Subscribe

BREAKING NEWS

14 May 2017

இறைவனின் நாமத்தை சொல்லிக் கொண்டிருந்தால் சோறு கிடைக்குமா???...

  சிங்காரப்பட்டி அழகான ஊர், அந்த ஊரின் மையப்பகுதியில் அழகான ஓர் ஆலயம் இருந்தது. அந்த ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு பெரியவர் சற்சங்கம் நிகழ்த்தி வருவது வழக்கம். ஒரு நாள் “இறை” நாமத்தின் மகிமையைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார்.

 இறைவனின் நாமத்தைச் சொன்னால் (இந்த உலகத்திலும் மேலுலகத்திலும்) இகத்திலும் பரத்திலும் எல்லா நலன்களும் பெற்று வாழ முடியும் என்று கூறிக் கொண்டிருந்தார்.

 அப்போது ஒரு இளைஞன் அப்பெரியவரை பார்த்து கிண்டலாக இறைவனின் நாமத்தைச் சொன்னால் எல்லாம் கிடைக்கும் என்று கூறுகிறீர்களே, சோறு கிடைக்குமா ? என்றான்.

 உடனே அப்பெரியவர் தம்பி, இறைவனின் நாமத்தை சொன்னால் சோறும் கிடைக்கும், தேவைப்பட்டால் இறைவனே வந்து உனக்கு சோறு ஊட்டியும் விடுவார் என்றார்.

 அந்த இளைஞனுக்கு வைராக்கியம் ஏற்பட்டது. எப்படியாவது இறைவனின் நாமத்தைச் சொன்னால் சோறு கிடைக்குமா என்று பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு புறப்பட்டான்.

 வீட்டிலே சென்று இறைவா, இறைவா என்று கூறிக் கொண்டிருந்தால் இறைவன் வராமல் மயக்கம் ஏற்பட்டால் என்னை மருத்துவரிடம் அழைத்து செல்வார்கள். எனவே காட்டிற்கு செல்வோம் என்று காட்டிற்கு புறப்பட்டான்.



 ஒரு மரத்தடியில் அமர்ந்தான். காட்டிலுள்ள மிருகங்கள் ஒருவேளை என்னை தாக்கக்கூடும். அந்நிலை ஏற்பட்டால் அப்பெரியவர் கூறியது உண்மையா பொய்யா என்று தெரியாமல் போய்விடும் என்று நினைத்து மரத்தில் ஏறி, கிளையைப்பற்றி பிடித்துக்கொண்டு இறைவா, இறைவா என்று சொல்ல ஆரம்பித்தான், இறைவன் வரவில்லை.

 இவனுக்கு பசி ஏற்பட ஆரம்பித்தது. ஒருநாள் ஆகியது இறைவன் வரவில்லை, அவனுக்கு உடல் தளர்ந்தது. வார்த்தை குறுகியது, கண் மயங்கியது ஆனாலும் வைராக்கியம் தளரவில்லை.

 இறைவன் வந்து சோறு ஊட்டுகிறானா என்று பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இறைவா, இறைவா என்று சொல்லிக் கொண்டே இருந்தான். அடுத்த நாள் மதியவேளை ஒரு வழிப்போக்கன் கையிலே இரண்டு பொதி சாப்பாட்டுடன் வந்து அந்த மரத்தடியில் உட்கார்ந்து ஒரு பொதி சாப்பிட்டான்.

 உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பதற்கேற்ப சாப்பிட்டவன் படுத்து தூங்கி விட்டான்.

 சர, சர, என்றொரு சப்தம் படுத்திருந்த வழிப்போக்கன் விழித்து பார்த்தான், மூன்று திருடர்கள் வருவதைப் பார்த்தான்.


“தலைதப்பியது தம்புரான் புண்ணியம்” என்று தன்னிடம் இருந்த ஒரு பொதி சோற்றையும் விட்டு விட்டு ஓடினான்.

 மரத்தில் இருந்த இளைஞன் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான். ஆனாலும் அவனிடம் இருந்த வைராக்கியம் அவனை இறங்கவிடவில்லை. இறைவன் வந்து சோறு ஊட்டுகிறானா பார்ப்போம் என்று நினைத்து இறைவா, இறைவா என்று சொல்லிக் கொண்டேயிருந்தான்.

 அந்த நேரம் திருடர்கள் மூவரும் அதே மரத்தடியில் வந்து அமர்ந்தனர்.

 மூன்று திருடர்களும் தாங்கள் திருடிக் கொண்டு வந்த பொருட்களை பங்கு போட்டனர். அப்போது ஒரு திருடன் அந்த வழிப்போக்கன் விட்டு சென்ற சாப்பாட்டைப் பார்த்தான் அவனுக்கு சந்தேகம் ஏற்பட்டது யாருமில்லாத இந்த காட்டில் எப்படி இந்த சோற்றுப் பொட்டலம் வந்தது ? என்றான்.

 உடனே இரண்டாவது திருடன் யாராவது விஷத்தைக் கலந்து இதில் வைத்திருக்கலாம் ஆகவே இந்த பொட்டலத்தை வைத்தவன் இங்குதான் இருக்கவேண்டும், முதலில் அவனைத் தேடுவோம் என்று தேட ஆரம்பித்தனர். அங்கும் இங்குமாக சுற்றி சுற்றி தேடினர் யாரும் தென்படவில்லை, அப்போது ஒரு திருடன் மரக்கிளையை எட்டி நோக்கினான்.

 அங்கு ஒருவன் மரக்கிளையை பற்றிப் பிடித்துக்கொண்டு முனகிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

 திருடர்களுக்கு கோபம் வந்தது. மாட்டிக் கொண்டான் என்று கூறிக்கொண்டு அவனிடம் கீழே இறங்கி வாடா என்றனர் அவன் முனகிக் கொண்டேயிருந்தான்.

 உடனே ஒரு திருடன் இந்த பொட்டலத்தை இங்கு கொண்டுவந்து வைத்தது யார் என்று வினவினான்.

 அதற்க்கும் அந்த இளைஞன் இறைவா, இறைவா என்றே கூறினான். கடுங்கோபம் கொண்ட திருடர்கள் அந்த இளைஞனை அமர வைத்து ஒருவன் இரண்டு கைகளையும் பிடிக்க, மற்றொரு திருடன் இரண்டு கால்களையும் பிடிக்க, மூன்றாவது திருடன் இந்த விஷ உணவை நீயே சாப்பிடு என்று ஊட்டினான்.

 இளைஞனின் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் பெருகியது.

 “இறைவா, இறைவா” என்று சொன்னால் சோறு கிடைக்குமா என்றுதான் அப்பெரியவரிடம் கேட்டேன். அதற்கு அவர் சோறு கிடைக்கும், தேவைப்பட்டால் இறைவனே வந்து சோறு ஊட்டி விடுவார் என்றார், எனக்கு இப்போது சோறு தேவைப்பட்டது, என் கை கால் பிடித்து இறைவனே வந்து சோறு ஊட்டி விடுகிறார் என்றான்.

 என்னே இறை நாமத்தின் மகிமை ! இறைநாமமே கலியுகத்தில் இறைவனை அடைய எளிய வழி என்று எப்போதும் சொல்லுங்கள். நம்பிக்கையோடு சொல்லுங்கள், நலன்கள் எல்லாம் கிடைக்கும் !

நன்றி:-திருமதி,ரமாசங்கர்.