Subscribe

BREAKING NEWS

18 January 2018

ஸ்ரீமத் சுரக்காய சுவாமியே நமஹ


நம் தளத்தில் சுரைக்காய் சித்தர் பற்றி பேசியுள்ளோம். ஆனால் மீண்டும் ஒருமுறை இதோ நம் தாத்தாவைப் பற்றி இங்கே பேச இருக்கின்றோம்.  சுகம் அளிப்பதில் ஸ்ரீ சுரைக்காய் சித்தர் வல்லவர். மீண்டும் மீண்டும் சித்தர்களின் /மகான்களின் பெருமை பற்றி பேசுவது நமக்கு பேரின்பமே. இன்பம் கடந்து பேரின்பம் பெற, இதோ சுரைக்காய் தாத்தா பற்றி அறிவோம்.


உலகத்தின் பல்வேறு பாகங்களில் பக்திநெறியைப் பரப்பி யோக சக்தியை பெருக்கும் நோக்கத்தில் இறைவன் பல்வேறு காலகட்டங்களில் தன்னை வெளிப்படுத்துவார். அத்தகைய வெளிப்பாடுகள் வடிவங்களே சித்தர்களாகவும், மகான்களாகவும், யோகிகளாகவும் வந்து உதிப்பார்கள். அவ்வகை சித்த சொரூபி தான் இந்த பதிவின் நாயகராகிய ஸ்ரீ சுரைக்காய் சுவாமிகள்.




இவரின் பிறந்த இடம், குலம் , பெற்றோர் போன்ற விபரங்கள் ஆதாரப் பூர்வமாக கிடைக்கவில்லை. ஆனால் இவர் ஆந்திர மாநிலம் புத்தூருக்கு அருகில் உள்ள நாராயணவனம் என்ற ஊரில் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார். இத்திருத்தலம் தற்போது நாராயணவனம் என்று அழைக்கப்படுகின்றது.இங்கு கல்யாண வெங்கடேச பெருமாள் ஆலயம் ஒன்று உள்ளது. இங்கு தான் பத்மாவதி தாயாரை திருமலை வெங்கடேசர் திருமணம் செய்ததாக புராண வரலாறு கூறுகின்றது.இவ்வூரில் பராசரேஸ்வரர் கோயில் எனும் சிவத்தலம் உண்டு. இங்கே இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் கைலாச கோணை எனும் நீர்வீழ்ச்சியும் உள்ளது.





ஸ்ரீ சுரைக்காய் சுவாமிகள் எத்தனை  ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது சரியாகத் தெரியவில்லை.எனினும் அவரே, ஒரு சூழ்நிலையில் திருவள்ளுர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் ஆலயம் அமைக்கப் பட்டபோதும், திருத்தணி முருகன் கோயில் அமைக்கப் பட்டபோதும், தாம் காடுகளில் சுற்றி திரிந்து கொண்டதாக சொல்லி உள்ளார். 1770ம் ஆண்டில் புதூரில் ஒரு சத்திரம் கட்ட அவர் ஆசி பெற்றதாக ஒரு குறிப்பு உள்ளது. மேடம் ப்ளாவட்ஸ்க்கி & கர்னல் ஆலகாட் போன்ற ஆங்கிலேயர்களும்  இவரிடம் ஆசி பெற்றதாக குறிப்பு உள்ளது.

பல நூறாண்டுகளாக அப்பகுதியில் உள்ள பாட்டன், தாத்தா, பேரன், கொள்ளுப்பேரன் என வழிவழியாக சுரைக்காய் தாத்தா என இவரை அழைத்ததாக சொல்லப் படுகின்றது. எனவே, இவர் சந்தித்த நான்கைந்து தலைமுறையினருக்கு, வயோதிக அதாவது தாத்தா வடிவிலேயே இவர் அருள் காட்சி கொடுத்துளார்கள். இவரை நேரில் சந்தித்த ராவ்பகதூர், இன்ஜினியர் ரத்தினசபாபதி பிள்ளை போன்றோர் கூற்றுப் படி, இவர் பொன் நிறம் உடையவராகவும், பேரறிவும், திருவருளும் ஒருங்கே வீசும் கண்கள் கொண்டவராகவும், சற்று உயரம் குறைந்தவராகவும் இருந்துள்ளார். கையில் எப்போதும் சுரைக்குடுவைகளை காணப்பட்டதால் ,இவர் சுரைக்காய் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். சுவாமிகள் உபயோகித்த சுரைக்குடுவைகள் இன்றும் காட்சிப் பொருளாக அவரின் ஜீவ ஆலயத்தில் உள்ளது.





சுவாமிகளின் அருகில் எப்போதும் இரண்டு பைரவர்கள் இருக்கும். நீங்களே அதனைக் கண்கூடாய்க் காணலாம். இவர் ஒருமுறை சென்னைக்கு வந்துள்ளார். நாராயண வனத்தை சுற்றிலும், கால்நடையாக சுற்றியுள்ளார். சுவாமிகளை முதன் முதலாய் ராவ்பகதூர், இன்ஜினியர் ரத்தினசபாபதி பிள்ளை,செங்கல்வராய முதலியார் சந்தித்து அவருடைய அனுபவங்களை கூற தொடங்கினார்கள். இதற்கடுத்து தான், மக்கள் சுவாமிகளை சந்திக்க கூட்டம் கூட்டமாக சென்று உள்ளார்கள். 1893 ம் ஆண்டு ரத்தினசபாபதி பிள்ளை அவர்களின் மகளின் திருமணத்திற்காக சென்னை வந்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.


சுவாமிகள் பார்ப்பதற்கு வெளித்தோற்றத்தில் ஆண்டி போல் காணப்பட்டார். கொடிய தொழுநோய், ராஜ பிளவை போன்ற நோய்களுக்கு சாதாரண வேப்பிலை, மஞ்சள் போன்றவற்றைக் கொண்டே போக்கிவிடுவார். இவரது அருட்பார்வையால் நோயுற்றோர் பலர் ஆரோக்கியமும், பில்லி, சூனியம் போன்ற பாதிப்புக்கு உள்ளானோர் ஆன்ம சுத்தியும் பெற்றுள்ளனர்.  சுவாமிகளின் சந்நிதியில் அவர் திருவுருவம் முன்பு அமைக்கப்பட்டுள்ள அக்னி குண்டத்தில் அருகில் அமர்ந்து, அன்று முதல் இன்று வரை சுகம் பெற்றோர் பல்லாயிரம் ஆவார்கள். இதோ அந்த அக்னிக் குண்டத்தின் காட்சி உங்களுக்காக !


இவரது திருமுன் வரும் மனிதர் மற்றும் விலங்குகள் இவற்றின் முற்கால வாழ்க்கை, தற்கால நிலை மற்றும் எதிர்காலம் போன்றவை திரைப்படம் போல் சுவாமிகளுக்கு தெரியும், அதற்கேற்ப வந்தவர்களின் உடல், மன நோய் தீர்த்து அவர்களுக்கு ஆன்மிகம் உணர்த்தியமை இவரின் தனிச் சிறப்பாகும். பாமரர் முதல் பட்டம் பெற்றவர்கள் வரை இவரின் அடியார்களாக உளார்கள்.





தம்மை படிக்காதவராக காட்டிக் கொண்ட இவருக்கு வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் என அனைத்தும் அத்துப்படி. இவர் பொதுவாக பிறருக்கு உதவுதல், அன்பு காட்டுதல், பொதுநலம் கொண்டு வாழ்தல் என தன் வாழ்க்கையின்மூலம்  உணர்த்தியுள்ளார்.இவரை நம்பினோர் வெறுமனே திரும்பியதில்லை, அண்டினோரை கைவிட்டதில்லை. மரணத்தின் விளிம்பு வரை சென்றவர்கள் இன்று வாழ்வு பெற்று உள்ளார்கள், 1902ம் ஆண்டு ஆடி மாதம் அஸ்த நட்சித்திரம், கருட பஞ்சமியன்று சுமாய்கள் மகா சமாதி அடைந்தார்கள்.

சுவாமிகளின் ஆலயத்தில் மாதந்தோறும் பௌர்ணமி, அமாவாசை, கார்த்திகை நட்சத்திரம் போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகளும் ,அன்னதானம் நடைபெற்று வருகின்றது.

இங்கு வரும் ஒவ்வொருவரும் பூர்வ ஜென்ம பக்தியால் ஆட்கொள்ளப்படுகின்றார்கள். சுவாமிகள் கண்கள் பக்தர்களை நேரிடையாக பார்ப்பது நமக்கு உணர்த்தப்படும் செய்தி ஆகும். இங்கு வந்து சென்றவர்களின் கோரிக்கைகள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் உடனே நிறைவேறி வருகின்றது. இதனால் நாளுக்கு நாள் அடியார் கூட்டம் பெருகி வருகின்றது. இவரது சீடர்களாக துறவற சீடர்கள் பலர், இல்லற சீடர்களும் பற்பலர். சுவாமியின் நேரிடையான சீடரான மங்கம்மா அவர்களும் சுவாமிகளைப் போன்றே ஆற்றல், அருள் பெற்றுத் திகழ்ந்துளார்கள். ஐவரும் 1930ம் ஆண்டு புரட்டாசி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியன்று சமாதி அடைந்துள்ளார். இவரது ஜீவ ஒளி ஸ்ரீ சுரைக்காய் சித்தர் கோயிலின் வளாகத்திலேயே உள்ளது.



தாத்தாவின் அருள் பெற விரும்புவோர், நாராயணவனம் சென்று வழிபாடு செய்தால் அனைத்து கவலைகளும் நீங்கி துன்பங்களும் நீங்கி, வாழ்வில் வளம் பெறுவர் என்பது திண்ணம்.








ஸ்ரீமத்  சுரக்காய சுவாமியே நமஹ 

அடுத்து வரும் பதிவுகளில் ஸ்ரீ சுரைக்காய் தாத்தாவின் போற்றிகளை போற்றுவோம்.

முந்தைய பதிவிற்கு :-

சுகமளிக்கும் சுரைக்காய் சித்தர் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_22.html



No comments:

Post a Comment