Subscribe

BREAKING NEWS

02 August 2018

பாடல் பெற்ற தலங்கள் (4) - திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில்

இறை அன்பர்களே...

பாடல் பெற்ற தலங்கள் என்ற பதிவு நம் தலத்தில் கண்டு வருகின்றோம். அந்த வகையில் திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில், திருநெடுங்களம்,திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் என்று திருத்தலங்கள் பார்த்தோம். இன்றைய பதிவில் திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில்  பற்றி காண உள்ளோம். நாம் மேற்சொன்ன அனைத்து கோயில்களும் திருச்சியில் உள்ளன. ஒரு நாள் யாத்திரையாக சென்றால் நன்கு தரிசனம் பெற்று வரலாம். 

திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில்  என்றதும் இந்த கோயிலே எங்கே உள்ளது என்று நாமும் சற்று வியந்தோம். பின்னர் தான் தெரிந்தது திருச்சியில் உள்ள உறையூரில் தான் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. நாம் இந்த தலத்திற்கு இரவு நேரத்தில் தான் சென்றோம். 




உறையூர். பெயர்க்காரணம் தெரியவில்லை. பற்பல திருவிளையாடல்கள் புரிந்து,இறைவன் உறைகின்ற ஊர் என்று பொருள் கொள்ளலாம் என்று நமக்கு தோன்றுகின்றது. அப்படியாயின் மற்ற ஊர்களில் இல்லையா என்று நினைப்பது தவறு.உறையூர் பற்றி மேலதிக தகவல் கிடைத்தால் தங்களோடு பகிர்கின்றோம்.  பதிவிலே பெயர் சிறப்பையும் சேர்த்து விட்டோம்.என்னே! ஒரு அற்புதமான விளக்கம். படித்து அனுபவியுங்கள் !


அது சரி ! உறையூரின் மற்றொரு பெயர் தெரியுமா? திருமூக்கீச்சரம் என்பதுவே அது. ஆம் ! திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில் பற்றி நாம் அறிய இருக்கின்றோம்.ஏன் இது போன்ற செய்திகளை அறிய வேண்டும் என்றால் , இனிமேல் யாராவது உறையூர் என்று சொன்னால், நாம் திருமூக்கீச்சரம் என்ற மற்றொரு பெயரை சொல்ல வேண்டும்.நமக்கு இப்போது தான் இந்த பெயர் தெரிந்தது. இது போன்ற ஊரின் சிறப்புகள்,மற்ற பெயர்களை நாம் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும்.அதற்கு முதலில் நாம் இதை அறிந்து கொள்ள வேண்டும்.

அனைவரும் திருவண்ணாமலை,பழனி  என்று சொல்ல,எழுத கேட்டிருப்போம்.முக்தியைத் தரவல்ல தமிழ் மொழியில் காலம் போன போக்கில் மாற்றத்தை நாம் விரும்பலாகாது.சற்று தமிழ் மொழியில் மூழ்கி படித்து,சைவத்தை பிடிக்கும் போது தான் புரிந்தது.திருஅண்ணாமலை,பழம் நீ  என்று ! இது போல் எழுத ஆரம்பியுங்கள், படிக்க ஆரம்பியுங்கள்.



திருமூக்கீச்சரம்(உறையூர்) வரலாற்றுப் பின்னணி உடையது.

கரிகால் சோழன் சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். இவன் தந்தையின் பெயர் இளஞ்செட்சென்னி. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு. முதலாம் கரிகாலன் தாய் வயிற்றில் இருந்தபோதே அவன் தந்தையான இளஞ்சேட்சென்னி இறக்கவே,தாய் வயிற்றிலிருந்தபடியே அரச பதவி பெற்றான்.அப்பப்பா புல்லரிக்கின்றதா?இது போன்ற அரசர்கள் ஆண்ட நாடு நம் தமிழ் நாடு.

 கரிகாலன் பண்டைய சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான். சோழகுலத்தை, தன் முன்னோர்கள் ஆண்ட ஆட்சிப் பகுதியிலிருந்து விரிவு படுத்தினான். அதாவது, காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன. சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர் உண்டு. 


 அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள் உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர். புலிக்குட்டி, கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு வந்து சிறைக்காவலரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையும் அடைந்தான். இவ்வளவு புகழ் கொண்ட கரிகாலன் ஆட்சியில் இரண்டு இடங்கள் தலைநகராக இருந்தன. அவை காவிரிப் பூம்பட்டினமும், உறையூரும்.

அப்பேற்பட்ட புகழ்மிக்க ஊர் தான் திருமூக்கீச்சரம்.உறையூர் தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி(திருச்சி) மாநகரின் ஒரு பகுதியாகும். காவேரியாற்றின் தென்கரையில், திருச்சிராப்பள்ளி கோட்டை இரயில் நிலையச் சந்திப்புக்கு மேற்கில் அமைந்துள்ளது.


தல வரலாறு: 

உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி நகரின் உறையூர் பகுதியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் ஐந்தாவது தலமாகும். இச்சிவாலய மூலவர் பஞ்சவர்ணேசுவரர் என்றும், அம்பாள் காந்தியம்மை என்றும் அழைக்கப்படுகிறார். உதங்க முனிவருக்கு இறைவன் ஐந்து காலங்கள் ஐந்து வண்ணங்களாக காட்சியளித்த தலமாகும். உதங்க முனிவர் தன்னுடைய மனைவியுடன் கங்கையில் நீராடிய போது, அவர் மனைவி முதலையால் இழுத்துச் செல்லப்பட்டார். உதங்க முனிவர் வேதம், ஆகமம், புராணங்களில் வல்லவராக இருந்தமையால், அவருக்கு மனைவியின் இறப்பு பற்றி தெரிந்தது. ஞானியாக இருந்தாலும் மனைவி இழந்தமையால் பித்துபிடித்தவரானார். பல இடங்களில் சுற்றித் திரிந்து பின்பு உறையூர் சிவலாயத்திற்கு வந்தார். இங்கு இறைவன் காலை வழிபாட்டில் ரத்தினலிங்கமாகவும், உச்சிகால வழிபாட்டில் ஸ்படிக லிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன் லிங்கமாகவும், முதல் ஜாம வைர லிங்கமாகவும் மற்றும் அர்த்த ஜாம வழிபாட்டில் சித்திர லிங்கமாகவும் காட்சியளித்தார். இதனால் இத்தல மூலவருக்கு பஞ்சவர்ணேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.



பழந்தமிழ் நாட்டை ஆண்ட முவேந்தர்கலான சேர ,சோழ ,பாண்டிய மன்னர்களில் முற்கால சோழர்களின் தலைநகராக விளங்கியது திருச்சி உறையூர் .உறையூறை ஆண்ட சோழ அரசன் ஒருவன் யானை மேல் அமர்ந்து நகர்வலம் வந்தபோது அந்த யானைக்கு திடீர் என்று மதம் பிடித்தது .பாகனும் செய்வதறியது திகைத்தனர் .அப்போது கோழி ஒன்று ஆவேசத்தோடு குரல் எழுப்பிக்கொண்டு பட்டத்து யானையின் தலையின் மேல் நின்று தன் அலகினால் குத்தியது .உடனே , யானை தன் மதம் அடங்கி பழைய நிலையை அடைந்தது .யானையை அடக்கிய கோழியானது தனது காலால் ஒரு இடத்தில அகழ்ந்து பார்த்தது .அப்போது அந்த இடத்தில் ஒரு சிவ லிங்கம் கிடைத்தது .அதை ஆலயம் எடுத்து வழிபாடு செய்தான் சோழமன்னன் .இதுவே உறையூர் பஞ்சவர்னேஷ்வர் திருக்கோவில்.மூக்கிச்சுரம் என்பது கோவில் பெயர்.

மற்றுமொரு தல வரலாறும் இத்தலத்திற்கு உண்டு....

உறையூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சோழ மன்னனின் மனைவி காந்திமதி ஒரு சிறந்த சிவபக்தை. தினந்தோறும் திருச்சிராப்பள்ளி மலைக்குச் சென்று தாயுமானவரை வழிபட்டு வந்தாள். அவள் பிள்ளைப்பேறு அடைந்த போதும் தவறாமல் வழிபாடு செய்து வந்தாள். ஒருநாள் உறையூரில் இருந்து சிராப்பள்ளி சென்று கொண்டிருந்தபோது வெய்யில் கொடுமை தாளாமல் வழியில் மயங்கி விழுந்தாள். தனது இறை வழிபாடு தடைபட்டு விட்டதே என்று மிகவும் மனம் வருந்தினாள். காந்திமதியின் மனவருத்தத்தைப் போக்க விரும்பிய இறைவன் அந்த இடத்திலேயே காந்திமதிக்குக் காட்சி தந்தார். இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.




திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த திருமூக்கீச்சரம் தேவாரத் திருப்பதிகம்
(இரண்டாம் திருமுறை 120வது திருப்பதிகம்)

    2.120 திருமூக்கீச்சரம்

    பண் - செவ்வழி

    திருச்சிற்றம்பலம்

    சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர்
    காந்தளாரும் விரலேழை யொடாடிய காரணம்
    ஆய்ந்துகொண்டாங் கறியந் நிறைந்தாரவ ரார்கொலோ
    வேந்தன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே. 2.120.1
    
    வெண்டலையோர் கலனாப் பலிதேர்ந்து விரிசடைக்
    கொண்டவரும் புனல்சேர்த் துமையாளொடுங் கூட்டமா
    விண்டவர்தம் மதிலெய்த பின்வேனில் வேள்வெந்தெழக்
    கண்டவர்மூக் கீச்சரத்தெம் அடிகள்செய் கன்மமே. 2.120.2
    
    மருவலார்தம் மதிலெய்த துவும்மான் மதலையை
    உருவிலாரவ் வெரியூட்டி யதும்முல குண்டதால்
    செருவிலாரும் புலிசெங் கயலானை யினான் செய்த
    பொருவின்மூக் கீச்சரத்தெம் அடிகள் செயும்பூசலே. 2.120.3
    
    அன்னமன்னந் நடைச்சாய லாளோ டழகெய்தவே
    மின்னையன்ன சடைக்கங்கை யாள்மேவிய காரணம்
    தென்னன்கோழி யெழில்வஞ்சியும் ஓங்குசெங் கோலினான்
    மன்னன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோர்மாயமே. 2.120.4
    
    விடமுனாரவ் வழல்வாய தோர்பாம்பரை வீக்கியே
    நடமுனாரவ் வழலாடுவர் பேயொடு நள்ளிருள்
    வடமன்நீடு புகழ்ப்பூழி யன்தென்னவன் கோழிமன்
    அடல்மன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே. 2.120.5
    
    வெந்தநீறு மெய்யிற்பூசு வராடுவர் வீங்கிருள்
    வந்தெனாரவ் வளைகொள்வதும் இங்கொரு மாயமாம்
    அந்தண்மாமா னதன்னே ரியன்செம்பிய னாக்கிய
    எந்தைமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரேதமே. 2.120.6
    
    அரையிலாருங் கலையில்லவ னாணொடு பெண்ணுமாய்
    உரையிலாரவ் வழலாடுவ ரொன்றலர் காண்மினோ
    விரவலார்தம் மதில்மூன் றுடன்வெவ்வழ லாக்கினான்
    அரையான்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே. 2.120.7
    
    ஈர்க்குநீர்செஞ் சடைக்கேற்ற துங்கூற்றை யுதைத்ததும்
    கூர்க்குநன்மூ விலைவேல்வல னேந்திய கொள்கையும்
    ஆர்க்கும்வாயான் அரக்கன்னுரத் தைந்நெரித் தவ்வடல்
    மூர்க்கன்மூக்கீச் சரத்தடிகள் செய்யாநின்ற மொய்ம்பதே. 2.120.8
    
    நீருளாரும் மலர்மேல் உறைவான்நெடு மாலுமாய்ச்
    சீருளாருங் கழல்தேட மெய்த்தீத்திர ளாயினான்
    சீரினாலங் கொளிர்தென்ன வன்செம்பியன் வில்லவன்
    சேருமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் செம்மையே. 2.120.9
    
    வெண்புலான்மார் பிடுதுகிலினர் வெற்றரை யுழல்பவர்
    உண்பினாலே யுரைப்பார் மொழியூனம தாக்கினான்
    ஒண்புலால்வேல் மிகவல்லவ னோங்கெழிற் கிள்ளிசேர்
    பண்பின்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் பச்சையே. 2.120.10
    
    மல்லையார்மும் முடிமன்னர் மூக்கீச்சரத் தடிகளைச்
    செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ்
    நல்லராய்வாழ் பவர்காழி யுள்ஞானசம் பந்தன
    சொல்லவல்லா ரவர்வானுல காளவும் வல்லரே. 2.120.11

             - திருச்சிற்றம்பலம் -





சிறப்புக்கள் : 

படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கு ஐந்து நிறங்களை வெளிப்படுத்தியதாலும், உதங்க முனிவருக்கு ஐந்து வழிபாட்டு காலங்களிலும் முறையே இரத்தினம், படிகம், பொன், வைரம், சித்திரம் என்ற ஐந்து வேறு வேறு வண்ண வடிவம் காட்டினான். இறைவன் என்ற வரலாற்றின் அடிபடையலும் இங்குள்ள இறைவன்பஞ்சவர்னேஷ்வர் என்றும் தமிழில் ஐவண்ண பெருமான், ஐந்நிற பெருமான், ஐநிற நாயனார் என்றும் பெயர் வழங்க பெற்றதாக இக்கோவில் தல புராணம் கூறுகிறது.

பஞ்சபூத தலங்களாகிய சிதம்பரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், காளஹஸ்தி ஆகிய தலங்களில் காட்சியளித்து அருள் புரியும் சிவபெருமான் ஐந்து பூதங்களையும் ஒன்றாக்கி உறையும் தலமே திருமூக்கீச்சரம் என்ற உறையூர் திருத்தலம். எனவே பஞ்சபூத தலங்களை தரிசிக்கும் புண்ணியம் இத்தல இறைவனை வழிபட்டாலே கிடைக்கும். இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கின்றோம். பஞ்ச பூத தலங்களை தனித்தனியே தரிசித்தல் வேறு.  ஐந்து பூதங்களையும் ஒன்றாக்கி இறைவன் இங்கே உறைவதால் தான் இத்தலத்திற்கு உறையூர் என்று பெயர் பெற்றது.

மேலும் படைத்தலின் தெய்வமாகிய பிரம்மாவே இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளதால் எவ்வகை தொழிலிலும் வெற்றியடைய இத்தல மூலவராகிய பஞ்சவர்ணேஸ்வரரை வழிபட்டால் நலம் பெறலாம். கார்க்கோடகன் ஆகிய பாம்பும் கருடனும் இத்தலத்தில் வழிபட்டுள்ளதால் எவ்விதத்தில் பெற்றிருக்கும் சாபம், பாவம், தோஷம் ஆகியவற்றிலிருந்து விமோசனம் கிடைக்கும் தலம் இதுவாகும். மற்றும் காசியப முனிவர், அவன் மனைவி கத்துரு இங்கு இறைவனை வழிபட்டுள்ளார்.

யானை ஏற முடியாதபடி 70 மாடக்கோவில்களைக் கட்டிய கோச்செங்கட் சோழன், 63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்ச் சோழன் ஆகியோர் பிறந்த தலம் இதுவே.இவருடைய சிலை இச்சிவாலயத்தில் தனி சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளது.

மூவேந்தர்களும் சேர்ந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர்.

இச்சிவாலயத்தில் உள்ள கல்வெட்டுகள் சோழர் கல்வெட்டுகளாகும். அக்காலத்தில் நிலக்கொடை, ஆபரணக்கொடை, திருவிழா கட்டளைகள் போன்றவற்றை பற்றி கூறுகிறது.

இச்சிவாலயம் கோச்செங்கணாரின் மாடக் கோவிலாகும்.









திருக்கோயிலின் வெளியே இருந்த விளக்கை கண்டு பிரார்த்தனை செய்து அங்கிருந்து புறப்பட்டோம்.

எப்படி செல்வது :

திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் ஒரு பகுதியாகும். தமிழகத்தின் அனைத்து நகரங்களிலிருந்தும் இரயில் மூலமாகவும், பேருந்து மூலமாகவும் திருச்சிராப்பள்ளி இணைக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளியிலிருந்து இக்கோவில் 2-கி.மீ. தூரத்தில் உள்ளது. திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நகரப்பேருந்து வசதி வெகுவாக உள்ளது.  

மீள்பதிவாக :-

பாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/06/2.html

பாடல் பெற்ற தலங்கள் (1) - திருநெடுங்களம் - http://tut-temple.blogspot.com/2018/05/1.html

பாடல் பெற்ற தலங்கள் (3) - திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/07/3.html

No comments:

Post a Comment