Subscribe

BREAKING NEWS

20 May 2017

நான் பண்ணாத தர்மம் இல்லை.செய்யாத திருப்பணி இல்லை. !!!பெரியவாவின் கதை.

ஒரு ஜமீன்தார் பரமாசார்யாளோட பரம பக்தர்னே
சொல்லலாம்.எத்தனையோ பாழடைஞ்ச
கோயில்களுக்கெல்லாம் கைங்கர்யம் பண்ணினவர்.
எதிர்பாராவிதமாக ஒரு சோதனை வந்து பெரிய அளவுல
நஷ்டம் ஏற்பட்டு மனசு உடைஞ்சு போயிட்டார்.தெய்வம்
கைவிட்டுடுத்தேன்னு ரொம்ப வருத்தப்பட்ட அவர்
சுவாமியைக் கும்பிடறதைக்கூட வெறுத்து நிறுத்திட்டார்.
அந்த சமயத்துலதான் பெரியவா கும்பகோணம் பக்கத்துல
முகாமிட்டிருந்தா.அவர் அங்கே வந்திருக்கிற தகவல்
தெரிஞ்சதும், மகாபெரியவா கிட்டேயே தன்னோட நியாயத்தைக்
கேட்டுடுவோம்னு உடனே பெரியவாளைப் பார்க்க வந்துட்டார்.
வெறும் கையோட வந்திருந்ததுலயே, விரக்தி பட்டவர்த்தனமா
தெரிஞ்சுது.வழக்கம்போல இல்லாம ஏனோதானோன்னு தான்
நமஸ்காரம் செஞ்சார். ஆனா ஆசார்யா அதை கவனிச்ச மாதிரி
காட்டிக்காம," ஏதோ கேட்கணும்னு வந்திருக்கறாப்புல
தெரியறதே! என்ன கேட்கணும் ஒனக்கு? அப்படிங்கற மாதிரி
அந்த ஜமீனதாரோட முகத்தைப் பார்த்தார்.

"பெரியவா,நான் பண்ணாத தர்மம் இல்லை.செய்யாத திருப்பணி
இல்லை. கும்பிடாத சாமி இல்லை.அப்படி இருக்கறச்சே இந்த
மாதிரி ஒரு சோதனையை தெய்வம் எனக்குக் குடுத்திருக்கே,
அப்புறம் எதுக்காக நான் அதைக் கும்பிடணும்? மேலும் சில
வார்த்தைகளை நெருப்பு மாதிரி கக்கினார்.
அமைதியா கேட்டுண்ட ஆசார்யா,"நீ இப்ப ரொம்ப விரக்தில
இருக்கே.உனக்கு அட்வைஸ் பண்ணினா எடுபடாது. அதனால
ஒரு கதை சொல்றேன் அப்படின்னார்.
உப்பு விக்கறவனுக்கு,உப்புக் கொறவன்னு பேர்.அப்படி ஒரு
உப்புக் கொறவன் இருந்தான்.காமாட்சியோட பரம பக்தன்
அவன்.கார்த்தால கண்ணை விழிச்சு எழுந்திருக்கறச்சயே
காமாக்ஷினுட்டுதான் எழுந்திருப்பான்.தூங்கப் போறச்சேயும்
அம்பாள் பேரைச் சொல்லிட்டுதான் படுத்துக்குவான்.
உப்பு மூட்டைகளை கழுதை மேல் ஏத்தி சந்தை நடக்கற
எடத்துக்கு கொண்டு வருவான்.பெரும்பாலும் இவன் கிட்டேயே
எல்லாருமேவாங்குவதால் கொஞ்சம் நிறையவே பணம் சேரும்
அந்தக் காலத்துல இப்போ இருக்கிற மாதிரி பாதை
வசதியெல்லாம் கெடையாது. ஒத்தையடிப் பாதைதான்.
அதனால் திருடாளும் நிறைய இருந்தா.
ஒரு நாள் சந்தை நேரம் ஆரம்பிச்சுது. சரியா அதே சமயத்துல
திடீர்னு இருட்டிண்ட வானம் ஒரு க்ஷணம் கூட தாமதிக்காம
ஜோன்னு வர்ஷிச்சுது. உப்புக் கொறவனும் பரபரப்பா உப்பு
மூட்டைகளை எடுத்து நகர்த்திவைக்க நினைச்சான். ஆனா
பிரயோஜனம் இல்லாதபடிக்கு மொத்த உப்பும் மழைத்
தண்ணீர் பட்டு கரைஞ்சு ஓடித்து.அவ்வளவுதான்,அப்படியே
விக்கிச்சுப் போய் நின்னான் அவன்,லாபம் இல்லாவிட்டாலும்
கூட முதலுக்கேன்னா மோசம் வந்துடுத்து.அவனோட விரக்தி
அப்படியே கோபமா மாறித்து.அது அப்படியே காமாக்ஷிமேல
திரும்பித்து.

"காமாக்ஷி காமாக்ஷின்னு ஒன்னைத்தானே கும்பிட்டேன்.
இப்படி மொத்தத்தையும் நஷ்டப்படுத்திட்டயே. பக்தன்
காயப்போட்ட நெல் நனையக் கூடாதுங்கறதுக்காக
வேலியெல்லாம் கட்டினார் பரமேஸ்வரன் என்று சொல்வாளே
அதெல்லாம் கூட பொய்யாத்தான் இருக்கும்.ஏன்னா தாயாரான
உனக்கே பக்தன் மேல் இரக்கம் இல்லாதப்போ உன்னோட
ஆம்படையானுக்கு மட்டும் எப்படி இருக்கும்? அதனால இனிமே
எந்த தெய்வத்தையும் நான் கும்பிடப்போறதில்லை!"
அப்படின்னு வெறுப்பா கத்தினான்.
கழுதை மேல வெத்து சாக்கைப் போட்டு,வெறுங்கையோட
பொறப்பட்டான்.அப்படியே போயிண்டு இருந்தவன்,
"டேய் பிடிங்கடா அவனை..அவன் கையில் இருக்கிற பணத்தை
பறிங்கடா..!" அப்படின்னு ஒரு பெருங்குரல் (திருடன்) கேட்டதும்
அப்படியே நடுங்கிப்போய் நின்னான்.அவா கையில் இருந்த
அருவா அந்த இருட்டுலயும் மின்னித்து. நடுங்கின கொறவன்
நம்ம உசுரு நம்மளோடது இல்லைன்னு தோணித்து அவனுக்கு.
"மரியாதையா பணத்தை எல்லாம் குடுடா"ன்னு கேட்டுண்டே,
அவன் மடியில,இடுப்புல,கழுதை மேலே இருந்த சாக்குன்னு
ஒரு இடம் விடாம துழாவினான் ஒருத்தன். ஊஹும் எங்கேயும்
ஒரு தம்பிடிகூட இல்லை.
"ஏய் எங்கேடா ஒளிச்சு வைச்சிருக்கே பணத்தை"
"பணமா? ஏது பணம்? அதான் கொண்டுபோன உப்பு மூட்டை
மொத்தமும் மழையில் கரைஞ்சு ஓடிடுத்தே...அப்புறம் ஏது
வியாபாரம்,ஏது காசு? படபடப்பா சொன்னான் உப்புக் கொறவன்.
"இன்னிக்கு நீ தப்பிக்கணும்னு சாமி நினைச்சுருக்கு. அதனால
பிழைச்சே போ!" அப்படின்னு சொல்லிட்டு ஓடி மறைஞ்சா
திருடர்கள்.
மழை விட்டு வானம் தெளியத் தெளிய கொறவனின்
மனசுக்குள்ளேயும் தெளிவு வந்தது.இன்னிக்கு மட்டும் மழை
பெய்யாம இருந்து உப்பு வித்த காசோட நாம வந்திருந்தா,உசுரு
தப்பியிருக்க முடியாமாங்கறது சந்தேகம்தான்.நாம கும்பிடற
காமாக்ஷிதான் நம்பளைக் காப்பாத்தி இருக்குன்னு புரிஞ்சுண்ட
அவன். அப்படியே அம்பாள் கிட்டே தன்னை மன்னிச்சுக்கச்
சொல்லி வேண்டிண்டான்.
மகாபெரியவா கதையைச் சொல்லி முடிச்சதுமே ஜமீன்தாருக்கு
தன்னோட தவறு என்னங்கறது புரிஞ்சுது.தனக்கு ஏதோ ஒரு
காரணத்துனாலதான் இப்படி கஷ்டம் வந்திருக்குன்னு புரிஞ்சு
பெரியவாளை நமஸ்காரம் பண்ண்ணிட்டு பிரசாதம் வாங்கிண்டு
புறப்பட்டார்.
கொஞ்சகாலம் கழிச்சு அந்த ஜமீன்தார் மறுபடியும் பெரிய
வாளை
தரிசிக்க வந்தார்."பெரியவா நமஸ்காரம். போன தரம் நான்
வர்றச்சே,என்னோட சொத்து மொத்தமும் பறிபோகப்போறது
மாதிரியான சூழல் இருந்தது. ஆனா,இன்னிக்கு அந்த
சொத்தெல்லாம் எனக்குப் பாரம்பரியமா வந்ததுங்கறதுக்கான
விவரங்கள் எல்லாம் என்னோட முன்னோர்கள் திருப்பணி
பண்ணின ஒரு கோயில்ல இருந்த பிரமாணப் பத்திரங்கள்
மூலமா தெரிய வந்துடுத்து.அதனால எல்லாமும் எனக்கே
திரும்பக் கிடைச்சுடுத்து. விரக்தியில் பேசி விட்டேன்.உங்களை
சாட்சாத் பரமேஸ்வரனாவே நினைச்சுண்டு நமஸ்காரம்
பண்ணறேன். என்னை மன்னிச்சுடுங்கோ"
உப்பு கரைஞ்சுபோன கதையை ஆசார்யா அன்னிக்கு சொன்னதே
உன்னோட கஷ்டமும் ஒருநாள் மொத்தமா கரைஞ்சுபோகும்னு
உணர்த்தத்தானேன்னு தோணித்து எல்லாருக்கும்.

நன்றி ; -- ஆனந்த விகடன்.

No comments:

Post a Comment