Wednesday, November 8, 2017

கொடுத்துப் பார் - AVM அன்னதான அறிவிப்பு


அன்பார்ந்த மெய் அன்பர்களே..

மீண்டும் ஒரு முறை அன்னதானம் பற்றி இங்கே பேச உள்ளோம். அன்னதானம் என்று சொன்னாலே...இல்லை இல்லை தானம் என்று சொன்னாலே கொடுத்துப் பார் என்ற சொல்லே மனதுள் விரிகின்றது. அதுவும் கொடுப்பது என்றாலே நம் அவ்வைப் பாட்டியின் "அறம் செய்ய விரும்பு " என்ற ஆதி படிப்பினை நம் மனதுள் ஊஞ்சலாடுகின்றது.

அறம் என்றால் என்ன? நீதி, நியாயம், ஈகை, தானம் என அனைத்தும் அறத்தினுள் அடக்கம். நம் மானிட வாழ்வின் முழுமைப் பேறு எப்போது கிடைக்கும்? தானம்,தவம் இரண்டும் செய்யும் போது தான்.

இப்போதும் பற்பல வழிகளில் தானம்,தர்மம் நடைபெறுகின்றது.  நான் புகழ் பெற வேண்டும்.
நான் மக்களால் நினைக்கப் பட வேண்டும். என்னைப் பற்றி நான்கு பேர் பேச வேண்டும் என்பது போன்ற என் தன்மையில் செய்யப்படும் தானம்,கொடை எல்லாம் வீணே. இவர் நமக்கு வேண்டப்பட்டவர். இவர்க்கு உதவுதல் நன்று. இவர் உதவி தேவை என்ற நோக்கில் சிலருக்கு இனாமாக கொடுப்பது கொடையும் அல்ல. இது கொடுத்து வாங்குதல். இது வரவு செலவு பார்க்கும் கணக்கு. அப்படியாயின் தானம் என்பது இல்லாதவர்க்கு கொடுப்பது. அதுவும் தன்னிடம் உள்ளவற்றை யாரும் கேட்காது இருக்கும் போதே, அவர்களின் தேவை அறிந்து கொடுக்க வேண்டும். அதாவது இருப்பதைக் கொடுப்போம் இல்லாதவர்களுக்கே என்று கூறும் உன்னத நிலையே தானம்,தருமம் என்பது.

வள்ளுவரின் வாய் மொழியில் இதை கீழ்வருமாறு காணலாம் 

வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து

இக்குறளின் பொருளாக வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.

இது போன்று முகமறியா, ஆதரவற்ற முதியோர், சாலையோரவாசிகள், துப்புரவு தொழிலாளர்கள் என சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்கு வழங்குவதே தானம். இது போன்ற நிலையில் தான் நாம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அன்னதானம் குருமார்களின் வழிகாட்டுதலோடு செய்து வருகின்றோம். கடந்த முறை நிகழ்ந்த அன்னதானம், வள்ளலாரின் அருட்பார்வையில் தான் நடைபெற்றது.அதைப் பற்றிய செய்திகள் பிறிதொரு பதிவில் காண்போம்.


ஒரு மிகப் பெரிய செல்வந்தரை நிருபர் பேட்டி காண்கின்றார்.அப்போது அவர் தான் அடிமட்டத்தில் இருந்து எப்படி இந்த நிலைக்கு வந்தேன் என்பதை சூழ்நிலைகள், தனக்கு உதவிய நண்பர்கள் என ஒவ்வொன்றாக விளக்கினார்.கடைசியில் நிருபர் தங்களின் சொத்தின் மதிப்பு பற்றி சொல்லலாமே? என்று வினவ, அவர் பத்து கோடிகள் என்றார். நிருபருக்கு ஆச்சரியம். 1000 கோடி சொத்து மதிப்புள்ளவர், 10 கோடி என்கின்றாரே ? என்று மீண்டும் கேட்கின்றார்.

ஒரு வேளை தன்னடக்கத்தின் காரணமாக இப்படி கூறுகின்றாரோ என்று நிருபருக்குத் தோன்றியது.அதற்கு அவர், எத்தனை கோடிகள் இருந்தால் என்ன? எவை எல்லாம் நான் சம்பாதித்து இருக்கிறேனோ, எவை எல்லாம் நான் பெற்றிருக்கின்றேனோ, அவை எதுவும் என்னுடையது ஆகாது.

 எதை நான் இந்த மக்களுக்காக கொடுத்திருக்கின்றேனோ, எதை பிறருக்காக இழந்திருக்கின்றேனோ, அதுவே என்னுடையது ஆகும். இருப்பவைகள் அல்ல, இழப்பவைகள் எவைகளோ அதுவே என்னுடையதாகும், அதுவே எனது அழியாத சொத்துக்கள், என்றார்.

ஆம். ஏழைகளின் வயிற்றை நிரப்புவதே உண்மையான செல்வம் ஆகும்.இதனை வள்ளுவரின் நெறியில் 

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

என்று கூறுகின்றார். இதோ நம் AVM குழுவின் அன்னதான நிகழ்விற்கு அனைவரையும் அழைக்கின்றோம்.

அகத்தியர்வனம் மலேஷியா மற்றும் TUT( தேடல் உள்ள தேனீக்களாய்) இணைந்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (12/11/2017) மதியம் சுமார் 12 மணி அளவில்  வேளச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அன்னதானம் செய்ய இறையருளும்,குருவருளும் கூட்டியுள்ளது. அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு அன்னதானத்தில் உதவும் படி வேண்டுகின்றோம்.

இவண்,

அகத்தியர்வனம் மலேஷியா - http://agathiyarvanam.blogspot.in/
தேடல் உள்ள தேனீக்களாய் - tut-temple.blogspot.inமுந்தைய பதிவுகளுக்கு:-

அறம் செய்ய விரும்பு - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_31.html

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தோம் ...ஐயனே! எம் ஐயனே!! - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_41.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.htmlNo comments:

Post a Comment

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌