பசுமை நிறைந்த செடிகளும், புல்வெளிகளும் நிறைந்த ஒரு கல்லூரி வளாகம். ஆங்காங்கே கும்பல் கும்பலாக மாணவ மணிகள் சேர்ந்து ஒருவரை ஒருவர் கிண்டல் கலாட்டா செய்து பொழுது போக்கிக் கொண்டிருந்தார்கள். அங்கு போடப்பட்டி ருக்கும் சிமெண்ட் பெஞ்சில் சில பேர் படிப்பது போல பாவனை செய்து கொண்டும். ஜாடையாக பேசிக்கொண்டும் இருந்தார்கள்.
கல்லூரி மணி அடித்தது. வகுப்பிற்குச் செல்ல எழுந்த மாணவர்கள் யாரையோ எதிர்பார்த்து நிற்பது போல சற்று தயங்கி நின்றார்கள். நேரம் ஆகிவிட்டதே இன்னும் வரவில்லையே என்ற கேள்வி அவர்கள் கண்களில் தொக்கி நின்றது. அந்த நேரத்தில் ஒரு மெரூன் நிற கார் வேகமாக வந்து நின்றது. இறங்கியது ஒரு தேவதை. லெமன் கலர் சுடிதாரில் கூந்தல் பறக்க அழகு தேவதையாக நின்றாள். சிறிய நெற்றி, பிறை போன்ற புருவம், சிரிக்கும் கண்கள் என வர்ணித்துக் கொண்டே போகலாம். அவளைப் பார்த்தவுடன் ஹாய் திவ்யா என ஒரு சேர அனைவரும் குரல் கொடுத்தனர். மேற்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவி அவள். அனைவரும் சேர்ந்து வகுப்பில் நுழைந்தனர்.
திவ்யா பின்னாலே சுற்றும் இளைஞர் பட்டாளம் ஏராளம். ஆனால் அவள் அனைவரிடமும் நட்புடனே பழகுவாள். பெற்றோரை தெய்வமாக மதிக்கும் சிறிய பெண். வீட்டிற்கு ஒரே பெண் குழந்தை. தந்தை காவல் துறையில் ஆணையராக உள்ளார். தாய் குடும்பத்தலைவி.அழகான அளவான குடும்பம் அவர்களது. தகப்பன் மேல் உயிரையே வைத்திருக்கும் பெண் அவள். வீட்டிலும் சரி வெளியிலும் சரி எப்போதும் பட்டாம்பூச்சி போல சுறுசுறுப்பாக இருப்பாள்.
கலகலவென சத்தம் கேட்டுக்கொண்டு இருந்த வகுப்பறை புரஃபஸர் உள்ளே வந்தவுடன் நிசப்தமானது. வணக்கம் தெரிவித்துவிட்டு அவர் தம் பாடத்தை தொடர்ந்தார் . அப்படியே இரண்டு மூன்று வகுப்புகள் முடிந்து உணவு இடைவேளை வரும் நேரம். அலுவலக உதவியாளர் வந்து திவ்யாவை பிரின்சிபால் அழைப்பதாகச் சொன்னார். அலுவலக அறையில் அவள் காதால் கேட்ட விஷயம் அவள் உயிரையே உலுக்குவதாக இருந்தது.
அவள் தந்தை ஒரு கொலையாளியை பிடிக்க வேண்டிய முயற்சியில் நடந்த கைகலப்பில் அவர் நெஞ்சில் குண்டு பாய்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வந்த தகவல் அவளை துடிக்கச் செய்தது. தன் காரை எடுத்துக்கொண்டு பறந்தாள். அங்கே உள்ளே நுழைந்தவுடன் அவள் கண்ட அவள் தாயின் முகம், அதில் தெரிந்த பயம் அவளை மேலும் கவலையுறச் செய்தது. அவள் தந்தை ICU அறையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்களும் செவிலியர்களும் உள்ளே வெளியே என்று பாய்ந்தோடிக் கொண்டிருந்தார்களே தவிர தாய்க்கும் மகளுக்கும் எந்த பதிலும் சொல்லவில்லை. மிக நீண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு வெளியில் வந்த தலைமை மருத்துவர் மார்பில் பாய்ந்த குண்டை அகற்றிவிட்டோம். இனி உயிர் பயம் இல்லை கண் விழித்தவுடன் போய் பாருங்கள் என்றார். இருவருக்கும் முக வாட்டம் குறைந்தாலும் கலக்கம் தீரவில்லை. கண்விழித்த அவர் முன்னால் நின்ற அவர்களுக்கு கண்ணீர் நிற்கவில்லை.
சில நாட்கள் மருத்துவ வாசத்திற்கு பிறகு வீடு திரும்பிய அவர் முதலில் அழைத்தது தன் மனைவி மகளைத்தான். தான் ஒரு தீர்மானமான முடிவு எடுத்திருப்பதாகச் சொன்னார். அது என்னவாக இருக்கும் என்ற ஆவலில் அவர் முகம் பார்த்தனர். மகளின் தலை முகம் தடவி தாடையை பிடித்து முத்தம் வைத்தவர் கண்களில் தெரிந்த பாசத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. அவர்களிடம் இந்த குண்டு பாய்ந்த நிகழ்வும் மருத்துவமனை வாசமும் எதற்கும் கலங்காத என் மனதை அசைத்து பார்த்துவிட்டது. அதனால் நாங்கள் உனக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம். உன் மனதின் ஆசைகளும் படிப்பு மீதான கனவுகளும் இந்த அப்பாவுக்கு தெரியும். இருந்தாலும் உன் அனுமதி வேண்டி நிற்கிறேன். அவர் பேசியதை கேட்ட அந்த தாயின் கண்களும் நீரைச் சொரிந்தன. நல்ல விஷயம்தான். இருந்தாலும் பட்டென்று அது தீர்மானிக்கப்பட அவளும் அவள் அன்னையும் அவர் முகம் பார்த்து நின்றனர். அவள் தன் Ph.D கனவு கானல் நீரானதை உணர்ந்தாலும் வெளிக்காட்டாமல் உங்கள் விருப்பம் அப்பா நீங்கள் எது சொன்னாலும் சம்மதிக்கிறேன் என்று அவர் மனதை குளிர்வித்தாள்.
அதன்பின் எல்லாம் மளமளவென்று நடந்தது. அவருக்குத் தெரிந்த உறவினர் மூலம் வந்த வரன் தான் ஜெயந்தன். நல்ல குடும்பம்.ஒரே பையன். பெற்றோர் இருவரும் அரசாங்க பதவியில் இருப்பவர்கள். ஜெயந்தன் இன்ஜினியரிங் முடித்து கணிப்பொறி துறையில் பெரிய பதவியில் இருக்கிறான். நல்ல சம்பளம். ஆளும் பார்க்க திவ்யாவிற்கு ஏற்ற ஜோடியாகத்தான் தெரிந்தான். பையனும் நல்ல குணம். ஒரே பையனாகப் பிறந்ததால் ரொம்ப பிடிவாதம் அதிகம். தான் சொல்வது தான் சரி என்பான். மற்றபடி ஏதும் குறை சொல்ல முடியாது. இரு குடும்பங்களின் சம்மதத்துடன் அடுத்தடுத்து நடக்கவேண்டிய கல்யாண வேலைகள் நடந்து மண நாளும் வந்தது. இருவரும் தொலைபேசியில் உரையாடினாலும் நேரில் பார்க்கும் அந்த தருணம் எல்லோருக்கும் மிக முக்கியமானது. தனித்தனியே அழைத்து வரப்பட்ட இருவரும் மேடையில் நிற்கும் அந்த நேரம் இருவர் மனமும் இருந்த நிலையை புகைப்படக்காரர்கள் அழகாக படம் எடுத்தனர்.
இருவருக்கும் ஒரே மைண்ட் வாய்ஸ்) பாடல் தான்.
முன்பே வா என் அன்பே வா!
உணர்வே உயிரே வா!
மணமக்களைச் சுற்றி இருந்த அனைவரின் முகத்திலும் சந்தோஷம் தாண்டவமாட முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆசியுடன் திருமணம் இனிதே முடிந்தது. மற்ற சடங்குகள் முடிந்து மணமக்கள் வீடு திரும்பி தங்கள் வாழ்க்கையை தொடங்கினர்.
தேன்நிலவு முடிந்து உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு போன இடத்தில் புறப்பட கொஞ்சம் காலதாமதம் ஆகிவிட அவன் முன்கோபம் எட்டிப்பார்த்தது. தேவையற்ற வார்த்தைகளை அவளிடம் கொட்ட வைத்தது. கண் கலங்கி நின்றவள் கொட்டப் போகும் கண்ணீரை வெளிவிடாமல் உள்ளிழுத்து புன்சிரிப்பு மாறாமல் நின்றாள். அவள் முகம் வாடியதை தாங்காத அவன் மனம் பேச தெரியாமல் பேசினால் நாம் பேசும் வார்த்தைகள் மாறுபடும் என்று தெரியாமல் வார்த்தைகளைக் கொட்டினான். நான் உன்னை கொடுமை படுத்துகிறேனா என்று குதித்தான். உறவினர்கள் விபரம் புரியாவிட்டாலும் வேதனைப்பட்டனர். பையனின் பெற்றோர் செய்வதறியாது மனம் பதைத்து நின்றனர். எல்லோரது முகத்தையும் பார்த்தவள் நேரே வந்து தன் மாமியாரின் கைகளைப் பிடித்தாள். அத்தை "அவர் என் அப்பாவை போல ' பாசத்தில் பேசத் தெரியாமல் பேசுகிறார் . நீங்கள் வருத்தப்பட வேண்டாம் என்றாள். தங்களை மாதிரியே அவளும் இந்த சில நாட்களிலேயே அவனை புரிந்து கொண்டாளே என்று அந்த தம்பதியர் மனநிறைவு கொண்டனர்.. அவனும் அவள் நேசம் புரிந்து தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான்..அவள் தொடர்ந்து என் கணவர் என் அப்பாவைப் போல என் மனம் புரிந்து எனக்கு துணையாக இருப்பார் என்றாள்.
அம்மாவை போல மனைவி வேண்டும் என்று அரசமரத்தடியில் அமர்ந்த விநாயகர் போல அப்பாவை போல கணவன் வேண்டும் என நினைக்கும் திவ்யாவை போல பெண்களும் இந்த காலத்தில் இருக்கின்றார்கள் போலும். எல்லோர் மனதிலும் நிம்மதியும், சந்தோஷமும் வந்தது. இனி அவளும் தன் அப்பாவின் ஆசையான Ph.D படிப்பை தன் கணவன் துணையுடன் முடித்து வளமுடன், நலமுடன் வாழ வாழ்த்தி விடைபெறுவோம்.
நன்றி:-ஸ்ரீதர் மேடவாக்கம்.
No comments:
Post a Comment