அவனின்றி ஓர் அணுவும் அசையாது - ஆம் கடவுளின் அருளின்றி துரும்பும் இங்கே அசைவதில்லை . திருக்குறளில் கடவுள் வாழ்த்துக்கு அடுத்து வான்சிறப்பை கூறி மழையை வள்ளுவனும் சிறப்பித்துப் போற்றுவதால், மழை கடவுளுக்கு அடுத்து நாம் கண்ணில் காணும் கடவுள் என்று சொன்னால் அது மிகையாகாது. இங்கே மண்ணுயிர்கள் வாழ்ந்து கொண்டிருப்பது மழையினால் தான்.அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பது போல மழையின்றி மண்ணுயிர்கள் வாழாது என்பது உண்மையே.
இவ்வுலகில் உள்ள புல்,பூண்டு முதலான மனிதன் வரை உள்ள ஆறறிவு உடைய மனிதர்கள் வாழ நீர் அவசியம்.இந்த நீரின் தோற்றம்
மழையின் மூலமே உருவாகின்றது. மாதம் மும்மாரி பொழிந்த காலம் உண்டு. வருடம் மும்மாரி பொழிந்த காலமும் உண்டு. இதென்ன ஆச்சர்யம்
என்று தோன்றுபவர்கள் விவேக சிந்தாமணியை படித்தால் புரியும்
வேதம் ஓதிய வேதியற்கு ஓர் மழை
நீதி மன்னர் நெறியருக்கு ஓர் மழை
மாதர் கற்புடை மங்கையருக்கு ஓர் மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே
மேற்கண்ட பாடல் மூலம் மாதம் மும்மாரி மழை பொழிய காரணம் ஒவ்வொருவரும் தன் கடமையைச் செம்மையாகச் செய்வதே.
தம் கடமை தவறும் போது, வருடம் மும்மாரி மழை பொழியும் என்று விவேக சிந்தாமணி பின்வரும் பாடல் மூலம் கூறுகின்றது
அரிசி விற்றிடும் அந்தனருக்கு ஓர் மழை
வரிசை தப்பிய மன்னருக்கு ஓர் மழை
புருடனைக் கொன்ற பூவையற்கு ஓர் மழை
வருடம் மூன்று மழையெனப் பெய்யுமே
ஆனால் இன்று மழை என்பது பெரிய கேள்விக்குறியாகி விட்டது ..மாதம் மும்மாரி மழை பொய்த்து, வருடம் மும்மாரி ஆகி ,தற்போது
வருடத்திற்கு ஒருமுறை பெய்வதே அதிசயமாகி விட்டது. வெயிலோடு விளையாடி என்றொரு திரைப் பாடல் நினைவிற்கு வரும்போதே..
மழையோடு உறவாடி என்று நினைக்க தோன்றுகின்றது. தற்போது உள்ள குழந்தைகள் மழையை புத்தகத்தில் வார்த்தையாக , திரையில் பார்த்திருப்பார்களோ என்று நினைக்க தோன்றுகின்றது.
வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்று கேட்டிருக்கின்றோம். ஆனால் மழையின் அருமை வெயிலில் அல்லவா தெரிகின்றது.
சற்று யோசித்து பாருங்கள். இயற்கை அளித்த கொடையாம் நீர் விலைக்கு விற்கப்படும் அவல நிலை ! இப்படி ஒரு நிலை ஏற்படும்
என்று கனவிலும் நினைக்கவில்லை. இந்த நிலைக்கு யார் காரணம்? நாமே..நாம் மட்டுமே .
மழைக்கு ஆதாரமான மரங்களை வெட்டினோம்.
விவசாய நிலங்களை அடுக்கு மாடி குடியிருப்புகளாக்கினோம்
சுற்றுசூழலை புறக்கணித்தோம்
மரபை மறந்தோம்
பாரம்பரியத்தை பழித்தோம்
என்று அடுக்கி கொண்டே போகலாம்.
இப்போதேனும் நாம் சற்று விழிக்க வேண்டும்.அப்போது தான் நம் தலைமுறை மழையில் நனைந்து வாழும். இப்பதிவை படிக்கும் ஒவ்வொருவரும் கீழ்காணும் செயல்களை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்.
1. ஒவ்வொருவரும் குறைந்தது 1 மரக்கன்றை நட்டு பராமரிக்க வேண்டும்
2. வீட்டினில் காய்கறி தோட்டம் அமைக்கவும்
3. பிளாஸ்டிக் பொருள்களின்(பாலிதீன் பை, பாட்டில் )பயன்பாட்டினை குறைக்கவும்.
4. குழந்தைகளிடம் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும்
5. கீழ்கண்ட வேதாத்திரி மகரிஷி அருளிய மழை வாழ்த்து பாடலை தினமும் காலையில் எழுந்த உடன் மற்றும் இரவில் உறங்கும் முன்பு -3 முறை கூறவும்
மழை வாழ்த்து
ஏரி குளம் கிணறு ஆறு எல்லாம் நிரம்பி வழிய
மாரி அளவாய் பொழிக! மக்கள் வளமாய் வாழ்க!
உலக நல வாழ்த்து
உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்
உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்
பலதொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்
பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்
கலகங்கள் போட்டிபகை கடந்தாட்சி நடக்கட்டும்
கல்லாமை கடன்வறுமை களங்கங்கள் மறையட்டும்
நலவாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞானஒளி வீசட்டும்
நம்கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்.
- வேதாத்திரி மகரிஷி
6. சமீபத்திய காலத்தில் குரு அகஸ்திய மகரிஷி கூறிய வாக்கு மழை வேண்டி வருண பகவானிடம் பிராத்திக்கும் மந்திரம் கூறி உள்ளார் இதை அனைவரும் கூட்டமாக வோ தனியாகவோ இடை விடாது கூறினால் மழை வரும் என்றும் குறிப்பாக வெள்ளிகிழமையில் மிகுந்த பலன் தரும் என்று கூறி உள்ளார்
"ஒம் வசி வசி வருண பகவானே கிருஷ்ணனின் நிறம் ஒத்தாய் கருணை பகவானே நாடியே உம்மை துதித்தோம் குரு மேல் ஆணை நிலம் ஏகுவாய்".