Subscribe

BREAKING NEWS

22 January 2018

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (7)


அன்பார்ந்த மெய்யன்பர்களே..

தளத்தின் பதிவுகளில் சற்று இடைவெளி ஏற்பட்டுள்ளது. சென்ற வாரம் சபரி மலை சென்று ஐயன் ஐயப்பன் தரிசனம் பெற்றோம். முதன் முதலாய் பெருவழி பயணம். அடுத்த ஆண்டு பயணத்தை சிறப்பாக தர முயற்சிக்கின்றோம்.  இதோ மீண்டும் வாழ்வாங்கு வாழ தொடர்பதிவில் தங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். இந்த தொடர்பதிவில் பக்தி,யோகம் என்று சகலவிதமான கருத்துக்களை உள்வாங்கி வருகின்றோம். நாம் எதையும் தீர்மானிப்பதில்லை. அனைத்தும் அவன் அருளாலே தான் நடைபெற்று வருகின்றது. இந்த முறை ஒரு யதார்த்தமான கேள்வி பதில் பதிவை திரு.ராம் மனோகர் அவர்களிடமிருந்து பெற்று தர விரும்புகின்றோம்.

நண்பர் - எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சறுக்குகிறது. எதையெடுத்தாலும் தோல்வி. நான் எவ்வளவு கவனமாக இருந்தாலும் இதுதான் தொடர் கதையாக இருக்கிறது. ஒரு வேளை என் கவனத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருக்குமோ என்று தோன்றுகிறது. நான் மீள ஒரு வழி சொல்லுங்கள்.

இப்படியொரு கேள்விக்கு இங்கே விவேகானந்தரை தரிசனம் பெறுவோம்.




இராம் மனோகர் - என் தாயார் அடிக்கடி சொலவார்கள் ''வாழ்க்கை என்பது வழுக்குப் பாறையில் சுளுக்குக் காலால் நடப்பதைப் போன்றது'' என்று. நான் சொல்வேன் ''நீங்கள் ஏன் அப்படி நினைக்கிறீர்கள் ? வாழ்க்கை என்பது ஒரு பூந்தோட்டம் என்று நினைத்துப் பாருங்களேன் !!!'' என்று. இதை ஏன் சொல்கிறேன் என்றால், வாழ்க்கையைப் பற்றிய நம் கண்ணோட்டம் எப்படி இருக்கின்றதோ, அதற்கு ஏற்றார் போலவேதான் நம் மனோபாவமும் இருக்கும். தோல்வி வந்து விடுமோ, தோல்வி வந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி கவனமாக இருப்பது வேறு, வெற்றியை அடைந்தே தீர வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் நாம் கவனமாக இருப்பது வேறு. இரண்டிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. இதுதான் இங்கே நம் மனோபாவத்திற்கும், எழுகின்ற எண்ணங்களுக்கும், செயல்களுக்கும், பேசுகின்ற வார்த்தைகளுக்கும் அடித்தளமாக அமைகின்றது. எதை நாம் உறுதியாக நம்புகிறோமோ, அதைத்தான் நாம் அடைவோம். எப்பொழுது பார்த்தாலும் தோல்வி பயம் உள்ளத்தில் நிலை பெற்றிருப்பவன், எப்படி வெற்றியைப் பெற முடியும் ? 


வெற்றி மட்டுமே நம் சிந்தையில் நிலைத்திருக்க வேண்டும். வெற்றி மட்டுமே நம் இலக்காக இருக்க வேண்டும். தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு வேளை வெற்றி கிடைக்காமல் போகலாம். ஆனால், அது தோல்வியல்ல. வெற்றியை நாம் நெருங்கி விட்டோம் என்பதற்கான அறிகுறி அவ்வளவுதான். வீரத் துறவி விவேகானந்தர் அவர்கள் தனது ''பவர் ஆப் தி மைண்ட்'' என்ற கட்டுரையில் இதைப் பற்றி அழகாக எடுத்துரைப்பார். ''ஒரு இலட்சியத்தை மனதில் எடுத்துக் கொள். அதையே உன் வாழ்வின் நோக்கமாகக் கொள். உன் சிந்தனையிலும், கனவிலும், செயலிலும் அது எப்பொழுதும் உயிர்ப்புடன் இருக்கட்டும். உன் மூளை, தசை, நாடி, நரம்புகள் அனைத்தும் அதை நிறைவேற்றும் வேகத்துடன் செயல்படட்டும். உன்னுடைய நோக்கம் அது மட்டுமே. மற்ற அனைத்தையும் மறந்து விடு.
தங்களுடைய குறிக்கோள் ஒன்றைத் தவிர வேறு எதையும் பற்றி சிந்திக்காதவர்கள்தான் சாதனையாளர்களாக இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களால்தான் கருத்தூன்றிய முயற்சி, ஒரு முகமாகக் குவிந்த முனைப்பு, சக்திகளை எல்லாம் ஒருங்கிணைக்கும் ஆற்றல் இவைகளையெல்லாம் பெற முடிந்திருக்கிறது. மிருகங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ? மிருகங்களுக்கு வெறும் வலிமை மட்டுமே இருக்கின்றது. நமக்குத்தான் சிந்தனைத் திண்மையோடு கூடிய செயல் வேகம் இருக்கிறது. அதனால்தான் மிகப் பெரிய மிருகத்தைக் கூட ஒரு மனிதனால் அடக்கி ஆள முடிகின்றது. ஒரு சாதனையாளருக்கும், சாதாரண மனிதனுக்கும் உள்ள வேறுபாடு இந்த சிந்தனை ஆற்றல்தானே தவிர வேறு ஒன்றுமில்லை. எனவே இந்த சிந்தனை ஆற்றலைச் சிதற விடாதீர்கள்.

சிந்தனை ஆற்றலை வலுப்படுத்துங்கள். அதற்காக தியானம் செய்யுங்கள். தியானம் அதற்குப் பேருதவியாக இருக்கும். தியானத்தால் நீங்கள் சிந்திப்பதைச் செயல்படுத்தும் துணிவும், மனவலிமையும் கிடைக்கும். உங்களது எண்ணங்களில், காரியங்களில் தூய்மை பிறக்கும். அது இறுதியில் உங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தரும்'' என்பார். பாருங்கள் இதை விட நான் என்ன சொல்லி விடப் போகிறேன் ? கண்ணோட்டத்தை மாற்றுங்கள், கொண்ட இலட்சியத்தில் உறுதியாக நில்லுங்கள், முனைப்புடன் ஒருமுகமாகச் செயல்படுங்கள். வெற்றி உங்கள் கைகளில். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.




 அடுத்த கேள்வியில் சற்று ஆரோக்கியம் பற்றி காணலாம்.

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே; அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே;
நண்பர் - தூக்கமில்லாமல் அவதிப்படுகிறேன். எவ்வளவு நேரம் தூங்குவது நல்லது ? குறைந்த நேரம் தூங்குவதுதான் நல்லது என்று வள்ளல் பெருமான் சொல்லியிருக்கிறாராமே ? ஆனால் எனக்கென்னவோ இரவில் தூக்கம் வருவதில்லை. பகலில் நேரம் கெட்ட நேரத்தில் தூக்கம் வருகிறது. என்ன செய்வது ?
இராம் மனோகர் - வள்ளல் பெருமான் சொல்வது சன்மார்க்க அன்பர்களுக்கு. அவர் சொல்கிறபடி நடக்கின்றவர்களுக்கு ஒரு மணி நேர தூக்கமே போதுமானது என்று சொல்வார்கள். ஆனால், நம் நிலைமை வேறு. நமக்கு குறைந்த பட்சம் ஆறு மணி நேர தூக்கம் இன்றியமையாதது. நான் சொல்வது பெரியவர்களுக்கு, குழந்தைகளுக்கு அல்ல. வள்ளுவர் மரணத்தையும் தூக்கத்தையும் ஒப்பிட்டுப் பேசுவார். மரணத்தில் ஜீவன் எப்படி இந்த உடலைப் புதுப்பித்துக் கொள்கிறதோ, அது போலவே தூக்கத்திலும் உடல் புதுப்பிக்கப்படுகிறது. பகல் முழுவதும் உடலின் இயக்கத்தால் இறந்து போன செல்கள் உயிர்ப்பிக்கப்படுகின்றன. தூக்கத்தின் பொழுது தன்னிச்சை நரம்பு மண்டலத்தின் எந்த விதத் தடைகளுமில்லாத காரணத்தால் அனிச்சை நரம்பு மண்டலம் சீராக இயங்கி இந்த காரியங்களைச் செவ்வனே செய்கிறது.


நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான சில சுரப்பு நீர்கள் மூளையில் உள்ள நாளமிலாச் சுரப்பிகளில் இருந்து சுரக்கின்றன. இவை அதிகாலையில் தன் சுரப்பை தீவிரப்படுத்துகின்றன. மதிய வேளையில் மிக அதிகப்படியாக சுரக்கின்றன. மாலை வேளைகளில் படிப்படியாகக் குறைந்து, இரவில் சுரப்பு மிகவும் குறைவாகவே நிகழும். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், இந்த சுரப்பு அதிகரிக்கும் அளவு நாம் நம் உழைப்பையும் அதிகப்படுத்த வேண்டும். சுரப்பு குறையும் பொழுது தூங்கி விட வேண்டும். மாறாக நாம் இந்த சுரப்பு அதிகமாகும் நேரத்தில் தூங்கினாலோ அல்லது சுரப்பு குறைவாக உள்ள நேரத்தில் விழித்திருந்து இயங்கினாலோ நம் மொத்த நரம்பு மண்டலமும் பாதிப்படைந்து, உடல் நலிவடையும். அதனால்தான் பகலில் தூங்குவது நல்லதல்ல என்று சொல்கிறார்கள்.


பகலில் யாருக்கு தூக்கம் வரும் தெரியுமா ? இரவில் சரியாகத் தூங்காதவர்களுக்கு, மூளை அல்லது உடல் சோர்வடைபவர்களுக்கு, நோயாளிகளுக்கு, மது அருந்துபவர்களுக்கு, புகை பிடிப்பவர்களுக்கு இது போன்றவர்களுக்குதான் பகலில் தூக்கம் வரும். பகலில் தூங்குபவர்களுக்கும், தேவையான உழைப்பு இல்லாதவர்களுக்கும்தான் இரவில் தூக்கம் பாதிக்கப்படுகிறது. மேலும் பகலில் தூங்கினால் உடலில் கபம் அதிகமாகும். இதனால் இரத்த ஓட்டம், காற்றோட்டம், உயிரோட்டம் தடைபடும். இரவு பதினோறு மணிக்கு மேல் தூங்கப் போனால், அது பித்தம் ஆதிக்கம் செலுத்தும் நேரம். எனவே கண்டிப்பாக தூக்கம் பாதிக்கப்படும். எனவே சூரிய அஸ்தமனத்தில் இருந்து நான்கு மணி நேரம் ஆகும் வரையில் தூங்கச் செல்வதுதான் சரியான முறையாகும்.


சரியாகத் தூங்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நரம்பு மண்டலம் பாதிப்படையும். ஞாபக சக்தி குறைந்து போகும். கண்கள் பாதிப்படையும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். பசியெடுக்காது, ஜீரணக் கருவிகள் கெடும், மலச்சிக்கல், இரத்த அழுத்தத்தில் குளறுபடிகள் ஏற்படும், பக்கவாதம், மாரடைப்பு, இரத்த சர்க்கரை அதிகமாதல் போன்ற தொல்லைகள் ஏற்படும். மேலும் தேவையற்ற பயம், மனக்குழப்பம், கோபம் ஏற்படும். உடலில் உள் சூடு அதிகரித்து மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும். எனவே உறக்கத்தை முறைப்படுத்தி, காலந் தவறாமையைக் கடைபிடிப்பது அவசியாமாகும். தூக்கம் இயல்பாக வர வேண்டும். தூக்க மாத்திரைகள் போடும் பழக்கமெல்லாம் நல்லதல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே இரவு ஒன்பது அல்லது பத்து மணிக்கு படுக்கைக்குச் செல்வதும், காலையில் ஐந்து மணிக்கு எழுந்து விடுவதும் நல்ல பழக்கமாகும்.




காலை எழுந்து, காலக்கடன்களை முடித்தவுடன் நடைப் பயிற்சி, உடற் பயிற்சிகள் செய்வதால் அட்ரீனல் சுரப்பி சீராக இயங்கும். இதனால் மன அழுத்தம் குறைவதோடு, இரவில் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். தூங்கப் போவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே உழைப்பை நிறுத்திக் கொள்ள வேண்டும். அது போலவே தூங்குவதற்கு முன்பு உடற் பயிற்சிகள் செய்வதும் தூக்கத்தை பாதிக்கும். தூங்கும் முன் செல் போன் பேசுவது கூட தூக்கத்தை பாதிக்கும். வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு படுக்கைக்குப் போனால் தூக்கம் வராது. குறைந்தது சாப்பிட்டு இரண்டு மணி நேரமாவது ஆகியிருப்பது நல்லது. தூங்கும் அறை இருட்டாக இருப்பது நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் மங்கிய வெளிச்சம் இருக்கலாம். படுக்கைக்குப் போவதற்கு முன் காப்பி, டீ போன்ற பானங்களைத் தவிர்த்து விடுவது நல்லது.
தூங்கச் செல்வதற்கு முன் பாதங்களை வெதுவெதுப்பான நீரில் ஒரு ஐந்து நிமிடம் வைத்து விட்டு, பிறகு நன்றாகக் காலை துடைத்து விட்டு படுக்கப் போனால் தூக்கம் இயல்பாக வரும். தியானம் செய்பவர்களுக்கு இரவில் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். படுக்கைக்குச் சென்று படுத்தாலும் தூக்கம் வரவில்லையா ? கவலை வேண்டாம். மனதை ஆக்கினையில் அதாவது புருவ மத்தியில் வைத்துக் கொள்ளுங்கள். ஒன்று, இரண்டு என்று நூறு வரை எண்ணுங்கள், தூக்கம் வந்து விடும். ஆரம்பத்தில் நூறு வரை எண்ணியும் தூக்கம் வரவில்லை என்றால் பரவாயில்லை. மீண்டும் ஒரு முறை எண்ணுங்கள் தூக்கம் வந்து விடும். பழக்கம் ஆகும் பொழுது ஐம்பது எண்ணுவதற்கு முன்பே தூக்கம் வந்து விடும். படுக்கை கரடு முரடாக இல்லாமல் இருப்பதுவும் நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். எனவே தூங்குவதற்கு நேரம் ஒதுக்குங்கள். அதுவும் காலந்தவறாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். நல்ல தூக்கத்தால் மனமும், உடலும் புத்துணர்வு பெறும். மனமும், உடலும் நன்றாக இருந்தால் இயல்பாகவே நல்ல தூக்கமும் ஏற்படும்.


முந்தைய பதிவுகளுக்கு :-

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (6) - http://tut-temple.blogspot.in/2017/12/6.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (5) - http://tut-temple.blogspot.in/2017/11/5.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (4) - https://tut-temple.blogspot.in/2017/10/4.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (3) - https://tut-temple.blogspot.in/2017/09/3.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (2) - http://tut-temple.blogspot.in/2017/08/2.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - http://tut-temple.blogspot.in/2017/07/1.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html

No comments:

Post a Comment