Subscribe

BREAKING NEWS

11 December 2017

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (6)


அன்பார்ந்த மெய்யன்பர்களே..

இதோ மீண்டும் வாழ்வாங்கு வாழ தொடர்பதிவில் தங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். இந்த தொடர்பதிவில் பக்தி,யோகம் என்று சகலவிதமான கருத்துக்களை உள்வாங்கி வருகின்றோம். நாம் எதையும் தீர்மானிப்பதில்லை. அனைத்தும் அவன் அருளாலே தான் நடைபெற்று வருகின்றது. இரண்டு, மூன்று பதிவுகளுக்கு முன்பாக சிவவாக்கியர் பற்றி அறிந்தோம். இன்றைய பதிவிலும் சிவ வாக்கியம் தான். பதிலைப் படித்தவுடன் நமக்கும் புதிதாக இருந்தது. படித்து உணருங்கள்.

கேள்வி - ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை புறத்தே தேடித் தேடி வாழ்நாட்களை வீணாக்கி மாண்டு போன மாந்தர்கள் கோடி என்கிறார் சித்தர் சிவவாக்கியர். நீங்களோ புறவழிபாடாகிய பக்தியைக் கொண்டும் முக்தியை அடையலாம் என்று சொல்கிறீர்கள். இதைக் கேட்கும் பொழுது 'சிவவாக்கியரைக் காட்டிலும் தாங்கள் என்னவோ பெரிய ஞானி' என்று நீங்கள் காட்டிக் கொள்வது போலத் தோன்றுகிறது. யோக மார்க்கத்தில் சென்று ஒருவன் வாசியைப் பிடித்து, குண்டலினியை மேலேற்றி, கண்டமாகிய விசுத்தியை கடந்து செல்லும் பொழுதுதான் அவன்தன் வினைகளை வேரறுக்க முடியும். பக்தி மார்க்கத்தில் இது எவ்வாறு சாத்தியமாகும் ?




இராம் மனோகர் - மார்க்கங்களைப் பற்றிய சரியான புரிதலின்மையால் நீங்கள் இவ்வாறு கருதுகிறீர்கள். அதுமட்டுமல்ல மிகப் பெரிய சித்தரான மகான் சிவவாக்கியரோடு அடியேன் எண்ணி பொருத்திப் பார்ப்பது பொருந்தாத செயல் என்பது என் கருத்து. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கிற நிலைகள் அனைத்துமே ஜீவனின் மனோபரிபாகத்திற்குத் தக்கவாறு பிறவித் தொடராக அமைகின்றது. தான் கண்ட மார்க்கம் மட்டுமே சிறந்தது என்கிற தீவிர மார்க்கப் பற்று உடையவர்கள்தான் பிறவித் தொடராக அடுத்த நிலைகளை அடைகிறார்கள். ஆனால், இந்த மார்க்கங்கள் யாவுமே முக்தி நிலை அடைவதற்கான படித்தரங்கள் என்பதை ஒருவன் ஐயம் திரிபற உணர்ந்து விட்டால், அவன் மார்க்கத்தை ஒரு உபாயமாக மட்டுமே கருதுவான். தன் நிலை உயரும் பொழுது அடுத்த நிலையை கண்டு, அதில் முனைப்பாகச் செயல்படுவான்.

சித்தர்கள், ரிஷிகள் அனைவருமே பக்திமான்கள்தான். அவர்கள் ஒன்றும் கடவுள் மறுப்பாளர்களல்ல. சித்தர் சிவவாக்கியர் சிவலிங்கம் பற்றியும், ஐந்தெழுத்து மந்திரம் பற்றியும், ராம நாமம் பற்றியும் விரிவாகப் பேசுகிறார். வடிவம், பெயர் வேண்டுமானால் வேறாக இருக்கிறதே தவிர அவர்களுக்கு பக்தியில்லை என்று சொல்வது ஏற்புடையதல்ல. உருவங்கள் என்பது ஒரு புற அடையாளம். மனதிற்கு அவை ஒரு பற்றுகோல் அவ்வளவுதான். பிறவித் தொடராக அமைந்த அந்தப் பிறவியில் அவர்களுக்கு யோகமும், ஞானமும் அமைந்திருப்பதால், அவர்கள் அவற்றைச் சிலாகித்துப் பேசுகிறார்கள். மேலும் அவர்கள் யந்திரம், தந்திரம், மந்திரம், ஔசதம் என்கிற யுக்திகளைக் கொண்டே சித்தி நிலையை அடைந்தார்கள். கவனித்துப் பார்த்தால் இவையனைத்திலும் புறச் செயல்களில் நேர்த்தியும், ஒழுங்கும், முனைப்பும், ஆற்றலும், அறிவும் அமைந்திருப்பதைக் காணலாம். பக்தியின் நிலையும் இதுதான்.



சித்தர்கள் சொல்வது என்னவென்றால் மார்க்கப் பற்று கொண்டு உழலாதே, அடுத்த நிலைக்கு உயர்ந்து செல் என்பதுதான். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது முனைப்பாக பக்தி யோகத்தைக் கடை பிடித்திடும் ஒருவர் இந்த நாலு படித்தரங்களையும் எளிதில் கடந்திடுவார் என்பது நிதர்சனம். பக்தி யோகம் என்றாலே அது இந்த நாலு நிலைகளையும் உள்ளடக்கியதுதான். பக்தியில் சரியை இருக்கிறது, கிரியை இருக்கிறது, யோகம் இருக்கிறது, ஞானமும் எட்டப்படுகிறது. மிகச் சிறந்த பக்திமான்களின் வாழ்க்கை வரலாற்றை படிக்கும் பொழுது இந்த உண்மை நமக்குப் புலப்படும். இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையிலும், அன்பிலும் உறுதியாக நின்று செயல்பட்டு சித்த சுத்தியடைவது பக்தி மார்க்கம். இறைவன் எப்படி இருக்கிறார் என்று அறிவைக் கொண்டு நம்பிக்கையோடு செயல்பட்டு, சித்த சுத்தியடைவது சித்தர்களின் யோக மார்க்கம். சாமான்ய மனிதனுக்கு பக்தி யோகமே உகந்ததாகக் கருதப்படுகிறது.

இப்பொழுது நாம் அடுத்த கேள்விக்கு வருவோம். அதற்கு மேற்கோளாக திருஞான சம்மந்தப் பெருமான் பாடலை எடுத்துக் கொள்வோம். அவருக்கு பிறவித் தொடராக இயல்பாகவே ஞானம் கிடைத்தது. எனினும் உலக மக்கள் உய்யும் பொருட்டு, அவர் பக்தி யோகத்தை முன்னிறுத்தி வாழ்ந்து காட்டி விட்டுச் சென்றார். அவருக்கு இளமையிலேயே இறையருளால் ஞானம் கிட்டியது. சரியையைக் கடைபிடித்தார், கிரியையைக் கடைபிடித்தார், ஞானமும், யோகமும் கைவரப் பெற்றார். இறைவனோடு இரண்டறக் கலந்தார். இங்கே யோகம் என்பது யோக சாதனங்களைக் குறிக்கவில்லை, இணைப்பைக் குறிக்கிறது. இறைவன் மீது பக்தி செலுத்துவதால் மானிடர்கள் அடையும் பேரின்ப நிலைகளைப் பற்றிய அவரது பாடலை இங்கே ஆதாரமாக முன் வைக்கிறேன்.

அரியு நம்வினை யுள்ளன வாசற
வரிகொண் மாமனி போற்கண்டம்
கரிய வன்றிகழுங்கர வீரத்தெம்
பெரிய வன்கழல் பேணவே.
தங்கு மோவினை தாழ்சடை மேலவன்
திங்க ளோடுடன் சூடிய
கங்கை யான்றிக ழுங்கர வீரத்தெம்
சங்க ரன்கழல் சாரவே.

அழகிய வரிகள் அமைந்த கறுத்த நீல மணி கண்டம் உடையவனாகவும், தாழ்ந்து தொங்கும் சடைமுடியில் கங்கையை சூடியவனாகவும் விளங்கும் எம்பெருமானாகிய இறைவனின் திருவடிகளைத் துதித்தால் நம் வினைகள் அழியும், குற்றங்கள் ஒழியும் என்பது பொருட் சுருக்கம். இவையாவும் சூக்கும, யோக இரகசியங்களேயாகும். நீங்கள் கேள்வியில் குறிப்பிட்டது போல வாசியைப் பிடித்து, குண்டலினியை மேலேற்றி, கண்டமாகிய விசுத்தியை கடந்து செல்லும் பொழுதுதான் ஒருவன் தன் வினைகளை வேரறுக்க முடியும் என்கிற கருத்துதான் இங்கே விளக்கப்படுகிறது. பக்தியால் தான் அடைந்த அந்த நிலையையே அவர் விளக்குகிறார். ஞானிகள் நம் உடலையே மூன்று பிரிவுகளாகவும் காண்கிறார்கள். அது எவ்வாறு எனில், அண்டம், பிண்டம், கண்டம் என்பதாகும். அதாவது, அண்டமாகிய சிரசையும் பிண்டமாகிய உடலையும் இணைக்கும் கழுத்துப் பகுதியே கண்டம். பிரபஞ்சத்தின் இயக்கம் இந்த மூன்று பகுதிகளிலும் ஒன்று சேர இயங்குவதில்லை. தனித்தனியே பிரிந்து இயங்குகின்றன. இவற்றை ஒருங்கிணைக்க ஞானியர்கள் கண்ட வழிமுறைகளே மார்க்கங்கள்.

கழுத்துக்கு மேலே உள்ள சிரசு அண்டம் எனப்படும். இதிலே கண், மூக்கு, செவி, நாக்கு, பொருமூளை என்கிற சகஸ்ராரம், சிறுமூளை, உச்சிஸ்தானம் என்றழைக்கப்படும் பிரம்மரந்திரம், அண்ணாக்கு எனப்படும் சிறுநாக்கு மற்றும் ஞான இந்திரியங்கள் எனப்படும் சப்த, ஸ்பரிச, ரூப, ரச, கந்தமும் இதிலே அடக்கம். உற்றுப் பார்த்தால் பஞ்ச இந்திரியங்களும் இதில் அடங்கியுள்ளது. அந்தகரணங்கள் எனப்படும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் இவை யாவும் இங்கிருந்துதான் பஞ்ச புலன்களின் வழியாக செயல்படுகின்றன. மனிதனின் ஓய்வில்லாத எண்ண அலைகளும் இங்கிருந்துதான் உதயமாகின்றன. இதை மேல் மனம் என்று சொல்வதுவும் உண்டு. பரமாத்மாவின் இருப்பிடமும் சிரசின் மத்திய பாகத்தில் பிரம்மரந்திரத்தில் உள்ளது. அதை ஆத்ம லிங்க ஸ்தானம் என்பார்கள். சித்தாகாசம் மற்றும் பரமாகாசம் இங்குதான் உள்ளது. பிரபஞ்சத்தின் அதிசூக்குமமான சக்திகள் அனைத்தும் அண்டப் பகுதியில் அடக்கம். சாதனங்களால் நம் சக்தியானது கீழிருந்து மேல் நோக்கி ஏற வேண்டும். அதாவது பிண்டத்தையும் தொண்டத்தையும் ஒருங்கிணைத்து, அந்த சக்தியை அண்டத்தோடு இணைத்தால், பரமாத்மா, ஜீவாத்மா இணைப்பு வெற்றியாகும்.

நம் கழுத்துக்கு கீழே உள்ள பகுதியான பிண்டத்தில் இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், உணவுக்குழாய், வயிறு, உதரவிதானம்,குடல், நாபி, குதம், குய்யம் என்று அனேக உருப்புகள் அடங்கி உள்ளன. இதில் நடுமையமாக நாபி விளங்குகிறது. நாபி, குதம், குய்யம் இம்மூன்றும் இணைந்த முக்கோண ஸ்தானமே அக்னிகுண்டம். இங்குதான் இரத்தம் உற்பத்தியாவதாகச் சொல்லப்பட்டுள்ளது. கீழ்மனதின் செயல்களாகிய தேகப்பற்று, மலக் குற்றங்கள், வினை நுகர்வுகள் ஆகிய எல்லாம் கூடிய மாய மலங்கள் யாவும் செயல்படுவது பிண்டத்திலே. பசி, தாகம், மலம், மூத்திரம், சளி போன்ற உபாதைகள் மற்றும் கர்பத்தில் உருவாகும் பிண்டத்தின் உற்பத்தி மற்றும் அழிவுக்குக் காரணமாய் விளங்கும் ஜாடாராக்கினியும் பிண்டத்தில்தான் செயல்படுகிறது. மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம் ஆகிய சக்கரங்களின் ஆளுமையில் பிண்டம் இயங்குகிறது.
இனி நம் கழுத்துப்பகுதியே கண்டம் எனப்படுகிறது. அண்டத்தையும் பிண்டத்தையும் இணைத்தாலும், இரண்டையும் பிரித்து தனித்தனியே இயங்க வைப்பதும் கண்டமே. அண்டம், பிண்டம் இரண்டையும் இணைக்கும் இணைப்பு சக்தியாக கண்டம் விளங்குவதால் இதை ஜீவ பிரம்ம ஐக்கிய ஸ்தானம் என்று சித்தர்கள் கூறுவார்கள். விசுத்திச் சக்கரம் மற்றும் தைராய்டு சுரப்பி கண்டப் பகுதியில்தான் அமைந்துள்ளது. மனிதனின் பேசும் சக்தியின் ஸ்தானமாக கண்டம் விளங்குகிறது. மனிதனின் பிரபஞ்ச ஆராய்ச்சி இங்கிருந்துதான் தொடங்குவதாக யோகநூல்கள் யாவும் கூறுகின்றன. சாதனையில் பூத வாக்கு மறைந்து அருள் வாக்கு தோன்றுவதும் இங்குதான். இதைத்தான் கண்ட சித்தி அல்லது ஶ்ரீகண்டம் என்பார்கள். தோள்கண்டம், நீள்கண்டம் இரண்டின் இணைப்பே ஶ்ரீகண்டம். அதாவது கண்டம் என்றால் துண்டுபட்டது என்பார்கள். அகண்டம் என்றால் துண்டுபடாதது. அதனால்தான் எல்லையற்ற பெருவெளியை அகண்டாகாரம் என்பார்கள். சௌந்தர்ய லஹரியில் கண்டம் மத்தியமா எனச் சொல்லப்பட்டுள்ளது.

தோள் கண்டம் என்பது ஆக்ஞா ஸ்தானம். நீள்கண்டம் என்பது விசுத்தி ஸ்தானம். விசுத்தி ஸ்தானம் மனிதனுக்கு மேன்மை அளிக்கும் இடமாகும். இது அண்ணாக்குக்கு கீழ்பகுதியில் அமைந்துள்ளது. பூத வாக்காக கண்ட த்வனியாக, பேசும் சக்தியாக இயங்கி மனிதனுக்கு சத்ருவாக இருக்கம் நீள்கண்டம் அருள் வாக்காக மாறி கண்ட த்வனி அழிந்து அநாகத த்வனி தோன்றுகிறது. எனவே இதை வினை தாண்டிய இடம் என்பர். தோள் கண்டம், ஜடமனம் எனப்படும் ஆக்ஞாவின் தலைப்பகுதி நெற்றியின் நடுமையம், கால் பகுதி நெஞ்சுக் குழி. இந்த நெஞ்சுக் குழியில் இருந்தே மும்மலங்களாகிய வாதம், பித்தம், கபம் மற்றும் தசவாயுக்களின் பிரிவினை, மும்முடிச்சாகிய சத்வம், ராஜசம், தாமசம் என்கிற முக்குணங்களின் பிரிவினை யாவும் செயல்படுகின்றன. ஆக்ஞாவின் தலைப் பகுதியாகிய நெற்றியின் நடு மைய ஸ்தானத்தில் மனிதனின் மூன்று நிலைகளாகிய விழிப்பு நிலை, கனவு நிலை, உறக்க நிலை தோன்றி மனிதனை நிலை தடுமாறச் செய்கின்றன. மனிதனை நான்காவது நிலையாகிய துரியநிலையை அடைய விடாமல் தடுப்பது ஆக்ஞாவே.


ஒவ்வொரு சுவாசத்தையும் பிராணன், மனம் என இரண்டாகப் பிரித்துவிடுவது ஆக்ஞாவின் வேலையே. எனவேதான் இதை ஜென்மத் திரை என்பார்கள். ஆணவ நினைவும், அகங்காரத்தின் வசிப்பிடமும் ஆக்ஞாவே. அதனால்தான் ஆக்ஞாவாகிய தோள் கண்டத்தை அவ்வளவு எளிதில் வெல்ல முடியாது என்றும் கூறுவதுண்டு. இதன் மாய வலையில் சிக்கித் தவிக்கும் பக்தி, யோக சாதனையாளர்கள் ஏராளம். ஶ்ரீவித்தை என்ற வழி முறையில் சோமக்கலை என்ற சித்தியின் மூலமாகச் யோகிகள் ஆக்ஞாவை மூடிவிடுவார்கள். அதன் பின் சித்த விருத்தி ஏற்பட்டு அவர்கள் சோம வட்டத்துக்குள்ளே பிரவேசித்து சோம்பானம் அருந்துவார்கள். கேசரி முத்திரை, கேசரி சித்தி, சோமவட்டம் போன்ற சாதனங்களின் வெற்றி வைபவங்களுக் கெல்லாம் கண்டம்தான் நுழைவு வாயில். ஆகாய தத்துவமும் அப்புத் தத்துவமும் கண்டத்தில் அடக்கம். பொதுவாக மானிடர்க்கு தோள்கண்டத்தையும், நீள்கண்டத்தையும் ஶ்ரீகண்டத்தால் இணைப்பது சாத்தியமில்லாமல் போகிறது. காரணம் கரும வாசனைகள், வினை நுகர்வு, தீ வினை,சஞ்சிதம் இவைகளால் முட்டி மோதி அலைந்து கொண்டே இருப்பதினாலாகும். மனிதனின் பிராணன் தோள் வளைவுக்குக் கீழே இறங்கி குதம் வரை செல்வதே ஜென்ம சத்ரு எனப்படும் பிறப்பும் இறப்பும்.

எவரொருவருக்கு குண்டலினியானது கண்டத்தைக் கடந்து மேலே செல்கிறதோ, அவர் வினைகள் கண்ட ஸ்தானத்தில் சக்தியால் எரிக்கப்பட்டு விடும். வாசி யோகத்தாலும், யந்திர, தந்திர, மந்திர, ஔசதங்களாலும் இதை நடத்திக் காட்டியவர்கள் சித்தர்கள். ஒருவன் பக்தியால் தானும் இந்நிலையை அடைந்து விடலாம் என்றுதான் திருஞான சம்மந்தர் இந்தப் பாடலின் மூலமாக விளக்குகிறார். அடுத்த பாடல்களையும், விளக்கங்களையும் பார்க்கும் பொழுதுதான் அவர் கூறுவதில் உள்ள உண்மைத் தன்மையும், நுட்பமும் உங்களுக்கு விளங்கும். விளங்குவதோடு மட்டுமல்ல பிரமிப்பையும் ஏற்படுத்தித் தரும்.

சற்று ஆழமான கருத்துக்கள். முதன்முதலாக படித்தால் சற்று புரியாமலே இருக்கும். இரண்டு,மூன்று முறை படித்துப் பாருங்கள், புரியும், புரிந்ததோடு நில்லாமல், உணரத் தொடங்குங்கள். வாழ்வாங்கு வாழ நீங்கள் கைக்கொள்ளும் மார்க்கத்தை மேலும் பின்பற்றுங்கள்.


நன்றி திரு.ராம் மனோகர் 

முந்தைய பதிவுகளுக்கு:-

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (5) - http://tut-temple.blogspot.in/2017/11/5.html

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (4) - https://tut-temple.blogspot.in/2017/10/4.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (3) - https://tut-temple.blogspot.in/2017/09/3.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (2) - http://tut-temple.blogspot.in/2017/08/2.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - http://tut-temple.blogspot.in/2017/07/1.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html

No comments:

Post a Comment