Subscribe

BREAKING NEWS

03 May 2017

முத்து வடுகனாத வாத்தியார் சித்தர் திருக்கோவில்...



ஆன்மீகம்  நம்  மனதில் வேரூன்றி விட்ட நிலையில் நாம் பல திருக்கோவில்களுக்குச் சென்று வருகின்றோம். கோவில்களில் நமக்கு கிடைக்கின்ற அதிர்வலைகளை விட சித்தர்களின் ஜீவ சமாதிகளில் நமக்கு அதிகமாகவே மன அமைதியும் புத்துணர்ச்சியும் கிடைக்கின்றது எனலாம் ..
அதில் ஒன்றுதான் நாம் தற்போது தரிசனம் செய்து வந்த மிக பழைமையான அருள்மிகு முத்து வடுகனாதர் சித்தர் திருக்கோவில்.  மதுரை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புனரியில் அமைந்துள்ளது இந்த சித்தர் ஜீவ சமாதி. இதனை ஐயா கோவில் என்று அழைக்கின்றார்கள்..
கோவிலின்   உள்ளே சென்றவுடன் முதலில் 18 படிகள் மேலேறிச் செல்ல வேண்டும்.
 18 படிகள்

 சென்றபின் வலது பக்கத்தில் வினாயகரும் இடது பக்கத்தில் முத்து கருப்பண்ண சாமி சிலையும் அமைந்துள்ளது. மையத்தில் உள்ளது முத்து வடுக நாதர் சிலை. அவரை தரிசித்த பின்னர் ஸ்தலத்தில் உள்ள அனைத்து சிலைகளையும் வணங்கிய பின்னர், கடைசியாக நாகர் சிலைகளையும் தரிசித்தோம்..பின்பு கடைசியாக தியானத்தில் அமர்ந்தோம். மனம் சட்டென்று ஒருமுகப்படுகின்றது. அத்துனை அமைதி அங்கே ! அதனை சொன்னால் புரியாது. அனுபவித்தால் மட்டுமே புரியும். நாம் விசாரித்ததில் பவுர்ணமி காலங்களில் மிக அதிகமாக கூட்டம் வரும் என்று சொன்னார்கள். மற்ற நாட்களில் சாதாரண கூட்டமே..
கருப்பண்ண சாமி சிலை

முத்து வடுக நாதர் சிலை


ஸ்தல தோற்றம்..

7 தலைமுறைக்கு முன்னால் நெடுந்துயர்ந்த மலை.  சூரி்ய வெளிச்சத்தினையும் அனுமதிக்காத அந்த காட்டில் தினமும் போவதும் வருவதுமாக இருந்தாராம் முத்து வடுகனாத சித்தர்.  பார்க்கும்போது ஒரு சித்தருக்குரிய ஒரு கம்பீரமான தோற்றம் இருந்த அவரை வடுகனாத சித்தர் என எல்லோரும் அழைத்தார்கள்.
..ஒரு நாள் அவரை பார்க்க வந்த ஒரு சிற்பி தனக்கு வாரிசு இல்லாத குறையைச் சொல்லி வருத்தப்பட்டார்.  அதைப் பார்த்து மனம் இரங்கிய சித்தர்  ஒரு சிலை செதுக்குவதற்கு கல் ஒன்றை எடுத்துவரச் சொன்னார்.  சிற்பி தகுந்த கல்லை எடுத்து வந்ததும் அவர் தவக்கோலத்தில் திளைத்து, அதைப் பார்த்து அப்படியே சிலை வடிக்கச் சொல்லிவிட்டு தானும் தவத்திலேயெ மூழ்கி விட்டார்.  முழு சிலையை சிற்பி செதுக்கி முடித்ததும் தவத்தில் இருந்து வெளியே வந்து தன்னுடைய தவ வலிமை அனைத்தையும் அந்த சிலைக்குள்ளே ஏற்றினார் அந்த சித்தர்...அந்த சிலையை வணங்கினால் பிள்ளை இல்லாதவர்க்கு பிள்ளை வரம் கிடைக்கும் எனச் சொல்லி இருக்கிறார் அந்த சித்தர்..அவர் சொன்னபடியே சிலையை வணங்கிய சிற்பிக்கு கூடிய விரைவில் குழந்தை பாக்கியம் கிடைத்தது. தான் ஜீவ சமாதி அடைந்த பிறகு அந்த சிலையை தன் ஜீவசமாதிக்கு மேலே வைத்து வழிபட குழந்தை இல்லாதவர்களுக்கு  குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனச்சொல்லி இருக்கிறார் அந்த சித்தர்..அவர் சொல்லியது போல்  இன்றைக்கும் குழந்தை  இல்லாத தம்பதிகள் வழிபட்டு பலனை அடைந்து வருகிறார்கள் அங்கு வருகின்ற பக்தர்கள். அதுமட்டுமல்ல பில்லி சூன்யம் பாதிக்கப்பட்டர்வளுக்கும் இங்கு சிறந்த பலன் கிடைக்கின்றது.எந்த ஒரு பிரச்சனை தன் குடும்பத்தில் ஏற்பட்டாலும் , அந்த மாதிரி பிரச்சினைகள் இனிமேல் தன் குடும்பத்தில் ஏற்படக் கூடாதென்று வேண்டுவோமானால் ..அதன் பின் அந்த மாதிரி பிரச்சினை வருவது இல்லையாம்..ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் தான் இந்த முத்து வடுக நாதர் சுவாமிகளின் ஜீவ சமாதியை 7 தலைமுறைகளாக  பராமரித்து வருகிறார்கள். ஆரம்ப காலத்தில் வராகி அம்மனை வழிபட்டிருககிறார் இந்த சித்தர்.  அவரின் நினைவாக வாரத்தில் ஒரு நாள் பெண் தெய்வங்களின் உருவங்களை அவருடைய சிலைக்கு அலங்கரிக்கின்றாற்கள். நாம் பார்த்ததும் அப்படி ஒரு காட்சிதான்..

வாய்ப்பு கிடைப்பவர்கள் மதுரை பக்கம் சென்றால் இந்த அய்யாவையும் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்...


அக் கோவில் முகவரி:-

 முத்து வடுகர் சித்தர் திருக்கோவில்
செல்வ வினாயகர் கோவில் தெரு,  சிங்கம்புனரி பேருந்து நிலையம் பின்புறம் .சிவகங்கை மாவட்டம்..630502..
பேருந்துகள்..மதுரையில் இருந்து 47 கி .மீ. திண்டுக்கல்லில் இருந்து 58 கி.மீ.
கோயம்புத்தூரில் இருந்து 216 கி.மீ. கொட்டாம் பட்டியில் இருந்து 7 கி.மீ.தூரத்திலும் உள்ளது.
கோவில் நடை திறப்பு நேரம்:-திங்கள் முதல் வியாழன்
வரை காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மாலை: 4.00 மணி முதல் இரவு  8.00 மணி வரை.
வெள்ளி: காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
பவுர்ணமி: 24 மணி நேரமும்.