Subscribe

BREAKING NEWS

08 March 2019

மகான்களின் வி(வ)ழியில்...

 அனைவருக்கும் அன்பு வணக்கம்.

இந்து சமய சேவை கண்காட்சி வருடந்தோறும் நடைபெற்று வருகின்றது. நாம் சென்ற ஆண்டு தான் இதைப் பற்றி கேள்வியுற்றோம். சென்ற ஆண்டு மீனம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்றது. இந்த ஆண்டு கண்காட்சிக்காக காத்திருந்தோம். இந்த ஆண்டு கண்காட்சி மிக சிறப்பாக நடைபெற்றது. பற்பல விஷயங்களை கண்டோம். விரைவில் தனிப்பதிவாக தருகின்றோம். ஏற்கனவே அறிய வேண்டிய அரிய மனிதர்கள் என்ற தலைப்பில் ஒரு செய்தியை தந்திருந்தோம், அதே போல் நாம் கண்காட்சியில் நுழைந்த உடன் நம்மை பல ஞானிகள், மகான்கள் வரவேற்றார்கள். பார்ப்பதற்கு நமக்கு அப்படித் தான் தோன்றியது.ஏற்கனவே ஏட்டிலும், பாட்டிலும் சொல்லி வைத்துள்ளார்கள். நம்மை யார் யார் வரவேற்றார்கள் என அறிவோமா?


நமது நாட்டில் எத்தனை எத்தனை மகான்கள். இந்த புனித பூமியில் பிறக்கவே நாம் கொஞ்சமாவது புண்ணியம் செய்து இருக்க வேண்டும். வரவேற்பு பதாகையிலே மகான்களை தரிசித்து சிறிது தியானம் செய்து விட்டு செல்லவும் என்று கூறி இருந்தார்கள். சரி..இனி மகான்களின் வி(வ)ழியில்...செல்ல இருக்கின்றோம்.


முதலில் குருநானக் அருள் பெற்றோம்.சீக்கிய தர்மத்தை உருவாக்கியவர். 10 சீக்கிய குருக்களுள் இவர் முதன்மை பெற்றவர் ஆவார்.  குரு நானக், "தான்" என்ற எண்ணத்தால் விளையும் ஆபத்துகளை சுட்டிக்காட்டி ,தன் பக்தர்களை "கடவுள்"-ன் நாமத்தால் வழிபட வேண்டும் என்றும், சமயங்களில் குருவின் வழிகாட்டலின் படி செயல்பட வேண்டும் என்றார்.ஆனால் அந்த வழிபாடுகள் தன்நலமற்றதாக இருக்க வேண்டும் .இவை, கடவுளின் விருப்பப்படியே அனைத்தும் நடக்கும் ,அவர் இல்லையேல் இவ்வுலகில் எதுவும் இல்லை, என்ற கொள்கையை தழுவியது. குரு நானக், இந்த மனித நேயத்தில் பரவலாக உள்ள மற்றும் சமய நடவடிக்கைகளை கூட வீணாக்க முடிந்த , பாசாங்குத்தனம் மற்றும் பொய்யான பாசம் குறித்து எச்சரித்தார்.நானக்கை பொறுத்தவரை, துறவி நடைமுறைகளை புறக்கணித்து, இல்லற வாழ்வில் ஈடுபட்டு ,தெய்வப் பற்று பெற்று வாழ வேண்டும் என அறிவுறுத்துகிறார்.

பிரபல பாரம்பரியத்தில், குரு நானக்கின் போதனைகள் மூன்று வழிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது:

    வந்த் சக்கோ: தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்தல், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்.
    கிரட் கரோ: சுரண்டல் அல்லது மோசடி இல்லாமல், நேர்மையாக ஒரு வழ்க்கையை உருவாக்கிக் கொள்ளுதல்.
    நாம் ஜப்னா: பரிசுத்த நாமத்தை ஜபித்தல், இதனால் எல்லா நேரங்களிலும் கடவுளை (இறைவன் -ஓயாத பக்தி) நினைவில் கொள்ளுதல்.

குரு நானக், கடவுளின் நாமத்தால் செய்யப்படும் வழிபாடுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் வைத்தார்.(நாம் ஜப்னா).ஒரு மனிதன், ஞானம் பெற்ற பெரியவர்களின் வழிகாட்டுதலின் படி நடக்க வேண்டும் என்றும்,தன் சுய புத்தியின் அடிப்படையில் நடக்கக் கூடாது என்றும் போதித்தார்.இல்லையேல், வாழ்க்கை ஏமாற்றத்திற்கு மட்டுமே வழிவகுக்கும். 


அடுத்து ரமணரின் தரிசனம்.



ரமணர் 

தமிழகத்தில் பிறந்து நான் யார்? என்று கேட்டு உலகத்தையே தன் பக்கம் திருப்பியவர்.அத்வைத வேதாந்த நெறியை போதித்த இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். திருவண்ணாமலையில் அமைந்துள்ள, ரமண ஆசிரமம், உலகப் புகழ் பெற்றதாகும். 

ரமணரின் முக்கியமான உபதேசம் 'நான் யார்' என்னும் ஆன்ம விசாரம். ஞான மார்க்கத்தில் தன்னை அறிதல் அல்லது முக்தி பெறுதலே இவ்வழியின் நோக்கம். உபநிடதங்கள் மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள் ஆகியவற்றின் சாரத்தினை இவரது உபதேசங்களில் காணலாம். இவரது உபதேசங்களின் தொகுப்பான 'நான் யார்?' என்ற புத்தகம் முதன்மையானதாகும்.

ஆதி சங்கரரின் ஆக்கமான 'ஆத்ம போதம்' தனை தமிழில் வெண்பாக்களாக ரமணர் வழங்கியுள்ளார்.

ஒரு பொருளைத் தியானிப்பது என்பது ஒருபோதும் உதவாது. தியானிப்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதை உணரவேண்டும். அதனைப் பயில்க. தியானிக்கப்படும் பொருள், நுண்மையாக இருந்தாலும் சரி - ஒன்றான தன்மையை அழிந்து நாமே இருமையை உருவாக்குகிறோம்.

பலகாலம் திருவண்ணாமலையின் பல இடங்களில் தங்கிய ரமண மகரிசி, 1922 இல் அவரது தாயின் மறைவிற்குப் பிறகு திருவண்ணாமலையின் அடிவாரத்தில் குடிபுகுந்தார். அங்கு அவரது சீடர்களால் ஆசிரமம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதுவே ரமண ஆசிரமமாகும். இதன் பின்னர் மகரிசி சமாதியடையும் வரை அந்த ஆசிரமத்தை விட்டு எங்கும் செல்லவில்லை. 


சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் அல்லது காஞ்சி முனிவர் என்று அழைக்கப்படும் மஹா பெரியவா காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாவார். பரவலாக இவர் பரமாச்சாரியார், மகாசுவாமி மற்றும் மகா பெரியவாள் என அழைக்கப்பட்டார். 

நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா...' என்று நித்தமும் அவர் நினைவிலேயே வாழ்ந்து, அவருடைய கருணை நிழலில் இளைப்பாறி, துயரங்கள் மறந்து, உள்ளம் தூய்மை அடைந்த பக்தகோடிகள் ஏராளமானோர். காஞ்சிப் பெரியவருடனான தங்கள் அனுபவங்களை விவரிக்கும்போது பக்தர்களுக்கு நா தழுதழுக்கும்; கண்கள் பனிக்கும்; உடல் சிலிர்க்கும்.
ஜாதகத்தில் எவ்வளவு கடுமையான தோஷங்கள் இருந்தாலும் ஜோதிடத்திற்கெல்லாம் அப்பாற்பட்ட பெரியாளிடம் சரணடைந்துவிட்டால் மலைப்போல் வந்த துயரமும் பனிப்போல் விலகிவிடும். ஹர ஹர சங்கர! ஜெய ஜெய சங்கர!!


காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார். கயிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவபெருமான் அம்மையே என்று அழைத்ததாலும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பெறுகிறார்.பரமதத்தன் என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தவர், ஒரு நாள் கணவன் கொடுத்தனுப்பிய இரு மாம்பழங்களில் ஒன்றினைச் சிவனடியாருக்குப் படைத்துவிட்டு, அந்த மாம்பழத்தினைக் கணவன் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தினைப் பெற்ற நிகழ்விலிருந்து இறைவனைச் சரணடைந்தார்.

இவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாகப் பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்.அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற நூல்களைத் தந்து சைவத்தமிழுக்குப் பெரும் தொண்டாற்றியுள்ளார்.இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் இயற்றப்பட்டன.

இவருக்கெனக் காரைக்கால் சிவன் கோவிலில் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் காரைக்கால் அம்மையார் கோவில் என்று மக்களால் அழைக்கப்பெறுகிறது. 

காரைக்கால் அம்மையாரின் சிறப்புகளை மக்களுக்குத் தெரிவிக்க காரைக்கால் சோமநாதர் கோயில் சார்பாக மாங்கனித் திருவிழா நடைபெறுகிறது. காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பௌர்ணமி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் போது சுவாமி தேர் வீதி உலா வருகையில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, வீட்டு மாடிகளில் நின்றுகொண்டு இறைவன் மீது மாங்கனிகளை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.




அடுத்து திருவள்ளுவர் தரிசனம் பெற்றோம்.


திருவள்ளுவர் பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர்.

கடைச் சங்க காலமான கி.மு. 400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு, மதுரையில் அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது.

சங்க கால புலவரான ஔவையார், அதியமான், மற்றும் பரணர் மூவரும் சமகாலத்தவராக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இதன் மூலம் சங்க கால புலவர் மாமூலனாரே முதன் முதலில் திருவள்ளுவரை பற்றிய செய்தியை தருகிறார். ஆகையால் மாமூலனாருக்கு முன்பே ஔவையார் என்ற பெயருடைய மற்றொரு புலவர் இருந்திருக்கலாம் என்றே தெரியவருகிறது. மாமூலனார் கி.மு 4 ஆம் நூற்றாண்டு செய்தியை கூறுவதால், திருவள்ளுவர் கி.மு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராக இருக்க வேண்டும்.

திருவள்ளுவர், அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.



அகத்தியர் என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்கு பயணப்பட்டு அதை சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரும் ஆவார். இவரே அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர். இந்நூல் கிடைக்கப்பெறவில்லை. தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியனார், அகத்தியம் தன் தொல்காப்பியத்திற்கு முன்பே எழுதப்பட்டதாக கூறுகிறார். இவரது மனைவியின் பெயர் லோபாமுத்திரை ஆகும். அகத்தியர் மித்திர வருணரின் மகனும், வசிட்டரின் சகோதரரும் ஆவார். அகத்தியர் [[இருக்கு வேதம்|ரிக் வேதத்தில் 26 சூக்தங்களை இயற்றியவர். இவரது மனைவியின் பெயர் லோபாமுத்திரை. இவர் தினை மாவு, பயனளிக்கும் தானியங்கள், விசம் தோய்ந்த அம்புகள், தர்ப்பைப்புல் ஆகியவைகள் பற்றி கூறியுள்ளார்.



கௌதம புத்தரை அடிப்படையாகக்கொண்டு பௌத்த தர்மம்  உருவாக்கப்பட்டது. இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். கௌதமபுத்தர் கிறித்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தக்கூடிய, ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத் தலத்தை தாம் கண்டறிந்துள்ளதாக நேபாளத்தில் உள்ள அகழ்வாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் “சித்தார்த்த கௌதமர்” என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார்.

புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின் மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்த பிக்குகள் மனனம் செய்துவந்தார்கள். அவற்றுள் மிக முக்கியமானதாக தம்மபதம் விளங்குகிறது, பிற மத நூல்களைப் போன்று அல்லாமல் இந்நூல் மக்களின் சாதாரண பேச்சு வழக்கில் உருவாக்கப்பட்டது. மேலும் எளிய நடை இதன் சிறப்பம்சம் ஆகும். குரு - சீட பரம்பரையூடாக வாய்மொழி மூலம் கடத்தப்பட்டுவந்த இத் தகவல்கள், 100 வருடங்களுக்குப் பின்னர் திரிபிடகம் என்று வழங்கப்படும் நூலாக எழுத்துவடிவம் பெற்றது. 
   
புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் [அவதாரம்] என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும், புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்தின் அடிப்படை என அவர் கூறினார். மேலும் புத்தர், ஆத்மாவைப் புறந்தள்ளி, அநாத்மா என்ற உடல் மற்றும் உலகத்திற்கு அதிகம் பொருள் தருகிறார். மேலும் வேதங்களையும், கடவுள் இருப்பையும் மறுக்காமல், அது குறித்து பேசாது விட்டார். 



வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர்."வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர்.திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்பு பெயர் பெற்றவர். கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர்.சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக, சமுதாயத்தின் பழைமைப் பற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர். இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது.இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. திருவருட்பா, முதலில் இராமலிங்கஅடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப்பட்டன. பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடப்பட்டன. முன்னாள் தமிழக அறநிலையத்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதலியவற்றைத் தனி நூலாகத் தொகுத்து வெளியிட்டார். பின்னர் ஊரன் அடிகளும் காலமுறைப் பதிப்பு வெளியிட்டுள்ளார். 

எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார். உண்மையான ஞானி என்பதால் சாதிய பாகுபாடுகளை சாடினார் அதனால் உயர் சாதி இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார், இருப்பினும் தொடர்ந்து தன் வழியே பயணப்பட்டார்.

தன் வாழ்வின் பெரும்பகுதியைச் சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். அறிவுநெறி விளங்க சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார். இத்தகு உயரிய நோக்கங்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். 1867ஆம் ஆண்டில் மக்களின் பசித்துயர் போக்க சத்திய தரும சாலையையும் நிறுவினார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாகக் கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைகளுக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன. 



ஔவையார் நன்கு அறிமுகமான ஒரு பெண் புலவர். ஔவையார் என்னும் பெயர் பூண்ட புலவர்கள் பலர் இருந்தனர். நூலமைதி, தமிழ்நடை, தொடர்புடையோர் முதலானவற்றைக் கருத்தில் கொண்டு வரலாற்று நோக்கில் பார்க்கும்போது அவர்கள் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது புலனாகும்.

    ஔவையார், சங்ககாலப் புலவர்
    ஔவையார், அங்கவை சங்கவைக்கு மணம் முடித்து வைத்தவர்
    ஔவையார், அறநூல் புலவர்
    ஔவையார், நூல் புலவர்
    ஔவையார், கதையில் வரும் புலவர்
    ஔவையார், சிற்றிலக்கியப் புலவர்

என்று பாகுபடுத்திக் காணமுடிகிறது. சங்க கால புலவர் அவ்வை அதியமான் காலத்தில் வாழ்ந்தவர், அக்காலத்தில் வாழ்ந்தவரே கபிலர், கபிலரின் நன்பனான பாரியின் மகள்களான அங்கவை , சங்கவை இருவரின் திருமணத்திற்கு முயற்சி மேற்கொண்டவர்கள் அவ்வையும் , கபிலரும் ஆவர். 

சங்ககால ஔவையார் நம் கற்பனையில் உள்ளவர் போல முதுமைக் கோலத்தவர் அல்லர். இளமை ததும்பும் விறலி.

இவர் பாடிய 59 பாடல்கள் சங்கநூல்களில் இடம்பெற்றுள்ளன. அகநானூறு  குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு ஆகிய தொகுப்பு நூல்களில் அவை உள்ளன. சங்கப்புலவர் பாடல்தொகை வரிசையில் இவர் 9 ஆம் இடம் பெற்றுள்ளார். ஔவை சங்க கால புலவர்களிலலே சிறந்தவர். அவர் எழுதிய ஆத்திசூடி உலகுக்கு நற்கருத்தை கூறி மக்களை நலமுடன் வாழ செய்கின்றது. 

ஔவை அல்லது அவ்வை என்ற சொல் அவ்வா என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம் என்ற கருத்து பலரிடம் நிலவுகின்றது.
ஒளவை என்பது மூதாட்டி அல்லது தவப்பெண் என்ற கருத்தை உடையது என்று பழந்தமிழ் அகராதி கூறும்.
பிற்காலத்தில் ஒளவை என்ற சொல், ஆண்டு மற்றும் அறிவு என்பவற்றில் முதிர்ச்சி அடைந்தவர்களைக் குறிக்கும் சொல்லாக விளங்கி்ற்றுப் போலும்.[



மகாவீரர்  என்று குறிப்பிடப்படுபவர் சைன சமயத்தின் மையக் கருத்துக்களை நிறுவிய வர்த்தமானர் என்ற இந்திய துறவியாகும். சமண சமய வழக்கில் அவர் 24வது மற்றும் கடைசி அருகன் ஆவார்.சைன சமயப் புத்தகங்களில் இவர் வீரா, வீரப்பிரபு, சன்மதி, அதிவீரர் மற்றும் ஞானபுத்திரர் என்று அழைக்கப்படுகிறார்.  

சித்தார்த்தனின் மகனாக இளவரசனாக வாழ்ந்தார் வர்த்தமானன். இருப்பினும் அச்சிறுவயதிலும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டிருந்தார். தியானத்திலும் தன்னறிவதிலும் கூடுதல் நாட்டமுடையவராக விளங்கினார். மெதுவாக உலக சிற்றின்பங்களிலிருந்து விலகி சைன சமய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார். 

தமது முப்பதாவது வயதில் அரசாட்சி மற்றும் குடும்பத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டார். துறவியாக 12 ஆண்டுகள் தியானம் செய்து ஆன்மீகத்தேடலில் ஈடுபட்டார். பிற உயிரினங்களுக்கு (மனிதர்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகள்) மதிப்பளித்தார். அவற்றிற்கு ஊறு விளைவிக்காமல் வாழ்ந்து வந்தார். இவ்வாண்டுகளில் தமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார். அவரது பொறுமையும் வீரமுமே அவர் மகாவீரர் என அழைக்கப்பட காரணமாயிற்று. இந்த ஆன்மீகத் தேடலின் விளைவாக கைவல்ய ஞானம் கிடைக்கப்பெற்றார். அச்சமயம் அவர் அளவற்ற சமசீர்மை, அறிவு மற்றும் கட்டுப்பாடு கொண்டவராக இருந்தார். 

மகாவீரரின் மெய்யியலில் முதன்மையாக எட்டு கொள்கைகள் உள்ளன - மூன்று கருத்துமயமானவை மற்றும் ஐந்து நெறிவழிப்பட்டவை. குறிக்கோள் வாழ்வின் தரத்தை உயர்த்துவதேயாகும். இந்த தனிப்பட்ட எட்டு கொள்கைகளும் குறிக்கோளை நோக்கிய ஓர்மையும் நெறிவழிப்பட்ட வாழ்வின்மூலம் ஆன்மீக வளமை பெற்றிடும் வழியையும் காட்டுவனவாக உள்ளன. அவரது கருத்தியலில் மூன்று கொள்கைகள் உள்ளன:அநேகாந்தவடா,சியாத்வடா மற்றும் கர்மா. ஐந்து நெறிவழிகளாவன:அகிம்சை,சத்தியம்,அஸ்தேயம், பிரமச்சரியம், அபரிகிருகம்.

மகாவீரர் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓர் ஆத்மா உண்டென்றும் அது தனது நல்ல அல்லது கெடுதல் செயல்களின் விளைவாக கர்மா எனப்படும் வினைப்பயன்களை சேர்த்துக் கொள்கிறது என்றும் கூறுகிறார். கர்மாவின் மாயையால் ஒருவர் தற்காலிக மற்றும் மெய்போன்ற இன்பங்களிலும் பொருள் சேர்க்கையிலும் கவரப்படுகிறான். இவற்றின் தேடலில் அவனுக்கு சுயநலமுள்ள வன்முறை எண்ணங்களும் செயல்களும் கோபம், வெறுப்பு, பொறாமை மற்றும் பிற பாவச்செயல்களில் ஈடுபாடும் ஏற்படுகின்றன. இவற்றால் அவனது கர்மா பளு கூடுதலாகிறது.

இதனிலிருந்து விடுபட, மகாவீரர் சரியான நம்பிக்கை (சம்யக்-தர்சனம்), சரியான அறிவு (சம்யக்-ஞானம்), மற்றும் சரியான நடத்தை (சம்யக்-சரித்திரம்') தேவை என்பதை வலியுறுத்தினார். நன்னடத்தைக்கு துணைநிற்க ஜைன மதத்தில் ஐந்து உறுதிமொழிகள் எடுக்க வேண்டும்:

    வன்முறை தவிர்த்தல் (அகிம்சை) - எந்தவொரு உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காதிருத்தல்;
    வாய்மை (சத்தியம்) - தீங்கில்லாத உண்மையை மட்டுமே பேசுதல்;
    திருடாமை(அஸ்தேயம்) - தனக்கு கொடுக்கப்படாதது எதையும் எடுத்துக் கொள்ளாதிருத்தல்;
    பாலுறவு துறவு (பிரமச்சரியம்) - பாலுணர்வு இன்பம் துய்க்காதிருத்தல்;
    உரிமை மறுத்தல்/பற்றற்றிருத்தல் (அபாரிகிருகம்) - மக்கள்,இடங்கள் மற்றும் பொருளியலில் பற்று அற்று இருத்தல்.

கருத்தியல் கொள்கைகளான உண்மை ஒரேஒன்றல்ல என்ற அநேகாந்தவடா மற்றும் சார்நிலைக் கொள்கையான சியாதவடா இவற்றை கொள்ளாமல் இந்த உறுதிமொழிகளை முழுமையாக கடைபிடிக்க வியலாது. இவற்றை ஆண் மற்றும் பெண் துறவிகள் நிச்சயமாகக் கடைபிடிக்க வேண்டும்;பிறர் அவர்களால் எந்தளவு இயலுமோ அந்தளவு கடைபிடித்தால் போதுமானது.

மகாவீரர் ஆண்களும் பெண்களும் ஆன்மீக நோக்கில் சரிசமனானவர்கள் என்றும் இருவருமே துறவறம் மூலம் வீடுபேறு (மோட்சம்) அடைய முடியுமென்றும் கூறினார். அவரை அனைத்து தரப்பு மக்களும் (சமூகத்தின் கடைநிலையில் இருந்தவர்கள் உட்பட) பின்பற்றினர். வருணாசிரம முறையை விலக்கி புதிய நான்கு நிலைகளை உருவாக்கினார்;ஆண்துறவி (சாது),பெண்துறவி(சாத்வி),பொதுமகன் (ஷ்ராவிக்) மற்றும் பொதுமகள் (ஷ்ராவிக்). இதனை சதுர்வித ஜைன சங் என்று அழைக்கலாயினர்.

மகாவீரரின் பிரசங்கங்கள் அவரது உடனடி சீடர்களால் அகம் சூத்திரங்கள் என வாய்மொழியாக பாதுகாக்கப்பட்டன. காலப்போக்கில் பல அகம் சூத்திரங்கள் இழக்கப்பட்டும், அழிக்கப்பட்டும், மாற்றப்பட்டும் சிலவே மிஞ்சின. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் கழித்து இவை பனையோலைகளில் பதியப்பட்டன. சைனர்களின் ஒரு பிரிவினரான சுவேதம்பர்கள் இவற்றை அப்படியே உண்மையான போதனைகளாக ஏற்றுக் கொள்கின்றனர், ஆயின் மற்றொரு பிரிவினராகிய திகம்பரர்கள் இதனை ஓர் உசாத்துணையளவிலேயே ஏற்கின்றனர்.

சைன சமயம் மகாவீரரின் காலத்திற்கு முன்னரும் கடைபிடிக்கப்பட்டது. மகாவீரரின் போதனைகள் அவரது முன்னோரின் போதனைகளை பின்பற்றியதே. எனவே மகாவீரர் ஓர் நிகழ் மதத்தின் சீர்திருத்தவாதியே தவிர புதிய சமயத்தை உருவாக்கியவர் அல்லர். இவரது குருவான பரசுவந்த் தீர்த்தங்கரரின் வழிகளைப் பின்பற்றியவர். ஆயினும் தமது காலத்திற்கேற்ப சைன மத கொள்கைகளை சீர்திருத்தம் செய்தார்.

மகாவீரரின் நிர்வாணத்திற்குப் பிறகு சில நூற்றாண்டுகளில் சைன சமயம் சடங்குகள் மற்றும் பிற குழப்பங்களை உட்கொள்ள துவங்கியது. சில விமரிசகர்கள் மகாவீரரையும் பிற தீர்த்தங்கரர்களையும் இந்து மத கடவுளர் போன்று வழிபட துவங்கியதாக கூறுகின்றனர். 





இராமானுசர் இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான வேதாந்தத்தின் விளக்கங்களில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடியாக விளங்கினவர். அண்மைக்காலத்தில் அறிஞர்கள், இவரது பிறப்பு இன்னும் 20 - 60 ஆண்டுகள் வரை பிந்தியதாக இருக்கும் எனக் கருதுகிறார்கள். இவரது இறப்பும் 20 ஆண்டுகள் வரை பிந்தியே நிகழ்ந்திருக்க வேண்டுமென்பதும் சிலரது கருத்து. இவர் விசிட்டாத்துவைத தத்துவ இயலை நாடளாவிய முறையில் பரப்பிய மெய்யியலாளர். பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற ஓர் உயர்தர உரையை இயற்றி, ஆதி சங்கரரின் அத்வைதத் தத்துவத்திற்கு மாற்றுச்சொன்ன ஆன்மீகவாதி. பாரததேசத்தின், சரித்திரப்பிரசித்தி பெற்று உலகளவில் புகழடைந்த, மூன்று முக்கிய குருமார்களில் ஒருவர். மற்ற இருவரில் ஒருவர் ஆதி சங்கரர். மற்றவர் துவைத சமயப்பிரிவை நிலைநாட்டிய மத்வர். இராமானுசரைப் பின்பற்றியவர்கள் வைஷ்ணவர் அல்லது வைணவர் எனப்படுவர்.

 இராமானுசர் திருவாய்மொழியின் செவிலித்தாய் எனப் போற்றப்படுபவர். தமிழ்நெறி போற்றும் வைணவர்

இராமானுசர் சிறந்த வேதாந்தி மட்டும் அல்ல; பெரிய நிர்வாகியும் கூட. திருவரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று அதை முற்றிலும் சீர்படுத்தி அன்றாடம் நடக்கவேண்டிய ஒழுங்கு முறைகளை உண்டாக்கினார். இவ்வேற்பாடுகளில் அவருக்கு எதிர்ப்புகளும் முளைத்து அவரைக் கொல்லும் முயற்சிகள் கூட நடந்தன. தற்கால ஸ்ரீவைணவ நடைமுறைகளை உருவாக்கி சடங்குகளோ, சம்பிரதாயங்களோ, பழக்க வழக்கங்களோ எல்லாவற்றிற்கும் கருத்துச் செறிவுடன் உயிர் கொடுத்தவரும் அவரே. இவையெல்லாம் செவ்வனே செயல்பட முடிந்ததற்கு முழுக் காரணம் அவர் ஒருவராகவே திருவரங்கம் கோயில் நிர்வாகம், ஸ்ரீவைணவ மட நிர்வாகம் ஆகிய இரட்டைப் பொறுப்பையும் ஏற்று நடத்தியது தான். திருவரங்கம் கோயில் உடைமைகளை சிறப்புற மீட்டெடுத்து நிர்வாகம் செய்ததால் திருவரங்கநாதன் இராமானுசரை "உடையவர்" என அழைத்தார்.

இராமானுசர் பாரததேசம் முழுவதும் யாத்திரை செய்து வைணவத்தின் பெருமையை எங்கும் பறை சாற்றினார். எதிர்வாதங்கள் புரிந்தவர்களை வென்று வைணவ மடங்களை நிறுவினார். சில இடங்களில், ஆன்மீகத்தில் பிடிப்பு இருந்தும் இல்லறத்திலேயே இருக்க விரும்பியவர்களையும் தன் மடங்களின் ஆன்மீகத் தலைவர்களாக்கினார். திருவரங்கத்திலுள்ள தலைமை மடத்திற்கு மடாதிபதியாக வரவேண்டிய விதி முறைகளை வழிப்படுத்தினார். ஒவ்வொருவரிடமும், முக்கியமாக தாழ்த்தப்பட்ட இன மக்களிடையேயும், இரக்கம், கருணை, பரிவு முதலிய நற்குணங்களைச் சொரிந்ததோடு "திருக்குலத்தார்" என்றும் அவர்களை அழைக்கலானார் (இக்குணத்தால் கவரப்பட்டே, பின்னர் வந்த காந்திமகானும் "ஹரிஜன்" என்றார்). தமிழ் பிரபந்தங்களை ஓதவும் வைணவச் சின்னங்களை தரிக்கவும் எந்தச் சாதியினரோ ஆணோ பெண்ணோ எல்லோருக்கும் வைணவத்தில் இடம் இருக்கச் செய்தார்.

இராமானுசரின் விசிட்டாத்துவைதத் தத்துவங்கள் காசுமீரம் வரையில் வடநாட்டிலும் பிரபலமடைந்தன. இராமானந்தர் (1300-2015) விசிட்டாத்துவைதத்தை ஏற்று காசியில் ஜாதிவேற்றுமை பாராது கபீர்தாசர், ரவிதாசர், முதலிய பல சீடர்கள் மூலம் வைணவத்தைப் பரப்பினார். செருப்பு தைக்கும் குடும்பத்தில் பிறந்த ரவிதாசர் தான் இராசபுதனத்து மீராவை பக்தி மார்க்கத்தில் இழுக்கக் காரணமாயிருந்தவர். பிற்காலத்தில் ராமசரிதமானஸ் என்ற அமர காவியத்தை இயற்றி வடநாடு முழுவதும் ராமபக்தி செழிக்கச் செய்த துளசிதாசரும் உத்தரப்பிரதேசத்தைச்சேர்ந்தவர் ஆவார்.



மத்துவர் அல்லது மத்வர் என்ற மத்வாச்சாரியார்,இந்தியாவின் மூன்று  தத்துவ போதகர்களில் ஒருவர். மற்ற இருவர் அத்வைதத்தை நிலைநாட்டிய ஆதி சங்கரரும் விசிஷ்டாத்வைதத்தை பரப்பிய இராமானுஜரும் ஆவர். இம்மூவருடைய தத்துவநூல்களின் அடிப்படையில் பல்வேறு மதக்கோட்பாடுகள் இந்து சமயத்தவர் சிலரிடையே இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகின்றன. மத்வர், துவைதம் என்ற சித்தாந்த தத்துவ இயலை நிலைநாட்டினார்.


மத்வாச்சாரியாரின் வாழ்க்கையில் நடந்த (அல்லது, அவர் நடத்திய) பல அற்புதங்களைப் பற்றிய விவரங்கள் அவர் காலத்திலேயே வாழ்ந்த நாராயண பண்டிதர் என்பவர் இயற்றிய மத்வவிஜயம் என்ற நூலில் உள்ளன. அவையெல்லாவற்றிலும் முக்கியமான ஒன்று சரித்திரப்பிரசித்தி பெற்றது.

ஒரு சமயம் உடுப்பிக்கருகில் கடலில் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தபோது புயலில் ஆபத்துக்குள்ளாகியது. கடற்கரையில் நின்றுகொண்டிருந்த மத்வர் தன் மேல் துணியை காற்றில் வீசிக்காட்டி என்னமோ செய்தார். கப்பல் ஆபத்திலிருந்து தப்பி கரை சேர்ந்தது. கப்பலின் தலைவர் அவரை வணங்கி, அவரை தன்னிடமிருந்து ஒரு பரிசு வாங்கிக்கொள்ளும்படி வற்புறுத்தினார். கப்பலின் அடித்தளத்தில் கோபி சந்தனத்தில் ஒரு பாறை இருப்பதாகவும், அது தனக்கு வேண்டும் என்றும் கூறினார் மத்வர். இவ்விதம் ஓர் அற்பமான கற்பாறையைக் கேட்கிறாரே என்று வியந்தவாறே கப்பல் தலைவர் அதை எடுத்துக் கொடுத்தார். அதனுள் தன் கையை விட்டு சாளக்கிராமத்தினால் ஆன ஒரு அழகிய பாலகிருஷ்ண விக்கிரகத்தை வெளியே எடுத்தார் மத்வர். தானே அந்தப் பாரமான விக்கிரகத்தைத் தூக்கிக்கொண்டு சென்றார். அதுதான் இன்றும் உடுப்பி கோயிலில் மூலவிக்கிரகமாக உள்ளது.

அவ்விக்கிரகத்தைப்பற்றி அவர் வெளிப்படுத்திய தகவல் இன்னும் பெரிய விந்தை. ‘விஸ்வகர்மா என்ற தெய்வச்சிற்பியால் செய்யப்பட்டு, துவாரகையில் துவாபரயுகத்தில் ருக்மணியால் பூஜிக்கப்பட்டு, பிற்பாடு துவாரகை மூழ்கியபோது கடலில் மூழ்கிய விக்கிரகம் அது’! பஞ்சபாண்டவர்களின் வனவாச சமயம் அவர்களைக் காண அடிக்கடி தேடிச் சென்றதால் அவர் வெளியே செல்லும் நாட்களில் பாதபூஜை செய்ய முடியாது ருக்மிணி தேவி வருந்தியதால் தேவசிற்பியான விஸ்வகர்மாவை அழைத்து ருக்மிணி தேவி விரும்பி வேண்டிய வடிவான, அன்னை யசோதையின் தயிர் கடையும் மத்தை பிடுங்கிக் கொண்டு ஓடும் தன் சிலா ரூபத்தை வடித்துத் தர கிருஷ்ணர் இட்ட கட்டளையின்படி விஷ்வகர்மா செய்த திருவுருவே அது.துவாரகையில் கிருஷ்ணர் இல்லாத போது துவாரகை வந்த மகான்கள், மக்கள் அனைவரும் வழிபட்ட உருவம் அது. துவாரகை கடலில் மூழ்கிய போது ருக்மிணி தேவி வழிபட்ட அந்த விக்கிரகமும் கடலில் மூழ்கி பல ஆயிரம் வருடங்கள் கடந்த பின்னர் மத்வர் கையில் வெளிப்பட்டது.


ஆதிசங்கரர்,ஏழாம் நூற்றாண்டு இன்றைய கேரளத்திலுள்ள "காலடி" எனப்படும் ஊரில் ஆர்யாம்பாள்/சிவகுரு தம்பதியினருக்கு மகனாய் தோன்றிய மெய்ஞான வல்லுநர்.

இளமை பிராயத்தில் கௌடபாதரின் சீடரான கோவிந்த பகவத்பாதரிடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று சங்கர பகவத்பாதர் என்று அழைக்கப்பட்டார்.

இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்கள் என்று அறிப்படும் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டற்றது என்கிற அத்வதை தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர்.

மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொதுக் கருத்து உள்ளது. சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். 

சங்கரர் பாரதம் முழுவதும் பயணித்து தெற்கில் சாரதா பீடம், சிருங்கேரி, மேற்கில் துவாரகா பீடம், துவாரகை, வடக்கில் ஜோஷி மடம் மற்றும் கிழக்கில் கோவர்தன பீடம், புரி என நான்கு அத்வைத பீடங்கள் நிறுவி தன் சீடர்களான அஸ்தாமலகர், சுரேஷ்வரர், பத்மபாதர் மற்றும் தோடகர் என்பவர்களை ஒவ்வொரு பீடத்திற்கும் மடாதிபதிகளாக நியமித்தார். காஞ்சிபுரத்தில் சர்வக்ஞான பீடம் எனும் வேதாந்த கல்வி நிலையத்தை நிறுவினார். தமது 32ஆம் அகவையில் கேதார்நாத்தில் சமாதி அடைந்த சங்கரர் பொது நம்பிக்கையில் இந்து மதத்தின் மாபெரும் சிற்பி எனப் போற்றப்டுகிறார்.

பொதுவாக ஆத்மாவைப் பற்றிக் கூறியது. அது பிரம்மம் என்றும் அடிப்படையான எதார்த்தமென்றும், ஒரே சாராம்சமென்றும் அழைக்கப்பட்டது. இயற்கைப் பொருட்களின் உலகம் இந்த ஆன்மாவினால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று கூறுகிறது. இவரது தத்துவம் அத்வைதம் என்று அழைக்கப்படுகிறது.

பிரம்மத்தின் கனவாக, நினைவுத்தடமாக இந்த உலகம் உள்ளது. இயற்கை நிகழ்வுகளின் உலகம் ஒரு பிரம்மை தான். நிலையான மனிதனிடமிருந்து மறைக்கக்கூடிய அலைகள், குமிழிகள், நுரையாக உலகம் விளங்குகிறது. நிரந்தர ஆன்மாவிற்கு மனித உடல் ஒரு புறவடிவமாகும். ஆன்மா என்பது பிரம்மத்தின் அவதாரம் அல்லது துளியாக இருக்கிறது. நிரந்தரமான பிரம்மம் முன்னால் இருக்கிறது. பின்னால் இருக்கிறது, வலப்புறத்திலும், இடப்புறத்திலும் மேலும் கீழும் பரவியிருக்கிறது. இவை அனைத்திலும் பிரம்மம் ஒன்றுதான். அதுவே சிறந்தது. பிரம்மத்தை தவிர வேறெந்த பொருளும் கிடையாது.

உலகின் தோற்றங்களனைத்தும் பிரம்மம் தான். வேறு எதுவுமில்லை. தெய்வீக ஆத்மாவான பிரம்மத்திடமிருந்து தான் எல்லா உயிர்களும் தோன்றியுள்ளன. ஆகவே அவை அனைத்தும் பிரம்மம் தான். இதை புரிந்து கொள்ள வேண்டும். சாதாரண மக்களின் உடனடி பிரச்னைகளுக்கு தத்துவம் வழிகாட்டாது. அது தொலைவில் உள்ளது. தத்துவவாதி வாழ்க்கைக்கு வெளியில் நின்று அதை காண வேண்டும் என்று எழுதினார். ஒரே உண்மையான எதார்த்தம் என்பது பிரம்மம் ஆகும். நிகழ்ச்சிகள் நிரம்பிய தற்காலிக உலகம் உண்மையான அறிவாகாது. பிரம்மத்தை புரிதல் மட்டுமே உண்மையான அறிவாகும் என்பது சங்கரரின் அத்வைதம்.

மகான்களின் விழியில் நாம் விழுந்து இருக்கின்றோம். மகான்களின் வழியை பின்பற்ற வேண்டும். இங்குள்ள ஒவ்வொரு மகானும் ஒவ்வொரு விதத்தில் நம்மை ஆட்கொள்வார்கள என்பது உறுதி. இப்போது மீண்டும் நினைத்துப் பாருங்கள். நம் தாய்த் திருநாட்டில் பிறந்திட புண்ணியம் செய்திட வேண்டும் அன்றோ?

 மீண்டும் சந்திப்போம்.
மீள்பதிவாக:-

 அறிய வேண்டிய அரிய மனிதர்கள் - 10 ஆவது இந்து சமய சேவை கண்காட்சி - 2019 - https://tut-temple.blogspot.com/2019/02/10-2019.html

9 ஆவது இந்து சமய சேவை கண்காட்சி - 2018 - https://tut-temple.blogspot.com/2018/02/9-2018.html
"ஜீவ அமிர்தம்" பருகலாமே! - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_30.html

No comments:

Post a Comment