Subscribe

BREAKING NEWS

17 May 2017

தர்மம் தலை காக்கும்.எப்படி தெரியுமா? ...

ஒரு அழகான, அற்புதமான ஊர் காஞ்சிபுரம். ஊரைச் சுற்றி கோவில்கள் என்பதை விட கோவில்களைச் சுற்றி ஊர் எனச் சொல்வது சாலப் பொருந்தும். சோழர்கள், பல்லவர்கள் நடந்த பொன்னான வழித்தடங்களைச் சுவாசிக்கும் ஊர் எனலாம். "நகரேஷீ காஞ்சி" என்பார்கள்.  நம் கதையின் நாயகரான சாம்பசிவ ஐயர், அவர் மனையாள் காமாட்சி மற்றும் குழந்தைகளுடன் இங்குதான் வசிக்கின்றார். தனக்குப் பின் மகன் வாரிசு வேண்டும் என்ற ஆசையில் மூன்று பெண் பிள்ளைகள் பிறந்த பின் நான்காவதாக கணேசன் பிறந்தான். மகேஸ்வரி, மல்லிகா, மாளவிகா என்று பெண்களுக்குப் பெயர் வைத்திருந்தார். அங்குள்ள பழைமையான கோவிலில் கணக்கெழுதும் உத்யோகம்.


சொற்ப வருமானம்தான். எப்படியோ இழுத்துப் பிடித்து பெண்களை திருமண வயது வரை வளர்த்து விட்டார். மூன்றாவது பெண்ணுக்குப் பிறகு சில வருட இடைவெளிகளில் கணேசன் பிறந்ததால் கல்லூரியின் இரண்டாவது வருடப் படிப்பு நடந்து கொண்டிருந்தது. 
இப்படியிருக்க பக்தியில் தம்பதியர்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர். வாரத்தில் பாதி நாட்கள் ஏகாம்பரேஸ்வரர் கோவிலே கதியேன்றிருப்பார்கள். எந்த கஷ்டத்திலும் அவர்கள் சக்திக்கேற்றவாறு பிடியரிசி தினமும் எடுத்து வைத்து கோவில்களுக்குக் கொடுப்பதும், முடியும் போது அன்ன தானம் செய்வதுமான வழக்கங்களைக் கொண்டிருந்தனர்.  அவர்களின் பரம்பரையும் தான, தர்மங்களில் சிறந்தவர்கள்தான். சொத்து சேர்க்கா  விட்டாலும் புண்ணியத்தை சேர்த்துக் கொண்டிருந்தார்கள். 
ஒரு நாள் கோவிலில் நட்பு முறையில் மாமியின் சிநேகிதிகள் "என்ன காமாட்சி பெண்களுக்கு வயதாகிக் கொண்டிருக்கின்றதே; இன்னும் மூத்தவளுக்கே வரன் பார்க்கத் தொடங்கவில்லையே" என கேட்க ஆரம்பித்து விட்டனர். கையில் ஒன்றுமில்லாமல் வரன் பார்ப்பது எப்படியென்றுதான் நானும் யோசித்துக் கொண்டிருக்கின்றேன் என்று மாமி பதிலுரைத்தார். ஏகாம்பரேஸ்வரரின் மேல் பாரத்தைப் போட்டு  ஜாதகப் பரிமாற்றத்தைத் தொடங்கினர் தம்பதியினர். நான்கு வரன்கள் பார்த்ததில், இவர்களின் நிலைமையறிந்த ஒரு குடும்பம் ஒத்து வந்தது. நடுத்தரக் குடும்பம்தான். ஆனால் ஓரளவு நிறைவான குடும்பம். அம்மா, பிள்ளை மட்டும்தான். பெண் பார்க்கும் படலம் முடிந்தது. இரு வீட்டாருக்கும் முழுச் சம்மதம். நிச்சயதார்த்தம் தனியாக வேண்டாமென்று அன்றே தாம்பூலம் மாற்றியாகி விட்டது.
நெஞ்சு நிறைந்த சந்தோஷம் அனைவருக்கும். வீட்டில் முதல் கல்யாணம் வேறு. அவ்வூரிலேயே சிறிய பழங்கால சத்திரத்தில் திருமணம் முடிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. நகைகளும் முடிந்ததைச் செய்தால் போதும் என்று மாப்பிள்ளை வீட்டில் சொல்லியிருந்தாலும், மாமாவிற்கும், மாமிக்கும் சேமிப்பு துளி கூட இல்லாததால் எல்லாவற்றிற்குமே எப்படி ஏற்பாடு செய்வது என்ற கவலையும் வந்து விட்டது. வழக்கம் போல் அம்மையப்பனின் கோவிலுக்குச் சென்று கவலைகளை கொட்டித் தீர்த்து விட்டனர். சாம்பசிவ ஐயருக்கு ஒன்று விட்ட அக்காள் ஒருவர் உண்டு. காஞ்சிபுரத்தின் அருகிலிருக்கும் திருப்புட்குழியில்தான் வசிக்கின்றார். 


அவருக்கு வாரிசு கிடையாது. இவருக்குப் பிறந்த பெண்களில் ஒருவரை சிறு வயதில் தத்து கொடுக்குமாறு கேட்டிருந்தார். ஆனால் தம்பதியர் பலமாக மறுத்து விட்டனர். எந்த கஷ்டத்திலும் ஒரு குழந்தையைக் கூட தத்து கொடுக்க அவர்களுக்கு மனமில்லை. ஆனாலும் அத்தை என்ற முறையில் அடிக்கடி வந்து பார்த்துச் சென்று விட்டும்,  சில நாட்கள் உரிமையாக தங்கி விட்டும் செல்வார். 
இருவரும் வீட்டுக்குச் சென்றதும் அவரது அக்காள் வந்திருப்பதைக் கண்டனர். நுழைந்தவுடனேயே "ஏன்டா சாம்பு; பெரிய மனுஷன் ஆகி விட்டாயோ? மகேஸ்வரிக்கு வரன் பார்த்ததையும், பெண் பார்த்து தாம்பூலம் மாற்றியதையும் என்னிடம் சொல்லக் கூடாதா? என அதிக உரிமையுடன் கோபித்துக் கொண்டார். சாம்புவும், இல்லை  அக்கா; எல்லாம் சட்டென முடிவாகி விட்டது. நீங்களும் தீர்த்த யாத்திரைக்குச் சென்றிருந்தமையால் உங்களுக்கு தகவலளிக்க முடியவில்லையன பணிவாக பதிலுரைத்தார். சரிடா கவலைப்படாதே; நானும் காமாட்சிக்குத் துணையாக இருந்து திருமணத்தை முடித்து வைக்கின்றேன் என பூரிப்புடன் சொல்ல எல்லோர் முகத்திலும் நிம்மதியை பார்க்க முடிந்தது. 
ஞாயிற்றுக்கிழமை மதியம். உணவு முடித்து அனைவரும் ஓய்விலிருந்தார்கள். அது கோவில் வீடாகையால் அந்தக் கால அமைப்பில் வாசலில் திண்ணை, தாழ்வாரம், முற்றம், படுக்கையறை, பெரிய சமையலறை, பின்கட்டும் அதில் சில மரங்களும், பூச் செடிகளுமாக இருந்தது. பெண்கள் அனைவரும் தோட்டத்தில் கதை பேசிக் கொண்டிருந்தனர்.  மாமா, மாமி, அத்தை மட்டும் கல்யாண ஏற்பாடுகள் பற்றி முற்றத்தில் பேசிக் கொண்டிருந்தனர். அத்தை கொடுத்தது, தெரிந்தவர்களிடம்  கை மாற்று வாங்கியது போக பணம் தேவைப்பட்டதால் என்ன செய்யலாம் என விவாதத்திலிருந்னர். 
அப்போது வாசலிலிருந்து யாரோ அழைக்கும்  ஒலி கேட்டது. சாம்பசிவம் எழுந்து பார்த்த போது முகம் தெரியாத ஒருவர் பை நிறைய பழங்களுடன் வந்திருந்தார். அவரை வரவேற்று உபசரித்த பின் விபரங்களைப் பேசலாயினர். ஐயா; நான் கடையநல்லுரிலிருந்து வருகின்றேன். என் தந்தை பெயர் உலக நாதன் என்றும், அவரின் தந்தையாருக்கு ஐயரின் தந்தை மிக நெருங்கிய நண்பர் எனவும் கூறினார். சாம்பசிவ ஐயருக்கும், வந்தவருக்கும் சம வயதுதானிருக்கும். 

சமீபத்தில் அவரது தந்தை தவறி விட்டதாகச் சொன்னார். அவருடைய பொருட்களை சுத்தம் செய்யும் போது பரணில் நிறைய புத்தகங்கள் கிடைத்ததாகவும், அத்துடன் ஒரு டைரியும் இருந்தது  எனவும், அதில் சாம்பசிவ ஐயரின் தந்தை வைத்தியநாத ஐயர்,  அந்த நாளில்  ஊரில் வசதியாக பெயர் பெற்ற குடும்பமாக இருந்ததாகவும் கூறினார். வந்தவரின் குடும்பம் வறுமையில் இருந்ததாகவும், அவரின் தந்தைக்கு அக்காலத்தில் தொழில் தொடங்க சாம்பசிவத்தின் தந்தைதான் மிகுந்த பண உதவி செய்ததாகவும் கூறினார்.அத் தொழில் நல்ல விருத்தி பெற்று அவர்களது குடும்பம் நல்ல முன்னேற்றம் காணும் போது ஐயரின்  குடும்பம் நொடிந்து வேறு ஊருக்குச் சென்று விட்டமையால், வசதி வந்தும் அப் பணத்தை திருப்பிச் செலுத்த சந்தர்ப்பம் அமையவில்லை என்றும், என்றாவது ஐயரின் குடும்பம் பற்றிய விபரங்கள் அறிய வந்தால் அவர்கள் கொடுத்துதவிய பணத்தினை திருப்பிக் கொடுத்தால்தான் அவர் மனம் அமைதி அடையும் என அந்த டைரியில் எழுதியிருந்தததாகச் சொன்னார். சமீபத்தில் இரு குடும்பத்திற்குத் தெரிந்த நண்பர் மூலம் இருப்பிடம் மற்றும் ஐயரின் பெண் திருமணச் செய்தியை அறிந்ததாகவும், உடனே புறப்பட்டு வந்ததாகவும் சொன்னார். இந்த சமயத்தில் இத்தொகை திருமணச் செலவுக்கு உதவும் எனக் கூறி மாமியிடம் தாம்பாளம் கேட்டு வாங்கி, அதில் வெற்றிலை, பாக்கு, பூக்கள் பழங்களுடன் பட்டுப் புடவை மற்றும் பணக்கட்டையும் வைத்துக் கொடுத்தார். மூவரும் பேசுவதறியாது மலைத்து நின்றனர். அவ்வளவு நேரம் பேசிய பின்தான் அவர் பெயரைக் கேட்டனர். அவர் தன் பெயர் ஏகாம்பரம் என்று கூறியவுடன் அந்த ஏகாம்பரேஸ்வரரே அவர் மூலமாக இவர்கள் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்ததை நினைத்து கண்கள் பனிக்க பேருவகை அடைந்தனர். 
அத்துடன் இரண்டாமவள் மல்லிகாவிற்கும் கோவிலுக்கு அடிக்கடி வரும் பக்தர் ஒருவரின் மகன் வரனாக அமைய அதே மண்டபத்தில் இரு பெண்களுக்கும் ஒரே நேரத்தில் திருமணம் இனிதே அரங்கேறியது. 
அவர்கள் செய்த தான,  தர்மங்களால்தான் தக்க சமயத்தில் பலனடைந்தார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை.   
திருமணம் முடிந்தவுடன் குடும்பத்துடன் ஏகாம்பரேஸ்வரரை தரிசனம் செய்தனர். ஆனால் இந்த முறை "தழுவக் குழைந்த நாதர் " என்ன! நான் இருக்கும் போது வீண் கவலை எதற்கு? என்று சொல்லி புன் முறுவல் பூப்பது போல் அவர்களுக்குத் தோன்றியது.  நெஞ்சமெல்லாம் பூரிக்க அன்று அவர்களுக்குக் கிடைத்த சந்தோஷமும்,  நிம்மதியும் அளவில் அடங்காதது. 
ஆதலால் வாசகர்களே! நாமும் நம் வாழ் நாளில் நம்மால் முடிந்த அளவிற்கு உதவிகள் செய்வோம். அம்மையப்பன் அருள் பெறுவோம். 
நல்லதைச் செய்வோம்! அதனை இன்றே செய்வோம்.

நன்றி:- திருமதி,ரமா சங்கர்.

No comments:

Post a Comment