Subscribe

BREAKING NEWS

20 February 2019

வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று நாம் ஒரு புதிய யாத்திரை பற்றி அறிய உள்ளோம். பாடல் பெற்ற தலங்கள், திருப்புகழ் தலங்கள், முக்தித் தலங்கள்,சித்தர் தலங்கள், மலைக் கோயில்கள், நவ கைலாய தரிசனம், நவ திருப்பத்தி  என்று நாம் கேட்டிருப்போம். அதில் நவபுலியூர் யாத்திரை பற்றி இங்கே அறிய உள்ளோம்.



நவபுலியூர் யாத்திரை!

முன்ஜன்ம வினைகளும் யாவும் போக்கும் நவபுலியூர் யாத்திரை - வியாக்ரபாத & பதஞ்சலி முனிவருக்கு, தில்லை நடராஜப் பரம்பொருளால் உபதேசிக்கபட்ட ஒரு யாத்திரை. மாண்டுக மகரிஷியும் யாத்திரை சென்று பயன் பெற்றார். இது மோட்ச யாத்திரை என்றும் அழைக்கப்படுகிறது. நவபுலியூர் தரிசனம் செய்யும் முறை பின்வருமாறு

1) பெரும்பற்றப்புலியூர் (தில்லை)
2) திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்)
3) எருக்கத்தம்புலியூர் - (இராஜேந்திரப்பட்டினம் -ராஜராஜசோழனுக்கு பிள்ளை வரம் தந்த தலம்),
4) ஓமாம்புலியூர்
5) கானாட்டமுள்ளூர் (கானாட்டம்புலியூர்)
6) சிறுபுலியூர் (நாடாக்குடி)
7) அத்திப்புலியூர்
8) தப்பளாம்புலியூர்
9) பெரும்புலியூர்



ஒன்பது புலியூர்களையும் தரிசித்த ஸ்ரீ வியாக்ரபாதரும் , ஸ்ரீ பதஞ்சலி முனிவரும் காவேரிக்கரையின் ஓரமாக ஸ்ரீரங்கத்தை சென்றடைகிறார்கள். அரங்கனின் விருப்பப்படி ஸ்ரீ பிரம்மாவின் தரிசனமும் அவர்கள் பெறவேண்டும் என்பதால் ஸ்ரீ பிரம்மாவின் அருள் தரும் இடமான திருப்பட்டூரை அடைகிறார்கள். இருவரும் அங்கே ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரரையும், ஸ்ரீ பிரம்மாவையும் வணங்கி ஜீவ சமாதியை மேற்கொள்கிறார்கள். எம்பெருமான் ஆடல் அரசனின் திரு ஆணைப்படி எம்பெருமான் பேரருளாலும் அவர்கள் சிவ விஷ்ணுவாக விளங்கும் பரப்பிரம்ம ஜோதியில் ஐக்கியமாகிவிடுகிறார்கள்.

தில்லையில் தொடங்கி, ஸ்ரீரங்கத்தில் முடியும் இந்த சிறப்பு வாய்ந்த யாத்திரை பற்றிய தகவலை அனைத்து அடியார்களுக்கும் சென்றடைய வழி செய்யவும்.

அன்பார்ந்த ஆன்மீக பெருமக்கள் யாவரும் மிகுந்த நற்பலன்களை அடையவும், முன்ஜன்ம வினைகள் தீரவும் எங்கும் நிறை பரம்பொருளின் பெருங்கருணையை பெற்று உய்யவும் ஆடல்வல்லான் ஆன ஆனந்த நடராஜ பரம்பொருளால் ஸ்ரீ வியாக்ரபாத முனிவருக்கும் ஸ்ரீ பதஞ்சலி முனிவருக்கும் உபதேசிக்கப்பட்ட இந்த நவபுலியூர் தரிசனமானது மிகவும் பழமையானது ஆகும்.
சித்தர் பெருமக்களாலும் மண்டூக மகரிஷி என்னும் ரிஷியாலும் மேற்கொள்ளப்பட்டு பயன் பெற்ற யாத்திரையாகும். திருச்சிற்றம்பலம் என்னும் ஸ்ரீ சிதம்பரத்தில் ஸ்ரீ வியாக்ரபாத முனிவரும், ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியும் மோட்சத்தை வேண்டி நின்றபொழுது எம்பெருமான் ஆடல் அரசன் அவர்களை இந்த நவபுலியூர் யாத்திரையை மேற்கொண்டு கடைசியாக அதை ஸ்ரீரங்கத்தில் முடித்து கொள்ளுமாறு கட்டளையிட்டார். ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கராஜனும், சிதம்பரத்தில் உள்ள நடராஜனும் ஒரே பரம்பொருளின் இரு வடிவேயாகும் என்று பக்த பெருமக்களுக்கு உணர்த்திய யாத்திரையாகும்.

11, 12ம் நூற்றாண்டுக்கு முன்பாக இந்த நவபுலியூர் யாத்திரை ப்ரஸித்தி பெற்றே இருந்தது. அதன்பின் ஏற்பட்ட சிவ வைணவ
பேதத்தாலேயே இந்த யாத்திரையின் முக்கியத்துவம் மறைந்தது. பின்பு சைவ பெருமக்களால் அது பஞ்சபுலியூர் தரிசனமாயிற்று. ஆனால் இன்று சனாதனதர்மத்தை கடைபிடிக்கும் யாவரும் நம்முடைய பேதங்களை மறந்து பரம்பொருளின் இரு வடிவங்களையும் தரிசித்து நற்பயன்களை பெறவேண்டும்.

இது மோட்சயாத்திரை என்றும் ஏன் அழைக்கப்படுகிறது என்றால் இந்த யாத்திரையின் முடிவில் நாம் பிரும்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும் தரிசிக்கிறோம். பின்பு சதாசிவ தத்துவமான ஸ்ரீ ஆனந்த நடராஜ பரம்பொருளுடன் கலந்துவிடுகிறோம். ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அநுக்ரஹித்தல் ஆகியவைகளை பரம்பொருளான ஒன்றே வெவ்வேறு வடிவம் தாங்கி நடத்திவருகிறது. இதுதான் ஸனாதன தர்மமான நமது இந்து மதத்தின் கோட்பாடாகும். இதில் உயர்வு தாழ்வுகளை பார்ப்பது நமது அறியாமையின் வடிவமேயாகும்.

இப்புவியை நடத்த இறைவன் எடுத்த வடிவங்கள் தான் எத்தனை எத்தனை. ஆன்மீகத்தில் மிக உயர்ந்த நிலையை அடையும்போது இந்த உண்மை நன்றாகவே புலப்படுகிறது. இன்றைய கால கட்டத்தில் நாம் நமது உட்பிரிவுகளை மறந்து நம்முடைய இந்து தர்மத்தின் உன்னத கோட்பாடான ஏக இறைவனை துதித்து நம் கர்மவினைகள் தீர இறைவனாலேயே வடிவமைக்கப்பட்ட நவபுலியூர் யாத்திரையை மேற்கொண்டு பயன் பெறுவோமாக.

நவபுலியூர் யாத்திரையின் 9 புலியூர்களையும் தரிசிப்பது நவக்கிரஹ அருளையும் பெறுவதாகும். நமது விதியின் பயனானது நவக்கிரஹங்கள் வழியாகவே செயல்வடிவம் கொடுக்கப்பெற்று நமக்கு அவற்றை அனுபவிக்கும்படியாக எண்ணங்களாகவும் செயல்களாகவும் மாற்றப்படுகிறது. நாம்
வெறும் நவக்கிரஹங்களை தொழுவதால் மட்டும் நம் வினைப்பயனை மாற்ற இயலாது. அக்காலங்களில் வினைப்பயன்கள் தீர "தீர்த்தயாத்திரை" என்னும் க்ஷேத்ராடனம் வழியாக சிலபல திருத்தலங்களை தரிசிப்பதே சிறந்த பரிகாரமாக அமைந்தது. இன்றும் எத்தனையோ ஹோமங்களாலும், வேறுபல வழிகளில் செய்யப்படும் பல்வேறு பரிகாரங்களாலும் பலர் பலன் அடையாமல் கருமவினை தீர என்ன வழி என்றே திகைத்து நிற்கிறார்கள். முன்னை வினையிரண்டும் வேர் அறுத்து முன் நிற்கும் பேரருளாளனை யாத்திரை மூலமாக தரிசிப்பதே சிறந்த பரிகாரமாகும்.

சோழநாட்டில் புண்ணிய பலன்களை பெற்றுத்தரும் இந்த நவபுலியூர் தரிசனத்தை மேற்கொண்டு ஆன்மீக பெருமக்கள் யாவரும் நற்பலன்களை அடைய எல்லாம் வல்ல ஆடலரசனையும், அரங்கனையும் ப்ரார்த்திக்கிறோம்.

நவபுலியூர் தரிசனம் செய்யும் முறை

1. பெரும்பற்ற புலியூர்

இறைவன்: மூலட்டானேசுவரர்
இறைவி: சிவகாமசுந்தரி
ஸ்தல விருட்சம் : தில்லை மரம்
பெரும்பற்ற புலியூர் என்னும் சிதம்பரம் முதலில் சிதம்பர நாதரையும் அவ்விடம் உறையும் மூலட்டானேசுவரரையும், அம்பிகை சிவகாம சுந்தரியையும் தரிசிக்க வேண்டும். நேரம் இருப்பவர்கள் சிதம்பரத்தில் தங்கி அர்த்தஜாம பூஜையை தரிசிப்பது விசேஷம். அடுத்தநாள் காலை சூரியோதயம் காலத்தில் நடைபெறும் திருவனந்தல் பூஜையை காணவேண்டும். இது சூரிய பரிகாரத்தலமாகும்.



வியாக்ரபாதருக்கும், ஸ்ரீ பதஞ்சலி முனிவருக்கும் ஆனந்த நடன காட்சி தைப்பூசம் அன்று அருளிய ஸ்தலமும் நவபுலியூரில் முதன்மையான தலமும் ஆகும். நால்வர் பெருமக்களும் பாடி துதித்த தலம். தில்லை மூவாயிரத்தாரால் இன்றும் வழிபடப்பெறும் தலம்.
நடராஜபெருமானின் பேரருளுடன் அடுத்த புலியூர் செல்வோம்.

2. திருப்பாதிரிப் புலியூர்
சந்திர பரிகார தலமான திருப்பாதிரிப் புலியூர் இரண்டாவது புலி யூர், உ ப ம ன் யு வுக்கு அம்பாளின் சாபத்தை மாற்றி விமோசனம் கொடுத்த தலம்.
இறைவன் : பாடலீஸ்வரர் என்னும் தோன்றாதுணைநாதர் (ஸ்வயம்புத் திருமேனி)
இறைவி - பெரியநாயகி
ஸ்தல விருட்சம் - பாதிரிமரம்
அப்பர் பெருமானை கடலில் இருந்து கரையேற்றிய திருத்தலம்.



சந்திர க்ருஹபரிகாரஸ்தலமான திருப்பாதிரிப் புலியூர் வியாக்ரபாதராலும் உபமன்யுவாலும் வழிபடப்பெற்றது. ஸ்வயம்பு திருமேனி சோழ மற்றும் பல்லவ அரசர்களால் கட்டப்பட்ட கோயில் கடலூரில் அமையப்பெற்றுள்ளது. ஒருமணிநேர பயணம், இவ்வாலய தரிசனம் 16 முறை காசியை தரிசித்த பலனையும், 8 முறை திருவண்ணாமலையை தரிசித்த பலனையும், ஒருமுறை சிதம்பரத்தை தரிசித்த பலனையும் அளிக்கவல்லது. அம்பிகை பெரியநாயகி பக்தபெருமக்களை மிகுந்த வாஞ்சையோடு அணைத்துகொள்ளும் தலம் அம்மையப்பர் ஸ்தலம்.

3. எருக்கத்தம்புலியூர்

எருக்கத்தம்புலியூர் என்னும் இராஜேந்திர பட்டினம், மூன்றாவது புலியூர் இது பதஞ்சலி முனிவருக்கு காட்சி கொடுத்த தலம். கேது பரிகாரஸ்தலம். இராஜராஜ சோழனுக்கு குழந்தை வரம் அருளியதலம். இந்த ஸ்தலம் விருத்தாசலத்திலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ளது.

இறைவன் : ஸ்ரீ நீலகண்டேசுவரர் என்னும் திருக்குமாரஸ்வாமி
இறைவி : நீலமலர்கண்ணி
ஸ்தல விருட்சம் : எருக்கு



இராஜராஜ சோழனக்கு பிள்ளைவரம் அருளிய தலம். அதன்பயனால் இராஜேந்திர சோழன் பிறந்ததால் எருக்கத்தம்புலியூருக்கு இராஜேந்திர பட்டினம் என்னும் பெயரும் வந்தது. முருகப்பெருமானுக்கு சாப விமோசனம் கொடுத்து பேச்சாற்றல் அருளிய தலம். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனாரின் பிறந்ததலம்.

சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்புக்கு - கணேஷ் குருக்கள் - 9487703524

4. ஓமாம்புலியூர்
நான்காவது புலியூர் ஓமாம்புலியூர் என்னும் குருபரிகாரதலம். எருக்கத்தம்புலியூரில் இருந்து காட்டுமன்னார்கோவில் வழியாக ஓமாம்புலியூரை அடையலாம்.

இறைவன் : ப்ரணவ வ்யாக்ர புரீசுவரர் என்னும் துயர்தீர்த்தநாதர்.
இறைவி: புஷ்பலதாம்பிகை



அம்பிகைக்கு மோட்ச மார்க்கத்தை ப்ரணவம் என்னும் ஓங்கார மந்திரத்தை ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி வடிவாக உபதேசித்த திருத்தலம். வியாக்ரபாதருக்கும், பதஞ்சலி முனிவருக்கும் மோட்ச உபதேசம் அளித்த இடம். குருபரிகாரதலம். இந்த ஊர் காட்டுமன்னார் கோவிலிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.

5. காணாட்டமுள்ளூர்

காணாட்டமுள்ளூர் என்னும் கானாட்டம்புலியூர் என்ற தலம்  ஓமாம்புலியூருக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் ஆதிசேஷன் அவதாரமான ஸ்ரீ பதஞ்சலி மு னி வ ர ால் பெயர் பெற்றுள்ளது (ராகு பரிகார தலம்) காட்டுமன்னார் கோயில் அருகிலிருக்கும் முட்டம் என்னும் ஊரிலிருந்து சுமார் ஒரு கிமீ தூரத்தில் உள்ளது. ஓமாம் புலியூரிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.

இறைவன் - ஸ்ரீ பதஞ்சலி நாதர்

இறைவி - கண்ணார்குழலி என்னும் கோலவளைகையம்மை, அம்புஜாஷி. ஸ்தல விருட்சம் வெள்ளெருக்கு.
தல தீர்த்தம் - சூரிய புஷ்கரணி



விக்ரம சோழனால் கட்டப்பட்டது. நவபுலியூரின் அடுத்துவரும் புலியூர் யாவையுமே விக்ரம சோழனால் கட்டப்பட்டதாகும். பதஞ்சலி முனிவரின் சிலாரூபம் உள்ளது. இராகு பரிகார தலம் நாகதோஷ பரிகார ஸ்தலம். பதஞ்சலி முனிவர் பூஜித்து, பகவான் காட்சி கொடுத்த ஸ்தலம். சுந்தரமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற ஸ்தலம். சித்திரை ஒன்றாம் தேதி சூரிய பகவான் வணங்கும் ஸ்தலம். கார்த்திகை நட்சத்திரம், சிம்ம ராசி, சிம்ம லக்னத்தில் உள்ளவர்கள் வழிபட சிறப்பு ஸ்தலம்.

6. சிறுபுலியூர்

சிறுபுலியூர் புதன் பரிகார தலம், மயிலாடுதுறை, கொல்லுமாங்குடி வழியாக இத்தலத்தை அடையலாம். மாயவரத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கோவில், சிறுபுலி யூரின் வெகு அருகிலிருக்கும் சிற்றூரில் நாடா குடி என்னும் இடத்தில் அமைந்திருக் கிறது. புலிக்கால் முனிவரும், பதஞ்சலி முனிவரும் நவபுலியூர் யாத்திரையை இணைந்தே நடத்தி இருக்கிறார்கள். மிகவும் வயதாகிய நிலையில் அவர்கள் சிறுபுலியூரை அடையும் போது இருட்டிவிட்டது. இவ்விடத்தில் அவர்கள் அரங்கனை நினைத்து இயலாமையால் மோட்ச மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். சிதம்பரத்தில் இருந்து எம்பெருமான் வழித்துணைநாதராக எழுந்தருளி அவர்கள் ஸ்ரீரங்கத்தை அடைய இன்னும் தூரமிருப்பதை உணர்த்துகிறார்.
இறைவன் வழித் துணை நாதர் என்னும் மார்க்கபந்தீஸ்வரர்



மிகச்சிறிய ஆலயம். இவ்வாலயம் திருப்பணி செய்யப்பட்டு பெரியதாக கட்டப்படவேண்டும். அதே சமயம் ஸ்ரீரங்கத்தில் இருந்து அரங்கனும் பாலரங்கனாக இங்கு எழுந்தருளி இவ்விரு முனிவர்களுக்கும் தரிசனம் அருளியதால் சிறுபுலியூர் 108 திவ்ய தேசத்திலும் ஒன்றாக ஆயிற்று. எருக்கத்தம்புலியூரில் இருந்து சிதம்பரம், மாயவரம், கொல்லுமாங்குடி வழியாக 85 கிமீ தூரம் உள்ளது.

7. அத்திப்புலியூர்

சிறுபுலியூரிலிருந்து நன்னிலம் வழியாக திருவாரூரை அடைந்து அங்கிருந்து அத்திப்புலியூரை அடையலாம். ஆதிபுலியூர் என்னும் அத்திப்புலியூர் சுக்ர பரிகாரத்தலம். நாகப்பட்டினம் அருகில் உள்ள கீவளூர் என்னுமிடத்துக்கு அருகில் உள்ளது. இறைவன் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் உமா மஹேஸ்வரராக கல்யாண சுந்தரராக திருமணக்கோலத்தில் தரிசனம் கொடுத்த இடம் திருமணக்காட்சி மூலவர் பின்னால் உள்ளது. அகத்தியருக்கும் திருமணக்காட்சி கொடுத்த இடம்.



 8. தப்பளாம்புலியூர்

தப்பளாம்புலியூர் என்னும் மண்டூக வியாக்ரபுரம் திருவாரூருக்கு தென்கிழக்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மண்டூக ம க ரி ஷி க் கு ம் வியாக்ரபாதருக்கும் அருளாசி வழங்கிய இடம். வியாக்ரபாதரின் புலிக்கால் புலிக்கை திருமேனியை நீக்கி முன்புபோல் பொலிவை பெற்றுத்தந்த இடம். பதஞ்சலி, வியாக்ரபாதர், மண்டூக மகரிஷி மூவருமே திருநடனக்காட்சியை கண்டுகளித்ததால் நடராஜ மூர்த்தமே கல்லால் வடிவமைக்கப் பெற்று கோஷ்டத்தில் இடம் பெற்றுள்ளது. மண்டூகவியாக்ரபுரம் என்னும் திருநாமம் இவ்விடத்திற்கு ஏற்பட்டது. தமிழில் தப்பளாம்புலியூர் என்றழைக்கப் பெற்றது. சனி பரிகாரஸ்தலம்.

இறைவன் - வியாக்ரபுரீசுவரர்
இறைவி - நித்யகல்யாணி அம்மன்
ஸ்தல விருட்சம் - காட்டாத்தி மரம் மற்றும் வன்னி மரம்.
தீர்த்தம் - வியாக்ரபாத தீர்த்தம், பதஞ்சலி தீர்த்தம்.

ஸ்வயம்பு மூர்த்தம், மிக அழகிய திருக்குளம் வியாக்ரதீர்த்தம் பின்புறமாக உள்ள திருக்குளம் பதஞ்சலி தீர்த்தம். இது சனி பரிகார தலமாக அமைந்துள்ளதால் சனீஸ்வர பகவான் கிழக்கு நோக்கி தனி சந்நிதியாக கோயில் கொண்டுள்ளார். காசியில் உள்ளதுபோல ஏகபாதருத்ரர் மிகப்பெரிய திருமேனியாக தனி சந்நிதி கொண்டுள்ளார். சூரியன், இரண்டு பைரவர்கள் ஆகியோரும் உள்ளனர். ஸப்தமாதா ஸந்நிதி ஜேஷ்டாதேவி, வீரபத்திரர் விநாயகருடன் கலைநயத்தோடு மிளிர்கிறது. ஜேஷ்டாதேவி தன் இரு குழந்தைகளான மந்தன் மற்றும்
மாந்தியோடு சற்றே பெரிய திருமேனியுடன் விளங்குகிறார். 8ம் நூற்றாண்டுவரை ஸ்ரீ ஜேஷ்டாதேவி வழிபாடு செழித்திருந்தது. ஏழ்மை, பகைமை, சோம்பல், இயலாமை போன்றவைகள் அழிய ஜேஷ்டாதேவி வழிபாடு மிக சிறந்ததாகும். முக்கியமாக பெண்கள் இந்த தேவியை வழிபட குடும்பத்தில் இல்லாமை என்பது அழியும். மன உளைச்சல்  என்று சொல்லக்கூடிய பழைய நினைவுகளால் வாடி வதங்குபவர்கள் இந்த தேவிக்கு கேட்டை நக்ஷத்ரம் மற்றும் அஷ்டமி தினங்களில் பால் அபிஷேகம் செய்து அன்னம் படைத்து காக்கைக்கு இட்டு வழிபட்டால் இதுபோன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம். இங்குள்ள மூன்று கால்களுடைய ஜுரஹரேஸ்வரர் மிகுந்த வரப்பிரசாதி ஆவார். சிறு குழந்தைகளுக்கு ஜூரம் முதலிய நோய்கள் அண்டாமல் இருக்க ஜுரஹரேஸ்வரரை வழிபட வேண்டும். இங்குள்ள சனீஸ்வரர் அனுக்ரஹ சனீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார். ஏழரை சனி, அஷ்டமச் சனி, சனிதிசை, கண்டக சனி ஆகிய காலங்களால் பாதிக்கப்பட்டோர் இங்குள்ள சனீஸ்வரர், பைரவர் மற்றும் ஏகபாதருத்ரர் சன்னதிகளில் நல்லெண்ணை தீபம் ஏற்றி அபிஷேக அர்ச்சனை ஆராதனைகள் தங்கள் நட்சத்திரம் வரும் நாளிலோ அல்லது சனிக்கிழமைகளிலோ செய்து வழிபடலாம். ஒன்றும் வசதியில்லாதவர்கள் கூட ஒரு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி கோவிலை 9 முறை வலம் வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.



அம்பிகை ஸ்ரீ நித்யகல்யாணி அகில உலகங்களையும் காத்து அருளும் அன்னையின் பல்வேறு வடிவங்கள் சிவத்தலங்களின் பெருமை பெற்று விளங்குகின்றன. தப்பளாம்புலியூரின் அருள் அன்னை "ஸ்ரீ நித்ய கல்யாணி" பெயரிலேயே திருமண வரம் அருளும் கருணாமூர்த்தியாக விளங்குகிறாள். இவ்வூரில் அன்னை குடிகொண்ட வரலாறு மிகப்பழமையானது. கடையம் பகுதியில் வாழ்ந்த ஒரு சித்தரின் உபாசனாமூர்த்தியான அம்பிகை அவருடன் பெண்குழந்தை வடிவினளாக விளையாடி நின்றாள். மாறாத பக்தி கொண்ட சித்தரும் அன்னைக்கு "கல்யாணி" என்று பெயர் இட்டு அழைத்து அகமகிழ்ந்தார். ஒருமுறை மலையாளதேசத்தில் திருமணம் ஒன்றிற்கு சென்றுவிட்டு திரும்பும்போது குழந்தை கல்யாணி வடிவிலான அன்னை அவருடன் வரவில்லை . மிகவும் வருத்தமுற்ற சித்தர் சிவபெருமானிடம் முறையிட்டு வருந்தியபோது சிவபெருமான் "நின்மகளை யாம் திருமணம் முடித்துவிட்டோம். அவளை தேட வேண்டாம். அவள் இனி நித்ய கல்யாணியாக என்னுடன் கோயில் கொள்ளட்டும் என்று ஆறுதல் அளித்து மறைந்தார். அன்று முதல் சித்தரும் அன்னையை நித்ய கல்யாணி வடிவில் மான்ஸ் உபாசனை செய்து வழிபட ஆரம்பித்தார். அன்னையின் பேரருள் காரணமாக நன்கு ஆன்மீக முதிர்ச்சி அடைந்த சித்தரும் கடையம் விட்டு சிவாலய தரிசனத்திற்கு பல்வேறு திருத்தலங்களுக்கு புறப்பட்டார். அவர் தப்பளாம்புலியூரில் சிறிது காலம் தங்கி வியாக்ரபாதரையும் இதர தெய்வங்களையும் அன்னையுடன் சேர்த்து வழிபட்டு கொண்டிருந்தார். அவரது இறுதிகாலம் நெருங்கியதை உணர்ந்த சித்தர் தான் பலகாலம் உபாசித்த அன்னையை இவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்துவிட்டு சமாதியடைந்துவிட்டார். விக்ரமசோழனால் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இவ்வாலயம் ஆதியில் அம்பிகை சந்நிதி இல்லாமல் தான் இருந்தது. ஆனால் அம்பிகையின் அருளால் ஸ்ரீ நித்யகல்யாணி என்ற திருநாமத்துடன் இங்கு அன்னையின் திருசந்நிதி அமைந்தது. பெயருக்கு ஏற்றாற்போல் கல்யாணம் மற்றும் குழந்தை வரம் பெற்ற பக்தர்கள் இங்கு அநேகம். அம்பிகை இங்கு போகமோட்சப்ரதாயினியாக இருப்பதாக நமது மஹாபெரியவா என்னும் காஞ்சி மாமுனிவரால் உணர்த்தப்பட்டவள். அம்பிகை இகபர சுகங்களை அளித்து எல்லாம் வல்ல மோட்சத்தையும் அளிப்பதாக பெரியவர் கூறினாராம். அன்னைக்கு இங்கு மஞ்சள் காப்பு, மல்லிகை மலர்மலை, லலிதா சகஸ்ரநாம பாராயணம் மிகவும் விசேஷமாகும்.

கடையம் கிராமத்தில் சிலகாலம் தங்கியிருந்த மஹா கவி பாரதியார் இவ்வன்னையின் அருளாலேயே புகழ்பெற்ற "சின்னஞ்சிறு கிளியே" "ஒடிவிளையாடு பாப்பா" போன்ற பாடல்களை எழுதியுள்ளார். மிகப்பெரும் படைப்பான பாஞ்சாலி சபதமும் இந்த அன்னையின் அருளால் எழுதப்பட்டது. மாதங்கியாய், மீனாட்சியாய், மனோன்மணியாய், ஸ்ரீபாலாவாக விளங்கும் ஸ்ரீ நித்ய கல்யாணியை 7 வாரங்கள் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் 7 மஞ்சள் (நல்ல நீண்ட முனை முறியாத) எடுத்து சென்று அன்னையிடம் சமர்பித்து அதை பிறகு வீட்டிற்கு கொண்டுவந்து இழைத்து பூசியோ அல்லது மஞ்சள் நீரைப் பருகியோ வந்தால் பக்தர்களின் கோரிக்கை நிறைவேறும். வெளியூர் பக்தர்கள் 21 மஞ்சளை கொண்டுவந்து வழிபட்டு அதை உபயோகித்து வருவார்களேயானால் அம்மஞ்சள் தீரும் முன் அவர்கள் குறை நிவர்த்தியாகும். கல்யாணவரமும் குழந்தை வரமும் கிடைப்பது உறுதி. அன்னைக்கு வளைகாப்பின் போது வளையல் எடுத்துவந்து ஸமர்பிக்க வேண்டும். அதுபோன்று மல்லிகை மலர்கள் அன்னைக்கு மிகுந்த விருப்பமான மலராகும். ஸகஸ்ரநாம அர்ச்சனையும், மஞ்சள்காப்பும் சிறந்த பரிகாரங்களாகும். அன்னையின் ஸந்நிதியில் மாவிளக்கு இடும் அன்பர்கள் வீட்டில் எல்லா செல்வங்களும் கிடைப்பது உறுதி. ஏகபாத ருத்ரர் இங்குள்ள ஏகபாதருத்ரர் மிகவும் விசேஷமானவர்.

அமாவாசைக்கு முன்பு வரும் சதுர்த்தசி தினம், மற்றும் அமாவாசை தினங்களில் இவரை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும். மாதம்தோறும் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில் அபிஷேக ஆராதனைகள் செய்வது விசேஷம். நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும்.
இவ்வாலயத்தில் வேறு பல விசேஷங்களும் அமைந்துள்ளது. பொதுவாக கோஷ்ட தெய்வங்களில் முதலில் நடன விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர் அல்லது மஹாவிஷ்ணு, பிரும்மா கடைசியாக துர்க்கை ஆகிய வடிவங்களே எழுந்தருளி இருக்கும். தப்பளாம்புலியூரில் பதஞ்சலி, வியாக்கிரபாதர் மற்றும் மண்டூக மகரிஷிக்கு திருநடனக்காட்சி அருளியதால் கோஷ்டத்தில் மிக அற்புத வடிவான ஆனந்த நடராஜமூர்த்தம் சிறந்த வேலைப்பாடுடன் செதுக்கப்பட்டு எல்லா தேவர்களுடனும் ரிஷிகளுடனும் காட்சி கொடுப்பதாக அமைந்துள்ளது. காரைக்கால் அம்மையாரும் இந்த நடனக்காட்சியை கண்டுகளித்ததாக தெரிகிறது. மிக அற்புதமான வடிவம். மாதந்தோறும் வரும் பூசம் நட்சத்திரம் அன்றும் மற்றும் தைப்பூசம் அன்றும் ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வது சிறப்பு.
மேலும் லிங்கோத்பவருக்கு பதிலாக அவ்விடத்தில் அர்த்தாநாரீஸ்வரர் அமைந்துள்ளது. அவருக்கு நேர் எதிராக மகாலஷ்மி சன்னிதியும் அமைந்துள்ளது. மலையாள தேசத்தில் இருந்து வந்தமையால் ஸ்ரீ நித்யகல்யாணியுடன் ஸ்ரீ சாஸ்தாவுக்கும் இங்கு ஸ்தல விருக்ஷம் அருகில் சிறிய சந்நிதி உள்ளது.

மிகச்சிறந்த சனீஸ்வர தலங்களில் ஒன்றான தப்பளாம்புலியூர் கிழக்கு நோக்கி தனி சந்நிதியுடைய சனீஸ்வரபகவானை கொண்டுள்ளது. சனீஸ்வரர் இங்கு அனுக்ரஹ சனீஸ்வரர் என்ற பட்டம் தாங்கியுள்ளார். அவரை திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் வழிபட்டு நற்பலன்கள் பெறுவோமாக. ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டக சனி, சனிதிசை மற்றும் சனிபுக்தி மற்றும் சனீஸ்வரர் ஜாதகத்தில் நீசமடைந்து பலமிழந்து இருக்கும் அன்பர்கள் இங்கு சனீஸ்வர பகவானுக்கு சுத்தமான நல்லெண்ணெய் தீபமேற்றி வன்னியிலையால் அர்ச்சனை செய்து வழி பட சிறந்த மாற்றங்களை காணலாம். எள் முடிச்சு தீபம் ஏற்றக் கூடாது. மாறாக செக்கு நல்லெண்ணெய் தீபம் மண் அகலில் ஏற்றவேண்டும். சுத்தமான பஞ்சு திரி கொண்டு தீபம் ஏற்ற வேண்டும். அன்னதானமும் ஏற்புடையதே, சனிக்கிழமைகளில் எள் அன்னமும், தயிர்சாதமும் நிவேதித்து அன்னதானம் செய்யலாம்.

9. பெரும்புலியூர்

இந்த யாத்திரையை நிறைவு செய்ய மங்களகாரனான செவ்வாயின் பரிகாரத்தலமாக பெரும்புலியூர் தரிசிக்கப்படுகிறது. ஒன்பதாவது புலியூர் ஆன பெரும்புலியூர் திருவையாறு அருகில் அமைந்துள்ளது. எதையும் முடிக்கும்போது மங்கள ம் என்றே அழைப்போம். நவக்கிரகங்களில்
மங்களன் என்று அழைக்கப்படும் செவ்வாய் பரிகாரத்தலம். யாத்திரையை நன்கு முடிக்க மனபலமும் உடல் பலமும் வழங்கும் இறைவன் இங்கும் வியாக்ர புரீசுவரராக வணங்கப்படுகிறார். திருஷ்டி தோஷங்கள் எல்லாம் நீக்கும் திருத்தலம்.
இறைவன் - வியாக்ரபுரீசுவரர்
அம்பிகை - செளந்தர்ய நாயகி



தப்பளாம்புலியூர் ஆலய தோற்றம் போன்று இங்கும் கல்லால் ஆன நடராஜமுர்த்தம் அமைந்தள்ளது. வியாக்ரபாதர் பூசித்த நிறைய திருத்தலங்கள் புலியூர் மற்றும் புலிப்பாக்கம் என்ற பெயர் பெற்றாலும் நவபுலியூரில் மட்டுமே இறைவன் ஸ்வயம்புவாக எழுந்தருளி, திருநடன காட்சி அளித்ததால் இந்த ஒன்பது தலங்களும் நவபுலியூர் ஆயிற்று. நவபுலியூர் யாத்திரையை மேற்கொள்ளும் அன்பர்கள் திருவாழ்வில் மாற்றங்கள் ஏற்படுவது உறுதி.

ஒன்பது புலியூர்களையும் தரிசித்த ஸ்ரீ வியாக்ரபாதரும் ஸ்ரீ பதஞ்சலி முனிவரும் காவிரிக்கரையின் ஓரமாகவே ஸ்ரீரங்கத்தை சென்றடைகிறார்கள். அரங்கனின் விருப்பப்படி ஸ்ரீ பிரம்மாவின் தரிசனமும் அவர்கள் பெறவேண்டும் என்பதால் பிரும்மாவின் அருள் தரும் இடமான திருப்பட்டூரை அடைகிறார்கள். இருவரும் அங்கே ஸ்ரீ பிரும்மபுரீசுவரரையும், ஸ்ரீ பிரம்மாவையும் வணங்கி ஜீவஸமாதியை மேற்கொள்கிறார்கள். எம்பெருமான் ஆடல் அரசனின் திரு ஆணைப்படியும் எம்பெருமான் அரங்கனின் பேரருளாலும் அவர்கள் சிவ விஷ்ணுவாக விளங்கும் பரப்பிரம்ம ஜோதியில் ஐக்கியமாகிவிடுகிறார்கள். ஒரே பரம்பொருளின் இருவேறு வடிவங்களான ஆடல்வல்லவரும் அரங்கனும் ஒன்றாகவே இணைந்து இந்த யாத்திரையை மேற்கொள்ளும் ஜீவன்களை அவர்களின் கர்மவினைகளை அழித்து அருளாசி வழங்கி அவர்களை மோட்ச பாதையில் அழைத்து செல்கிறார்கள். தூய உள்ளன்போடு செய்யப்படும் இந்த யாத்திரை 9 அல்லது 12 நாட்களாவது ஸாத்வீக உணவருந்தி இறைநாமத்தில் மூழ்கி நம்பிக்கையோடு செய்தோமேயானால் நம்முடைய தீர்க்கமுடியாத கர்மவினைகள் முற்றிலும் நீங்கப்பெற்று தடைபட்ட காரியங்கள் யாவும் புதுப்பொலிவோடு நடைபெறும். இந்த யாத்திரையின் கடைசி பகுதியான திருப்பட்டூரை மட்டுமே வணங்கும் பக்தர்கள் பலர் மாற்றத்தை உணரமுடியாமல் போகிறார்கள்.



திருப்பட்டூருக்கு முன்பாக இந்த ஒன்பது திருத்தலங்களையும் தரிசிக்க வேண்டும். திருப்பட்டூருக்கு பிறகு ஸ்ரீரங்கத்தை தரிசித்து நேராக வீடு வந்துவிட வேண்டும். நடுவில் வேறு தலங்களை தரிசிக்க கூடாது. ஏனெனில் இது காசியாத் திரை போன்று மிகபலம் வாய்ந்த யாத்திரை. யாத்திரையின் போது முன்ஜன்ம தீவினைகள் யாவும் கரைக்கப்படவேண்டும் என்று ஒன்பது தலங்களிலும் மனமுருகி வழிபட வேண்டும். நவபுலியூர் யாத்திரை நவக்ரஹங்களின் அருளையும் பெற்றுத்தரும். பக்தர்கள் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டு மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். தடைபட்ட திருமண வரங்கள், குழந்தை வரம், நோயின்மை, தொழில்வளர்ச்சி, கடன்தொல்லை நீங்குதல், குடும்பங்களில் ஏற்படும் சாபங்கள், வேறுவகையான சாபங்கள் எல்லாம் மறைவதை கண் கூடாக பார்க்கலாம். பண்டைய காலங்களில் மக்கள் பரிகாரமாக தேர்ந்தெடுத்தது இதுபோன்ற யாத்திரைகளை மட்டுமே. இது தெரியாமல் நாம்தான் வேறு வழிகளில் முயற்சித்து பலனில்லாமல் ஏமாற்ற மடைகிறோம். எல்லாம் வல்ல ஆடலரசனின் அருளும், அரங்கனின் அருளும் எல்லோரையும் சென்றடைய அவர்களின் திருப்பாதங்களையே பணிந்து நிற்கின்றோம்.







இந்த யாத்திரையை மேற்கொள்ளும் போது நம்மோடு ஸ்ரீ வியாக்ரபாதரும்,ஸ்ரீபதஞ்சலி முனிவரும் துணை நின்று பரம்பொருளின் ஆசியை நமக்கு பெற்றுத்தருவார்கள் என்பது திண்ண ம். நவபுலியூர் தரிசனம் மிகவும் பழமையானதும், மிகுந்த நற்பலன்களை வாரி வழங்குவதுமாகும்.

இந்த யாத்திரை செல்ல குருவிடம் விண்ணப்பம் செய்கின்றோம்.


மீள்பதிவாக:-

திருமாலிருஞ்சோலை தரிசனம் பெறலாமே!  - https://tut-temple.blogspot.com/2019/01/blog-post_27.html


யாத்திரையாம் யாத்திரை பருவதமலை யாத்திரை - https://tut-temple.blogspot.com/2019/01/blog-post_25.html
பரம்பொருளைக் காண பருவத மலை யாத்திரை - https://tut-temple.blogspot.com/2018/12/blog-post_12.html

அடிக்கொரு லிங்கம் அருணாச்சலம், பிடிக்கொரு லிங்கம் பருவத மலை - http://tut-temple.blogspot.com/2018/09/blog-post_21.html

வெள்ளியங்கிரி ஈசன் தந்த தெம்பே போதும் - http://tut-temple.blogspot.com/2018/07/blog-post_28.html

வெள்ளியங்கிரி ஈசனே போற்றி ! - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_58.html


வெள்ளியங்கிரி ஆண்டவரே துணை - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_81.html

ஈர்த்தெம்மை ஆட்கொண்ட எந்தை பெருமாளே! - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_11.html

வெள்ளியங்கிரி யாத்திரை -2018 - http://tut-temple.blogspot.in/2018/04/2018.html

அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே... - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_47.html

தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - http://tut-temple.blogspot.com/2018/06/1.html

வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post.html

இப்பிறப்பில் உன்னைக் காண்கின்றோம் - வெள்ளியங்கிரி ஈசா ! - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_51.html

வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_3.html

வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_28.html

இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_15.html

பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_19.html

மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_13.html

இம்மாத மலை தரிசனம் - ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_15.html

குழந்தை வரம் அருளும் ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - தொடர்ச்சி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_19.html

No comments:

Post a Comment