Subscribe

BREAKING NEWS

05 May 2017

நாம் தரிசித்த மற்றுமோர் சித்தர்கள் வாழ்கின்ற இடம்...

நம் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டு இருக்கின்றனர். இயற்கையின் தன்மையை உணர்ந்து,வென்று சிவத்தை(கடவுள்தன்மை) யடைந்த மனிதர்களை(சித்தர்களை)வழிபட்டு இருக்கின்றனர். ஆனால் அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற கோவில்கள் அனைத்தும் நமது உடம்பேயன்றி வேறொன்றும் இல்லை என்று நாம் உணரவில்லை. ஆகவேதான் நாம் நம் நிம்மதியை தேடி கோவில்களுக்கு செல்கிறோம். தவறில்லை. ஆனால் உணர்ந்து செயல்பட்டால் மிக சிறப்பு.

"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே"
- ஆசான் திருமூலர்

என்று மானுட உடம்பின் மகத்துவத்தை மனித மனத்தில் பதிய வைத்த ஆசான் திருமூலர். இதோடு நின்று விடாது,

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்" 

என்று பாடியவர் மேலும் கூறுகிறார்,

"உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பறந்து திரிவாரே
கள்ள மனமுடைக் கல்வி இலோரே!

என்று உள்ளத்துள்ளே இறைவனைக் காணாது வேறு எங்கெங்கோ தேடி அலையும் வீனரை மூடர் என்றே ஏசுகிறார்.

உடம்பில் நன்மையும், தீமையும் சேர்த்தே இயற்கை அன்னை படைத்துள்ளாள். இந்த உடம்பில் தீமை சேர்த்து படைத்ததின் காரணம், நெல்லுக்கு உமி இல்லை என்றால் மீண்டும் முளைக்காது. ஆகவே, இந்த தேகத்தில் கேட்டையும், ஆக்கத்தையும் சேர்த்து படைத்திருக்கிறாள். கேடாகிய உமி நீங்கினால் அரிசி மீண்டும் முளைக்காது. (புற உடம்பாகிய மும்மல தேகம் நீங்கினால்) அதேபோல் கேடான மும்மலம் என்னும் உமி நீங்கினால் மலமற்ற ஒளி உடம்பாகிய ஜோதி உடம்பு உண்டாகும். ஜோதி உடம்பு உண்டானால் மீண்டும் பிறக்காது (உமி நீங்கினால் அரிசி முளைக்காதது போல). 

கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி
கணக்கற்ற திருக்கோயில் கால்தேய சுற்றி
வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி
வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து
பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து
பசுவதைப் பூசித்து அதன்கழிவை உண்டு
தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்
தயவில்லார் சத்தியமாய் முத்தியதை யடையார்.
-ஆசான் வள்ளலார் - 14. 

குருபோக நாதரைத்தான் கூறுடன் பூஜைசெய்து 
குருமூலர் சட்டடைநாதர் கொங்கணர் காலாங்கி பாதம் 
குருவென்று பூஜை செய்து கூறும் இச்சுவடி வைத்து 
குருவென்று பதம் பணிந்தோர் கூறுடன் வேதைகாண்பார் 
ஆமப்பா யுத்தி சொன்னேன் அழிபுத்தி சொல்லவில்லை 
ஆமப்பா வேதைகண்டால் கற்பத்தை அதன்பின்கொள்ளு 
ஆமப்பா சித்தியாகும் அன்புடன் செய்து பாரு 
ஆமப்பா குருவைக்காணு அன்புடன் சொல்லினேனே. 
-ஆசான் கருவூர் முனிவர் -11-

மகான் கருவூர் முனிவர் அருளிய கவியின் சாரம் :;

சித்தர்கள் அத்தனைபேரும் ஒரே தன்மையுடையவர்கள் ஆவார்கள். இவர்கள் ஆசான் அகத்தீசன் திருவடியை பூஜை செய்தவர்கள் ஆவார்கள். அகத்தீசனை பூஜைசெய்ய பூஜைசெய்யதான் உடம்பையும் உயிரையும் பற்றி அறிந்துகொள்ள முடியும். உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும். மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். இந்த காற்றை ஞானிகள் என்ன செய்கின்றார்கள் என்றால், ஆசான் அகத்தீசன் ஆசியால் ரேசகம், பூரகம், கும்பகம் ஆகிய இயக்கத்தை அறிந்து ஆசான் திருவடியை உருகி தியானிக்கின்றார்கள். என்னதான் மூச்சுக்காற்றை பற்றி அறிந்திருந்தாலும், சுழிமுனையில் வாசியை செலுத்த முடியாது. அகத்தீசன்தான் அவரவர் பக்குவத்தை அறிந்து வாசியோடு வாசியாக கலந்து வாசி நடத்தி தருவார் (மூச்சுக்காற்றை இயக்கச் செய்வார்). அவர் வாசி நடத்தாமல் நாமே முயன்றால் கொடிய நோய்வாய்ப்பட்டு இறந்து விடுவோம்.

எனவே, எல்லா ஞானிகளும், ஆசான் அகத்தீசனை பூஜை செய்து பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் மரணமில்லா பெருவாழ்வு பெற்றுள்ளார்கள். அந்த வரிசையில் போகமகாரிஷி, திருமூலதேவர், சட்டை முனிவர், கொங்கணர், காலாங்கிநாதர் ஆக ஐவரும் ஆசான் அகத்தீசரை பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் அளவிலா சித்தி பெற்றுள்ளார்கள்.

இவர்கள் பெருமையை கருவூர் முனிவர் அவர்கள், நன்கு உணர்ந்து தம் நூலில் அவர்களை புகழ்ந்து பாடியுள்ளார். நாமும் கருவூர் முனிவர் நூலை படித்தும், பூஜித்தும் ஆசிபெற்றால் பலகோடி ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கி ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளலாம்.

கருவூர் முனிவரும் ஆசான் அகத்தீசர் ஆசி பெற்றவர்தான். எந்த ஞானிகளை நாம் பூஜை செய்தாலும், எல்லா பூஜையும் ஆசான் அகத்தீசன் திருவடியையே சாரும். எனவே மேற்கண்ட ஐந்து ஞானிகளையும் மற்றும் கருவூர் முனிவரையும், அகத்தீசரையும் பூஜித்து ஆசிபெற்றுக் கொள்வோம்.

இந்த உபதேசம் கருவூர் முனிவர் சொன்னதாகும். இதை நல்மனதுடன் சொல்கின்றேன் என்றும், இதை நீங்கள் பின்பற்றினால் ஞானம் பெறலாம் என்றும் சொல்லியுள்ளார். 

எனவே, ஞானிகளை பூஜிப்போம்! நலம் பெற்று வாழ்வோம்!!

ஆகவே கோவிலுக்கு செல்வதால் மட்டுமே பலனில்லை. நாம் நம் உடலை புரிந்து கொண்டு அதை சரியாக ஓம்புவதால் மட்டுமே நம்மால் நம் உள்ளம் நன்றாக வேலை செய்யும். நம் உளம் நன்றாக வேலை செய்தால் நம்முடைய சுற்று வட்டாரங்கள் நமக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் நம் உலகம் ஒன்றுகொன்று தொடர்புடையதே. ஆகையால் வெற்றி வேண்டுமெனில் நாம் நம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதை விடுத்து கோவில் கோவிலாக ஏறி இறங்கி விட்டு கடவுள் எனக்கு ஒன்றும் செய்ய வில்லையே என்று புலம்புதல் நன்றல்ல. இது அனைவருக்கும்தான். எனக்கும் சேர்த்துத்தான்.

அந்த வகையில் நாம் தரிசித்த மற்றுமோர் சித்தர்கள் வாழ்கின்ற இடம்...









சுருளி அருவி தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையத்திலிருந்து - 18 km, கம்பம் - 8km தூரத்தில் உள்ள ஒரு சுற்றுலா தலமாகும்.    40அடி உயரத்தில் இருந்துஅருவிநீர் கொட்டுகிறது. ஜூன் மாதத்தில் இருந்து நீர்வரத்து அதிகமாக இருக்கும். அதனால் சுற்றுலா வரும் மக்களின் கூட்டமும் அதிகமாக இருக்கும். இங்கு மேல்சுருளி, கீழ்சுருளி என இரு இடங்கள் உள்ளன. சுருளிஆண்டவர்(முருகன்) என்ற புகழ்பெற்ற கோயில் இங்கு உள்ளது. அருகில் கைலாய குகையும் உள்ளது. இங்கு முப்பத்துமுக்கோடி தேவர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. மேற்கு தொடர்ச்சிமலையில் உள்ளஇந்தஅருவிஒரு புனித தலமாக கருதப்படுகிறது.


சுருளி அருவி வருடத்தின் 365 நாட்களும் நீர் கொட்டும் என கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இந்த வருடம் மேலே சுத்தமாக அருவியில் நீர் இல்லை. கீழே மோட்டார் மூலம் சேகரித்து குழாயில் கொட்டுகிறது. கீழே பூதநாராயண பெருமாள் கோயில் மற்றும் தியான லிங்கேஸ்வரர் கோயிலும் உள்ளது. லிங்கமும் நந்தியும் புதிதாக நிறுவியுள்ளார்கள் போலும், அது அம்சமாக அழகாக இருந்தது. தரிசனம் செய்து விட்டு குழாய் அருவியில் ஜலக்கிரீடை செய்து விட்டு மேலே சுருளி வேலப்பர் கோவிலுக்கு செல்லலாம்.
மேலே அருவியில் இருந்து கொட்டும் நீர் கீழே ஒரு ஓடை போல போகும். அதை தாண்டித்தான் வேலப்பர் கோவிலுக்கு செல்ல வேண்டும். அதன் கரையில் தான் அந்த பகுதி மக்கள் அனைவரும் தங்கள் முன்னோர்களுக்கு பித்ருகாரியம் செய்கிறார்கள். ஓடையில் போகும் நீரின் அளவை பொருத்துதான் நாம் அதை கடந்து கோயிலுக்கு செல்லவேண்டும். அதை கடந்து மேலே ஒரு மூன்று கிலோமீட்டர் தூரம் ஏறினால் கோவிலை அடையலாம். ஏறுவதற்கு பாதை இலகுவாக இருக்கிறது.
பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்து ஒரு மண் பாதையும் இருக்கிறது. இரு சக்ர வாகனத்தில் வருபவர்கள் கோவில் வரை வரலாம். கோயிலுக்கு சில அடிகள் முன்பு ஒரு தீர்த்ததொட்டி உள்ளது.அந்த நீர் நல்ல குளுர்ச்சியாக உள்ளது. அதிலும் முங்கி விட்டு சாமி தரிசனம் முடித்துவிட்டு இடது பக்கத்தில் இறங்கினால் சிறு ஐயப்பன் கோவிலும் ஒரு குகையும் உள்ளது. மொத்தம் இங்கு ஐந்து குகைகள் உள்ளது. தகுந்த நபர் உதவியுடன் தான் செல்லவேண்டும். இல்லாவிட்டால் நாம் பாதை மாறிவிட அதிக வாய்ப்பு உள்ளது. ஒரு ஆள் தவழ்ந்த நிலையில் சென்று உள்ளே அமர்ந்து தியானம் செய்யலாம்.
மேலே அருவியில் நீர் விழாவிட்டாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறாரகள்
கடவுள் வாய்ப்பு  கொடுத்தால் ஜூன் ஜூலை மாதத்தில் குடும்பத்துடன் சென்று வாருங்கள்.