Subscribe

BREAKING NEWS

02 August 2018

ஆடி அமாவாசை சிறப்பு பதிவு - சேர்மன் அருணாசல சுவாமி கோயில் (02.08.2018 முதல் 13.08.2018 வரை)


நம் தலத்தில் ஏற்கனவே சேர்மன் அருணாசல சுவாமி கோயில் பற்றி சில துளிகளைத் தந்திருந்தோம். நமக்கு அது ஒரு ஏக்கமாகவே இருக்கின்றது.இன்னும் நேரில் சென்று தரிசனம் பெறவில்லையே என்று...

 பரம் பொருள் உணர்த்தும் உயிர்நிலைக் கோயில்கள் நம் நாடு முழுதும் பரவி கிடக்கின்றது. குறிப்பாக நம் தமிழ் நாட்டில் சொல்லவே வேண்டாம். கால் வைக்கும் இடமெல்லாம் சித்தர்களின் ராஜ்ஜியம் தான். ஆனால் நமக்குத் தான் உண்மை நிலை புரிவதும் இல்லை, தெரிவதும் இல்லை.

அந்த வகையில் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் பற்றி குறிப்பாக இங்கே காணலாம். எப்போ அழைப்பாரோ? என்று நாம் காத்திருக்கின்றோம். சரி..இந்தப் பதிவு ஆடி அமாவாசை சிறப்பு பதிவு ஆகும்.

 சேர்மன் அருணாச்சல சுவாமிகள் கோயில் தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் உள்ள ஒரு வழிபாட்டு மற்றும் சமாதிக் கோயில் ஆகும். இங்கு சேர்மன் அருணாசல சுவாமி என்பவரின் சமாதி அமைந்துள்ளது.




 சேர்மன் அருணாசலம் திருச்செந்தூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியில் ராமசாமி நாடாருக்கும் சிவனனைந்த அம்மையாருக்கு 1880, அக்டோபர் 2ல் பிறந்தார். சிறுவயதிலேயே யோகக்கலை பயின்றார். 1906, செப்டம்பர் 5 முதல் 1908, ஜூலை 27 வரை ஏரல் நகராட்சித் தலைவராக (சேர்மன்) இருந்தார். இதனால் "சேர்மன் அருணாசலம்' என்று அழைக்கப்பட்டார்.

 சேர்மன் அருணாச்சலம் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரு நாள் இவர் தனது சகோதரர் கருத்தப் பாண்டியனிடம் தன் மரணத்தைச் சொன்னார். அதன்படி, 1908, ஜூலை 28 அன்று ஆடி அமாவாசை நாளில் பகல் 12 மணிக்கு சமாதியானர். ஏரலுக்குத் தென்மேற்கில் தாமிரபரணி ஆற்றின் வடகரை ஓரமாக இருந்த ஆலமரத்தின் அருகில் தன்னை சமாதியில் வைத்து மலர்களும் மண்ணும் போட்டு மூடும்படி தம்பியிடம் சொன்னார். அவர் கூறியபடியே அவரது தம்பியும் செய்தார். அவரது சமாதியிடம் இன்று கோயிலாக உள்ளது.

 ஏரல் சேர்மன் அருணாசல சுவாமிகள் தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து அருளாசி வழங்கி வருகிறார் என்கிற நம்பிக்கையில் இக்கோயிலுக்கு அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி குணமடைந்து செல்கிறார்கள். இந்தக் கோயிலில் பிரசாதமாக கோயில் திருமண்ணும், தண்ணீரும் தருகிறார்கள்.

ஆடி அமாவாசை இத்தலத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழா .  ஆடி அமாவாசையன்று இலாமிச்ச வேர் சப்பரத்தில் சேர்மன் திருக்கோலத்தில் எழுந்தருளுவார். இதோ ஆடி அமாவாசை  கொண்டாட நம்மை அழைக்கின்றார். இன்றிலிருந்து கோலாகலம் தொடங்கி விட்டது.







ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதோ சில காட்சிகள் உங்களுக்காக.



















மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழைப் பார்க்கவும். அனைவரும் கலந்து கொண்டு அருள் பெறுக. நம் தலத்தில் குருபூஜை பற்றி அறிவித்து இருந்தோம். இதோ...ஆடி அமாவாசை திருவிழா அழைப்பும் தந்துள்ளோம். அனைத்தும் அவர் பாதங்களில் சமர்ப்பணம்.

           ஏரல்  சேர்மன் அருணாசல சுவாமிகளின் திருவடி போற்றி வணங்குகின்றோம்.

-மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

சித்தம் உணர சேர்மன் அருணாசல சுவாமி கோயில் - 110 ஆம் ஆண்டு குரு பூஜை விழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/03/110.html

No comments:

Post a Comment