Tuesday, January 9, 2018

தீபங்கள் பேசும் - கார்த்திகை தீப தொடர்பதிவு (3)


இன்றைய பதிவில் கார்த்திகை தீபத்தின் தொடர்பதிவாய் காண இருக்கின்றோம். சென்ற பதிவில்
குன்றத்தூர் முருகன் கோயிலில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபத்தோடு முடித்து இருந்தோம். தீபத்திற்கு எண்ணெய் கொடுக்க முருகன் கோயிலுக்கு சென்றோம். ஆனால் நடந்தது வேறு, தீப தரிசனம் கண்டோம், முதன்முதலாய் அதுவும் முருகன் அருள் முன்னிற்க ! பின்னர் கீழே இறங்கி வந்து கந்தலீஸ்வரர் கோயில் நோக்கி சென்றோம்.

பல ஏற்பாடுகளை தீபம், எண்ணெய் ஊற்றல் என நம் மகளிர் அணியினர் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தனர்.

அப்படியே கோயிலுக்கு வந்து  பார்க்கும் போது தான் தெரிந்தது - கார்த்திகை தீபம் என்பது சாதாரண தீபம் அல்ல என்று. கோயில் முழுதும் தீபங்களே..ஒவ்வொரு தீபமும் நம்முடன் பேசியதை உணர முடிந்தது.கண்களின் பயன் அன்று தான் உணர்ந்தோம் என்று கூட சொல்லலாம். ஒளி வெள்ளம். நம்முள் புத்துணர்வு தந்தது, அண்ணாமலையார் தரிசனத்தில் இனிமேல் கிரிவலத்தோடு தீபம் ஏற்றி வழிபடுக என்று அங்கே நமக்கு கந்தலீஸ்வரர் ஆணை இட்டார்.

ஒரே ஒரு தீபம் ஏற்றினாலே , அங்கே உள்ள இருள் நீங்கி ஒளி பிறக்கும், மேலும் ஒவ்வொரு தீபமும் மற்றொரு தீபத்தின் தூண்டுகோலாகும். அது போல் நம் வாழ்வில் ஒளி பிறக்க, கார்த்தியை தீபம் ஏற்றுங்கள். ரமணர் கார்த்திகை தீபத்தை பற்றி மிகப் பெருமையாகப் பேசுவார் என்று அறிகின்றோம். அப்படி என்றால் நீங்களே உணருங்கள். ஒரு தீபமே ஒளியின் ஆற்றல் தருகின்றது என்றால், அன்று நாம் ஆலயம் முழுதும் ஏற்றிய தீபம் இருக்கின்றதே.. அனைவரும் இன்புற்று வாழ கந்தலீஸ்வரர் துணை செய்வார்.

தீபம் பஞ்ச பூத தத்துவத்தை உள்ளடக்கியது. நிலத்தில் கிடைக்கின்ற களிமண்ணைக் கொண்டு  நீர் பூதமாகிய எண்ணையை ஊற்றி, நெருப்பு பூதமாக திரியில் ஒளி ஏற்றி, காற்று பூதம் மற்றும் விண் பூத துணை கொண்டு தீபங்கள் ஏற்றப்படுகிறது. அதனால் தான் கோயிலுக்கு சென்றால் தீபம் ஏற்றுவது என்பது வழக்கமான ஒன்று. கூடியவரை சுத்தமான பசு நெய்யில், பஞ்சு திரி போட்டு உங்களால் முடிந்த எண்ணிக்கையில் தீபம் ஏற்றுங்கள். எலுமிச்சை ,பூசணி போன்ற தீபங்களை இது போன்ற நாட்களில் ஏற்றாதீர்கள், அப்படி ஏற்றுவதாயின் கோயில் குருக்களிடம் கேட்டு ,பின்பு ஏற்றவும்.

 
நாம் நினைக்கும் செயல்கள் நடக்கும் என்பதற்கு இந்த தீப அனுபவமே போதும். இங்கே உழவாரப் பணி செய்யும் போது , அன்று காலையில் விட்டுவிட்டு மழை பெய்தது. ஆங்..உழவாரப்பணி அனுபவம் விரைவில் தனிப் பதிவாக வழங்குகின்றோம்.அதுவரை பொறுத்தருள்க. அன்றைய தினம் பணியில், அறுபத்து மூவர் சன்னிதியை சுத்தம் செய்தோம். அப்படியே ஒவ்வொரு சந்நிதிக்கும் விளக்கேற்றினால் எப்படி இருக்கும் என்று திருமதி.பரிமளம் அவர்கள் விரும்பி உள்ளார்கள்.இதோ கார்த்திகை மாதத்தில், நினைப்பது நடந்து கொண்டிருக்கின்றது. எல்லாம் அவன் செயல் அன்றோ !அறுபத்து மூவர் ஒவ்வொருவரும் ஜொலித்துக் கொண்டிருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்களின் கருணை மழையை சிறிது உணர்ந்தோம். அடியார்க்கு அடியாராக விளங்கும் அறுபத்து மூவருக்கு தீபம் ஏற்ற வேண்டும் என்றால் நாம் எத்தகு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று மனதில் நினைத்தோம். நாம் கண்ட குன்றத்தூர் குகன் தீப தரிசனம், நம் TUT  மகளிர் குழுவிற்கும் கிடைக்க பிரார்த்தித்து விட்டு, வேண்ட,குன்றத்தூர் முருகன் கோயில் நோக்கி சென்றோம்.
 மேலே உற்சவர் உலா வந்து கொண்டிருந்தார், சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா ! என்று மனதில் முருகனை  வேண்டிவிட்டு, மீண்டுமொரு முறை தீபம் பார்க்க சென்றோம்.


கற்கள் நிறைந்த பாதை, தீப திருவிழாவின் பொருட்டு செப்பனிட்டு இருந்தார்கள், மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் தெய்வ தரிசனம் பெற்றுக் கொண்டிருந்தோம் என்பதே உண்மை. கண்ணில் ஒற்றிக் கொண்டோம், மனதில் நிறைத்துக் கொண்டோம். கந்தலீஸ்வரர் கோயிலில் மட்டும் தீபம் பார்க்க வந்தோம். சும்மா விடுவாரா நம் சுப்பிரமணியர். தந்தையின் கோயிலிலும், பிள்ளையின் கோயிலிலும் தீப தரிசனம், தெய்வ தரிசனம் அதுவும் திவ்ய தரிசனம்.
குன்றத்தூர் முருகன் கோயிலில் சில படங்கள் எடுத்துவிட்டு, மீண்டும் கீழே இறங்கி, கந்தலீஸ்வரர் தரிசனம் பெற கீழிறங்கினோம். குன்றத்தூர் அடிவாரம் , முருகனின் அருளினால் நிறைந்து இருந்தது.


கந்தலீஸ்வரரை தரிசிக்கும் முன்னர், திருஊரகப் பெருமாளை தரிசித்து விட்டு, குருக்களிடம் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ,உழவார செய்ய அனுமதி கொடுங்கள் என்று கேட்டோம்.தாராளமாக செய்யுங்கள் என்று வாய்ப்பு கொடுத்தார். அந்த உழவாரமும் தித்திப்பாக நிறைவு பெற்றது. விரைவில் தனிப்பதிவாக அளிக்கின்றோம். கந்தலீஸ்வரர் சென்று அருள் பெற்று, நாம் திருஅண்ணாமலை நோக்கி சென்றோம்.

TUT குழுமத்தின் உடனான முதல் தீபம், அன்பை அள்ளி வழங்கிக் கொண்டு வருகின்றது, அன்போடு ஆற்றலும், நாம் சேவை செய்ய, தொட்டது துலங்க என்று TUT பயணம் சென்று கொண்டிருக்கின்றது என்றால் அது குன்றத்தூர் மகிமை என்பதை நாம் உணர்கின்றோம்.

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌