கு அன்னதானம் மிக மிக சிறப்பாக செய்யப்படுகின்றது. விதவிதமாக உணவுகள். அன்னதானம் உண்ட பின் நம் வயிறு நிறையும். மோட்ச தீப பூசையில் நம் மனம், உயிர் என அனைத்தும் நிறையும் என்பது கண்கூடு.

நாம் வழக்கமாக செய்யும் அமாவாசை அன்னதானத்திற்காக இங்கே நம் தளம் சார்பாக குருக்களிடம் சிறிய தொகையை கொடுத்தோம்.




                           அன்னதானத்திற்காக வரிசையில் அடியார் பெருமக்கள்.







நாமும் மலர் தூவி பிரார்த்தனையை நிறைவு செய்து, அன்னதானம் உண்டோம். அமிர்தமாக இருந்தது. பின்னர் குருக்களிடம் நம்மை பற்றி அறிமுகம் செய்து விட்டு, அங்கிருந்து விடைபெற எத்தனித்தோம். மோட்ச தீபத்தை பார்க்க, பார்க்க நமக்கு  அங்கிருந்து கிளம்ப மனம் வரவில்லை. மீண்டும் ஒரு முறை சென்று தீபத்தை தரிசித்தோம். மறுபடியும் பிரார்த்தனை செய்தோம்.

அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கு கேள்விக்கான விடை இதோ. இந்த மோட்ச தீப பூசையானது கோயம்புத்தூரில் உள்ள பேரூர் பச்சபாளையத்தில் அருள் புரியும் அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று மாலை 6 மணி அளவில் அகஸ்தியர் குடில் சார்பாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு பலன் பெறவும்.






இது போன்ற அருமையான தீப வழிபாட்டை நமக்கு உணர்த்தி காட்டிய அகஸ்தியர் குடிலுக்கு நன்றி. பூசை ஆரம்பிக்கும் முதல் முடியும் வரை நமக்கு வழிகாட்டிய கோயம்புத்தூரை சேர்ந்த திரு.சூரிய நாராயணன் ஐயா அவர்களுக்கும்,  மோட்ச தீப பூசை நடைபெற பொருளுதவி, உடலுதவி செய்துவரும் அனைத்து அடியார்களின் பாதம் பணிகின்றோம்.

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள் பதிவாக :-

வளங்களை அள்ளித் தரும் மோட்ச தீப வழிபாடு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_29.html

21 தலைமுறை முன்னோர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றுவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/21.html

No comments:

Post a Comment