Subscribe

BREAKING NEWS

10 October 2017

ஸ்ரீசக்ர மகாமேரு 18 சித்தர்கள் பிருந்தாவன சக்தி பீடம்.


18 சித்தர்கள் ஒரே தலத்தில் அருள்பாலிக்கும்
அருள்மிகு லலிதா பரமேஸ்வரி திருக்கோவில்!
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே!
நம் உள் இறைவன் இருக்கிறான் என்றாலும்
அவனை அவன் துணையின்றி அறிய முடியாது.
சூரியனைச் சூரியனின் ஒளியைக் கொண்டுதான் தெரிந்து
கொள்ள முடியும் அதுபோல் இறைவனையும் அவன்
அருளினால்தான் தெரிந்து கொள்ள முடியும்.
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனருளாலே அவன் தாள் வணங்கி (சிவபுராணம்).
இறைவனின் அருளினால் இறைவனைக் காணும் அறிவைப் பெறுவது
சித்து.! இந்த இறை அருளைப் பெற்றவர்கள் சித்தர்கள்.
இந்த உடம்பினுள் தெய்வ தரிசனம் பெற்று இறை ஆற்றலை இந்த உடலில் வளர்த்து, உலகிற்குத் தங்கள் யோக சாதனையினால் ஒளியூட்டி சமுதாயத்தைப் பாதுகாப்பதே சித்தர்களின் குறிக்கோள்.
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்  (திருமூலர்).
சித்தர்கள் இறவா வரம் பெற்றவர்கள். சித்தர் சுவாசமுறை இறை நிலைக்கு ஒப்பாகும். சித்தர்களின் சமாதிகளுக்குச் சென்று அவர்களை வணங்கி ஏராளமான நன்மைகள் பெற்றவர்களும் உண்டு.
18 பேர் மட்டுமல்ல! பல்லாயிரக்கணக்கான
சித்தர்கள் உலகில் அருள் பாலித்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப  உதவத் தயாராக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அருள்மிகு லலிதா பரமேஸ்வரி திருக்கோயில்
மூலவர் : லலிதா பரமேஸ்வரி.
காலம் : 500 வருடங்களுக்குள்
திருவிழா : பங்குனி மாதம், பவுர்ணமி, அமாவாசை
தல சிறப்பு : 18 சித்தர்கள் ஒரே தலத்தில் அருள்பாலிப்பது.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.
முகவரி:
அருள்மிகு லலிதா பரமேஸ்வரி திருக்கோவில் மாடம்பாக்கம் சென்னை.
பொதுத் தகவல்:
இங்கு ஒரே பச்சைக்கல்லில் உருவான மகாமேரு அம்பிகை சந்நிதி உள்ளது. சேஷாத்திரி சுவாமிகள், குருவாயூரப்பன், சக்தி பீட கணபதி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிர மணியர், ஐயப்பன், ஆஞ்சநேயர், கோதண்டராமர், நாகராஜர், முனீஸ்வரர், பச்சைக்கல் ராஜ காளியம்மன், தட்சிணாமூர்த்தி, காமதேனு, நால்வர், நந்திகேஸ்வரர், மகாவிஷ்ணு, பிருந்தா சந்நிதிகள் அமையப் பெற்றுள்ளது. நவக்கிரகங்களுக்கு சந்நிதி கிடையாது. 18 சித்தர்களும் கிரக தோஷங்களை நீக்கி, நவக்கிரகங்களின் சக்திகளையும், செயல் பாடுகளையும் ஏற்று அருள்பாலித்து வருவதால் இவ்வாறு செய்துள்ளனர்.இங்கு பசுமடம் உள்ளது.
பிரார்த்தனை :
அனைத்து செல்வங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சித்தர்களுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
கோவில்களில் குறிப்பிட்ட ஒரு சித்தரை மட்டும் வேண்டுமானால் தரிசிக்கலாம். ஆனால், இங்கு பாம்பாட்டி சித்தர், கருவூரார், வள்ளலார், குதம்பை சித்தர், கபிலர் சித்தர், சென்னிமலை சித்தர், கஞ்சமலை சித்தர், கடுவெளி சித்தர், பட்டினத்தடிகள், இடைக்காடர், அழுகணி சித்தர், அகப்பேய் சித்தர், கைலாய கம்பளிச்சட்டைமுனி சித்தர், சிவவாக்கியர், சட்டைமுனி, புலிப்பாணி, காகபுஜண்டர், போகர் ஆகிய பதினெட்டு சித்தர்களையும் ஒரு சேர தரிசிக்கலாம். எல்லா சித்தர்களுக்கும் அற்புதமான சிலை உண்டு. இவர்களைத் தரிசித்தால், வாழ்க்கை என்றால் இன்னது தான் என்று நம் சித்தம் (மனம்) தெளிவடையும்.
தினமும் அன்னதானம் உண்டு. இலவச மருத்துவமுகாம், முதியோர்களுக்கு ஆடைதானம் போன்ற சமூக நல திட்டங்களும் நடக்கிறது. திருவிழா மற்றும் சிறப்பு பூஜை காலங்களில் பெண்களே யாகம் நடத்துகின்றனர். அவர்களே நேரிடையாக பூஜையும் செய்யலாம்.
தல வரலாறு:
சேஷாத்ரி சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்ட ஜோதிடர் கே.வி.எல்.என். சர்மாவின் ஆலோசனைப்படி இக்கோயில் எழுப்பப்பட்டது. இங்கு ஸ்ரீ சக்ரநாயகி லலிதா பரமேஸ்வரி அம்பாள் பிரதானமாக இருக்கிறாள். எனவே இதை லலிதா பரமேஸ்வரி கோவில் என்றும் கூறுகின்றனர்.
நாமும் சென்று தரிசித்து சித்தர்கள் அருளினைப் பெறுவோம்.

நன்றி.திருமதி,ரமாசங்கர்.

No comments:

Post a Comment