Subscribe

BREAKING NEWS

07 August 2018

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு (10/08/2018)

அடியார் பெருமக்களே...

அனைவருக்கும் வணக்கம். இப்போது ஆடிக் கிருத்திகை வழிபாடு முடித்தோம். இதோ அடுத்து ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு பற்றிய அறிவிப்பை இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். ஆடி மாதம் முழுதும் பற்பல விசேங்கள் அடங்கி உள்ளது. ஆடி அமாவாசை (11/08/2018),ஆடிப்பூரம் (13/08/2018) , நாக சதுர்த்தி (14/08/2018),கருட பஞ்சமி (15/08/2018) என சிறப்பு வழிபாடு நாட்கள் நமக்கு உள்ளது. இதில் நாம் ஆடி அமாவாசை அன்று சிறப்பு வழிபாடு செய்ய இருக்கின்றோம்.

பதிவின் தலைப்பைப் பார்க்கும் போது, தீபங்கள்  என்றாலே கார்த்திகை மாதம் என்று தான் எண்ணத் தொடங்கும்.ஆனால் நாம் தினசரி தீப வழிபாட்டை மேற்கொள்ளும் போது, நமக்கு தீபங்கள் தினமும் பேசத் தொடங்கும்.இது தான் அருட்பெருஞ்சோதி நிலை. இந்த அருட்பெருஞ்சோதி நம்மை தனிப்பெருங்கருணை என்ற நிலையைக் காட்டி, நம்மை அது நோக்கி  பயணிக்க செய்யும்.இது ஒருபுறம் இருக்கட்டும். வரும் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு  என்று நாம் என்ன வழிபாடு செய்ய இருக்கின்றோம். தீபங்கள் என்று வேறு கூறி உள்ளோம். கண்டு பிடித்து விடீர்களா? ஆம்..அது தான் வழிபாட்டில் மிக மிக உயர்ந்த வழிபாடான "மோட்ச தீப வழிபாடு" ஆகும்.

இருளைப் பழிப்பதை விட, ஒரு விளக்கை ஏற்றுவது நலம் என்பதை அறிந்தவர்கள் நம் முன்னோர்கள். அதனால் தான் நம் வாழ்வில், ஒளி தரும் விளக்குக்கு தனி இடமுண்டு. குத்து விளக்கு ஏற்றாமல், நல்ல காரியங்கள் நம்மில் நடப்பதில்லை. தீப ஒளித் திருநாளுக்குப் பின், தீபத்தைக் கொண்டு மாதமாக வரும் கார்த்திகை, ஒளியின் காலம்.வாழ்வின் இருளை விளக்கி ஒளிரச் செய்வதனால் என்னவோ, இதற்கு விளக்கு எனும் பெயர் வந்ததாக கூறப்படுவதுண்டு. இருளை விலக்கி, ஒளியை விளக்குவது தான் விளக்கு.




பொதுவாகவே தீப வழிபாடு என்பது மிக மிக உயர்ந்த வழிபாடு ஆகும். விளக்கேற்றி வழிபாடு செய்தால்

நினைத்த காரியம் நடக்கும்
குடும்ப ஒற்றுமை ஓங்கும்
புத்திரதோஷம் நீங்கும்
சகல நன்மைகளும்,ஐஸ்வர்யமும் பெருகும்.

அதே போல், விளக்கேற்றும் திசை, எண்ணையின் பலன்கள் என்று பல செய்திகள் உண்டு, சாதாரண தீபம் தானே என்று எண்ணாதீர்கள். தீபங்கள் ஏற்றும் போது, அந்த இடத்தில உள்ள இருள் நீங்கி, ஒளி பரவுகின்றது. அதே போல் தீபம் ஏற்ற ஏற்ற நம் அக இருள் நீங்கி , அக ஒளி பெருகும். நம்மைப் பொறுத்த வரையில் முதலில் அகத்தியர் ஆயில்ய வழிபாட்டில் அபிஷேகத்தில் மட்டும் கவனம் செலுத்தினோம். பின்னர் குருவின் வழிகாட்டல் படி, தற்போது ஆயில்ய பூசை ஆரம்பிக்கும் முன்னர், அஷ்ட திக்கு விளக்குகள் ஏற்றி தான் வழிபாட்டை ஆரம்பிக்கின்றோம்.மேலும் தீப வழிபாடு என்பது "பஞ்ச பூத" வழிபாட்டின் தத்துவமாகும். தீப வழிபாட்டில் நாம் நமக்காக வேண்டுவதை விட, மற்றவர்களுக்காக வேண்டுவது சால சிறந்தது. அதுவும் மோட்ச தீப வழிபாடு இன்னும் பிரசித்தம் பெற்றது.

தீபமேற்றிய உடன் நமக்கு என்ன தோன்றுகின்றது. மகிழ்ச்சி தானே..
தீபமேற்றுவதன் தாத்பரியமே நாம் மகிழ்வோடு வாழ்தல் என்பதற்காகத் தான். தீபமேற்றியவுடன் அந்த இடத்தில் உள்ள இருள் விலகி, ஒளி பெறுகின்றது. இது புறத்தில் நடைபெறும் நிகழ்வு. நீங்கள் இது போன்று தீபமேற்றி பிரார்த்தனை செய்ய செய்ய, அந்த புற நிகழ்வு, உங்கள் அகத்தில் நிகழ்வும். மாசற்ற ஜோதி மனதில் ஒளிர்ந்து, மலர்ந்த மலரை நாம் நம்முள் உணரலாம். நாம் ஒவ்வொருவரும் எத்துணையோ விதமான துன்பங்களை அனுபவித்து வருகின்றோம். சொல்லொணா துயரில் இருப்பவர்கள் தினமும் அகல் விளக்கில் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி சிறிய அளவில் பிரார்த்தனை செய்து வாருங்கள். சுமார் மூன்று மாதங்களுக்கு உள்ளாக நீங்கள் மாற்றம் பெறுவது உறுதி.

இந்த உலகம் எதனால் இயங்குகின்றது? சூரியனால் தான். சூரியன் இல்லையென்றால் நம் கதி அதோகதி தான். ஆதியில் நம் வழிபாடாக இருந்ததும் சூரிய வழிபாடு தான். ஞாயிற்றுக் கிழமை வாரத்தின் முதல் நாள், சூரியனை வழிபட்டு நம் நாட்களை தொடங்க வேண்டிய நாள். ஆனால் மாறாக அன்று தான் நாம் கேளிக்கை, கூத்து என்று திண்டாடி வருகின்றோம். ஆதி வழிபாட்டை மறந்து விட்டோம். தற்போது ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமாக நம் கையில் சீரழிந்து வருகின்றது. இதற்கு மாற்றாக நாம் என்ன செய்ய முடியும்? ஞாயிற்றுக் கிழமை அன்றாவது விடியல் கண்டு சூரியன் தரிசனம் பெறுங்கள், சூரியக் குளியல் போடுங்கள். சரி வாருங்கள்..விளக்கின் மூலம்  விளக்கம் பெறுவோம்.



விளக்கு என்றால் என்ன? தெளிவு பெறு ..தெளிவு எப்போது பெற முடியும்? அகமோ, புறமோ இருள் அகற்றினால் தெளிவு பெறலாம். விளக்கு இருள் அகற்றும் வேலையைத் தான் செய்கின்றது. ஆரம்ப காலத்தில் களிமண்ணால் விளக்குகள் பயன்பாட்டில் இருந்தது.இன்று பல உலோகங்களில் பல விதங்களில் , வடிவங்களில் கிடைக்கின்றது. கோயிலில் விளக்கேற்ற செல்லும் போது கண்டிப்பாக களிமண்ணால் செய்யப்பட்ட விளக்குகளை பயன்படுத்துங்கள். பொதுவாக திருவிளக்கின் தத்துவத்தின்படி,

நெய் - நாதம் என்ற ஒலி தத்துவம்
திரி - பிந்து என்ற ஒளி தத்துவம்
சுடர்  -திருமகள்
பிழம்பு - கலைமகள்
தீ- சக்தி

என ஐந்து இறைமகாசக்திகள் உள்ளடங்கி உள்ளது. அகல் விளக்கேற்றி வழிபடுவது பஞ்ச பூத வழிபாடாகும். நாம் மோட்ச தீபத்தில் களிமண்ணால் ஆன பெரிய அகல் விளக்கில்  விளக்கேற்றி வழிபாடு செய்கின்றோம். பஞ்ச பூத வழிபாடும், முன்னோர்களின் வழிபாடும் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைப்பதைப் போன்றதாகி விடும். அதே போல் விளக்கேற்ற உகந்த நேரம் நாம் ஏற்கனவே சொல்லியது போன்று பிரம்ம முஹூர்த்தம் என சொல்லப்படும் அதிகாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை தான். அதற்குப் பின்னரும் விளக்கேற்றலாம். தவறில்லை. பலன்கள் சற்று குறைவாக இருக்கும். அவ்வளவே. பயன்படுத்தப்படும் உலோக விளக்குகளுக்கென தனித்தனி பலன்கள் உண்டு.

வெண்கல விளக்கு - பட்சி தோஷங்கள் நீக்கும்
பித்தளை விளக்கு - சண்டை சச்சரவு நீங்கும்
செப்பு விளக்கு - அமைதி தரும்
வெள்ளி விளக்கு - பூரணத்துவம் தரும்
தங்க விளக்கு - ஆயுள் விருத்தி
நவரத்தின ஆபரண விளக்கு - நவரத்தின தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

உலோக விளக்குகளுக்கு என்று சளைக்காது இருப்பது மண் அகல் விளக்குகள். வலம்புரி சங்கு விளக்கு, பச்சை மண் அகல் விளக்கு, சுட்ட அகல் விளக்கு, பனம்பழ குறுக்கு வெட்டு அகல்விளக்கு, விசிறித்தட்டு அகல் விளக்கு, பாதாளக்குழி அகல்,தூங்கா(தூண்ட) விளக்கு, பலரூப அகல் விளக்கு என பலவகையான அகல் விளக்குகள் உண்டு. இதே போல் விளக்கேற்றும் எண்ணெயிலும் பல செய்திகள் உண்டு. சரி..மோட்ச தீப வழிபாடு பற்றி சிறிது உணர்வோம்.

  உடலை விட்டுப் பிரிந்த ஆத்மா மறுபிறவி இல்லாமல் மோட்சம் அடைவதற்காக திருக்கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றுவது ஐதீகம்.குறிப்பாக அப்பர் சுவாமிகளுக்கு சிவபெருமான் கயிலைக் காட்சி அருளிய திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு என்றும் கூறுகின்றார்கள். குறிப்பாக இந்த தீபத்தை மருத்துவ துறையில் இருப்பவர்கள், கோவிலில் ஏற்ற வேண்டும். நம்மைப் பொறுத்த வரையில் பதிவின் ஆரம்பத்திலேயே வழிபாட்டில் மிக மிக உயர்ந்த வழிபாடு என்று இந்த வழிபாட்டை சொல்லி தான் ஆரம்பித்தோம். நாம் யாருக்காக பிரார்த்திக்கின்றோம்/ வழிபாடு செய்கின்றோம்? நமக்கு, நம் குடும்பத்திற்கு, நம் உற்றார் உறவினர்களுக்கு என்று அடுத்த தான் செல்கின்றோம். கண்ணனுக்கு தெரிந்து உடல் பெற்று வாழும் உயிர்களுக்கு வழிபாடு/பிரார்த்தனை/ அன்னசேவை என செய்கின்றோம். ஆனால் கண்ணுக்கு தெரியாமல் உடல் இன்றி வெறும் ஆத்மா மட்டும் வாழுகின்றார்களே..அவர்களுக்கு யார் உணவிடுவது? பிரார்த்திப்பது? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையாக இருப்பதே இந்த  மோட்ச தீபம்  வழிபாடு ஆகும். அப்படியானால் இது மிகவும் உயர்ந்த வழிபாடு தானே? ஐயம் ஏதும் இல்லையே....

உடல் அற்ற உயிர்களுக்காக, நம் முன்னோர்களுக்காக, அவர்கள் அடுத்த நிலையில் முன்னேறும் பொருட்டு வேண்டுவதே இந்த வழிபாட்டின் சூட்சுமம் ஆகும். யோசித்துப் பாருங்கள், நாம் எப்படி இங்கே பிறந்தோம், நம் பெற்றோரால் தானே. அவர்கள்...நம் தாத்தா,பாட்டி போன்ற முன்னோர்களால் தான். இப்போது அவர்கள் இங்கே நம்முடன் இல்லை. ஆனால் அவர்களின் ஆன்மா இந்த நிலவுலகில் இருக்கலாம், அல்லது வேறேனும் உலகில் இருக்கலாம். இது போன்ற உடலேனும் சட்டை இல்லாத உயிர்களுக்கு உணவிட்டு, அவர்களை திருப்தி படுத்தினால் தான் நம் வாழ்க்கை மேன்மையுறும். இதற்காகத் தான் தர்ப்பணம், தானம்,திலா ஹோமம் என உண்டு. அதிலும் குறிப்பாக கருப்பு எள்ளை பயன்படுத்துவோம். இந்த கருப்பு எள் தான் முன்னோர்களுக்கு உணவாக கொடுக்கப்படும் என்பது ஐதீகம். அதனால் தான் மோட்ச தீபத்திலும் கருப்பு எள் சேர்க்கின்றோம்.




சென்ற ஆண்டு முதன் முதலாக ஆடி அமாவாசை அன்று அன்னம்பாலிப்பு நம்மால் இயன்ற அளவில் செய்ய ஆரம்பித்தோம்.இந்த ஆண்டு ஓராண்டினை முழுமை செய்ய இருக்கின்றோம். நம்மால் நம்ப முடியவில்லை. ஆனால் குருவின் வழிகாட்டலில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.ஒவ்வொரு நிகழ்விலும் ஒவ்வொரு அனுபவமாக இருக்கின்றது. இதோ இந்த ஆண்டு ஆடி அமாவாசை அன்று அன்னதானமும் உண்டு;சிறப்பு வழிபாடாக மோட்ச தீப வழிபாடும் உண்டு. ஓராண்டு முழுமைக்கும் நமக்கு இப்படியொரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மோட்ச தீபத்திற்கான அணைத்து ஏற்பாடுகளும் நம் தளம் சார்பில் நடைபெற்று கொண்டிருக்கின்றன. சென்ற வாரம் தான் நம் மகளிர் அணியிடம் இருந்து பூசை பொருட்களை பெற்றோம். மற்ற ஆயத்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.



அனைவரையும் வரும் வெள்ளிக்கிழமை அன்று 10/08/2018 அன்று மாலை 6 மணி அளவில் கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து விநாயகர் கோயிலில் நடைபெற உள்ள மோட்ச தீப பூஜையில் சந்திப்போம். அனைவருக்கும் நம்மால் அலைபேசியில் அழைப்பு விடுக்க இயலவில்லை. யாருக்கேனும் விடுபட்டிருந்தால் இதனையே பூசைக்கான அழைப்பாக ஏற்றுக் கொண்டு நேரில் வந்து கலந்து கொள்ளவும்.

மோட்ச தீப வழிபாடு அறிவிப்பு:

மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் ஆடி  மாதம் 25 ஆம் நாள் (10/08/2018) பூச  நட்சத்திரமும், அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில்மாலை  6:30  மணி முதல் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில்  மோட்ச தீப வழிபாடு  செய்ய உள்ளோம்.

அனைவரையும் வருக! வருக!! என்று நம் தளத்தின்  சார்பாக வரவேற்கின்றோம்.

மேலும் தொடர்புக்கு;  ராகேஷ் 7904612352 & சந்திரசேகரன் - 967767266

குறிப்பு: பூசைக்கு வருபவர்கள் கட்டாயம்  தங்களால் முடிந்த அளவில்  கருப்பு எள்ளும், நெய்யும் வாங்கிக்கொண்டு வரவும்.














- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள் பதிவாக :-

முன்னோர்களின் ஆசி பெற மோட்ச தீப வழிபாடு - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_15.html

வளங்களை அள்ளித் தரும் மோட்ச தீப வழிபாடு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_29.html

21 தலைமுறை முன்னோர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றுவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/21.html



No comments:

Post a Comment