Subscribe

BREAKING NEWS

31 May 2017

பிருகு முனிவர் ஆசிரமத்தில் நம் வாசகரின் மற்றுமோர் நேரடி அனுபவங்கள்..



நமது "தேடல் உள்ள தேனீக்கள்" . ராகேஷ் அவர்கள் பெற்றோர், சகோதரி மற்றும் சகோதரியின் குழந்தைகள் மற்றும் யாம்(ரமா சங்கர்) எனது தங்கை மகனுடன் முதலில்  சிங்க பெருமாள் கோவிலில் சந்தித்தோம்பிறகு பாடலாத்ரி நரசிம்மரையும், அகோபிலவல்லி  தாயாரையும் அகம் குளிர தரிசனம் செய்தோம் .பின்னர் அங்கிருந்து மருதேரி செல்லும் பேருந்தில் பயணித்து பிருகு முனிவர் ஆஸ்ரமத்தை  அடைந்தோம்



அங்கே கங்கை கிணற்றையும், நந்தி மற்றும் காமதேனுவையும் கண்டோம்.அங்கு சென்றவுடன் ஆஸ்ரம அன்பர் எங்களை மிக்க அன்புடன் வரவேற்றார்.மற்றொரு அன்பர்  முன்பு போல் மலர்கள் நிறைந்த நீரால் பூஜைக்கு வந்தோர்க்கெல்லாம் பாத பூஜை செய்தார். பின் எங்களை காலை சிற்றுண்டி சாப்பிட அழைத்தார்கள்இந்த முறை விசேஷம் என்னவென்றால், மாப்பிள்ளை சம்பா அரிசிக் கஞ்சியும், அதற்கு இணையாக புதினா துவையலும் சிற்றுண்டியாக பரிமாறினார்கள்அதுவும் மிக மிக சூடாக, கேட்டு கேட்டு உபசரித்தார்கள் . இந்த அரிசியின் மகத்துவம் என்னவென்றால், தொடர்ந்து ஒரு வாரம் உண்டால் உடல் மிக்க வலிமை பெறும் எனவும், இதனை உண்டால் உடலிலுள்ள கெட்ட கழிவுகள் அனைத்தையும் மிகச் சுலபமாக வெளியேற்றி விடும் என்றும் சொன்னார்கள். பூஜைக்கு வரும் அன்பர்களுக்காகவே வெளியூரிலிருந்து வரவழைத்தாகவும் 


தகவலளித்தார்கள்பின்பு நாங்கள் அனைவரும் முதல் தளத்தில் உள்ள பூஜை அறைக்கு சென்று அமர்ந்தோம்அங்கே மகரிஷியின் உருவ படமும், அகண்ட ஜோதி மண்டபமும் மிக அற்புதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தனபின் அன்றைய பாம்பாட்டி சித்தர் பூஜை பற்றிய விளக்கங்களை எங்களுக்கு எடுத்துரைத்தார்கள். ஆசிரம முறைப்படி அகண்ட ஜோதியையும், திருவிளக்கையும் திரு. அருண் என்கிற அன்பர் ஏற்றி பூஜையை தொடங்கி வைத்தார். திரு. செல்வம் அய்யா பாம்பாட்டி  சித்தரின் மூல மந்திரத்தை எங்களுக்குச்சொல்லி அவர் ஒவ்வொரு முறை சொல்லும் போதும் எங்களையும் திரும்ப சொல்லச்சொன்னார். அப்படியாக இருபத்தியொரு  முறை மூல மந்திரத்தை அனைவரும் கூறினோம். மந்திரம் பின்வருமாறு:


ஓம் கிலீம் ஐம் சௌம் ஸ்ரீம் ஷ்ரீம் ஸ்ரீ சிவபிராபாகர சித்த யோகி ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம....

பிறகு அவர் சம்பந்தப்பட்ட நான்கு வரி பாடல்கள் நூற்றியெட்டு முறையும் ஒவ்வொரு நான்கு வரி பாடலுக்குப்பின் மேற்கூறிய மூல மந்திரம் ஒரு முறையாக அனைவராலும் பாட பெற்றது. இடையினில் குழந்தைகளுக்கான விசேஷ மருந்தும், பெரியவர்களுக்கான விசேஷ மருந்தும் எங்களுக்கு வழங்கப்பட்டது. இப்பாடல்களுக்கு பிறகு அத்தனை சித்தர்கள் பெயரையும் சொல்லி போற்றி ஸ்லோகமும் சொல்லப்பட்டது. பிருகு முனிவரின் காயத்ரி மந்திரமும் ஓதப்பட்டது. பிருகு முனிவர் காயத்ரி மந்திரம் இதோ.:

ஓம் சர்வலோகாச்சார்யாய வித்மஹே  பாத நேத்ராய தீமஹி தந்நோ பிருகு முனிச ப்ரசோதயாத்.

பின் பூஜை முடிந்தவுடன் நாங்கள் அனைவரும் மகரிஷி உருவப் படத்தையும்  அகண்ட ஜோதியையும்  நமஸ்கரித்தோம். பின் பூஜை பிரசாதமாக சூடான பால் வழங்கப்பட்டது. உண்மையிலேயே இந்த பூஜையில் நாங்கள் அனைவரும் ஐக்கியமாகி விட்டோம்.

இதற்குள் மதிய உணவும் தயாராகி விட்டது. பூஜையில் முளை கட்டிய தானியங்களை வைத்திருந்தார்கள்மதிய உணவுடன் தயிர் கலந்து அந்த தானியங்களும் பரிமாறப்பட்டது. முன் போல் வடை பாயசத்துடன் நல்ல விருந்துதான்.


 இயந்திர வாழ்க்கை வாழும் நாமெல்லாம்  நேரம் கிடைக்கும் போது இது போல் பூஜையில் பங்கேற்று சித்தர்களின் அருளினை கண்டிப்பாக பெற வேண்டும். ஆசிரம சுற்று சூழலும் மிக அமைதியாகவும், அழகாகவும் இருந்தது. சிங்க பெருமாள் கோவிலிலிருந்து மருதேரிக்கு தனி பேருந்து இருக்கின்றது. அசிரமத்தை ஒட்டியே பேருந்து நிற்கின்றது. பேருந்தின் நேரம் தெரிந்து போனால் சுலபமாகச்செல்லலாம்.

வாருங்கள் ஒன்று கூடுவோம் மருதேரிக்கு. சித்தர்கள்  அருள் பெறுவோம் கடை தேறுவதற்கு.

பாம்பாட்டி சித்தரே போற்றி !

பிருகு மகரிஷியே போற்றி !

30 May 2017

வாரியார் ஸ்வாமிகள் சொன்ன நல்லறிவு கதை.....


கடவுளைக் காணத் தேவைப்படும் கண்ணாடிகள்!!!
ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மாணவன் சென்றான். அம்மாணவன் மிடுக்கும், சொல் துடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான்.
ஐயா! பெரியவரே! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கும்'' என்றான்.தம்பீ! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.''ஓ! கடவுள் என்று ஒன்றுஉண்டா? ஐயா! நான் எம்.ஏ. படித்தவன். நான் மூடன் அல்லன். நூலறிவு படைத்தவன். கடவுள் கடவுள் என்று கூறுவது மூடத்தனம். கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?''தம்பீ, காண முயலுகின்றேன்.''
கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா?''இல்லை.'' "கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால் முகர்ந்திருக்கின்றீரா?'' "இல்லை.''
ஐயா! என்ன இது மூட நம்பிக்கை? உம்மை அறிவற்றவர் என்று கூறுவதில் என்ன தடை? கடவுளைக் கண்ணால் கண்டீரில்லை, மூக்கால் முகர்ந்தீரில்லை; கையால் தொட்டீரில்லை; காதால் கேட்டீரில்லை;இல்லாதவொன்றை இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு அரிய நேரத்தை வீணடிக்கிறீரே? உம்மைக் கண்டு நான் பரிதாபப் படுகிறேன்.உமக்கு வயது முதிர்ந்தும் மதிநலம் முதிரவில்லையே? பாவம்! உம்போன்றவர்களைக் காட்சிச் சாலையில் வைக்க வேண்டும். கடவுள் என்றீரே? அது கறுப்பா, சிவப்பா?''அது சரி, தம்பீ! உன் சட்டைப் பையில் என்ன இருக்கின்றது?'' "தேன் பாட்டில்.'' "தேன் இனிக்குமா, கசக்குமா?'
என்ன ஐயா! இதுகூட உமக்குத் தெரியாதா? சுத்த மக்குப் பிண்டமாக இருக்கின்றீர். உலகமெல்லாம் உணர்ந்த தேனை இனிக்குமா கசக்குமா என்று வினாவுகின்றீரே, உணவுப் பொருள்களிலேயே தேன் தலைமை பூண்டது. இது அருந்தேன். இதை அருந்தேன் என்று எவன் கூறுவான்? அதற்காக இருந்தேன் என்பான். தேன் தித்திக்கும். இதை எத்திக்கும் ஒப்புக் கொள்ளும்.''தம்பீ! தித்திக்கும் என்றனையே, அந்த இனிப்பு கறுப்பா, சிவப்பா! சற்று விளக்கமாக விளம்பு, நீ நல்ல அறிஞன்.'' மாணவன் திகைத்தான்.
தித்திப்பு என்ற ஒன்று கறுப்பா சிவப்பா என்றால், இந்தக் கேள்விக்கு என்ன விடை கூறுவது என்று திக்கித் திணறினான்.
ஐயா! தேனின் இனிமையை எப்படி இயம்புவது? இதைக் கண்டவனுக்குத் தெரியாது! உண்டவனே உணர்வான்.''
பெரியவர் புன்முறுவல் பூத்தார். "அப்பா! இந்தப் பௌதிகப் பொருளாக, ஜடவஸ்துவாகவுள்ள தேனின் இனிமையையே உரைக்க முடியாது, உண்டவனே உணர்வான் என்கின்றனையே? ஞானப் பொருளாக, அநுபவவஸ்துவாக விளங்கும் இறைவனை


அநுபவத்தால் தான் உணர்தல் வேண்டும்.
"தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!''
என்கிறார் பரம ஞானியாகிய திருமூலர்.

மாணவன் வாய் சிறிது அடங்கியது. "பெரியவரே! எனக்குப் பசிக்கிறது. சாப்பிட்டு விட்டு வந்து உம்முடன் உரையாடுவேன்.''
தம்பீ! சற்று நில். பசி என்றனையே, அதைக் கண்ணால் கண்டிருக்கின்றனையா?'' "இல்லை.''என்ன தம்பீ! உன்னை அறிஞன் என்று நீயே கூறிக் கொள்கிறாய். பசியைக் கண்ணால் கண்டாயில்லை, மூக்கால் முகர்ந்தாயில்லை; கையால் தொட்டாயில்லை; அப்படியிருக்க அதை எப்படி நம்புவது?
பசி பசி என்று உரைத்து உலகத்தை ஏமாற்றுகின்றாய். பசி என்று ஒன்று கிடையவே கிடையாது. இது சுத்தப்பொய்.
பசி என்று ஒன்று இருக்கிறது என்று கூறுபவன் முட்டாள். உனக்கு இப்போது புரிகின்றதா? பசி என்ற ஒன்று அநுபவப் பொருள்.
அது கண்ணால் காணக் கூடியதன்று. அதுபோல்தான் கடவுளும் அநுபவப் பொருள். அதைத் தவஞ் செய்து மெய்யுணர்வினால் உணர்தல் வேண்டும்.'' மாணவன் உடம்பு வேர்த்தது, தலை சுற்றியது. பெரியவர் கூறுவதில் உண்மை உள்ளது என்பதை உணர்ந்தான்.
என் அறியாமையை உணர்கின்றேன். இருந்தாலும் ஒரு சந்தேகம், கடவுளைக் கண்ணால் காண முடியுமா?'' "உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?'' "என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா கருதுகின்றீர்? எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.''"தம்பீ! நான் உன்னை மூடன் என்று ஒருபோதும் கருதமாட்டேன். நீ அறிஞன்தான். ஆனால் அறிவில் விளக்கந்தான் இல்லை. கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருத்தல் வேண்டும். உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?''ஆம். நன்றாகத் தெரிகின்றது.'' "அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?'' "என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாந்தான் தெரிகின்றது?'' "அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?''ஆம்! தெரிகின்றன.'' "முழுவதும் தெரிகின்றதா?'' அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் "முழுவதும் தெரிகின்றது'' என்றான்.தம்பீ! உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?'' மாணவன் விழித்தான்.ஐயா! பின்புறம் தெரியவில்லை.'' "என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது தெரிகின்றது என்று பன்முறை பகர்ந்தாய். பின்னே பின்புறம் தெரியவில்லை என்கின்றாய். நல்லது, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா?''முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.'' "அப்பா! அவசரங்கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும் காண்கின்றனையோ? நிதானித்துக் கூறு....''எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம் தெரிகின்றது.'' "தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்.''
ஆம்! நன்றாகச் சிந்தித்தே சொல்கின்றேன். முன்புறம் எல்லாம் தெரிகின்றது.'' "தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றா?மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல் துள்ளினான். தன் அறியாமையை உன்னி உன்னி வருந்தலானான்.தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், "ஐயனே! முகம் தெரியவில்லை!'' என்றான்.குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை. முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான் கண்டனை. கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய்.அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், சொல்.''
ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.''தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவதுபோல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.'' "ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள். இப்போதே வாங்கி வருகின்றேன். பெல்ஜியத்தில் செய்த கண்ணாடியா?''
அப்பனே! அவை பெல்ஜியத்தில் செய்ததன்று. வேதாகமத்தில் விளைந்தவை. ஞானமூர்த்தியைக் காண இருநிலைக் கண்ணாடிகள் வேண்டும்.ஒரு கண்ணாடி திருவருள், மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள் குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்.
தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனை குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.'' என்று முடித்தார்.


நன்றி:-திருமதி,ரமாசங்கர்.

29 May 2017

ஞானத்தை யாரிடம் கற்பது?




குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும்
முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும் என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு.

காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை.
ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்துவிட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும்.

அதுபோலத்தான் மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்வதும்.

அந்தக் குரங்கு கொஞ்சம் பொறுமையாய் புண்ணை நோண்டாமல் இருந்தாலே போதும், புண் விரைவில் ஆறிவிடும்.

இதை குரங்குக்குச் சொன்னாலும் புரியாது. அது புண்ணை நோண்டுவதை நிறுத்தப்போவதில்லை.

ஆனால்,
மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே?
மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழமுடியும் தானே?

மனித மனம் வெறும் “மனம்” மட்டுமே… 
மனித மனம் குரங்கு அல்ல…
என்ற புரிந்து கொள்ளுதல்தான்
 ”ஞான உதயம்”

இந்த புரிதல் எப்போதும் இயற்கையில் எதிர்பாராத தருணங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

இதில் புரிந்து கொள்வது எல்லாமே சீடர்கள். புரிய வைப்பவை எல்லாமே குரு. 

இந்த மொத்த நிகழ்வும் ”ஆன்மிகம்” எனப்படுகிறது, அவ்வளவுதான்.

தத்தாத்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, ஒரு நாட்டின் மன்னனைச் சந்தித்தார்.

தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக் கண்ட அரசன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார்? என்பதையும் கேட்டான்.

'எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார் தத்தாத்ரேயர்.

இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட அரசன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.

அவனிடம், 
"பஞ்சபூதங்களான 
ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று,
“சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு,
“தேனீ, குளவி, சிலந்தி, யானை,
 மான், மீன், பருந்து, பாம்பு
ஆகியவையும், 
“நாட்டியக்காரி பிங்களா, ஒரு குழந்தை, 
ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப்பவன்,
சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...“ என்றார் தத்தாத்ரேயர்.

மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...

"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;

“தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.

“பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.

“எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ (நெருப்பு) உணர்த்தியது. 

“பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் - தெரிவித்தது.

"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.

"வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது.
இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.

"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.

“பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.

“பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.

"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.

“பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது.

“இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.

"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையைப் பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. 

இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்... "

என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.

இதைக் கேட்ட அரசன், பூரண அமைதி அடைந்தான்.
தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே..

நல்ல சீடனுக்கு எல்லாமே குரு தான்...


நன்றி: திருமதி. பத்மா பாலு.

26 May 2017

திருமூலர்...




சித்தர்களில் முதன்மையானவர்.திருமூலர் சிவபெருமானிடமும், நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர். அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் கைவரப்பெற்றவர். இவர் அகத்தியரிடம் கொண்ட அன்பால் அவருடன் சிலகாலம் தங்குவதற்கு எண்ணி, தான் வாழ்ந்த திருக்கைலையிலிருந்து புறப்பட்டு பொதிகை மலையை அடையும் பொருட்டு தென் திசை நோக்கிச் சென்றார்.

செல்லும் வழியில் திக்கேதாரம், பசுபதி, நேபாளம், அவிமுத்தம் (காசி) விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, த்ருவாலங்காடு, காஞ்சி ஆகிய திருத்தலங்களைத் தரிசித்து ஆங்காங்கே இருந்த சிவயோகிகளைக் கண்டு அளவளாவி மகிழ்ந்தார்.
பிறகு தில்லையில் இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருநடனம் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், திருவாவடுதுறை இறைவனை வழிபட்டுச் செல்லும் போது காவிரிக் கரையிலுள்ள பொழிவினிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதனைக் கண்டார்.
அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே ஆநிரை மேய்க்கும் ஆயனாகிய மூலன் என்பவன் அங்கு தனியே வந்து பசுக்களை மேய்ப்பவன். அவன் தன் விதி முடிந்த காரணத்தால் உயிர் நீங்கி இறந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றிச் சுற்றி வந்து வருந்தி கண்ணீர் விட்டன.
பசுக்களின் துயர்கண்ட சிவயோகியார்க்கு அவற்றின் துன்பம் துடைக்க எண்ணம் உண்டாயிற்று. எனவே தம்முடைய உடலை மறைவான இடத்தில் கிடத்திவிட்டு, கூடு விட்டு கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை அந்த இடையனது உடம்பினுள் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார்.

மூலன் எழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்து அன்பினால் அவரது உடலினை நக்கி, மோந்து, களிப்போடு துள்ளிக் குதித்தன. திருமூலர் மனம் மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தருளினார். வயிரார மேய்ந்த அப்பசுக்கள் காவிரியாற்றின் துறையிலே இறங்கி தண்ணீர் பருகி கரையேறி சாத்தனூரை நோக்கி நடந்தன. அவற்றைத் தொடர்ந்து சென்ற சிவயோகியார் பசுக்கள் தத்தம் வீடுகளுக்குச் சென்றதைக் கண்டார். அதே சமயம் வீட்டிலிருந்து வெளியே வந்த மூலனின் மனைவி, மூலன் வடிவிலிருந்த சிவயோகியரை வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ தான் அவளுடைய கணவன் அல்லன் என்றும், அவன் இறந்துவிட்டான் என்றும் கூறினார். அவள் அவ்வூர்ப் பெரியவர்களிடம் முறையிடவும், மூலர் தான் ஏற்றிருந்த உடலிலிருந்து விலகி தன் ஒரு சிவயோகியார் என்பதை நிருபித்தார். மறுபடியும் மூலனின் உடம்பில் புகுந்தார். இதைக்கண்ட சான்றோர்கள் மூலனின் மனைவியைத் தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.

சிவயோகியர் தன் உடலைத் தேடிச் சென்று அது கிடைக்காததால் மூலனின் உடலிலேயே தங்கி திருவாவடுதுறைத் திருக்கோவிலை அடைந்தார். யோகத்தில் வீற்ற்ருந்து, நன்னெறிகளை விளக்கும் ‘திருமந்திரம்’ எனும் நூலை ஓராண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடியருளினார். இவரது வரலாற்றை சேக்கிழாரடிகள் பெரியபுராணத்தில் விரிவாகக் கூறியுள்ளார். அகத்தியர், 12 காண்டத்தில் திருமூலர் இயற்றியதாக பின்வரும் சில நூல்கள் பட்டியலிடப்படுகிறது.




1. திருமூலர் காவியம் (கிரந்தம்) – 8000
2. திருமூலர் சிற்ப நூல் – 1000
3. திருமூலர் சோதிடம் – 300
4. திருமூலர் மாந்திரிகம் – 600
5. திருமூலர் சல்லியம் – 1000
6. திருமூலர் வைத்திய காவியம் – 1000
7. திருமூலர் வைத்திய கருக்கிடை – 600
8. திருமூலர் வைத்திய சுருக்கம் – 200
9. திருமூலர் சூக்கும ஞானம் – 100
10. திருமூலர் பெருங்காவியம் – 1500
11. திருமூலர் தீட்சை விதி – 100
12. திருமூலர் கோர்வை விதி – 16
13. திருமூலர் தீட்சை விதி – 8
14. திருமூலர் தீட்சை விதி – 18
15. திருமூலர் யோக ஞானம் – 16
16. திருமூலர் விதி நூல் – 24
17. திருமூலர் ஆறாதாரம் – 64
18. திருமூலர் பச்சை நூல் – 24
19. திருமூலர் பெருநூல் – 3000

போன்றவைகள் திருமூலரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள். பாண்டிய மன்னனின் ஆணைப்படி திருமூலர் சமாதியை மூலவராகக் கொண்டு, கருவூரர் சிதம்பரம் கோயிலை அமைத்தார். திருமூலர் லிங்க வடிவமாக எழுந்தருளிய இடம் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய இடமாக கற்பிக்கப்பட்டு உமா பார்வதி என்ற பெயரில் ஒரு அம்மன் சந்நிதியும் இக்கோயிலில் சேர்த்துவிட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.



நன்றி.திருமதி.ரமாசங்கர்.

25 May 2017

எல்லாம் என்னால் முடியும் என்ற அகந்தையில் உன்னை மறந்தேன்.!!!


மஹாபாரத யுத்தம் --

தன் மகன் அபிமன்யு இறப்புக்கு துணை நின்ற ஜெயத்ரனை இன்றைய சூர்ய அஸ்தமனத்துக்குள் வதைப்பேன் அது முடியாது போனால் தீக்குளித்து என் உயிர் மாய்ப்பேன் என்று  சபதம் செய்தான் போர்க்களத்தில் அர்ஜுனன் ,



இதை கேட்ட ஜெயத்ரன் போர்க்களத்தில் பாண்டவர்கள்  எவர் கண்ணுக்கும் சிக்காமல் மறைவாக இருந்தான்,,துரியோதனன்,,கர்ணன் போன்றோர் அவனுக்கு காவலாக இருந்தனர்,,மாலைவேளை நெருங்கியது அர்ஜுனன் பார்வைக்கு ஜெயத்ரன் தட்டுப்படவே இல்லை ,,அர்ஜுனனின் மனம் பதைபதைத்தது,,அருகே இருந்த கிருஷ்ணரிடம் அப்போதுதான் யோசனை கேட்டான் கிருஷ்ணா சூரியன் அஸ்தமிக்க போகிறதே எப்படி ஜெயத்ரனை கொல்வேன்....மேலும் சில நொடிகள் நகர்ந்தன ,,,தன் கையில் இருந்த வில்லையும் ,,அம்பையும் கீழே போட்டுவிட்டு ,


பரந்தாமா என்னை காப்பாற்று அனைத்தும் உன் செயல் ,,,என் செயலில் எதுவும் இல்லை என்று பணிந்து அழுதான்,,,,அதுவரை அமைதியாக இருந்த கிருஷ்ணர் தன் சக்ராயுதத்தை ஏவி சூரியனை மறைத்தார் மாயவன் மாயை அது என்று அறியாமல் ஜெயத்ரன் வெளியே வந்தான் கௌரவர்கள் சந்தோச குரல் எழுப்பினர் சூரியன் அஸ்தமித்துவிட்டான் இனி ஜெயத்ரனை கொல்ல முடியாத அர்ஜுனன் தீக்குளிக்க வேண்டியதுதான் என்று ஆரவாரித்தனர் ,ஜெயத்ரனும் அவர்களோடு சேர்ந்து ஆரவாரித்தான் ,,,,,அப்போது கிருஷ்ணர் பார்த்திபா ,,அதோ பார் ஜெயத்ரன் தலை தெரிகிறது உன் ஒரே அம்பால் அவன் தலையை கொய்து அது கீழே விழாமல் அருகில் உள்ள சமந்த பஞ்சகத்தில் ஜபம் செய்து கொண்டிருக்கும் விருத்தட்சரனின் மடியில் விழும்படி அம்புகளாலே அதை தள்ளு ம்ம் சீக்கிரம் என்றான் ,,,,,,,அர்ஜுனனும் அப்படியே செய்தான் ,,,,அந்த சமயம் விருத்தட்சரன் பூமியில் அமர்ந்து சந்தியோபாஸனம் செய்து கொண்டிருந்ததால் ஜெயத்ரன் தலை தன் மடியில் விழுந்ததை உணரவில்லை ,,,,பிறகு சத்தியோபாஸனம் முடிந்து அர்க்கயம் கொடுப்பதற்காக எழுந்த போது,,,,தனது மடியில் எதோ கனமாக இருப்பதை உணர்ந்து அதை கீழே தள்ளினார் ,,,கொய்யப்பட்ட ஜெயத்ரன் தலை பூமியில் விழுந்த அடுத்த கணம் விருத்ராட்சனின் தலை வெடித்து சிதறியது ,,அதிர்ந்து போன அர்ஜுனன் கிருஷ்ணரை பார்த்தான் ,,அவனது பார்வையின் நோக்கத்தை புரிந்து கொண்டு விடை சொல்லலானார் கிருஷ்ணர்-பார்த்திபா ,,,ஜெயத்ரனின் அப்பாதான் விருத்ராட்சணன் தன் கோரமான தவ பயனால் ஜெயத்ரனை பெற்றார் ,,,அவன் பிறக்கும் போது ஒரு அசிரி,,,,,உன் புத்திரன் மகா வீரனாக எல்லோராலும் போற்ற படுவான் அதே சமயம் மிக்க வலிமையுடைய ஒரு வீரனால் உன் மகன் தலை கொய்யப்பட்டு மாள்வான் இது சத்யம் என்றது ,அதை கேட்ட விருத்ராட்சணன் ,,,எந்த வலிமை மிக்க வீரன் என் மகன் தலையை கீழே விழ செய்கிறானோ அதே நேரம் அவனது தலையும் சுக்கு நூறாக வெடித்து சிதறவேண்டும் இது நான் செய்த தவத்தின் மீது ஆணை என்றார் ,,,,,,,உன்னால் அறுபட்ட ஜெயத்ரனின் தலை கீழே விழுந்திருந்தால் உன் தலை அல்லவா வெடித்து சிதறியிருக்கும் அதனால் தான் சத்யம் செய்த விருத்ராட்சன் மடியில் ஜெயத்ரன் தலை விழும்படி உன்னை செய்ய சொன்னேன் என்றான் புன்னகையுடன் ,,,இதை கேட்ட அர்ஜுனன் கண்ணீருடன் கிருஷ்ணா எனக்கு எப்பொழுதும் நீ துணை இருக்கிறாய் என்பதை மறந்து ,,,,நான்,,,, என்னால் முடியும் என்கிற அகந்தையால் உன்னை மறந்து விட்டேன் என்னை மன்னித்து அருள்வாயாக என்று மண்டியிட்டான்  நண்பர்களே  எந்த ஒரு செயலையும்  இறை அன்போடு நினைத்து செய்யுங்கள் ,,,,அவனது அருளால் எல்லோருக்கும் அது  நன்மையாகவே  நடக்கும்.

நன்றி:-திருமதி,ரமா சங்கர்.

24 May 2017

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு

சித்தர்களுக்கெல்லாம் தலைமை சித்தராய் விளங்கும்,முருகனின் பரிபூரண அருளாசி பெற்று,தமிழுலகில் நன்கு அறிமுகமானவரும்,தமிழ்  தந்த அகத்திய மகரிஷி பற்றி இந்த பதிவில் காண இருக்கின்றோம். அகத்தியர் கூறும் அறிவுரை மூலம் தொடர்வோம்.


அகத்தியர்அறிவுரை! 

"பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." 



மேற்சொன்ன அகத்தியரின் அறிவுரை மீண்டும் மீண்டும் படித்து பாருங்கள். வாழ்வின் உன்னதம் புரியும். நமக்கேன் இந்த துன்பம் வந்தது என்று யோசித்து,யோசித்து மேலும் மேலும் துன்பப்படாமல் வாழ அகத்தியரின் அருளாசி கிட்டும்.அகத்தியரின் வரலாறை கொஞ்சம் பார்க்கலாமா?


 அகத்தியர் வரலாறு


பெயர் : அகத்தியர் (அ) அகஸ்தியர் (அ) குடமுனி (அ) கும்பயோகி (அ) கும்பமுனி (அ) பொதிகைமுனி

பிறந்த மாதம் : மார்கழி

பிறந்த நட்சத்திரம் : ஆயில்யம்

குரு : சிவன்

சீடர்கள் : போகர், மச்சமுனி

மனைவி : லோப முத்திரை (விதர்ப நாட்டு மன்னனின் மகள்)

மகன் : இத்மலாகன் (அ) சங்கரன்

சமாதி : அனந்தசயனம் (திருவனந்தபுரம்), கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவில் என்றும் கூறுவார்.

வாழ்நாள் : 4 யுகம் 48 நாட்கள்


இவர் பொதிகையில் தவம் செய்ததால் “பொதிகைமுனி” என்றும், கும்பத்தில் பாய்ந்ததால் “கும்பமுனி” என்றும், அகத்தினுள்ளே ஈசனைக் கண்டதால் ‘அகத்தியர்” என்றும் அழைக்கப்படுகிறார். இவர் பற்றித் தமிழிலும், வடமொழியிலும் புராணக் கதைகள் பல உள்ளன. இவர் பேராற்றல் கொண்ட முனிவராகவும், இலக்கியம், இலக்கணம், இசை, மருத்துவம், சோதிடம் உளவியல் முதலான பல்கலை வல்லுநராகவும் கருதப்படுகின்றார். இவர் பெயரால் பல மருத்துவ நூல்களும், சோதிட சாத்திரங்களும் உள்ளன. இவர் முருகக் கடவுளின் ஆணைப்படி முத்தமிழுக்கு இலக்கணமாக இயற்றியது அகத்தியம் என்பர். இதனைப் பேரகத்தியம் என்றும் கூறுவர். இதில் 12000 சூத்திரங்கள் இருந்தன என்பர். சித்த மருத்துவ முறைகளை வழங்கிய முனிவர் என்றும் அகத்திய முனிவர் குறிப்பிடப்படுகிறார்




              வடக்கே இமயமலையும் தெற்கே பொதிகை மலையும் இவருக்கு ஒன்றே. தமிழும், மருத்துவமும், ஜோதிடமும், இறைபக்தியும் இவரிடம் இருந்து மணம் பரப்பின.பதினென் சித்தர்களில் மிக பிரபலமானவர் என்றால் அது அகத்தியர் தான். தெய்வங்களுடனும், மன்னர்களுடனும் தொடர்பு படுத்தி அறியப்படும் சித்தர் இவர். சித்த வைத்தியத்தின் பிதாமகர்களில் இவர் முதன்மையானவர்.தமிழகத்தில் உலா வந்த மாபெரும் சித்தரான இவர், பழந்தமிழ் பாடல்களிலும் சரி,தேவாரம் முதலான பக்தி இலக்கியங்களிலும், வேதங்களிலும் சரி, இவர் பற்றிய பல குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன. வேதகாலத்து சப்த ரிஷிகளில் ஒருவராக போற்றப்படும் அகத்தியர் குறித்து எண்ணற்ற செவிவழி கதைகளும் கூறப்படுகின்றன. இல்லறத்தில் துறவறத்தை கடைப்பிடித்தவர் அகத்தியர். இவர் எழுதிய சமரச ஞானம் என்ற நூலில் உடம்பில் உள்ள முக்கிய நரம்பு முடிச்சுக்கள் பற்றி மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

               அகத்தியரின் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. கீழ்காணும் அகத்தியர் திரைப்படம் மூலம் அவரைப் பற்றி தொட்டு காட்டி உள்ளார்கள். இப்பதிவை வாசிக்கும் அனைத்து நல் உள்ளங்களும் மீண்டும் ஒரு முறை பார்க்கவும்.




அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.


அகத்தியம் :

அகத்தியம் என்று இங்கு சொல்ல வருவது அகத்தியரை பூஜித்தல். அகத்தியரை வணங்க நம்முள் அன்பு பெருகும். அன்பு  பெருக கருணை மிகும்.இந்த அன்பும்,கருணையும் கொண்ட நிலையே அகத்தியம். அகத்திய அடியார்கள் ஒவ்வொருவரும் அன்பும்,கருணை மிக்கோரை இருப்பார்கள் என்பது உறுதி. இந்த அகத்திய நிலை எய்திய பின்,ஒவ்வொருவரும் தங்களை சமூக சேவைகளில் ஈடுபட்டு, பிறவியின் பலனை அனுபவிப்பார்கள். 



"நெஞ்சார நினைப்பவர்க்கு
நிழல் ஆவானை
நீங்காதோர் குலம் தழைக்க
நிதியாவானைச்
செஞ்சொலி வயற்பொழில்சூழ்
தில்லை மூதூர்ச்
சிலம்பொலி போல் பாடுகின்ற
சித்தன் தன்னை
வெஞ்சாபமுமில்லை
ஒரு வினையுமில்லை
வேலுண்டு துணைவருங்கால்
வெற்றியுண்டாம்
அஞ்சாதீர் என்று
யுகயுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை
அகத்துள் வைப்போம்."

அருட்குருவாம் அகத்தியரை  மனமார பூஜித்தால் நோயும், வறுமையும், பகைமையும், மன உளைச்சல் நீங்கும். மேலும் அகத்தியரை வணங்க  தனக்கும் தன் சந்ததிகளுக்கும் செல்வநிலை பெருகச் செய்வார். மேலும், அகத்தீசரின் பாடல்கள் அத்தனையும் வளப்பம் பொருந்திய தில்லைவாழ் அம்பலவாணரின் கால் சிலம்பொலிபோல் கேட்க இனிமை உடையதாக இருக்கும். காரணம் அவரின்  பாடல்கள் அத்தனையும் பிறவிப்பிணிக்கு மாமருந்தாக இருப்பதால் படிக்கவும், கேட்கவும், சிந்திக்கவும் இனிமை உடையதாக இருக்கும். அகத்தியரை  பூஜித்தால் அறியாமை காரணமாக பல ஜென்மங்களில் செய்த பாவத்தால், பிறரால் சபிக்கப்பட்ட கொடுஞ்சாபங்களும் நீங்கும், பாவங்களும் நீங்கும். அதுமட்டுமல்லாமல் "முருகா! " என்றால் ஈரேழு பதினான்கு லோகமும் கிடுகிடுவென நடுங்கும் ஆற்றல்பெற்ற ஆசான் சுப்ரமணியரின் வேல்படை நமக்கு உற்றதுணையாக இருக்கும். மேலும் வெற்றிகளும் உண்டாகும். தொடர்ந்து அகத்தியரை  மனதுள் வைத்தால்  நாம் எத்தனை பிறவிகள் எடுத்தாலும்  குருவாக வந்து "அஞ்சேல்! " என்று ஆட்கொண்டு அருள்செய்வார். எனவே அகத்தியம் எய்த, அகத்தியரை மனம்,மொழி,மெய்களில் ஆட்கொள்ளச் செய்வோம் 


அகத்திய அடியார்கள் ஒவ்வொருவரும் கீழ்க்கண்ட பிரார்த்தனையை தினசரி தவறாது மேற்கொள்ளவும்.

பிரார்த்தனை 1

அகத்திய பெருமானே ! அற வொழுக்கதொடு வாழ வேண்டும்.நான் செய்த கொலை கருமங்களிலிருந்து எம்மை காப்பாற்றுவாயாக!
நான் இனி நினைக்கும் மனம்,மெய்,மொழி இம்மூன்றில் அடங்கி உள்ள 10 தீய குணங்களில் இருந்து காப்பாயாக ! முறையே 
எதையும் விரும்புதல்,காமப் பற்று, கொலை செய்ய நினைத்தல்,பொய்யுரைத்தல்,கோள் சொல்லல்,சினந்து பேசுதல்,பயனில் கூறல்,
களவாடுதல்,வீணாக தொழில் புரிதல்,கொலை செய்தல் ஆகியவற்றை அறவே நீக்கிட வேண்டும்.தீயவருடன் சேராமல் விலகி இருத்தல் 
வேண்டும்.உத்தம குணமுடையோருடன் இணைந்து நேசித்து வாழ வேண்டும்.எனது வருவாய்க்கேற்ப வறுமைப்பிணி,மனத்துயரம் இவற்றால் 
வருந்துவோரையும்,இறப்பவரையும் ஆதரித்தும்,தீயவர்க்கும்,நல்லவர்க்கும்,பகைவர்க்கும்,நன்மையே புரிந்து குணம் அடைய வேண்டும் .

பிரார்த்தனை 2

இறைவனே.! அகத்தீசனே! என்னை பாவ மன்னிப்பு கோருபவர்களில் ஒருவனாக ஆக்குவாயாக.இன்னும் பரிசுத்தமுடையவர்களில் ஒருவனாக 
ஆக்குவாயாக.உன்னுடைய உத்தம அகத்திய அடியார்களில் ஒருவனாக ஆக்குவாயாக.நீ மிகத் தூய்மையானவன் அகத்தியனே! நான் உன் 
புகழைக் கூறுகின்றேன்.என்றும் எமது வேண்டுதலுக்குரிய தலைவனே! எமக்கு உம்மைத் தவிர வேறு யாருமில்லை. உன்னிடம் எம் கர்மவினை 
தீர பாவ மன்னிப்பு கோருகின்றேன்.சமாதானம் அனைவர் மீதும் உண்டாவதாகுக.எல்லாப் புகழும் சர்வேஸ்வரனான அகத்தீஸ்வரனுக்கே உரியதாகுக.

பிரார்த்தனை 3

அகத்தீசனே ! உம்மை பிரம்ம முகூர்த்தத்திலே தொழுவது தூக்கத்தை விட சிறந்ததாகும்.வெற்றி ஒருவர் பெற வேண்டுமெனில் உன் நாம 
ஜெபம் ஒன்றே தாரக மந்திரமாகும்.ஏன் எனில் நீர்! மெய்யே உரைத்தீர்.தவம் செய்தீர். சத்தியத்தை பகன்றீர்.எங்கள் புனித அழைப்பிற்கு 
நிலைப்பாடான வேண்டுதலுக்கு உடையவனே.உயர்நிலையில் எங்களை உயர்த்தி அருள்வாயாக நிச்சயமாக நீரே..எங்களை காப்பாற்றி அருள்வீராக.

 அகத்தீசனே! நாங்கள் நிச்சயமாக உன்னிடமே உதவி தேடுகின்றோம்.உன்னிடமே பாவ மன்னிப்பு கோருகின்றோம்.உன்னைக் கொண்டே 
நம்பிக்கை கொள்கின்றோம்.உன்னிடமே பொறுப்பு வைக்கின்றோம்.நன்மைக்காகவே உன்னையே தொழுகின்றோம்.உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.எனவே உமக்கு மாறுபாடு செய்ய மாட்டோம்.உமக்கு பாபம் செய்கிறவனை விட்டு ஒதுங்கிக் கொண்டு விடுகிறோம். என்றும் 
அகத்தீசனே நாங்கள் உன்னையே வணங்குகிறோம்.தலை தாழ்ந்து பணிதல் செய்கின்றோம். உம்மிடமே நாங்கள் அன்பு செலுத்த விழைகிறோம்.வழிபட்டு நடக்கின்றோம்.அனைத்து துன்பத்திலிருந்து இந்த அகிலத்தை காத்திட வேண்டும்.


அடுத்து இங்கே நாம் அகத்திய அடியார் ஒருவரின் அனுபவ நிலையை அவரின் வரிகள் மூலம் காண்போம்










நன்றி : திருமதி.நளினி 

மேற்கண்ட அகத்திய அனுபவ நிலையை வைர வரிகளில் பதிப்பித்த திருமதி நளினி அவர்களுக்கு TUT குழுமம் வாயிலாக நன்றியை 
தெரிவித்து கொள்கின்றோம்.

- அகத்தியம் மேலும் தொடரும் ...