Subscribe

BREAKING NEWS

06 September 2017

மாடத்தி அம்மன் கோயில் பன்னம்பாறை


திருச்செந்தூர்-சாத்தான்குளம் வழியில் இருக்கிறது பன்னம்பாறை.
இங்கு தனது சகோதரர்களால் கௌரவ கொலை செய்யப்பட்ட மாடத்தி, தெய்வமாக வணங்கப்படுகிறாள். பன்னம்பாறை கிராமத்தில் நானூறு ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்துவந்தார் முருகேச பாண்டியன். இவரது மனைவி முத்துபேச்சியம்மாள். இவர்களுக்கு வரிசையாய் ஏழு ஆண் குழந்தைகள். குலதெய்வம் சுடலைமாடனின் அருளால் எட்டாவதாக மகள் பிறந்ததால் மாடத்தி என்று பெயரிட்டு மகிழ்ந்தனர் பெற்றோர்.
மாடத்திக்கு வயது பத்து முடியும் தருவாயில் பெற்றோர் இருவரும் ஒருவர்பின் ஒருவராக மாண்டுபோனார்கள். பெற்றோர் இல்லாத குறையே தெரியாதபடி, ஏழு அண்ணன்மார்களும், அண்ணியரும் மாடத்தியை செல்லமாக வளர்த்து வந்தனர். மாடத்தியின் அண்ணன்மார்கள் நாட்டாண்மை செய்துவந்தனர். மாடத்தி பருவமடைந்த போது பன்னம்பாறையிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவிலுள்ள பூச்சிக்காட்டை சேர்ந்தவர்கள் தனது மகனுக்கு பெண் கேட்டு, மாடத்தியின் அண்ணன்மார்களைத் தாம்பூலத் தட்டோடு வந்து பேசினர்.


அவர்களை மரியாதையோடு வரவேற்ற மூத்த அண்ணன், தங்கைக்கு இன்னும் ஓராண்டு கழித்துதான் திருமணம் செய்யவேண்டும் என்று ஜோதிடர் கூறியிருப்பதாகச் சொல்லி அனுப்பி வைத்தான். ‘உள்ளூர் சம்பந்தம், உள்ளங்கை சிரங்கு’ என்று கருதிய அண்ணன் கந்தையா பாண்டியன், தங்கை மாடத்தியை ஒட்டன்புதூர் குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டிக்கு மணமுடித்துக் கொடுத்தான். வேறோரிடத்தில் மாடத்தியை கட்டி கொடுத்ததால் பூச்சிக்காட்டைச் சேர்ந்தவர்கள் மாடத்தியின் அண்ணன்மார்கள் மேல் பகை கொண்டா்கள்.
இந்நிலையில் மாடத்தி ஆண், பெண் என இரு குழந்தைகளைப் பெற்றாள். அவர்களுக்கு சுடலைமுத்து, இசக்கி என்று பெயரிட்டு வளர்த்து வந்தாள். செல்லப்பாண்டி பொருளீட்ட கொழும்பு சென்றார். அதன் பின்னர் தனக்கும், மாமியாருக்கும் ஒத்துப்போகாததால் பிறந்த வீட்டுக்கு பிள்ளைகளுடன் வந்தாள் மாடத்தி. இரண்டே வருடங்களில் திரும்பிவந்துவிட்ட அவளையும் குழந்தைகளையும் அண்ணன்களும், அண்ணிமார்களும் அன்போடுதான் நடத்தினார்கள்.
ஒருமுறை திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசிமாத திருவிழா நடந்துகொண்டிருந்தது. தனது இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு, அண்ணிமார்கள் துணையோடு மாடத்தி திருவிழாவிற்கு சென்றாள். மிட்டாய்க் கடைகளில் அண்ணிமார்களிடம், ‘மதனி, உங்க மருமக பிள்ள, ராட்டு ஆடனும்கிறான். கூட்டிப்போயிட்டு வாரேன்,’ என்று கூறிச்சென்றாள் மாடத்தி. குழந்தைகளை ராட்டினத்தில் ஏற்றிவிட்டாள். ராட்டினம் சுற்றத் தொடங்கியதும் மகள் அழ, உடனே ராட்டை நிறுத்தச் சொல்லி மகளை எடுக்கச் சென்றாள்.
பக்கத்தில் நின்ற ஒருவன் ராட்டையில் உயரே நின்ற தட்டிலிருந்து மகளை எடுத்து மாடத்தியிடம் கொடுக்க, அவள் வாங்கிக்கொண்டாள். மாடத்தியை முதலில் பெண் கேட்டுச் சென்ற பூச்சிக்காடு குடும்பத்தைச் சேர்ந்த சிலர் இதைப் பார்த்தார்கள். இரண்டு வாரத்துக்குப் பிறகு சாத்தான்குளத்தில் ஒரு பஞ்சாயத்துக்கு கந்தையா பாண்டியன் மற்றும் அவரது சகோதரர்கள் தீர்ப்பு கூற சென்றனர். தீர்ப்பு பன்னம்பாறைக்கு சாதகமாக இருந்ததால் ஆத்திரப்பட்ட பூச்சிக்காட்டார்கள் கந்தையா பாண்டியனை பார்த்து, ‘‘ஊருக்கெல்லாம் நியாயஞ்சொல்லும் உன் குடும்ப கௌரவத்தை, உன் உடம்பிறந்தா குழி தோண்டி புதைச்சிட்டா, தெரியுமா உனக்கு?’’ என்று கேட்டார்கள்.
‘‘என்னலே செல்லுதே?’’ என்று கோபமாகக் கேட்டான் அண்ணன். ‘‘மாசித் திருவிழாவில, உன் தங்கச்சி மாடத்தி, எவனோ ஒருத்தன்கூட சோடிபோட்டு ராட்டு ஆடினாளே, அவளுக்கு என்ன தீர்ப்ப சொல்லப்போற?’’ உடனே அந்த இடத்திலிருந்து கடும் சினத்துடன் புறப்பட்டனர், கந்தையா பாண்டினும் அவரது தம்பிகளும். வீட்டுக்கு வந்த அவர்கள் சாப்பிடக்கூட இல்லாமல் களத்து மேட்டிற்குப்போய் ஆலோசித்துக்கொண்டிருந்தார்கள். ‘நாலு பேரு சபையில நம்மள கேவலப்படுத்தின தங்கச்சிய கொல்லுவதுதான் சரி’ என முடிவு செய்தனர்.
மறுநாள் காலை, சந்தண பாண்டியன், தங்கையை அழைத்தான், ‘‘தாயி, விறகு வெட்டப்போணும்... ஓலைப்பெட்டியை எடுத்துக்கிட்டு கல்லாட்டாங்குடி தோட்டகாட்டுக்கு விரைசல வந்து சேரு,’’ என்று கூறிவிட்டு வேகமாகச் சென்றான். அண்ணன் தம்பிகள் ஏழு பேரும் கல்லாட்டாங்குடி ஆலமரத்து கிளைகளில் ஏறி அமர்ந்து கொண்டனர். குலசாமியை வேண்டிக்கொண்டனர். ‘ஐயா, நம்ம குடும்ப கௌரவத்துக்கு பங்கத்தை ஏற்படுத்திட்டா உடம்புறந்தா. அதனால இந்த முடிவு எடுத்திருக்கோம். எங்களை மன்னிச்சிரு அப்பனே’ என்று வேண்டிக்கொண்டனர்.
தங்கச்சி வந்து விறகு எடுப்பதற்கு ஏதுவாக காய்ந்த மரக்கிளைகளை கொஞ்சம் வெட்டிப்போட்டிருந்தனர். மாடத்தி வந்ததும், அண்ணன் சுடலை முத்து பாண்டியன், ‘விறக விருசுல எடு, தாயி’ என்று சொன்னான். மாடத்தியும் குனிந்து இரண்டு சுள்ளி விறகு எடுக்கையில் மரக்கிளையிலிருந்து கீழே குதித்த மூத்த அண்ணன் கந்தையா பாண்டியன், வீச்சருவாளால் தங்கையின் கழுத்தை வெட்ட, மாடத்தியின் தலை தனியேபோய் விழுந்தது. கோபம் தனியும் வரை சுழன்றுகொண்டேயிருந்தது.
பிறகு அந்தத் தலை பேசியது: ‘அண்ணே, எவன் பேச்சையோ கேட்டு, என்னை இப்படி, பண்ணிட்டியே, என் புள்ளங்களும், புருஷனும் வந்து கேட்டா என்ன பதில் சொல்லுவீக? ஏழு அண்ணன்மார்களிலே ஒருத்தனக்குக்கூடவா தங்கச்சிங்குற இரக்கம் இல்லாம போச்சு?, நான் எந்த தப்பும் பண்ணலையே! என்னைப் பெத்தவளே, இந்த கொடுமையை பார்க்க, நீ உசுரோட இல்லாம போயிட்டியே! ஏ, சுடலமாடசாமி, நீ இருக்குறது உண்மைன்னா இவனுங்களே நீரே கேளும்..’
கண்களை மூட, தனியே கிடந்த அவள் உடல் துடிதுடித்து, கைகள் மண்ணை அள்ளி வீசிவிட்டு அடங்கின. உடனே சகோதரர்கள் மாடத்தியின் உடலை எரித்து, அவளது தலையை மண்ணில் புதைத்து விட்டு வீட்டுக்கு சென்றனர். இப்போது மாடத்தியின் வாரிசுகள், மாடத்தியை சாந்தம் அடையச்செய்து அவள் இறந்த இடத்தில் கோயில் எழுப்பி பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். இந்த கோயிலில் தீபாவளி அன்று சிலைக்கு எண்ணெய், மற்றும் இளநீரால் அபிஷேகம் செய்து, புதிய பட்டு அணிவித்து, இனிப்பு, காரம் கொண்ட பலகாரங்கள் படையலிட்டு பூஜை செய்கின்றனர்.


நன்றி,திருமதி,ரமாசங்கர்.

No comments:

Post a Comment